Thursday, January 04, 2007

வெறுமைக் கணங்களை நிரப்பும் தமிழ்த் துளிகள்.

என்ன தான் இன்று கணிணி முன் அமர்ந்து, இமைக்க கூட மறந்து மானிட்டரையே மானிட்டர் செய்து கொண்டிருந்தாலும், அவ்வப்போது மனதில் ஏற்படுகின்ற வெறுமைக் கணங்களை நிரப்புவது இளையராஜாவின் கிராமத்துப் பாடல்களே! அதுவும் இராமராஜன் பாடல்கள் மட்டுமே என்னைப் பொறுத்தவரை நான் இழந்து கொண்டிருக்கின்ற சொந்த ஊர் அனுபவங்களை ஈடுகட்டும். அதுவும் முக்கியமாக 'மதுரை மரிக்கொழுந்து வாசம்', 'ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வெச்சேன்','சொந்தம் வந்தது..வந்தது..' செண்பகமே..செண்பகமே'. மேலும் இசைஞானியின் 'ஊரெல்லாம்',' நான் ஏரிக்கரை மேலிருந்து','ஒரு கணம் ஒரு யுகமாக','ஆலோலம் பாடி'. இன்னும் பல பாடல்கள்.

இதோ நானும் எழுதிய கிராமத்துப் பாடல். இத்தனை ஆண்டுகாலம் சென்னை வாசம் பிடித்தபின்னும், இன்னும் எனக்குள் நுரை பொங்கி ஓடும் காவிரியின் ஈரம் ஊறிக் கொண்டிருப்பதை உணர்ந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

இது ஒரு மீள்பதிவு. எனது கவிதைப் பதிவுகளிலிருந்து எடுத்து பதிகிறேன்.


பாடுகிறேன்...!

அலையொதுக்கும் நுரையொதுங்கும் ஆற்றங்கரையோரம்
அழகான நிலவுதிக்கும் அந்தி மாலை நேரம்
ஆசைமனம் வாடுதடி ஆரும் சொல்லலியா? என்
ஆவல் எல்லாம் தூது விட்டேன், அன்பைச் சொல்லலியா?

கருக்கலிலே இருள்கவிழ்ந்து கருகும்முனு ஆச்சு,
வருத்துகின்ற புயலெல்லாம் உன் வாச மூச்சு!
செருக்கழிந்த வாழையெல்லாம் செதில்செதிலாய்ப் போச்சு,
செத்திருந்த புஞ்சை நிலம் செவச்செவனு ஆச்சு!

ஓடொழுகும், வீடொழுகும், ஓசையோடு சேர்ந்தொழுகும்,
பாடுகின்ற பறவையெல்லாம் பதுங்கப் பதுங்க இசையொழுகும்!
ஓடிவந்த வெள்ளமெல்லாம் ஓடையோடு சேர்ந்திருக்க,
ஒதுங்கி நிற்பதேனடி, நீ ஒளிந்து கொள்வதேனடி..!

திண்ணையெல்லாம் ஈரமாச்சு, திசையெல்லாம் சாரலாச்சு,
தீயாக உன் நினைப்பு குளிர்காய வரலாச்சு!
முற்றமெல்லாம் நீர் தேங்க, முன்பார்த்த நினைவாக,
முத்தமிடும் என் மனசு, முழுதாகப் பழுதாக...!

மின்னலிங்கு சிரிப்பாக, மிச்சமெல்லாம் நெருப்பாக,
பின்னலிட்ட கோலமயில், பிரிந்து நிற்பதேனடி?
விளக்கொண்ணு ஏத்தி வெச்சேன், விடியலின் துளியாக,
விளங்கலையே உன்மனசு, விளக்கமேதுமுண்டோ?

புளியமரப் பேயாக புரண்டாடும் மனசடங்க,
பூக்களெல்லாம் வேண்டாம், உன் புன்னகையே போதும்.
கலிமனுஷச் சதியாக, கதை முடியும் நேரத்தில்
கவிதையெல்லாம் வேண்டாம், உன் கண்ணிமையே போதும்!

சில நேரம் சிலையாக, சில நேரம் உலையாக,
சிந்துகின்ற பார்வையில் உடல் சிக்கிப் போகும்!
மழை நனைத்த பாதங்கள், மண்ணில் போடும் கோலங்கள்
மணம் கொஞ்சம் வீசும், என் மனதோடு பேசும்!

மேகமெல்லாம் மழையாச்சு, மண்ணோடு சேர்ந்தாச்சு,
மேற்குத்திசை ஒளியெல்லாம் மெல்ல மெல்ல மறைஞ்சாச்சு,
கதவடைக்கும் பொழுதாச்சு, கருங்குயிலும் களைச்சாச்சு,
மனசடைக்க முடியலையே, மருகிமருகிப் பாடுகிறேன்...!!

எழுதியது : 08.Sep.2003

Wednesday, January 03, 2007

பன்னிரண்டாம் இரவு - ஷேக்ஸ்பியர்


ஆங்கிலத் துணைப்பாட நூலாக நாம் படித்த Twelfth Night என்ற நாடகம் பற்றி எம் ஆங்கில ஆசிரியர் திரு.விவேக் நமச்சிவாயம் அவர்கள் அருமையாக விவரித்த போது, எனக்கு நினைவுக்கு வந்தது, நான் முன்பே படித்திருந்த அதன் தமிழ் மொழிபெயர்ப்பு.

பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கையில், ஏதோ ஒரு போட்டிக்காக வாங்கிய பரிசு தான் அப்புத்தகம். பொற்கிழிக்கவிஞர் திரு. அரு. சோமசுந்தரம் அவர்கள் மொழிபெயர்த்தது. மூல நூல் ஷேக்ஸ்பியர் அவர்கள் எழுதியது.

கதை அனைவருக்கும் நினைவிருக்கும். இருப்பினும் நாளும், இரவும் கணிணி முன் கடுமையாக உழைப்பவர்கள் மறந்திருக்க வாய்ப்புள்ளதால் முன்கதை மட்டும் கூறுகிறேன். பின்னதை புத்தகத்தை விலை கொடுத்து வாங்கிப் படித்துத் தெரிக அல்லது முழு நாடகமும் / கதைச்சுருக்கம்.

இரட்டையர்களான அண்ணன், தங்கை இருவரும் பயணித்த கப்பல் கடலில் கவிழ்ந்து, பயணித்த அனைவரையும் வேறோர் தேசத்தில் சேர்க்கிறது. தங்கையும், அண்ணனும் பிரிகின்றனர். தங்கை இருப்பியல் பிரச்னைகளால் ஆண்வேடம் புனைந்து, நாட்டு அரசனிடம் பணியாளாகச் சேர்கிறாள். மன்னன் அவளை தன் நேசிக்கும் அழகியிடம் தன் காதலைத் தெரிவிக்குமாறு சொல்கிறான். ஆனால் அரசனிடம் காதல்வயப்பட்ட தங்கை, ஆண் வேடத்தில் இருப்பதால் அதை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கிறாள். ஆயினும் அழகியிடம் தன் மன்னனின் காதலைத் தெரிவிக்கிறாள். தடால் திருப்பமாக மன்னனின் காதலை நிராகரித்த அழகி, ஆண் வேடத்தில் இருக்கும் தங்கையின் மேல் காதல் கொள்கிறாள்.

அழகியின் மேல் மன்னன் கொள்ளும் காதல். அழகிக்கோ தூதன் மீது காதல். தூதன் வேடத்தில் இருக்கும் பெண்ணிற்கோ மன்னன் மீது காதல், ஆனால் ஆண் வேடத்தில் இருப்பதால் தன் காதலைத் தெரிவிக்க முடியாமல் தவிக்கிறாள்.

இப்படியாகச் செல்லும் பாக்யராஜ் டைப் கதை, கடலில் விழுந்த அண்ணனைத் தான், தான் காதலித்தவன் என்று நினைத்து அழகி காதலை வெளிப்படுத்துகையில், சூடுபிடித்து எக்ஸ்பிரஸ் வேகத்தில் பறக்கிறது.

மொழிபெயர்ப்பாளருக்கு எதனால் 'பொற்கிழிக் கவிஞர்' என்று பெயர் வந்தது என்று தெரியவில்லை. ஆனால் இந்த நூலின் மொழிபெயர்ப்பைப் படித்தவர்கள், அவர் இந்தப் பட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர் என்பதை உணர்வர். இனிய மொழியாக்கம். சில உவமைகள், நாம் தினசரி வாழ்வில் உபயோகிப்பவை.

முன்பே பலமுறை இந்த தமிழாக்கத்தைப் படித்து விட்டதால், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கையில், பன்னிரண்டாம் இரவு துணைப்பாடம் மனனம் செய்வதற்கு, இயல்பாகச் சிந்தித்துப் பதிலுரைத்தலுக்கு, முக்கியமாக பாத்திரங்களின் பெயர்களை நினைவில் வைத்துக்கொள்வதற்கு மிக்க உதவி புரிந்தது.

இனி, அந்த நாடகத்திலிருந்து, ஒரு பகுதி. ஆண் வேடத்திலிருக்கும் தங்கை, தன் மன்னனின் காதலை அழகியிடம் உரைப்பதற்குச் செல்கிறாள்/ன் (அப்போதெல்லாம் இந்தப் பாழாய்ப் போன பாலியல் தேர்வு இல்லை போலும்).அவ்விடம் நடக்கும் உரையாடல்.

களம் - 1 காட்சி - 5

இடம் : ஒலிவியா நங்கையின் வீடு

..................

மால்வாலியோ : அம்மா! அங்கே நிற்கும் வாலிபன் உங்களோடு பேச வேண்டும் என்று உறுதியாக நிற்கிறான். நீங்கள் பிணிவாய்ப்பட்டிருப்பதாகச் சொன்னேன். நம்ப மறுத்தான். தூங்குகிறீர்கள் என்றும் சொன்னேன். அதையும் தூக்கி எறிந்து விட்டான். அவனே வரப் போகிறான். இனி நான் என்ன சொல்லட்டும்? என்ன சொன்னாலும் ஏற்க மறுக்கிறான்.

ஒலிவியா : அவனோடு பேச முடியாது என்று சொல்.

மால்வாலியோ : சொல்லி விட்டேன். அவன் நீதிபதி வீட்டு வாசலில் தூண் போலவும், நாற்காலி கால் போலவும் நிற்பதாகவும், தங்களுடன் பேசாமல் நகர முடியாதெனவும் சொல்கிறான்.

ஒலிவியா : அவன் எப்படிப்பட்டவன்?

மால்வாலியா : மனிதனைப் போன்றவன்!

ஒலிவியா : எத்தகைய மனிதன்?

மால்வாலியா : கெட்ட மனிதன்! அவன் தங்களுடன் பேசாமல் போக மாட்டான். நீங்கள் பேசுவீகளா? மாட்டீர்களா?

ஒலிவியா : அவன் தோற்றம் எத்தகையது? வயது என்ன?

மால்வாலியா : மனிதன் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வயதானவனுமில்லை; பையன் என்று சொல்லக் கூடிய அளவிற்குச் சிறியவனும் இல்லை. அவன் காயுமில்லை; பழமுமில்லை; வெள்ளமுமில்லை; பொய்கையுமில்லை; மனிதனுமில்லை; பையனுமில்லை; அவன் பார்க்க அழகாகவும், பட்டிமன்றப் பேச்சாளனாகவும் இருக்கின்றான். அவன் பால்குடி மறக்காத பாலகன் என்று பார்த்தவுடனேயே சொல்லி விடலாம்.

ஒலிவியா : அவன் வரட்டும். வேலைக்காரியை அழையுங்கள்.

மால்வாலியா : வேலைக்காரியே! அம்மா உன்னை அழைக்கிறார்கள். (போகிறான்)

[மேரியா மீண்டும் வருகிறாள்]

ஒலிவியா : எனது முகத்திரையைத் தா... வா.. அதனை என் முகத்தின் மேல் மூடு. ஆர்சினோ மன்னனின் தூதனை மீண்டும் சந்தித்து அவன் வார்த்தைகளைக் கேட்போம்.

[வயோலாவும், அவனது பணியாளர்களும் வருகின்றனர்.]

வயோலா : இந்த அரண்மனையில் ஆட்சிக்குரிய மங்கையர் யார்?

ஒலிவியா : என்னிடம் பேசுங்கள். அவளுக்காக நான் பதில் சொல்வேன். உங்களுக்கு என்ன வேண்டும்?

வயோலா : தண்ணொளியும், தன்னிகரில் அழகும் தவழக் காண்கிறேன். சொல்லுங்கள். உங்களை மன்றாடிக் கேட்கிறேன். இந்த மாமனையின் அழகுத் தேவதை நீங்கள் தானா? சரிவரத் தீட்டப்பட்டு உள்ள திரை ஓவியத்தைக் கண்டதும் என் வார்த்தைகள் அடங்குகின்றன. இந்த ஓவியத்தை மனனம் செய்யப்பெரும் பாடு பட்டுவிட்டேன். அழகின் எல்லை! நான் உணர்ச்சிவசப் படுகிறேன். அதனால் உளறிவிடலாம்.

ஒலிவியா : நீங்கள் எப்பொழுது வந்தீர்கள்?

வயோலா : நான் அறிந்ததற்கு மேல் யாதொன்றும் சொல்ல மாட்டேன்.அம்மணி! நீங்கள் தான் இந்த மனையின் மாண்புமிக்க தலைவி என்று கூறுங்கள். அதன்பின் நான் பேச்சைத் தொடர்கிறேன்.

ஒலிவியா : நீங்கள் ஒரு நகைச்சுவைப் பேச்சாளரா?

வயோலா : இல்லை. நான் விளையாடவில்லை. உள்ளத்தின் ஆழத்தில் இருந்து உறுதியாகப் பேசுகிறேன். நீங்கள் தான் இந்த இல்லத்தின் தலைவியா?

ஒலிவியா : என்னுடைய உரிமையை நானே பறித்துக் கொள்ளாவிட்டால், நான் தான் இந்த இல்லத்தின் தலைவி!

வயோலா : நிச்சயம்! நீங்கள்தான் தலைவியானால் உங்கள் உரிமையை நீங்களே பறித்துக் கொள்கிறீர்கள். கொடுக்க வேண்டிய உங்கள் உரிமையை நீங்கள் வைத்துக் கொள்ள முடியாது. ஆனால் இது என் கடமை, உங்களைப் புகழ்வேன். பிறகு நான் கொண்டு வந்துள்ள செய்தியைக் கூறுவேன்.

ஒலிவியா : முக்கிய செய்தியைக் கூறுங்கள். புகழ்ச்சியை மன்னிக்கிறேன்.

வயோலா : கடவுளே! அதை உணர மிகவும் அரும்பாடுபட்டேன். அது கவிதையாக அல்லவா இருக்கிறது!

ஒலிவியா : அது கற்பனை! அதை வைத்துக் கொள்ளுங்கள். என் வீட்டு வாசலில் நீங்கள் ஆர்ப்பாட்டம் செய்ததாக அறிந்தேன். கட்டாயப்படுத்தி உள்ளே வந்தீர்கள். அதன்மூலம் உங்கள் வார்த்தைகளைக் கேட்பதைவிட உங்களைக் கண்டு ஆச்சரியப்படும்படி நடந்து கொண்டீர்கள். உங்களுக்குப் பைத்தியம் இல்லாவிட்டால் போய் விடுங்கள்; பகுத்தறிவு இருந்தால் சுருக்கமாகச் சொல்லுங்கள். வசனம் பேசுவதற்கு வான நிலவு தவழும் நேரமல்ல இது!

மேரியா : அய்யா! பாய்மரத்தில் பாய்கள் பறக்கட்டும்! உங்கள் நடையைக் கட்டுங்கள். இதுதான் பாதை....

வயோலா : முடியாது. கப்பலைத் தூய்மைப்படுத்துபவளே! நான் இன்னும் சற்று நேரம் இங்கு மிதக்க வேண்டும். தலைவியாரே! உங்களது குட்டித் தேவதையைச் சற்று அமைதிப்படுத்துங்கள். உங்கள் மனதைச் சிறிது வெளிப்படுத்துங்கள். நான் ஒரு தூதுவன்.

ஒலிவியா : உண்மை தான். நீங்கள் சொல்ல வந்த செய்தியைச் சொல்லலாம்.

வயோலா : நீங்கள் மட்டும் அதைக் கேட்க வேண்டும். அது ஒன்றும் போர் பற்றிய திட்டமன்று; புகழத்தக்க மரியாதையினை எதிர்பார்க்கும் செயலுமன்று. நான் அமைதிச் சின்னத்தை (ஆலிவ்) கையில் வைத்திருக்கிறேன். என் வார்த்தைகள் சமாதானம் பற்றியவை.

ஒலிவியா : இருந்தும் நீங்கள் ஆரம்பித்த முறை கடுமையானவை. நீங்கள் யார்? உங்கள் விருப்பம் என்ன?

வயோலா : உங்கள் சேவகர்கள் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டதால் நானும் அவ்வாறு நடந்து கொள்ள நேரிட்டது. நான் யார்? நான் சொல்ல வந்து என்ன? எல்லாம் தங்களிடம் தனியாகச் சொல்ல விரும்புகிறேன்.

ஒலிவியா : மற்றவர்கள் போகலாம். இவர் சொல்லும் புனிதமான வார்த்தைகளைக் கேட்கப் போகிறேன். (மேரியாவும், மற்ற பணியாளர்களும் செல்கின்றனர்) ஐயா! நீங்கள் சொல்ல வந்ததைச் சொல்லலாம்.

வயோலா : அழகும் இனிமையும் வாய்ந்த நங்கையே!

ஒலிவியா : அதைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் வர்ணிக்கலாம். நீங்கள் சொல்ல வந்த செய்தி எங்கே இருக்கிறது?

வயோலா : ஆர்சினோ மன்னரின் இதயத்தில் இருக்கிறது!

ஒலிவியா : அவருடைய இதயத்திலா? அப்படியானால் எந்த அத்தியாயத்தில் இருக்கிறது?

வயோலா : முதல் அத்தியாயத்தில் இருக்கிறது.

ஒலிவியா : ஓ! அதை நான் படித்திருக்கிறேன். அது பொய்! வேறொன்றும் சொல்ல வேண்டியது இல்லை.

வயோலா : அம்மணி! உங்கள் முகத்தை நான் பார்க்கலாமா?

ஒலிவியா : என் முகத்தைப் பார்க்குமாறு உங்கள் தலைவர் ஆணையிட்டாரா? உங்கள் தூதுக்கு இது அப்பாற்பட்டது! இருந்தாலும் முகத்திரையை நீக்கி ஓவியத்தைக் காட்டுகிறேன். பாருங்கள்...முகம் நன்றாக இல்லையா?

[முகத்திரையினை நீக்குகிறாள்]

வயோலா : கடவுள் அற்புதமாகப் படைத்திருக்கிறார்.

ஒலிவியா : அது இயற்கை! அது காற்றையும், காலத்தையும் கடந்து நிற்கும்!

வயோலா : அழகின் அற்புதக் கலவை! இயற்கையின் எழிற்கரங்கள் சிவப்பையும், வெள்ளையும் வியப்புறத் தீட்டியிருக்கின்றன. அம்மணி! உயிர் வாழ்பவர்களில் நீங்கள் மிகவும் கொடூரமானவர்கள்! நீங்கள் தனித்து வாழ்ந்து, தாயாகாமல் உங்கட்குப் பின், உங்களைப் போன்ற அழகிய பிரதியினை (குழந்தையை) உலகத்திற்கு வழங்காமல் போனால் நீங்கள் கொடுமையானவர்கள் தான்!

ஒலிவியா : ஐயா! நான் அவ்வளவு கொடிய இதயம் கொண்டவள் அல்லள். நான் என் அழகைக் கணக்கிட்டுப் பட்டியல் போட்டு வைப்பேன். செம்பவள உதடுகள் இரண்டு, மூடிய இமையோடு கருவிழி இரண்டு, கழுத்து ஒன்று, முகவாய் ஒன்று, இவ்வாறெல்லாம் உயிலில் எழுதி வைப்பேன்...என்னைப் புகழ்வதற்காகத் தான் நீங்கள் இங்கு அனுப்பப் பெற்றீர்களா?

வயோலா : நீங்கள் யார் என்பதைக் காண்கிறேன். நீங்கள் மிகவும் கர்வம் பிடித்தவர்கள். நீங்கள் பிசாசாக இருந்தாலும் பேரழகு படைத்தவர்கள். என் தலைவர் உங்களை நேசிக்கிறார். அவரது அன்பு பரிசளிக்கப்பட வேண்டியதாகும். நீங்கள் ஈடு இணையற்ற அழகி என்று முடிசூட்டப் பெற்றாலும் அவரது நேசத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஒலிவியா : அவர் என்னை எவ்வாறு நேசிக்கிறார்?

வயோலா : சபதங்கள் செய்தும், கண்ணீர் வடித்தும், இடியெனப் பெருமூச்சு விட்டும், நெருப்பென உயிர்த்தும் உங்களை நேசிக்கிறார்.

ஒலிவியா: உங்கள் மன்னர் என் மனதை அறிவார். நான் அவரை நேசிக்க முடியாது. அவர் உயர்ந்த பண்பாடும், பெருந்தன்மையும், வளமிகு சொத்தும், இளமை எழிலும், கனிந்த குரலும், கல்வியும், வீரமும், தோற்றப் பொலிவும் பெற்றிருந்தாலும் நான் அவரை நேசிக்க முடியாது. அவருக்கு என் முடிவு முன்பே தெரிந்ததே!

வயோலா : என் தலைவரைப் போல நானும் உங்களை நேசித்திருந்தால், அவ்வளவு துயரங்களை அனுபவித்து நடைப்பிணமாக மாறியிருந்தால், உங்களது மறுப்பின் அர்த்தத்தைக் காண முடியாது, அதை என்னால் புரிந்து கொள்ள முடியாது.

ஒலிவியா : ஏன்? நீங்கள் என்ன செய்வீர்கள்?

வயோலா : உங்கள் வாசலில் இழந்த காதலின் சின்னமாக என்னை நிறுத்துங்கள். என் ஆன்மாவை (ஒலிவியாவை) வீட்டிற்குள் அழையுங்கள். புறக்கணிக்கப்பட்ட காதலைப் பற்றிக் கவிதை எழுதுங்கள். அவற்றை நள்ளிரவில் உரக்கப் பாடுங்கள். எதிரொலிக்கும் மலையடிவாரங்களில் "ஒலிவியா" என்ற உங்கள் பெயர் விண்ணுக்கும் மண்ணுக்கும் எதிரொலிக்கட்டும். நீங்கள் ஓய்வு கொள்ளக் கூடாது. ஆனால் என்மீது நீங்கள் இரக்கப்பட வேண்டும்.

ஒலிவியா : நீங்கள் நிறையச் செய்வீர்கள். உங்கள் பெற்றோர் யார்? என்ன செய்கின்றார்கள்?

வயோலா : என் நிலையைவிட என் பெற்றோர் உயர்ந்தவர்கள். என் நிலையும் பரவாயில்லை. நான் ஒரு நல்லவன்.

ஒலிவியா : உங்கள் மன்னனிடம் சொல்லுங்கள். நான் அவரை நேசிக்க முடியாது. அவர் இனித் தூதர்களை அனுப்ப வேண்டாம். அவர் என் பதிலை எவ்வாறு ஏற்றுக் கொள்கிறார் என்பதை நீங்களே வந்து என்னிடம் சொல்லலாம். வணக்கம். நீங்கள் எடுத்துக் கொண்ட சிரமத்திற்கு நன்றி. செலவிற்கு இதை வைத்துக் கொள்ளுங்கள்.

வயோலா : அம்மணி! நான் பொருளுக்கு அமைந்த தூதன் அல்லன். பரிசோ, அன்போ தங்களிடம் வேண்டுவது என் மன்னரே ஒழிய நான் அல்லன்; நீங்கள் யாரை நேசிக்கிறீர்களோ அவரது இதயத்தைக் காதலானது பாறாங்கல்லாக்கட்டும். என் மன்னரைப் போல நீங்களும் தோல்வியில் துவள வேண்டும். அழகிய கொடிய நங்கையே! வருகிறேன்.

[போகிறான்]

ஒலிவியா : உங்கள் பெற்றோர் யார்? "என் நிலையைவிட என் பெற்றோர் உயர்ந்தவர்கள். என் நிலையும் பரவாயில்லை. நான் ஒரு நல்லவன்" என்றெல்லாம் கூறினாரே! நீங்கள் உண்மையிலேயே நல்லவர்தான்! உங்கள் நாக்கு, உங்கள் முகம், உங்கள் கை, உங்கள் செயல், உங்கள் உணர்வு முதலியன உங்கள்து பெருந்தன்மையை அறிவிக்கின்றன. பெருவேகம் இல்லை. மென்மை! மென்மை! இவரே தலைவராக இருப்பாரோ! இவ்வளவு விரைவில் நேச உணர்சசியை ஒருவர் தூண்ட முடியுமா? இவரது முழுமை என் கண் வழிப் பாய்ந்து இதயத்தைக் கவர்ந்து விட்டது. இருக்கட்டும். வா மால்வாலியோ! (மால்வாலியோ வருகிறான்)

மால்வாலியோ : அம்மா! என்ன செய்ய வேண்டும்?

ஒலிவியா : முடிமன்னனின் தூதுவனாக வந்து முணுமுணுத்துச் சென்ற இந்த இளைஞனின் பின்னே ஓடு. அவனது இந்த மோதிரத்தை நான் விரும்பினேனோ இல்லையோ, போட்டுப் போய் விட்டான். அதனால் எனக்குப் பயனில்லை என்று அவனிடம் சொல்லிவிடு. அவனது மன்னருக்கு எந்த நம்பிக்கையும் ஊட்ட வேண்டாம் என்றும் சொல். நான் அவரை விரும்பவில்லை. இந்த தூதன் நாளை இந்தப் பக்கம் வந்தால் அதற்குரிய காரணத்தைச் சொல்வேன். போ. மால்வாலியோ!

மால்வாலியோ : அம்மா! அப்படியே செய்கிறேன்.

[போகிறான்]

ஒலிவியா : (தூதன் மீது காதல் உணர்வு கொண்டு) நான் என்ன செய்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை. என் கண்கள் என் இதயத் தீர்மானத்தை இடித்து நொறுக்கிவிட்டன என்று அஞ்சுகிறேன். விதியே உன் வலிமையைக் காட்டு! நாம் நினைத்தபடி எது நடக்கிறது? எல்லாம் விதிப்படித்தான் நடக்கும். இதுவும் அப்படியே நடக்கட்டும்.

[போகிறாள்]

புத்தகம் : பன்னிரண்டாம் இரவு.

புத்தக வகை : மொழிபெயர்ப்பு. மூல நூல் : Twelfth Night - ஷேக்ஸ்பியர்.

ஆசிரியர் : 'பொற்கிழிக் கவிஞர்' அரு.சோமசுந்தரம்.

பதிப்பகம் : பொன்முடி பதிப்பகம், 123, முத்துபட்டினம் IIIst, காரைக்குடி - 623 001.

Tuesday, January 02, 2007

நானும் கொஞ்ச புத்தகங்களும்...!

லையுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள். எல்லோரும் இனியதாக ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடி இருப்பீர்கள். பலர் வருடத்திற்கான பல உறுதிகள் எடுத்திருப்போம். அதிலும் பலர், ' நாக்கு மாறினாலும் வாக்கு மாற மாட்டோம்' என்ற இறுமாப்போடு ஒவ்வொரு வருடமும் ஒரே உறுதிமொழிகளையே திரும்பத் திரும்ப எடுத்துக் கொண்டிருப்போம். சரி.. சரி.. இதெல்லாம் இருப்பது தான் என்று விட்டு விடுவோம்.

இந்தப் பதிவிலிருந்து நான் படித்த சில புத்தகங்கள் பற்றி என் சில நினைவுகளைப் பதிவிடலாம் என்று உள்ளேன்.

"ஆகா..! நீயும் இது போல கிளம்பி விட்டாயா..?" என்று யாரும் பதற்றமடைய வேண்டாம். இது ஒன்றும் மா.சிவக்குமார் ஐயா அவர்கள் எழுதும் பதிவுகள் போல் ஆழ்ந்து எழுதப்படும் புத்தக விமர்சனங்கள் அல்ல.(ஐயா.. சாமிகளா.. சத்தியமா ஏதும் உள்குத்து இல்லீங்க..)

அந்தந்த புத்தகங்களை நினைத்தவுடன் என் மனதில் ஊஞ்சலாடும் நினைவுகளைப் பதிவு செய்வதே இதன் நோக்கம்.

புத்தகங்களுக்கும் எனக்குமான உறவு முதலில் எங்கு துவங்கியது என்று முதலில் கொசுவர்த்தி சுற்றிப் பார்க்கிறேன்.

சிறானாய் மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்த பொழுதிலிருந்து இந்தக் கதை துவங்குகிறது. தினமும் பள்ளி முடிந்து வந்தவுடன் புள்ள பசியில வாடி வந்திருக்கும் என்பதை உணர்ந்து, பப்பு மம்மம், தச்சு மம்மம் எல்லாம் ஊட்டி விடுவார்கள் அம்மா. அப்போது தினமலர் - சிறுவர்மலரிலிருந்து படித்த கதைகள் சொல்லுவார்கள். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும், முந்தின வாரம் எந்த இடத்தில் கதையை முடித்தார்களோ, அதைச் சொன்னால் தான், இந்த வெள்ளியன்று வந்திருக்கும் அதன் தொடர்ச்சியை அம்மா சொல்வார்கள். இப்படி எழுதப் படிக்கத் தெரியாத காலத்தில் பழக்கமான முதல் புத்தகம் (பள்ளியின் ரைம்ஸ் புத்தகங்கள் தவிர்த்து) சிறுவர்மலர்.

சிறுவர்மலரில் என்னால் இன்றும் மறக்க முடியாத கதாபாத்திரம் 'பலமுக மன்னன் ஜோ'. பல வடிவங்களில் முகங்கள் மாற்றி பள்ளியின் ஆசிரியர்கள், வாலாட்டும் பிற மாணவர்கள் அனைவரையும் மிரட்டி விடுவான் ஜோ. சிலசமயம் ஆசிரியர்களிடம் மாட்டிக் கொண்டு உதையும் வாங்குவான். ரொம்ப நல்லா இருக்கும்.

இன்னும் பல கதாபாத்திரங்களும் அழகழகாய் வருவார்கள். அவர்களெல்லாரும் மறந்து போய் விட்டார்கள். படிக்கும் உங்களுக்கு யாருக்காவது ஞாபகம் வந்தால்/இருந்தால் சொல்லுங்களேன்.

மறக்கவே முடியாத தொடர்கதை 'உயிரைத் தேடி'. என்ன அருமையான கதையோட்டம்..! என்ன அழகான ஓவியங்கள். ஒரு சிறுவன், அவன் தான் கதை நாயகன். அவன் பூமிக் கிரகத்தில் அவனைத் தவிர வேறு யாராவது இருக்கிறார்களா என்று தேடி அலைவான். அப்போது பூமி எதனாலோ (மறதி!) அழியும் நிலையில் இருக்கும். தினமலர் அலுவலகத்திற்கு சென்று மீண்டும் இந்தக் கதையை வெளியிடுங்கள் என்று கேட்கலாம் என்று இருக்கிறேன்.

அடுத்தது காமிக்ஸ்.

ஓரளவு படிக்க வந்தவுடன் என்னைக் கவர்ந்தது காமிக்ஸ் புத்தகங்கள். 'இரும்புக்கை மாயாவி','மந்திரவாதி மாண்ட்ரேக்' போன்ற நினைவில் நிற்கும் படக்கதைகளைத் தாங்கி வரும் ராணி காமிக்ஸ் தான் எனது அடுத்த நிலை புத்தகங்கள். வேறு பல காமிக்ஸ்களும் வந்து கொண்டு, நான் வாங்கிப் படித்திருந்தாலும் ராணி காமிக்ஸ் நினைவில் நிற்க காரணம்... அதில் வரும் சில அஜால், குஜால் ஓவியங்கள். தப்பாக நினைத்துக் கொள்ள வேண்டாம். படக்கதைகளில் வரும் நாயகிகளின் ஓவியங்கள் தான். இத்தோடு இதை விடுவோம்.

எங்கள் பக்கத்து வீட்டில் தான் எங்கள் பெரிய தாத்தா திரு. வரதராசன் அவர்கள் வாழ்ந்து வந்தார். அவருக்கு நான் என்றால் கொஞ்சம் பிரியம். காரணம் இல்லாமல..? இருக்கிறது. அவருக்கு பாக்கு போடும் வழக்கம் இருந்தது. அதிலும் ரோஜா பாக்கு, நிஜாம் பாக்கு என்றால் ரொம்பப் பிடிக்கும். அவர் வீட்டிலோ பாக்கு போடத் தடை. பின், ஒரு வயதானவர் எவ்வளவு தரம் பாக்குப் போட யார்தான் அனுமதிப்பர்? நான் அவ்வப்போது போய் பாக்கு வாங்கி வருவேன். ஊதியம், புத்தகங்கள்.

அத்தனையும் மாயாஜாலப் புத்தகங்கள். 'ஏழு மலை, ஏழு கடல் தாண்டிய மந்திரவாதியின் உயிர்', 'முனிவர் சாபத்தால் ஓர் இளவரசன் கோர முகம் பெறுவது' போன்ற ராஜா கதைகள் நிறைந்த புத்தகங்கள் அவரிடம் இருந்தன். உண்மையைச் சொல்வதென்றால் அந்தப் புத்தகங்களைப் பேய்த்தனமாகப் படித்தேன் என்று தான் சொல்ல வேண்டும். இப்போது யோசித்துப் பார்த்தால், நினைக்கின்ற எதையும் Visualise செய்து பார்க்கின்ற புத்தி, அத்தகைய விறுவிறுப்பான, பரபரப்பான மாயாஜாலக் கதைகள் படித்ததால் வந்திருக்குமோ என்று தோன்றுகிறது. நன்றி தாத்தா.

இந்தக் கால கட்டத்தில் படித்த ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது. பேய்க்கதை.ஒரு கல்யாண வீட்டிற்கு ஒரு கிப்ட் கொண்டு செல்வான் ஒருவன். அது ஒரு சுடுகாட்டுப் படம். இவ்வளவு தான் ஞாபகம் வருகிறது. ;-)

அந்தத் தாத்தா மாரடைப்பால் காலமான போது, அம்மா சொல்லியழுதது, இன்னும் நினைவில் இருக்கிறது. ' கதை புக் படிக்கணும்னு தாத்தா பின்னாடியே சுத்தி, பாக்கு வாங்கித் தருவியே.. இனி யார்கிட்ட போய் புக் கேப்பே...'.

மேல் நிலைப் பள்ளி செல்ல ஆரம்பித்து, பதின்ம வயதிற்குள் ஏற்பட்ட புத்தக அறிமுகங்கள் கொஞ்சம். அத்தை வீட்டிற்குச் சென்று படிக்க ஆரம்பித்து, பழக்கமான தினமணி, தினமணி கதிர், பள்ளிக்குப் பேருந்தில் செல்வதற்காகப் பேருந்து நிறுத்தத்தில் உள்ள டீக்கடையில் அறிமுகமான தினத்தந்தி, அம்மா அவ்வப்போது அலுவலகத்தில் இருந்து கொண்டு வருகின்ற தினமலர், நீண்ட தூரப் பேருந்துப் பயணங்களில் கூடவே துணையாய் வருகின்ற பூந்தளிர், அம்புலிமாமா என்று பல அற்புதமான புத்தகங்கள் அறிமுகம் கிடைத்தது இந்த வயதில் தான்.

பிறகு தொடங்கியது தான் நாவல் பைத்தியம். பெரும்பாலோனரைப் போல், இராஜேஷ்குமார் தான் எனக்கு நாவல் அறிமுகம் செய்தார். ரஜினி படம் பார்ப்பது போல் இருக்கும், அவரது நாவல்கள். வரிசையாய் கொலைகள். விவேக், ரூபலா, கோகுல் நாத். மறக்க முடியாத பெயர்கள், பாத்திரங்கள். அவரது நாவல்களில் ஆபாசம் இருக்காது. கெட்ட வார்த்தைகள் இருக்காது. எனவே வீட்டிலும் இராஜேஷ்குமார் நாவல்கள் படிப்பதற்கு எதிர்ப்பு இல்லை.

தூரப் பயணங்களில் அதுவரை எனக்கு கை கொடுத்து துணைக்கு வந்த பூந்தளிர், அம்புலிமாமா ஓரங்கட்டப்பட்டு, பாக்கெட் நாவல்கள் ஆக்ரமித்துக் கொண்டன. பிறகு வரிசையாக பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா ( நரேன், வைஜெயந்தி, நியூட்டன்) ஆகியோரின் துப்பறியும் நாவல்கள், மாலைமதி, பாக்கெட் நாவல், ஆத்மா. இப்படி கொஞ்ச காலம் ஓடியது. கொஞ்ச காலம் என்றால் ரொம்பவே நிறைய காலம்.

இராஜேந்திரன் அவர்களின் ஒரு நாவல் கண்ணீரில் மிதக்க வைத்தது. கதை ஞாபகம் இல்லை. கடைசியில், விவாகரத்தான அம்மா, வேறு ஓர் ஆணுடன் தவறான கோலத்தில் இருப்பதை பார்த்து விடும் மகன், கொட்டும் மழையில் அதிர்ச்சியாகி, அழுது கொண்டே எங்கோ ஓடி விடுவான். அவன் வளர்த்து வந்த வாத்து , அவனைத் தேடி இரயில்வே ட்ராக்குகளிலும், ஆற்றோரப் பாலத்திலும் ஓடிக் கொண்டிருக்கும்.

பின் ஒருகாலம் மாருதி அவர்களின் ஓவியங்களுக்காகத் தேடித் தேடி சேகரித்த 'பெண்மணி' போன்ற நாவல்கள். குடும்ப நாவல்கள். என்னுடைய ஓவியப் பித்து பற்றியும், அதனால் அடித்த கூத்துகளைப் பற்றியும், ஒரு தனிப்பதிவு தான் இட வேண்டும். அதை பிறகு பார்க்கலாம்.

திடீரென்று ஒரு நாள் படித்த 'தேவன்' அவர்களின் 'துப்பறியும் சாம்பு' நாவல்கள் குறித்த எனது பார்வையையே தூக்கி உடைப்பில் போட்டு விட்டது. இரண்டே இரவுகளில் நடக்கும் கதை. அதை இரண்டு பாகங்களில் எழுதியிருப்பார். உண்மையாகவே விதிர்விதிர்த்து விட்டேன். 'இது தான்டா நாவல்' என்று உணர்ந்தேன். அதன் பிறகு படித்த எந்த துப்பறியும் நாவலும் தூசாய் எனக்குப் பட்டது. உண்மையைச் சொல்வதென்றால், நீர்த்து போனதாகவே எனக்குத் தோன்ற ஆரம்பித்து விட்டதால், பிறகு எந்த இராஜேஷ்குமார் நாவலையும் என்னால் முன்பு போல் படிக்கவே முடியாமல் போய் விட்டது. என்ன செய்ய, கால ஓட்டத்தில் மனித மனதின் மதிப்பீடுகள் மாறிக் கொண்டுதானே இருக்கின்றன.

ஆனால், உண்மையை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும். எனது பதின்ம வயதில் கதைப் பசியைத் தணித்ததில், அத்தகைய துப்பறியும் நாவல்களுக்கு பெரும்பங்கு இருந்தது.

பாலகுமாரன் எனக்கு எப்போது அறிமுகமானார் என்பது சரியாக நினைவில்லை. நான் படித்த முதல் நாவலாக 'இரும்புக் குதிரைகள்' தான் நினைவில் உள்ளது. அசோகமித்திரன் அவர்கள் தொகுத்திருந்த 'புதிய தமிழ்ச் சிறுகதைகள்' என்ற புத்தகம் பள்ளியில் பரிசாய்க் கிடைத்தது. அதில் தான் பல சிறுகதை எழுத்தாளர்கள் அறிமுகமாயினர். நாஞ்சில் நாடன், புதுமைப்பித்தன், சுஜாதா ( நகரம்), சுந்தர ராமசாமி, வல்லிக்கண்ணன் போன்ற பெரியவர்கள் அறிமுகமாயினர். எனது புத்தக பயணமும் இராஜபாட்டையில் நடை போடத் துவங்கியது.

பிறகு படித்த பேராசிரியர் அமரர் கல்கி அவர்களின் 'பொன்னியின் செல்வன்', 'சிவகாமியின் சபதம்', 'பார்த்திபன் கனவு','அலை ஓசை','தியாக பூமி' போன்ற புத்தகங்கள் என்னை வேறோர் உலகத்திற்கே அழைத்துச் சென்றே விட்டன. இவற்றைப் பற்றியெல்லாம் வலை நண்பர்களுக்கே மிக நன்றாகத் தெரியுமாதலால், நான் ஏதும் சொல்லப் போவதில்லை.

ஆங்கில நாவல் பக்கம் நீ சென்றதில்லையா என்று கேட்பவர்களுக்கு எனது பதில் இல்லை என்பதே. பள்ளியின் பெரும்பகுதி தமிழ்வழிக் கல்வி பயின்றதால், ஏதோ ஒரு மனத்தடை என்னை, அந்தப் பக்கம் செல்லாமல் தடுத்து வருகிறது. இது நல்லதா, கெட்டதா என்று தெரியாதலால், நானும் அதைப் பற்றி பெரிதாய் கவலை கொள்ளவில்லை.

அவ்வப்போது மகாகவி, அவர் தாசன் , பகவத் கீதை புத்தகங்கள் படிப்பேன். மன சஞ்சலம் மிக்க நேரங்களில் இவர்கள் தான் என் துணை. ஒருமுறை கன்னிமராவில் படித்த பிரேம்சந்தின் நாவல் (தீபாவளி தொடர்பானது), பாலசுப்ரமணியம் அவர்களின் 'சந்திரவதனா', மயிலாப்பூர் கடைகளில் வாங்கிய பாக்கெட் சைஸ் 'மகாபாரதம்', 'இராமாயணம்', இராமகிருஷ்ண மடத்தின் பல புத்தகங்கள் போன்றவை என்றும் நினைவில் நிற்பவை.

பள்ளி இறுதி நாட்களில் படிக்கத் தொடங்கி, இன்றும் வாங்கிக் கொண்டிருக்கின்ற 'ஆனந்த விகடன்', 'குமுதம்', இப்போது புதிதாய் வாங்கத் தொடங்கியிருக்கும் 'ஜூ.வி','ரிப்போர்ட்டர்', ' நாணயம் விகடன்' என்று பலதரப்பட்ட விஷயங்களைத் தொட்டுத் தொடரும், படரும் தமிழ் பத்திரிக்கை, புத்தக பேருலகில் நான் படித்த, படிக்கின்ற சிலவற்றைப் பற்றி இனி வரும் பதிவுகளில் கூறுகிறேன்.

அவை ஏதாவது ஒரு வகையில் என்னைப் பாதித்தவை. என்றும் மறையாத நினைவுகளை ஏற்படுத்தியவை. நினைக்க, நினைக்க இனிப்பானவை. என் வாழ்வில் ஏதாவது ஒரு புள்ளியில் எனக்கு முக்கியமாகத் தோன்றியவை.

நான் கொஞ்சியவை.
என்னைக் கொஞ்சியவை.

உங்களுக்கும் பிடிக்கும்.
உங்களையும் பிடிக்கும்.

Monday, January 01, 2007

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.


வலையுலக அன்பர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

இந்தப் புத்தாண்டு நாளில் ஒரு பதிவாவது இட வேண்டும் என்று தான் இந்தப் பதிவு. எதேச்சையாக இந்தப் பக்கம் சென்று பார்த்ததில், ' நீங்கள் எப்படிப்பட்ட தலைவர்?' என்று பாருங்கள் என்று அறை கூவினார்கள். சரி, நான் எப்படிப்பட்ட தலைவன் என்று பார்த்து விடலாம் என்று இந்தப் பக்கம் சென்று, கேட்கப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் பொறுமையாகப் பதில் கொடுத்துக் கொண்டே வந்ததில் கிடைத்த பதில் கீழே.

எனக்கே ஒண்ணும் புரியல.. எப்படித் தான் இப்படி எல்லாம் வெட்கமே இல்லாம ரிசல்ட் வருதோ..?