Friday, December 25, 2009

ஈரோடு சங்கமம் - 2K9 - Cooooool!



"நாப்பது ரூபா ஆகும் சார்..!"என்றார் அந்த ஆட்டோக்காரர். பயணிகளின் சீட்டில் சரிந்து படுத்திருந்தார். மஃப்டியில் தான் இருந்தார்.

நான் சவிதாவில் நின்று கொண்டிருந்தேன். மதியம் மயங்கி வானம் மாலையைக் கவ்விக் கொண்டிருந்த 15:40. ஞாயிறு பிற்பகல் என்பதால், பிரஃப் ரோட்டில் மூன்று சைக்கிள்கள், ஓர் ஆட்டோ, பி.எஸ்.பார்க்குக்குத் திரும்பிய '5' தவிர ஐந்து ஈக்கள், எட்டு காக்கைகள் இருந்தன. ஷட்டர்கள் வளைந்த வாசல்களில் கடைகள் இறுக்க மூடியிருந்தன.

"கலெக்டரேட் போக அவ்வளவு ஆகுமா..?" இந்தா, இங்கிருந்து நாலு எட்டு வைத்தால், எம்.ஜி.ஆர். சிலை. அவர் முகம் பார்க்கும் பெருந்துறை ரோட்டில் ஒரு இருபது எட்டு வைத்தால், வந்து விடுகின்றது ஆட்சியர் அலுவலகம்.

திரும்பியே பார்க்காமல் நடக்கத் தொடங்கினேன்.

சாம்பாரில் தூள் போல் மேகங்கள் விரவியிருந்தன. சாலை மத்தியின் கம்பங்களில் சரடுகளில் தலைவர்கள் தொங்கினர். செங்கல் பத்திரங்களுக்குள் மரங்கள். கண்ணாடிக் கடைகள், சர்பத் ஸ்டால், மட்டன் ஷாப், மருந்துக் கடை, காலியாக இருந்த ஆட்டோ ஸ்டாண்ட். வெட்டிய பிரிவில் வளைந்து, சிவப்பு வட்டம் நிறுத்தியிருந்த டீசல் வாகனங்களுக்குள் புகுந்து பெருந்துறை ரோட்டைப் பிடித்தேன்.

மே.எம்.சி.ஹெச். கிளை போர்டு பெரிதாய்த் தெரிந்தது; இரவில் எரியும். சாலைத் தடுப்பின் கம்பிகளில் ஜூவல்லர்ஸ் விளம்பரங்கள். கீழே ஒதுக்கிய மணல் சிறு குன்றுகள். குப்பைகள். ஸ்கூட்டியில் 'U' அடித்த பெண்ணுக்கு வயது பத்தா..? எதிர்த்த ஆட்டோவில் கிரைண்டரை மனைவி போல் கட்டிக் கொண்டு ஒருவர் போனார். சைக்கிள் கேரியரில் பேட் செருகிப் பறந்த சிறுவன் சட்டையில் மூன்று பட்டன்கள் திறந்திருந்தன. டீ ஸ்டால் வாசலில் கண்ணாடிகள் ஏற்றிய ஸ்கார்பியோ நின்றிருந்தது. தூரத்தில் 'தீரன் சின்னமலை மாளிகை' பொடிமாஸ் எழுத்துக்களில் தெரிந்தது. பொதுப்பணித் துறை அலுவலகமான காலிங்கராயன் இல்லத்தில் 'அனுமதி இல்லாமல் யாரும் வரக் கூடாது' போர்டின் கீழ் ஒரு சட்டை கிழிந்த பைத்தியக்காரன் படுத்திருந்தான். அவன் தாடி மேல் ஓர் பூச்சி ஊர்ந்தது. ஷேர் ஆட்டோ ஒன்று கடந்து லேசாகத் தயங்கிப் பின் விரைந்தது. கத்திரிப்பூ நிறத்தில் ஒரு மாருதியின் பின் கண்ணாடியில், 'Santhosh','Shalini' காமிக் சான்ஸ் முறையில் ஒட்டியிருக்க, ஜன்னலில் முன்னங்கால்களைத் தொங்க விட்டு புஸுபுஸு நாய்க்குட்டி எட்டிப் பார்த்தது.

ரண்டாவது வளைவு திரும்பியதும், லோட்டஸ் ஷாப்பிங் ஷோரூம் தெரிந்தது. மூடப்பட்டிருந்தது. ஒட்டி ஒரு சந்து போனது. அதன் நுழைவாயிலில் இருந்து பார்த்தால், கடைசி முனையில் ஈரோடு பதிவர்கள் சங்கமம் எம்ப்ளம் காற்றில் கலைய, நோக்கி நடந்தேன். அங்கிருந்து எவ்வித அம்புக்குறியோ, டேக் டைவர்ஷனோ இல்லாததால், ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்ட ஓர் எதிர் அரங்கத்தில் தான் சங்கமமாகிறார்கள் போலிருக்கிறது என்று நினைத்தேன்.

நல்லவேளை, கொஞ்சம் பேர் நின்று கொண்டிருந்த மற்றொரு கட்டிடத்தில், 'The Builder Association of India' என்ற மெட்டல் போர்டு தெரிய அங்கு சென்றேன்.

மாடத்தில் நின்ற பதிவர்களுக்கு நிச்சயமாய் என்னைத் தெரிந்திருக்காது. 'யாரோ ஓர் ஆசாமி வெளியூரில் இருந்து வருகிறான் போலிருக்கிறது.' என்று ஒரு ஷார்ட் டெர்ம் விரோதப் பார்வை பார்த்தார்கள். நானும் நிகழ்வை முடித்து விட்டு அப்படியே அனந்தபுரம் ரயில் பிடிப்பதாக இருந்ததால், ஒரு துணி மூட்டை முதுகில் சுமந்திருந்தேன். நானும் அவர்களை பதிலுக்கு சந்தேகப் பார்வை பார்த்து விட்டே, மரக்கதவைத் திறந்து ஏ.ஸி. அறைக்குள் சென்றால், ஏ.ஸி.இல்லை.

வழக்கம் போல் கடைசி வரிசைக்கு போய் ஓர் ஓரமாய் ஒதுங்கி உட்கார்ந்து கொள்ளலாம்; கூப்பிடும் போது போய் எழுதிக்கொண்டு வந்ததை ஒப்பித்து விட்டு வந்து விடலாம் என்று கடை வரிசையில் மூட்டையைச் சாத்தினேன். உப்புசமாக இருந்தது. சும்மாவா, ஒன்றரை மைல் இதோ இந்த லேப்டாப்பையும், வீட்டுச் சாப்பாட்டு உடம்பையும் தூக்கிக் கொண்டு வந்ததில் வேர்த்தது. வெளியே சென்று காத்தாட நிற்க வெளிச் சென்றால், ஒரு வண்டி வந்தது.

புத்தகங்கள் இறக்கினார்கள். நானும் 'உபசரிப்புக் குழுவில்' இருக்கும் ஒருவன் என்பதைக் காட்டிக் கொள்வதற்காக, ஒரு கட்டு புத்தகங்களை ஆம்னியிலிருந்து எடுத்து வைக்கும் போது, பெயர் பார்த்தால், 'ஈரோடு மாவட்ட வரலாறு' என்றிருந்தது. அட்டையில் தந்தை பெரியார், ம.செ. வரைந்த தீரன் சின்னமலை, பவானிசாகர் அணை மற்றும் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் ஆலயக்கோபுரம் (ஹைய்யா! நம்ம ஊரு!) கண்டதும் மகிழ்ச்சி வந்தது.

கொஞ்சம் கொஞ்சமாகப் பதிவர்கள் வந்தனர். தெரிந்தவர்கள் கட்டிக் கொள்ள, சிரித்துப் பேசிக் கொள்ள, எப்போதும் போல் கூச்ச சுபாவியான நான், ஒரு திட்டில் உட்கார்ந்து கொண்டு எப்போதும் போல் எல்லோரையும் கவனிக்கத் தொடங்கினேன்.

கதிர் வந்தார். கூட்டத்தில் கரைந்தார். சட்டையில் குத்திக் கொள்ள பெயர்ப் பேப்பர் தந்தார். தங்க பின்னூக்கு. குத்திக் கொண்டேன். நவீன மாட்டு மடி போல் திருகியதும், டேப்பில் டீ சுரந்தது. டிஸ்போஸ்பிள் தம்ளரில் பிடித்துக் குடித்தோம். புகைப்படக் கலைஞர் நந்து மாடத்தில் எல்லோரையும் தெலுங்கு வில்லன்கள் போல் கைதூக்கி நிற்க வைத்துப் படம் பிடித்தார். ஒரு போட்டோகிராபர் BAI போர்டைப் படம் பிடிக்க என்னை நகரச் சொல்ல, நான் என்னைத் தான் படம் பிடிக்க விரும்புகிறார் என்று இன்னும் கெத்தாய் அதை மறைக்க, அவர் தலையில் அடித்துக் கொண்டார். (யோவ்..! நகருய்யா அந்தாண்ட..!)

வேறொரு வேனில் திருப்பூர்ப் பதிவர்கள் வந்தார்கள். யாரிடமோ நான் கேட்க, 'ஆமாம்..! வால்பையன் மட்டையாகி விட்டார் தான்!' என்றார். நந்துவிடம் 'நிலா ஏன் வரவில்லை?' என்று கேட்டதற்கு, குழந்தைதனமான காரணம் சொன்னார். அவருடன் பேசும் போது, ஒரு பதிவர் வந்து, 'நீங்கள் கொங்கு வாசலில் எழுதும் வசந்தா..?' என்று கேட்டார். '..லிலும் எழுதுகிறேன்..' என்றேன். 'நீங்கள் எந்த வசந்த்..?' வினவினார் வேறொருவர். 'சாதா வசந்த் தான்..!' பதிலுறுத்தேன். டீ குடித்தேன்.

'தமிழ்மணம்' காசி ஆறுமுகம், லதானந்த் போன்ற பெரியவர்கள் வந்தனர். கை கொடுத்துத் திருப்பி வாங்கிக் கொண்டேன்.

பழமைபேசி தன் ப்ளாக்கர் ப்ரொஃபைலிலிருந்து நேரடியாக வந்திருந்தார்.

கல்வெட்டாளர் செ.இராசு அவர்கள் எழுதிய புத்தகங்களை டேபிளில் அடுக்கும் போது, ஆரூரன் அவர்களிடம் 'வானம் கறுத்து கனமாய் எப்போது வேண்டுமானாலும் அழத் தயாராய் இருக்கிறது' என்று சொன்னதை மதித்து, வேறு பக்கமாய் வைத்துக் கொண்டார். ஆயிரம் ரூபாய் கொடுத்தது தவிர ஈரோடு வலைப்பதிவர் சங்கமத்திற்கு என்னுடைய மூன்றாவது பங்களிப்பு இது என்பதை, ஏ.ஸி. இருந்தும் இல்லாததுமான ஹாலுக்குள்ளே வெட்டிப் பேச்சு, அதாவது அனானிகள் பற்றிய சூடான பேச்சு நடந்து கொண்டிருந்த போது வெளியே மழை கொட்டியதே உறுதிப்படுத்தியது.

அனைவரும் டீ குடித்து முடித்ததும், சரியாக நான்கு மணிக்குத் துவங்குவதாக இருந்த சங்கமம் நிகழ்வு, சற்று அரைவட்டம் சரிந்து நான்கு இருபதுக்குத் துவங்கியது.

கதிர் மேடையில் அமர்பவர்களைக் கூப்பிட்ட போது, என்னையும் கூப்பிட்டு விட்டார். கொஞ்சம் பேர் சோகையாகக் கைதட்டினார்கள். பாக்கெட்டில் எழுதி வைத்த காகிதத்தைத் தொட்டுப் பார்த்து அதன் இருப்பை உறுதி செய்து கொண்டு, ஜிப் எல்லாம் சரியாகப் போட்டிருக்கிறேனா என்று பார்த்துக் கொண்டு (அதாவது தலை குனிந்து) முன் வரிசையில் ஒரு ஸீட் காலியாக இருந்தாலும், பின் வரிசைச் சீட்டில் உட்கார்ந்து கொண்டேன். பக்கத்தில் 'செந்திலின் பக்கங்கள்'.

அமீரகத்தில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் பூசியே குளிப்பார் போலிருந்தது. செவப்புன்னா செவப்பு அப்படி ஒரு செவப்பு. போதாக்குறைக்கு மஞ்சள் சட்டை வேறு அணிந்திருந்தார். கொஞ்சம் தள்ளியே உட்கார்ந்து கொண்டேன். இடது பக்கம் ஒரு சீட் காலி விட்டு, பதிவர் ரம்யா மற்றும் கடைசியாகப் பதிவர் சுமஜ்லா.

முன் வரிசையில் பதிவர் 'வலைச்சரம்' சீனா அவர்கள், கல்வெட்டாளர் செ.இராசு அவர்கள், பதிவர் ஆரூரன், தமிழ்மணம் காசி மற்றும் பழமைபேசி.

கதிர் எல்லோரையும் வரவேற்று விட்டு, ஆரூரன் தலைமையேற்று நடத்துவார் என்று சொல்லி விட்டு கீழேயே முன் குழுமத்தில் உட்கார்ந்து கொண்டார். அதை யாராவது முன் மொழிந்தால், நான் வழிமொழிவதற்குத் தயாராகத் தான் இருந்தேன். ஆனால் யாரும் முன் வராததால், நானும் வழி வரவில்லை.

அரூரன் எழுந்து முதலில் தமிழ் வாழ்த்துப் பாட அழைக்க, ஓர் அம்மணி வந்து மைக் பிடித்தார். 'நீராரும் கடலுடுக்க' நினைத்தால், அவர் வேறு ஒரு பாடலைப் பாடினார். கட்டுடைப்பு அப்போதே துவங்கி விட்டது. (பின் வால்பையன் தொடர்ந்தார்!) எல்லோரும் எழுந்து நின்று என்னவோ 'பாவம் போல்' தலை குனிந்து நின்றதைப் பார்த்தால், the so called தமிழன்னை மனம் வருந்தியிருப்பாள்.

நன்றாகவே பாடினார் அவர். முடிந்து எல்லோரும் அமர்ந்த பின், ஆரூரன் தலைமை உரை பேசினார். காலிங்கராயன் வாய்க்கால் பற்றியும், அந்த மன்னரைப் பற்றியும் பேசி விட்டு, அந்தக் காலத்தில் பதிவுகள் இல்லாததால், அவர் பெயர் Calling-கரையான் என்றாகி விட்டதால், எல்லோரும் அன்றாட வாழ்க்கையைப் பதிவு செய்வதன் மூலம் 'வரலாறு மிக முக்கியம் அமைச்சரே' என்று அறிவுறுத்தினார்.

பிறகு ஒவ்வொருவரையும் ஒரிஜினல் தலைப் பெயரையும், வலைப் பெயரையும், தத்தம் வலை முகவரியையும் சொன்னார்கள். தலைக்குத் தலை காமிரா காட்டி வீடியோவில் விழுங்கிக் கொண்டார்கள். நானும் அவசரமாக எழுந்து யாருக்கும் தெரிந்து விடக் கூடாதே என்பதே லட்சியம் போல், கடகடவெனச் சொல்லி விட்டு உட்கார்ந்தேன்.

பிறகு ஈரோடு பதிவர்களின் கருத்துக்களில் முதலாவதாக என்னைக் கூப்பிட்டு விட, மடித்து வைத்திருந்த சீட்டை எடுத்து, அத்தனை வோல்டேஜ் சாப்பிடும் ஃப்ளாஷ்ஷின் போட்டான்கள் மேலே பாய மைக் முகத்தில் 'வணக்கம்' சொன்னால், அது இருமியது. ஒருவர் பின்னால் ஆம்ப்ளிஃபயரைத் திருகி விட்டுத் தலையாட்ட, 'மற்றொரு வணக்கம்' என்றேன். இன்னும் சீராகவில்லை.திரும்பிப் பார்த்தேன். கொஞ்சம் குமிழ்களைச் சுற்றினார். சரி செய்து விட்ட நம்பிக்கையில், உற்சாகமாய் 'இன்னொரு முறை சொல்லுங்க' என்றார். 'கடைசியாய் ஒரு வணக்கம்' என்றேன். சக்ஸஸ்.

மேடைப் பயம் வருமோ என்ற கவலை இருந்தது. சுத்தமாக இல்லை. அவ்வப்போது எழுதி வைத்துப் படித்ததன் இடையில் உடனே தோன்றியதையும் சொன்னேன். பாரதியைப் பற்றிய ஆசிரியப்பாவைப் படித்து முடித்த போது எல்லோருக்கும் பிடித்திருந்தது போல் தெரிந்தது. நிறைய கைதட்டல்கள் கேட்டன. காரணம், அந்தக் கடைசி வரி அதிர்ச்சியில் இருக்கின்றது. இடையே வால் இரண்டு கேள்விகள் கேட்டார். அவரைப் பற்றி ஏற்கனவே தெரிந்திருந்த காரணத்தால், எனக்கு அவரது குறுக்கீடுகள் எவ்வித உணர்வையும் தரவில்லை. சிலர் பொது வெளியில் நடந்து கொள்ளும் முறையை மீறி விட்டார் என்கிறார்கள்; சிலர் நிகழ்ச்சியைக் கலகலப்பாக்கினார் என்றார்கள். அவை அவரவர் ஃபீலிங்; மொத்த அவையின் அல்ல.

கரெக்டாக நான் பேசி முடித்து அரை நிமிடத்தில் என் அம்மா வந்தார்கள். மகன் பேசியதை மிஸ் செய்து விட்டார்கள். வீடியோ இருக்கின்றது என்று சொல்லி இருக்கிறேன்.

பதிவர் சீனா அவர்கள் வாசகர்களின் எதிர்பார்ப்பையும், பதிவர்களின் எதிர்பார்ப்பையும் பற்றி அவர் வீட்டம்மா எழுதிக் கொடுத்தது என்று ஒப்புக் கொண்டு படித்துப் பேசினார்.

பதிவர் சுமஜ்லா, பதிவுகளை அழகாகவும், நிறைய விட்ஜெட்டுகளையும் இணைத்து பதிவின் பக்கங்களைச் செம்மைப்படுத்துவது எப்படி என்று நிறைய பேச நினைத்திருந்தாலும், காலம் ஐந்து நிமிடங்களே கொடுக்கப்பட்டதால், சுருக்கமாகச் சொல்வதாகச் சொன்னார்.

பழமைபேசி 'சுருக்'காகப் பேசி, நறுக்காக முடித்தார். அவர் பேச்சில் அயல்தேசப் பனி படர்ந்திருந்தது. கொஞ்சம் கொங்கும் மணந்தது.

உலகத் திரைப்படங்கள் பற்றிப் பேசிய வண்ணத்துப்பூச்சி சூர்யா, 'வேட்டைக்காரன்' ரிலீஸைப் புயல் என வர்ணித்தது வருத்தம் தந்தது. புயலாவது வருவதாகப் பயம் காட்டி, பிறகு ஆந்திராவுக்கோ, ஒரிஸாவுக்கோ திசை மாறி விடும்.

செந்தில்வேலன் விக்கியில் தமிழ்க் கட்டுரைகளின் போதாமையைப் பின்னிஷ் மொழிக் கட்டுரைகளின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டு வருந்தினார். அமீரகத்தில் நடந்த கணிணிப் பயிலரங்கம் பற்றிச் சொன்னார்.

மதியமே ஈரோடு வந்து விட்ட சென்னைப் பதிவர்கள் சங்கம நிகழ்வுக்கு வந்த போது, மணி நாலரையைத் தாண்டி விட்டது.

பதிவர் ரம்யா அவர்கள் சமூகத்தில் நமக்கு என்ன பங்கு என்று பேசினார். நன்றாகவே இருந்தது. (இப்படிச் சொன்னால் இப்போது எதுவும் ஞாபகம் இல்லை என்று அர்த்தம்!)

கதவைத் திறந்து 'அகநாழிகை' வாசுதேவன் வந்த போது,அவர் பெயரைக் கூப்பிட்டு விட, வலைப்பதிவு எழுத்தாளர்கள் அச்சு ஊடகத்திற்கு வர வேண்டும் என்று வரவேற்றார்.

சிறப்பு உரையாற்றிய கல்வெட்டாளர் செ.இராசு அவர்கள் வலைப்பதிவு எழுதுவதால், இவற்றை எழுத வேண்டிய பேப்பர்கள் மிச்சமாகி மரங்கள் காப்பாற்றப்படுகின்றன என்றார். கோபன் ஹேகனில் 'அவர்கள்' அடித்துக் கொண்டதை விட, ஈரோடு சங்கமத்தில் இயற்கையைக் கொஞ்சம் காப்பாற்றி விட்டோம் என்று பெருமிதம் அடைந்தேன். அவரது 'ஈரோடு மாவட்ட வரலாறு' நூலை ஊருக்குப் போகும் போது படித்தேன். நிறைய தகவல்களோடும், கொஞ்சம் சுவாரஸ்யமாகவும் இருந்தது.

'தமிழ்மணம்' காசி, வலைப்பதிவின் அவசியத்தை ஆட்சியாளர்களும் கூட இப்போது உணரத் தலைப்பட்டு விட்டார்கள் என்பதால் உஷாராக இருக்கவும் என்றார். நாமக்கல்லில் அன்று காலையில் ஆட்சியருடன் சென்று கிராம மக்கள் வலைப்பதிவு மூலம் எப்படி அரசு நிர்வாகத்தைத் தொடர்பு கொள்வது என்பதைப் பற்றி விளக்கம் கொடுத்ததாகச் சொல்ல, ஒரிச்சேரிப் புதூர் கருப்புசாமி, கட்டற்ற சுதந்திரத்தின் இணையத்தைக் கையில் கொடுத்து, 'எதை வேண்டுமானாலும் தேடலாம்; கிடைக்கும்' என்று சொல்லி விட்டு ஒதுங்கினால், எதை முதலில் தேடுவான் என்று யோசித்துப் பார்த்தேன்.

பிறகு நிறைய பதிவர்கள், 'ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்' என்று அச்சடித்த துணியின் காதுகளையும் கால்களையும் பிடித்துக் கொள்ள, 'க்ளிக்'குகள் சாட்சியாக, குழுமம் துவக்கப்பட்டு விட்டதை அறிவித்தார்கள்.

நான் சென்று வால்பையன் அருகில் அமர்ந்து கொள்ள,கலந்துரையாடல் துவங்கியது.

அனானி பற்றிய கேள்விகள் தாறுமாறாகப் பாய்ந்தன. ஓர் ஓரமாக உட்கார்ந்து அனானியும் கேட்டுக் கொண்டிருந்தால், மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்ற அளவில் அரை மணிக்கும் மேலாக அவரைப் பற்றியே பேசிக் கொண்டிருந்ததில், உண்மையில் 'பிரபல' பதிவர் அவராகத் தான் இருக்குமோ என்ற ஐயம் வந்தது.

கருத்துச் சுதந்திரம் பற்றிக் வருத்தப்பட்டோம்; உளவுத் துறையால் நாம் கவனிக்கப்படுகிறோம் என்று கிலியூட்டப்பட்டதும், 'ஏன் அவர்கள் கமெண்ட் போடுவதில்லை?' என்ற நியாயமான கவலைப்பட்டோம்; வலைப்பதிவு எழுதி மட்டுமே பிழைத்துக் கொண்டிருக்கும் சில அதிர்ஷ்டசாலிகளைப் பற்றிப் பேசி ரகசியப் பெருமூச்சு விட்டோம்; வலைப்பதிவுகளைப் ப்ராடெக்ட் அனலிசிஸ் பண்ணும் ஒரு கருவியாகப் பாவிப்பதாகச் சொல்லி, அதனால் ப்ளாக் படிப்பதே தமக்கு வேலை என்று ஒருவர் சொல்ல, அவரிடம் 'ஓபனிங் இருக்கா..?' என்று சிலர் கேட்டோம்;

வால்பையன் ஒவ்வொருவரின் பேச்சுக்கு நடுவிலும் இடையே புகுந்து தன் கருத்தைச் சொல்ல முயன்றார். பிறரால் அது ஒரு மாதிரிக் 'காசியில் பிராமணனை வெட்டிய பாவம்' போல் பார்க்கப்பட்டது. வலைப்பதிவில் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் வேட்டைக்காரனை வேட்டையாடுபவர்கள், நிஜ வெளிக்கு வந்தவுடன், சமூகம் எதிர்பார்க்கின்ற படி தான் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது :).

நன்றியுரையில் கதிர் எல்லோருக்கும் - வந்த பதிவர்கள், வராத நல்லவர்கள், கொஞ்ச வாசகர்கள், தொலைதூரத்தில் இருந்து வாழ்த்தியவர்கள், ..த்தியதுடன் பைசாவும் அனுப்பியவர்கள், தமிழ்மணம் முகப்பில் வைத்திருந்தது, ஹால் கொடுத்த கட்டிட சங்கத்தினர், வீடியோ பிடித்த பவானிக்காரர்கள் - எல்லோருக்கும் நன்றி சொன்னார்.

தேசிய கீதம் பாடும் எண்ணமே யாருக்கும் வராமல், உணவுக் கூடத்தை வெற்றி கொள்ள விரைந்தேன். அங்கங்கே முடிச்சு முடிச்சாய் நின்று பேசிக் கொள்ள ஆரம்பிக்க, நானும் அம்மாவும் சாப்பாட்டுக்குச் சென்று அசைவம் பகுதியில் உண்டோம். கே.எஸ்.ஆரில் பணிபுரியும் இருவர் பதிவர்களாய் அறிமுகம் செய்து கொண்டு பேசி விடை பெறும்போது நண்பர்களாகிப் போயினர். முனைவர் இரா.குணசீலன் அவர்கள் இளமையாய் இருந்து, அவர் மட்டும் முடிந்த அளவுக்குத் தூய தமிழ் பேச, அசைவத் தமிழ் பேசினேன். மதுரை ஸ்ரீ, கார்த்திகைப் பாண்டியன் ஆகியோரிடமும் பேசினேன். அஸ்ஸாம் ஆர்மிக்காரர் விட்டலன் அவரது கவிதைத் தொகுப்பைக் கொடுத்தார். சுவையான டிட்பிட்ஸ் அவற்றின் சில பக்கங்களில் கிடைத்தன. வாழ்த்துக்கள் இராணுவக் கவிஞரே!

உபசரிப்புக் குழுவின் அடிப்படையாகப் பைசா கொடுத்து விட்டு, கதிரிடமும், வால்பையனிடமும் விடை பெற்று விட்டுக் கிளம்பினோம்.

பஸ்ஸே வரவில்லை. இருபது நிமிடங்கள் கழித்து வந்த ஓர் ஆட்டோவில் முப்பத்தைந்து ரூபாய்க்கு ஈரோடு ஜங்ஷன் சென்றால், கூட்டமே இல்லாத, ஆச்சரிய ஞாயிறு இரவு அது. பதிலுக்குச் சென்னையிலிருந்தே மாலை போட்ட அன்பர்களை நிரப்பி அனந்தபுரம் வாரச் சிறப்பு ரயில் வந்தது. அம்மா வீட்டுக்குக் கிளம்பி விட்டார்கள்.

ரயிலின் முன்பு மூன்று ஜெனரல் கோச்சுகளைச் சேர்த்தவர்கள், கடைசியில் வைத்திருந்தது ஒன்றே ஒன்று தான். வழக்கம் போல் அடித்துப் பிடித்து ஏறி, சிங்கிள் விண்டோ சீட்டில் கிடைத்த தக்கிணியூண்டு இடத்தில் உட்கார்ந்து 'ஈரோடு மாவட்ட வரலாற்றை'ப் பிரித்தால், எதிரில் தொங்கியவாறு உட்கார்ந்திருந்தவர் 'நிங்ஙள் வஸந்த்குமார் தன்னே..?' என்றார்.

'அதே' என்றேன். மலையாளிகள் வரை என் எழுத்துப் பரவியிருப்பது பெருமகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் கொடுத்தது.

'நிங்ஙள் எங்ஙனம் எண்ட பேர் அறிஞ்சது..?' என்று சோதித்தேன்.

'ஒண்ணுமில்லா..! நிங்ஙள் பாக்கெட் சீட் பறஞ்சுது..! எனிக்கு கொறச்சு தமிழ் படிக்கான் அறியும்' என்று காட்டினார்.

அப்போது தான் கவனித்தேன். டீ-ஷர்ட் பாக்கெட்டில் தங்கப் பின்னூக்கில் குத்தியிருந்த 'ஈரோடு தமிழ்ப் பதிவர்கள் சங்கமம் - உபசரிப்புக் குழு' கார்டை கழட்டாமல் வைத்திருந்தேன்.

'ஆரானு க்ரூப் அது..?' என்று கேட்டார்.

'எண்ட க்ரூப்பாக்கும்..!' என்று சொன்னேன். அதில் ஏதோ ஒரு சந்தோஷம் இருந்தது.

ரயில் வேகம் எடுத்துப் பாய்ந்தது.

Wednesday, December 23, 2009

உருகி ஊற்றட்டும்.



ந்தச் சிவந்த ரோஜாக்கள், பறக்கின்ற தேவதைகளாகி, அழகின் வருகையை அறிவிக்கட்டும். கூரிய அம்பெனப் பரந்து நிரப்பும் கதிர்க் கூச்சல்கள், தாயைப் போல் இந்த பூமியைத் தழுவட்டும். பொழிகின்ற பனித்துளிகள், எப்போதுமான பச்சையைக் காலையின் இலைகளிலிருந்து கழுவட்டும். யுக, யுகங்களாய் நிமிர்ந்து நிற்கின்ற மாமலைகள் சத்தியத்தின் பழமையைச் சொல்லட்டும். நுரை ததும்ப ஓடும் பெருநதிகள், இயற்கையின் என்றும் நில்லா இயக்கத்தை விளம்பட்டும்.

அந்தரத்தில் மிதக்கின்ற கருங்கொண்டல்கள் நம் எல்லோருக்குமான தாகத்தைச் சுமக்கட்டும். கோடானு கோடி வைரப் பூச்சிகளால் நிறைந்திருக்கும் இரவு ஆகாயமே, பாதரசக் துளிகளைச் சொட்டிச் சொட்டி ஊசிக் குளிரால் துளைக்கட்டும். வெள்ளித் தகடுகளாய்ச் சரியும் வெயில் பாளங்கள் , முத்தெனத் துளிர்க்கும் மெல்லிய முடிகள் வருடும் சிறு செடிகளைக் குடிக்கட்டும். ரகசியமாய் நனைகின்ற கடுமழைக் காலங்களில் கவிந்த இருள் காடுகளின் பேரமைதியைச் சில்வண்டுகளின் ரீங்காரங்கள் சுவைக்கட்டும்.

பெருத்த மெளனம் பூசிய பிரபஞ்சத்தின் மற்றொரு மூலையில் ஓர் இராக்காலக் குயில் சோகத்தைச் செருகிய ஒற்றைக் குரலில் கூவும் போது, மதுரமான ஒரு மாலையின் பொன் கீதம் என்னில் படர்ந்து பருகும் போதும், உருகி ஊற்றட்டும் என் உடல்.

Monday, December 21, 2009

ஈரோடு சங்கமத்தில் பேசிய உரை.

நேற்று நடந்த ஈரோடு தமிழ்ப் பதிவர்கள் சங்கமத்தில் பேசிய
பேச்சு. முழுக்க முழுக்க இங்கு இருப்பது போல் பேசவில்லை. எனினும் நிறைய இதில் இருப்பவை தாம்.

கதையெழுதி.

இது ஓர் அழகிய இனிய மாலை.

தமிழின் பெயரால் இணையத்தில் எழுதும், வாசிக்கும் சிலர் இங்கே குளிர் சிதறும் அரங்கத்தில் குழுமியிருக்கிறோம். எனக்கு முன்னால், பக்கத்தில், பின்னால் அமர்ந்திருக்கும் உங்களில் பலர் வலைத்தளங்களில், வலைப்பூக்களில் அழகாக, ஆழமாக, இயல்பாக, ஈரமாக எழுதுபவர்கள். உங்களுக்கு 'கதையெழுதுதலைப்' பற்றிச் சொல்வதற்கு எனக்கு தயக்கம் இருக்கிறது. ஆயினும் ஈரோட்டிலிருந்து கிளம்பிய வலைப்பதிவர்களில் ஒருவன் என்ற சிறு சலுகையைப் பய்ன்படுத்தி, என் மீச்சிறு அனுபவங்களைப் பகிர்வதில் உவப்புறுகிறேன்.

கதையெழுதுவதில் பல வகைகள். கவிதை, சிறுகதை, குறுநாவல், நாவல் என. இங்கே சிறுகதை என்பதை மட்டும் பேச விரும்புகிறேன். அது மேற்சொன்ன வரிசையில் கவிதைக்கும், குறுநாவலுக்கும் இடையே கொஞ்சம் சொகுசாக அமர்ந்திருக்கின்றது. என் அனுபவத்தில், சிறுகதை என்பது ஒரு குறிப்பிட்ட உணர்வை வாசகர்களுக்கு ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டு வரிசையாகக் கோர்க்கப்படும் சம்பவங்களின் சீரான தொகுப்பு.

கவிதை என்பது நேரடியாக இதுதான் என்று சுருக்கமாகச் சொல்லிவிடுவது. நாவலில் மெதுவாக வாசகரைத் தயார்படுத்திக் கூட்டிச் சென்று முடிவில் ஆழ்த்தலாம். சிறுகதை இரண்டுக்கும் இடையில். நிறைய சமயம் இல்லை, அதற்கு! ஆரம்பத்திலேயே படிப்பவரைக் கவ்விச் சென்று,கடைசியில் தொப்பென்று போட்டு விட வேண்டும். எனவே பெரும்பாலான சிறுகதை எழுத்தாளர்கள் 'ஆரம்ப வரியிலேயே கதையைத் துவக்கி விடு' என்கிறார்கள்.

சிறுகதைக்கான கருவை எங்கிருந்து பெறுவது? எங்கிருந்தும்! ஒருமுறை திருவனந்தபுரத்தில் இருந்து மதுரைக்கு அனந்தபுரி எக்ஸ்ப்ரஸில் சென்றேன். நெல்லை தாண்டி மாலை ஆறு இருக்கும். மணியாச்சி என்று நினைக்கிறேன். அங்கே நின்ற போது ஒரு கிழவர் ஏறினார். தலை முழுக்க வெள்ளி நார்; உடல் முழுக்கச் சுருக்கங்கள். காதுகளில் முடி. சட்டையைச் சுருட்டி விட்டிருந்தார். பழுப்பேறிய வேட்டி. இவர் போன்ற கிழவர்களை, நாம் அவ்வப்போதைய எப்போதாவதுகளில் சந்திக்கிறோம். இவர் கொஞ்சம் வித்தியாசமாய் இருந்தார். அவர் கைகளில் ஒரு நார்ப்பை இருந்தது. அதில் இட்லி, பூரிப் பொட்டலங்கள் இருந்தன. ஒவ்வொருவராய்க் கேட்டுக் கொண்டே வந்தார். அவர் கைகள் நடுங்கிக் கொண்டேயிருந்தன.

அவரைக் கவனித்த போது, மனதில் ஒரே ஒரு கேள்வி ஒலிக்கத் தொடங்கியது. 'இந்த வயதில் இவருக்கு ஏன் இந்த நிலைமை?' அவரைக் கேட்கவில்லை. அந்தக் கேள்வி வைக்கோல் போருக்குள் ஒளிந்து கொண்ட மின்மினியைப் போல் எங்கோ உள்ளுக்குள் மின்னிக் கொண்டே இருந்தது.

உரையாடல் அமைப்பினர் சிறுகதைப் போட்டி நடத்திய போது, அந்தக் கிழவர் மேலே எழும்பி வந்தார். அவர் கண்களில் இருந்த வெறுமையை என்னால் மறக்க முடியவில்லை.

'இவருக்கு இந்த வயதில் ஏன் இந்த நிலைமை?' என்ற கேள்விக்கு நானாகவே ஒரு பதிலைத் தேடினேன். இத்தனை வருட வாழ்க்கையில் ஒரு விடையை உருவாக்க முடிந்தது.

மணியாச்சிக் கிழவரை பெங்களூருக்கு மாற்றினேன்; அனந்தபுரி எக்ஸ்ப்ரஸ், சேலம் மெயில் ஆனது. மதுரைக்குச் செல்லும் தனியான மென்பொருளன் நான், கன்னடக் கிறித்துவப் பெண்ணைக் காதல் செய்து, மணம் செய்து, 'டெய்ஸி' என்ற ஒரு வயதுக் குழந்தை பெற்று, கொஞ்சம் சலிப்பு ஏற்படத் துவங்கிய இளம் தகப்பன் 'ராகவன்' ஆனேன்.

இத்தகைய ஸ்தல, கால, பொருள் மாற்றங்கள் அவசியத் தேவை என்கிறார்கள். இல்லாவிடில் வக்கில் நோட்டீஸ் போன்ற உபத்திரவங்கள் வரலாம் என்று பயமுறுத்துகிறார்கள். அந்தக் கதை சிறப்பாக வந்தது; பரிசும் கிடைத்தது.

கதை எழுதுவதில் மற்றோர் அல்ப சந்தோஷம், கூடு விட்டுக் கூடு பாய்தல். இந்த குறுகிய வாழ்க்கையில் நம் எல்லைகள் தீர்மானிக்கப்பட்டு விட்டன. உதாரணமாக இனி என்னால் என் ஏழாம் வகுப்புக்குச் சென்று தெற்றுப்பல் இருந்த ஒரு சக மாணவனைப் 'பல்லன்' என்று கேலி செய்து நட்பைத் தொலைத்ததை அழிக்க முடியாது. ஆனால் ஒரு கதையில் அவனாக மாறி என்னை நானே அவனாய் மன்னித்துக் கொள்ள முடியும்.

ஓர் எலியாக மாறி பூனைத் தொந்தரவுகளை எழுத முடியும்; எலிகளுக்கும் பெருச்சாளிகளுக்குமான வர்க்கப் போராட்டங்களைச் சொல்ல முடியும்; ஒரு போலிசாக, ஒரு விவசாயியாக, பாத்திரத்திற்குப் பெயர் பொறிப்பவராக, ஒரு ஜி.எம்.மின் செகரெட்டரியாக, ஆறு வயதுப் பெண்ணாக மாறி மாறிச் சிந்திக்கும்மனம் பெறும் மகிழ்ச்சியிலேயே எழுதுவதன் நோக்கம் எழுதுபவனுக்கு நிறைவேறி விடுகின்றது.

வார்த்தைகள் முக்கியமா? ஆம். நாம் உபயோகப்படுத்தும் வார்த்தைகளே நாம் இலக்காக வைத்திருக்கும் இறுதி உணர்ச்சிக்கு வாசகரைத் தயார் செய்யும் மந்திரங்கள்.

விஜய் டி.வி.யில் விவேக் கவிஞர் வைரமுத்து போல் பேசிக் காட்டுகிறார். பாட்டி வடை சுட்ட கதை தான். 'ஒரே ஒரு ஊரில்'என்று ப்ரியதர்ஷினி படிக்க, விவேக், 'புழுதி படிந்த ஒரு கிராமத்தில்' என்கிறார். இந்த இரண்டு துவக்கங்களும் நம் மன உணர்வில் ஏற்படுத்தும் வித்தியாசங்கள் சில. அதுவே 'சூரியக் கதிர் வெளிச்சமாய் எழும்பி வந்தது; பச்சை மரங்கள் உற்சாகமாய்த் தலையாட்டின; சின்னச் சின்ன அழகிய பறவைகள் கீச்சு கீச்சென்று கத்திக் கொண்டே இங்குமங்கும் உல்லாசமாகத் திரிந்தன; அந்த வளமான கிராமத்தில்...'என்று
ஆரம்பிக்கும் போது அது எழுப்பும் மனநிலையைச் சிந்தியுங்கள்.

எனவே ஒரு கதை எழுதும் நாம் பயன்படுத்தும் வார்த்தைகளை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.

சுஜாதா 'ஓரிரு எண்ணங்கள்' என்ற கட்டுரைத் தொகுப்பில் கதை எழுதுவதைப் பற்றி மற்றும் சில எழுத்தாளர்களின் கூற்றுக்களைச் சொல்லி இருக்கிறார்.அவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிட்டால் நம் எல்லோர்க்கும் உதவும் என்பதால்!

ஹெல்மட் பாந்கைம் என்பவர் 689 நல்ல சிறுகதைகளைப் படித்து,'நல்ல சிறுகதை' என்பதற்குச் சில அடையாளங்களைச் சொல்கிறார்.

1. என்ன சொல்லப்பட்டது என்பது எப்படி சொல்லப்பட்டது என்பதை விட முக்கியம்.

2. சிறுகதை என்பது முடிவுக்கு மிக அருகில் துவங்கும் பெரிய கதை.

3. நல்ல கதையில் எழுதுபவரின் நினைவாற்றலின் நுட்பம் இருந்தே தீரும்.

4. 85 விழுக்காடு கதைகள் பார்த்த, கேட்ட, உணர்ந்த, படித்த அனுபவத்தைச் சார்ந்ததாக உள்ளது.

5. நல்ல சிறுகதை எழுத்தாளர்கள் நிறையப் படித்திருக்கிறார்கள்.

6. எல்லாக் கதைகளும் கொஞ்சம் அவசரமும், கொஞ்சம் உணர்ச்சி ஊற்றும் கலந்து எழுதப்பட்டவை.

மற்றும் சில வாக்கியங்கள்.

பெரும்பாலான கதைகள் ஒரு பேசப்பட்ட வாக்கியத்தில் முடிகின்றன. வாழ்க்கையின் அபத்தத்தைச் சுட்டிக்காட்டி ஒரு கேள்விக்குறியில் முடிகின்றன. சிறுகதை ஒரு தனிப்பட்ட சுருக்கமான அனுபவத்தைப் பேசுகிறது.

என் தனிப்பட்ட அனுபவத்தில் சிறுகதை எழுத ஆர்வமுள்ளவர்கள், வெண்பா இலக்கணம் படிப்பது மிக உதவிகரமாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.

வெண்பா, யாப்பின் அத்தனை சிக்கலான விதிகளுக்குள், அதன் எதுகை, மோனை, முதலடி முதலாம் மற்றும் மூன்றாம் சீர்கள், குறில் நெடில் கூட்டணிகள் போன்ற கட்டுப்பாடுகளுக்குள் ஒரு நல்ல வெண்பா எழுத முயல்வது, ஒரு சிறுகதையின் வடிவம் பற்றிய ஒரு பிரக்ஞை, ஒரு கவனம் தரும் என்பது தெரிய வருகின்றது.

எழுதிய ஒரு வெண்பாவைச் சொல்கிறேன்.

குரங்குதான் முன்னோர் குறிப்பிட்டார் டார்வின்
அரங்கை நிறைத்தது கைதட்டல் - அடங்கியபின்
எல்லாம் அறிவேன் எழுந்துஒருவர் சொல்லியது
இல்லாளால் முன்பே யான்!

இந்த வெண்பாவில் ஒரு காட்சி சொல்லப்படுகிறது. நான்கு வரிகளுக்குள் ஓர் அரங்கம், ஒரு விஞ்ஞானி, அவரது புரட்சிக் கருத்து, அனானி ஒருவரின் வாழ்க்கை.இத்தனையும்.

இப்படி எழுதி எழுதிப் பயிற்சி பெற்ற மனம், சிறுகதையிலும் அந்தச் சுருங்கச் சொல்லி விரித்துப் பொருள் கூறும் வித்தையைக் கைக் கொள்வது எளிதாகிறது.

மற்றோர் ஆசிரியப்பா.

பாரதி கவனமாய்ப் பாஞ்சாலி சபதத்தில்
சாரதி உடைநல்கும் செய்யுளைச் செதுக்குகையில்
செல்லம்மாள் சமையலறை இருட்டுள்
மெல்லமாய்ச் சொன்னார், "மதியத்திற்கு அரிசியில்லை!"

இதிலும் மகாகவியின் வாழ்வின் ஒரு காட்சி இருக்கிறது.

எனவே நம் கவனத்தைப் பாதிக்கின்ற, கவர்கின்ற சம்பவங்களைக் கூர்ந்து நோக்குவதன் மூலம் நம் மனம் நிகழ விரும்புகின்ற முடிவைச் சிறுகதையாகத் தொகுத்துக் கொள்ளமுடியும் என்று நம்புகிறேன்.

முடிப்பதற்கு முன்பாக,நேற்று நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்ல விரும்புகிறேன். வீட்டில் இணையம் இல்லை. எழுதியாக வேண்டிய வேலை ஒன்று இருந்தது. எனவே இணைய மையம் சென்று விட்டு, அது முதல் மாடியில் இருந்தது. கீழே வந்து சைக்கிளை எடுக்கும் போது தான் கவனித்தேன். தரைத்தளத்தில் நிறைய கடைகள் இருந்தன. மோட்டர் கடை, டி.வி. ஷோரூம், சலூன், போட்டோ ஸ்டுடியோ, பேன்ஸி ஷாப். அந்த ஷாப்பில் இரண்டு கூண்டு எஸ்.டி.டி பூத்கள் இருந்தன. வாசலில் ஓர் ஒரு ரூபாய் காயின் தொலைபேசிப் பெட்டி. ஷாப்பின் இன்சார்ஜ் ஒரு பதினைந்து வயதுப் பெண். நான் சைக்கிளை எடுக்கும் போது, ஒரு மனநிலை சரியில்லாதவர் நடந்து வந்தார். இளம் வயது தான் இருக்க வேண்டும். அந்த ஷாப்பை நோக்கிச் சிரித்துக் கொண்டே போனார். அந்த பெண் பயந்து போட்டோ ஸ்டுடியோவுக்கு ஓடி, அங்கிருந்த ஒருவரை, "அண்ணா... பைத்தியம் வருது..!
தொரத்துங்ணா..!" என்றாள். அவர் எதுவும் சொல்வதற்குள், அவர் 'ஃபோன்....ஃபோன்....' என்று சொல்லிக் கொண்டே மஞ்சள் டெலிபோனை நெருங்கி விட்டார். அந்தப் பெண் தைரியம் பெற்று, "ஃபோன் ஒர்க் பண்ணலை..' என்று கத்தினாள். அவர் அதைப் பொருட்படுத்தாமல், சிரித்துக் கொண்டே, ரிஸீவரை எடுத்து, ஏதோ எண்களை அழுத்தி, "ஹலோ..!" என்றார்.

அவர் யாருக்கு கால் செய்திருப்பார் என்ற கேள்வியில் ஒரு சிறுகதை இருக்கின்றது.

நன்றி.