எழிலியே! மெல்லெழும் தென்றல் நறுமண மயில் தோகையே! மல்லிச்செடி இலையே! கெழு உடல் தேக்கென நிற்கும் செம்பொன் மேனித் தேவியே! கருவன் குழலென குரலிழையும் தேன் வழித் தேவதையே!
என் படுக்கை முட்கள் மேல் குளிர்ப் போர்வையாய் மூடுக! போர்வைக்குள் பொத்தி வைத்துக் கொள்க கொல்க என்னையே! கூர்நுனிக் கத்தி முனைகளைத் தீட்டிக் கொண்டு வெந்தசையில் மெல்ல இறக்கிக் ரத்தத் தீற்றல் ஊற்றலாகி உருகி ஊற்றுகையில் நூல் கற்றைகள் செந்தீ பரவு வான் போல் சிவக்கையில், என்னுயிர் உன்னுடன் கலக்கட்டும்.
தகதிமி..! தகதிமி..!
உன் பாதங்கள் என் இதயத்தை ஆளட்டும்! உன் கூந்தல் என் உதயத்தில் விரியட்டும். உன் இடை என் இருப்பை இறுக்கட்டும்! உன் விரல்கள் என் கர்வத்தைக் கலைக்கட்டும்! உன் செவ்வதரங்கள் என் செங்குருதித் தீயை அணைக்கட்டும்!
தகதிமி..! தகதிமி..!
சொல் களைந்து மெளனம் அணிவோம்; மெளனம் கலைந்து உளறல் புகுவோம்; பொய் கலைத்து மெய் தெரிவோம்; பகல் தவிர்த்து இரவணைவோம்; காற்றுலைந்து கரு புனைவோம்; இரு தொலைத்து ஒன்றாவோம்;