Friday, April 02, 2010

யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் - நிலாரசிகன்.



சென்ற முறை சென்னை சென்றிருந்த போது, நிலாரசிகனை ஒரு சனிக்கிழமைப் பகல் பொழுதில் சந்தித்தேன். நிறைய புத்தகங்களைச் சிபாரிசித்து வாங்கச் செய்தார். அவற்றுள் அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பாகிய 'யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகளை'ப் படித்து என் கருத்துக்களை மின்னஞ்சலில் செலுத்தினேன். பதிவு செய்து கொள்வதற்காக இங்கேயும் ஏற்றுகிறேன். அனுப்பியது மார்ச் 24.

பி.கு. :: தனி அஞ்சலில் எழுதிய போது செதுக்கிய சில நிர்வாணக் கருத்துகளைக் கொஞ்சம் போர்த்தியே இங்கே காட்டுகிறேன்.

***

அன்பு நிலாரசிகன்,

'யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகளை' இன்றுடன் மூன்றாவது முறையாகப்
படித்து முடிக்கிறேன். முதன்முறை சென்னையில் வாங்கிய அந்த சனிக்கிழமை
இரவு மேற்கு மாம்பலத்தில். இரண்டாம் முறை பவானியில் மொட்டை மாடியில்
படுத்து, நிலா பார்த்துக் கொண்டு. மூன்றாவது இன்று அதிகாலை செவ்வாய்
கழன்று புதன் பூத்த போது.

இது போன்ற உப காரணங்களை மீறி, ஒவ்வொரு கதையும் எனக்குள் சொன்ன சொற்களைக்
கீழே இறைக்கிறேன்.

தலைப்புக் கதை:

ஒரு சோகக் கதை. மும்பையின் டைரி திருவல்லிக்கேணி ப்ளாட்பாரத்திற்கு வந்த விதத்தையும் சொல்லியிருக்கலாம். இரண்டு பெண்களும் ஒருவர்தானா என்ற கேள்வியை வாசகரிடமே விட்டிருக்கலாம். டைரி எழுதும் பழக்கம் கொண்ட பெண் குழந்தை வறுமைக் குடும்பத்தில் இருக்குமா என்று என் பொதுப் புத்தி கேட்கிறது.

சங்கமித்திரை:

அழகான பேர். கிராமத் தினக்கூலிக் குடும்பத்தில் இப்படி ஒரு பெயர்? குழாய் பேண்ட் ஹீரோ 'மயிலுவின் டாக்டரை' நினைவுபடுத்துகிறான். இத்தனை பழைய ப்ளாட் வேண்டுமா? முடிவு எனக்கு விளங்கவில்லை. நாயகன் மித்திரை 'ஆன்ட்டியை'க் கூடவே கூட்டிச் சென்று வைத்துக் கொள்ளப் போகிறானா? மஞ்சள் சூரிய வெளிச்சத்தில் லாங் ஷாட்டில் காதலனும் காதலியும் நடந்து போவதைக் காட்டிக் கும்பிடும் படத்துக்கு ஒத்து வரலாம். நிஜத்திற்கு?

வேட்கையின் நிறங்கள்:

மிகப் பிடித்த கதை. எளிதில் தொடத் தயங்கும் கரு. இன்னும் கொஞ்சம் வலுவாகச் சொல்லியிருக்கலாம். இன்னும் துல்லிய விவரணைகள் சேர்த்திருந்தால், இன்னும் கொஞ்சம் பாராட்டியிருப்பேன்.

வேலியோர பொம்மை முகம்:

ஈழக் குழந்தை என்று உடனே புரிகின்றது. பாகுபாடு காட்டாத பிள்ளை மனம் என்பதில் கதை நிற்கிறது.

கிணற்றில் மிதக்கும் நிலவின் சடலம்:

கதையின் நிகழ்வுகளைக் கால வரிசையில் சொல்லாமல், கலைத்துப் போட்டதின் மூலமாக ஆசிரியர் மேலதிகமான என்ன எதிர்பார்க்கிறார் என்று கேட்க வைக்கிறது.

ப்ரியாக்குட்டி:

ட்ரமடிc.

சேமியா ஐஸ்:

சித்தி கொடுமை. இன்னும் ஏன் இந்த கரு?

வால்பாண்டி சரித்திரம்:

இதுதான் இயல்பாக இருக்கின்றது. ரொம்பப் பிடித்திருக்கிறது.

சைக்கிள்:

மறுபடியும் சோகம். கூடவே நொச்டல்கிc.

தனலட்சுமி டாக்கீஸ்:

Cஇனெம Pஅரடிசொ..? சோகம் தான்.

தாய்மை :

இது எனக்குப் பிடித்திருக்கிறது. சிறுகதையின் முக்கிய விதியான 'கதையின் கடைசித் திருப்பத்தைத் தலைப்பில் சொல்லாதீர்கள்' மீறல்.

பட்டாணி:

நன்றாக இருந்தது. ஆனால் பண்ணையார், மனைவி சோரம் போதல், அப்பாவி மாட்டிக் கொள்ளுதல், சலிப்பை ஏற்படுத்துகிறது.

ஆலம்:

நன்று. வெகு வேகமான கால ஓட்டம்.

தூவல் :

பேனா வாழ்வில் வெவ்வேறு தருணங்களில் ஊடுறுவி வருவது, பிடித்திருக்கின்றது.

சம்யுக்தை:

மற்றுமொரு மரணக் கதை. திகட்டுகிறது சோகம்.

அப்பா சொன்ன நரிக்கதை:

குழந்தைப் பாலியல் வன்முறை. இன்னும் வலுவாகச் சொல்லியிருக்கலாம்.

மை லிட்டில் ஏலியன் ப்ரெண்ட்:

ரொம்பப் பிடித்த கதை இது தான்.

***

அன்பு நிலாரசிகன்,

நீங்கள் இந்தக் கதைகளை எழுதிய காலத்திலிருந்து இப்போது வெகுவாக முன்னகர்ந்திருப்பீர்கள். உங்களுக்கே இப்போது இவற்றைப் படிக்கும் போது 'ஒரு போதாமையை' உணர்வீர்கள் என்று நினைக்கிறேன்.

ஒட்டு மொத்தமாகத் தொகுப்பைப் படிக்கும் போது, தோன்றியதை இங்கே சேர்க்கிறேன்.

அ. ஏன் எல்லாக் கதைகளும் சோகத்தைப் பிரதானப்படுத்துகின்றன? மீதி எட்டு ரசங்களையும் தொட்டு எழுதலாமே.

ஆ. கிராமம் என்றால் சோகம். நகரம் என்றால் துரோகம். இப்படி ஒரு மனப்பதிவு எப்படி உங்களுக்கு வந்தது என்று தெரியவில்லை. கிராமத்திலும் சந்தோஷம்,
நகரத்திலும் நல்லவர்கள் இருப்பார்கள் என்று நம்பலாமே.

இ. குழந்தைகள் பேசுவதாக நிறைய கதைகள் இருந்தன. ஆனால் வாக்கியங்கள் குழந்தை சொல்வது போல் இல்லை. நிலாரசிகன் சொல்வது போல் அத்தனை மெச்சூர்டாக இருக்கின்றன. இயல்பே போய் விடுகின்றது, அதனால்.

ஈ. துல்லிய விவரங்கள் எதிலும் இல்லை. படிப்பவர்களை உள்ளே உணரச் செய்யும் தகவல்கள் அநேகமாக எதிலுமே இல்லை.

உ. இக்கதைகளி எழுதும் போது, நீங்கள் கவிதை மனநிலையிலிருந்து கதைக்கு நகார்ந்து கொண்டிருக்கும் ட்ரான்சிஷன் பாதையில் இருந்திருப்பீர்கள் என்று தோன்றுகிறது. சம்பவங்கள் நிறைந்த கதையாகவும் இல்லாமல், அழகான கவிதையாகவும் இல்லாமல், கவிதை முலாம் பூசிய சுருக் கதைகளாக இருக்கின்றன.

ஊ. நீங்கள் ஒரு கதை'சொல்லி'யாகக் காட்சியளிக்கிறீர்கள். நான் விரும்புவது கதை'காட்டியை'.

எ. ஒரு கதைக்கு உயிர் கொடுப்பதே வசனங்கள் தான். அவற்றை மிகவும் குறைவாகவே எழுதியிருக்கிறீர்கள். அவை இல்லாமயால், எனக்கும் கதைக்கும் நடுவே ஒரு திரை போல் உணர்கிறேன்.

ஏ. ஏன் எல்லாக் கதைகளும் தன்மை நிலையில் இருக்கின்றன? மாற்றலாமே!

ஐ. பேச்சுத்தமிழா, எழுத்துத்தமிழா என்றா குழப்பம் கடைசி வரை விலகவேயில்லை போல் தோன்றுகிறது.

இறுதியாக,

இப்போது நீங்கள் கதைகள் எழுதினால் (உதாரணம், சமீப உங்களது மாய யதார்த்த முயற்சி) டைரிக் குறிப்புகளின் எந்தக் கதையையும் விட பெட்டர் என்று சொல்வேன்.

அன்புடன்,
இரா.வசந்த குமார்.

பி.கு. அடுத்த முறை சென்னை வரும் போது, அடி வாங்காமல் தப்பிப்பேனா..? :)

***

புத்தகம் : யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்

புத்தக வகை : சிறுகதைகள்.

ஆசிரியர் : நிலாரசிகன்

கிடைக்குமிடம் : நூற்கடைகள்., EZeeBookshop

பதிப்பகம் : திரிசக்தி பதிப்பகம்.

விலை : 70 ரூ.

Wednesday, March 31, 2010

Justin Bieber - A New Star..!!!


தினாறு வயது. இன்னும் குரலில் பையன் அடையாளம் குறையவில்லை. ஆனால் இந்தப் பையன் இன்றைய ஆங்கில பாப் இசை உலகின் புத்தம்புது இளவரசன்.

நகரங்களில் நேர் நிகழ்ச்சிகளில் பெண்கள் உற்சாகக் கூச்சலிடுகிறார்கள்; ஃபேஸ்புக்கில் கால் கோடி ரசிகர்கள்; ட்வீட்டரில் பதினாறு லட்சம் பின் தொடர்வோர்.

இத்தனை அழகும், மயக்கும் குரலும் கொண்ட இந்த இளன், நிறைய காலம் இசையாள்வான் என்று தோன்றுகிறது, நங்கைகளுக்குக் கொஞ்சம் மட்டும் இடம் கொடுத்தால்!

Baby ft. Ludacris.



One Less Lonely Girl...!!



One Time...!



Justin Bieber

wiki