Friday, September 07, 2007

காதலெனும் மழையினிலே...!வானெங்கும் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.

கர்ப்பம் கொண்டுள்ள பெண்ணைப் போல், நிறைவயிறாய் வந்து பொழிந்து தள்ளிக் கொண்டிருக்கின்றன மேகங்கள். அவற்றைக் கிழித்துக் கொண்டு எட்டுத் திசையெங்கும் பாய்ந்து மின்னிப் பளீரிடுகின்றன வெண் மின்னல்கள். பிரளயமே வந்தது போல், கிடுகிடுக்கின்ற இடிகள்.

தாரை தாரையாய் ஊற்றுகின்ற முற்றத்தின் தூணில் சாய்ந்தபடி இருக்கிறாள் ராதை.


Get Your Own Music Player at Music Plugin

Tuesday, September 04, 2007

யமுனை நதிக்கரையிலே...லசலத்துக் கொண்டிருக்கிறது யமுனை.

கரையைத் தழுவிக் கொண்டு, நுரை நுரையாய் மினுக்கிக் கொண்டிருக்கிறது நதி. உண்கையில் சிந்தித் தெறித்திருக்கும் பருக்கைகள் போல் சிதறிக் கிடக்கின்றன நட்சத்திரங்கள். உருக்கி ஊற்றிய வெள்ளித் தாரையாய் ஜொலிக்கின்றது வெண்ணிலா.

நிலவின் ஒளிக் கிரணங்கள் பட்டு நுனிகள் எங்கும் வெண் முலாம் பூசியபடி நகர்கின்றன மேகங்கள். முன்னிரவுக் காலத்தில் மெதுவாய்ப் பொழிகின்றன பனித்துகள்கள். பச்சைப் பசிய இலைகள், பழுப்பேறிய சருகுகள், ஈரம் நெகிழ்த்துகின்ற தென்றல் உலாவும் சோலைவனம்.

மெல்லிய நாதமாய்க் கண்ணனின் குழலோசை மிதந்து வருகின்றது...!

அமுதமென நினை நினைக்கையில் மெய்ஞ்ஞானமென ஊறுகின்றது நினைவுகள். ஓங்கி உலகளந்த பெருமான், பொங்கி வரும் கருணைக் கடலாய்ப் பொழிகின்ற நாதம் எங்கோ அழைத்துச் செல்கின்றது.

ஊரும், உறவும், வீடும், தெருவும் விட்டு ஓடோடி வந்துள்ளோம்.

நதிக்கரையில் நிற்கின்றது ஒரு பெரும் ஆலமரம். பலநூறு விழுதுகள், பல்லாயிரம் கிளைகள், பல இலட்சம் இலைகள், எண்ணிலா உயிரிகள் என்று அன்றொரு நாள் கோவர்த்தனகிரியின் அடியில் நாங்கள் நின்றிருந்தது போல்,வாழ்கின்றன.

ஹே.., கோவர்த்தனகிரி நாதா..! மதன் மோகன குரு!

நீ கண்மூடி, குழல் கொண்டு இசைக்கையில் அதிர்கின்ற எங்கள் சிறு நரம்பும் அமைதியுறுகின்றது. மந்தகாசமாய் மலர்கின்ற ஒரு மொட்டு போல் எங்கள் மனதில் பூக்கின்றது அன்பெனும் பேருணர்வு.

ஆயிரம் துளைகள் கொண்ட இரவின் வானம், வழியாக நனைகின்றது பூமி. அது போல், நவத் துளைகள் வழி நீ நிரப்புகின்ற இசையமுதம் பொங்கிப் பெருகி எங்களை நனைக்கின்றது.

நீல இரவின் நிறத்தை உறிஞ்சிக் கொண்ட நீலோற்பவ மலர்களும், சந்திரனின் கிரணங்கள் தொட்டுத் தடவி விளையாடிய களிப்பில் வெட்கப்பட்டுச் சிவந்த செந்தாமரை மலர்களும், பசிய பூமியின் பிரதிகளாய் நீர்த்துளிகள் நிரம்பிய வட்ட இலைகளுமாய், ஒதுங்கி ஆடுகின்றன யமுனை நதிக்கரையில்..!

பொன்னிறத் தகடுகள் மேவிய படகும் நதிக்கரையோடு, நதியலைகளோடு, காற்றோடு, காட்டோடு, புவியோடு, பிரபஞ்சத்தோடு நின் மதுர கானத்தில் மயங்கிக் கிறங்கி நிற்கின்றது..!

தாயின் மடியைத் தழுவி நிற்கின்ற கன்றுகள் போலவும், தரையைத் தழுவி நிற்கும் கொடியிலைகள் போலவும், இரவோடு பிணைந்து நிற்கின்ற பனி போலவும், இதயத்தின் ஒவ்வொரு மூலையிலும் இறுகிக் கிடக்கின்ற உன் நினைவைப் போலவும், நாங்கள் உன் காலடியில் கரைந்து நிற்கின்றோம்..!

டகில் உன்னோடு பயணிக்கிறோம்.

கோசலராமனோடு அன்றொரு நாள் வந்த குகனோடு ஐவரான பெருமானே, இன்று உம்மோடு ஐவராய் வந்தோம். பறவைகளோடு, கீச்சுகீச்சென்று இரையும் குருவிகளும், பூசுபூசென்று அலைகின்ற பூச்சிகளும், சலசலக்கும் தென்றலோடு இனிக்கின்ற நிழல்களும் ஓய்வெடுக்கின்ற இந்த முன்னிலாக் காலத்தில் நாம் மட்டுமே பயணிக்கிறோம்.

மோஹனராஜ..! உனது பிறை சூடி நெற்றியில் நிலைத்து நின்று அசைகின்ற மயிற்பீலியாக மாட்டோமா..? நீ இசைக்கின்ற இசையில் முதலில் கேட்டு இனிக்க இனிக்கத் திளைக்கின்ற செவியில் ஆடுகின்ற குண்டலமாக மாட்டோமா..? காலையும், மாலையும் நினது பூங்கழுத்தைத் தழுவி நின் மணத்தைப் பெறுகின்ற பூமாலையாக மாட்டோமா..?

மதுசூதனா..! உன் செவ்விதழ் தீண்டித் தீண்டி, உனது உயிர்மூச்சில் தன்னை நிரப்பி நிரப்பி,மோட்சம் தொட்டுத் தொட்டுப் பொங்கிப் பிரவாகிக்கின்ற புல்லாங்குழல் ஆக மாட்டோமா?

உன் கருமுகத்தின் உச்சியில், கலைந்து கலைந்து ஆடுகின்ற செந்திலகமும், வலிய புஜங்களில் வருத்தா வண்ணம் அமர்ந்துள்ள அணிகலன்களும், இடையை இறுக்கி அணைத்துள்ள பொன்மாலையும், பாதங்களின் மணியாரமும் என்ன தவம் செய்தனை அப்பா..?

முடிவிலாப் பயணமாய் நகர்கின்ற இவ்வாழ்க்கையில், மோதும் பாறைகளும், உடையும் படகுகளுமாய் நாங்கள் பயணம் செய்ய வேண்டி இருப்பதால், நாராயணா, உனது கானப் பெருமழையைக் கொள்கிறோம்.

பஞ்ச இந்திரியங்கள் துணை கொண்டு பிறவிப் பெருங்கடலைக் கடக்கையில், உனது நாதத்தைக் கொண்டால், இனிமை என்று கூறவே எங்கள் ஐவரையும் கொண்டு யமுனையில் பயணிக்கின்றாயா, கண்ணா..?

எங்கே நீ அழைத்துச் சென்றாலும், ஜனநாதா, நின் அருகில் மட்டும் இருக்கும் நிலை தருவாய்..! உடலை விட்டு நீங்காத நிழல் போலவும், உயிரை விட்டு நீங்காத உன் நினைவைப் போலவும், மணம் விட்டு நிங்காத மலர்கள் போலவும், எங்கள் மனம் விட்டு நீங்காத கிருஷ்ணனைப் போலவும்...!

கிருஷ்ணன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

Monday, September 03, 2007

தெற்கத்திக் கலைகள்.

சென்ற வாரம் சனிக்கிழமை சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள 'தட்சிண சித்ரா' சென்றிருந்தோம். அங்கு எடுத்த சில புகைப்படங்கள்::

வருக... வருக...:


வரவேற்கிறார்கள் நாயனக்காரர்கள் :


ஆடிய பாதமும், அருள் வழி இறையும் :


குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியிற் பால் வெண்ணீறும்
இனித்தம் உடையெடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம் மாநிலத்தே...!


தேரோடும் மண்ணில் எங்கள் தமிழ்ச் சீர் பாடும்:


நெல்லை இல்லங்கள்:
காரைக்குடி மனை:


'தமிழ்மணம்' :


எல்லைச்சாமிகள் :
காஞ்சி அம்மை:


பூக்கோலம் :


கன்னடச் சாமுண்டி:


ஆந்திர இல்லு:


தன் பிற்காலச் சந்ததிகளின் வள வாழ்வைக் காக்கும் அய்யனாரின் கூரிய உறைந்த பார்வை:


மது முன்னோர்களின் பிரம்மாண்டமான வாழ்வையும், அவர்கள் வாழ்ந்த இல்லங்களையும் கண்ணாரக் கண்டு வர தென்னகம் எங்கும் சுற்றத் தேவையில்லாமல், தருமமிகு சென்னை மாநகரின் அருகிலேயே அமைத்துள்ளார்கள்.

காண்க.