Thursday, October 16, 2008

தொடர் பயணம்.

னுஷனா சார் இவன்.. அசுரன்!

எப்படி வர்றான் பாருங்க..! கண்களை மூடிக்கிட்டு, கைகளைக் கட்டிக்கிட்டு, நல்லா சாஞ்சுக்கிட்டு, ஏதோ தியானம் செய்யறாப்ல!

அத்தனையும் வேஷம்... நடிப்பு! இப்படி தூங்கறதுக்கு எதுக்கு பஸ்ல வரணும்? வீட்லயே நல்லா படுத்து, கால்களை நீட்டி, சுகமாத் தூங்கலாமே! அப்படி பண்ணாம, ஒரு மாதிரி இடுக்கிட்டு, ஜன்னலோர சாம்ரஜ்யத்தை முழுசா ஆக்ரமிச்சிட்டு, பக்கத்தில் இருப்பவனுக்கு சரிபாதி சீட்டைக் கொடுக்காம...!

ஆமாம் சார்! இது தான் பிரச்னை! அசுரன் முழுசா எடுத்துக்கிட்டு, 'ஒழிஞ்சு போ'னு கொடுத்த மிச்ச இடத்தில் நான்!

எப்படி உட்கார்ந்திருக்கேன்? பாதி உடம்பு வெளியில தொங்க, மீதி அவனை நெருக்கி! சேர, பாண்டியர்கள் கூட இப்படி எல்லைப் பிரச்னைகளுக்கு முட்டிட்டு இருந்திருக்க மாட்டாங்க! அப்படி கால்களால் ஒரு தள்ளு! தொடைகளால் ஒரு நெருக்கு! ரெண்டு கைகளாலயும் முன் சீட் கம்பிகளைப் பிடிச்சு, ஸ்டிஃபா, இறுக்கமா, நிமிர்ந்து...!

ம்ஹூம்..! அசையவேயில்லையே! போதி அடி புத்தனாக அசங்காம அப்படியே புடிச்சு வெச்ச பிள்ளையாராட்டம் உட்கார்ந்திட்டு வர்றான்..! கல்லுளி மங்கன்.

ஸார்! உண்மையை ஒத்துக்கறேன். நமக்கு கொஞ்சம் பெரிய உடம்பு தான். இல்லேங்கல! அதுக்காக எனக்கான ரைட்ஸை விட்டுக் கொடுத்திட முடியுமா? நானும் டிக்கெட் எடுத்து தானே ட்ராவல் பண்றேன்...? ஈக்வாலிட்டினு ஒண்ணு இருக்கா இல்லியா? இது டெமாக்ரடிக் கண்ட்ரி தான ஸார்..?

இந்த கவர்ன்மெண்ட்டை சொல்லணும் நாம! பத்து வருஷத்துக்கு ஒரு தடவ சென்ஸஸ் எடுக்கறாங்க இல்லியா? அப்பவே 'பாடி மாடிஃபை' ஆனவங்க எத்தனை பேர்னு ஒரு லிஸ்ட் எடுக்கக் கூடாதா? அதுக்கேத்த மாதிரி பஸ்ல சீட்ஸ் என்லார்ஜ் பண்ணி வெச்சிருக்கணும்! இதுல சில பஸ், சிலபஸ்ல ஒவ்வொரு சீட்டுக்கும் நடுவில கை வெச்சுக்கறதுக்காக 'காது குடையறாப்ல' ஒரு கம்பி! இதை தான் 'உழக்குக்குள்ள கிழக்கு மேற்கு'னு பெரியவங்க சொல்லி இருக்காங்க!

கை ஸ்டேண்ட் வெச்சவங்க (கை எப்படி ஸ்டேண்ட் ஆகும்? கால் தானே ஸ்டேண்ட் ஆகும்!), அதை யாருக்குனு ஒரு வார்த்தை எழுதி வெச்சிருக்காங்களா, இந்த ஜன்னல் சீட்டுக்கு நம்பர் குடுத்தாப்ல! இல்லை. அது இல்லை. அப்புறம், யாரு கை வைக்கிறதுன்னு அதுக்கு ஒரு பாட்டம் தகராறு.

ட்ரெய்ன்ல ஜெனரல் கம்பார்ட்மெண்ட்ல போனா இன்னொரு பிரச்னை. ஆல்ரெடி சீட் பிடிச்சு வெச்சிருக்கவன், மிச்ச இடத்துக்கு ஒரு சிவப்பு காட்டன் துண்டை விரிச்சு வெச்சிட்டு, கேக்கறவங்க கிட்ட எல்லாம், 'ஆள் வருது... ஆள் வர்றாங்க'னு சொல்லி டபாய்ச்சிக்கிட்டே வர்றது. ட்ரெய்ன் கிளம்பற வரைக்கும் யாரும் வர மாட்டாங்க. ரன்னிங் ஆரம்பிச்சதுக்கப்புறம், சுத்திமுத்தியும் பார்த்து, ஒல்லிப் பிச்சானா இருக்கற யாரையாவது கூப்பிட்டு உட்கார வைக்க வேண்டியது. அதிலும் ஸ்பேஸ் கால்குலேஷன் பார்த்து உட்கார வைக்கிறது பருமனா இருக்கறவங்க தான். 'ஒரு பொண்ணோட கஷ்டம் இன்னொரு பொண்ணுக்குத் தான் தெரியும்'ங்கறது பழமொழி. அது எல்லா கேட்டகிரிக்கும் பொருந்தாது.

"ஏன் இடிச்சுக்கிட்டே வர்றீங்க..?"

"தள்ளி உட்காருங்க..!"

"இதுக்கு மேல எங்கங்க தள்ளறது? ஜன்னல் வழியா தோள் வரைக்கும் தள்ளி வெச்சுக்கிட்டா தான் உண்டு!"

"(எழுந்து நின்று) இங்க பாருங்க. எத்துணூண்டு இடம் இருக்குனு! இதுல எப்படிங்க ஒரு மனுஷன் உட்கார்ந்திட்டு வர்றது?"

"நான் என்னங்க பண்றது? நானே எவ்ளோ கஷ்டப்பட்டு உட்கார்ந்திட்டு வர்றேன் தெரியுமா?"

"பரவால்ல! கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி உட்காருங்க!"

"(கொஞ்சம் அசைந்து) அவ்ளோ தாங்க முடியும்!"

"ஏங்க! நகர்ந்து உட்காரச் சொன்னா, கொஞ்சம் போல அசைஞ்சிட்டு, சிம்மாசனத்துல பாதி குடுத்த மாதிரி உட்கார்ந்துக்கோங்கறீங்க...!"

மீண்டும் அசுரன் புத்தனாக மாறி தியானியானான்.

சுற்றுமுற்றும் பார்த்தேன். கூட்டம் ஏறிக் கொண்டே இருந்ததே ஒழிய இறங்கும் வழியைக் காணோம். இந்த பாதி சீட்டு கிடைத்திருப்பதே அதிர்ஷ்டம் போல் தோன்றியது.

'பாறையைப் பிளக்கும் வேரைப் போல' கண்டக்டர் கூட்டத்தைப் பிளந்து கொண்டு முன்னும் பின்னும் சென்று வந்து கொண்டிருந்தார்.

கடைசி நீள சீட்டில் இருந்து ட்ரைவர் சீட் வரை ஒவ்வொரு முறையும் சென்று வரும் தொலைவுகளின் கூடுதல் தான் கண்டக்டர் பயணம் செய்யும் தொலைவா, இல்லை டிப்போவில் இருந்து டெர்மினஸ் வரை உள்ள தூரமா என்று ரிலேட்டிவிடி சிந்தனையில் நான் இறங்கிய நேரம் பார்த்து, சூடாய் ஒரு டிஃபன் பாக்ஸ் மேலே விழுந்தது.

"சாரி சார்..!" என்றபடி ஒரு மாணவன் எடுத்துக் கொண்டு ஒதுங்க முயல, கூட்டம் அவனை என் மேலேயே தள்ளியது.

"சாவுகிராக்கி!" வசையோடு ஒரு சடன் ப்ரேக்கிட்ட ட்ரைவர் வலப்புறம் வெட்ட, கூட்டம் மொத்தமும் என் மேல் சாய்ந்தது போல் இருக்க, நான் அசுரன் மேல் விழுந்தேன். அசந்த நேரம் பார்த்து கிடைத்த சொற்ப ஐம்பது பிக்ஸல் இடத்தைக் கைப்பற்றினேன். பிரசவ அறை வாசல் தகப்பனாய் நடை போட்ட கண்டக்டர் மிகச் சரியாக என் சீட் மேல் சாய்ந்து நின்று டிக்கெட் போட, நான் நெருக்கித் தள்ளப்பட்டு, முன் பக்கம் சாய, அங்கு முன்பே கஷ்டப்பட்டு நின்று கொண்டிருந்த அம்மணியோடு முகம் மோத... ஏக களேபரம்!

அசுரனின் தியானம் கலையவேயில்லை!

எனக்கே இவ்வளவு கஷ்டமாய் இருக்கின்றதே! பெண்களுக்கு இன்னும் எவ்வளவு கஷ்டம் என்று நினைத்தேன். ஒரு ஸ்டாப்பில் நிற்கையில், ரோட்டின் அந்தப்புறம் தெரிந்த க்வாலிட்டி பார்லரின் கண்ணாடி வழியே மூன்று ஜீன்ஸ், டீஷர்ட் 16+ பேபிகள் ஐஸ்க்ரீமோடு விளையாடுவது தெரிந்தது.

'அடி பெண்களே! இவ்வளவு வேண்டாம்' என்ற என் கூக்குரலை, ஹாரன் அடித்து சாப்பிட்டார் ட்ரைவர்.

ஒரு வழியாக அசுரன் அமைதி கலைந்து, ஸ்கூல் ஸ்டாப்பில் இறங்க எழுந்தான். 'ஆஹா! எழுந்தது பார் யுகப்புரட்சி!' என பாய்ந்து, ஜன்னல் சீட்டை அடைந்தேன். ஏதோ முனகிக் கொண்டே செல்வது போல் தெரிந்தது.

'தொம்!'

யாரெனப் பார்க்க, ஒரு மெகா உருவம் என் அருகில் அமர்ந்தது!

அடக் கடவுளே! இவன் பாபிலோனின் 'தொங்கும் தோட்டம்' போல் முக்கால்வாசி சீட்டிலிருந்து தொங்குகிறானே! ஏங்க நீங்க எல்லாம் பஸ்ல வர்றீங்க! பாருங்க, ஒருத்தன் நிம்மதியா சீட்ல உக்கார்ந்திட்டு வர முடியல!'

முழிச்சுக்கிட்டு இருந்தா, 'நகருங்க! நகர்ந்து உட்காருங்க!'னு இம்சை பண்ணி உயிரெடுத்திடுவானே! சீட் காலியாகும் போதே அந்த +1 பையனைக் கூப்பிட்டு பக்கத்தில் உட்கார வெச்சிருக்கணும். ஓ! அவன் ஸ்கூல் ஸ்டாப்பிங்கிலேயே இறங்கிப் போய்ட்டான் போல!

இப்ப என்ன பண்றது? ஒரே வழி! கண்ணை மூடிக்கிட்டு தூங்கற மாதிரி, இவன் என்ன பேசினாலும் காதிலயே விழாத மாதிரி நடிக்க வேண்டியது தான். வேற வழியே இல்ல!!

இன்னும் ரொம்ப தூரம் போக வேண்டி இருக்கு!

ஆசிரியர் குறிப்பு ::

இந்த கதையின் அடுத்த பாகத்தை விரும்புவோர் அந்த மகா பருமரைக் கேட்கலாம். சொல்ல முடியாது... அவரும் இதே கதையை, இதே முதல் வரியில் இருந்து சொல்லலாம்...!

Tuesday, October 14, 2008

தூங்கா நகரம்.



மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் கள்ளழகரும் எழுந்தருளி இருக்கும் தலம்; அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக்கபூர் கைப்பற்றிய தென்னக எல்லை; மூன்றாம் மற்றும் நான்காம் தமிழ்ச்சங்கம் அமைத்த நகரம்; ஐந்து பேருந்து நிலையங்கள் எல்லைகளில் கொண்ட ஊர்; கிருஷ்ண தேவராயரின் பிரதிநிதியாக வந்து அவரது ஆளுமையால் சிறப்பாக ஆண்ட திருமலை நாயக்கரின் நாடு; சொக்கநாதரும், இராணி மங்கம்மாளும் செங்கோலோச்சிய தேசம்; மீன் கொடி பட்டொளி வீசிய பாண்டிய பூமி; பட்டு நெசவில் கைவண்ணம் திகழும் செளராட்டியர் முதல் ஆதிகுடித் தமிழர்களின் மொழி வளத்திற்கும், 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்ற நேர்மைத் திறமும், திருவாலவாயனின் அறுபத்து மூன்று திருவிளையாடல்களும் நிகழ், தென் மாவட்டங்களின் தலைப்புள்ளியாகவும் இருக்கின்ற தூங்கா நகரம்.

'மதுரை மாநகராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது' ஆர்ச் வளைவில் நுழைந்து, 'தமிழ் வாழ்க' நியான் லைட் போர்ட் வெளிச்சத்தில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தை அடைகையில் சனிக்கிழமை அதிகாலை 05:10.

ஆனைமலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் வேளாண் பல்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வசிக்கும் உறவினர் வீட்டிற்குச் செல்லும் வழியெங்கும் இருள். பவர் கட். விதவிதமான டைம் ஸ்லாட்களில் உயிர் இழக்கும் விளக்குகள்.

கல்லூரி க்வார்ட்டர்ஸ் வளாகத்தில் மயில்களின் அகவல்கள். ஆராய்ச்சி வயல்கள். குளம். ஆனைமலை. மிக இலேசான குளிர்.

கல் பொழுதில் திருமோகூர் சென்றோம்.

கல்லூரி வளாகத்தில் இருந்து வெளியேறி, நகரம் செல்லும் வழியில் ஒத்தக்கடையில் லெப்ட் டர்ன் எடுத்து விரைகையில் திருமோகூர் கோயில் வருகின்றது. 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. பெருமாள் காளமேகப் பெருமாள் மற்றும் தாயார் மோஹனவல்லித் தாயார்.

வெயில் காய்ச்சிய மதியப் பொழுது. தீர்த்தக்குளத்தை ஒட்டிய கோயில் மதிலை ஒட்டி இடம் தேடிப் பிடித்து, காரை நிறுத்திய விநாடியே எங்கிருந்தோ முளைத்தனர் டோக்கன் சிறுவர்கள். 10 ரூபாய்.

குளம் பச்சையாக இருந்தது. மேகங்களே குழுமியிருந்த வானின் நிழல் விழுந்து அலையடித்துக் கொண்டிருந்தது. கரையெங்கும் ப்ளாஸ்டிக் பூக்கள். பால் கவர். ஃப்ரூட்டி. வாழைத் தோல். காகிதக் குப்பைகள். படிகளில் ஈரம். இங்கிருந்து பார்க்கையில் ஆனைமலையின் வடிவம் ஒருவாறு பெயர்க்காரணத்தோடு புலப்பட்டது.





கோயில் பழைய காலத்தது. உள்ளே நுழையும் முன்பே குட்டித் தொன்னைகளில் பொங்கல் கொடுத்துக் கொண்டிருந்தனர். 'திரும்பி வருகையில் மிச்சம் இருக்குமா?' என்ற கேள்வி தொக்கி நின்றாலும், அலட்சியத்து உள் சென்றோம்.

கொடிக்கம்பத்தை வணங்கி கொஞ்சம் மேலேறிச் செல்ல, கூட்டத்தின் இடையே பெருமாள் தனது இரு துணைவியருடன் நிற்கும் அழகுத் திருக்கோலம் முற்றிலும் மலர்மாலைகளால் தெள்ளெனத் தெரிந்தது. உற்சவமூர்த்தியும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தார். உள்ளே சென்று பார்க்க, டிக்கெட் தலைக்கு இரண்டு ரூபாய்கள். இது எந்த வகை வசூல் என்று புரியவில்லை. இந்த டோக்கன் கொடுத்த சிறுவர்கள் அடர் நீல யூனிஃபார்ம் அணிந்திருந்ததனர்.

மூலவரைப் பார்த்த பின், தாயார் சன்னிதிக்குச் சென்றோம். அங்கே சக்கரத்தாழ்வாருக்குத் தனி அலங்காரங்கள் இருந்தன. சுற்றி விட்டு வந்து, வணங்கி மீண்டும் கோயிலின் முன் வளாகம் வர, பிள்ளையார் இருந்தார். அருகிலேயே பாதி கட்டப்பட்ட மண்டபம் இருந்தது.

முன் வளாகத்திலேயே பிரசாத ஸ்டாலின் எதிர்ப்புறம் 'பள்ளி கொண்ட பெருமாள்' உள்ளார். ரங்கநாதர் திருக்கோலம்.

அங்கே சற்று அமர்ந்து விட்டு, தூண் சிலைகளைக் கண்டேன்.









கோயிலின் முன் வாசலில் இப்போது பெருங்கூட்டம். காரணம், குப்பித் தொன்னைகளில் கொடுக்கப்பட்டிருந்த பொங்கல் + புளிசாதக் கூட்டணி, பெரிய தட்டிற்கு மாறியிருந்தது. வரிசைகளில் நின்று வாங்க முயலாத நம் மக்கள், அடிதடி. முட்டி மோதி கைகளை நீட்டிக் கொண்டிருந்தனர். காவல் துறையினர் இருவர் என்ன செய்ய முடியும்? சொல்லிச் சொல்லிக் கொண்டிருந்தனர். மக்கள் மசிவதாய் இல்லை. நாங்கள் சிறிது நேரம் காத்திருந்து, இந்த சந்தடியில் வாங்க முயல்வது வீண் என்று முடிவெடுத்து, கோயிலுக்கு சற்று அருகே, வெளியே குளக்கரையின் அப்புறத்தில் இருக்கும் பிள்ளையார் மற்றும் நாகதேவர் கோயில்களுக்குச் சென்று, பின் வந்து நம் அதிர்ஷ்டத்தைச் சோதிப்போம் என்று நகர்ந்தோம்.







காரையும், சுண்ணாம்பும் ஒன்று விட்டு ஒன்று அடித்து ஒன்றி விட்ட குளக்கரையின் திட்டுக்களை ஒட்டி குறுஞ்செடிகள். சைக்கிளில் ஐஸ் விற்பவர். சாக்கிட்டு இளநீர் விற்கும் பாட்டியின் முன் வெயிலைச் சாக்கிட்டு வியாபாரம் செய்வோர். கிளி ஜோசியக்காரர். சில இரந்துண்போர். பூ கட்டி விற்கும் சிறுபெண். அருகு கல்லூரியின் பேருந்து.

ஒரு இரந்துண்பவரிடம் ஒருவர் டர்க்கி டவல் துண்டால் பொங்கும் வியர்வையை அவ்வப்போது துடைத்தவாறே தத்துவ விளக்கங்கள் பேசிக் கொண்டிருக்க ('உலகமே கெட்டுப் போச்சு பெரியவரே!'), நாங்கள் சில படிகள் ஏறி, மரத்தடிப் பிள்ளையாரை வணங்கினோம். சுற்றி வருகையில், எத்தனை எத்த்னை சிறு தொட்டில்கள், மரத்தில்!

பின் மீண்டும் ஒரு முறை கோயிலின் முன் வாயிலுக்கு வந்து பார்த்தோம். பொங்கல் கொடுக்கும் பகுதிக்கு எதிர்ப்புறம் சென்று, கொடுப்போரை பின்புறமாக அட்டாக் செய்ய முயல, அவர்கள், 'சார்! நீங்க எவ்ளோ நேரம் நின்னாலும் இங்கிட்டு தர மாட்டம். முன்னாடி வந்து வாங்கிக்கிடுங்க' என்றனர்.

ஒரு பெண் சற்று உயரமாய் இருந்ததால் கையை எல்லோரையும் விட மேலே நீட்டி, நீட்டி தட்டுக்களைத் தட்டிப் பறித்துக் கொண்டே இருந்தார். ஒரு கையில் வாங்கி, மறு கைக்கு மாற்றி, தன் குடும்பத்தினருக்கு கொடுத்துக் கொண்டே இருந்தார்.

கும்பலில் மோதி மோதி வாங்கும் பலர் அதை பத்திரமாக வெளியே எடுத்து வருதல் என்பதில் கோட்டை விட, வலுக்கரங்கள் சில சமயம் பிடுங்கின; சில சமயம் நெரிசலில் அப்படியே கொட்டிப் போய், தரையெங்கும் பொங்கல் வாசம்.

சிறிது நேரம் கழித்து நான் சென்று வாங்கி வந்தேன்.

எத்தனை பொங்கல்! எத்தனை சூடு! பொங்கல் வைத்த இடம் போக, கிடைத்த இடைவெளியில் வைக்க முடிந்த பகுதியில் புளிசாதம்.

பின் உறவினரோடு அவரது காருக்கு வந்து சாப்பிட்டோம். அவர் குடும்பத்தினருக்கென மற்றொரு முறை சென்று அவர் மட்டும் வாங்கி வந்தார். அதற்குள் என்னால் சாப்பிட முடியாமல் போக, அருகில் இருந்த ஒரு ட்ராவல்ஸ் வண்டி ட்ரைவரிடம் நீட்ட, அவர் 'இல்லீங்க, ஸ்வீட் சாப்பிடற்தில்லைங்க' என்று மறுத்து விட்டார். (உண்மையான காரணம் பிறகு எனக்கே புரிந்தது.)

பிறகு நானே கஷ்டப்பட்டு அத்தனையையும் சாப்பிட்டேன். பாருங்கள் ஒரு தட்டில் எவ்வளவு என்று ::



கேம்பஸுக்குள் அடிக்கடி மயில்களின் அகவல்கள் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. சில மயில்களை படம் எடுக்க முயல அவை பிகு பண்ணிக் கொண்டு ஓடிப் போயின. 'ச்சே! என்ன இது இப்படி வெயில் அடிக்கின்றது! மேகம் கொட்டி மழை பெய்தால் மட்டும் அல்லவா மயில்கள் தோகை விரித்தாடும்' என்று காலையிலேயே நினைத்திருந்தேன்.

நம்ப மாட்டீர்கள். கோயில் விசிட் முடித்து வீட்டுக்கு வந்து மதியம் இரண்டு மணிக்குத் துவங்கிய மழை இன்னும் மதுரை, திருச்சி பகுதிகளில் பெய்து கொண்டிருப்பதாகத் தகவல். நான் கிளம்பும் வரையும் குளிர்க்காற்று; பெருமழை!

ஆனை மலையின் மேல் நீர் ஊற்றி ஊற்றி பெய்து கொண்டிருந்தது. ஆனால, என்ன சோகம் மயில்கள் எல்லாம் அதற்குப்பின் கண்ணிலேயே படவில்லை.

இரவு முழுதும் அகவல் சத்தங்கள் மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தன.



ஞாயிறு காலை 9 மணி அளவில் அங்கயற்கண்ணி திருக்கோயிலைச் சென்றடைந்தோம். கோபுரங்களில் பணி மேற்கொள்வதால், நாற்றிசைகளிலும் தென்னை ஓலைகள்.







புது மண்டபம் வழியாகச் சென்று முதலில் அம்மையைக் கண்டோம். மூக்குத்தி மின்ன மின்ன தீப ஒளியில் திவ்ய தரிசனம். மனதுக்குள்,

கொண்டைமுடி அலங்கரித்து
கொஞ்சும் கிளி கையில் வைத்து
கொண்டைமுடி அலங்கரித்து
கொஞ்சும் கிளி கையில் வைத்து
அஞ்சுக மொழி உமையாள் வீற்றிருந்தாள்
அந்த அழகிய மாநகர் மதுரையிலே......மதுரையிலே
மதுரையிலே......மதுரையிலே

என்ற வரிகள் மட்டும் மீண்டும் மீண்டும் ஊறிக் கொண்டே இருந்தன.



பொற்றாமரைக் குளத்திற்குச் செல்லும் வழியில் சில ஸ்டில்கள் எடுத்தோம்.



குளத்தில் நீர் கொஞ்சம் குறைவாக இருந்தது. திருநீற்றுப் பிள்ளையாரையும் கண்டு களித்து, காசி விஸ்வநாதர் - விசாலாட்சி அம்மையையும் கண்டுணர்ந்து, திருக்கோயிலின் மாடலைத் தாண்டிச் சென்று எழில் சுந்தரேஸ்வரரையும் தரிசித்தோம்.



அனைத்து ஆலயங்களுக்கும் சென்று, தெற்கு வாசல் வழியாக வெளிவந்தோம். கோயிலுக்குள் எடுத்த மற்றும் சில படங்கள் ::









இந்த சிக்கலான அமைப்பு எதைக் கூறுகின்றது? யாருக்கேனும் தெரியுமெனில் சொல்லுங்கள். மற்றுமொரு தொடர்புடைய வளையங்கள் இங்கே!





புது மண்டபத்தில் ஒரு சிலை ::



புது மண்டபக் கடை வாசல்கள் ::



நகரா மண்டப வாசல் ::



எத்தகைய கருமேகம்!! ::



தெற்கு வாசல் தாண்டி மேற்குப் பகுதிக்குச் சென்று விசாரித்துப் பார்த்துச் சென்ற ஒரு குறுகிய சந்தில் தேடித் தேடி வாங்கிய பழைய புத்தகங்கள் ::

: தாகூரின் The Wreck - Macmillan's Stories to Remember Series.

: டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு - சுஜாதா - குமரிப் பதிப்பகம்.

: Stephen Hawking's Universe - John Boslough.

: அறிவோம் சிந்திப்போம் - சுஜாதா - பாரதி பதிப்பகம்.

வழக்கம் போல் வாத்தியாரின் பலபட்டறை அறிவு வீச்சு பிப்ரவரி 18, 1993-ல் வெளிவந்த இந்த ஒல்லி புத்தகத்தில்! க்ளோபல் வார்மிங், 100 ஆண்டுகளுக்குப் பின் தமிழ், க்வார்க், பிக் பேங், இறப்பு, சிந்திக்கும் இயந்திரம், புறநானூறு, ஸ்பினோஸா, தாவர அன்பு, தவளைக் குஞ்சுகளின் தியாகம், கடவுள், அரசோடு ஒத்துப் போகாத ஆர்க்கிமிடிஸ், காலத்துக்கு முந்தியவர்கள் என!

: தண்ணீர் தண்ணீர் - கோமல் சுவாமிநாதன் - வானதி.

என்ன ஆச்சரியம்! ஜெயமோகன் அவர்களும் கோமல் அவர்களைப் பற்றி எழுதியுள்ளார் இதே சமயத்தில்!

: Stephen Hawking Quest for a theory of everything.

: அப்பா சிறுவனாக இருந்த போது - அலெக்ஸாந்தர் ரஸ்கின் - ராதுகா.

தியத்திற்கு மேல் ஐயர் பங்களாவில் (இது ஒரு ஏரியா பேருங்க! நத்தம் போகின்ற வழியில் இருக்கின்றது.) இருக்கும் மாமா வீட்டுக்குச் சென்றேன்.

நெடுநேரம் இலக்கியம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். 'உனக்கு இந்தப் பேர் வைக்கச் சொல்லி அம்மாவிடம் சொன்னதே நான் தான்! வாத்தியாருக்கு அப்படியொரு இரசிகனாக இருந்தோம் அக்காலத்தில்!' என்றார். 'தன்யனானேன்' என்றேன்.

எதிர்பாராத சமயத்தில் எதிர்பாராத இடத்தில் எதிர்பாராத ஒருவரிடமிருந்து எதிர்பாராத ஒருவரைப் பற்றி வரும் அபிப்ராயங்களில் தான் எழுத்தாளராக இருப்பதன் அர்த்தம் உள்ளது என அறிகிறேன்.

சென்ற முறை சென்ற போது பவானியில் ஒருவரைச் சந்தித்தேன். குறைந்த வகுப்பே பள்ளியில் படித்திருந்தாலும், இவ்வருட ஈரோடு நூல் அழகத்தில் அவர் வாங்கி வந்த அத்தனை புத்தகங்களும் நாஞ்சில் நாடன் அவர்களுடையது! மேலும் அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது, 'நான் கம்மியாத் தாங்க படிச்சேன். ஆனா சுஜாதா சொல்லிக் கொடுத்தது நிறைய! மகராசன் போய்ட்டான்!' என்றார்.

மாமாவும் அவரது நண்பர் ஒருவரும் இளம் வயதில் வாத்தியாரின் எழுத்துகளுக்கு அப்படியொரு ப்ரேமையோடு இருந்தனராம். இரவெல்லாம் கதைகள் பற்றிப் பேசுவராம். நண்பர் தான் வாத்தியாரின் மறைவை போனில் சொன்னாராம். சொல்லும் போதே வயர்லெஸ் செல்போன் வழி அழுகை ஈரம் இவருக்கு கேட்டதாம். அவரும் கேட்டிருப்பார்.

கேட்டவுடன் எனக்கு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் வாத்தியார் அஞ்சலி நினைவுக்கு வந்தது.

ஒரு நிறை வாழ்க்கை வாழ்ந்த ஆத்மா அவர் என்பதை உறுதிப்படுத்தும் அனுபவம் எனக்கு கிட்டிக் கொண்டே இருக்கின்றது.

'என் ப்ளாக்கை அவ்வப்போது படித்து வருகிறீர்கள். எந்தக் கதை சட்டென உங்களுக்கு ஞாபகம் வருகின்றது. உடனே சொல்லுங்கள்!' என்று கேட்டேன். மூன்று நொடிகள் எடுத்துக் கொண்டு, இக்கதையைச் சொன்னார். எனக்கு அப்படியொன்றும் மிகப் பிடித்தமான கதை இல்லை. எனினும் இதில் இருந்து ஒன்றைப் புரிந்தேன்.

உழைப்பின் பலன் எப்படியும் கிடைக்கும், நாமே உணராமல் இருந்தாலும்!

இந்த ப்ளாக்கின் கதைகளைப் படித்து விட்டு அவரது பிள்ளைகளிடம் சொல்லுவாராம். 'இந்தக் கதையை மாமா தசாவதாரம் ஸ்டைல்ல எழுதி இருக்கார்' என்று பதில் வந்ததாம்.

இரண்டும் பையன்கள்.

ன்னும் கொஞ்சம் படங்கள் இருக்கின்றன. மிச்சம் வைப்பானேன், அதையும் பார்த்து விடுங்கள்!!!

மாட்டுத்தாவணி நிலையத்தில் 'தமிழ் வாழ்க'வும் அருகிலேயே வசந்தமும்! ;-).



சாத்தூர் நிறுத்தம் ::



மோட்டலில் நிற்கையில் ::



நெல்லை புதிய பேருந்து நிலையம் ::



***

தொடர்புடைய மற்றொரு பதிவு ::

நீயாட்சி செய்யும் மதுரையில் மீனாட்சி என்ற பெயர் உனக்கு.