பூனாவிற்கு வந்து முதன்முறையாக வெளியே சென்றேன்.
பர்வதி மலை என்பது அதன் பெயர். பேஷ்வாக்களின் தர்பார் நிகழ்ந்த பகுதி அது. ஒரு சிறு குன்றாக உள்ளது. நூற்றுக்கு மேற்பட்ட படிக்கட்டுகளைக் கொண்டது. மேலே சென்றால் சில கோயில்களும், தர்பாரும், ஒரு அரும்பொருட்காட்சியகமும் உள்ளன.
ஒரு சனிக்கிழமை அங்கே சென்று வரலாம் என்று முடிவெடுத்துக் கிளம்பினேன். அங்கே தான் தவறு நிகழ்ந்தது.முந்தின வெள்ளி இரவு தான் கடைசியாகச் சாப்பிட்டது. சனிக்கிழமை விரதம் என்று இருந்து விட்டேன். எனவே அன்று மாலை நான்கு மணிக்கு அறையிலிருந்து கிளம்பும் போது, நான் சாப்பிட்டு இருபது மணி நேரங்கள் ஆகி விட்டிருந்தன.
ஹடப்ஸரிலிருந்து ஆட்டோ பிடித்தேன். (ஏனெனில் பேருந்துகள் இன்னும் பிடிபடவில்லை). கிளம்பி ஸ்வர்கேட் வழியாகச் சென்று பர்வதி மலை அடிவாரத்தில் நிறுத்திய போது மீட்டர் 120 எனக் காட்டியது. இங்கெல்லாம் மீட்டர் மட்டுமே கேட்கிறார்கள்.
அடிவாரத்தில் பூ, மாலை, தேங்காய்க் கடைகளுடன் சின்ன உணவுப்பொருட்களும் விற்றார்கள். வியப்பாகப் பார்த்தேன். பிறகு புரிந்தது ஏன் என்று. மலையேறத் தொடங்கினேன். அகலமான படிக்கட்டுகள் தான். ஆடுகள் தாவித்தாவி ஓடின. அங்கேயே வாழும் சிறுவர்கள் பம்பரம் சுழற்றிப் பறக்க விட்டனர். பாறைக் குழுமமே மலை என்றாயிற்று.
கிட்டத்தட்ட ஒரு நாள் முழுக்கச் சாப்பிடாதது, எக்கச்சக்கமாய் ஊதிப்போயிருந்த உடல் எல்லாம் சேர்ந்து.. ஆம், அதே தான். பத்து, பதினைந்து படிக்கட்டுகள் ஏறுவதற்குள்ளாகவே புஸ்..புஸ்ஸென்று மூச்சு வாங்கியது. உடலின் அனல் ஊற்று கிளம்பி வந்தது. ஓரக் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு நின்றேன். கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன. எப்போதும் மலையேறுகையில் தோன்றும் அதே நினைப்பு. ‘ஆகா.. சாகப் போகிறோம். மொழி தெரியாத ஊரில் செத்து இங்கேயே ஆவியாக ஆலைய வேண்டுமா? ஆவியானாலும் சொந்த ஊரில் ஆவியாவேன்..’ என்று உறுதி கொண்டு, கொண்டு வந்திருந்த நீர் பாட்டிலில் நீரருந்தி தாகம் தணிவித்தேன்.
இந்த நிலையில் எந்த பெருமிதமும் பார்க்கக் கூடாது என்று, படிக்கட்டிலேயே அமர்ந்து கொண்டேன். மூச்சு சீரடையும் வரை எழுந்திருக்கவே கூடாது. அதற்கு அரை நாள் ஆனாலும் சரி என்று. பிறகு, நான் மட்டுமல்ல பெரும்பாலானவர்கள் அமர்ந்து அமர்ந்து தான் மேலேறுவதைக் கண்டு ஓர் அல்ப சந்தோஷம் வந்தது. இப்படியே சென்று, ஒரு வளைவு திரும்பியதும், ஒரு சின்ன மண்டபம் போல ஓரத்தில் இருந்தது. அங்கும் ஒரு சிறு அமரல். அதை ஒட்டி, ஒரு கல் திட்டில் ஒரு பெண்மணி சிறு குழந்தையுடன் அமர்ந்திருந்தார். மறு ஓரத்தில் அமர்ந்து மீண்டும் நீர். பசி மயக்கம் வேறு. மண்டபத்திலிருந்து உச்சி வரை சின்னப் பையன்களும் பெண்களும் ஏறி, இறங்கி ஓடிப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தனர். பயிற்சியாளர் விசிலடித்துக் கொண்டு அவர்களை கவனித்தார். விசுக்..விசுக்கென்று மின்மினிப் பூச்சிகளைப் போல பறந்த இளையோர்களைப் பார்க்கையில் எழும் பெருமிதமும் பெருமூச்சும்.
கடும் பசி. தண்ணீர் மட்டுமே குடித்துக் குடித்து அனலவிக்கையில், உச்சியில் இடது புறமாக ஒரு உணவகம். தெய்வமே நேரில் தோன்றியது போல். ‘ஒரு ப்ளேட் போகா’ என்றேன். அது வருவதற்குச் சற்று நேரமாகும் என்பது போல் தோன்ற, காத்திருக்க இயலாது என்று ஒரு லெமன் சர்பத். உப்பும் எலுமிச்சையும் கலந்த அக்குளிர்ந்த நீர் நா தீண்டி உள்ளே இறங்குகையில் தான் எத்தனை குளிர்ச்சி..! கண்களில் ஒளி வந்தது. காதுகள் திறந்து கொண்டன. உலகம் எனக்குள் நுழைந்தது.
கீழே நகரின் வாகனங்களின், மக்களின், பாடல்களின், வீசும் காற்றின், பறவைகளின் அத்தனை ஓசைகளும் கேட்கத் தொடங்கின. வந்த பாதையை விட மற்றுமொரு கடும்பாதையும் அருகில் இருந்தது. அங்கே அவ்வளவாக மக்கள் வராததால், ஆம்... காதல் இணைகள் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். காத்திருந்து வந்த போகாவையும் உண்டு விட்டு தெம்பாக, மதிலுக்குக் கீழே எட்டிப் பார்த்தேன். குழந்தைகளும் சிறார்களும் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தனர். மேலேறினேன்.
நுழைவாயிலுக்கு நேராய் பாண்டுரங்கர் கோயில். அதை ஒட்டி இடது புறத்தில் அருங்காட்சியகம். அதையும் தாண்டிச் சென்றால், தர்பாரும், முருகன் கோயிலும் விஷ்ணு கோயிலும் வருகின்றன. இரு கோயில்களுக்கு நடுவில் ஒரு வெட்ட வெளி. அதன் நடுவில் வட்டமாய்க் கூரையிட்டு, தியானம் செய்யலாம் என்று போர்ட் இருந்தது. மக்கள் அங்கே தான் சிதறிச் சிதறி அமர்ந்திருந்தனர்.
நான் முதலில் விஷ்ணு கோயிலுக்குச் சென்றேன். சரியாக நான் உள்ளே நுழைவதற்குள், பூசகர் வெளியே வந்து கதவுகளைப் பூட்டினார். கதவுகளில் தெரிந்த இடைவெளியில் கும்பிட்டு விட்டு, முன் நின்ற கருடரையும் தொழுதேன். இந்தக் கோயில்களின் கோபுரம் வங்கக் கோயில்கள் போல் தாமரை மொட்டுகள் போல் கூம்பிக் கூம்பிச் சென்று அமைகின்றன. கோயிலைச் சுற்றுகையில் மராத்தியர்கள் கட்டி வைத்த கோட்டைச் சுவர்களில், வீரர்கள் நின்று தொலைதூரத்தை நோக்கும் இடைவெளிகளில் எல்லாம், இன்றைய காதலர்கள் அப்பியிருந்தனர்.
வெளியே வந்து, அந்த தியான வெளிக்குச் சென்றேன். அதை ஒட்டி மலை விளிம்புக்குச் சுவர் கட்டி வைத்திருக்க, அந்தக் கொஞ்சம் சரிந்த பகுதியில் பலர் நின்று தற்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். மாலை வேகமாக மங்கிக் கொண்டே வந்தது. தூரத்தில் தெரிந்த சஹ்யாத்ரி மலை மடிப்புகள் மஞ்சள் காற்றில் மிதந்தன. காலடியின் கீழ் நகரின் ஒரு பகுதி வீடுகளாலும், வாகனங்களாலும் இயங்கிக் கொண்டிருக்க ஸீவேஜ் போர்டு கேம்பஸை ஒட்டி ஒரு சிறு நதி புகுந்து நுழைந்து எங்கோ சென்றது. அபார்ட்மெண்டுகள் நின்றெழுந்து வானைத் தீண்டின. தெருக்கள் நாய்களாலும் வானம் பறவைகளாலும் இரைச்சல் கொண்டிருந்தன.
வெளி வந்து மேடேறி, கார்த்திகேயன் ஸந்நிதிக்குச் சென்றேன். நம் அழகன் இங்கெ கரிய திருமேனியில் மின்னினான். வேண்டி விட்டு, சுற்றி வருகையில் ஆறுமுகனின் அவதாரமும் ஆற்றிய வினையும் ஓவியங்களாக வரையப்பட்டிருந்தன. அதில் முருகன் என்றும் அவன் சொல்லப்ப்ட்டிருக்க, சிலிர்த்தேன். முருகு என்றால் அழகு என்று தமிழ் கூறும். கேரளத்தில் கூட அவனை ‘ஸூப்ரம்ண்யன் ஸந்நிதி’ என்றே சொல்கிறார்கள். மராட்டிய மண்ணில் இவர்கள் ஆட்சி நிகழ்ந்த பகுதியில், குமரனை முருகன் என்று சொல்லியிருப்பது கண்டு உளமகிழ்ந்தேன். தஞ்சையை ஆண்ட போது இது வந்திருக்கலாம் என்று ஓர் எண்ணம்.தொடர் படங்களில் கார்த்திகைப் பொய்கை இல்லை, ஆனால் கங்கையில் பிறந்ததாகச் சொல்கின்றனர். சூரபத்மனைக் கொல்லும் வரை படங்கள் இருந்தன. சுற்றி விட்டு, மேல் காற்று திரண்டு பாய்ந்த சூழ்ந்த அம்மதில் சுவர்கள் பல நூற்றாண்டுகளைக் கண்டிருந்தன.
முருகன் கோயிலை ஒட்டி பேஷ்வாக்களின் தர்பார். அவர்களின் படங்கள், முகலாயர் காலத்திலும் அதற்குப் பின்பும் மராத்திய சாம்ராஜ்யத்தின் பரப்பளவு, மன்னர் வருகை, போர்கள் முதலியன வரையப்பட்டிருந்தன. பார்த்து விட்டு, வாசலைக் காத்து நின்ற ஊமைச் சிறு பீரங்கிகளைத் தடவி விட்டு, முன்னே வந்தேன். அருங்காட்சியகத்திற்கு அப்புறம் போகலாம் என்று பாண்டுரங்கர் கோயிலுக்குப் போனேன். கரிய திருமேனிகள். பளபளப்பாய் இருந்தனர்.
இன்னும் கொஞ்சம் மேலே படியேறிப் போனால், மயக்கும் இரு விழிகளோடு மோகினியர் வாயிலைக் காக்க, ஆலவாயன் இறைவன் கோயில், குடும்பத்தினருடன். லிங்க ரூப நாயகன் கோயிலில் ஒரு பெண் பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்தார். வணங்கி விட்டு இடதுபுறம் பிள்ளையார், சுற்றி வருகையில் பவானி மாதா, முன்புறம் பெருமாள் சிற்றாலயங்கள். வணங்கி விட்டு, ஒட்டியிருந்த சிறு திண்ணைப் பகுதியில் அமர்ந்து சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். வெளிவந்து அருங்காட்சியகம் சென்றேன். நுழைவுக் கட்டணம் 10 ரூ.
தரைத்தளமும் முதல் தளத்திலுமாக இருந்தது. கீழே மையத்தில் பெரும்பல்லக்கும், மத்தளங்களும், பெரும் சாமான்களும் இருக்க, சுற்றிலும் கண்ணாடி பத்திரங்களுக்குள் அரசர்கள் பயன்படுத்திக் கிடைத்தவை வைக்கப்பட்டிருந்தன. சமையல் பாத்திரங்கள், வாட்கள், ஆயுதங்கள், நகைகள், நாணயங்கள், புகைப்படங்கள், ஆடைகள், தலைப்பாகைகள், ஓவியங்கள், மினியேச்சர் பொம்மைகள். வரலாறு எனும் பெரும் நதியைச் சல்லடைகள் வழியாக அள்ளிப் பார்ப்பது போல் இருந்தது. கைக்குக் கிடைத்த இந்தச் சின்னத் துளிகளைக் கொண்டு அந்த நதியை நாம் நிரப்பிக் கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. இடையில் நமது அழுக்குகளையும் கலந்து விட்டால், கலங்கிய நதி ஆழத்தில் எதையும் காண விடாது, குழைசலை மட்டுமே காட்டுகின்றது.
‘தொடாதீர்’ என்று எழுதப்பட்டிருந்த மத்தளங்களைச் சிறுவர்கள் அடித்தனர். குறு வாட்களை ஆண்கள் நுண்ணிப்பாகப் பார்த்தனர். அவர்களின் கண்களுக்குள் போர் நிகழ்ந்து அவை குருதி சொட்டிக் கொண்டிருக்கும். கிளுகிளுத்த குரலில் மங்கையர் நகைகளையும் அவற்றின் பெட்டிகளையும் ஆடைச் சுருக்கங்களையும் பார்வையால் நீவினர்.
வெளியே வந்து மலையிறங்கத் தொடங்கினேன். மண்டபத்து வளைவில் இறங்குகையில் ஒரு தம்பதி சினத்துடன் ஆனால் உரத்த ஒலியின்றி சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். அவர் ஒரு செல்போனை ஓங்கி வீசி எறிந்தார். யாருடையது என்று தெரியவில்லை. அது கல் படிக்கட்டுகளில் விழுந்து அதிர்ந்து உருண்டு மோதி உடைந்து இறங்கிக் கொண்டிருந்த என் கால்களைக் கடந்து சிதறியது. ஒரேயொரு கணம் நின்று விட்டு தொடர்ந்தேன்.
அடிவாரத்தில் ஒரு குளிர்நீர்பானக் கடைக்குப் போய் லஸ்ஸி கேட்டால், அப்போது தான் தீர்ந்தது என்றார். எதிரேயிருந்த அனுமார் கோயிலுக்குச் சென்றேன். எண்ணெயும் பூக்களும் வாங்கி சனீஸ்வரருக்கு எண்ணெய் சாத்தி, அனுமனை வேண்டிக் கொண்டு வெளிவந்தால், பொங்கல் பிரசாதம் போய்க் கொண்டிருந்தது. சுடச்சுட வாங்கி கிடைக்காத லஸ்ஸியை மறந்து கிடைத்த பொங்கலைச் சுவைத்து கைகழுவினேன்.
அப்புறம் ஒரு மாதிரி பல திசைகளில் நடந்து, பஞ்சமி என்ற உணவகம் இருக்கும் காரணத்தாலே ‘பஞ்சமி நிறுத்தம்’ என்று பெயர் பெற்று விட்டிருந்த புள்ளியை அடைந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஹடப்ஸர் செல்லும் பேருந்துக்காகக் காத்திருந்து வெறும் சிவாஜி நகர் ரயில் நிலையம் செல்லும் வண்டிகளாகவே பார்த்து வெறுத்துப் போய், பின் வந்த வேனில் ஏறி பதினைந்து ரூபாய்க்கு ஹடப்ஸர் வந்தடைந்தேன். மணி 10:15 இரவு.