சலசலவென குளிர் இறங்கிக் கொண்டிருக்கின்றது. மலையின் சரிவுகளில் என்னோடு சேர்ந்து நடந்து வந்த காற்றை நிறுத்திக் கேட்டேன். ' எங்கே நீ வருகிறாய்..?'
காட்டாறு வேகவேகமாய் உருண்டுத் திரண்டு, நுரையோடு தரையோடு கிடைத்த பாதைகளில் எல்லாம் புகுந்துப் புறப்பட்டு பாய்ந்து வருகின்றது. நெடுமரங்களின் வரைய முடியாக் கோணங்களில் கிளைத்திருந்த கிளைகளில் இருந்து விழுந்த சருகுகள் மிதந்தோடுகின்றன. உச்சிகள் அடிவாரங்களுக்கு அனுப்பும் பூக்களும், பச்சை இலைகளும், செம்மண் கரைசல்களும் கொழித்துச் செழித்து பளபளத்துக் குதூகலமாய் புரண்டு வரும் ஒரு காட்டாற்றின் கரையில் நின்று கைகள் கழுவிக் கொண்டேன். காற்றும் என்னோடு சேர்ந்து கொஞ்சம் குளிர் ஏற்றிக் கொண்டது.
நடக்கத் தொடங்கினேன். எங்கோ சென்று தன்னந்தனியாகக் கேட்க காதுகள் அற்று வனத்தின் இருளான பிரதேசங்களில் அலைந்து கொண்டிருந்த குயிலோசைகளையும், குழலோசைகளையும் சுமந்து வந்து வாசித்துக் கொண்டே கூட நடந்தது, காற்று.
தனக்கொரு நண்பனையும் இழுத்துக் கொண்டது.
வைகறைப் பொழுதுகளில் வானின் போர்வைக்குள் இருந்து விலகி, அடுக்குகள் வழியாக அணிவகுத்து, சிவந்த ரோஜா இதழ்களை நிரப்புமே அதிகாலை சுகந்த வாசம், அதைத் தான்!
கீச்சுகீச்சென ரீங்காரங்கள் இட்டு கும்பல் கும்பலாய் ஆகாயத்தின் அந்தப்புரம் வரை சென்று அலசிவிட்டு தலை சுற்றும் வரை பறந்துக் களித்தாடும் சிட்டுக் குருவிகளின் கூட்டம் ஒன்றைக் கண்டேன். ஆஹா..! என்ன அழகு..! கைகளில் இருந்து வாரிச் சரித்த முத்துப் பரல்கள் இறக்கை முளைத்து, சிடுக்குகளில் நுழைந்து, வானின் இடுக்குகளில் உட்புகுந்து சந்தோஷக் கூச்சலிடும் சின்னஞ்சிறு அழகிகள் அவர்கள்.
மைனாக்களை மட்டும் குறை சொல்ல முடியுமா..? 'முடியாது தான்..' என்றது காற்று.
கறுப்புக் குயில்களோடு அவை கூட்டணி கொண்டு, ஒரு ராக ஆலாபனை அல்லவா செய்கின்றன..? சோக இழைகளைக் கொண்டு நெய்யும் இனிய ஸ்வரங்களை அள்ளி அள்ளி, ஒரு பட்டுப் பாட்டை அவை வடிவமைத்து வாயசைக்கும் போது கருங்கல்லால் செய்த கண்களில் இருந்து கசிகின்ற கண்ணீருக்குள்ளும் இறங்கும் ஒரு குளிர்..!
எத்தனை எத்தனை நிறங்களில் மலர்கள் இங்கே படர்ந்திருக்கின்றன..! சொல்லி முடிப்பதற்குள் என்னை விட்டு ஓடோடி தன் ஆயிரமாயிரம் கரங்களால் அத்தனை பூக்களையும் அள்ளி அள்ளி முத்தமிட்டது காற்று! தலையாட்டி, புன்னகை முகம் காட்டி, சரசரவென ஆனந்த சொற்களை வாரி இறைத்து சிரித்தன அவை..!
ஜ்வால நெருப்பாக ஜொலிக்கும் சூரியகாந்திப் பூக்கள் எத்தனை..! அடிவானச் சிவப்பை அள்ளிப் பூசிக் கொண்ட ரோஜாக்கள் எத்தனை..! பால் நிலவின் பொழிவின் போது மெல்லத் திருடிக் கொண்டு பகல் பொழுதில் பந்தி விரிக்கும் மண மல்லிகள் எத்தனை..! முதல் பரு முளைக்கும் பெண்ணின் கன்னம் கனியும் மஞ்சள் வர்ணத்தில் மலர்ந்திருக்கும் நந்தியாவட்டைகள் எத்தனை..! இன்னும் பெயர் சூட்டிக் கொள்ளாத, ஜாதி மாட்டிக் கொள்ளாத லட்சக்கணக்கான வாசனை வசந்த அழகு மலர்கள் எத்தனை...!
இங்கேயே அமர்ந்து இந்த தெவீக எழிலில் மனம் தோய்ந்து களித்திருக்கலாமே என்றேன். 'கூடவே கூடாது. சென்றே ஆக வேண்டும்..' கட்டாயமிட்டது காற்று.
முன்னொரு காலத்தில் மெல்லிய சிற்றோடை ஒன்று ஓடிக் கொண்டிருந்திருக்க வேண்டும். அந்த சரளைக்கற்கள் நிரம்பிய ஒற்றையடிப் பாதையில் கால்களை அழுந்தி அழுந்தி இறங்கிக் கொண்டு இருந்தேன். கால்கள் அற்ற காற்று தன் காண இயலா உருவால் வழியில் இருந்த புன்னை மரங்களையும், அசோக மரங்களையும், ஆலங்களையும், வேலங்களையும், அரசனையும், மல்பெரி, ஆப்பிள், சந்தன மரங்களையும் இன்னும் சரித்திரம் சந்தித்திராத பெருமரங்களின் பெயர்களை எனக்கு மட்டும் சொல்லிச் சொல்லித் தடவித் தடவித் தழுவிக் கொண்டே வந்தது.
எங்கோ உடல் இருக்க, எங்கோ கிளைகள் வளர்ந்திருக்க, எங்கெங்கோ வேர்கள் படர்ந்திருக்க... நகரா அதிசயங்கள் இந்த மரங்கள். சூடான வெயிலை உறிந்து கொண்டு, குளிரான நீரை கவர்ந்து கொண்டு, வாசமான மலர்களைச் சொறிந்து, வளமான கனிகளைக் கொடுத்து வெயில் தடுத்த நிழல் ஈந்து, லட்சோபலட்சம் லட்சோபலட்சம் பறவைகளுக்கும் பூச்சிகளுக்கும் தாயான தயாபர தருக்களே..!
இதந்தரும் பதந்தரும் சுகம் தரும் பல விதம் தரும் அமுத ஆபரணங்கள் சூட்டிய மகாராணிகளும் உனக்கு ஈடாக முடியுமா..? 'ஆமாம்.. முடியவே முடியாது..' என்று ஆமோதித்தது காற்று.
பஞ்சுப் பொதிகளை எங்கிருந்தோ விரட்டிக் கொண்டு வந்தது மற்றொரு காற்று. அவை அயல் தேசத்து மேகங்கள். கடத்திக் கொண்டு வந்து, கவின் மலை உச்சிகளோடு 'தடாலென' மோதி சாரல் மழைகளைப் பொழிய வைக்க குளிர் சுமக்கும் முகில்களைத் தள்ளிக் கொண்டு வந்திருந்தது அது. இரு காற்றுகளும் சந்தித்துக் கொண்டன. சுழல் பூமியில் முத்தமிட்டுக் கொண்டன. என்னோடு வந்தது ஆண் புயல்; எதிரில் வந்தது பெண் தென்றல்.
ஒன்றையொன்று சுற்றிச் சுழன்று அன்பு ததும்ப சருகுகளையும், பூக்களையும் தம்மோடு இணைத்து ஆவேச ஆராதனைகளில் ஆழ்ந்தன. இடையூறு செய்யாது, தனித்து விடப்பட்ட வெண் மேகங்களை காணத் தொடங்கினேன்.
ஏகாந்தப் பெருவெளியில் ஏகதேசம் கடந்து எங்கோ சென்று கொண்டிருக்கும் மழை மூட்டைகளே..! கொஞ்சம் என் மேலும் சில துளிகளை எச்சமிடக் கூடாதா..? புத்தொளிர் புது மண நீர்த் துளிகளால் என்னை நனைத்துக் கொள்வேனே..!! சுருள் சுருளான வலைப் பின்னல்களில் உருவம் இல்லாத, வடிவம் கெட்ட அருமை மேகங்களே..! அந்தி மாலைகளில் அள்ளிப் பூசிக் கொள்ளும் ஆதவனின் மயக்க மஞ்சள் நிறத்திற்குப் பதிலாக நீங்கள் தரும் பதிலென்ன..? மெல்ல அவனை மூடி எதை மறைக்கிறீர்...? நீல வான நிறை நாட்களில் நீங்கள் எங்கே சென்று விடுகிறீர்கள்..? அதோ அங்கே ஓடும் சிற்றோடையைத் தந்த மேகம் எங்கே..? நீரே நீராக, நீரே சேறாக, சேறே ஆறாக, யாவும் நீங்கள் ஆடும் ஆனந்தத் தாண்டவ வடிவங்களோ...?
பதில் சொல்வதற்குள் என்னை முறைத்துக் கொண்டு, என் கேள்விக் கொக்கிகளில் இருந்து பறித்துக் கொண்டு அவற்றை அள்ளிக் கொண்டு பறந்து சென்றது தென்றல். 'போகலாமா..?' கேட்டேன். களைப்பும், களிப்பும் ஒன்றிணைந்த போதையில் தலையாட்டியது காற்று.
வனத்தின் எல்லை வரை என்னை உருட்டிக் கொண்டு வந்து விட்டது. அதைத் தாண்டி குழப்பக் காட்சிகள் தெரிய, 'இனி நான் எப்போது மீண்டும் வருவது?' கேட்டேன்.
சில வெள்ளித் துளிகளை எடுத்துக் கொடுத்து, என் கைகளில் அழுத்தி வைத்தது. 'இந்தத் துளிகள் இறுகி மீண்டும் பொலிகின்ற வெண் காசுகளாய் கலகலக்கும் பொழுதில் உன்னை அழைத்துக் கொள்வேன். இப்போது சென்று வா!' என்றது காற்று. தன் வலுக் கரங்களால் முடிவின் புள்ளியில் வாய் திறந்து வளர்ந்திருந்த ஒரு பன்னீர் மரத்திற்குள் அழுத்தி அனுப்பி வைத்தது.
குளிர்ப் பண்ணையில் குவித்திருந்த இலைச்சரங்களை எடுத்து வரிசை கட்டிய மாலைகளின் ஸ்பரிசம் பட்டதும் விழித்துக் கொண்டேன்.