ஒரு பொற்பொழுதாய் விரிகின்றது அக்காலம்.
வானின் மந்தகாசப் புன்னகை, வரப்போகும் இராச லீலையைக் காண வெட்கப்பட்டு பூத்த பொன் வர்ணம் எனறானது. பிரம்மாண்டமான பிரபஞ்சம் முழுதும் சிவந்த மாதுளை விதைகள் போல் விண்மீன்கள் மின்னத் தொடங்கின. காதலனின் முகத்தை ஒற்றி ஒற்றி தன் நிறம் போல் பூசிக் கொள்ளும் காதலியின் திருமுகம் போல் யமுனா நதி விண்ணின் சிவந்த நிறத்தை தன் மேனியெங்கும் அப்பிக் கொண்டு நகர்ந்தது. மதியத்தின் கதிரவனின் ஆதுரத் தீண்டல்களால் கன்றிப் போய்ச் சிவந்திருந்த பூக்களும், காய்களும், கனிகளும் வீசத் தொடங்கும் மாலைத் தென்றலில் மயங்கி அசைந்து கொண்டிருந்தன. தூர மலை முகடுகளின் உச்சிகளில் மொட்டு விட்ட செந்தாமரை போல் சிவப்புப் பொன்னிறம் பூத்திருந்தது.
பூங்காற்றின் நிலையைத் தான் என்னவென்று சொல்வது? வேணு கான நாயகனின் மதுர நாதத்தை தனக்குள் சுமந்து கொண்டு, போதையில் கிறங்கிப் போன பின் தள்ளாடித் தடுமாறிக் கையில் கிடைத்த பூக்களை எல்லாம் கிள்ளிப் பார்த்தது; பெரும் மரங்களின் கடும் மேனியின் மீதெல்லாம் மோதிக் கொண்டது; ஈரம் பூக்கத் தொடங்கி இருக்கும் மண் மேல் நடந்து, பின் முடியாது, விழுந்து, புரண்டு, கனிந்து, எழுந்து, குப்புறக் கவிழ்ந்து, அசைந்து யமுனா நதிக்கரையில் காத்திருக்கும் கோபிகையர்களுக்கெல்லாம் கண்ணனின் வருகையைக் குழறலாய்க் கூறியது.
விழிகளை இமை எப்போதும் காத்திருக்கும். ஆனாலும் இமை அசந்திருக்கும் போது பார்த்து கண்ணீர் கரை புரண்டு ஓடோடி வரும். போல், காதல் நிரம்பி மனத்தில் ததும்பிக் கொண்டிருக்கும். ஒரு சிறு கீறல், பூங்காற்றின் ஒரு சிறு கூறல் பட்டதும் பொங்கி வழிகின்றது, கோபியரிடமிருந்து..!
அந்த இராசத் திருமகனைக் காணாது விழித்திருக்கும் போதெல்லாம் வீணாய்த் தோன்றுகின்றது என்கிறாள் ஒருத்தி! அந்தக் கார்மேகவர்ணனை நினையாது கழித்திருக்கும் போதெல்லாம் காடுண்ட இருளென நகர்வதேயில்லை என்கிறாள் மாற்றொருத்தி! முட்டி போட்டுக் கொண்டு பால் கறக்கையில், நம்மை முட்டிக் கொண்டு, தாய் மடியை முட்டி, முட்டி அமுதருந்தும் கன்றினைப் போல் எந்நிலையிலும் நினைவுகளை முட்டி, தட்டி கிளம்பி கிறுகிறுக்க வைக்கின்றது அவன் திருமுகம் என்கிறாள் ஒருத்தி! தோப்புகளைத் தாண்டிச் செல்கையில் வீசும் ஊதற்காற்று அவன் திருவாய் ஊதும் காற்று போல் இசை எழுப்பி மேனியைச் சிலிர்க்கச் செய்கின்றது என்கிறாள் மற்றும் ஒருத்தி!
மோகன வர்ணமென எடுத்துப் பூசிக் கொள்கின்றது அவன் பிரிதலில் நான் கொள்ளும் நிறத்தை மாலை வானம் என்றாள் நாணத்தால் சிரம் கவிழ்ந்து, ஒருத்தி! குளிக்கையில் மஞ்சள் அள்ளி பூசுகையில், மனதில் ஒரு சிரிப்பு பூக்கச் செய்கின்றன அவன் விரல்கள் விளையாடிய தடங்கள் என்று வெட்கிக் கூறிச் சிரித்தாள், இன்னும் மஞ்சள் நிறம் கிளைக்கச் செய்யும் புன்னகையோடு ஒருத்தி!
இன்னும் இன்னும் காற்றின் காதுகளுக்கும், யமுனை ஆற்றின் அலைகளுக்கும் மட்டும் சொல்லிக் கொண்ட கதைகளை கோபியர் கூறிக் கொண்டே இருக்க, கண்ணன் அங்கு வந்தான்.
மலையாமாருதம் வருகையில் நாணலென்ன செய்யும்? பேரலை காதலுடன் பொங்கி வருகையில் கரையோர வெண் சங்கு என்ன செய்யும்? இரவின் குளிர் இசைப் பாடி வருகையில் கானகத்தின் சிறு கிளைகள் என் செய்ய முடியும்? மதுர கானமென இசைத்துக் கொண்டே அந்தக் கள்ளன் வருகையில், காதலின் மனங்கள் தான் என்ன செய்ய முடியும்?
மெல்ல மெல்ல தன் இதழ்கள் திறக்கையில் சுற்றிக் கொண்டே இருந்த தேனீ, இன்பத்தின் பேரெல்லைக்கே சென்று தேன் துகள் குடத்தில் தலைக் குப்புற விழுதல் போலும், வான் மஞ்சள் இராகங்கள் வாசிக்கையில் நந்தவனத்தின் புஷ்பங்கள் பூத்து கலகலவென சிரித்து மகிழ்தல் போலும், சின்னச் சின்னதாய் அலைகள் வந்து மோதுகையில் சிலிர்த்து சிலிர்த்து கலகலக்கும் கரையோர பூச்சிகள் போலும், அந்த நாத நாயகனின் கானக் காதல் காற்றின் மேனியெங்கும் தடவித் தடவி நிரப்ப, அமிர்த குடத்தில் விழுந்து தத்தளிக்கும் மீன்களாயினர் கோபியர்.
பனித்துகள்களைக் கொண்டையாய் அணிந்து கொள்ள தயார்ப் படுத்திக் கொண்டிருந்த, பச்சைப் பசும்புற்கள் எல்லாம், தரையோடு ஆழப் புதையும் வகையில் யாவரும் ஓடோடி அந்த மாயனைச் சூழ்ந்தனர்.
மேகங்களும் மாமழையும் பெய்யும் போதெல்லாம் தன் வானுயர் மகிழ்வை தோகைகள் வழி சிந்தும் மயில்கள், இப்போது இந்தக் கார்மேகவர்ணனைக் கண்ட மாத்திரத்தில் பெரும் பரவசத்தில் அழ்ந்து சிறகுகள் விரித்து நடனமாடின. புள்ளிமான்களும், பேடைக் குயில்களும், சின்னப் புறாக்களும், பொன் வர்ணப் பறவைகளும் சீச்சுக் கீச்சென்று குரல் எழுப்பிக் கொண்டே எங்கும் பொங்கிப் பறந்தன.
பலவண்ண மலர்கள் பொலபொலவென தங்கள் சந்திரக் காதலனை வரவேற்கப் பூக்கத் தொடங்கின. வெண்ணிலாவின் நிறத்திற்கு முற்றிலும் வேறுபட்ட இந்த கரியனைக் கண்ட மாத்திரத்தில் சற்று குழம்பினாலும், தெளிவுற்று தம் கைகளால் கொப்பி அடிக்கத் தொடங்கின.
கோபியர் மட்டும் சும்மா இருந்தனரா...?
அந்த லீலைக் காதலனின் கன்னங்களைப் பிடித்து இழுப்பதும்; அவன் கைகளின் குழல் போலின்றி சுருண்டு சுருண்டு குழல்களாய் இருக்கும் கருங் கூந்தலை அள்ளி முத்தமிடுவதும்; அவன் கரங்களைப் பிடித்து தம் புறம் இழுத்து அணைப்பதும்; அவன் சிவந்த இதழ்களால் தினம் தினம், நிதம் நிதம் சுவைத்து, அவன் மூச்சுக் காற்றால் உயிர் பெற்று கருவத்தால் இசை பரப்பி, இசை பெறும் குழலாய்த் தாம் ஆக மாட்டோமா என்ற பெருமூச்சோடும்; அவன் மணிமார்பில் தவழும் பூமாலையின் ஒரு பூவாக மாட்டோமா என்ற ஆசையோடும்; அவனோடு விளையாடத் தொடங்கினர்.
அந்த இராச லீலை மன்னனின் விளையாட்டுக்களைத் தான் என்னவென்று சொல்லுவது?
பூக்கள் கிளைத்து மணம் வீசும் கன்னியின் கூந்தலைக் கலைத்துப் போடுகிறான். தன் கன்னத்தில் இதழ் பதிக்க வந்த ஒருத்தியின் முகத்தில் கொட்டி விடுகிறான். தன் குழலைப் பிடுங்க வரும் ஒருத்தியின் கைகளுக்கு அக்குழலாலேயே அடி ஒன்று வைக்கிறான். தன் பின் வந்து அணைக்க முயன்ற ஒருத்தியைப் பயமுறுத்த திடுமென திரும்பிப் பழிப்புக் காட்ட, அந்த மதுரமான திருமுகத்தில் பரவசமுற்று தடரென விழுகின்றாள், அவள்.
கொப்பி விளையாடி மகிழ்விக்கிறான். கைகளைப் பிடித்து சுழலாட்டம் செய்கிறான். நடனம் ஆடுகிறான். முதுகோடு சாய்ந்து கொண்டு பாடுகிறான். ஒருத்திக்கு தலை நிறைய பூக்கள் வைக்கிறான். ஒருத்தியின் தலையின் பூக்களைப் பறித்து, அவளது முகமெங்கும் ஊதுகிறான். நாதப் பெருங்குழலில் உயிர் உருக்கும் பூங்கானம் இசைக்கிறான்.
இராச லீலைகளை மெல்ல மெல்ல அவன் அரங்கேற்றுகையில் வெட்கத்துடன், வீசிக் கொண்டிருந்த குளிர்க்காற்றும் நிறம் மாறத் தொடங்கியது.
சந்திரமதியும் எட்டிப் பார்த்து, கள்ளத்தனத்தோடு சிரிக்க, வெட்கத்தால் கூச்சப்பட்ட கோபியர் உற்சாகப் பரவசத்திலும், உல்லாச சஞ்சாரத்திலும் யமுனையைப் பார்த்துப் பாடத் தொடங்குகிறார்கள்.
'யமுனே நின்னுட நெஞ்சில்.....'
இப்பாடலில் ஷோபனாவின் சிறப்பான ஒரு நடனத்தின் ஒளிப் படத்திற்கு!