Saturday, November 01, 2008

ஒரு பயணம், ஒரு கவிதை!

ழுத்து வலித்தது. காரணம் கடைசியில்!மாலை ஆறு மணி சுமாருக்கு பாளயம் நிறுத்தத்தில் இறங்கி ஸ்டேடியத்தின் முகப்பில் இருந்த ஆர்ச்சின் வழி நுழைந்தால், ப்ராக்டிஸ் மேட்ச் நடந்து கொண்டிருந்தது. கேலரியில் இரண்டு அடுக்குகளில் நூல் அழகம் அமைக்கப்பட்டு இருந்தது. தரைத்தளத்தில் பொது நூல்கள் மற்றும் முதல் தளத்தில் டெக்னிக்கல் நூல்கள்.தரையில் நுழைந்து அப்படியே எல்லா ஸ்டால்களையும் பார்த்து படிக்கட்டுகள் வழி செல்லும் போது, இடையில் குறுக்கிடும் ம்யூசிக் சி.டி. ஸ்டால்களையும் பார்த்து விட்டு, தரிசனக் க்யூ போல் வளைந்து வளைந்து புத்தகங்களுக்கு இடையில் சென்று, முதல் தளத்தின் தலையணை டெக்னிக்கல் புத்தகங்களைத் தாண்டி பைசா செலுத்த வேண்டும்.

எல்லாமே தலைகீழ்.

க்ரவுண்டைச் சுற்றி ஒரு புறத்தில் சர்ச்சும், மசூதியும் இருக்கும். இரண்டையும் சேர்த்து வைத்து ஒரு ஸ்நாப் அடிக்க வேண்டும் என்பதற்காக சரியான லொகேஷன் தேடி, கேலரியில் இரண்டு வரிசைகள் ஏறிப் பிடித்து விட்டு, அப்படியே முதல் தளத்திற்குச் சென்று விட்டேன். எல்லோரும் எதிரில் வருகிறார்கள். 'சரி, வந்தது வந்து விட்டொம். இப்படியே தொடர்வோம்..' என்று அப்படியே நடந்தேன்.நிறைய ஸ்டால்கள். ஒவ்வொன்றிலும் டி.சி.புக்ஸ் பேட்ஜ் அணிந்த ஒருவர் பொறுப்பாகப் பார்த்துக் கொண்டு, 'May i help you sir?' என்கிறார்கள். பயந்தது போல் இன்றி, பெரும்பாலும் ஆங்கில நூல்கள் தான். ஒரு குட்டிப் பகுதியில் மட்டும் முழுக்க முழுக்க மலையாளம். ஒரே மூச்சாய்க் கடந்தேன்.ஒரு ஸ்டாலில் வாங்கிய சி.டி. இரண்டை வைத்து விட்டு வந்து, மீண்டும் கொஞ்ச நேரத்தில் உணர்ந்து, அங்கே செல்ல பொறுப்பாளரே எடுத்துத் தந்தார். அந்த ஸ்டாலில் ரேர் விசிட்டர்ஸ் போல!

புத்தகங்களை மேய்ந்து கொண்டிருக்கும் போது, தரைத் தளத்தில் ஃப்ளூட் இசை நிகழ்ச்சி முடிந்து விட்டு, சாக்ஸ் மற்றும் கீ-போர்ட் நடக்கத் தொடங்கி இருந்தது.நிறைய நிறைய பெண்கள்..! கொஞ்சமாய் ஆண்கள்...! மாடர்ன் பாட்டிகள், ஜீன்ஸ் சிறுவர்கள், கவுன் சிறுமிகள், எலெக்ட்ரிக் குக்கர் டெமோ மக்கள், மலையாள மனோரமா லக்கி ட்ரா ஸ்டாலில் மிகை கூட்டம், தாஜ் மஹால் பிட்சர்ஸ்க் ஃபோட்டோ புத்தகத்தைப் புரட்டியே அத்தனையையும் பார்த்து விட்ட நான்கு இளைஞர்கள், 'ஞான் .... கம்யூட்டர் சென்டரிலே ஆனு கம்ப்யூட்டர் படிச்சு' என்ற நடிகர் சீனிவாசனின் (கத பறயும் போள்) தொடர் விளம்பர வீடியோ ஓடிய எஜுகேஷனல் சி.டி. ஸ்டாலில் போட்டொஷாப் சொல்லிக் கொடுத்த உதாரணத்தில் கலர் பூசப்பட்ட த்ரிஷா முகம், பீம்சேன் ஜோஷியின் மெமரபிள் கலெக்ஷன், கானக் கந்தர்வன் கே.ஜே.யேசுதாஸின் சூப்பர் ஹிட்ஸ், மதர் இண்டியா, ரோசாப்பூ ரவிக்கைக்காரி ஆடியோ சி.டி அருகிலேயே ம்யூசிக் டுடேயின் அருவ நீர் சி.டி., விரைவில் அலுத்துப் போய் அப்பா சட்டையை இழுத்துக் கொண்டிருந்த அந்த சிறுவன், இருட்டிய பின் ரிலாக்ஸாக ட்ராக் அருகின் புல்வெளியில் முழுக்கப் படுத்துக் கொண்ட குடும்பத் தலைவன், வாசல் மரத்தில் தொங்கிய சீரியல் செட் புள்ளிகள், வேர்க்க வேர்க்க இரவு நடை போட்ட கிழத் தொந்தியர், கனத்த புத்தக கவரைக் கையில் பிடித்து பாட்டி உட்கார்ந்து கவனிக்க, பக்கத்தில் இருந்த பேத்தி விரல் விட்டு எதையோ எண்ணிக் கொண்டிருக்க, சாக்ஸில் 'கண்ணே கலைமானே...', 'என்னவளே...என்னவளே...' வாசித்து விட்டுக் கடைசியாக கனமாக வாசித்து முடித்தார், 'வந்தே மாதரம்... சுஜலாம்...சுபலாம்...'!

கொஞ்சமாய் வாங்கியன ::

: Quantum Revolution III - What is Reality? - G.Venkataraman.

: Quantum Revolution II - QED : The Jewel of Physics. - G.Venkataraman.

: Wavelets - Theory, Applications, Implementation. - M.V.Altaisky.

: Manorama Music - Heritage Series - Madhava Murali - Flute Music CD by Kudamaloor Janardanan.

: Scintillating Sounds of Nadaswaram. - T.N.Rajarathinam Pillai - Audio CD.

: The Company of Women - Kushwant Singh.

: The last thousand days of the British Empire (The demise of a superpower, 1944 - 47) - Peter Clarke.

: Selected Short Stories of Guy de Maupassant.

: Whistling Steam (Romance of Indian Rails) - Pocket Art Series.

நாளைக்கே யாரும் இவற்றை எல்லாம் படிச்சாச்சான்னு கேட்டு விடக் கூடாது. ஒரு பதிவுக்காக இங்கு போட்டுக் கொள்வது தான்.கழுத்து வலித்த காரணம், வலது பக்கமும், இடது பக்கமும், குனிந்தும் , நிமிர்ந்தும் புத்தகங்களை ஒரு இரண்டு மணி நேரங்கள் பார்த்துக் கொண்டே இருந்ததனால் தான்...!

***
இப்போது ஒரு கவிதை!

வலி!

வலி கொடுத்தது,
எப்போதும்
எண்ணெய் தடவிய
ஒற்றைச் சடையில்
நடந்து வரும்
மறுத்த காதலி,
ஒருவனோடு
கை கோர்த்துக்
கொண்டு
போகையில்
போட்டிருந்த
போனி டெய்ல்!

Friday, October 31, 2008

DC Books Book Fair - Trivandrum.DC Booksல் சந்திரசேகரன் நாயர் மைதானத்தில் புத்தக விழா நேற்றில் இருந்து துவங்கி இருக்கின்றது. நாளை மாலை சென்று வரலாம் என்று நினைக்கிறேன். ஆனால் இந்த முறை கைகளை இறுக்கி கட்டிக் கொள்ள வேண்டும். இந்த மாத புக் பட்ஜெட் ஓவர். அதைப் பற்றிய ஒரு செய்தி ::

THE sixth DC International Book Fair and cultural fest will begin at Chandrasekharan Nair Stadium on Thursday. The 12-day fair will be inaugurated by Chief Minister V.S. Achuthanandan at 5 p.m. Actress-filmmaker Nandita Das will be present at the inaugural function. O.N.V. Kurup will inaugurate the cultural fest.

The book fair will bring together some 300 international publishers and readers can choose from over 10 lakh books on a variety of topics, said Ravi Deecee, CEO of DC Books. The genres include fiction, non-fiction, translations, children’s literature, travel, cookery, music, arts and science, technology, self-help, architecture, business and management, finance and the like. And each day of the fest will be dedicated to eminent personalities.

There will be competitions for children, book releases, reading sessions and cultural programmes. On the first day, K. Balakrishnan’s ‘Kannurkota’ and K.P. Appan’s ‘Charithrathe Ningalkoppam Koottuka’ will be released. Parvathy Baul will present Baul music.

On the second day dedicated to Swati Thirunal, George Onakkoor’s ‘The Wind in the Mountains’ (translation of ‘Parvathangalile Kaattu’) will be released. Prince Rama Varma will lead the Swati Thirunal commemorative oration. The same evening, R.B. Sreekumar, ex-DGP of Gujarat, will be present at the release of his book ‘Gujarat: Irakalkku Vendiyulla Porattam’. It will be released along with P.M. Nair’s ‘Kalam Prabhavam’. Usman Bhai will present ghazals.

On November 1, dedicated to A.R. Rajaraja Varma, the 37th edition of Perumbadavam Sreedharan’s ‘Oru Sankeerthanam Pole’ will be released at 5 p.m. Forest Minister Binoy Viswam will be present. Actor Sreenivasan and U.A. Khader will attend another session on the same day, at 6.15 p.m. The books to be released are ‘Alighadil Oru Pasu’ by Anvar Abdullah, ‘Kamuki’ by B. Murali, ‘Kazhuthappulikalude Chiri’ by Vinu Abraham, ‘Prakasham Parathunna Aankutty’ by K.P. Ramanunni, ‘Pennudal Churayalukal’ by U.A. Khader and ‘Malabar Express’ by Shihabudheen Poithumkadavu. Wings will present a flute and piano concert.

With November 2 being dedicated to EMS, J. Raghu will deliver the commemorative lecture at 4 p.m. ‘Idam Thedi’ by Sreenandhu and ‘Gaddar: Paattum Porattavum’ by Mathulamani will be released. Polika, Thiruvananthapuram, will present folk music.

On November 3, Ayyankali will be remembered and Tamil writer Bama will lead the commemorative lecture. She will attend the day’s function along with Tamil writer Charu Niveditha and Minister G. Sudhakaran. The books under the Great Indian Literature series - ‘Panamullu’ by Bama, ‘Bhairavaragam’ by Bimal Mitra, ‘Parathi’ by Tarasankar Banerjee, ‘Aaranyathinte Adhikaram’ by Mahasweta Devi, ‘Mrithyunjayam’ by Beerendrakumar Bhattacharya and ‘Swargam Thedunna Manushyar’ by Sunil Gangopadhyaya - will be released the same evening. ‘Khazakkinte Ithihasathilude’, a play based on O.V. Vijayan’s ‘Khazakkinte Ithihasam’, will be staged.

November 4 will be dedicated to P.K. Balakrishnan and the books to be released on that day are ‘Hijadakalude Porul’ by P. Surendran and ‘Iranginadappu’ by Tessy Mariyam. ‘Prakasham Parathunna Penkuttikal’, a drama based on the famous short stories by T. Padmanabhan, will be staged in the evening.

Thikkurissi Sukumaran Nair will be remembered on November 5. The 25th edition of O.N.V. Kurup’s ‘Bhoomikku Oru Charamageetham’ will be released along with S.P. Ramesh’s ‘Dwaipayanam’. A documentary based on ‘Bhoomikku Oru Charamageetham’, directed by Sarath, will be screened.

V.S. Achuthanandan will be the chief guest on November 6. ‘Malayalikal Ingane Marikkano’ written by Sibi Mathews, ADGP-Intelligence, and poetry collections will be released.

On November 7, Elamkulam Kunjan Pillai will be remembered. Soorya will present the play ‘Premalekhanam’ in the evening.

Aravindan will be remembered on November 8. Besides book releases, there will be a Santoor concert by Aalamkod Hari. On November 9, Finance Minister Thomas Isaac will release his book ‘Kendra Samsthana Bandhangal.’

There will be literary and theatre contests for children as part of the book fair. These include quiz programmes (October 31 and November 1), poetry writing (November 4and November 5), reading (November 3), painting (November 2), story writing (November 6 and 7), essay writing (November 8) and book review (November 9). There will be a reading corner for some special young guests. Prizes will be distributed at the valedictory function on November 10. For details about the contests, contact 9995834262/9747968997.

நன்றி :: http://www.expressbuzz.com/

அடுத்த வார இறுதிக்குள், 'மலையாளத்தில் என்னைக் கொண்டாடுகிறார்கள்; மண்டுத் தமிழ்நாட்டில் பைசாவுக்கு பிரயோஜனமில்லை' என்றொரு 'குட்டி'ப் பதிவும், கூடவே, நம் யாருக்கும் புரியாத எழுத்துக்களில், மாத்ருபூமி, கலாகெளமுதி பத்திரிக்கைகளில் இருந்து பேப்பர் கட்டிங்குகளையும் எதிர்பாருங்கள்.

படம் நன்றி :: http://webstarter.easily.co.uk/users/www.mildredhowells.co.uk/upload/zd0004.jpg

Thursday, October 30, 2008

அவள் அத்தனை அழகு!

ன்று ஆனந்த தாண்டவம் பாடல்கள் கேட்டேன்.

வாத்தியாரின் அருமையான ரொமாண்டிக் நாவலான 'பிரிவோம் சந்திப்போம்' கதை என்று, இயக்குநர் காந்தி கிருஷ்ணா சொல்கிறார். மதுமிதாவாக தமனா. ரகுவாக ஒரு புதுமுகம். பார்ப்போம், எப்படி வருகின்றது என்று!

ஜி.வி.பிரகாஷ் குமார், இசை இளமையாக, ஃப்ரெஷ்ஷாக வர வேண்டும் என்று கொஞ்சம் மெனக்கெட்டிருப்பது போல் தெரிகின்றது.

ரேடியோ கம்யூனிகேஷனில், நிகழ்ச்சி அலைகள் குறைவான ஃப்ரீக்வென்ஸியில் (அதிர்வெண்) இருக்கும். அப்படியே அனுப்பினால், கொஞ்சம் தொலைவு செல்வதற்குள் ஆற்றல் காலியாகி காணாமல் போய் விடும். எனவே நெடுந்தொலைவு அனுப்புவதற்கு, கேரியர் வேவ் என்ற அதிக அதிர்வெண் அலையின் மேல் ஏற்றி அனுப்புவார்கள். அலையின் ஆற்றல், அதிர்வெண்ணிற்கு நேர்த் தகவு. அதாவது அதிர்வெண் அதிகரிக்க, அதிகரிக்க, அந்த அலை அதிக தொலைவு வரை செல்லும்.

ட்ரான்ஸ்மிட்டர் ஏரியாவில் கேரியர் அலையின் மேல், செய்தி அலையை ஏற்றி அனுப்ப, ரிஸீவர் ஏரியாவில், அழகாக அவற்றைப் பிரித்து, செய்தி அலையை மட்டும் ஸ்பீக்கர் வழியாக அனுப்பி, கேரியர் அலையை கெப்பாசிட்டர் வழியாக க்ரவுண்ட் செய்து விடுவார்கள்.

ஆனந்த தாண்டவம் பாடல்களைக் கேட்கும் போது, அத்தனை பாடல்களும் எங்கோ கேட்ட, பிரபலப் பாடல்கள் போலவே இருக்கின்றன.

வள் அத்தனை அழகாக இருந்தாள்.

உடலில், ஒளி ஊடுறுவும் சிவப்பு. சுண்டவே வேண்டாம். சுண்ட நினைத்தாலே சிவக்கும் மென்னியள்; மேனியள். பேர் பூஜா என்றிருந்தது, அவளது கார்டில்! யாரும் அறியாத வண்ணம் அவள் அருகில் சென்றேன். சுற்றுமுற்றும் பார்த்தேன்.

யாரும் என்னைக் கவனிப்பதாகத் தோன்றவில்லை.

ஒரு சிறுமி, ப்ரிட்டானியா க்ரீம் பிஸ்கட்டைக் காட்டி அடம் பிடித்துக் கொண்டிருக்க, கண்ணாடி போட்டிருந்த அம்மா மறுத்துக் கொண்டே இருந்தாள். அவர் கையில் இருந்த பேகில், மசாலா ஐட்டங்கள், ஹார்லிக்ஸ் பேக், பட்டர், ஜாம், ஸ்பின்ஸ், டவ். ஒரு மஞ்சள் வேட்டி ஆண் 'ஷேவிங் செட் எவிட?' என்று கேட்டார்.

அலை பாயும் சீருடை மங்கைகள் பற்றிய பயமும், கழுத்து திரும்பி கண்காணிக்கும் கேமிராக்கள் அச்சமும், ஜூம் வட்டக் கண்ணாடி காட்டும் பயங்கர உருவம் பற்றிய கவலையும் இன்றி நெருங்கினேன்.

'தொட்டுப் பார்க்கலாமா?'. ஒரு தயக்கம். யாரேனும் பார்த்து விட்டால்..?

இன்னும் நெருங்கி... நெ...ரு...ங்....கி....

ஹாப்பா...! என்ன ஒரு வாசம். மூக்கின் வழி நுழைந்து, மூளை வரை ஜிவ்வென்று ஏறும் சொர்க்க வாசம்.

ஆட்காட்டி விரலால் மெல்லத் தொட்டேன்.

என்ன ஒரு வழவழப்பு..! என்ன ஒரு வளைவு...!

"ஸார்...! வேணுங்கில் பறஞ்சால் மதி..!"

சட்டென குரல் இடையூற, கண்களைத் திறந்தேன். கிறக்கத்தில் கண்கள் மூடியிருந்ததையே அப்போது தான் உணர்ந்தேன். வெட்கம்.

"எத்ரா...?"

"பதினஞ்சு..!" அவள் லேசாக சிரித்தது போல் இருந்தது.

ஒன்றுக்கு இரண்டாய் வாங்கி என் கேரி பேகில் வைத்துக் கொண்டேன். பூஜா சோப் அத்தனை பிடித்துப் போனது எனக்கு...!!

"ருக்குப் போயிருந்தியளா..? இன்னிக்குத் தான் வந்தியளா...?" ஸ்ரீகார்யம் பேருந்து நிறுத்தம் அருகில் இருக்கும் ஒரு தமிழ் ஹோட்டலில் இன்று காலை, பழக்கமான சர்வர் கேட்டார். நெல்லைப் பக்கத்தில் இருந்து வந்திருக்கிறார்.

"அண்ணாச்சி..! சொல்றதைப் புரிஞ்சுக்கோங்க. நான் தொடர்ந்து ரெண்டு, மூணு நாளா வரலைன்னா ஊருக்குப் போயிருக்கேன்னு அர்த்தம். அப்புறம் எப்ப வர்றேனோ, அன்னிக்குத் தான் திரும்பி வந்திருக்கேன்னு அர்த்தம் இல்லை. அதுக்கு ஒரு ரெண்டு நாள்... இல்ல, ஒரு நாள் முன்னாடியே வந்திட்டேன்னு அர்த்தம்.

அந்த ரெண்டு நாளும் வீட்டில இருந்து குடுத்து விட்ட முறுக்கு, கச்சாயம், ஸ்வீட்ஸ், பலகாரங்கள் சாப்பிட்டுட்டு காலி பண்ணிட்டு, அதெல்லாம் தீர்ந்து போனப்புறம், வேற வழியில்லாம பதினெட்டு ரூபாய்க்கு நீங்க கொடுக்கற என் நகம் அளவு கூட தடிப்பு இல்லாத இந்த ரெண்டு ஒல்லி தோசைகளும், இட்லியும் சாப்பிட வருவேன்..."

அவர் உடனடியாக இடத்தைக் காலி செய்தார்.

கொஞ்சம் கம்பராமாயணத்தில் இருந்து எனக்குப் பிடித்த சில பாடல்கள். விளக்கம் எல்லாம் அவசியமில்லை. நன்கு புரியும் என்று நம்புகிறேன்.

வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லை நேர் செறுநய் இன்மையால்
உண்மை இல்லை பொய் உரையி லாமையால்
ஒண்மை இல்லை பல் கேள்வி ஓங்கலால்.

தருவனத்துள் யானியற்றும் தவவேள்விக்(கு)
இடையூறாத் தவஞ்செய் வோர்கள்
வெருவரச்சென் றடைகாம வெகுளியென
நிருதரிடை விலக்கா வண்ணம்
செருமுகத்துக் காத்தியென நின்சிறுவர்
நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் திடுதியென உயிரரக்கும்
கொடுங்கூற்றின் உளையச் சொன்னான்.

(வெருவர : அஞ்ச; நிருதர் : அரக்கர்;செரு : போர்; உளைய : வருந்த)

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனியிந்த உலகிற்கெல்லாம்
உய்வண்ணமன்றி மற்றோர் துயர்வண்ணம் வருவதுண்டோ?
மைவண்ணத்து அரக்கி போரில் மழைவண்ணத்து அண்ணலே நின்
கைவண்ணம் அங்குக் கண்டேன் கால்வண்ணம் இங்குக் கண்டேன்.

எண்ணரும் நலத்தினாள் இனையள் நின்றுழிக்
கண்ணொடு கண்ணினை கவ்வி ஒன்றையொன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்.

(இனையள் : இப்படிப்பட்டவள்)

"ஆழிசூழ் உலக மெல்லாம் பரதனே ஆள நீபோய்த்
தாழிரும் சடைகள் தாங்கித் தாங்கரும் தவமேற் கொண்டு
பூழிவெங் கானம் நண்ணிப் புண்ணியத் துறைகள் ஆடி
ஏழிரண் டாண்டின் வாவென்(று) இயம்பினன் அரசன்" என்றாள்.

(பூழி : புழுதி)

"தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னைத்
தீவினை யென்ன நீத்துச் சிந்தனை முகத்தில் தேக்கிப்
போயினை யென்ற போழ்து புகழினோய் தன்மை கண்டால்
ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ தெரியின் அம்மா!"

நிகழ்ச்சிகளைச் சொல்லிக் கொண்டே வந்து, ஆங்காங்கே செய்யுள்களைச் சேர்த்துள்ளார். விளக்கங்களை விட, செய்யுள்கள் இனிமை! சும்மாவா, கம்பர் அல்லவா..?

கம்ப ராமாயணம் - உரைநடைச் சுருக்கம் - ஆசிரியர் : வரதமணி. லிப்கோ பதிப்பகம். இப்போது தான் சுந்தர காண்டம் வந்திருக்கிறேன்.

Monday, October 27, 2008

வாழ்க்கை ஒரு சினிமா...சினிமா...!

ண்பர் தமிழ்ப்பறவை, சினிமா தொடர்பான தொடர்ப்பதிவுக்கு என்னையும் இணைத்து உள்ளார். நன்றி.

ஒரு காலத்தில் படங்களின் மேல் வெகு பைத்தியம் பிடித்து அலைந்திருக்கிறேன். குலதெய்வம் கும்பிட, செல்கையில், உணவு முடித்து தூங்கி விட்டேன். திடுக்கென இரவு 1 மணிக்கு எழுந்து, 'என்னை ஏன் எழுப்பவில்லை?' என்று அம்மாவைச் சத்தம் போட்டு, பேய்த்தனமாக 'நாயகன்' பார்த்திருக்கிறேன்.

சட்டென எல்லாம் காணாமல் போயிற்று. பத்தாவதில் பார்த்த ஒரே படம், 'முத்து'. அதுவும் தலைவருக்காக!

பிற்காலத்தில் பார்த்த படங்களின் கேட்டகிரிகள் எக்குத் தப்பாய் எகிறிப் போய், தற்சமயம் எல்லாம் போரடித்து, மீண்டும் டாம் அண்ட் ஜெர்ரிக்குத் திரும்பி இருக்கிறேன்.

இப்போது வெகு செலக்ட்டிவ்!

1.அ) எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?

ஒரு வயது. 'பயணங்கள் முடிவதில்லை'. குமாரபாளையத்திற்கு நான், அம்மா, அத்தையுடன் கே.ஓ.என். தியேட்டருக்குச் சென்றதாக அம்மா கூறுகிறார்கள். நான் செம தூக்கமாம். படத்தினாலா, மீ குழந்தைப் பருவத்தாலா என்று தெரியவில்லை.

ஆ)நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?

இதுவும் சரியாகச் சொல்ல முடியவில்லை. 'மெல்ல திறந்தது கதவு' அல்லது 'உயிரே உனக்காக'.

இ)என்ன உணர்ந்தீர்கள்?

அப்போது என்ன உணர்ந்தேன் என்று ஞாபகம் இல்லை. ஆனால இந்த இரண்டு படங்களில் ஏதோ ஒன்று தான், நான் பார்த்திருக்கும் முதல் படமாக இருக்கலாம் என்று தோன்றக் காரணம், இவற்றின் பாடல்கள்.

'மெ.தி.க.'வில் வரும் 'குழலூதும் கண்ணனுக்கு' மற்றும் 'உ.உ'வில் வரும் 'பன்னீரில் நனைந்த பூக்கள்' பாடல்களைக் கேட்கையில் மனதின் திறக்காத ஜன்னல் திறப்பது போல் ஒரு பரவச உணர்வு வரும். அதை என்னவென்று விளக்க முடிவது கடினம். பரமஹம்சர் சொல்லும் சமாதி நிலை என்றெல்லாம் எண்ணிக் கொள்வேன்.

மீச் சிறு வயதில், இன்னும் சரிவர நீங்கியிராத முன் ஜென்ம வாசனையை, இந்தப் பாடல்கள் தம்மோடு பிணைத்துக் கொண்டனவோ என்று நினைக்கிறேன்.

2)கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

இந்த கேள்வி வரிசையில் மிகவும் கடினமான கேள்வியாக நான் கருதுவது இதைத் தான். 2006 மூன்றாம் க்வார்ட்டரில், பெங்களூரில் நண்பர்களோடு நட்ராஜில், 'சில்லென்று ஒரு காதல்'. இன்னும் கொஞ்சம் குழப்பம். இதுவா இல்லை அதே கால கட்டத்தில்,கோவை அர்ச்சனாவில் 'வேட்டையாடு விளையாடு'வா?

3)கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

நேற்று தீபாவளித் திருநாளில், எல்லாத் தொலைக்காட்சிகளும், பில்லாவும், சந்திரமுகியுமாக அலறிக் கொண்டிருந்த நேரத்தில், வீட்டு பி.சி.யில் 'சரோஜா' பார்த்தேன். தியேட்டர் ப்ரிண்ட். சரியாகவே தெரியவில்லை. ஒரு படம் பார்க்கும் முன் அதன் விமர்சனங்களைத் தெரிந்து கொள்வதில், அதை ரசிப்பதில் இடையூறுகள் ஏற்படுகின்றன என்பதை உணர்ந்தேன்.

4)மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

'மெ.தி.க.' தான்.

ஒரு ஞாயிறு மாலை டி.டி.யில் போட்டிருந்த படத்தை மூன்றாம் மாடியில் இருந்த சித்தப்பா வீட்டில் பார்த்து விட்டு, வீட்டுக்கு அவசரமாகச் செல்ல இறங்கிக் கொண்டிருந்த போது, கரண்ட் கட்டாகி விட, பயத்தில் அவசரமாக ப டி க ள் தாவித் தாவி இறங்க, தரைத்தளத்தில் ஒரு 'சுரீர்'.

வீட்டுக்கு வருவதற்குள் கரண்ட் வந்து விட, வெளிச்சத்தில் பார்க்க இடது காலின் முட்டியில் ஒரு வெட்டு. தசையைக் காணவில்லை. ரத்தமே வராமல், ஆழம் வரை வெட்டி... வெள்ளையாகத் தெரிந்தது.

மாரிமுத்து டாக்டரிடம் கூட்டிச் சென்று, அடுத்த நாள் தையல் போடுகையில், நான் கத்தாமல் இருக்க என் கால்களை அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்த அப்பா மயக்கம் போட்டு விழ, (உங்கப்பாக்குத் தான் ஊசி போடணும் போல! - டாக்டர்.) மரப்பு மருந்து போட்டு, தையல் போட்டு, வீட்டுக்கு வந்து இரண்டே மணி நேரத்தில் தையல் 'பா' வென பிளந்து, உடலே ஆட்டோமேட்டிக்காக சதை சேர்ந்து கொண்டு... எஸ்.எஸ்.எல்.சி., டி.சி.யில் அடையாளத்திற்காக ஒரு தழும்பை விட்டுச் சென்றது.

அடிபட்ட காரணம், காம்பவுண்ட் கேட்டில் இடுக்கிக் கொண்டிருந்த ஒரு கூர்த் தாழ்ப்பாள். 'மெல்லத் திறந்தது கதவு' பார்த்து விட்டு, அவசரமாக கதவைத் திறந்ததால் ஏற்பட்ட தாக்கம் இது.

மற்றொரு படம் 'உருவம்'. அப்பாவுடன் போய், பாதிப் படத்திலேயே பயந்து 'வீட்டுக்குப் போகலாம்'..! திட்டு வாங்கிக் கொண்டே ரிடர்ன் ஆனோம். நினைத்துப் பார்த்தால், மோகன் அந்தப் படத்திற்கு மேக்கப் போடாமல், நார்மலாக நடித்திருந்தாலே பயம் கிளப்பி இருக்கலாம் என்று தோன்றியது.

மற்றொரு மறக்க இயலாத படம், The Never Ending Story.

இன்றைய கற்பனை என் உள்ளத்திற்கு அடிப்படை வித்து இப்படம் எனில் அதிகமன்று.

5.அ) உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

அப்படி எதுவும் இல்லை.

நமக்கு சினிமாவும், அரசியலும் இல்லாமல் பொழுது போக்கு இல்லை. அதிலும் சினிமாவில் நிகழும் அரசியலும், அரசியலில் நடக்கும் சினிமாத்தன சீன்களையும் பார்க்கையில், இவற்றால் எல்லாம் பாதிக்கப்படக் கூடாது என்று தெளிவாக இருக்க முயல்கிறேன்.

ஆ)உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

பேசும் படம் மற்றும் The Sixth Sense.

உண்மையான சினிமா என்பது வசனங்களை விட, காட்சி ஊடகத்தால் மட்டுமே நிறைவு பெறச் செய்வது என்ற என் எண்ணத்தைப் பேசும் படம் High Extreme லெவலில் சொல்லியது என்றால், TSS ஒரு சிறுகதைக்கான இலக்கணத்தை அழகாகப் பின்பற்றி முடிந்திருக்கும்.

இயந்திரத் தொழில்நுட்பங்களை விட, மன உணர்வுகளைத் தொட்டு ஏதேதோ தளங்களுக்கு கூட்டிச் செல்லும் டெகினிக்குகளைப் பெரிதும் ரசிக்கிறேன்; மதிக்கிறேன்.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

சுண்டல் மடித்துக் கட்டிய பேப்பரில் இருந்து சுஜாதா காட்டும் திசைகள் வரை எது கிடைத்தாலும் படிப்பதால், பலசரக்கோடு சினிமாவும் கலந்து விடும். தனியாகத் தேடிப் படிப்பதில்லை.

7.தமிழ்ச்சினிமா இசை?

இதுவும் படிப்பது போல், எல்லோரையும் கேட்பேன். மற்றபடிக்கு இசை பற்றி ஏதும் ஞானம் இல்லாததால், மெளனம் காப்பது மேல்! ஆதி ஒலி மெளனம் அல்லவா...?

8) தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

சுந்தர வசனங்களுக்காகத் தெலுங்கு, அழகிய மங்கைகளுக்காக மலையாளம், ஹள்ளி ஹள்ளி டயலாக்குகளுக்காக கன்னடம், கலர்ஃபுல் காட்சிகளுக்காக ஹிந்தி, அதிரடி ஏக்ஷனுக்காக ஹாங்காங், தைவான், ஜப்பானீஸ், சைனீஸ் (என்ன வித்தியாசங்கள்...?), ஹாலிவுட், ஒரே ஒரு ஈரான் படம், பார்க்கிறேன்.

தாக்கம்...? ம்ஹூம்...!

9) தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இதுவரை ஏதும் இல்லை. பிற்காலத்தில் நல்ல கதைகளைக் கொடுக்க நேரிடலாம்.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தக்கன தப்பிப் பிழைக்கும்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

ஆப்டிமிஸ்டாக நினைக்கையில், நிறைய பேர் இன்னும் படிப்பின் பக்கம் திரும்ப வேண்டும். படிக்க Roald Dahl கவிதை. ப்ராக்டிக்கலாகப் பார்த்தால், மெகா சீரியல்கள் பக்கம் தாய்மார்கள் சாய்ந்திட, வீடியோ கேம்ஸ், போகோ, கார்ட்டூன்கள் பக்கம் சிறுவர்கள் பாய்ந்திட, ஆண்கள் தயவால் A படங்கள் ச்சும்மா பிச்சுக் கொண்டு ஓடும்.

சரி, A படங்களுக்கு மொழி பிரச்னை இல்லை அல்லவா? அவை வரலாம் தானே...!

***

எம்.எல்.எம்.மின் ட்ரீ ஸ்ட்ரக்சர்படி, கிளைகள் விரிய விரிய கை மாற்றிக் கொடுக்க வேண்டியவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும். நான் அழைப்பது வீரசுந்தர், சீனிவாஸ், அனீஸ்.

ஐயமற்று..!

நிஜம் போல் பொழிகின்ற நடன நிழல்கள். உருவம் பொறுத்து உறைக்கின்ற உணர்வுகள். தளர்வுற்றும், கடினமாகியும் நரம்புகள் கடத்தும் அமிலக் காரக் கரைசல்கள் நடத்திச் செல்லும் வாழ்க்கைச் சொற்களை!

கணக்கீடுகளாலும், குறியீடுகளாலும் எத்தனையோ சொல்லப்படாமல் காணாமல் போகின்றன எண்ணங்கள். நிலை பெயர்ந்து, நிலை மாறிய கணங்களில் நிகழ்ந்திருக்கலாம், நிகழாமல் போன நிகழ்ச்சிகள்.

தவற விட்ட பயணிகளை எண்ணிக் கையில் இருக்கும் துளிகளைத் தொலைக்காமல் இருக்கலாம். புரிதலின் பாற்பட்டு சொல்கின்ற மாறுதல்கள், மட்டும் சுட்டுச் சுட்டுச் சொல்லி வைக்கும், ஒளிப் பொட்டுக்களை!

மாறா மாற்றம் நிறம் பெறும் மேகத் துணுக்குகளில் நித்தம் நித்தம் வடிவம் மாறும்; துகள் மாறும்; திசை மாறும்; பொடிப் பொடியாகிப் பிசிறுப் பிசிறாய்ப் பிரிந்து, கலைந்து, காணாமல் போகும். புகைப் பிரதேசங்களில் பிழைத்திருக்கச் செய்ய பூரணமாக, புள்ளியாகப் பொறிந்து, நுரைத்து எரி கோலங்களாய்ப் புதைந்து போகும்.

Sunday, October 26, 2008

சென்னையில் ஒரு விழாக்காலம்.

திருவனந்தபுரம் - சென்னை டி.வி.சி. எக்ஸ்பிரஸ் சனி காலை 09.40க்கு சென்ட்ரலில் எண்ட்ரி கொடுக்கும் போது, எனக்கு சந்தேகமாக இருந்தது. இது நாம் விட்டுப் போன சென்னை தானா?

வானம் கறுப்பாய் இருந்தது. முந்தின நாளில் பெருமழை மாலையில் பெய்து, 'மழ பேஞ்சு ஊரெல்லாம் தண்ணி'.

கூட வந்த நண்பர் ஒருவர்க்கு கார் வரும் வரை, துணை இருக்கலாம் என்று தீர்மானித்து, அந்த பத்து நிமிடங்களைச் செலவழிக்க எனக்குத் தெரிந்த ஒரே ஸ்தலமான 'ஹிக்கின்பாதம்ஸ்' சென்றேன். புனைவு எழுத்துக்களில் ஆர்வங்கள் குறைந்து கொண்டே வருவதால், வாத்தியாரின் இரண்டு புத்தகங்கள் வாங்கினேன். 'தோரணத்து மாவிலைகள்' மற்றும் 'கற்பனைக்கும் அப்பால்'. விசா பப்ளிகேஷன்ஸ் வெளியீடான இந்த நூல்கள் மொத்தம் ரூபாய்.113. (75 + 38). ஹி.பா.வில் கூடவே ஜக்கி அவர்களின் 'ஆனந்த அலை' என்ற ல்லி சி.டி. இலவசம்.

முன்னது இலக்கிய நூல்கள் குறித்த அவரது ஆய்வுக் கட்டுரைகள் எனில், பின்னது அவரது ஃபேவரைட்டான அறிவியல் ஆர்ட்டிகிள்கள்.

வழக்கமாக வெளியே வந்து சப்வேயில் புகுந்து, நுழைந்து, வெளி வந்து ஜி.ஹெச். ஸ்டாப்பில் நின்று, சைதை சென்று, வேளச்சேரி செல்வேன். இந்த முறை பறக்கும் ரயிலை முயல்வோம் என்று தீர்மானித்து, பார்க் ஸ்டேஷன் சென்றேன். சரியான தகவல் தெரியாததால், பீச்சுக்கு டிக்கெட் எடுத்து விட்டேன். பிறகு தான் கூப்பிடு தொலைவில் பார்க் டவுன் ஸ்டேஷனுக்குச் சென்றாலே போதும் என்று தெரிய வந்தது.

பீச் ஸ்டேஷன் போய், நெடிய வரிசையில் நின்று, டிக்கெட் எடுத்து, பறக்கும் ரயிலில், மாடி ஏறி, சேறாய்க் குழம்பியிருந்த ட்ரிப்ளிகேன் க்ரிக்கெட் க்ரவுண்ட்களையும், மின்னும் மயிலை கோபுரங்களையும், பசுமை பூத்த ஐ.டி. ஹைவே சாலை ஓர டைடல் பார்க்கையும், ஏரியை மீறிய சாக்கடை நீரில் மூழ்கி மிதக்கும் தரமணி குடிசைகளையும் பார்த்து, காலியான வேளச்சேரி டெர்மினஸில் இறங்கிக் கொண்டேன்.

கூடவே, தோரணத்து மாவிலைகளைச் சுவைத்துக் கொண்டே வந்தேன்.

காலச்சுவடு ஆண்டுச் சிறப்பிதழ் ('91), கூனன் தோப்பு, புதுமைப்பித்தன் படைப்புகள், ஆதம்பூர்காரர்கள், அன்று, திசைகளின் நடுவே நூல்களின் விமர்சனங்களும், புதிய எழுத்தாளர்களுக்கு 11 யோசனைகள், கன்னட சினிமா, பாரதிதாசனும் தந்தை பெரியாரும் (இக்கட்டுரையின் கடைசி வரி :: ... அதுபோல் பெரியாரின் கருத்துக்கள் அனைத்தும் தமிழ் நாட்டின் பொதுச் சொத்தாக்கி படிக்க விரும்புவோர்க்கு எளிதில் கிடைக்க வசதி செய்ய வேண்டும்.) போன்ற பொதுக் கட்டுரைகளுமாக வாத்தியாரின் ஒரு புது(எனக்கு)முகத்தைப் பார்க்க/படிக்க முடிந்தது.

சென்னையில் இருந்த காலகட்டத்தில் ஒரு ஞாயிறு நாள் மாலை ஸ்பென்ஸர் லேண்ட் மார்க்கில் புத்தகவாசங்கள் பிடித்துக் கொண்டிருந்த போது, வலது புற மூலையில் ஓவியங்கள் செக்ஷனின் முன்புறம் ஒரு ஸ்டூலை இழுத்துப் போட்டுக் கொண்டு ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் ஈர்த்தார். அருகில் சென்று பார்த்தால், இனிய அதிர்ச்சி.

பொன்னியின் செல்வனைத் தூரிகைகளால் வரைந்து உயிர் கொடுத்த மணியம் அவர்களின் செல்வன், அவர். திரு.மணியம் செல்வன் அவர்கள்.

கொஞ்சமாக ஓவியங்கள் பற்றி அவரிடம் பேசி விட்டு வழக்கம் போல் ஒர் ஆட்டோகிராப், ஒரு நிழற்படம் என்று எடுத்துக் கொண்டு வந்து விட்டேன்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஆ.விகடனில் அவரது பாரீஸ் சுற்றுப்பயணம் பற்றி ஒரு கட்டுரை வந்தது. 17-ஆம், 18-ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய ஓவியங்கள் பற்றி அவ்வப்போது விசிட் அடித்து, க்ளாஸிக்கல் ஓவியக் கூறுகளை நான் ருசிக்கின்ற இத்தளத்தைப் பற்றி அவரிடம் தொலைபேசினேன்.

மூன்றாம் முறையாக, இன்று நானும் என்னை விட சிறப்பாக படம் தீட்டும் ஆற்றலுடைய என் இளைய சகோதரருமாக அவரது இல்லத்திற்குச் சென்றோம்.திரு ம.செ. அவர்கள். பின்புலத்தில் அவரது தந்தை திரு.மணியம் அவர்களின் ஓர் ஓவியம்.

பறக்கும் ரயிலில், மந்தைவெளியில் இறங்கி, எப்பொதும் போல் நான்கைந்து தெருக்கள் தேடித் தேடி கடைசியில் அவர் சொல்லி இருந்த விலாசத்திற்கு வந்தடைந்தோம். மாலை ஐந்து மணியில் இருந்து இரண்டு மணி நேரங்கள். பல விஷயங்கள்; பல கருத்துக்கள்.

எளிமையாக இருக்கிறார். மேன் மக்களின் குணமாகிய 'சிறியோரை இகழ்தலும் இலமே' என்பது போல், நமது சிறுபிள்ளைத்தனமான கேள்விகளுக்கும் பதில் உகுக்கிறார்; தலைமுறை இடைவெளிகள் அற்ற பேச்சு!

Excerpts ::

* 'பற்பல ஓவியர்களின் படைப்புகளைக் கண்டு வருவதால், அவற்றின் பாதிப்பு உங்களின் படைப்பிலும் தோன்றினால், அதை சுலபமாக 'காப்பி அடிக்கறான் சார், இவன்' என்று சொல்லி விடும் சாத்தியம் உள்ளதே?' என்று கேட்டதற்கு,

'ஆரம்ப நிலையில் இருக்கும் எந்த படைப்பாளியின் படைப்பிலும் இத்தகைய தாக்கம் இருக்கும். அதை Influence எனலாம். மற்றபடி பாதிப்பு என்று சொல்லக் கூடாது. ஆனால், வளர வளர, இத்தகைய தாக்கங்கள் மறைந்து, தான் காணும் ஓவியங்களை Reference ஆக வைத்துக் கொண்டு, அவற்றின் core-ஐ மட்டும் உள் வாங்கிக் கொள்ளும் அளவிற்கு பக்குவம் அடைந்து தனது ஸ்டைலில் தான் தன் படைப்புகளைக் கொடுப்பான்' என்றார்.

ஆச்சரியம்! நீல.பத்மநாபன் அவர்களைச் சந்தித்து இதே போன்ற கேள்வியைக் கேட்ட போதும் இதனை ஒத்த பதிலைத் தான் சொன்னார்.

* பல நவீன பெய்ண்ட்டிங் சாஃப்ட்வேர்களைப் பயன் படுத்தினாலும், கைகளால் வரைவது போல் வருவதில்லை என்றார். அது மைக்கேல் ஏஞ்சலோவின் ஆதிமனிதனும், இறைவனும் விரல்களால் தொட்டுக் கொள்வது போல், தனது கை விரல்களும், ட்ராயிங் போர்டும் தொடர்பு கொள்கின்றன என்றார். என்ன ஒரு விளக்கம்!

எனக்கு இது ஞாபகம் வந்தது.

எனினும் ஃபைனல் டச்களுக்காகவும், இன்னும் ப்ரெசிஸன் வேண்டும் என்றால் மட்டும் கோரல் ட்ரா, போட்டோ ஷாப் பக்கம் போவதாகக் கூறினார்.

* ரொம்ப நாளாக கேட்க வேண்டும் என்று வைத்திருந்த கேள்வி. மாருதி அவர்களின் பெண் படங்கள் அழகின் சாரத்தை வர்ணங்களில் பிழிந்து திகட்டாமல் தருகின்றன. ரசிக்கிறோம். ஜெ. அவர்களின் பெண் படங்கள் வேறோர் உணர்வு நிலைக்கு நம்மை உசுப்பி விடுகின்றன. திருட்டுத்தனமாக ரசிக்கிறோம். உங்கள் படங்களின் பெண்களைப் பார்த்த மாத்திரத்தில், ஒரு மரியாதை காட்டத் தோன்றுகின்றதே..! இதற்கு நீங்கள் சரித்திரத் தொடர்கள் அதிகம் வரைவதாலும், உங்கள் தந்தையின் கவனிப்பின் தாக்கமும் காரணம் என்று கொள்ளலாமா..?

இக்கேள்விக்கு நீண்ட பதில் சொன்னார். சில மட்டும் ::

இருக்கலாம். பெரும்பாலும் நான் எடுத்துக் கொள்ளும் அசைன்மெண்ட்டுகள் அப்படிப்பட்டவையாகப் பார்த்துக் கொள்வதால் அப்படி ஓர் இமேஜ் வந்திருக்கலாம்.

நான் பெண்களை வரைகையில் அவர்களது முகத்திலேயே முழு அழகையும், முழு உணர்வையும் கொண்டு வர முயல்வேன்.

வீட்டின் வரவேற்பறையில் அனைவரும் படிக்கக் கூடிய வகையில் கதைகள் நான் எடுத்துக் கொள்வதால், என் படங்களும் அந்த லிமிட்டைத் தாண்டாமலேயே இருக்கும். சரித்திரக் கதைகளிலும், வெறும் மார்க் கச்சைகள் மட்டும் இருக்குமாறு வரையும் சூழ்நிலை இருந்தாலும், அதிலும் ஒரு மரியாதை ஏற்படுமாறு வரைகிறேன்.

* அவர் சந்தித்த, சந்திக்கின்ற காப்பிரைட் பிரச்னைகளை விரிவாகப் பேசினார். கல்யாணப் பத்திரிக்கை அடிக்கின்ற நகரின் இரு பிரபலமான கார்டு கம்பெனியினர், அவரது படைப்புகளைப் பயன்படுத்துவதில் காப்பிரைட் பிரச்னைகள் வரும் என்ற எண்ணமே இல்லாமல் பயன்படுத்துவதில் இருந்து, கூச்சமே இல்லாமல் வெவ்வேறு இடங்களில் பயன்படுத்தப்படுவது வரை சொன்னார்.

*புத்தகங்கள் பார்த்து வரையக் கற்றுக் கொள்வது என்னைப் போன்ற அமெச்சூர் ஓவியர்களுக்கு உகந்த வழியா?

ஆரம்பத்தில் சரி. பின் போகப் போக ரியல் பொருட்களைப் பார்த்து வரையப் பழக வேண்டும். ஆனால், வெறும் புத்தகங்களை மட்டும் பார்த்துக் கொண்டே இருப்பது, புத்தகங்களை மட்டும் வைத்துக் கொண்டு சமைக்க முயல்வது போன்றது எனலாம். சரி, நீ என்னென்ன புத்தகங்கள் வாங்கி இருக்கின்றாய்?

'ராஜா ரவிவர்மா கலெக்ஷன் மற்றும் எழுத்தாளர் இளவேனில் தொகுத்த 'அழியாத கோடுகள்' என்ற ஓவியர் ஆதிமூலம் பற்றிய நூல்' என்றேன்.

அதிலிருந்து பேச்சு லைன் ட்ராயிங், கான்டெப்ரரி ட்ராயிங், லிட்ரேச்சர் உலகத்திலும் நிலவும் இதே போன்ற கமர்ஷியல், மாடர்ன் ரைட்டிங், அந்த டிவிஷன் என்றெல்லாம் பேச்சு திசைகள் அற்றுப் பறந்தது.

'கலை வளர்ச்சிக்கு இது போன்ற பிரிவுகள் தேவையாக இருந்தாலும், ஓரளவிற்கு மேல் போய் விடக்கூடாது. பல எக்ஸ்பிரிமெண்ட்டுகள் செய்து பார்ப்பது எல்லா கலைகளிலும் அவசியமான ஒன்று. ஆனால் அவற்றில் நல்லது காலத்தால் நிற்கும்; மற்றவை கழிந்து போகும்' என்று முடித்தார்.

*திருவனந்தபுரத்தில் இருக்கும் நேப்பியர் மியூசியத்தில் இருக்கும் சித்ரா ஆர்ட் கேலரி மற்றும் ரவிவர்மா கேலரி பற்றியும் விசாரித்தார். நாம் தான் முதல் பயணமே அங்கே சென்று வந்திருக்கிறோமே! என்று கொஞ்சம் சொன்னேன்.

விரல் வழி விளக்கின் ஒளி பரவும் ரவிவர்மாவின் ஓவியம் அவரது கேலரியின் வாசலை அலங்கரிப்பதை நினைவு கூர்ந்தார்.

* மேலும் அவரது மவுண்ட் கைலாஷ் யாத்திரை, இப்போது செய்கின்ற ப்ராஜெக்டுகள், நடிகர் / ஓவியர் சிவகுமாரோடான ஓவிய அனுபவங்கள், அந்தக் கால ஓவிய மெதட்கள், கவிஞர் வைரமுத்து படைப்புகளுக்காக அவரது கிராமம் சென்றது, வாழ்நாள் பலனான கவிஞர் வாலியுடனான இரு பெரும் ப்ராஜெக்டுகள் என்று பல தரப்பட்டு பேசினார். நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தோம்.

* அவர் வீட்டம்மா கொடுத்த காஃபி சூப்பராக இருந்தது.

* 'டொம்.. டொம்' என்று அணுகுண்டுகளும், 'பட...பட...'என சர வெடிகளும் தீபாவளி முன்னிரவை ஒலியால் அதிரடித்துக் கொண்டிருந்தாலும், அவ்வப்போது நிறுத்தி, பின் பேச்சைத் தொடர்ந்தார்.

* நடுவில் ஒரு கால் வர, நாங்கள் அவர் வரைந்த காலண்டரில் இருந்த நடன நாரீணிகளின் அதிஸ்வரூப அழகை அருந்திக் கொண்டிருந்தோம். அவரது தந்தையார் திரு.மணியம் அவர்கள் வரைந்திருந்த சிவ - பார்வதி சொக்கட்டான் ஆடும் ஓவியம், தெய்வாம்சம். (சொல்லவும் வேண்டுமா..?)

* கிளம்பும் போது, வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார். பொதுவாக இவ்வளவு நேரம் (2 மணி நேரம்) பேசுவதில்லை என்றாலும், சற்று ஓய்வாக இருந்தபடியாலும், ஞாயிறு மாலை என்பதாலும் பேசினார்.

* எனது ப்ளாக்கைச் சொன்னேன். (சார்! நான் கூட கதை எழுதுவேன் சார்...!). குறித்து வைத்துக் கொண்டு, பார்ப்பதாகச் சொன்னார்.

எனக்கு இது போன்ற சந்தர்ப்பங்களில், நகுலன் அவர்களின் கவிதை நினைவுக்கு வரும்.

என்னைப்
பார்க்க வந்து,
தன்னைப் பார்
என்று
சொல்லிச் சென்றான்.

கிட்டத்தட்ட இது போன்று தான் வரும்.

மீண்டும் பறக்கும் ரயில் வழியாக வீடு திரும்பினோம். சில ஸ்நாப்ஸ் ::இப்போது இந்திய நேரம் 01.40, திங்கட்கிழமை..! அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...!!