Saturday, October 06, 2018

நிழல்வேகப் பயணி.

ன்று இந்த இரவுடன் கழியட்டும் இந்தக் குளிர், நாளை வருவது மற்றொரு குளிர். தலைக்கு மேல் விரிந்திருக்கும் கருங்கூந்தலில் எண்ணி முடிக்கவியலா தொட்டறியா முடியா இந்த மின்னும் மல்லிகை மொட்டுகளை, நாளை இரவில் வேறொரு இடத்தில் காண்போம். இந்த நறுமணம் மிதக்கும் தென்றல் இத்தோடு கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளட்டும், நாளை வீசட்டும் மற்றொரு ஈரக்காற்று.

இந்தத் தொடுகை இந்த இரவுடன் அடங்கட்டும், நாளை தொடங்குவது வேறொரு தீண்டல். இந்தக் கோதல், இந்த மென்சூட்டு முத்தம், இந்த தடவல், இந்த கலைந்த விரிப்புகள் இந்த ஒற்றை நிலவின் அடியில், சில்லிடும் மரநிழல்களுக்கிடையில், சரசரக்கும் பாம்புகள் போல் பின்னிக் கிடக்கும் இந்தப் பிணைப்புடன் முடியட்டும், நாளை இரவில் துவங்கட்டும் மற்றொரு பிணையல்.

இந்தக் கிசுகிசுப்பு, இம்முணுமுணுப்பு, இம்முனகல், இவ்வியர்வை, இவ்வெம்மை, இந்த நடுக்கம் இன்று இந்த பின்னிரவின் கடிகாரச் சத்தத்துடன், இந்த சுவர்ப்பல்லியின் ரீங்காரத்துடன், இந்த சில்வண்டுகளின் ஊதலுடன், இந்த நீர்த்தவளைகளின் உரையாடலுடன், வந்து குழுமியிருக்கும் கருமுகில் கூட்டங்களின் இடியோசையுடன் இணைந்து கொள்ளட்டும்.

துளிக்குருதி பூக்கும் இந்த நகக்கீறல்கள், இந்த சுவைக்கும் பற்பதியன்கள், இந்த திசையறியாப் புரளல்கள், இந்த சில்லறை முடித்தூறல்கள் இந்த மெளனத்துடன் சேர்ந்து கொள்ளட்டும். நாளை மிஞ்சட்டும் சில சொற்களும் சில பார்வைகளும் சில உதட்டுச்சுளிப்புகளும் சில கண்காட்டல்களும் அவை மீட்டுக் கொண்டு வருகின்ற மற்றுமொரு நாடகத்தையும் அதன் உணர்வேகங்களையும்.