Sunday, January 28, 2007

3ச#^ ஒளி ஆண்டுகள் தொலைவில்...!


"ருள் நல்லான் - க ஙஉ ங.! எழில் நங்கை - க உ ங.!... உங்கள் உறவு நிலைப் படிமாணத்தின் ஐந்தாம் நிலை, ஆறாம் புள்ளிக்கு வந்துள்ளீர்கள். இந் நிலையை சரியாக முடிக்க தங்களுக்கு மூன்று நிமிடங்கள், இருபத்தெட்டு துளிகள் அனுமதிக்கப் படுகின்றன. அதற்குமேல் எடுத்துக் கொள்ளும் ஒரு நிமிட நேரத்தில், தங்கள் உடல்களுக்கு காந்த நுண்ணலை மூலம் அளிக்கப்படும் உயிர்த்துகள் பாதியாகக் குறைக்கப்படும். இந்த எச்சரிக்கை விதி 32/45ன் கீழ் தங்களுக்குச் சொல்லப்படுகிறது. நன்றி..." சொல்லிவிட்டு 'டப்' என்ற சத்தத்துடன் துகள்களாய்ச் சிதறினான்.

"அருள்! விளக்கமாகப் பேசக் காலமில்லை. நீங்கள் கண்டறிந்த உண்மைகளைச் சுருக்கமாகச் சொல்லுங்கள்..." என்றாள் எழில் நங்கை.

அருள் நல்லான் - க ஙஉ ங அதை ஆமோதித்து, கை விரல்களைப் பிரித்தான். ஆட்காட்டி விரலின் நகத்தை உருவினான். ஃபைபர் நார் நீளமாக வெளிவந்தது. அதை விரித்தான். 'சரசர'வென ஃபைபர் தொகுப்பாய் நீண்டது. நகத்தின் இடுக்கில் மறைத்திருந்த பழுப்பு நிறத் துகளை எடுத்தான். கீழேயுள்ள கடைசிக் குழாயின் சிறு துளையில் அத்துகளை விட்டான். படபடவென்று அந்த ஃபைபர் தொகுப்பு நீல நிற ஒளியடைந்தது.

"எழில்..! நாம் ஏற்கனவே மேற்கொண்ட முடிவின்படி, இந் நிலையில் நமது உறவு நிலையை முடித்துக் கொள்ளப் போகிறோம். அதனால் நான் கண்டறிந்தவற்றை இந்த நினைவகக் குப்பியில் நிறைத்துள்ளேன். பார்.." என்றான் அருள் நல்லான் - க ஙஉ ங.

"காலமும், தூரமும் சமமான அலகுகளைப் பெற்றிருக்கும் காலத்தில் வசிக்கும் மக்களே..! நீங்கள் வசிக்கும் காலத்தில் நீங்கள் மட்டும் வசிக்கவில்லை. உங்கள் முன்னோர்களும் வசிக்கிறார்கள். இருவரும் ஒரே காலத்தில் வாழ்கிறீர்கள்.அனால் பார்த்துக் கொள்ள முடியாது.ஏனென்றால் அவர்கள் நமது வாழ்விடக் கிரகத்தில் இருந்து 3ச#^ ஒளி ஆண்டுகள் தொலைவில் வசிக்கிறார்கள். அவர்களது பிற்காலச் சந்ததிகள் தான் நீங்கள். நம்முடைய வாழ்விடத்தில் வாழ்முறை நீவிர் அறிந்ததே.! இது எவ்வாறு வந்தது என்பதை அறிய, நீவிர் வாழும் காலத்திலேயே, ஆனால் 3ச#^ ஒளி ஆண்டுகள் தொலைவில் வாழ்கின்ற உமது முன்னோர்கள் செய்தவற்றை அறிய வேண்டும்.

அவர்களது இடத்தில் மனிதர்கள் , அவர்களாலேயே ஆளப்படுகிறார்கள். இயற்கை மனிதனுக்கு அளித்த எல்லா விதமான தவறுகளோடும் ஆள்கிறார்கள். அவர்களது இன்றைய காலக் கட்டத்திலிருந்து, 21%$ காலத்திற்குப் பிறகு, இயல்பான வாழ்வு மிகவும் கெட்டுப் போனது அல்லது கெட்டுப் போகும். அதனால் கண்டிப்பான விதிமுறைகளின் படி நடந்து கொள்ளும் இயந்திரங்களின் கையில் ஆட்சிப் பொறுப்பு மாற்றப்பட்டது. அவை தமக்குள் எழுதப்பட்ட நிரல்களின் வழி நடந்து கொள்வதால், உங்களால் உங்கள் மனம் போல் நடந்து கொள்ள முடியாது. மேலும் அன் நிரல்கள் மிக நெடுங்காலத்திற்கு முன்னால் எழுதப் பட்டதால், இன்றைய காலத்தில் அவை பொருந்தமாட்டா. அத்தகைய இயந்திரங்களுக்கு நிரல்கள் எழுத எளிய, மிக அனுகூலமான மொழியாக தமிழ் என்ற மொழி அமைந்தால், அனைத்து நிரல்கள், நீவிரது பெயர்கள் அனைத்தும் இயந்திரங்களால், தூய தமிழில் இயற்றப்பட்டன."

"இதிலிருந்து நாம் தப்பிக்க வழியே இல்லையா..?" கேட்டாள் எழில் நங்கை - க உ ங.

"வழியுள்ளது. நீங்கள் உங்களது முன்னோர்களுடன் தொடர்பு கொள்ள முயல வேண்டும். தங்களது பிற்கால சந்ததிகள், தாம் வாழும் காலத்திலேயே, ஆனால் தொடர்பு கொள்ளமுடியாத மிக நெடுந்தொலைவில் உள்ளனர் என்பதை அறியாத, அம்மனிதர்கள், வெளி உலகத்தில் இருந்து ஏதாவது அலை கிடைக்குமா என்று தேடுகின்றனர். நீவிர் அவர்களைத் தொடர்பு கொள்ள, உமது கிரகத்தின் பொருட்களை இயந்திரங்களின் கவனத்திற்குப் படாமல், அவர்களது கிரகத்திற்கு அனுப்ப வேண்டும்..."

"இந்த கிரகத்தின் பெயர் என்ன? அவர்கள் வாழும் கிரகத்தின் பெயர் என்ன...?"

"இரண்டும் ஒன்று தான். பூமி... நினைவில் கொள்ளுங்கள். காலமும் தூரமும் ஒன்று என்ற கோட்பாட்டின் காலத்தில் வாழ்கிறீர்கள் நீவிர். எனவே தூரத்தால் பிரிபட்டிருப்போர், காலத்தாலும் பிரிபட்டு இருப்பவர்கள் ஆகின்றீர். மற்றபடி நீரே அவர், அவரே நீர். இதுவும் அதுவே, அதுவும் இதுவே..."

பழுப்பு நிறத்துகள் கரைந்து "டுக்"கென்று வெடித்தது. ஃபைபர் குழாய்களைச் சுருக்கி, சுருட்டி பழையபடி விரலிடுக்கில் வைத்தான் அருள் நல்லான் - க ஙஉ ங.!

எழில் நங்கை - க உ ங, தன் கையில் கிடைத்த கற்களை எடுத்து மறைத்துக் கொண்டாள்.

"தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காலம் முடிந்து விட்டதால், நீவிர் உங்கள் பகுதிகளுக்குச் செல்ல அறிவுறுத்தப் படுகிறீர்கள். தங்களது இந் நிலையின் மதிப்பீடு நிர்ணயிக்கப்பட்டக் காலத்தில் வழங்கப்படும்" எங்கிருந்தோ வந்த செந்நிறத்துகள்கள் கூறின. விளிம்பு முனைக்கு நகர்ந்த எழில் நங்கை - க உ ங, தன் கையில் இருந்த கற்களை வீசி எறிந்தாள்.

"ந்தக் கற்கள் வான வெளியின் வழக்கமான கற்கள் என்று எடுத்துக் கொள்ள முடியாது. இதில், வேறெந்த வான் பொருட்களிலும் காண முடியாத வகையில் பூமியில் இருக்கும் கற்களைப் போன்ற பண்புகளைக் கொண்டிருக்கிறது. பூமியில் உள்ள கற்கள், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கந்தகக் காற்றுப் பட்ட பின் என்ன நிலையை அடைந்திருக்குமோ, அது போல இவை உள்ளன. எனவே வான்வெளியில், பூமியைப் போன்ற வேறு கிரகம் இருக்க வேண்டும்..." கூறிக் கொண்டிருந்தார் நாசா ஆராய்ச்சி நிபுணர் Dr. வில்லியம்ஸ்.

"சட்.." என்று சேனலை மாற்றி, மும்தாஜின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களைப் பற்றி விசாரிக்கின்ற விவேக் காமெடியைப் பார்த்து சிரித்துக் கொண்டே, இன்று யாருடைய வலைப் பதிவில் அனானியாகப் போய்த் தாக்கலாம் என்று யோசிக்கலானேன்.