Tuesday, September 12, 2017

நீலாம்பல் நெடுமலர்.19.

னக்கென ஒரு மொழியை உருவாக்கி நன்கு பயின்றும் வைத்திருக்கிறாய்.

மெல்லச் சிரித்தல், புருவங்களை நெரித்தல், கண்களைச் சுருக்கி உதடுகளைக் குறுக்கி வைத்துக் கொள்ளல், காது மடலூரும் சிறு முடிக் கற்றையைச் சுருட்டிப் பின் தள்ளல், இருபுறமும் விழியுருட்டித் திசை காட்டல், ஏதறியேன் எனல் போல் தோள் குலுக்கல், எழுத்துக்கள்.

தேறல் கள் மாந்திய செங்கரும்பு போன்ற இதழ்களைச் சுளித்தல், கணு கழிந்த மூங்கில் தோள்களை முறுக்கி மிரட்டல், நிலம் துளைத்த நெடுநெல் நாற்று விரல்களால் காற்றில் இசையெழுப்பும் சமிக்ஞைகளை இயற்றல், முழுதாய்த் திரும்பிச் சென்றபின்னும் முகம் காட்டிப் பழிப்பூட்டல், சொற்கள்.

நீலிரவு நீண்டெழ நில்லா உரையாடலில் வான் விரி மீனளவு உணர்வு முகங்கள், செலுமுன் விரைந்து மீண்டு முழுதாயிடும் ஈர முத்தம், சிறு பரு ஒன்றெழக் காரணம் வினவ கதிர்மறை மலைமுகட்டுச் செம்மை அடை சிரம் கவிழ்தல், யாரோ எனக் கண்டு பின் யானே எனக் கண்டு நானே என அணைத்தென் முதுகில் உன் மாரெழ இறுக்கும் இறுக்கம், வாக்கியங்கள்.

Sunday, September 10, 2017

லாங்ஸ்டன் ஹ்யூக்ஸ்.

லாங்ஸ்டன் ஹ்யூக்ஸ்.


அமெரிக்கக் கருப்பினக் கவிஞர். உலக வரலாற்றின் கொந்தளிப்பான காலகட்டத்தில் வாழ்ந்த கவிஞர். அவருடைய இருவழி தாத்தாக்களும் வெள்ளையர்களாகவும் இருவழி பாட்டிகளும்
கறுப்பினத்தவர்களாகவும் இருந்தபடியால் அடையாளக் குழப்பத்தில் வாழ்ந்தவர். 

ஆனாலும் தம்மை கறுப்பினத்தவராகவே சொல்பவர். கவிமனம் கொண்டவர் என்பதால் எவரையும் வெறுக்க இயலாதவர்.
நம்பிக்கையுடன் கறுப்பரின் நல்வாழ்வுக்கு கனவு கண்டவர்.
அவருடைய கவிதைகளிலிருந்து தெரிந்து கொள்ள முடிவன இவையே.


சில மொழிபெயர்ப்புகள்.


1. சந்திப்பு முனை.

என் வயதான மனிதன்
ஒரு வெள்ளையின வயதானவன்.
மற்றும் என் வயதான அம்மா
கறுப்பினத்தவள்.

ஒருவேளை என்றாவது
நான் என் வயதான
வெள்ளை மனிதனை
சபித்திருந்தால்,
அவற்றை
நான் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.

ஒருவேளை என்றாவது
என் வயதான கறுப்பு அம்மாவை
சபித்திருந்தால்,
அவள்
நரகத்தில் இருக்க
விரும்பியிருந்தால்,
அத்தீய விருப்பத்திற்காக
வருந்துகிறேன்.
மற்றும் அவள் நலத்தை
விழைகிறேன்.

என் வயதான மனிதன்
இறந்தது
ஒரு நல்ல பெரிய வீட்டில்.
என் அம்மா
இறந்தது
ஒரு குடிசையில்.
நான் எங்கே இறக்கப் போகிறேன்
என்று வியக்கிறேன்,
கறுப்பனாகவோ வெள்ளையனாகவோ
நான் இல்லாதிருப்பதால்.


2. குடியரசு.

இன்று, இவ்வருடம்
குடியரசு வரப்போவதில்லை.
சமரசத்தாலோ, பயத்தாலோ
என்றுமே.

மற்றொருவன்
கொண்டிருப்பதைப் போல
நானும் உரிமை கொண்டுள்ளேன்.
இரண்டு பாதங்களால்
நிற்பதற்கு.
மற்றும்
நிலத்தை உரிமை கொள்வதற்கு.

ஒவ்வொன்றும் அதற்கான
காலத்தை
எடுத்துக் கொள்ளட்டும்
என்று சொல்லும்
மக்களால்
நான் சலிப்புற்றுள்ளேன்.
நாளை என்பது மற்றுமொரு நாளே.
நான் இறந்தபின் கிடைக்கும்
என் விடுதலையை
நான் விரும்பவில்லை.
நாளைய உணவின்
மீது
நான் இன்று வாழவியலாது.

சுதந்திரம் என்ற
ஒரு
வலுவான விதை
ஒரு
உன்னதத் தேவையின்
மீது
விதைக்கப்படுகின்றது.
நானும்
இங்குதான் வாழ்கிறேன்.
நானும்
சுதந்திரத்தை விழைகிறேன்,
உங்களைப் போல.


3. கனவுகள்

கனவுகளை
வேகமாகப்
பிடித்துக் கொள்ளுங்கள்

ஒருவேளை
கனவுகள் மரித்தால்,
வாழ்வு,
முறிந்த சிறகுகளையுடைய
பறவையாகி விடும்
பறக்கவியலாத ஒன்றாய்.
கனவுகளை
வேகமாகப்
பிடித்துக் கொள்ளுங்கள்.

கனவுகள்
போய் விட்டதெனில்,
வாழ்வு,
பனிமூடி உறைந்த
தரிசு நிலமாகி விடுகின்றது.


4. சலிப்பு

எப்போதும்
ஏழையாகவே
இருந்து கொண்டிருப்பது
சலிப்பாய் இருக்கின்றது.


5. இறுதி வளைவு

வளைவில் திரும்புகையில்
உங்கள் மீதே
நீங்கள்
மோதிக் கொண்டால்,
நீங்கள் அறிவீர்கள்
விடுபட்டிருந்த
அத்தனை வளைவுகளிலும்
நீங்கள்
திரும்பி விட்டிருந்தீர்கள்
என்று.

6. செல்மாவுக்காக..

செல்மா, அலபமா
போன்ற இடங்களில்
பிள்ளைகள் சொல்கிறார்கள்,
”சிகாகோ, ந்யூயார்க்
போன்ற இடங்களில்...” என்று.
சிகாகோ, ந்யூயார்க்
போன்ற இடங்களில்
பிள்ளைகள் சொல்கிறார்கள்,
”லண்டன், பாரீஸ்
போன்ற இடங்களில்...” என்று.
லண்டன், பாரீஸ்
போன்ற இடங்களில்
பிள்ளைகள் சொல்கிறார்கள்,
”சிகாகோ, ந்யூயார்க்
போன்ற இடங்களில்...” என்று.


7. நான் கனவு காண்பதைத் தொடர்வேன்

என் கனவுகளை எடுத்து
அவற்றை
ஒரு வெண்கலக் குடுவையாக்குவேன்
மையத்தில் அழகான ஒரு சிலையுடன்
வட்டமான நீரூற்றுடன்.
மற்றும் ஓர் உடைந்த மனதுடன்
ஒரு பாடல்.

உன்னைக் கேட்பேன்:
”என் கனவுகளைப்
புரிந்து கொண்டாயா..?”

சில சமயங்களில்
நீ சொல்கிறாய் ஆம் என,
மற்றும்
சில சமயங்களில்
நீ சொல்கிறாய் இல்லை என,
எப்படியாகிலும்
அது நான் பொருட்படுத்தத் தக்கதல்ல.

நான்
கனவு காண்பதைத் தொடர்வேன்.


8. என் மக்கள்.

இரவு அழகானது,
என் மக்களின் முகங்களைப் போல.
நட்சத்திரங்கள் அழகானவை,
என் மக்களின் கண்களைப் போல.
சூரியனும் கூட அழகானது,
என் மக்களின் ஆன்மாக்களும் அழகானவை.