
மற்றும் சில ஆசிரியப்பாக்கள்.
தாக மோமிகு; தவித்திடும் நாவிடம்
தண்ணிய நீரைக்கேட்
டாக வேண்டிய மொழியென மிரட்டியே
தமிழினைச் சொன்னால்செத்
தாக வேண்டிய நிலைவரும். பொருந்திய
தக்கநல் அயல்சொல்முத்
தாக எழுதிட, முறைத்திடும் சிலரினைத்
தவிர்த்திடும் விரையும்நாள்.
வானைப் பிளந்தது வெப்ப
வாசனை தீட்டிய அப்பம்.
கானை நனைத்தது மாலை
கழுவியக் கடுமிரா மேகம்.
மானைக் குறித்தது மதியம்
மாமிச உணவெனச் சிங்கம்.
ஏனைக் காட்சிகள் உண்டு
என்மடிக் கணிணியில் படமாய்!
நித்தம் கருவிழி எண்ணம்
நீங்கிடா நெஞ்சில் அடங்காச்
சத்தம் அலைபோல் எழும்பிச்
சகாரா மணலில் மணந்த
மொத்த மலர்களும் கட்டி
முடித்த பரிசினை வாங்கிக்
கொத்தாய்க் கொடுத்தேன், இதழில்
கன்னம் பதித்து இனிப்பாய்.
மேகம் திரண்ட மாலை
மின்னல் தெறித்த வேளை
மோகம் கிளர்ந்த போது
மேனி நடுங்கும் நேரம்
வேகம் கொண்ட மழைநீர்
வெப்பப் பகலில் படர்ந்துத்
தாகம் தணிக்கும் கூரைகீழ்த்
தானும் ததும்பும் காமம்.
சிறுசிறு துளிகள். சில்லென காற்று.
சின்னதாய் ஒருகுளம். மங்கை.
குறுகுறுப் பூட்டும் குதூகலப் புற்கள்.
குடையடிக் கீழமர்ந் தநாம்.
துறுதுறு கைகள் தடவிட, நரம்புத்
துடித்திடும் கிடாருடை மேனி
"பொறுபொறு" என்றாய். பூக்களை உதறிப்
பொழிந்திட, நனைத்தது மழைநீர்.