Tuesday, December 01, 2009

NaNoWriMo.Update.6.Final



ந்தப் பதிவிற்குத் தலைப்பாக 'நேனோரிமோவும் திருவள்ளுவமும்' என்று Catchyயாக வைக்கலாமா என்று யோசித்தேன். காரணம், கடைசி நேரங்களில் வள்ளுவரின் சில வரிகள் என்னைக் காப்பற்றின. சொல்கிறேன்.



அக்டோபர் மாதக் கடைசியில் நேனோரிமோ களத்தில் பெயர் பதிவு செய்யும் போது, அது அத்தனை கடினமாக இருக்கும் என்று தோன்றவில்லை. முப்பது நாட்களுக்குள் ஐம்பதாயிரம் வார்த்தைகளில் ஒரு நாவல் எழுத வேண்டும். நாள் ஒன்றுக்கு வெறும் 1667 வார்த்தைகள். எழுதும் சில பதிவுகளே, இரண்டாயிரம் வார்த்தைகளைக் கடந்து சர்வசாதாரணமாகப் பறக்கும் போது, தினம் ஓர் ஆயிரம் சுலபமே என்று பட்டது. இடையில் நான்கு வார இறுதிகள் இருக்கின்றன. வார நாட்களில் எழுதாமல் விட்டு விட நேர்ந்தால், சேர்த்து வைத்து எழுதி விடலாம் என்ற முன்முடிவு எடுக்க முடிந்தது. பிரபஞ்சத்தின் தனியான உயிர்க்கோளான புவியின் பெரும்பாலான அத்தனை நாடுகளில் இருந்தும் கொத்துக் கொத்தாகப் பதிவு செய்து கொண்ட போது, 'நம்மால் முடியதா என்ன..?' என்ற நினைப்பு வந்தது. உடலெங்கும் அட்ரீனலின் பலூன்கள் வெடிக்க அந்த உற்சாக முதல் இராத்திரிக்காகக் காத்திருந்தேன்.

முதல் தடை அக்டோபர் மாதக் கடைசியிலேயே துவங்கி இருந்தது. என் மடிக்கணிணி அவ்வப்போது வெள்ளித்திரையைக் காட்டும். கொஞ்ச நேரத்தில் சரியாகி விடும். கொஞ்ச நாட்களில் 'U' பட்டன் சிணுங்க ஆரம்பித்தது. ஒரு மாதிரி சரிப்படுத்திக் கொண்டு பயன்படுத்தினேன். சொல்லாமல், கொள்ளாமல் ரீ-ஸ்டார்ட் ஆகி, எழுதியவற்றைக் காற்றில் கரைய வைத்தது. மாத இறுதியில் பொசுக்கென்று உயிர் விட்டது. வாங்கிய கடையில் கொண்டு காட்டினால், 'வாரண்டி காலி. சேர்த்து விட்டுப் போ. சரிப்படுத்தி பில் தீட்டுகிறோம்' என்றார்கள். ஊரில் சென்று பார்த்துக் கொள்கிறேன் என்று எடுத்து வந்து விட்டேன்.

நவம்பர் முதல் தேதி, ஒரு ஞாயிற்றுக்கிழமை. ஊரில் இருந்தேன். என்ன எழுதுவதென்று ஓரளவிற்கு மட்டுமே முடிவு செய்திருந்தேன்.

எஞ்சினியரிங் கல்லூரியின் முதலாண்டு முடிந்த மே மாதத்தின் வெய்யில் நிறைந்த நாட்களில் ஓர் இருபது நாட்கள் என்.சி.சி. ஆர்மி கேம்ப்புக்காகச் சென்றிருந்தோம். அது சென்னை மாநகரின் அருகில் அப்படி ஒரு வனாந்தரப் பிரதேசம். அங்கு கொண்டாடிய நிகழ்வுகள் அடி மனதின் ஆழத்தில் தேங்கியிருந்தன. அந்தப் பின்புலத்தில் நான்கு முதலாண்டு மாணவர்களைச் சொல்லலாம் என்று ஒரு பனிப் படலமான ஐடியா தோன்றியது.

அவர்கள். மாநிலத்தின் வெவ்வேறு பேட்டைகளில் இருந்து வருகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவுகள். வெவ்வேறு மனநிலைகள்; தனித்தனியான ஏரியாக்களில் திறமைகள்; வெவ்வேறு துறைகள்.

பவன் பிரமாதமான கிரிக்கெட் மற்றும் கிடார் விளையாடி; கொஞ்சம் அறிவாளி; இசைப் பிரியன். இவனுக்கு ஒரு காதல் வருகின்றது. என்.சி.சி. கேம்பிற்காகச் சென்ற இடத்தில் ஒரு கிராமத்துப் பெண் தன் தைரியங்களால் இவனைக் கவர்கிறாள்.

ரிதம் சென்னைப் பையன்; ஹாஸ்டல் வாழ்க்கையை அனுபவிக்கவே விடுதியில் சேர்கிறான்; இயற்பியல் மேல் பைத்தியம்; இவனுக்கு ஒரு பெங்காலிப் பெண் மேல் முதல்-பார்வைக்-காதல் வந்து விடுகின்றது.

வினோத் ஒரு ஜாலி பேர்வழி; இவன் மெக்கானிக்கல் துறை என்றாலும் எலெக்ட்ரானிக்ஸ் மேல் தீராப் பிரியம்; பெண்களைக் கவர்வதில் வல்லவன்; கிரிக்கெட் பிடிக்காது; கால்பந்து ரசிகன்;

கெளசிக் அமைதியானவன்; நிறையப் படிக்கப் பிடிக்கும்; கொஞ்சம் இயற்பியல் ஆர்வம் உண்டு; கவிதைகள் கிறுக்குவான்; சிறப்பானவன் இல்லை; கல்லூரியில் நூறு பேருக்கு இவனைத் தெரிந்தால் அதிகம். ஆனால் இவனுக்கு நட்பு முக்கியம். நண்பர்களுக்காக எதுவும் செய்வான். அவர்களுக்கு ஏற்படுகின்ற பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்வதில் சமர்த்தன். இவனுக்கு ஒரு மறக்க முடியாத பள்ளிக் காதல் இருக்கின்றது. அவளைத் தொலைத்து விட்டான். கதை இவன் பார்வையில் சொல்லப்படுகிறது. இவன் கொஞ்சம் கொஞ்சம் நானே! :)

தவிர இவர்களுக்கு கான்ட்ரடிக்ஷனுக்காக அமன் கான், பரத், ரவி, திலக் கொஞ்சம் சீன்களில் வருகிறார்கள்.

இவர்கள் மிகச் சாதாரண மாணவர்கள். சென்னையின் ஒரு புறநகர்ப் பொறியியல் கல்லூரியில் சேர்கிறார்கள். வேறுவேறானவர்கள் இரண்டு விஷயங்களால் ஒன்றுகிறார்கள். ஹாஸ்டல் மற்றும் என்.சி.சி. ஆர்மி கம்பெனி.

மேற்சொன்ன நால்வரின் முதல் ஆண்டு கல்லூரி நினைவுகள், என்.சி.சி. பரேட் நிகழ்வுகள், அங்கே ஒரு 'கொஞ்சம் சேடிஸ்டான' சீனியருடன் ஏற்படுகின்ற மோதல்கள், அவனது பழி வாங்கல்கள், இவர்கள்து பதிலடிகள், ஒவ்வொருவரின் காதல்களுடன் கேம்ப் வருகிறார்கள். அந்த இருபது நாட்கள் ஒவ்வொருவரையும் மாற்றிப் போடுகின்றது. அந்த சம்பவங்கள் இந்தச் சராசரிகளிடம் இருக்கும் வல்லமைகளை வெளிக் கொணர்கின்றன. மீதி நாவலில் படித்துக் கொள்க. :)

இப்படி ஒரு கேரக்டர் சார்ட் போட்டு வைத்துக் கொண்டு கணிணி இல்லாததால் நோட்டிலேயே எழுதத் தொடங்கினேன், அந்த நவம்பர் மாத முதல் நாள் நள்ளிரவில்! ஆரம்பத்தில் என்ன துவங்குவது என்று தெரியாமல் ஒரு prologue மட்டும் கைக்கு வந்த போக்கில் எழுதி விட்டு, முதல் சேப்டரில் நான் கல்லூரியில் சேர்ந்த நிகழ்ச்சிகளை கெளசிக் பேரில் எழுதத் துவங்கி விட்டு, இரண்டாவது சேப்டர் முடித்துப் பார்த்தால், ஒரு பெரிய சிக்கலில் சிக்கிக் கொண்டதை உணர முடிந்தது.

கதையின் களம் என்.சி.சி. கேம்ப். ஆனால் முதல் சேப்டரை கல்லூரியின் முதல் நாளில் அட்மிஷன் ஆவதில் துவங்கி விட்டேன். அப்படியே போய்க் கொண்டிருந்தால், முதலாண்டு முடிவில் வர வேண்டிய கேம்பிற்கு வருவதற்குள் விடிந்து விடும். முதல் சேப்டரில் கல்லூரியில் முதல் நாளைச் சொல்லி விட்டு, இரண்டாவதிலேயே கேம்பிற்கு நகர்ந்து விட்டால், ஒரு சைக்காலஜிக்கல் பிரச்னை வந்து விடுகின்றது. கேம்பிற்குள் நண்பர்களுக்குள் இருக்கும் நெருக்கம், வாசகர்களுக்குப் பிடிபடாது. காரணம், பையன்கள் ஒரு வருடம் கூடவே வாழ்ந்திருப்பதால், ஒவ்வொருவனைப் பற்றியும் ஒவ்வொருவனுக்கும் ஓர் அபிப்ராயம் வந்திருக்கும். அதனை ஒட்டித் தான் கேம்பிலும் நடந்து கொள்வார்கள். ஆனால் வாசகர்கள் அந்த ஒரு வருடத்தை இன்னும் படிக்கவில்லை. எனவே வாசகர்களுக்கும், என் பாத்திரங்களுக்கும் எந்த வித ஒட்டுதலும் இருக்காமல் போய்விடும். அந்நியமாக எட்டிப் பார்க்கப்படுவார்கள். அதை எந்த எழுத்தாளனும் விரும்ப மாட்டான்.

எனவே வாசகர்களும் மனதளவில் அந்த முதலாண்டைக் கடந்து வர வேண்டும் என்று நினைத்தேன். கொஞ்சம் யோசித்த போது, வழி கிடைத்தது.

இப்போது எழுதிய முதல் சேப்டருக்கு முன்பாக ஒரு சேப்டரை கேம்பில் நடப்பதாக மாற்றி விட்டுப் பிறகு வரும் கல்லூரி அட்மிஷனை அங்கிருந்து கெளசிக் நினைத்துப் பார்ப்பதாக மாற்றி விட்டேன். அப்படி முதல் பார்ட் முழுக்க, சேப்டர்கள் கேம்பிற்கும், கல்லூரிக்கும் மாறி மாறி குதித்து நகர்ந்தன. இரண்டு களங்களையும் இணைக்கின்ற புள்ளியை வைப்பதில் மட்டும் துளிச் சிரமம் இருந்தது. சமாளித்து விட்டேன்.

மூன்று வருடங்களாகச் சிறுகதைகள் எழுதும் பழக்கத்தில் சம்பவங்களும், வசனங்களும் எழுதும் லாவகம் மனப்பழக்கம் ஆகி இருப்பதால், என்னை நானே வியந்து கொண்டு அழகாக எழுத முடிந்தது.

இரண்டாவது தடங்கல், எதிர்பார்த்த எந்த ஒரு வார இறுதியிலும் என்னால் அனந்த புரத்தில் தங்க முடியவில்லை. வீட்டில் ஒரு முக்கிய வேலை நடந்து கொண்டிருந்ததால், ஒவ்வொரு வாரமும் வெள்ளி இரவு, வண்டி கட்டிக் கொண்டு கேரளாவைக் கடந்து, சனி, ஞாயிற்றில் சாம்பார் சாதமும், காவிரி ஆறும் கொண்டு மீண்டும் திங்கள் காலை ஆறரைக்கு அனந்தபுர மண்ணை முத்தமிட்டதில் எந்த விடுமுறை நாளும் கதையைத் தொடவில்லை.

முதல் வாரத்தில் எழுதிய ஆறாயிரம் வார்த்தைகளோfஉ இரண்டு வாரங்கள் நழுவி விட்டிருந்தன. எழுதிக் கொள்ளலாம் என்ற ஏளனமா என்று தெரியவில்லை. ரிமோ தளத்தின் ஃபாரங்களில் சென்று பார்த்தால், அதற்குள் முப்பதாயிரம் எழுதியவர்கள் எல்லம் இங்கே ஒரு கும்மி போடுங்கள் என்று இழைகள் வர ஆரம்பித்து விட்டிருந்தன. பயம் பிடிக்கத் தொடங்கியது.

சரசரவென இறங்கினேன். கணிணி இல்லை. மூன்றாம் வாரம் ஊருக்குச் சென்ற போது, அக்கா மாமாவிடம் சொல்லி அவருடைய பரண் மேல் துன்ங்கிக் கொண்டிருந்த கணிணி ஒன்றை வாங்கி வந்து எழுத முயன்றேன். வீட்டில் டேபிள், சேர் இல்லை. எவ்வளவு நேரம் தான் உட்கார்ந்து கொண்டே டைப்புவது? முதுகு வலிக்கும்; அடுத்த ஐநூறு வார்த்தைகளக் குப்புறப் படுத்துக் கொண்டு எழுதினால், கழுத்து வலிக்கும். அவ்வளவு தான். அணைத்து விட்டு தூங்கி விடுவேன்.

ஊருக்குப் போகும் ட்ராவல்ஸ் பஸ்ஸின் இருள் பூசிய நகரும் கண்ணாடிப் பெட்டிக்குள் செல்போன் சுரக்கும் போட்டான்கள் நடனமிட சில சேப்டர்கள் எழுதினேன்; ஜெனரல் கம்பார்ட்மெண்ட்டின் அணையா மஞ்சள் வெளிச்சத்தில், பச்சை வாழை தின்னும் கிழவி குழம்பிப் பார்க்க, பேனா பின்புறத்தைக் கமல் போல் கடித்துக் கடித்து, செருப்பு சுமக்கும் மின்விசிறியைப் பார்த்துக் கொண்டு சில சேப்டர்கள் எழுதினேன்.

கொஞ்சம் கொஞ்சமாக எண்ணிக்கை எகிறத் தொடங்கியது.

நான்கு பகுதிகளுக்கு ஐம்பதாயிரம் வார்த்தைகள்; சேப்டர் ஒன்றுக்கு ஆயிரம் வார்த்தைகள். ஒவ்வொரு பகுதிக்கும் பத்து சேப்டர்கள். சில சேப்டர்களுக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா வார்த்தைகள் சேர்த்துக் கொள்ளலாம் என்று போட்டு வைத்த திட்டம் எல்லாம் மழையில் கறையான் புற்று போல் கரைந்து போனது. உதாரணமாக ரிதமின் லவ் ப்ரோபஸல் பகுதி மட்டும் ஏழாயிரத்தைநூறு வார்த்தைகளைத் தின்று விட்டு, 'இன்னும் கொஞ்சம் காதல் கொடுப்பாயா?' என்று கேட்டது. ஸ்ட்ரிக்ட்டாக 'நோ' சொல்லி விட்டேன்.

ஃபாரம்களில் சில நண்பர்கள் கிடைத்தார்கள். நாட்டிற்கு ஒரு குழு இருந்தது. நமக்கும் ஒரு குழு. அதில் வழக்கம் போல், Chennai Confederacy, Hyderabad Novelists, Kolkata Calvery, Bangalore Nanowrimos, Mumbai Writers என்றெல்லாம் கிளைகள். அது நம் நாட்டுக்கு மட்டுமே உரிய சிறப்பல்லோ? இதில் ஒருவர் 'Anyone from Delhi and Assam Region?' என்று ஓர் இழையைத் துவங்கினார். 'எப்படி டெல்லியையும் அஸ்ஸாமையும் இணைக்கிறாய்?' என்று ஒருவர்-2 கேட்க, அந்த ஒருவர்-1 'நான் டெல்லிக்கும் அஸ்ஸாமிற்கும் இடையே அதிகம் பயணிக்கின்றவன். அதனால் தான்..!' என்று பதிலிறுத்தார்.

சில ரிமோக்கள் ஆச்சரியத்தில் ஆடிப் போகச் செய்தனர். சென்னையிலிருந்து 13 வயதில் நாவல் எழுதும் குழந்தைகள் நண்பர்கள் ஆனார்கள். ட்விட்டரில் என்னையும் பெரிய மனது பண்ணிச் சேர்த்துக் கொண்டார்கள். 12 வயதில் ஒரு பெண் ஃபேண்டஸி எழுத, 55 வயதில் ஒரு தாத்தா, 45 வயதில் எழுதுபவரைப் பார்த்து, 'நீ ஒரு டைனோசர் என்றால், நான் ஓர் உறைந்த ஃபாஸில்' என்று சொல்லி, யங் அடல்ட் நாவல் எழுதுவதில் 'ஒர்வர் மற்றொருவரை வாழ விரும்பும்' ஏதோ ஓர் உளச் சங்கதி இருக்க வேண்டும்.

அந்தச் சிறுமிகளைப் பார்க்கச் சத்தியமாய்ப் பொறாமையாக இருந்தது. எத்தனை அழகாய் எழுதுகிறார்கள்! என் ஆங்கிலம் எத்தனை அமெச்சூர்த்தனமாய்ப் பல்லிளிக்கின்றது என்பதைப் பார்த்த போது, அரசுப் பள்ளியில் சேர்த்த அம்மா அப்பா மேல் கோபம் வந்தது; என் 'கண்ணன் என் காதலன்' பதிவுகளைப் பார்த்து ஆறுதல் படுத்திக் கொண்டேன். உங்களுக்கு ஓர் இரகசியம். நானும் எட்டாவது ஆண்டு விடுமுறையில் மூன்று நாவல்கள், தமிழில், டைரியில் எழுதி வைத்திருந்தேன். ராஜேஷ்குமார் பாதிப்பில் அதன் பக்கங்கள் எல்லாம் ரத்தம் கசியும். :). தொலைந்து விட்டது. ;(

சரி, கதைக்கு வருவோம்.

அவ்வப்போது வெறியோடு எழுதி, பிறகு சில நாட்கள் ஓய்வெடுத்து, இப்படியே போய்க் கொண்டு முப்பதிரெண்டாயிரம் தொட்ட போது, தேதி 26 ஆகி விட்டிருந்தது. கதை ஒரு சுவற்றில் போய் முட்டிக் கொண்டு விட்டது. அதற்கு மேல் நகர்த்த வேண்டுமெனில், கொஞ்சம் வரலாறு படித்தாக வேண்டும்; இல்லையேல் பொருட்பிழை வரலாம். நேரமே இல்லை..!!

வெள்ளிக்கிழமை கேரளாவில் பக்ரீத். அலுவலகம் விடுமுறை. கடைசி வாரக் கடைசி. இதை விட்டு விட்டால், அவ்வளவுதான். கடையை இழுத்துச் சாத்தி விட்டுப் போக வேண்டியது தான். ஒரு முடிவோடு வீட்டுக்குக் கிளம்பிப் போனால், விசேஷம் தயாராக இருந்தது. மூன்று நாட்களும் நோட்டையோ, கணிணியையோ தொட முடியவில்லை.

பவானியில் இருந்து கொஞ்சம் தொலைவில் ஊருக்கு வெளியே கரும்பு வயல்களைக் கடந்து சென்றால், அடர் பச்சை பெய்ண்ட் அடித்த, சுவர்களுக்கு பெண்களுக்குப் பிடித்த மென் பிங் நிறம் பூசிய சிறியதொரு இல்லத்தை வாங்கியிருந்தோம். அந்த விழா ஞாயிறில் ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கான வேலைகளில் கொஞ்சம் கொஞ்சம் நேரம் செலவு செய்யச் செய்ய, நிஜ வாழ்க்கையின் விரல்களுக்கு இடையேயான இடைவெளிகளில் என் கதாபாத்திரங்கள் நழுவிச் சென்று கொண்டேயிருந்தார்கள். உள்ளத்தில் ஆயிரம் வருத்தங்களும், கோபங்களும் இருந்தாலும், புன்னகை முலாம் பூசிய முகமூடி அணிந்து கொண்டு எல்லாரையும் கூப்பிட்டுக் கூப்பிட்டு வரவேற்று, 'பல சின்னஞ் சிறுகதைகள் பேசியதில்', 'நீங்களா எங்களை வடிவமைப்பவர்?' என்று அடிபட்ட பார்வை பார்த்துக் கொண்டு காற்றில் கரைந்தனர் என் சம்பவங்கள்.

ஞாயிற்றுக்கிழ்மை மதியத்திற்கு மேல் 'அனல் மேலே பனித்துளி' ஆனேன். உடலெங்கும் கொதித்தது; இமைகளுக்குள்ளே யாரோ இரண்டு கரண்டி எரிகின்ற கரி அள்ளிப் போட்டுக் கொண்டேயிருந்தனர். 'DOLA' என்று எழுதிய ஒரு வெள்ளைக் கட்டியை மாத்திரை என்று சொல்லிச் சொல்லி வென்னீருடன் அம்மா கொடுத்த ஐந்து நிமிடங்களுக்கு தொப்பலாக வியர்வையில் நனைந்து, பிறகு மீண்டும், காற்றில் ஏறும் பகல் நேரம் போல் வெப்பம் உடலில் ஊறிக் கொள்ளும். 'நாளை லீவ் போடுகிறாயா..?' என்று கேட்டார்கள். ஆசையாய்த் தான் இருந்தது. முழுதாய் ஒரு ராத்திரி கூட புது வீட்டில் தூங்கவில்லை. தூங்கிப் பார்க்கலாம என்று தோன்றியது; வேண்டாம். அலுவலகம் அழைத்தது.

ரயிலில் எழுத நினைத்தேன்; முடியவேயில்லை. ஒரு மாதிரி உட்கார்ந்து கொண்டு, தூக்கமா, மயக்கமா என்று கோடு கிழிக்காத முறையில் சரிந்து கொண்டே வந்து, கொல்லம் தாண்டி கொஞ்சம் தூங்க முடிந்து, அனந்தபுரத்தில் இறங்கிய போது, காய்ச்சல் துளி மட்டுப்பட்டது போல் இருந்தது. அலுவலகம் சென்ற போது, கணக்கு உள்ளே ஓடியது. 32768. இன்னும், கிட்டத்தட்ட பதினெட்டாயிரம் எழுத வேண்டும்.

எப்படி எழுதுவது...? எப்படி வெல்வது?

உள்ளேயிருந்த ஒரு சாத்தான் நெட்டி முறித்து எழுந்தான்.

எப்போதும் சென்று படிக்கும் ஓர் இயற்பியல் தளத்திற்குச் சென்று, இரண்டு பக்கங்களைக் காப்பி செய்து நாவலில் போட்டு பார்த்தால், 54000 தாண்டியது. அப்படியே மேலேற்றி விட்டேன். 'நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள்; கொண்டாடுங்கள்' என்று தளம் சந்தோஷக் கூச்சல் போட்டது.

உள்ளேயிருந்த சாத்தான் பெருமிதச் சிரிப்பு செய்தது.

இரண்டாவது நிமிடத்தில் இருந்து ரிமோ நண்பர்களிடம் இருந்து வாழ்த்துக் கடிதங்கள் வந்து குவியத் தொடங்கிய போது தான், மனசாட்சி என்னும் வெள்ளை எருது மூச்சு உறுமியது.

இது யாரை ஏமாற்றும் காரியம்..? யாருக்காக எழுதுகிறாய்..? யாருக்காக உன் கற்பனைகள்..? இது என்ன வகை ஏமாற்று வேலை..?

அதன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அந்நியனின் விசிறும் அட்டைகள் போல் சாத்தானின் ஒவ்வொரு வியர்வைத் துளையிலிருந்தும் விஷத்தை உறிஞ்சி வெளியே துப்பத் துப்ப, மூளையில் படிந்த அழுக்குத் திரை கிழியத் தொடங்கியது.

இதற்கு மேல், வாழ்த்தி வந்த ஒரு சென்னை ரிமோ மாணவருக்கு எழுதிய மன்னிப்பு வாக்குமூலத்தை இணைக்கிறேன். இந்த மன்னிப்புப் படலம் எனக்கே பிடித்திருந்தது.

hai vc3_aku,

hearty wishes and congratz..!!! you finally made it. i like that fighting thought.

first i want to say a big sorry. why..? the reason follows. let me warn, it is a big reply. :)

I was going smooth in my own pace during the earlier periods. but once i could start seeing the rocket rides of my buddies and non-buddies, the tempo inside me got fired and yes, i have to admit, my ego too got squashed by seeing their numbers. then i tighten my seat belts and changed the gear into eighth within seconds, then.. vroooooom...!!!! on the way of riding fast and mad, i was getting boosted by xing the milestones with increased 1000s...!

but a big obstacle stopped me for the last three days. from last friday upto sunday i was busy in our house warming ceremony. i could not touch the PC or my pen to write. yesterday i returned to office. i was tired by the house works and the thought of 'just only 32k.. u ass want to become a writer..?'.

then i did a big mistake of my life. i went to a physics website and copied some pages and filled them in my story. I updated that in the site, then i jumped into 54k. within minutes the congratz mails started to flow. and by seeing the mails i got to know my wrongness. i fell into dark mood then. i totally lose all of my faith of becoming a writer, and believe me, i was in tears. my characters questioned me, 'is this what you do our creator saab..?'. there was a thirukural, which immediately came into my mind. it said, ' don't lie intentionally; if you did, then your soul will condemn you forever!'

I roamed thro the profiles of my buddies and slowly got my passion back.

i deleted the copied items first. i checked two points. one) which make me to stop moving further, 2)what is the time now?. by thinking i found the reasons. the answer for the first one was, i was in the mid way of a serious chat between two NCC boys and a muslim freedom fighter on a republic day in the merina beach. that section wanted more thoughts and i had to be aware of some historical facts. That was not possible because i was in the last evening. the answer for the second was, 15:30 Hrs. I had still eight hours and thirty minutes to combat.

I asked myself, 'Cant i make 18K within eight point five hours, if i move to some other flexible section of my novel..?'.

then i decided to switch off all my official windows. i located into a deserted PC in the deserted section of a test lab. i opened my novel in the word file and kept the cursor at the end of the file. the ms word 2007 shows the word count was 32,278. i opened a notepad and structured that into a rectangle window, which could carry nearly one thousand words. i fixed the time such as for every twenty minutes i had to fill that notepad with my words. no caps, no apostrophe, no alignment, no designing and not thinking. just pour words whatever come in your way related to the section. write continuously. that was the plan i made. it resembled like there was a big drum which could contain 50K words waiting to get filled and i used a small bucket which could carry 1K words. I had to take the words from my creative well eighteen times and pass them into the ms word drum.

i started at 15:30.

i didnt go for snacks; say 'no' for evening tea; 'i dont come!' for my friends who called for dinner; 'i will come late; please you carry on.!' to my roommate who called; 'i will pick an auto!' to the office security, who came to inform the last bus was waiting. i was typing the letters without stopping. i gave a three minutes break for using restroom, since i could not say to the nature, 'you, please wait..!' :)

i was in 1500 words lagging, when the clock said, 'just half an hour more, buddy!'.

i caught in fire then. then i directly jumped into the word file and started typing the fastest i could do. all the words which got formed in my mind fell into the document in their scrambled form. i didnt worry about that. type. type. type. yes, i was in perfect mad for that final thirty minutes. then, successfully i crossed 50K when the time was just ten minutes to midnight. i didnt stop. like an express to get halt i typed until 11:59, then i stopped. when the bell started ringing 00:00, the count was 50,420..!!!

i was happy for only one reason that the second half of the yesterday showed me I could deliver nearly 18000 English words in 8.5 hours..!!!

i could be sad if i didn't write; if i cheated everyone including me; but the letters from my writing buddies cleaned the dust on my mind and gave me the boost by whispering in my ears 'never never never give up'..!!!

I thanked for that..! I love you all..!! special thanks to VC3_AKU..!! :)

இறுதியாக எக்ஸ்பிரஸ் ரயில் நிற்பது போல் எழுதி முடிக்கும் போது, 50,420 தொட்டிருந்தேன்.

உண்மையில் எனக்கு இது ஒரு மிகப் பெரிய சாதனை தான். ஆங்கிலத்தில் பெரிய அளவில் எந்த புனைவையும் வாசித்ததில்லை. அதன் புனைவு மொழி தெரியாது. ஆங்கில இலக்கணம் அவ்வளவு சிலாக்கியம் இல்லை; In, On பொருத்தங்கள் துல்லியமாகத் தெரியாது. அந்த இலட்சணத்தில் க்ளோபல் அளவில், கலந்து கொண்ட 1,70,000 பேரில் வென்ற 19% ரிமோக்களில் ஒருவனாக இருப்பதை நினைக்கும் போது, இந்த வெற்றிக்கு என்ன அல்லது யார் காரணம்..?

முதலில் நான் இல்லை; என் பாத்திரங்களே என்னை இழுத்துச் சென்றன. வலைப்பதிவில் தமிழ் எழுதிப் பழகிய மனம் ஆங்கிலத்தில் வெறும் ஆடையைப் போட்டுக் கொள்வது சுலபமாக இருந்தது.

அவ்வப்போது படித்துப் பார்த்துப் பதில் சொன்ன தமிழ்ப்பறவை, வெங்கி ஆகியோருக்கும், கிடைத்த நேரங்களில் வாழ்த்திய அனந்தபுரத் தமிழ்ச்சங்கர் திரு. கமலநாதன் அவர்களுக்கும், வீடு மாற்றுவதில் என்னை ரொம்பவும் தொந்தரவு செய்யாமல் அவனாகவே எல்லா வேலைகளையும் செய்த தம்பிக்கும்...

நன்றிகள் சொன்னால் விரும்புவார்களா? என்று யோசிக்கிறேன்..!!!

PS :: இந்த ரிமோ போட்டியில் கலந்ததில் சில விஷயங்கள் புரிந்தன. கலந்து கொண்ட சிறுவர்/மிகள் எத்தனை லாவகமாக மொழியைக் கையாள்கிறார்கள்? இவர்கள் வலைப்பதிய வந்தால் எப்படி எல்லாம் கலக்குவார்கள்? நாம் த்மிழ் வலைப்பதிவில் என்ன செய்து கொண்டிருக்கின்றோம்? 'பொல்லா வினையேன்' என்று அடுத்தவரைப் புறங்கூறியும், வெறும் ஈசல் எழுத்துக்களை எழுதிக் கொண்டும் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறோம்; இரத்தக் கண்ணீர் வருகின்றது. இந்த ஒரு மாதமும் எங்கோ வேறோர் உலகில் வேறெதோ தளத்தில் படித்துக் கொண்டிருப்பது போல் தோன்றியது. தமிழில் எப்படி நாம் அந்த தரத்தைக் கொண்டு வரப் போகின்றோம்? ஆங்கிலத்தில் எழுதியதால் இப்படித் தோன்றவில்லை. அவர்கள் சிந்திக்கும் போக்கு, எழுதும் விஷயங்கள் வேறு எங்கோ உள்ளன. நாம் இன்னும் டீக்கடை பெஞ்சுக்களைத் தான் ப்ளாக்கில் வேறு வடிவில் உருவாக்கிக் கொண்டிருக்கிறோமோ என்ற கவலை வருகின்றது. ஜெயமோகன் எழுதியதில் முழுக்க சரியல்ல; எனவே முழுவதும் தவறல்ல. மொக்கைகளும், எரிச்சல்களும், அரசியல்களும் இருக்கும் இதே இடத்தில் தான் ஒருவருக்கு ஒன்றென்றால், கூடும் கரங்களும் இருக்கின்றன என்பதைத் தெரிந்தே இருக்கிறேன்.

அந்தப் பிள்ளைகள் எல்லாம், தமிழ் வலைப்பதிவுகளை வாசிக்க வந்தால், என்ன நினைப்பார்கள் என்பதை விட, எவற்றைப் பார்க்க நேரிடும் என்பதில் தான் என் வருத்தம் இருக்கின்றது.