Saturday, April 21, 2018

நீலாம்பல் நெடுமலர்.35.

தீராப்பிறை.

சிறு இதழ் பிரித்து உள்நுழையும் பொன்வண்டு தேமதுரத்துளிகளை அள்ளித் திளைத்துக் கொண்டிருக்கையில் மலரின் இதழ்கள் மெல்ல சுருண்டு அதை உள்ளே சிறைபிடித்துக் கொள்ளும். இனித்து இனித்து மரணிக்கின்ற வண்டு, மலர் காய்த்துக் கனியாகி முழுக்கச் சுவையாகுகையில் மிதக்கின்ற மணமாகவும் வழிகின்றாக செழுஞ்சாறாகவும் திகட்டுவது உள் அமிழ்ந்து கரைந்த வண்டின் அமுதமே அல்லவா?

தேவி, நீங்கா இரு கழல்களாகவும் தூங்கா இரு விழிகளாகவும் தீரா இரு கலங்களாகவும் குன்றா அருள் கரங்களாகவும் நீ நின்றிருக்க, என் உளமின்றி வேறிடம் இருக்கின்றதா உனக்கு? செருக்கடித்து ஆணவ மலம் நிரம்பி துயர்க் குளமாய்த் தேங்கி நின்று புழுத்து சீழ்ப்புண்ணென நாறும் என் மனதில் நீ கால் பதிக்கவும் ஒரு செந்தாமரை அங்கே உதிக்காமலா போய் விடும்? மண் தொடாத சிவந்த உள்ளங்கால்கள் முத்துக்கள் கோர்த்த மணிச்சரங்கள் சப்திக்க இரு பாதங்களை எடுத்து வைத்து நீ அகம் புகும் அக்கணத்தில், அம்மலர் விரிந்து ஆயிரம் தசகோடி இதழ்களால் பூத்து குவிந்து, நிறைந்த அழுக்குகளை அள்ளி அகற்றித் தள்ளி விடாதா?

ஆடல் சலங்கைப் பரல்கள் தெறிக்கத் தெறிக்க விரல் மகுடமென விளைந்த கூர் நகங்கள் குத்திக் கிழித்து குருதி பொங்கிக் கொப்பளித்து உன் பாதங்களைச் செம்மை நிறம் பூசிக் கொள்ளச் செய்யும் ஆடற்களமென அமைய என் அகங்காரமின்றி வேறிடம் உனக்கேது? ஒன்றில் வாளும் ஒன்றில் சூலமும் ஒன்றில் முள் சாட்டையும் ஒன்றில் வேலுமாக நாற்கரங்களில் கொல்லாயுதங்கள் ஏந்தி, கீறி வெட்டிக் குத்திக் குதறிக் கிளறித் தாண்டவமாட, பராசக்தி உனக்கு, இறுகிக் கெட்டித்தட்டிப் போய் பாறையென ஆகி உலர்ந்து வறண்டு கிடக்கும் கடுவீச்செழும் இருண்ட என் ஆழ்மனம் போதாதா?

செந்நெருப்புச் சுடர் எண் திசைகளிலும் காய்ச்சும் உன் விழித்தீ சுட்டுப் பொசுக்க, செவ்வுழவு செய்து புரட்டிப் போட்டு ருத்ரவிழிப்பு கொள்ள ஆழ்ந்துறங்கிக் கனவுகளிலும் சோம்பல் களிப்பிலும் சுருண்டு செயலின்மையின் செம்மதுவில் ஊறிக் குருதியெங்கும் போதையும் நரம்புகளெங்கும் அலட்சியமும் ஊற்றுப் பெருக்கி ஓடும் இத்தேகம் போல் உகந்த நிலம் எங்கு கிடைக்கும் உனக்கு?

வந்து நில்; வந்து அமர்; வந்து எரி; வந்து அணை; வா.

தேவி, வீணை கொண்டு வருக. நாதம் எழுப்பி எரிந்து கரியும் உள்ளைக் குளுமை செய்க. வெண் மலர் ஏந்தி வருக. சுகந்தம் கரையும் காற்றாய் சுவாசத்தை நிரப்புக. சிம்மம் ஏறி வருக. பிடரி பறக்கும் திசைகள் அதிரும் அதன் பெரும் பிளிறலால் யுக யுக உறக்கம் கலைந்து, கூர் அகிர்களால் பேரறை வாங்கி இப்பேதைமை கலைந்து அழிக்க. குழலேந்தி வருக. மூங்கில் கம்பாய் இவ்வீண் உடலை ஆக்குக.

அரம்பையராய் வருக. அழகியராய் வருக. அன்னையராய் வருக. குழவிகளாய் வருக. ஆனந்தப்பேரொலி எழுப்பும் பெருஞ்சங்கம் ஊதி நடமிடும் பெரு மண்டபமாய் இப்பிறவியை நிரப்புக.

Tuesday, April 17, 2018

கிருஷ்ணபானு..!

1.
காயத்தில் பொன்னிறத் திரவம் நிரம்பியிருந்த கண்ணாடிச் சாடியை யாரோ கைதவறி உடைத்து விட்டார்கள். அது செங்குழம்புத் தீற்றல்களை அள்ளிப் பூசிக் கொண்டு ஆதவனை மேற்கு மலைகளுக்குப் பின்னால் அனுப்பிக் கொண்டிருந்தது. மாலை நேரக் காற்று அந்த தூரத்து முகடுகளைக் கடந்து பின்னர் பசும் செழுமைகளை உடைய மலை மேனிகளைத் தழுவிக் கிழக்கில் வேகமாய் நகர்கையில் யமுனை மேல் நுரைகளைக் கிளப்பிச் சென்றது.

நீலத்திரை மீது விழுந்த செஞ்சாந்துக் கோடுகளை நனைத்து நகர்ந்தது நதி. செந்தூரத் துளிகளாக நீர்க்குமிழ்கள் கரைகளில் தெறித்தன. நாணல் செடிகள் சுகமாய்த் தலையாட்டின. அவற்றின் பஞ்சுச் சிறகுத் துகள்கள் காற்றில் இறங்கி இறங்கி அலைகள் மேல் அமர்ந்து, குட்டிக் குட்டிப் படகுகள் போல் தாவித் தாவி மிதந்தன.

ஆயர்பாடிக்குத் திரும்பி விட்ட ஆயர்கள், தத்தம் இல்லத்தில் தூய்மைப்படுத்திக்கொண்டு, மற்றுமொரு முறை பட்டியில் கட்டிய பசுக்களைச் சென்று பார்த்து விட்டு ஊர்மன்றுக்கு வந்தமர்ந்தனர். ஆய்ச்சியர் இல்லத்துப் பணிகளை நிறைவு செய்து விட்டு, பலகாரங்களையும் சிற்றுண்டிகளையும் எடுத்துக் கொண்டு மன்றுக்குப் பின் அமைத்திருந்த குடில்களுக்குள் வந்தமைந்தனர். சிறு பிள்ளைகள், பெரியோர் எண்ணியிருக்க முடியா ஆலமரத்துக் கிளைகள் மேலும் மனைச் சாளரத்திட்டுக்கள் மேலும் அமர்ந்திருந்தனர்.

மன்றின் மையத்தில் மண்ணில் திளைத்து விண்ணில் கிளைத்திருந்த பேராலமரம் ஆயிரம் திசைகளிலும் நா நீட்டிய ஆதிசேடன் போல் வியாபித்திருந்தது. பல்லாயிரம் பறவைகளும் சிலகோடி சிற்றுயிர்களும் புழங்கி வந்த அப்பெரு நகரின் மேலே தூரத்துச் சந்திரன் தெரியத் தொடங்கினான். துளித்துளியாய் சொட்டிய மீன்கள் கருமை கொஞ்சம் கொஞ்சமாய் எட்டிப்பார்த்த ஆகாயம் முகிலின்றி நீலமாய் நிறைந்திருந்தது.

ஆலத்தின் கீழே நின்றிருந்த சூதன் பாடத் தொடங்கினான்.

“விண்ணெழுந்த பாலாழிக்கு வணக்கம். ஆழியில் உறங்கும் நீலவண்ணனுக்கு வணக்கம். அவன் புறத்தமர்ந்த திருமகளுக்கு வணக்கம். அவன் உந்தியுதித்த நான்முகனுக்கு, அவன் உடனுறை வேதவல்லிக்கு, அவள் நாவெழும் சொல்லுக்கு, சொல் காக்கும் மலைமகளுக்கு, அவளுக்கு இடம் தந்த குளிர்மலை நாதனுக்கு, அவனமர்ந்து கற்பித்த ஆசிரியர்களுக்கு, அவனுக்கே சொல்லளித்த அழகனுக்கு, அந்த வேலனுக்குக் கன்னி தந்த வேழனுக்கு, வேழனுடன் விளையாடிய குறுமுனிக்கு, குறுமுனி ஆக்கியளித்த செம்மொழிக்கு வணக்கம்.” என்று வாழ்த்தி வணங்கினான்.

“ஆ புரக்கும் ஆன்றோரே! அவர் மனை புரக்கும் அன்னபூரணியரே! மனை நிரப்பும் இளையோரே! கேளீர்! மேற்குக் கரையிலே எழுந்து வந்து இன்று நான்கு திசைகளின் செல்வமெல்லாம் சென்று சேரும் பெருநகரைக் கண்டு வந்தவன் சொல் கேளீர்! காடுகளில் கன்று மேய்த்தவன், அங்கே நகர்மன்று நின்று மேய்ப்பதைப் பார்த்து வந்தவன் பகிர்வதைக் கேளீர்! துவாரகை எனும் பேர் கொண்ட அப்புது நகரம் திரண்டு வரும் வெண்ணெய் போல் அவன் இதழ்களுக்கு முன் காத்திருப்பதை உணர்ந்து வந்தவன் உரை கேளீர்!” குழுமியிருந்த அனைவரும் அமைதி கொள்ள, சூதன் குரல் மணி எழுந்த முதலொலி போல் ஒலித்தது.

”தென்னகத்தைச் சேர்ந்த சூதன் நான். சொல் ஒன்றை மட்டும் ஊன்றிக் கொண்டு அன்னை தவம் செய்யும் முக்கடல் முனையிலிருந்து கிளம்பி அலை முழங்கும் மாமதுரை வழியாக வனங்கள் பூத்திருக்கும் திருவிட நிலங்களைக் கடந்து எல்லை காணவியலா நீர் பெருகி ஓடும் பேராறுகளில் நீந்தி மேற்குக் கடலைச் சென்றடைந்தேன். புதுநிலம் தேடிச் சென்றடையும் பசுக்களைப் போல, புதுச் சொற்களைத் தேடி நானடைந்த நிலம் அது. மண்ணில் வேரோடிய தொல் நகரங்களையும் அந்நகர் அமர்ந்த அரசர்களையும் சொல்லிச் சொல்லித் தீர்ந்த குவளையைப் புதிதாய் நிரப்பப் புது நகரம் தேடினேன். அன்றில்லாதது, இன்றிருப்பது. இனி என்றும் எம் குரலில் இருக்க வேண்டும் என்ற பேரவா ஒன்றால், அலையும் குயில்கள் நாங்கள். தென் நிலமெங்கும் துவாரகை என்ற ஒன்றைப் பற்றிய பேச்சுலாவுவதே என் ஆர்வத்தைத் தூண்டியது. கண்டதை விட காணாததன் மேல் நாம் போர்த்திக் கொள்ளும் கற்பனைகள் தீராதவை. அங்கே பொன்னால் செய்த தூண்களில் தான் சாய்ந்திருப்பர் காவலர் என்றார் ஒருவர். முத்தெடுத்துப் புள் ஓட்டுவர் என்றார் இன்னொருவர். வைரக்கற்களால் சிறுவர்கள் கோடிழுத்து விளையாடுவர் என்றார் மற்றொருவர். கண்டவர், கண்டவரைக் கண்டவர், காற்றில் ஏறி வந்ததைக் கைக்கொண்டவர் என்று சொன்னவர்களைக் கேட்டு, நேரில் நானே சென்றறிகிறேன் என்று கிளம்பிச் சென்றேன். ஆயர்களே! நான் கேட்டதைச் சிறு புழுவாக்கினால் கண்டது பெருவேழம்..!”

2.
தூரத்தில் தெரிந்த துவாரகையின் வரவேற்பு வளைவைக் கண்டதும் சரபன் உடலில் பரபரப்பு ஏறியது. தென்னகக் காடுகளில் அவன் இணைந்து கொண்ட வணிகக் குழுவின் தலைவரிடம் அதை சுட்டிக் காட்டினான். குழுவில் இருந்த சில இளையோரும் அதைக் கண்டு விட்டிருந்தனர். அவர் புன்னகைத்து “ஆம்..! அது துவாரகையின் அழைப்புக் குரல். ஒவ்வொரு முறை வரும் போதும் அதைக் காண்கையில் நெருங்கி விட்டோம் என்ற நிறைவு வந்து சேர்கிறது.” என்றார். சரபன் அந்த வளைவையே நோக்கிக் கொண்டிருந்தான். அது வானிலிருந்து வைக்கப்பட்ட ஒரு பகடைக்காயாகத் தெரிந்தது. மூடவே முடியாத வாய். அதற்குள் மனிதர்களும் அவர்கள் விரட்டி வரும் அவர்களை விரட்டி வரும் செல்வக்குவைகளும் அக்னிக்குண்டத்திற்குள் சென்று கொண்டேயிருக்கும் அவிப்பொருட்கள் போல சென்று கொண்டேயிருப்பர் என்று மதுரையில் ஒரு சூதன் சொன்ன சொல்லை எண்ணிக் கொண்டான்.

”இனி நாம் நம் வழியில் நம்மைப் போன்ற வணிகக் குழுக்களையும் பார்க்கத் துவங்குவோம். தனித்து வந்த பின்பு புதிய முகங்களைப் பார்ப்பதென்பது ஓர் இனிமை” என்றார் தலைவர். இளையோன் ஒருவன் “அதில் பெண்களும் இருக்க நேரிடலாம்..” என்றான். சிலர் நகைத்தனர். தலைவர் “மாட்டார்கள். ஏனெனில் நம்மைப் போன்ற வணிகக் குழுவினர் மட்டுமே இத்தனை தொலைவில் வருவர். கூட பெண்களையும் அழைத்து வருவதென்பது அனைவருக்கும் சிரமம். மங்கையர் வீடுகளில் மட்டுமே இருக்க நாம் ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்குச் செல்வதற்காக ஈட்ட அலைந்து கொண்டேயிருப்போம். அதுவே நம் வாழ்வு..”என்றார்.

நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்த எறும்புகள் இழுத்துச் சென்ற புழு போன்ற பாதையில் முதலில் அவர்கள் ஒரு வணிகர் சத்திரத்தை அடைந்தனர். மேலே கருடக்கொடி மென் காற்றில் அசைந்து கொண்டிருந்தது. கொண்டு வந்திருந்த குதிரைகளைப் பின்புறம் தேங்கியிருந்த சுனையில் நீரருந்த விட்டு விட்டு, புரவியர்கள் உள்ளே புகுந்தனர். இன்னீரும் இஞ்சி போட்டுக் காய்ச்சிய மோரும் குடித்த பின்பு விழி குளிர்ந்த சரபன் முன்பே அங்கிருந்தவர்களைப் பார்த்தான். நகரில் வணிகம் முடித்துக் கிளம்பியவர்கள் ஒரு புறமும் நகருக்குச் செல்ல வேண்டியவர்கள் ஒருபுறமுமாக அமர்ந்திருந்தனர். அப்படி இருந்த ஒரு குழுவில் ஒருவன் மெளனமாக அமர்ந்து கொண்டிருக்க, பிறர் அனைவரும் தேங்கிய நீரில் பெய்யும் மழை எழுப்பும் சப்தம் போல் இடைவெளியின்றி பேசிக் கொண்டிருந்தனர். மெளனன் மீசை நுனியில் படிந்த மோர்ப்பிசிறுகள் காற்றில் அசைய தரையை நோக்கிக் கொண்டிருந்தான். சரபன் அவன் அணிந்திருந்த மஞ்சள் மேலாடையைக் கொண்டு அவன் ஒரு சூதன் என்றுணர்ந்தான். அவன் அருகில் சென்று அமர்ந்தான்.

“சொல்தேவி அருள் திகழட்டும்” என்றான்.

நிமிர்ந்த அவன் சரபனைக் கண்டு புன்னகைத்து “ஆம். அவள் அருள் திருமகளின் தேரில் அமர்ந்து திசை தேரட்டும்” என்றான்.

சரபன் “சூதரே! என் பெயர் சரபன். தென்னகத்தில் இருந்து வருகிறேன். நீங்கள் நகர் நீங்கிக் கொண்டிருக்கிறீர்கள் போலும்!” என்றான்.

“ஆம்..! கிளை விட்டுக் கிளை தாவும் குயில் போல ஒரு குழுவுடன் நகர் வந்தேன். இதோ, இக்குழுவுடன் நகர் நீங்குகிறேன். கண்டதையெல்லாம் சொல்லில் நிரப்பிக் கொண்டு, வர்ணம் பூசி அதைப் பொன்னாக்கிக் கூழாக்கித் திடம் பெற்றேன். சொல் சேர்த்தல், சொல் கோர்த்தல், உண்டி நிறைத்து பண்டி பெருத்தல் என்று இருந்தேன். இந்நகர் கொடுத்ததையெல்லாம் அதற்கே திருப்பிக் கொடுத்து விட்டு இப்போது மிஞ்சும் சொற்களை மட்டும் ஈட்டிக் கொண்டு அடுத்த நகர் போகிறேன்..!” என்றான்.

“நகர் விட்டு நகர் செல்லுதல் நம் போன்ற சூதருக்கு வாழ்வு. அதில் துயர் கொள்ள ஏதுமில்லை. ஒட்டிய ஆற்று மணலைத் தட்டி விட்டு எழுதல் போல. ஆனால் உம்மில் இன்னும் ஏதோ இருக்கின்றது. காலைப் பொன்னொளியில் மின்னும் இலைக்கு அடியே கருமை நிழல் போல. அதை இங்கு எவரும் உணரவில்லை என்பதாலேயே நீர் உறும் துயரம் இன்னும் இறுகியிருக்கின்றது என்பதை அறிகிறேன். என்னிடம் சொல்லலாமே?” என்று கேட்டான் சரபன்.

கண்களில் ஓடிய செவ்வரி நீரில் பளபளக்க அவன் துவாரகையை நோக்கி கை நீட்டினான். “இந்நகரம் பொன்னகரம். இங்கே பெருங்கடல் அலையோசை கேளா நொடியில்லை. அவ்வோசைக்கு நிகராகப் பெருங்குடியினரும் பேரழகியரும் பைந்தளிர்ப் பிள்ளைகளும் இரைச்சல் எழுப்புவர். அந்த செவி நிறைக்கும் சப்தங்களுக்கு அடியில் நான் கண்டது ஒரு அமைதி. பெரும் அழிவிற்குப் பின் மட்டுமே பிறந்து வருகின்ற நிசப்தம். அதை நான் கண்டு கொண்டேன். அதன் பின் நான் கண்டதெல்லாம் கேட்டதெல்லாம் அந்த செவியடைக்கும் மெளனத்திற்கு மேலுறை இட்ட ஒலிகளையே. ஒரு நாள் அந்த உறையைக் கிழித்துக் கொண்டு அது மேலெழும். படமெடுத்து நின்றாடும் அரசநாகத்தின் சினம் போல. அது நிகழும் என்பதை உறுதியாக உணர்ந்தேன். உடனே நகர் நீங்கினேன். யாரிடமும் சொல்ல முடியாது. ஆழிக்கு மேல் அலையடிக்கும் பெருங்காற்றுடன் விளையாடும் நீர்த்திவாலைகள் போல் இவர்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஆழியின் அடியில் கீழே நிறைந்திருக்கும் சப்தமின்மையை மேலே யாரும் கேளார். நீரும் சூதரே. நீர் நகர் நுழைந்ததும் அறிவீர் பேரொலிகளையும் பெரு மகிழ்வுகளையும் அவற்றின் கீழே பாதாளத்தில் நெளிந்து கொண்டிருக்கும் அமைதியையும். நலம் திகழட்டும்.” என்று சொல்லி விட்டு மீண்டும் அவன் தலை கவிழ்ந்தான். சரபன் திகைத்து அமர்ந்திருந்தான்.

“சூதரே வருகிறீரா?” என்று கேட்டபடி அருகில் வந்தான் இளையவன்.

“ஆம்..” என்று சொல்லிவிட்டு அந்தச் சூதனை வணங்கி விட்டு கிளம்பினான் சரபன்.

கோட்டை வாயிலுக்கு முன்பு வண்டிப்பாதைகளில் வணிகர் வண்டிகள் நிரையாக நின்றிருந்தன. அந்நிரையில் சேர்ந்து கொண்ட வணிகர் குழுவிடம் இருந்து சரபன் விடைபெற்றுக் கொண்டான். மூத்தவர் “சூதரே! சொல் ஒன்றை மட்டும் கொண்டு இங்கு நுழைகிறீர். அதற்கு ஈடாக நீர் புகழையும் பொன்னையும் மட்டுமே பெறுவீராக!” என்று வாழ்த்தினார். சரபன் வணங்கி விட்டு, கோட்டைக் காவலரிடம் சென்றான்.

“நான் தென்னகத்திலிருந்து வந்திருக்கும் சூதன். பெயர் சரபன். மேற்கின் மகுடமாகத் திகழும் இந்நகர் கண்டு அதைச் சொல்லில் வடித்து பாரதமெங்கும் நட்டு வைக்க விரும்பி வந்துள்ளேன்.” என்றான்.

தலைமைக் காவலர் அவனை வணங்கி கோட்டைக்கதவின் திட்டி வாசலைத் திறந்து விட்டான். சரபன் அவனை வணங்கி விட்டு, துவாரகையின் உள்ளே நுழைந்தான்.