Saturday, January 12, 2008

இராஜாங்கம்.



சைஞானியின் இளவல் யுவன்சங்கர் ராஜாவிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு (பருத்தி வீரனுக்குப் பிறகு என்று நினைக்கிறேன்.) 'எப்போது 'தென்றல் வந்து தீண்டும் போது' போல் நான் பாட்டு போடுகிறேனோ அப்போது தான் நானும் இசையில் ஏதேனும் கொஞ்சம் செய்திருக்கிறேன் என்று நம்புவேன்' என்று கூறியிருந்தார்.

என்ன ஓர் அற்புதமான பாடல்.

இப்பாடல் என் வாழ்வில் ஒரு துயரமான (அத்துயரம் அப்போது தெரியவில்லை..! பள்ளி வயது..!) நிகழ்வோடு பிணைந்திருப்பதால், எப்போது கேட்கையிலும் மனம் எங்கோ பறக்கத் தொடங்கும்.

இப்போது தெரிகிறது, அப்படி எந்நிகழ்வும் இல்லாவிடினும் இப்பாடல் காதுகள் வழி இசையாய் நுழைந்து, கண்கள் வழி நீராய்ப் பெருகும் வல்லமை வாய்ந்தது என்பது புரிகிறது.

பாடலோடு இயைந்த காட்சியமைப்புகளும், திரையை நிரப்பும் வண்ணங்களின் சிதறல்களும், ஒரு மெல்லிய நூலாக இயைந்து வரும் சோக உணர்வும் இப்பாடலை எக்காலத்துக்கும் நிலைத்திருக்கச் செய்யும்.

சுக ராகம் சோகம் தானே..!



இராஜா அவர்கள் நல்ல கதைக்காகவும் படங்களுக்காகவும் காத்திருக்காமல், தன் உள் ஆற்றல் வெளிப்பாடாக இது போன்ற பாடல்களை வெளியிட வேண்டும். தமிழ் ஆல்பமாகவே போடலாம். சத்தியமாகத் தோற்காது.

ஏனெனில் காசுக்கான கலை வெளிப்பாடு காற்றோடு கரைந்து போகும். தன் ஜீவனின் ரசத்தை வெளிப்படுத்திய கலை வடிவம் காலத்தோடு உறைந்து நிற்கும். மோனலிசா தவிர டா-வின்சியின் வேறு படங்கள் எத்தனை பேருக்குத் தெரியும்...?

சுவாமிஜி.



ன்று சுவாமிஜி விவேகானந்தரின் பிறந்த தினம்.



நான்காம் வகுப்பு முடித்து ஐந்தாம் வகுப்பு சேர்வதற்காக எங்கள் ஊரில் பள்ளியைத் தேடியதில், இடமில்லை என்று சொல்லப்பட்ட பள்ளிகளில் ஒன்று 'சுவாமி விவேகானந்தா துவக்கப் பள்ளி'. பின் வேறொரு பள்ளியில் சேர்ந்தேன். இப்படித் தான் முதன்முதலில் (அசந்தர்ப்பமாக)சுவாமிஜியின் பெயர் அறிமுகமானது.

என் சகோதரருக்கு அப்பள்ளியில் இடம் கிடைத்தது. அவ்வப்போது அவருக்குக் கொடுக்கும் புத்தகங்களில் ஒன்று நானும் படித்தேன். (நமது புத்தகப் பைத்தியந்தான் இங்கேயே சொல்லி இருக்கிறதே..!). 'சிறுவர்களுக்கான விவேகானந்தர்'. அவரது வாழ்வில் சிறு வயதில் செய்த குறும்புகள், தியான வாழ்வு, இரக்க மற்றும் தைரிய நிகழ்வுகள் என்று சிறுவர்களுக்கு பிடித்தவற்றைக் கூறி இருந்தார்கள்.

த்தாம் வகுப்பு முடிந்து, பரிசு கொடுத்த வைபவத்தில், நான் ஒரு புத்தகத்தைப் பார்த்துக் கூறினேன். 'என்ன இந்த புக் இவ்ளோ தடியா இருக்கு. யார் தலையில் கட்டப் போகிறார்களோ' என்று. கடைசியில் கிட்டியது(ஐயோ.. மலையாளம்..!) என் தலை...!

இராமகிருஷ்ண மடத்தின் வெளியீடான 'சுவாமி விவேகானந்தர்'. ஆசிரியர் ரா.கணபதி அவர்கள்.

சில நாட்களிலேயே இரவெல்லாம் விழித்துப் படித்து முடிக்கையில் இவரை மிகவும் அருகில் இருந்துப் பார்த்து, வாழ்ந்தது போன்ற உணர்வு கிடைத்தது உண்மை.

பிறகு எங்கள் ஊர்க் கோயிலுக்குச் சென்று வரும் போதெல்லாம் மடத்தின் சின்னச் சின்ன வெளியீடுகள் (2 ரூபாய், 4 ரூபாய் விலை) வாங்கி வந்து படிப்பது வழமையாகிப் போனது.

சென்னை வந்த பின், அவ்வப்போது மயிலை சென்று கபாலியைக் கண்டு வருகையில் மடத்தையும் சென்று பார்த்து விட்டு வருவேன். அங்கும் சும்மா இல்லாமல் புத்தக வரிசை ஆரம்பித்தது. அங்கு வாங்கிய 'கைலாஷ் யாத்திரை' என்ற சி.டி... சொல்லக் கூடாது சார்.. அந்த உணர்வை நீங்கள் அனுபவித்தால் தான் தெரியும்.

இமயத்தின் பிரம்மாணடமும், அந்த வெள்ளைப் பனி மலையில் படர்ந்திருக்கும் ஆன்மீகமும், இமயம் மீதான அன்பை மேலும் வளர்த்துக் கொள்ள இந்த சி.டி. உதவியது. (இன்று பாரதத்தின் தென் முனையில் இருந்தாலும் என்றாவது அந்த பத்ரிகேஸ்வரனின் தரிசனம் பெற வேண்டும் என்பது உள் அவா.)

Thursday, January 10, 2008

சேர நாட்டுப் பொழுதுகள் - 2.

சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸில் ஏற, காலை 8:20க்கு கிளம்பிய இரயில் ஊரெல்லாம் சுற்றிக் கொண்டு வந்து (இதுவரை நான் பார்த்தேயிராத நெல்லை, நாகர்கோயில் வழியாக) கேரள் எல்லையை அடைந்து ஒரு நிறுத்தத்தில் (நெய்யாற்றின்கரா) நிற்கையில், தொடங்கியது சிலுசிலுப்பான ஒரு பயணம்.

பின் ஒரு விடுதியைத் தேடிப் பிடித்து (இரவு 11:30) இரவு தங்கி, பிறகு வீடு பிடித்து ஒரு வழியாகச் செட்டில் ஆகி, இப்போது இந்த அனுபவங்களை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

பொதுவாக மொழிப் பிரச்னை இங்கு இல்லை என்றே படுகிறது. அனைவர்க்கும் தமிழ் புரிகின்றது. மலையாளத்தில் பிறர் பேசினாலும் முக்கால்வாசி புரிந்து விடுகின்றது. கொஞ்சம் ஆங்காங்கே கேப் விழுகின்றது. அதை நானே நிரப்பிக் கொள்கிறேன்.கடைகளிலோ, பேருந்துகளில் செல்கையிலோ எந்தத் தொல்லையும் இல்லை.



பேருந்துகள் எல்லாம் ஒரு பேருந்து, ஒரு வாசல் என்ற கணக்காக ஒரு வாசல் மட்டும் திறந்து வைத்திருக்கிறார்கள். அவ்வப்போது மற்றொரு வாசலையும் திறந்து இறக்குகிறார்கள். பெரும்பாலும் டிராவல் வண்டி போல் 3+2 என்ற வரிசைகள் அமைந்திருப்பதால், ஏறி, இறங்க கொஞ்சம் சிரமப்பட வேண்டியதாய் தான் இருக்கிறது.

உணவைப் பொறுத்தவரை நாம் தான் கேட்டுப் பெற வேண்டும். சிலசமயம் மஞ்சள் குண்டு அரிசி, அல்லது வெண் அரிசியே குண்டான ரூபத்தில் அல்லது நாம் உண்ணும் சாதாரண அரிசி என்று பல வகைகளில் கிடைக்கிறது. இன்னொன்று, தோசை மட்டுமே கிடைக்கிறது. இட்லி கண்ணிலேயே தெரிய மாட்டேன் என்கிறது. தொட்டுக்கொள்ள நாம் எதுவும் சொல்லவில்லையென்றால் மீன் குருமா கண்டிப்பாக கிடைக்கும், அஃப்கோர்ஸ் நான் - வெஜ் ஓட்டலில் தான்! வெஜ் என்றால் சுண்டல் குருமா! எதுவானாலும் தேங்காய் அள்ளி, அள்ளிப் போடுகிறார்கள்.

நான் போய்ச் சேர்ந்த அன்று தான் 'ஃபிலிம் ஃபெஸ்டிவல்' தொடங்கி இருந்தது. டைம் இல்லாததாலும் (ஆமா..!) வீடு பார்க்க வேண்டியதாலும் அதை மிஸ் பண்ணி விட்டதாக இப்போது உணர்கிறேன்.

Wednesday, January 09, 2008

சேர நாட்டுப் பொழுதுகள்.



சென்ற திங்கள் கிழமையோடு மலை நாட்டிற்கு வந்து ஒரு திங்கள் நிறைவு பெறுகின்றது. இப்போது டெக்னோபார்க் அமைந்துள்ள கழக்குட்டம் என்ற இடத்தில் வாசம்.

டெக்னோபார்க், நகரத்தில் (திருவனந்தபுரம் நகரமா என்று நீங்கள் கேட்பீர்களானால் என்னிடம் பதில் இல்லை. அதுவும் சென்னையில் எட்டு ஆண்டுகளுக்கும் மேல் வசித்து விட்டு, இங்கு வந்தால்... இது பற்றி தனிப் பதிவு!) இருந்து 40 நிமிடங்கள் தொலைவில் கொல்லம் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ளது.

வாரா வாரம் ஏதேனும் ஒரு சுற்றுலா இடத்திற்குச் சென்று வர வேண்டும் என்று திட்டம் இட்டிருந்தேன். ஆனால் வழமையான அலுவலகப் பணிகளால் அந்த திட்டம் நிறைவேற்ற முடியாமல், ஒரே ஒரு வாரம் மட்டும் நகரில் அமைந்துள்ள நேப்பியர் அருங்காட்சியகம் சென்று வந்தேன். (இவர் தான் சென்னை நேப்பியர் பாலத்துக்கும் பெயர்க் காரணமாக இருப்பார் என்று நினைக்கின்றேன்.) இதனைப் பற்றி தனிப்பதிவிட உத்தேசம்.

முதன் முதலில் கேரள மண்ணை மிதித்த நிகழ்வை நினைத்துப் பார்க்கிறேன்.



ந்தாம் வகுப்பு படிக்கையில் பள்ளிச் சுற்றுலா வந்தோம். இது வந்த பாதையே வேறு! ஊரில் இருந்து கிளம்பி கோவை வழியாக பாலக்காடு சென்று குருவாயூர் அடைந்தோம். அது மட்டும் தான் நினைவில் உள்ளது. அப்புறம் ஒரு அணைக்கட்டு சென்றோம் (மலம்புழா..?). அங்கிருந்து கிளம்புகையில் பிடித்தது மழை. வழியெங்கும் பெரிய மழை. மின்சாரம் எல்லாம் போய், மினுக் மினுக்கென மின்னிக் கொண்டிருந்த சிம்னி விளக்குகள் நிறைந்த வீடுக்ளின் வழியே தமிழகத்தில் நுழைய தூறல் தான் வரவேற்றது. பின் சூடான பூமிக்குள் நுழைய இரவு மூன்று மணிக்கும் வியர்த்தது. இவ்வளவு தான் இந்தச் சுற்றுலா நினைவில் உள்ளது.

அந்த சிலுசிலுப்பு மனதில் அப்படியே படிந்து போனது.



ழாம் வகுப்பு படிக்கையில் கோவை வானொலி நடத்திய 'சிறு சேமிப்பு' பற்றிய போட்டியில் கலந்து கொண்டு இறுதிப் போட்டியில் பங்கேற்க கோவை சென்றோம், நானும் எனது நண்பர் காளிதாஸும் (இந்த நண்பர் இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை.:-(()

சிலுசிலுவென தூறிக் கொண்டிருந்த தூறல்களில் நனைந்து கொண்டிருந்தது கோவை மாநகர். ஒருவழியாகத் தேடிப் பிடித்தோம் வானொலி நிலையத்தை, இரயில் நிலையத்தின் எதிரிலேயே இருக்கின்றது. பின் காலை உணவுக்குச் சென்ற உணவகம் மலையாளக் கடை. தோசை போட்டார்கள் பாருங்கள். தேங்காய் எண்ணெயில் சுட்டது. வாழ்வில் முதன் முறையாக இப்படி ஒரு மணத்தோடு தோசை அன்று தான் சப்பிடுகிறோம்.போட்டி முடித்த பிறகு மதியச் சாப்பாட்டிற்காக அதே மலையாளக் கடை. மதியம் சாப்பாட்டிற்காக ஊற்றினார்கள் பாருங்கள் வெண்டைக்காய்க் குழம்பு! அப்படியே பச்சை பச்சையாக ஒவ்வொரு வெண்டைத் துண்டும் ஜவ்வு போன்ற அதன் இழைகளால் ஒட்டிக் கொண்டு வந்தது. கஷ்டப்படுச் சாப்பிட்டு முடித்தோம்.

போட்டியில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், அந்த தேங்காய் எண்ணெய் தோசை மட்டும் மனதோடு ஒட்டிக் கொண்டு விட்டது. மலையாள மணம்...!

அது மட்டுமா..?

கோவையில் ஒரு உறவினர் வீட்டு விசேஷத்திற்குச் சென்று கண்ட காலைப் பனியில் நனையும் புல்வெளிகள், வடவள்ளியில் அதிகாலையில் தெரிந்த பனி பொழியும் மருதமலைக் காடுகள் (இதைப் போய் இவ்ளோ சொல்றியே கேரளாவிலே இன்னும் சூப்பரா இருக்கும் தெரியுமா..?), கோவை உறவினர் வீட்டில் கேட்ட கதகளி இசை, வெண் மஞ்சள் நிறத்தில் ஒளிர்ந்த உண்மையான சந்தனம், காந்திபுரம் சென்ட்ரல் பேருந்து நிலையத்தின் அருகில் கீதாஞ்சலி (தானே?) தியேட்டரில் ஒட்டியிருந்த லாலேட்டனின் போஸ்டர், டவுன் பஸ் ஸ்டேண்டில் பார்த்த சந்தனம் பூசிய நீள் கூந்தல் மலையாளப் பெண் குட்டிகள்.....

என்று மனதில் சம்மணம் போட்டு அமர்ந்து கொண்டது மலை நாடு.

த்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்து அடுத்த நாள் நண்பர்களோடு பார்க்கச் சென்ற சிறைச்சாலை இரண்டு உணர்வுகளைத் தூண்டி விட்டுப் போனது. சுதந்திரப் போராட்ட வரலாறு (இந்த இடத்திற்கு இதைப் பற்றி பேச வேண்டாம்) மற்றும் மலை நாட்டின் மண்வளம், நீர்வளம்.

என்னங்க.. என்னமா காட்டி இருப்பாங்க போங்க. அவ்வளவு பெரிய திரையில் பொங்கிப் பிரவாகிக்கும் Backwater, கதகளி, கோயில்கள், பசிய வயல்கள், பொன் அந்தி மாலை நேரம்.. அடடா... நீரில் படுத்துப் புரண்ட தபுவையே மறக்கச் செய்து மனதை ஆக்ரமித்துக் கொண்டது மலை நாடு.

நீங்களும் நினைவு படுத்திக் கொள்ளுங்களேன் ::

(அநியாயத்திற்கு இந்தப் பாட்டையெல்லாம் மிட்நைட் மசாலாவில் ஒளிபரப்புவார்கள்.(உனக்கு எப்படித் தெரியும்?) கொடுமை..! மொழிபெயர்ப்பு போலவே இருக்காது. பாடலின் வரிகள் கேட்டுப் பாருங்கள்.. என்ன.. என்ன.. வரிகள்..அற்புதம்..! )





பதினொன்றாம் / பனிரண்டாம் வகுப்புகளில் படிக்கையில் உடன் படிக்கும் சில மாணவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. ஆனால் அவர்களுடனான பழக்கத்தினால் கேரளா பற்றிய மதிப்பீடு ஏதாவது ஆனதா என்று நினைவில்லை.

பிறகு வாய்த்தது ஐயா.. தருமமிகு சென்னை வாசம்....

சொல்லவும் வேண்டுமா... அனலை அள்ளி அள்ளி வீசிய வெயில், விடுதியில் இருந்ததில் மூன்று ஆண்டுகளில் வாட்டி எடுத்த தண்ணீர்ப் பஞ்சம், அடுத்த ஆண்டு கொட்டித் தீர்த்த மழையில் சாக்கடை ஆறாகப் பாய்ந்த சாலைகள், விரட்டி, விரட்டிக் கொத்திக் குதறிய கொசுக் கூட்டங்கள், கோடையில் ஃபேனிலிருந்தும் பொழியும் தகிக்கின்ற சூட்டுக் காற்று, நசநசவென்ற உப்புக் காற்றை கொப்புளிக்கின்ற கடல்...( என்ன தான் இவ்வளவு சொன்னாலும் சென்னை சென்னை தான். அதற்கு வேறு நல்ல முகங்களும் இருக்கின்றன. ;-) அது தனியாக..!)

...என்று எனது உடல் கண்டிஷனுக்கு ஊற்றாகப் பெருகச் செய்கின்ற இந்த வெயில் அடிக்கின்ற சென்னை என்று கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் ஓடிப் போய் விட்டன.

அவ்வப்போது பார்க்கத் தொடங்கி, பிறகு அடிக்கடிப் பார்க்கத் தொடங்கி, பின் எப்போதும் பார்க்கத் தொடங்கிய கிரண், சூர்யா, கைரளி, ஆசியாநெட் தொலைக்காட்சிகள் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்குப் பின்னால் ஒரு சொர்க்கம் இருக்கின்ற பிரமையை ஏற்படுத்தின.

என்ன அந்த சொர்க்கம்?.. அதே தாங்க..அதே தான்..!

சென்னையிலேயோ, தமிழகத்தின் வேறு எங்கும் தேடினாலும் நல்ல முகமும் கலரும் எப்போதாவது தான் கண்ணில் படும். அதற்கும் ஆயிரத்தெட்டு காம்படீஷன்...! என்ன செய்வது? நம்ம ஊர் வெயில் அப்படி! போட்டுக் காய்ச்சி எடுக்கிற காலநிலையில் ஃபேர் அன் லவ்லி அரை கிலோ எடுத்து அப்பிக் கொண்டாலும் ஒரிஜினாலிட்டி வழிந்து பல்லிளித்து விடுகின்றது.

கிரண் டி.வி. சூர்யா டி.வி.யின் இளமைக் கிளையாம்..! (நம்ம சன் மியூசிக் போல்..!) இரவு அலுவலகத்தில் இருந்து எவ்வளவு தாமதமானாலும், காலையில் எப்பாடு பட்டாவது 7:50க்குள் எழுந்து விடுவேன். ஏன் என்று கேட்கிறீர்களா? 'குட் மார்னிங் கிரண்' நிகழ்ச்சி நடத்தும் அம்மிணி, நான் காலையில் பார்க்கவில்லையென்றால் கோபித்துக் கொள்வார்கள்..!

பிறகு சூர்யாவில் பார்க்கும் தொடர்கள், ஞாயிறில் போடப்படும் திரைப்படங்கள், யூ-டியூபில் பார்க்கும் (நல்ல.. சத்தியமா) மலையாளப் பாடல்கள் என்று மலைநாட்டின் வளம் புரிந்து கொண்டே போனது.

காலையில் கிரணில் மலையாளப் பாடல்களோடு துவங்கும் நாள் பொழுது, இரவு ஜெமினியில் தெலுங்குப் பாடல்களோடு (இது உறுதியில்லை. அலுவலகம் முடிந்து வருவதைப் பொறுத்து!) நிறைவுறும்.

அடடே.. இவன் மோசமான பையன் போல் இருக்கே என்று முடிவு செய்து விடாதீர்கள்.

மகாகவியே பாடியிருக்கிறார் அல்லவா?



...
சேர நன்னாட்டிளம் பெண்களுடனே..
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து...
...

ஐயையோ.. டாபிக் எங்கெங்கேயோ போகிறதே...

சென்னையில் பணியில் இருந்த காலகட்டத்தில், 2005 அக்டோபரில் அலுவலகத்தில் மூணாறு சுற்றுலா சென்றோம்.

இது மற்றொரு வழி.

சென்னையில் இருந்து கிளம்பி, வண்டலூர் வந்து (அவ்வளவு தான். தூங்கியாகி விட்டது. விழித்துப் பார்க்கையில், விடிந்து) தேனி, கம்பம், குமுளி என்று வேன் மலையேறத் துவங்கி விட்டது. குமுளியில் எல்லையைக் கடந்தவுடனே வந்தது ஏர்டெல்லின் செய்தி.

'ஏர்டெல் கேரளம் உங்களை வரவேற்கிறது. ரோமிங் வேலை செய்யணுமின்னா இதுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பு. இவ்ளோ பைசா பிடிச்சுக்குவோம்'.

'அட.. ஆபிஸருங்களா..உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையாடா' என்று நினைத்துக் கொண்டேன்.

அங்கிருந்த ஒரு ஓட்டலில் காலைக் கடன்களை முடித்து விட்டு, முகம் கழுவி, காலை உணவு உண்கையில் வைத்தார்கள் சூடான நீரோடு கசகசா (என்று நினைக்கிறேன்)! புது அனுபவம். பின் மீண்டும் மலையேற்றம்.

வழியெங்கும் மேடு பள்ளம் என்று படர்ந்து விரிந்து இருந்தது, டாடாவின் தேயிலைத் தோட்டங்கள் (கண்ணன் தேவன் டீ நினைவில் இருக்கிறதா? அந்த விளம்பரம்? காடு, மலை எல்லாம் தேடினேன். ஒரு நல்ல டீக்காக என்பார் ஒருவர். பின் இங்கு வந்து தான் குடித்திருப்பார் என்று நினைக்கிறேன்.) , அவ்வப்போது விழிகளில் விழுந்து எழுந்து ஓடிய காட்டருவிகள், என்று அட்டகாசமாக இருந்தது.

பின் மூணாறு ஊரெல்லாம் தாண்டிய பிறகு, ஒரு காட்டுக்குள் சென்று ஒரு ஓட்டலில் இடம் பிடித்தோம். அன்றைய மதியமே வழியே இல்லாத காட்டின் மேலே ஏறிக் கொண்டிருந்தேன்.

அடுத்த நாள் காலை அந்த லாட்ஜுக்குப் பின் இருந்த ஒரு காட்டருவிக்கு நான் மட்டும் சென்றேன். சென்னையின் குறுகிய அறைக்குள் சிறைக்குளியல் நடத்திக் கொன்டிருந்தவனை, பால் வெண்மையில் பாய்ந்து ஓடி கிடுகிடுக்க வைத்த சிற்றருவியில் குளி என்றால் என்ன செய்வான்?

அவ்வளவு ஜில்லுனு ஓர் அருவி! காலை 5:30 என்று நினைக்கிறேன். யாருமற்ற தனிமை. என்ன தோன்றும்?

கானகமெங்கும் கிடுகிடுக்க, வானகமெங்கும் நடுநடுங்க ஒரு மணிநேரத்திற்கு மேலாக ஆட்டம் போட்டேன், அருவியில் 'இயற்கைக்' ;-) குளியலாக!

கீச்சு கீச்சென்ற சின்னச் சின்னக் குருவிகளின் சிணுங்கல்களோடு, தூரத்தில், வெகு தூரத்தில் தெரிந்த சூரியனின் நின்ன முதல் கீற்றோடு,சத்தமாகப் பாட்டு பாடிக் கொண்டு, மேலிருந்து கீழே குதித்து, சிற்றருவியின் உச்சி வரை ஏறிச் சென்று, தலை மேல் தடதடத்து விழுந்த பேரிரைச்சலோடு பாய்ந்த வெண் நீரில் மூச்சு முட்டி, முகத்தைக் காட்டுகையில் பொளேர் பொளேர் என்று அறைந்து, ஒவ்வோர் அணுவையும் நனைத்து, நனைத்து சிலிர்க்கச் செய்து, குளிரச் செய்து....

ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை. பின் நேரமாகி விட்டதென தோன்றியதால் பிரிந்து சென்றேன், அருவியை! ஒட்டிக் கொண்டு வந்தது மலை நாட்டின் நீர்வளம்...!

அன்று மதியம் நானும் மற்றுமொரு தோழியும் அந்த அருவியின் மூலத்தைக் காண்போம் என்று அடர்ந்த மரங்களையும், சின்னச் சின்னக் கொடிகளையும் தள்ளி விட்டு ஓர் எல்லை வரை போனது மற்றுமொரு மறக்கவியலாத நினைவு. இங்கே அறிந்தது மலை நாட்டின் மர வளம்.

(விட்டால் இது மூணாறு நினைவுகள் ஆகி விடக் கூடிய அபாயம் இருப்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். ;-))

ப்படி இந்த 'காலேஜ்' வாழ்க்கையில் கண்களிலும், கருத்திலும் அவ்வப்போது வந்து கையசைத்துப் போன கேரள தேசத்தின் நினைவுகளும் இங்கு வரக் காரணமாக இருந்தன என்று சொன்னால் மிகையல்ல.

ரொம்ப நீளமாகப் போய் விட்டது, இப்பதிவு!

எனவே பழைய நினைவுகள் இத்துடன் முற்றும். இந்த ஒரு திங்களில் என் கவனத்தைக் கவர்ந்த நிகழ்வுகள் அடுத்தடுத்த பதிவுகளில்..!

Tuesday, January 08, 2008

We salute You, Sir...!



ன்று ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களின் 65-வது பிற்ந்த தினம்.

மிகப் பெரும் சிந்தனையாளர் என்பதுடன் அவரது வாழ்வில் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டிய மற்றுமொரு செய்தி.. அவரது தன்னம்பிக்கை...!

எல்லாம் ஒழுங்காக இருந்தும் எதுவும் நல்லதாக / உருப்படியாகச் செய்யாமல், மகாகவியின் 'தேடிச் சோறு' தின்னும் பல்லாயிரம் ஈசல்களில் ஒருவராக மடிகின்ற மண்ணில்.. இவரது வாழ்வு தரும் செய்தி, அற்புதம்..!

உங்களை வணங்குகின்றோம். We salute You, Sir..! உங்களது இயற்பியல் கோட்பாடுகளோ, உங்களது தீர்மானமான முடிவுகளோ நாங்கள் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம்.

ஆனால் உங்களது தின வாழ்வில் இருந்து நாங்கள் பெற வேண்டிய செய்தி பெற்றுள்ளோம்.

நன்றி ஐயா..!

http://www.hawking.org.uk/


Get Your Own Music Player at Music Plugin

Sunday, January 06, 2008

என்னங்க நடக்குது இங்க?

நீங்களே பார்த்திருப்பீங்க.. இல்லை படிச்சுப் பாருங்க.

இந்த ஸ்டீவ் பக்னர் ஏற்கனவே சச்சினுக்கு பலமுறை தப்பான அவுட் கொடுத்திருப்பவர். அப்புறம் இந்த அம்பயர் வேற்..!

மரியாதையா இந்திய அணி மூட்டையைக் கட்டிட்டு, ஆஸ்திரேலியா டூரை இத்தோடு நிறுத்திட்டு வர்றது தான் சரி..! அவங்க ஆட்ட நெறிமுறைகளும், அம்பயரிங் ஆட்டங்களும் தெரிஞ்சிடுச்சு இல்ல?

இன்னும் என்னய்யா ஆட்டம் வேண்டி இருக்கு அங்க?

http://www.cricketnext.com/messageboard/discussion_wc.php?topicid=112

http://www.cricketnext.com/news/india-up-in-arms-over-umpiring-calls/28721-13-1.html

மஞ்சள் நதிக்கரை.



ரமான பொன் துகள்கள் மிதந்து கொண்டிருக்கின்றன.

தங்க வாட்கள் எடுத்து வீசி, வீசி விளையாடிக் கொண்டிருக்கின்றது சூரியன். மேகங்களின் கர் மேனிகளுக்குள் நுழைந்து, தகதகச் செய்கின்ற கிரணங்கள், தமது சூட்டைத் தணித்துக் கொள்ள நதியின் அலைகளின் மேல் பாய்கின்றன.

என்ன விந்தை..! செம்புலப் பெயல் நீராகச் சிவந்திருக்கின்ற நீர்த்துளிகள், இன்னும் பொன்னிறம் பெற்று மினுமினுக்கின்றன.

தூரத்தில் பறந்து கொண்டிருக்கின்ற பறவைகள் இன்னும் நெடுந்தொலைவு செல்ல வேண்டி விரைகின்றன. ஆயிரமாயிரம் கரங்கள் கொண்டு தம்மை அணைத்துக் கொண்டிருந்த கதிரவன் மெல்ல மெல்ல இரவின் பெரும் போர்வைக்குள் மறைவதால் விடுபட்ட மேகக் கன்னிகள், கூடிக் கூடிப் பேசிக் கொண்டு கலைகின்றன.

இன்னும் வராத சின்னச் சின்ன மீன்களின் ஒளி தீண்டும் எல்லைக்குள் நாம் அமர்ந்திருக்கிறோம்.

கரும்பச்சைக் காடுகளின் நெருக்கமான இருளில் இருந்து நாம் விடுபட்டு, சிறிது நேரத்திற்குள் மறையப் போகின்ற கதிரின் மென் சூட்டின் அணைப்பில்...!

மஞ்சள் அலைகள் வந்து வந்து தீண்டுகின்ற கரையோரம் நம்மோடு தென்றலும், நம் காதலும்..!

சிலிசிலுவென அடிக்கத் துவங்குகின்றது மென் தென்றல். அதன் குளிரில் ஆடத் தொடங்கிய நாணல் புதர்கள் இன்னும் நம்மைத் தீண்டாத உணர்வுகளைத் தொட்டு எழுப்பி அசைகின்றன.

இன்னும் நெருங்கி வந்து இதழ் சேர்கையில், மெல்ல மூடுகின்றது நாணம் எனும் மாய வலை கண்களை.!

மறைகின்ற மென் பொன் வெயிலின் கரங்கள் வெப்பம் ஆக்கும் மற்றுமொரு நம்மை..!

நகைச்சுவை.

கேரள நடிகர் ஜெகதியின் நல்லதொரு நகைச்சுவைக் காட்சி..!