சாய்ந்தாடும் மன ஊஞ்சல்.
ஒரு பார்வை விதைந்தது உள். ஓராயிரம் கிளைகளுடன் வானோக்கி விரிகின்றது பூமரம் ஒன்று. வேர் முதல் கிளை நுனிக் கொழுந்து வரை தேன் துளிகள் சொட்டும் இந்த இனிப்பு மரத்தைச் சொற்களால் அள்ள முடியுமா என்ன? வழியில் கடந்து செல்கையில் மெல்லிய இலைகள் குவிந்து குவிந்து மலரென ஆவது போல் செம்பூவிதழ் குவித்து காற்றைத் தீண்டும் விரல்களால் ஏதோ ஒரு இசை மீட்டி தூரம் செல்கிறாய். நீ விட்டு வைத்த நிழலுருவம் என்னைக் கட்டிக் கொண்டு அதிலிருந்து அகலாதிரு என்கிறது.
ப்ரேமையின் பொன் முகில் ஒன்று என் வனத்தின் மீது மிதந்து நிற்கிறது. வானை அண்ணாந்து பார்த்து பொழியும் நேரம் கணிக்க, புருவங்கள் மேல் கை வைத்து நோக்குகிறேன். செந்தீ எரிவது போல், காலை நதிக் கரைசல் போல், கனிந்த சுளை மேனி போல் என் ஆகாயம் முழுதும் ஜொலிக்கின்ற மேக மென்மையே, என்று என்மேல் பொழிந்து என்னையும் பொன்னாக்குவாய்?
தினம் நூறு முறை அலகுகள் கோர்த்து உரசிக் கொள்ளும் இப்பறவைகள் இப்பிறவியின் மிச்ச கணங்களில் பகிர மறந்த முத்தங்களை எத்தனை பிறவிகளில் எப்படிக் கொடுத்து தீர்க்கும்? இறகுகளில் கோதிக் கொண்டும், மணி விழிகளால் உலகுறிஞ்சியும், பஞ்சுப் பொதி போன்ற கையளவு மென் மேனியை எப்படிக் கொண்டு செல்லும் அங்கு?
கல் தேர் காலம் காலமாக நின்று கொண்டிருக்கின்றது. அதில் நின்று பவனி வரும் அம்மன் போல் நீ இடை ஒசிந்து இரு விழி நிமிர்ந்து சொல் ஒன்று தத்தளிக்கும் உதடுகளை இறுக்கி நிற்கிறாய். அத்தேர் இழுத்து வீதியுலா வரும் வெறும் பக்தன் போல், மேலே பார்த்து வணங்குகிறேன்.
உதிரி மல்லி போல் சொற்களைக் கோர்த்துக் கோர்த்து ஒரு பாடல் மாலை செய்கிறேன். அவை வாடிப் போகும் முன் எடுத்து அணிந்து கொள்ள மாட்டாயா? அவை ஒவ்வொன்றும் எழுப்பும் மணம், கூம்பித் தீண்டும் மென்னுடல் சிலிர்க்க, தேவி, சிகையெடுத்து கழுத்தில் சூடிக் கொள். நிழலும் அறியட்டும் நிஜம் கொள்ளும் நிறங்கள் என்ன வென்று.
பொன்னாரம் ஒன்றைச் செய்வித்து பூங்கழுத்தில் அணிவித்துப் பித்தாக்கச் செய்யும் மென் புன்னகையைத் தவழ விடுகிறாய். ஆரம் பொலிவிழந்தது. ஆகாயம் பூ நிறைந்தது.
மதுரமலரென கவிமொழி ஒவ்வொரு சொல்லிலும் சொன்ன பின் வர்ணவிற்களால் திசைகள் நனைந்தன. வேனிற்கால மழை என ஒவ்வொரு எதிர்பார்ப்பிலும் குளிர்விக்கிறாய். விதை தீண்டும் ஈரமாய் ஒவ்வொரு பார்வையும் முளைக்க வைக்கிறாய். மேட்டு நிலம் தேடி ஊரும் சிற்றெறும்பாய் வெள்ளக் காலத்தில் தத்தளிக்க வைக்கும் வாசத்தில் திணறடிக்கிறாய். யக்ஷியாய் என்னைப் பிணைந்து ஒவ்வொரு குருதிக்குழாயையும் உறிஞ்சி உயிரள்ளிக் குடிக்கிறாய். சாயங்கால வெயில் போல் வெம்மையில் எம்மைக் காயும் தீண்டல் செய்கிறாய்.