23. நவ.2006 அன்று தமிழ் முரசு பத்திரிக்கையில் பார்த்த செய்தி.
'காங்கிரஸ் அமைச்சர்களைப் பிடித்து சிறையில் அடைப்போம்' என்று
கர்னாடக துணை முதல்வர் எட்டியூரப்பா அவர்கள் கூறியிருப்பதாகவும், அதனை
முன்னாள் முதல்வர் தரம்சிங் அவர்கள் ம்றுப்பு தெரிவிப்பதாகவும் அந்த
செய்தி வெளியாகி இருந்தது.
இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா..?
'அரசியலில் இதெல்லாம் சாதரணமப்பா' என்கிறீர்களா..?
விஷயம் இதில் இல்லை. மறுப்பாய் என்ன கூறியிருக்கிறார், பாருங்கள்.
'... துணை முதல்வர் தவறாகப் பேசியிருக்கிறார். அவர்கள் மக்கள்
னலத் திட்டங்களை செயற்படுத்துவதில்லை. ஆனால் பல கோடிக் கணக்கான
ரூபாய்களுக்கு ஊழல் செய்துள்ளார்கள். விரைவில் நாங்கள் அவர்கள்
இடத்தைப் பிடிப்போம்...'
என்ன சொல்ல வருகிறார் இவர்..?
இதைப் படித்தவுடன் எனக்கு எங்கள் பள்ளியில் நடந்த நிகழ்ச்சி தான்
ஞாபகம் வருகிறது.
அப்போது நான் +1 படித்துக் கொண்டிருந்தேன். +2 மாணவர்கள் ஏதோ ஒரு
காரணத்துக்காக தமிழ் ஆசிரியரைத் தண்டிக்க வேண்டும் என்று ஸ்டிரைக்
( பணி நிறுத்தம் என்று சொல்லலாமா..?) செய்தார்கள். எங்களையும் அதில்
இழுத்து விட்டார்கள்.
பின் தலைமை ஆசிரியரிடம் மனு கொடுப்பதற்காக பல கோரிக்கைகளை
எழுதினார்கள். பின் நாங்கள் படை சூழ, அவரிடம் கொடுத்தார்கள்.
அதைப் படித்து விட்டு தலைமையாசிரியர் அதிர்ச்சி அடைந்து
விட்டார்.'தமிழாசிரியரை மட்டும் தண்டி' என்று சொன்னால் பழிவாங்கி விடும்
சாத்தியம் உள்ளதால், பல கோரிக்கைகளை எழுதி, கடைசியாக, இதற்காக
தமிழாசிரியரைத் தண்டியுங்கள் என்று மனு எழுதியிருந்தார்கள்.
'....
மிதிவண்டி நிறுத்தம் சரியாகப் பராமரிக்கப் படவில்லை.
....
கழிப்பறை சரியாகச் சுத்தம் செய்யப்படவில்லை. எல்லாம் அங்கேயே
தேங்கி நிற்கின்றன.
இதற்கு காரணமான தமிழாசிரியரை உடனடியாகப் பணி நீக்கம் செய்ய
வேண்டும்'
என்ன நடந்தது என்றால், அவர் அடித்து ஒரு மாணவன், மருத்துவமனை
செல்ல வேண்டியதாகி விட்டது. அதை எழுதாமல் விட்டதால், அர்த்தம்
அனர்த்தமாகி இருந்தது.