Wednesday, December 29, 2010

ஈரோடு - சங்கமம்-2010.

மாநகராட்சிப் பேருந்து நிலையத்தை அடைந்த போது மதியம் வந்து கொண்டிருந்தது. ஞாயிற்றுக்கே உரிய கொஞ்சக் கூட்டம். மஞ்சள் மணக்கும் இலவசக் கழிப்பிடங்கள். தள்ளுவண்டி நீர்மோர்ப் பானைகள். தினத்தந்திஅலுவலகம் . டீசல் இன் பார். காணாமல் போன சைக்கிள் ஸ்டாண்ட். வர்ண மினி பஸ்கள். வரிசையான பழக்கடைகள். தொங்கும் பத்திரிக்கைகள். காரைத் தளங்கள். ஹாரன் சத்தங்கள். மூட்டைகள். மனிதர்கள். நான்கைந்து மரங்கள். மெல்லிய மேகங்கள். வெயில்.

பெருந்துறை செல்லும் பேருந்து ஒன்று சினை பஸாய் நகர யோசித்துக் கொண்டிருந்த இடைவெளியில் நாங்கள் ஏறிக் கொண்டோம். நானும் அவளும். சத்தியமூர்த்தி(?)க்காகப் பள்ளிச் சீருடைகளில் பையன்களும், பெண்களும். "பரிமளம் மஹால் ரெண்டு. ஸ்டாப்பிங் வந்தா சொல்லுங்க...!" "ம்.."

சவிதாவில் லெஃப்ட் கட் அடித்து பார்க் வரை சென்று தொட்டும் தொடாமல் U எடுத்து ஜி.ஹெச்.சில் நிற்கும் போது அன்னை சோனியா காந்தி பிறந்த நாள் விழா பேனர்களில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும், வாசனும் 'நண்பேன்டா...' போஸ் கொடுத்துக் கொண்டிருந்தது ஜூ.வி. வரை ரிப்போர்ட்.

ஆட்சியர் கட்டிடம் தாண்டி ஓர மரங்களையும் பச்சை வயல்களையும் கடந்து ஸ்டாப்பிங்கில் நின்றது. இறங்கிச் சாலையைக் கடந்து ஆட்டோ நிறுத்தத்தில் "டைஸ் அண்ட் கெமிக்கல்ஸ் அசோஷியேஷன் பில்டிங் எங்க இருக்குதுங்க..?" "ரொம்ப தூரமாச்சுங்களே..! ஒரு கிலோமீட்டர் வரும். (கைகாட்டி) இப்படியே போனீங்கனா லெஃப்ட்ல ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம் வரும். ஒட்டி சந்துல உள்ள போயி மூணாவது கட்டுங்க.."

வெயில் தாரைகள் ஒழுகிக் கொண்டிருந்த வெளியில் நனைந்து கொண்டே அந்த மூன்றாவது கட்டிற்குள் செல்லும் முன்பே கட்டிடம் தெரிந்தது. முந்தைய ஜெயமோகன் நிக்ழவொன்றும் இங்கே தான் நடந்திருந்தது. அப்போது திறந்திருந்த கார் பார்க்கிங் சாத்தப்ப்ட்டிருக்க, சங்கக் கட்டிடத்தில் நுழையும்போது கைகளில் பழமைபேசியின் புத்தகத்தையும் ஒரு நோட்பேட் பேனாவையும் புன்னகையுடன் கொடுத்தனர் இரு சிறுமிகள். அழகாய்.

நாங்கள் அடைந்த போதே பதினொன்று தொட்டிருந்தது. முதல் பேச்சே என்னுடையது என்று தயாராய் வந்திருந்தால், காலி நாற்காலிகள் காற்றாடியின் கீழ் நான்கு கால்களாட்டிக் கொண்டிருந்தன. தாமோதர் சந்துரு வரவேற்றார். மதுரைக் கார்த்திகைப் பாண்டியன், ஸ்ரீதர் கை கொடுத்தனர். அரூரன் வணக்கம் சொன்னார். கதிர் அங்குமிங்கும் ஓய்வின்றி இயங்கிக் கொண்டே இருக்க, ஒரு சலாம் கொடுத்து விட்டுக் காற்று வரும் வழியில் அமர்ந்து கொண்டோம்.

அவள் பழமைபேசி புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையில் நானும் ஸ்ரீதரும் வெண்பாக்கள் பற்றிப் பேசினோம். கா.பாண்டியனும் க.கொண்டார். ஒவ்வொருவராக வரத் தொடங்கினர்.

நிகழ்ச்சி நிரலின் படி துவங்கி, எழுத்தாளர் பெருமாள் முருகன் பற்றி சிறு அறிமுகம் கொடுத்து விட்டு அமர்ந்து கொண்டேன். 'சிறுகதைகளை உருவாக்குவோம்' பற்றி நிறைய சொன்னார்.



அம்மாவும் வந்து எங்களோடு சேர்ந்து கொண்டார்.

கோவை பாமரன் தான் எவ்வாறு எழுத்துக்கு வந்தேன் என்று இயம்பிக் கொண்டிருக்க, 'உலக மொக்கையர்களே ஒன்று சேருங்கள்' என்ற அவரது தலைப்பிற்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்று ஆய்ந்து கொண்டிருந்தேன்.

'தமிழ் ஸ்டுடியோ' அருண் இளைஞராக இருந்தார். மேடைத் தமிழை மேலேற்றாமல் இயல்பாகப் பேசினார். அவரது நிறுவனத்தில் குறும்படம் எடுக்க விரும்புபவர்களுக்காகச் செய்து தரும் வசதிகளைப் பற்றிச் சொல்லச் சொல்ல, நாமும் ஒரு குறு எடுத்தால் என்ன என்று கைகள் கொஞ்ச நேரம் பரபரத்தன.

நிரலில் கொஞ்சம் தடம் மாறி 'உலகத்திரைப்படங்கள்' பற்றி சிதம்பரம்.கி. பேசினார். அதற்குள் உணவு வேளை வந்து விட, கவனம் எல்லாம் கவளம் பக்கம் சென்று விட்டதால், இவர் என்ன சொன்னார் என்பதே மூளை ட்ராக்குகளில் சென்று சேரவில்லை. பசி வந்திட படமும் பறந்து போம்!

உணவுக்குப் பின் கொஞ்சம் கூட்டம் கரைந்து போய் விடக்கூடும் என்பதை உஷாராக உணர்ந்து கொண்டு எல்லோரையும் தற்போதே அறிமுகம் செய்து கொள்ளச் சொன்னார் கதிர். ஏதோ பரிசு வாங்கும் பள்ளியர்கள் போல் ஒவ்வொருவராக வந்து மைக்கைக் கைப்பற்றித் தம்மைப் பற்றி மூன்றே வரிகள் சொல்லி அகன்றனர். வழக்கம் போல் ஒரு கூட்டம் பின்புறம் அமர்ந்து கொண்டு சத்தமாகப் பேசி இடைஞ்சல் கொடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்குப் பின் நவீனத்துவமாகப் பிரியாணியை இனிமாவில் கொடுத்திருக்க வேண்டும்.

மேலே முதல் மாடியில் தனித்தனியாகச் சைவம் மற்றும் அசைவம் டேபிள்கள் இருந்தன. அசைவத்தில் அமர்ந்து வகையாக உண்டபின் 'இனிது இனிது மானிடராய்ப் பிறத்தல் இனிது; அதனினும் இனிது ஈரோட்டுப் ப்ளாக்கராய்ப் பிறத்தல்' என்று கவி பாடிக் கொண்டே கைகழுவினேன். நானும் பரிமாறுகிறேன் பேர்வழி என்று சொல்லி ரசக் குண்டாவை எடுத்தேன்; வேறு கைகளில் தரவேயில்லையே..! இலை வழிய, சோற்றுக் குழியில் ஊற்றி, கைகளில் நனைத்து... ஒரே ரசமாய் இருந்தது.

(எஸ்.வி.சேகர் : சின்னம்மாவுக்கு ரசம் வைக்கக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.

பெரிய மாப்பிள்ளை : என்ன ரசம்?

எஸ்.வி.சேகர் : சிருங்கார ரசம்..!

- சின்ன மாப்ளே..பெரிய மாப்ளே... அல்லது ஹனிமூன் இன் ஹைதராபாத்)

களைப்பாகப் போயிற்று என்று எனக்குள் சொல்லிக்கொண்டு மற்றுமொரு பாயசம் டம்ளரை எடுத்துக் கொண்டு கீழே அரங்கத்திற்கு விரைய, கல்யாண கோஷ்டிகள் போல் ஆங்காங்கே குழுமியிருந்தனர். வெற்றிலை பாக்குத் தட்டும் மொய் நோட்டும் தான் குறை.

கொஞ்ச நேரம் கழித்து கிளம்பிய ஒரு குழு எல்லா வாசல்களையும் ஷட்டர் போட்டு அடைத்தது; ஜன்னல்களில் ஸ்க்ரீன் முடிச்சுகள் போட்டு வெளிச்ச மறைப்பு ஏற்பட்டதும் எனக்கு ஜனகராஜ் - ப்ரொஜக்டர் - நீலம் நினைவுக்கு வந்தது. நல்ல ( :( )வேளை அப்படியொன்றும் இல்லையாம். 'நிழற்படங்களில் நேர்த்தி' பற்றி ஓர் அமர்வு.

கருவாயன் என்ற சுரேஷ்பாபு தன் கன்னி மேடை நிகழ்வை நிகழ்த்தினார். தமிழ் வலைப்பதிவுகளில் உருப்படியான சிலவற்றுள் ஒன்றான பி.ஐ.டி. பற்றியும் கேமிராவில் அபெர்ச்சர், ஜூம், ஃபோகஸ், லைட்டிங் ஆகியவற்றின் பயன்பாடு பற்றி ஒரே காட்சியின் வேறுபட்ட நிழற்படங்களைக் காட்டி விளக்கினார். கறிச் சோற்றுத் தூக்கத்தை அண்டவே விடாத ஓர் அருமையான நிகழ்வாக அது இருந்தது.



(சப்ஜெக்டாக என்னை ஃபோகஸ் செய்து பேக் க்ரெண்டில் கதிர் மற்றும் பரிசல்காரனை ஜூம் அவுட் செய்து லைட்டிங்கை டீஃபால்ட்டில் வைத்து... Thanks Suresh, Now I can use some technical terms.)

சாரு நிகழ்ச்சியில் அவரது நட்பார்ந்த துரோகியான மிஷ்கினைப் போலவே கறுப்புக் கண்ணாடியைக் கழட்டவே செய்யாத ஓசை செல்லா தமிழ் இணையம் பற்றிச் சொன்னார். வயிற்றில் தர்மத்தின் தலைவன் தலைவர்(ரெளடி) போல் ஒரு பை இருந்தது. அவரது முகநூல் பக்கத்தில் சில படங்களையும், பி.ஐ.டி.யில் தனது முதல் பதிவையும் காட்டினார்.

அம்மாவும் அவளும் ஷாப்பிங்கிற்குக் கிளம்பிப் போனார்கள்.

கூழாங்கற்கள் தளத்தைச் சேர்ந்த லட்சுமணராஜா (ராம்கோவில் மென்பொருளர்) 'நிழற்படங்கள் வழியே ஆவணப்படுத்துதல்' நிகழ்வின் வழியாக எப்படித் தாமும் தன் நண்பரும் சேர்ந்து நிகழ்ச்சிகளை வேறுபட்ட கோணத்தில் பார்த்து நிழற்படத்தில் ஆவணப்படுத்துகிறோம் என்று விளக்கினார்கள். வேதாந்தாவை எதிர்க்கும் ஓர் ஒரிஸாப் பழங்குடிக் கிராமத்தை எடுத்திருந்த கறுப்பு வெள்ளைப் படங்கள் மூலமாக எவ்வாறு அவர்கள் தத்தம் கலாச்சாரக் கூறுகளை இழந்து வருகிறார்கள் என்று காட்டப்பட்டது. வேதாந்தாவின் ஒரு தொழிற்சாலையைத் தூரத்திலிருந்து ஒரு க்ளிக் செய்திருந்தார்கள். "ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் ஒரு ஜெர்மன் ஜர்னலிஸ்ட் போய் அதை போட்டோ எடுக்கப் பார்த்து அடி வாங்கி வந்தான்" புன்முறுவல்.

தேநீர் இடைவேளை விட்டால் இன்னும் நேரமாகி விடக்கூடும் என்பதால் இருக்கும் இடத்தைத் தேடிக் கோப்பை கொண்டு வந்தனர். ஓர் ஓட்டை கப்பில் டீ வந்து விட்டது என்று ஒருவர் நிகழ்ச்சியைக் கவனிக்காமல் மாற்றுக் கப்பில் டீ எப்போது வரும் என்று தேடிக் கொண்டிருந்தார். ஓட்டை அவர் கை கப்பில் மட்டும் இருந்திருக்கவில்லை.

ஆவண நிகழ்ச்சி முடிந்ததும் கதிர் வந்து நன்றி சொன்னார். குழும உறுப்பினர்களின் அயரா உழைப்பு தான் வெற்றி அடைந்ததன் காரணம் என்றார். நிழற்படம் எடுத்துக் கொள்வோம் என்று அனைவரையும் அழைத்தார். எனக்குக் கூச்சமாய் இருந்தது. ரசத்தை ஊற்றியதன்றி வேறொன்றும் யானறியேன் என்றிருந்தேன். இருப்பினும் ஈற்றாகச் சென்று தலையைக் காட்டி விட்டு வந்தேன்.

மேடை திருப்பூர் சேர்தளம் அமைப்பின் வசம் ஒப்படைக்கப்பட்டது.

ஒரு கலந்துரையாடல் போல் அரை வட்ட வடிவாக உட்கார்ந்து கொண்டோம். எதிர்கால கோபிநாத் ஆகும் உத்தேசம் கொண்டவர் போல் தோன்றிய திருப்பூர் செல்வம் மைக்கர் ஆனார். வெயிலான், சீனா அவர்கள், பரிசல்காரன் மற்றும் கார்த்திகைப் பாண்டியன் ஆகியோர் மேடையில்.

நிறைய கேள்விகளை ஸ்லைடில் காட்டிக் கீழே ஒரு பொன்மொழியை வேறு எழுதி கவர்ச்சியாக நடத்த விரும்பியிருந்தனர். ஆயினும் நேரப் பற்றாக்குறையினாலும் பங்கேற்பாளர்கள் சரிவர கலந்துரையாடாததாலும் கடைசி ஸ்லைடுகளைத் தாவிச் சென்று நன்றி சொன்னர். ஜாக்கி சேகரும், வால்பையனும் மாறி மாறி மைக்கை எடுத்துக் கொண்டு பேசினர். ஒரு பத்திரிக்கையாளர் வந்து தரையைக் கோபாவேசத்தோடு பார்த்துக் கொண்டு 'பதிவர்கள் சமூகக் கொடுமைகளைப் பற்றி எழுத வேண்டும்; பல பிரச்னைகளைப் பற்றிப் பதிவிட வேண்டும்' என்று வேகமாய்க் கேட்டுக் கொள்வதை, சண்டே சாயங்கால மந்தமாய்ப் பார்த்தோம்.

எல்லோரும் மெல்ல மெல்லக் கலைய அரேஞ்ச் செய்யப்பட்டிருந்த ஆம்னி வேனில் ஓட்டுநருக்கு கீர் மாற்றுவதில் சிரமத்தைக் கொடுத்துக் கொண்டு நான் அமர்ந்து, நிலையத்தை வந்து சேர்ந்த போது அதே கலைந்த பேருந்துகள். தியேட்டர் சனங்கள். லாந்தர் ஒளியில் வறுகடலைகள். மஞ்சள் வானம். மஞ்சள் சோடியம் விளக்குகள். மஞ்சள் மாநகரம்.