Saturday, June 23, 2007
குட் காம்பினேசன்.
வர்ணிக்கும் கலையில் பிரபுவின் முகம் காட்டும் உணர்வுகளுக்கும், எஸ்.பி.பி. காட்டுகின்ற குரல் வித்தைகளுக்கும் மிகக் கச்சிதமாகப் பொருந்திப் போகின்றது. நடிகர்களுக்கு ஏற்றார் போல், குரலை கொஞ்சம் மாற்றிப் பாடாமல், தன் இயல்பான குரலால் எஸ்.பி.பி. பாடுவது பிரபு ஒருவருக்காகத் தான் என்று நினைக்கிறேன். அப்படி அற்புதமாகப் பொருந்திப் போகும்.
1.இராஜகுமாரன் - என்னவென்று சொல்லுவதம்மா...
Get Your Own Music Player at Music Plugin
2.உழவன் - பெண்ணல்ல பெண்ணல்ல..
Get Your Own Music Player at Music Plugin
3.சின்னதம்பி - அரைச்ச சந்தனம்...
Friday, June 22, 2007
தூறல் போடும் மேகங்கள்.
சடசடவென அடித்துப் பெய்கின்ற மழையில் நனைந்து நடந்திட ஆசை.
கிடுகிடுவென இடிக்கும் இடியின் ஒலி தீண்டுகையில், 'அர்ச்சுனா.. அர்ச்சுனா' என்று அரற்றிட ஆசை.
பெரும் பிரவாகமாய் சாலை ஓரங்களில் நிறைந்து ஓடும் பழுப்பேறிய நீரில், 'சலப்.. சலப்' என சத்தம் வர குதித்திட ஆசை.
கடைக்கண் பார்வையிடும் கன்னிக் கண்கள் போல், சாய்ந்து பெய்யும், நீர்த் தாரைகள், முகத்தில் அறைந்திட சைக்கிளை ஓட்டிச் செல்ல ஆசை.
மேற்குத் தொடரின் முகடுகளைத் தாண்டி வரும் கரும் மேகங்களின் வடிவங்களில், எதையெதையோ தேடித் தேடித் தேய்கின்ற நேரங் கழிக்க ஆசை.
கீழ்த் திசையில் கிளம்புகின்ற கோடி வெளிச்ச மின்னலின் கரங்களைப் பிடித்து, சுழித்தோடும் காவிரியில் இறங்கிட ஆசை.
துளி விழுந்ததும் தொலைந்து விடுகின்ற மின்சாரத்தைத் தின்னும் ஒற்றை மெழுகைப் பிடித்தவாறு தோட்டம் பக்கம் சென்று வர ஆசை.
காய்ந்த மண்ணெல்லாம் உறிந்து கொண்ட பின், சேறும், சகதியுமாய் நிறைந்திருக்கும் தோட்டம் முழுதும், 'சத.. சத' வென நனைந்து நடக்க ஆசை.
'பொட்டு ..பொட்டு'டென கொட்டிக் கொண்டிருக்கும் பெருந்துளிகளை சரிக்கட்டி, சரிந்து ஓடச் செய்யும், வீட்டின் ஓட்டின் மேலிருந்து ஊற்றுகின்ற நீர்த்தாரைகளை உள்ளங்கைகளில் ஏந்திக் கொள்ள ஆசை.
பகலின் வெம்மையை அணைத்துத் தன்னுள் கரைத்து, நனைத்துப் போகும் தெருவின் சாலைகளில் வழுக்கிக் கொண்டு விளையாட ஆசை.
சாலையின் பல்லாங்குழி மேடைகளின் குழிகளை நிரப்பிச் செல்லும் மழையின் குளங்களில் குதித்து தெறித்திட ஆசை.
பெருமழை பெய்து ஓய்ந்த பின், சாலையெங்கும் சிதறிய குப்பைகளைச் சாக்கடையில் தள்ளும் அம்மாவின் கைகளால் காபி குடிக்க ஆசை.
கடந்து விட்ட கதிரின் மிச்சத் துளிகளால் சுடரும், தள்ளுவண்டியில் சூடான பஜ்ஜி தின்ன ஆசை.
குடையோடு நனைந்து வீடு திரும்பிய பின், மனதில் பெய்கின்ற மழையில் நனைகின்ற ஒரு கனவுலகத்தில் கண் விழிக்க ஆசை.
Tuesday, June 19, 2007
ஒரே ராகம்.. மூன்று பாடல்கள்.
மேஸ்ட்ரோ இளையராஜாவின் மூன்று பாடல்கள்... இல்லை..இல்லை ஒரே பாடல் தான்...
மூன்று வெவ்வேறு மொழிகளில் உள்ள பாடல்கள். ஆனால் மூன்றும் தேன் பாடல்கள்.
1. Jotheyali, Jothe Jotheyali... - கன்னடம் - கீதா - எஸ்.பி.பி. - எஸ்.ஜானகி.
சங்கர் நாக் அவர்களின் இயக்கத்தில் அவரே நடித்து வெளிவந்த திரைப்படம். இப்பாடல், நான் பெங்களூரில் இருந்த போது அடிக்கடி இரவு நேரங்களில், எஃப்.எம். அலைவரிசைகளில் ஒலிபரப்பப்பட்ட பாடல். படம் வந்து பல ஆண்டுகள் ஆன பின்னும், இன்னும் இதயங்களைக் கொள்ளை கொள்ளும், இனிய மெலோடிப் பாடல்.
2. விழியிலே.. மணி விழியிலே... - தமிழ் - நூறாவது நாள் - மீண்டும், எஸ்.பி.பி. - எஸ்.ஜானகி. .
மணிவண்ணன் அவர்களின் இயக்கத்தில், மோகன், நளினி, சத்யராஜ், விஜயகாந்த் மற்றும் பலர் நடித்திருக்கும் படம். த்ரில்லர் நடையில், விரைவாக ஓடும் திரைக்கதையில் வெற்றி கண்ட படம்.
அப்போது மைக் பிடித்து தலையாட்டிப் பாடியே, கேட்பவர்களின் தலையையும் சேர்த்துக் கிறுகிறுக்கச் செய்த மோகன் இப்படத்தில் வில்லனாய் நடித்திருப்பார். இதைப்பற்றி அவரிடம் நிருபர்கள் கேட்ட போது, ' படத்தின் இறுதியில் மட்டும் தானே வில்லனாக வருகிறேன். படம் முழுதும் நான் ஹீரோ தானே' என்று புன்முறுவலுடன் கூறினாராம்.
இப்பாடல், பலரது All Time Favorite.
3. Jaane- Do- Na ... - இந்தி - Cheeni Kum - ஸ்ரேயா கோஷல்..
பாலகிருஷ்ணன் அவர்களின் இயக்கத்தில், அமிதாப், தபு நடிப்பில் வெளிவந்திருக்கும் படம். இப்பதிவை இடுவதற்குக் காரணமாய் அமைந்த பாடல் இது. கேட்டவுடனே 'எங்கேயோ கேட்ட பாடலாய்' இருக்கிறதே என்று தோன்றியது. தமிழ்ப் பாடல், உடனே நினைவுக்கு வந்து விட்டது. கன்னடப் பாடல் தான் சற்று தேட வேண்டியதாகி விட்டது.
இப்பாடலுக்கான ஒளிவடிவம் கிடைக்காததால், ஒலி வடிவம் மட்டும், இப்போதைக்கு. ஒளி வடிவம் கிடைத்தவுடன், இப்பதிவு புதுப்பிக்கப்படும்.
Get Your Own Music Player at Music Plugin
*****
வேறு வேறு மொழிகள்.. வேறு வேறு பங்கேற்பாளர்கள்.. ஆனால் பொங்கி வரும் உணர்வுகள் மட்டும் ஒன்று. மூன்று பாடல்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பதில், சுவாரஸ்யங்கள் கிடைக்கும்.
காலப்போக்கில் ஒலியமைப்புகளில் ஏற்பட்ட மாற்றங்கள், ஒரே பாடலை, வெவ்வேறு இயக்குநர்கள் கையாண்டிருக்கும் விதங்கள், பங்கேற்பாளர்களின் முகங்களில் வெளிப்படும் உணர்வுகள்..., ஒப்பிடுகையில், உகப்பாகத் தான் இருக்கும் என்பது நிச்சயம்.
இசையெனும் பேரருவியும் அது போல் தானே..!