எங்கிருந்தாலும்
மூக்குகள் வேர்த்து
விடுகின்றன!
கடையில் இருந்து
வாங்கி வந்து,
கவர் பிரித்து,
ஒரே ஒரு
பிஸ்கெட்
சாப்பிட்டு,
மாடிக்குச் சென்று
வருவதற்குள்...
மூக்கு வேர்த்த
எட்டுக்கால்
எறும்பு வீரர்கள்
சுறுசுறுப்பாய்,
பரபரப்பாய்...!
பள்ளங்களிலும்
மேடுகளிலும்,
ஏறியும்,
இறங்கியும்..
வளைவுகளில்
வளைந்தும்,
நேர்கோடுகளில்
மிடுக்கான வரிசைகளிலும்
செல்கின்றன.
எதிர்வரும்
நண்பர்களை
முத்தமிட்டு,
முகமன் கூறி,
செய்தி சொல்லி,
வேக நடை
போடுகின்றன.
வெண்ணை தடவிய
வாசம்
முகர்ந்து,
ஜாம் மினுக்கும்
இனிப்பை நுகர்ந்து...
கூட்டம் கூட்டமாக
விறுவிறுவென
மேய்ந்து,
இனிப்பின்
போதையில்
மயங்கிக் கிறக்கத்தில்
ஆழும்
இந்த எறும்புகளின்
பெயர்கள் என்னவென்று
அறியாத
என்னைப்
போல் இன்றி,
என் பெயரை
அவை
அறிந்து
கொள்ளட்டும்
Chaoxiang
என்பதை..!
Monday, December 01, 2008
Sunday, November 30, 2008
மழை ரகளை.
காலையில் கொளுத்திய பதினொரு மணி வெள்ளை வெயிலில் முகம் கருக்க, கைகள் கருக்க விளையாடி விட்டு, களாத்து அறைக்கு வந்து, பொத்தென்று விழுந்து, படுத்து கனவுகளில் உலாப் போய்க் கொண்டிருந்தவனை திடுக்கென எழுப்பின சப்தங்கள்..!
செமத்தியான மழை..!
வானின் விரல் நீட்ட முடியாத திசைகளில் இருந்து எல்லாம் மின்னல்கள்...! காற்றின் அணுக்களின் மீதெல்லாம் அவசர (330 மீ./வி.) வேகத்தில் பிரயாணித்து, செவிப்பறைகளை மோதி மோதித் திறந்த இடியோசைகள்..! ஆகாயக் கரும் பஞ்சுப் பொதிகள் கரைந்து, கிளர்ந்து, நொறுங்கி, நுரைத்து, லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான துளிகளாய், ஈரக் கம்பிகளாய் விழுந்து கொண்டே இருக்கின்றன.
எத்தனை கவிஞர்களின் கவிதைக் குழந்தைகள் பிறக்க, நீல வானப் பனிக்குடம் உடைந்ததோ இன்று..?
சூடு சுமந்து வெந்திருந்த வீட்டுக் கூரைகளில் இருந்து புகையாய்ப் பெருகி ஓடுகின்றது... உஷ்ணப் பெருமூச்சுகள்.
தோட்டத்தின் மணல் முகடுகள் கரைந்து காணாமல் போயிருக்கின்றன.
மரங்களின் இடுக்குகளில் இருந்தெல்லாம் ஆனந்தக் கூச்சலிடல்கள்...! உடலோடும், வேரோடும் ஒழுகும் நீர்ப் பிரவாகத்தில் தலை சிலிர்த்து, நூற்றுக்கணக்கான பச்சை இலைகளைப் புதுப்பித்து, மரங்கள் குளித்துக் கொண்டே இருக்கின்றன.
நாகரீகம் துப்பிய செம்மண் புழுதிகளைக் கழுவிச் சிற்றோடைகள், சாலைகளின் முனைகளில் ஓடிக் கொண்டிருக்கின்றன.
ஜன்னல்கள் திரையிட்டுக் கொண்ட பின்னும், நீர்த் தாரைகள் மேலெங்கும் விழும் அதிர்வுகளைச் சொல்லிக் கொண்டே இருக்கின்றன தகர.. நகர அரசுப் பேருந்துகள். யாரும் பார்க்கா நேரத்திலும், கம்பிகளின் துளிகள் அழகான வரிசையாய், நகர்ந்து... நகர்ந்து.. ஒற்றைப் பெருந் துளியாகி.. சொட்... சொட்...!
சாலைகளின் குழிகளில் மழை நிரம்பி, நீக்குப் போக்கற்ற சமதளம் பரப்பிக் காண்பிக்க, ஒல்லி சைக்கிள்கள் அறியாது, குழிகளில் விழுந்து, எழுந்து போகின்றன.
சாக்கு முக்காடு போட்டவர்கள், லுங்கி கட்டியவர்கள், வற்றிய உடலர்கள், பெட்ரோல் உறிஞ்சி வண்டியர்கள்... அத்தனை பேரையும் உச்ச வியாபாரம் கொள்ள டீக்கடைகளிலும், எண்ணெய் கொதிக்கும் பஜ்ஜிக் குமிழ்களிலும் கவனம் செலுத்தச் செய்து, நகரையே தனதாக்கிக் கொண்டு இராஜ நர்த்தனம் புரிந்து கொண்டிருக்கின்றது, இம்மாமழை!
பல வர்ணக் குடைகள், பல வடிவ ப்ளாஸ்டிக் கவர்கள் மேல் அணிந்தவர்கள் மேல் தாமரை இலைத் தண்ணீர் போல் மழை நீர் தழுவி, நழுவிச் செல்கின்றது. அண்ணாந்து பார்த்தால், ஏழு நிறங்களில் வானவில்..!
வானத்தின் வில்..!
என்ன ஓர் ஒத்திசைவு...!
யார் சறுக்கி விளையாட இந்த வளைவு..? கால் வட்ட அழகில், யார் கால் வைத்து ஏறி, இறங்க..? ஒவ்வொரு வர்ணத்திலும் விரல்கள் பதித்து அவற்றைக் கொஞ்சம், கொஞ்சம் களவாடி, என் வீட்டுக் க்ண்ணாடியில் பொட்டு வைத்துக் கொள்ள விரும்புகிறேன்.
கோடுகளில் சாயம் தெளிக்கும் எழில் பூத்த இந்த நிறங்கள் எத்தனைப் பூக்களில் இருந்து ரசனை பார்த்து வரையப்பட்டிருக்கும்..?
யாருடைய எழு கண்ணாடி வளையல்களை உடைத்து, இந்த வானவில் அவசரமாக இப்படி கதிரின் எதிர்த் திசையில் ஒட்டப்பட்டிருக்கும்..? வளையல் உடைந்த சப்த கன்னியரின் கண்ணீர் தான் இந்த மழையா..? ஆஹா..! பகலில் மட்டும் தானே அவர்களின் வர்ணத் துயர்கள் வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகின்றன..? இரவில் மழை பெய்தால், எந்த திசையில் தெரியும் இந்த வானவில்..? யாரோடும் சொல்லாத, ஊரோடும் இல்லாத அவர்களின் கண்ணீர், மேகங்கள் வழியே ஊற்றுகின்றதா..?
ஒருவேளை இந்த வானவில் துண்டுகள், அவர்களின் வளையல் மிச்சங்களா இல்லை இடையின் ஒட்டியாண ஒழுங்குகளா..? புகை புகையாய் அசைந்து கொண்டே நகர்ந்து கொண்டே இருக்கும் வெண் மேகங்களே, கேட்டுச் சொல்வீர்களா..?
இன்று எனக்கென்னவோ, இந்த மழை நேரத்தில் மனதின் பெரும் பரப்பெங்கும் ஈரம் ஊறிக் கொண்டேயிருக்க கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது, இப்பாடலை...!
Get Your Own Hindi Songs Player at Music Plugin
***
மழை பெய்தலினால்...!
ஒரு மழை நாளின் இரவில்.
இவன்..!
தூறல் போடும் மேகங்கள்.
Subscribe to:
Posts (Atom)