Monday, June 01, 2009

மனையியல்.

டெய்ஸி ராகவன் விடாமல் அழுதுகொண்டே வந்தாள்.

எர்ணாகுளம் எஸ்.எஃப் எக்ஸ்ப்ரஸ் ஓசூரின் மேடுகளில் இருந்து சமவெளிச் சரிவுகளில் பாய்ந்து கொண்டிருந்தது. ப்ரின்ஸி, குழந்தையை எடுத்து முதுகில் தட்டிக் கொடுத்தாள். தொலைவில் வட்டமாய்ச் சுழலும் மலைமுகடுகளை ஜன்னல் வழி விரல் நீட்டிக் காட்டி, "இல்லி நோடு.." என்றாள். "ஸீ! யூ ஷுட் நாட் க்ரை லைக் திஸ்!" என்று அச்சுறுத்தினாள். மொழிகள் புரியாத டெய்ஸி இன்னும் வீறிட்டாள். காய்ச்சலா என்று தொட்டுப் பார்த்தாள். நார்மல். வேறு என்ன காரணமாய் இருக்கும் என்று புரியவில்லை. முதல் குழந்தை. தாய் அனுபவ அறிமுகங்கள் இல்லை. திணறினாள்.

பிஸ்னஸ்லைன் எக்ஸ்க்ளூஸிவ் காலமில் ஆழ்ந்திருந்த என்னிடமிருந்து, க்ரூட் ஆயில் விலைச் சரிவு விவாதம் விலக்கப்பட்டு, குழந்தை திணிக்கப்பட்டது. "ராகவ்..! இட்ஸ் யுவர் சைல்ட் டூ. டேக் கேர்..!"

நானும் தட்டிக் கொடுத்தேன். பயன் இல்லை. "ஹனி! இப்படி எல்லாம் அழக் கூடாது. லுக்! எல்லாரும் பாக்கறாங்க பார்!" என்றேன். பேச்சுவார்த்தை படுதோல்வி. அவள் அழுகை தண்டவாளத் தடதடவுடன் ஒரு ரெசனன்ஸில் இல்லாமல், தனியாக ஒலித்தது.

சைட் பெர்த்தில் இருந்து கவனம் இடையூறப்பட்ட நவயுக இளைஞன், "ப்ச்..!" என்று ஓர் எரிச்சல் கலந்த முகச் சுளிப்பு செய்தான். பார் பையா..! நாளை உனக்கும் இந்நிலை வரும். அதிலும், காதல் மணம் செய்து கொண்டு, ஆரம்ப தேன் நிகழ்வுகள் கரைந்த பின் டயாஃபரும், செரலாக்ஸும் தூக்கிக் கொண்டு, பாப்பா பின் அலைந்து, முன்னிரவு, பின்னிரவு முறையில்லாமல் தூக்கங்கள் கலைந்து, களைத்து தந்தைமையில் திணறும் வரை, மெட்டாலிகா நனைக்க செவிகளில் ஐ-பாட் வால் செருகி, ஒற்றை ருத்ராட்ச சன்னக் கயிற்றுக் கழுத்தோடு, I am Stupid. Read Loud. அழுத்த வாசகங்கள் பதித்த சிவப்பு டி-ஷர்ட் கலைத்து, எம்.எம்.எஸ்ஸில் வரும் பதினைந்து செகண்ட் படங்களைப் பார்த்து...அனுபவி இளமையை!

"கொளந்தைய இப்படி கொஞ்சம் குடுங்க..!" என்று அந்த எதிர் பெர்த் அம்மா கைநீட்டினார். அப்போது தான் அவர்களை முழுமையாக கவனித்தேன். வயதானவர். பக்கத்தில் முழு சீருடையோடு ஓர் எக்ஸிக்யூடிவ் ஆசாமி. நடுவில் ஒரு சிறு பெண். அந்த அம்மா மடியில் தலை வைத்திருந்தாள். மேல் பெர்த்தில் ஒரு பருமனான ஆள் நெளிந்து கொண்டிருந்தார். அவை எவ்வளவு எடையை அதிகம் தாங்கும் என்ற எப்போதுமான சந்தேகம் இப்போதைக்குமானது.

"நீங்க இத்தன சின்னக் குழந்தையை பிடிக்கற முறையே தப்பு. சின்னப் புள்ளைங்க தானே. கத்துக்குவீங்க..!" என்றார். புது வெப்பம், புது ஸ்பரிசம் உணர்ந்த டெய்ஸி அவரை உற்றுப் பார்த்தாள். அவர் அவளைக் கொஞ்சம் உதறி, ஆடைகளை நீக்கிப் பார்க்க, ஒரு சிற்றெறும்பு தொடையில் கடித்து, செத்துப் போயிருந்தது. தள்ளி விட்டு தேய்த்து விட அழுகை குறைய ஆரம்பித்தது.

காலை ரயிலேறிக்
கல்கத்தா போயிறங்கி
கடைக்குக் கடைபார்த்து
கல்லிழைத்தச் சங்கெடுத்துச்
சுத்திச் சிகப்பிழைத்துத்
தூருக்கே பச்சைவைத்து
வாய்க்கு வயிரம் வைத்து
வாங்கி வந்தார் தாய்மாமன்!
கண்ணே உறங்கு!
கண்மணியே உறங்கு!

பூ போல் மடியில் அவளைக் கிடத்தி, மென் வயிற்றில் தட்டிக் கொண்டே பாடினார்.

"ட்லி..பூரி..!"

பின்னால் இருந்து குரல் வந்து ஒவ்வொரு வரிசையாகத் தாவியது. என்னால் வாங்க முடியாது. ப்ரின்ஸி திட்டுவாள். 'அதெல்லாம் சுத்தமாய் இருக்காது. உனக்கு ஒத்துக்காது. ஆசையாய்க் காரமாய்த் தின்று விட்டு, இரண்டு நாட்கள் லீவ் போட்டு, படுத்துக் கொள்வாய். கூட என்னையும் படுத்துக் கொள்ளச் சொல்வாய்..!' என்று பொய்யாய்ச் சலிப்பாள். இந்தப் பயணத்திற்காகவும், நேற்றே தயார் செய்து வைத்திருந்த தட்டை இட்லிகளும், வெல்ல வாசம் வீசும் இனிப்புச் சாம்பாரும், மினரல் பாட்டில்களில் தமிழ் பூசாத காவிரியும் எங்களுடன் வருகின்றன.

அவளைப் பார்த்தேன். எதிர்பார்த்தது போல் அவளும் பார்த்து, "வாங்கினாயோ, அப்புறம் பார்..!" என்று விரலால் செல்லமாய் மிரட்டினாள்.

நெற்றிச் சுருக்கங்களோடு வியர்வையில் கலைந்த திருநீற்றுப் பட்டைகள். முதலிரண்டு பட்டன்கள் களவாடப்பட்டிருந்த கட்டங்கள் பதிந்த அரைக்கை கசங்கிய சட்டை. 'விண்..விண்'ணென்று தெறிக்கும் அழுத்தமான நரம்புகள் கிளைத்திருக்கும் குச்சிக் கைகள். கூன் விழுந்த முதுகோடு, குனிந்து வந்தவரின் வயதை எஸ்டிமேட் செய்வது கடினம்.

எனக்குள் பரிதாப உணர்ச்சி எழுந்தது. அவசியம் எனப்படுவதாக இல்லாவிட்டாலும், ரெண்டு பாக்கெட்டுகள் வாங்கலாமா என்று யோசித்தேன். என் போன்ற மனைவிக் கட்டுப்பாடுகள் தற்போதைக்கு இல்லாத எதிர்சீட் எக்ஸிக்யூட்டிவ் ஒரு பாக்கெட் கேட்க, ப்ளாஸ்டிக் நார்ப்பையைப் பிரித்து, வெள்ளைப் பாவு ஒல்லி நூலால் கட்டியிருந்த பாக்கெட்டைக் கொடுத்து விட்டு, என்னைப் பார்த்தார். ஏதும் சொல்லாமல், உள் நகர்ந்தார்.

எக்ஸிக்யூட்டிவ் 'இன்று லாரி ஸ்ட்ரைக்' மேல் பாலிதீன் பேப்பர் பிரிக்க, ரப்பர் பேண்ட் இறுக்கிய கழுத்தின் கீழ் சாம்பார் வயிற்றுக் குப்பிப் பாக்கெட்டுடன், மேனி மேல் கலந்திருந்த சட்னிக் கட்டிகளோடு, சிவப்பாக இட்லிப் பொடி பரவி, ஒரு 'கப..கப..' வாசம் காற்றில் மிதந்தது.

Yogi B அண்ணன் போல் இருந்த ஒருவன், எங்களைக் கடந்து சென்று, அவரிடம் பாக்கெட்டுகள் வாங்கி வந்து, எங்களை எதிர்த் திசையில் தாண்டும் போது, "இன்னிக்கு இருந்தா எங்கப்பா இவர் மாதிரி தான் இருந்திருப்பார் சார்..!" என்று சொல்லிக் கடந்தான்.

திடுக்கென ஒரு நினப்பு வந்தது. இளமையின் இனிமைகளில் தோய்ந்திருக்கும் போது கால வாய்க்கால் பாத்தி கட்டிய நெற்றி விரிசல்கள் எச்சரிக்கும் முதுமை நினைப்பு பயமுறுத்தியது. அதையும் மீறி, ஒரு கேள்வி.

'இவருக்கு இந்த வயதில் ஏன் இந்த நிலை?'

டிக்கட்டுகளில் வந்து நின்று கொண்டு பேய்க் காற்றைச் சுவாசிக்க, அவர் குனிந்தபடியே வந்தார். வாசல் ஒட்டிய சுவரில் ஒட்டி உட்கார்ந்தார். அவர் கழுத்தோரங்கள் ஈரமாய்க் கசங்கியிருந்தன. கையில் பையில் இருந்து கதர்த்துண்டால் துடைத்துக் கொண்டார். நானும் அங்கேயே அமர்ந்தேன். ஏதாவது பேச வேண்டும், கேட்க வேண்டும் என்று தோன்றியும், 'விர்..விர்'ரென்று அடித்த காற்றைத் தவிரவும், ட்ராக் மாற்றும் 'தடக்' தவிரவும் எங்களுக்கிடையில் பூரண மெளனம் இருந்தது.

"சேலத்துக்கா போறீங்க..?" அவராகவே கேட்டார்.

"ம்..!" தலையாட்டினேன்.

"அங்க பழனிச்சாமின்னு என் பையன் இருப்பான். பாத்தீங்கனா நான் கேட்டதா சொல்றீங்களா..?"

எனக்கு குழப்பமாயிற்று. அவ்வளவு பெரிய நகரில்... எந்தப் பழனிச்சாமியை.. எப்படி...

"சரிங்க. சொல்றேங்க..! உங்க உறவா..?"

"ஆமா..! மூத்த பையன். அடுத்தது ஒரு பொண்ணு பொறந்திச்சு. தேமொளின்னு பேரு. வீரபாண்டில தான் கட்டிக் குடுத்திருக்கு..!"

"ஓ..! உங்க பையன் கூட நீங்க இல்லீங்களா..?" யார், எவரென்றே தெரியாத ஒருவரிடம் தன் தோள் பாரங்களைப் பரிமாறும் அவரைப் பிடித்திருந்தது.

"இல்லப்பா..! என்ன சேத்துக்க மாட்டேனுட்டான்..! அவனுக்கு நான் பண்ண ஒரு காரியம் புடிக்கல..! இனிமே என்ன பாக்க வராதன்னு சொல்லிப்போட்டான். பேரன் பேத்தியக் கூட ஊருக்கு அனுப்ப மாட்டேனுட்டான். என்ற ஊரு சீலநாய்க்கன்பட்டி. வந்திருக்கீங்களா..?"

"இல்லீங்க..!" எனக்கு அவர் என்ன காரியம் செய்தார் என்பதில் ஒரு சுவாரஸ்யம் வந்திருந்தது.

சட்டைப் பாக்கெட்டில் இருந்து ஒரு போட்டோ எடுத்துக் காண்பித்தார். பழைய கறுப்பு-வெள்ளைப் படம். போலராய்டு ஜாதி. கால்களை மடித்துப் போட்டு பூ போட்ட ஸாரி, 'பஜ்' வைத்த ஜாக்கெட், ஒற்றைச் சங்கிலி, நிறைய மல்லிகைப்பூ, மை கண்கள், வலது கன்ன அடிவார மச்சம், கைகளில் ஒரு சூர்யகாந்தியைச் சுழற்றிச் கொண்டிருக்கும் போது ஒரு பார்க்கில் எடுக்கப்பட்டிருக்க வேண்டிய படம்.

"யாருங்க இவங்க..? உங்க சம்சாரமா..?"

"இல்லீங்க...காதலி..!" என்றார்.

ர்மபுரி தாண்டிக் கொண்டிருந்தது. மலைகளில் வெய்யில் சரசரவென இறங்கும் போது, கூடு திரும்பும் பறவைகள் சப்தம் ப்ராட் கேஜ் ரயிலை விட எக்கச்சக்கமாய் எழும்பியது. தூர தூர ஊர்களில் பல்புகள் புள்ளிகளாய்க் கடந்தன. காற்றில் கொஞ்சம் கொஞ்சமாய்க் குளிர் குறைந்து மெல்லிய ஒரு சோகம் போல் இறக்கும் நாளின் கடைசி சூடுகள் பரவுவதை உணர முடிந்தது.

"காதலியா..?" சுத்தமான அதிர்ச்சி.

"ஏங்க.. நம்ப முடியலீங்களா..? என்னோட காதலிகூட நான் இப்ப வாழ்றது புடிக்காம தான் பையன் பேசறதே இல்ல. ஊர்ல எல்லாம் சிரிக்கறாங்கப்பாம்பான். கட்டைல போற வயசுக்கு கெளவனுக்கு கட்டிக்க பொம்பள கேக்குது பாருன்னு ஊருக்குள்ள அவன் காதுபடவே பேசுறதக் கேட்டிருக்கான். வந்து கத்துனான் ஒரு நாளு! 'சரிப்பா, என்னால உன் வீட்டு கவுரதைக்கு கொறச்சல் வேணாம்னு' நான் இவ கூட தனியா வந்துட்டேன், ஓமலூர் பக்கத்துல! பொண்ணு மட்டும் அப்பப்ப வந்து இருக்கனா, போய்ட்டனான்னுட்டு பாத்துட்டுப் போவும்..."

"இருந்தாலும் பெரியவரே, நீங்க பண்ணினது எனக்கே கொஞ்சம் ஒருமாதிரியா தான் இருக்குங்க. தப்பா நெனச்சுக்காதீங்க. உங்க பையன் சத்தம் போட்டது சரிதான்னு எனக்கு படுதுங்க..!" எனக்கு இதற்குப் பின் ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று தோன்றியது.

"தம்பி..! என்னோட பையன் படிக்காதவங்க. நீங்க படிச்சவங்க. அவனுக்குப் புரியாது. உங்களுக்குப் புரியும். யாருகிட்டயும் சொன்னதில்லைங்க. உங்களுக்கு மட்டும் சொல்றேன்.

நீங்க போட்டோல பாத்தீங்கள்ல, அவ பேரு மாலதி. நான் பி.யூ.ஸி. படிச்சப்ப காதலிச்ச பொண்ணுங்க. அப்படியே தேவத மாதிரி இருப்பா. இந்த போட்டோ கூட மலம்புழா டேமுக்கு டூர் போனப்போ அவளுக்கே தெரியாம சிநேகிதன வுட்டு எடுத்தது. இத ராவெல்லாம் தலகாணி உறைக்குள்ள மறைச்சு வெச்சுக்கிட்டு என்னென்னவோ கற்பன பண்ணிக்கிட்டு இருப்பேன். அவ்ளோ ஆச வெச்சிருந்தும் அவகிட்ட சொல்றதுக்கு தெகிரியம் மட்டும் வரவேயில்ல. அப்புறம் அவளுக்கும் எனக்கும் கல்யாணம் நடந்துச்சு, தனித்தனியா! நானும் தினசரி கவலைகள்லயும், ப்ரச்னைகள்லயும் அவளை மறந்து, வாழ்க்கையை ஓட்டினேன். அவளும் கோயமுத்தூர்ல பகுமானமா தான் வாள்றான்னு கேள்விப்பட்டேன்.

தம்பி..! காலம் இருக்கே, அத சும்மா சொல்லக் கூடாது. யாரை எங்க, எப்படி ஆக்கணும்னு அது ஒரு கணக்கு வெச்சிருக்கு. மனுசப் பயலுக்கு அது தெரியாம, அத தெரிஞ்சுக்க ஒவ்வொருத்தனும் பறக்கறோம். மறுக்கா அவள எங்க பாத்தேன் தெரியுமா..? திருப்பூர் டேசன்ல. புருசனும் இல்லாம, ரெண்டு பசங்களும் வந்தவ பேச்சக் கேட்டு இவள தொரத்திட்டாங்க.

நான் கூட்டிட்டு வந்தேன் தம்பி. என் பொண்டாட்டியும் ஆஸ்துமால இல்லாம போக... ஊர்ப்பய நாக்குக்கு தேன் தடவுன மாரி ஆச்சு. சொளட்டி சொளட்டி எங்கதையச் சப்பிச் சாப்டாங்க..!

நாம நேசிச்ச பொண்ணு இன்னிக்கு காப்பாத்த துணையில்லாம, ஒரு வேள சாப்பாட்டுக்கு வழியில்லாம இருக்கான்னு தெரிஞ்சப்புறமும் நாம இந்த ஊருக்கும், சமூகத்துக்கும் பயந்து ஒரு போலி மரியாதையோட வாழணுமான்னு யோசிச்சேன். அப்படி இருந்தா ஒரு காலத்துல அவ மேல வெச்சிருந்த அப்பழுக்கில்லாத காதலுக்கு என்ன அர்த்தமின்னு நெனச்சுப் பார்த்தேன். அவள, அவ விருப்பத்தோட கூட்டிட்டு வந்தேன். அதுனால என் சம்சாரம் மேல நான் வெச்ச பாசமோ, அவ சாகற முட்டும் வாழ்ந்த வாழ்க்கையோ பொய்யின்னு போகல.

பையன், உன்ன வெச்சுக் காப்பாத்தறதே பெருசு, இதுல இன்னொண்ணானு கேட்டான். அவன் நல்லவன் தான். ஆனா ஊர்ல எல்லாரும் இப்படி பேசறாங்களேன்னு உள்ளுக்குள்ள கோபம். 'போடா, உங்கப்பன் உசுரு இருக்கற வரைக்கும் ஒழச்சு வாழுவான்'ன்னு கெளம்பி வந்துட்டேன். இப்ப அவ இட்லி, பூரி சுட்டுத்தர நானும் இந்த மாதிரி ரயில்ல வித்துட்டு சம்பாதிச்சு பொழைக்கறோம். வயசாச்சு. கூன் போட்டிருச்சு. கஷ்டம் தான். ஆனா நாம கஷ்டப்படறது நாம அன்பு வெச்சிருக்கற, நம்ம மேல அன்பு வெச்சிருக்கற ஒரு ஜீவனுக்காகத் தான்னு நெனச்சுப் பண்ணும் போது, கஷ்டமெல்லாம் தெரியாதுப்பா..! நான் வர்றேன்..! அடுத்த ஸ்டேஷன்ல இறங்கி, ஒரு டாக்டர பாக்க வேண்டியிருக்கு..! அவளுக்காகத் தான்...!"

மறக்காமல் அவரது காதலி புகைப்படத்தை வாங்கி கொஞ்ச நேரம் பார்த்தார். அவர் கண்கள் மினுமினுத்தன. சட்டைப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்.

நீண்ட ஹாரன் சத்தம் எல்லா கம்பார்ட்மெண்ட்டையும் தடவிச் சென்றது. எக்ஸ்ப்ரஸ் மெல்லத் தள்ளாடித் தடுமாறி நின்றது. துண்டை கழுத்தில் சுருட்டிக் கொண்டு, காலியான பையை கைக்குள் அடக்கிக் கொண்டு, ஒவ்வொரு படிக்கட்டாய் இறங்கிக் காணாமல் போனார்.

ன் சீட்டில் வந்து அமர்ந்தேன். டெய்ஸி எதிர் சீட் அம்மா மடியிலேயே தூங்கிப் போயிருக்க, அவர் எங்கோ தொலைவில் பார்த்துக் கொண்டிருந்தார். ப்ரின்ஸி ஒருமாதிரி ஜன்னலோடு ஒட்டிக் கொண்டு, 'சேஸிங் தி மான்சூனை' ஐந்தாவது சேப்டரில் சென்னையில் சந்தித்துக் கொண்டிருந்தாள்.

'ப்ரின்ஸி..!!'

'ம்...!' புத்தகத்தில் இருந்து கண் விலக்கவில்லை.

'கேன் ஐ டூ ஒன் திங்...?'

'வாட்..?'

சட்டென்று நெருங்கி, அப்படியே இறுக்கி அணைத்து, வலது கன்னத்தில் அழுத்தி உதடு பதித்து, காதில், 'ஐ லவ் யூ புஜ்ஜிக்குட்டி' என்று கிசுகிசுக்க, எதிர் சீட் அம்மா சிரிக்க, டை கட்டிய எக்ஸிக்யூடிவ் அவுட்லுக்கால் எங்களைத் தவிர்க்க, மேல் பெர்த் ஆசாமி குறட்டை கலைந்து திரும்பிப் படுக்க, ப்ரின்ஸி விநோதமாய் லேசான மருண்ட பார்வை பார்த்தாள்.

***

உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பின் சிறுகதைப் போட்டிக்காக எழுதியது.

இரவுகளைக் கடத்தினேன்.1.

நியூயார்க்கில் ஆரக்கிளில் பணிசெய்யும் அத்தை பையன் அமெரிக்காவிலேயே ஓர் அழகிய இள நங்கையின் மனம் கவர, திருச்சி - 2, சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வாசலுக்கு எதிரில் இருக்கும் அலமேலு மண்டபத்தில் சென்ற வாரம் வியாழக்கிழமை ஏழு முதல் ஒன்பதரை மணி நல்ல நேரத்திற்குள் திருமணம் செய்து கொண்டனர். விழாவிற்குச் செல்ல செய்த பயணங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல விருப்பம்.

27.May.2K9

னந்தபுரி எக்ஸ்ப்ரஸ் பின்மாலை 16:20க்கு இங்கிருந்து கிளம்பி அடுத்த நாள் காலை 7:00 மணி சுமாருக்கு எழும்பூரைச் சென்றடைகின்றது. அதில் டிக்கெட் ரிசர்வ் செய்து வைக்கப் பார்த்தால், புதன் வரை வெய்ட்டிங் லிஸ்ட் 59ஐக் காட்டிக் கொண்டிருந்தது. முகூர்த்தத்திற்குக் கண்டிப்பாகப் போக வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். எனவே டிக்கெட் வாங்கிக் கொண்டு ஜெனரல் பெட்டிக்குள் அடைக்கலம் தேடிப் போக, எஞ்சின் அறைக்கு உடன் அடுத்த பெட்டியில் கீழ்த்தளம் அத்தனையும் ஃபுல். மேல் தளம் கொஞ்சம் உயரத்தில் இருந்தது. எனவே ஏறுவதற்குச் சிரமம் கொண்ட பெரியவர்கள் கீழேயே நின்றிருக்க, டார்ஜான் மச்சான் போல் சரசரவென ஏறி பையை ஒரு முனைக்கு எறிந்து, கைகளை ஊன்றிக் குப்புறப் படுத்து, பின் திரும்பி, வான் நோக்கிப் படுக்க, கம்பிகளுக்குள் அடைபட்டிருந்த ஃபேன்கள் சுற்றத் தொடங்கின.

எனக்கு எதிரே ஒரு சின்னப்பையன், 11 வயது இருக்கலாம். சரியாக கவனிக்கவில்லை. இந்தப் பயணத்திற்கு அவன் முக்கியமானவன் என்பதை அப்போது நான் உணரவில்லை.

எதிரே கீழே ஜன்னலோரமாகக் கிழவர்; அருகில் அவர் மகர். ஒரு வெண்தாடி ஜீனியஸ் கெட்டப் தாத்தா; இவர் என்ன சொன்னாலும் 'ஆமாம்' போடும் ஓர் ஆசாமி. லுங்கி கட்டியிருந்தார். இவர்கள் இருவரும் இஸ்லாமியர்கள் என்பதை நெற்றி அடையாளம் காட்டியது. பக்கத்தில், விளிம்பில் அரைவாசியாக உட்கார்ந்து ஒரு சாதாரண மனிதர்.

எனக்கு கீழே ஒரு குடும்பம். மதுரையில் கெமிக்கல் எக்ஸ்கியூட்டிவாக இருப்பவரின் ஒரு மத்திய குடும்பம். அம்மா; இரு குழந்தைகள்; மூத்தவள் பெண் குழந்தை; ஜன்னலை விட்டுத்தர மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டே வந்த குட்டிப் பையன்; மனைவி; மறுபடியும் கர்ப்பமாக இருக்கிறார். வயிறும், கைகளும் நிரம்பியிருக்கின்றன. கண்களைச் சுற்றி களைப்பு வளையங்கள். கூந்தல் கலைந்திருக்கின்றது. காலையில் வைத்ததைச் சொல்லும் காய்ந்த மல்லிச் சரம் தொங்குகின்றது.

ஏனோ களைப்பு. நாகர்கோயில் வரும் வரை நீட்டிப் படுத்து தூங்கிக் கொண்டே வந்தேன். அதற்குள் இந்த தரைத்தள மனிதர்களுக்கிடையே ஒரு பெயர் தெரியாத ஸ்நேக உறவு மலர்ந்து, கிழவரை நன்றாகப் படுத்துக் கொள்ளச் சொல்லி, அட்ஜஸ்ட் செய்து கொள்கிறார்கள். குட்டிப் பையன் கத்திக் கொண்டே வந்தான். அவ்வப்போது கர்ப்பிணி அம்மா மடியில் வந்து, வந்து ஒட்டிக் கொள்ள முயல, மாமியார் அவனை ஒதுக்குகிறார். மகனுக்கு மறுக்கவும் விரும்பாமல், புது உயிருக்கு வலிக்கவும் கூடாமல் அந்தப் பெண் சமாளிக்கிறார்.

நாகர்கோயிலில் ஓர் அரைமணி நேரம் ஹால்ட் அடிக்கப்படுகின்றது. எஞ்சின் எங்கள் பக்கமிருந்து உருவப்பட்டு, எதிர்த் திசையில் உருட்டப்பட்டு, அந்தக் கடைசியுடன் இணைக்கப்பட்டு, எங்களை கடைசிப் பெட்டியாக்கி விடுகின்றது. நிற்கும் இந்த குறுகிய காலத்தில் கொஞ்சம் இறங்கி நிற்கலாம் என்று நின்றால், அதற்குள் ஓர் அப்பா, பையனுடன் வந்து இடத்தை அபகரிக்கும் உத்தேசத்துடன் அவரது பையை பரப்ப, அவசர அவசரமாக ஏறிப் படுத்துக் கொண்டேன். அங்கு உட்காரவும் முடியாது. ரொம்பவும் உயரத்தில் இருப்பதால், உட்கார்ந்தால், கேள்விக்குறியாகி விட வேண்டும் முதுகு.

எதிர்ப் பையனைச் சமாளித்து பையனைத் தூக்கி அங்கே போட்டு விடுகிறார். பையனிடம் எந்தக் கடையில் அரிசி வாங்குகிறாய் என்று கேட்க வேண்டாம். பையனை எங்கு வாங்கினார்கள் என்று தான் கேட்க வேண்டும். அப்படி ஒவ்வொரு பாகமும் உருண்டு, திரண்டு இருந்தான். அவனை பந்து போல் உருட்டி அங்கே உட்கார வைத்து விட்டு, அப்பா கீழேயே நின்று கொண்டு என்னை விரோதிப்பார்வை பார்த்துக் கொண்டார்.

சடாரென மொத்தக் கூட்டமும் என்னை வில்லன் போலவும், பெருந்தன்மை அற்றவனாகவும், கொடூரனாகவும் பார்வை வீசி விட்டு, அவரிடம், 'கவலைப்படாதீங்க சார்! இங்கே உட்காருங்க!' என்று சொல்லாமல், என்ன சொன்னார்கள் தெரியுமா? 'நீங்க கவலைப்படாதீங்க்! எப்படியும் தின்னவேலி வந்தா அவனை எழுப்பி உக்கார வெச்சிருவாங்க..!'. ஆஹா..!

வண்டி போகப் போக கீழே ஒரு சுவாரஸ்யமான, காலத்திற்கும் தீராத சந்தேகக் கேள்வி விவாதம் நடைபெற்று, மதுரை வரும் வரை ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல், ஆர்க்யூ செய்து கொண்டே வந்தார்கள். 'சாமி இருக்கா..? இல்லையா..?'

முஸ்லீம் மனிதர்கள் எந்தச் சாமியும் கிடையாது என்று அடித்துப் பேசிக் கொண்டு வர, எதிர் விவாதம் பண்ணியது யார் தெரியுமா? கெமிக்கல் எக்ஸிக்யூட்டிவ் அல்ல. அவரது கர்ப்பிணி மனைவி. அவர் பி.எஸ்.ஸி. நர்சிங் படித்தவராம். மதுரையில் தனியார் ஆஸ்பத்திரியில் வேலை.

விவாதம் போன போக்கைக் கவனிப்பதை விட, அவர்களுக்கிடையேயான ஸ்ட்ரேடஜி முறைகள், மனிதர்களின் முக வேறுபாடுகள், எழுதுபவனாக எனக்கு சுவாரஸ்யமாக இருந்தது.

முஸ்லீம் கிழவர் மென் ரோஸ் பைஜாமா, வெண்மையான காற்றில் பறக்கும் தாடி, அறிவுஜீவி சின்னம் போன்ற ஒருவித கண்ணாடி, ஒரு ப்ளாஸ்டிக் பை, கையில் உருதோ, அரபியோ தெரியவில்லை, அதில் ஒரு புத்தகம் வைத்து அவ்வப்போது ஒரு பார்வை பார்த்துக் கொண்டார். பக்கத்தில் இருந்த மற்றொருவர் சாதாரண சட்டை (முதல் ஒரு பட்டன் திறந்து, பனியன் தெரிந்தது), வேட்டி, வழுக்கையாக இருந்தார்.

பேச்சு ஆரம்பிக்கும் போது கிழவர், சரிக்குச் சமமாய்ப் பேசுவது பெண் என்ற நினைப்பில் சாதரணமாக ஆரம்பித்து (எல்லாம் நிறுவனம்... கோயிலோ, மசூதியோ.. எல்லாம் நம்மைக் கொள்ளையடிக்கிறதுக்கு நடத்தறாங்க... கடவுள் நம்மகிட்ட தான் இருக்கார்... etc) அப்படியே மேலே மேலே கொண்டு போனார். பக்கத்தில் இருந்தவர் அவ்வப்போது வில்லுப்பாட்டு போல், 'ஆமாம்.. ஆமாம்..'!

'பார்..! நான் எவ்வளவு படித்திருக்கிறேன். உனக்குச் சமமாகப் பேசுகிறேன். என் பேச்சைக் கேள் பெண்ணே..' என்ற தொனி அதில் தெரிந்தது. அந்தப் பெண் ஒத்துக் கொள்வாள் என்ற நினைப்பிலேயே அவர் பேச்சு போய்க் கொண்டிருந்தது. போகப் போக பெண் சாதாரணம் அல்ல; படித்தவள் என்று தெரிந்து போன பின்பு யுக்தி மாறியது. இன்னும் புரியாத ஐன்ஸ்டீன், இயற்பியல், காலக்ஸி, அணு, எலெக்ட்ரான் என்றெல்லாம் எடுத்து விட ஆரம்பித்தார். அவர் சொன்னவற்றில் இருந்த ஓட்டைகள் தெரிந்தாலும், ஜாலியாக வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தேன். இதற்கும் பக்கத்து வேட்டி ஆசாமி, வழுக்கையில் வியர்வையைத் துடைத்துக் கொண்டு, ஜால்ரா தட்டினார்.

அந்தப் பெண்ணும் சாமான்யப்பட்டவர் இல்லை போல் தெரிந்தார். 'ஐயா, அப்படி கடவுள் இல்லைனாலும் ஆத்ம திருப்திக்காக அப்படி ஒருத்தர் இருக்கர்னு ஒத்துக்கறதுல என்னங்க தப்பு இருக்கு..? தப்பு செஞ்சா கண்ணைக் குத்துவார்னு சொன்னாத் தானே குழந்தைங்க கொஞ்சம் கட்டுப்பாடா இருப்பாங்க..' என்றெல்லாம் கேட்க ஆரம்பித்தவுடன், பேஸ்தடித்துப் போன (முகங்களில் தெளிவாகத் தெரிந்தது..!) இவர்கள் உடனே வியூகம் மாற்றினார்கள்.

அந்தப் பெரியவர் சட்டென மெளனமானார். கையில் வைத்திருந்த பத்திரிக்கையை மடித்து பைக்குள் போட்டுக் கொண்டார். கண்ணாடியை உறைக்குள் வைத்தார். பின்னாடி நன்றாகச் சாய்ந்து கைகளை கட்டிக் கொண்டு உட்கார்ந்து கொண்டார். முகத்தில், 'ஆண்டவரே! இவர்கள் அறியாமல் செய்கிறார்கள். மன்னியுங்கள்' என்பது போன்ற பாவம். இப்போது களத்திற்கு வந்தார் துணை அன்பர்.

அவர் மொழி வேறு. பெரியவரின் தளத்திலிருந்து தடாரென கீழே ஐம்பது அடிக்கு குதித்து, லோக்கல் பாஷையில் பேசினார். 'ஏங்க, கடவுள் இருந்த இப்படியெல்லாம் நடக்குமாங்க..?' வகை. அவர் பேச்சு பிறகு சுற்றிச் சுற்றி ஒரு விஷயத்தைத் தொட்டது. 'இவர் எவ்வளவு பெரியவர். அவரே அமைதியாகிட்டார். உங்ககிட்ட இனி என்ன பேசறது? பேசறதுனால என்ன உபயோகம், அப்படிங்கறமாதிரி வெறுத்து சைலண்டாகிட்டார். போங்கம்மா..!' இந்த உத்தியில் பேசி, எதிராளியை ஒரு தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கி, தம் கருத்தை வாபஸ் வாங்கிக் கொள்ளச் செய்யும் முறை.

அந்தப் பெண்ணா மசிந்தார்? ஒருமுறை தெரியாத்தனமாக அந்த அன்பர் பீமப்பள்ளியில் இருக்கும் 'எங்காளுங்க' என்று சொல்லி விட்டார். அவ்வளவு தான்! அந்தப் பெண் அதை அப்படியே பிடித்துக் கொண்டு, 'பாத்தீங்கள்ல.. நீங்க இவ்ளோ தூரம் சொன்னப்புறமும், உங்க அடிமனசில அந்த மதப் பாசம் இருக்கு..'. அன்பரால் சமாளிக்க முடியவில்லை. முகம் முழுக்க துடைத்துக் கொண்டு, ஏதேதோ சொல்லிப் பார்த்து, அந்தளவிற்கு வலிமை இல்லாமல், ஒதுங்கிக் கொண்டார்.

தோல்வியை ஒத்துக் கொள்ளாத அந்த இருவர் கூட்டம், அடுத்து எடுத்த அஸ்திரம், 'ஆணாதிக்கம்'.

மதுரையில் இறங்கும் போது, தாம் ஒரு என்விரோன்மெண்டலிஸ்ட் என்று விசிட்டிங் கார்டு கொடுத்தார். யாரிடம்? அந்தப் பெண்ணின் கணவரிடம். அர்த்தம் என்ன? செமத்தியாக மூக்குடைத்து விட்ட பெண்ணிற்கு கொடுக்க வேண்டாம். அமைதியாக ஆர்க்யூமெண்ட்களைக் கவனித்துக் கொண்டு வந்த ஆணிடம் கொடுக்கலாம். ஒரு வணக்கம் மட்டும் பெண்ணிற்குச் சொல்லி விட்டுச் செல்ல, இந்தக் குடும்பமும் வேறு வழியில் சென்று மறைந்தது.

து ஒரு பக்கம்.

மற்றொரு பக்கம் இன்னொரு கதை நடந்தது. அதையும் கவனித்த போது மனம் வலித்தது.

- தொடரும்.