Tuesday, January 27, 2015

மன்த்லி பாஸ்.

பெங்களூருவில் மன்த்லி பாஸ் வாங்கினேன்.

மாநகரின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு தொலைவுப் பகுதிக்கு மாற்றி இருக்கிறார்கள். நான் தங்கியிருக்கும் ஊரோ திப்பு காலத்தில் பெங்களூரு கோட்டைக்கு அசலூராக இருந்திருக்கும். அவ்வளவு தொலைவு. இறக்கைகளின் ஒரு நுனியிலிருந்து மறு நுனிக்குப் பயணிக்கையில் தலைமேல் சிறு இளைப்பாறல் கொள்ளும் சிற்றெறும்பைப் போல், இரு பேருந்துகள் மாற்றிப் போக வேண்டும். கணக்கிட்டுப் பார்க்க சுளையாக ஒரு நூறு தினம் செலவாகி விடும் போல் தோன்றியது. எனவே மாதப் பயணச்சீட்டு எடுத்து விடல் உசிதமாகப் பட்டது.

இன்று சனிக்கிழமையை முற்பகலை அதற்காக ஒதுக்கினேன்.

மேக மூட்டைகளை நிரப்பிய கூடையைக் கவிழ்த்துப் போட்டது போல் வானம் திரும்பியிருந்தது. எப்போதும் திறந்து கொள்வேன் என்று பயம் காட்டிக் கொண்டிருந்தது. நேற்று இரவின் மழை மிச்சங்கள் ஓரங்களில் பழத்தோல்கள், கிழிந்த டிக்கெட்டுகள், பேனா மூடி, ட்ரான்ஸ்பார்மரின் தலைகீழ் பிம்பங்களைச் சுமந்தது. ஆட்டோக்கள் வரிசை கலைந்து டிராவல்ஸ் வாசல்களில் பெட்டியர்களை அள்ளிக் கொள்ள நின்றன.

செய்ண்ட் ஜான்ஸ் சிக்னல் மாநகரின் எல்லா சிக்னல்களையும் போலே காத்திருப்போரின் பொறுமைகளை விழுங்கிக் கொண்டே மடை மாற்றியது. மெஜஸ்டிக் செல்லும் பேருந்துக்காகக் காத்திருக்கையில் வழக்கம் போல் ஏ.ஸி. தாங்கிகளே வந்தன; நின்றன; சென்றன.

பத்து நிமிடங்களுக்குப் பின் 360 வந்தது. அழுக்கடைந்த கண்ணாடிக் கதவுகள் முனகிக் கொண்டே திறக்க, அடைந்த கூட்டத்தை அடைந்து அடைந்தேன். மூக்கு மேல் நுனியில் குங்குமம் வைத்த ஸ்ரீனிவாசன் 20 ரூபாய் வாங்கிக் கொண்டு டிக்கெட்டுகளை (14+6) கிழித்துக் கொடுத்தார். ஷாந்தி நகருக்குப் போய்க் கொஞ்சம் பேரை உதிர்த்து விட்டு இன்னும் கொஞ்சம் பேரை உள்வாங்கிக் கொண்டு போஸ்டர்கள் தின்ற சுவர்களின் இடையே புகுந்து புகுந்து மெஜஸ்டிக் வந்து சேர்ந்தது. வழியில் கொஞ்சம் போல் தூறி விட்டு, வைப்பர்கள் இயங்குவதற்குள் காணாமல் போயின.

மெஜஸ்டிக் இன்னும் குளிர்வாய் இருந்தது. குளிர்பானக் கடை ஒன்றின் அருகே திருத்தமான அழகான முகம் கொண்டிருந்த இள நங்கை காத்திருந்தாள். அவள் போக வேண்டிய பேருந்து இன்னும் வாராதிருந்திருக்கலாம்; அவள் தந்தையோ தம்பியோ கழிப்பறைக்குச் சென்றிருந்திருக்கலாம்; அவள் சும்மா பேருந்துகளின் இயக்கங்களைப் பார்ப்பதற்காகவும் வந்திருக்கலாம்.

கர்நாடகா வங்கியின் ஏ.டி.எம் கூண்டுக்குள் பணம் எடுத்துக் கொண்டு பி.எம்.டி.சி. அலுவலகம் சென்றால், அங்கே கவுன்ட்டர்கள் டிக்கெட் வரிசையில் அமைந்திருந்தன.

ஏ.சி. அற்ற பேருந்துகள் என்றால் மாதம் 1050. அன்றேல் 2100. விண்ணப்பப் படிவம் வாங்கி நிரப்பி, கொஞ்சம் தள்ளி வேப்ப மரத்தடியில் இருந்த பெஞ்சில் சிந்தியும் சிதறியும் வழிந்தும் காய்ந்தும் குழம்பியும் நிரம்பியும் இருந்த பசை டப்பாவை ஒரு குச்சி வைத்துக் கலக்கி எடுத்து நம் புகைப்படத்தின் வெண் முதுகில் பூசி அப்பினால், வாங்கிக் கொள்கிறர்கள். கூட பணத்தையும். பாஸ் எண்ணைக் குறித்துக் கொண்டு அட்டையைத் தந்து விடுகிறார்கள். மேலே முதல் மாடிக்குக் கொண்டு சென்றால், லேமினேஷன் அடித்துப் பத்திரம் செய்கிறார்கள்.

நிறைய கல்லூரியர்கள். மாதத் துவக்கம் என்பதால் புதுப்பித்தல்கள் நடந்தன. விரல்கள் மறைத்த சிரிப்பில் பெண்கள் தங்களுக்குள் எதையோ மறைவாகப் பேசிக் கொல்கிறார்கள். வரிசை பட்டுப்பூச்சி பறவை ஆதல் போல் மெல்ல மெல்ல நகர்கின்றது. அக்குளில் கைப்பை வைத்த அந்தப் பெரியவர் புதிதாக மாத அட்டை வாங்கி என்ன செய்யப் போகிறார்? சந்தனப் பொட்டு துளியூண்டு வைத்த இரு மூத்த பெண்கள் படிக்கட்டுகளை எண்ணி எண்ணி இறங்குகின்றனர்.