Wednesday, January 27, 2010

#காந்தி...#ஜெயமோகன்...#லஞ்ச்...@ஈரோடு..!





ந்த வருடம். ஜனவரி இருபத்து நான்கு. ஞாயிற்றுக்கிழமை. லக்ஷ்மி நகர் பைபாஸ் ஜங்ஷன்.

இரண்டு நேர்கோடுகளாய்த் தார்ச் சாலைகள் வெட்டிச் செல்லும் கத்திரிக்கோலின் மையப்புள்ளியில் இருக்கும் ஆவின் விற்பனையகத்தில் பால் பாக்கெட்டுகள் தயாராய் இருந்தன.'U' வடிவச் சந்திப்பில் தூர நகரங்களுக்குச் செல்லும் பயணிகள் குடைகளில் ஒளிந்திருக்க, மணி பத்தை நெருங்கும் போது, வெயில் வானெங்கும் விசிறியிருந்தது. புதிய மேம்பாலத்தின் மேனி மேல் டீசல் வேகங்கள் சீறிச் செல்ல, ஆற்றுப்பாலத்தின் கீழே காவிரியில் தண்ணீர் திறந்து விட்டிருந்தார்கள். ஜே.சி.பி. கற்பழிப்பிலிருந்து அதுவரை தப்பித்திருந்த புளிய மரத்தின் சரிந்த கிளையில் சாக்கிட்டு, இளநிகள் தலை சீவப்படக் காத்திருக்க, குமுதம் படித்துக் கொண்டிருந்த உரிமையாளன் அருகில் அரிவாள் மேல் ஈக்கள்.

நிறுத்தத்திலிருந்து இருபதடிகள் தள்ளி நின்று கொண்டிருந்தேன். என் கைகளில் பாரதிமணி அவர்களின் 'பல நேரங்களில் பல மனிதர்கள்'. முந்தின வெள்ளி இரவு, அனந்தபுரத்தில் இருந்து கிளம்பும் போது அவருடன் சற்று நேரம் பேசினேன். ('நீங்கள் இன்னும் கொஞ்சம் முன்னதாகவே எழுத வந்திருக்க வேண்டும், சார்'). மற்றுமொரு முறை ஈஸ்ட்மென் வர்ண டெல்லியை உணரும் அனுபவத்திற்காக எடுத்து வந்திருந்தேன். கூடவே செல்போன் மற்றும் சார்ஜர்.

சார்ஜர்..?

புது வீட்டில் இன்னும் மின்சாரக் கனவுகள் காண முடியவில்லை. சுவர்களில் சிங்கிள் பேஸ் சர்க்யூட் தான் பதிக்கப்பட்டிருக்கிறது. த்ரீ பேஸ் சர்க்யூட்டுக்கு மாற்றம் செய்யச் செலவாகும். மேலும் த்ரீ பேஸுக்கு மின் வாரியத்தில் டெபாஸிட் செய்ய வேண்டிய தொகை, டேக்ஸ் மாதங்களில் சிந்திக்க வைக்கின்றது. ஈ.பி.யில் த்ரீ பேஸ் மீட்டர்கள் மட்டுமே உள்ளன. காலையில் அதற்கு அப்ளிகேஷன் தட்டி விட்டால், மதியத்திற்குள் கனெக்ஷன் கொடுக்கப்பட்டு, மாலையில் சீரியல் பார்த்துக் கலங்கலாம் என்றார்கள். சிங்கிள் பேஸ் மீட்டருக்கு அநியாய டிமாண்டாம்; ஸ்டாக்கும் இல்லையாம்.

டெண்டர் கொடுக்கப்பட்ட கம்பெனியுடன் வாரியத்திற்கு எங்கேயோ முறுக்கிக் கொள்ள, ஈ.பி.யில் வேறு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய முயற்சிக்க, முந்திய நிறுவனத்தார் கேஸ் போட்டு ஸ்டே ஆர்டர் வாங்கி விட, அவசர நடவடிக்கையாக ரீஜனுக்கு இவ்வளவு என்று ஆர்டர் செய்து, கொல்கத்தாவிலிருந்து கண்டெய்னர்களில் சிங்கிள் பேஸ் மீட்டர்கள் வரும் வரை, குப்பாண்டம்பாளையத்தில் என் வீட்டின் கம்பிகளில் எலெக்ட்ரான்களின் பாய்ச்சல் இல்லை.

மின்சாரம் இலாப் பொழுதுகள் அமைதியாகவே இருக்கின்றன. டி.வி. ஊமையாய்த் தவம் இருக்கின்றது; மிக்ஸி, கிரைண்டர் மெளன வேஷம் பூணுகின்றன; கம்ப்யூட்டர் 'கம்'மென்றிருக்கின்றது. ஜன்னல்களுக்கு வலையடித்து, மாலை ஆறு மணியானாலே கதவையும் சாத்தி விடுவதால், காதுகள் மேல் நள்ளிரவில் நடனமிட்டு ரீங்காரிக்கும் கொசுக்கள் போர்த்தாத நிம்மதியான குளிர் உறக்கம் என்றாலும், பெரும் சோதனை செல்போன் வடிவில் வருகின்றது.

இன்னும் ஐந்து வருடங்களில் பரபரப்பு நகராகும் என்ற சாத்தியக்கூறுகள் தென்படும், ஊருக்கு ஒதுக்குப்புறக் கிராமத்தில், மொபைல் டவர்கள் மிச்சக் கருணைகளை மட்டும் சிந்துகின்றன. கொஞ்சம் வேகமாகத் தும்மினாலே, சிக்னல் சிக்கலாகி 'சீராம்பாளையம்', 'பள்ளிபாளையம்' என்று ஊசலாடுகிறது. படிக்கட்டின் கீழ் கொண்டு போனால், ஆண்டெனா குச்சிகள் மாயமாகித் தன் எக்ஷிஸ்டென்ஷியல் கட்டாயத்திற்காக, சிக்னல் தேடி அலைபாய, அதன் வயிற்றுத் தீனி வேகமாய்க் கரைந்து, அரை இரவில் செத்துப் போகின்றது. எனவே எங்கு சென்றாலும், செல்லோடு சார்ஜரையும் எடுத்துக் கொண்டு, கிடைக்கும் ப்ளக் புள்ளிகளில் செருகி, மொபைலுக்கு உயிர் கூட்டிக் கொள்கிறேன்.

ந்த இளநீர்ச் சாக்கின் அருகில் நின்று கொன்டு, பங்களாதேஷ் தமிழ் முஸ்லீம்களைப் பற்றிப் படித்துக் கொண்டிருந்த போது மஞ்சள் ஜிகினாக்கள் மினுக்கிய ஹரியானா லாரி ஒன்று, என்னைத் தொட்டு விடுவது போல் வந்து, தள்ளி நின்று மூச்சு விட்டது. அதன் முன் டயர்களின் வெப்பம் தாக்கும் முன்பாக, விரைந்து நகர்ந்து சென்று விட்ட, ஐந்து நிமிடங்களில் activa வந்தது. கை காட்ட, தெரிந்து கொண்டு, லாரியை வெட்டி, முன்னே நிறுத்தினார்கள். பின் கதவைத் திறந்து கொண்டு, ஜன்னல் இறக்கித் தாழிட்டு அமர்ந்து கொண்டேன். 'லேட் ஆகிடுச்சு இல்ல?' என்று கேட்டார் அவர்.

அவர் குடும்பநண்பர்; நூல் (புத்தகம் அல்ல!) விற்பனையாளர். மேலும் சில தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும், டைல்ஸ் இழைந்த அவர் வீட்ட்டின் அலமாரியில், 'சூடிய பூ சூடற்க'வைக் கண்ட போது ஆச்சர்யமாக இருந்தது. வியாபார நெருக்கடிகளுக்கு இடையில் அகிலனையும், எஸ்.ராமகிருஷ்ணனையும் படிப்பதற்குப் பிடித்திருக்கின்றது என்றார். அவரும் அவர் மனைவியும் காரில் வந்தார்கள்.

'மகனை அழைத்து வந்திருக்கலாமே?' என்று கேட்டேன். 'நெடுஞ்சாலைகளில் பல்ஸரில் எழுபதில் ஹெல்மெட் இன்றிப் பறக்க விரும்பும் இந்தியாவின் இளம் பிரதிக்கு, இந்நிகழ்வில் அரை நொடிக்கு மேல் அமர்வது உகப்பாய் இருக்காது' என்றார்.

கோயமுத்தூருக்குக் கறுப்புக் கம்பளம் விரிக்கும் தங்கநாற்கரத் தேசிய நெடுஞ்சாலையைக் கியர் மாற்றித் தொலைத்து, சித்தோட்டு ஜங்ஷனில் நின்று அவரது சொந்த வேலையாக ஒருவரைப் பார்த்துப் பேசினார். பக்கத்தில் உறுமிக் கொண்டிருந்த '3'ன் ஜன்னல் கம்பியைக் கடித்துக் கொண்டிருந்தது ஒரு குழந்தை.

வீரப்பன்சத்திரம் வரை சென்று பெருந்துறை ரோட்டிற்குப் போய் விடலாம் என்ற யோசனையைத் தவிர்த்து, குறுக்கு வழியில் செல்ல ஒரு கிராமத்துச் சாலையில் நுழைந்தோம்.

ஆட்டுக்குட்டி விழுங்கி அசதியான அசையாத மலைப்பாம்பைப் போல், கிராமத்துச் சாலை காட்சியளித்தது. வேலிக்காத்தான் முட்கள் வழியைக் கெடுத்தன; டி.வி.எஸ் காதுகளில் தோடுகளாய்க் கோழிகள் தலைகீழாய்த் தொங்கிக் கடந்தன; பாதி வரை கூட வந்த வாய்க்கால், ஒரு மோரியின் கீழ் காவிரி தேடி ஓடியது; ரசிகர் மன்ற போர்டுகளில் மாலைகள் காய்ந்திருந்தன; வடகம் காயப் போட்டிருந்த வாசலின் குடிசைக்குள், இலவசத் தொலைக்காட்சி தீற்றலாய்த் தெரிந்தது; அவ்வப்போது மாட்டிக் கொண்ட நால் முனைகளில் கொஞ்சம் காத்திருந்தால், எத்திக்கிலிருந்தாவது சோடா பாட்டில்கள் கவிழ்த்த கூடை சுமக்கும் சைக்கிள் கிழவரோ, தண்டு இல்லாச் சைக்கிளை மிதிக்கும் சட்டை - பாவாடைச் சிறுமியோ, கிரிக்கெட் ஜமா தேடும் கட்டுகள் போட்ட மட்டையும், கடித்து வைத்த செம்பந்துமாய்த் திரியும் பையனோ, ஹோண்டாவில் விரையும் ஃபைனான்ஸ் பார்ட்டிகளோ எதிர்ப்பட்டுத் தெரிந்தவர்கள் போல் திசை சொல்கிறார்கள். (அந்தால போங்க!). கற்பாறைகள் வெடி வைக்கப்பட்டுத் தகர்த்த பள்ளங்களில் முந்தின மழைகள் செம்பழுப்பாய்ச் சேர்ந்திருந்தன. இரவில் வந்தால் நேராக விழ வேண்டிய திருப்புமுனையில் அந்த பள்ளம் இருந்தது. மற்றுமொரு குட்டி நீரோடை வல்லிய மார்ப் பெண்ணைப் போல் குலுங்கிக் குலுங்கி ஓடி வர, அதன் நுரைகளுக்குள் இருந்து ஒரு குடும்பமே எடுத்த மீன் 'திமிங்கலத்தின் பச்சா' போல் துள்ளியது.

வீரப்பன்பாளையம் வரவேற்ற போர்டின் அருகே இருந்த பெட்டிக் கடையில் புகையிலை பிதுக்கிக் கொண்டிருந்த லுங்கியரை விசாரித்தால், 'அதோ தெரிந்த தென்னை வரிசைகளுக்கு அடுத்த தார் ரோட்டில் போனால், மொபைல் டவர்கள் தெரியும். அவற்றின் அடிவாரத்தில் தேடும் இடம் கிட்டும்' என்றார். அப்படியே தென்னைகளைப் புறக்கணித்து, எப்போதோ கறுப்பு பூசியிருந்த சாலையில் சென்றால், லாரி அஸோஷியேஷன் கட்டிடம் வந்தது. கவனமாய் அதைத் தாண்டி, எதிர் வந்த கண்ணாடிப் பெரியவரை,

'ஏங்க..! இந்த டைஸ் அண்ட் கெமிக்கல்ஸ் அஸோஷியேஷன் கட்டிடம் எங்க இருக்குங்க..?'

'அடடா..! நீங்க தாண்டி வந்திட்டீங்க..! அந்த பில்டிங் தாங்க..!' லாரியர்கள் கட்டிடத்தைக் காட்டுகிறார்.

'அது லாரி சங்கங்க..! சரி.. நன்றிங்க..!' கிளம்பினோம்.

'அப்ப அது வேறைங்களா..? வயசாகிப் போச்சு பாருங்க! கண்ணு வேற சரியாத் தெரிய மாட்டேங்குது! மருமவ சரியா கஞ்சி ஊத்த மாட்டேங்கறா..! அவளும் போய் சேந்துட்டா..!! பொறந்தவன் வீட்டுக்குப் போய்ட்டு வர்றேன்னு கெளம்பினா.. முனி அடிச்சு..'

அவர் துக்கத்தை அங்கேயே கைவிட்டு மேலே சென்றோம். தார் ரோடு போகப் போகக் கரைந்து கொண்டே வந்து, ஒல்லியாகி, கிட்டத்தட்ட வயலின் வரப்பு போல் மெலிய, அதுவரை கட்டிடங்கள் மறைத்த செல்போன் டவர்கள் கண்களுக்குச் சிக்க, சரியான பாதையில் செல்லும் உணர்வு மீண்டது.

மீண்டும் மீண்டும் வயல்கள். புதிதாய்ப் பிறந்தன போல் பசுந்தளிர்கள் உற்சாகமாய்த் தலையாட்ட, அவற்றின் மேல் பதினோரு மணி வெயில் பட்டுத் தெறிதத்து. பம்பு செட்டுகள் நுரைநீரை 'பொத..பொத..'வென பெய்து தள்ளின. தென்னந்தோப்புகளின் இடையே திடீரென ஒரு வாழைத் தோப்பு. ரேண்டமாய் இடைவெளி விட்டு, தென்னை உடல்களில் கையகலத் தகர போர்டுகளில் போலியோ சொட்டு மருந்தும், பாக்டைம்பாஸ் விளம்பரமும் வளைந்திருந்தன. மோட்டர்களுக்குத் தனி ஓட்டு அடைப்பு; கதவுகள் இல்லை.

ஒருவழியாகச் சங்கக் கட்டிடத்தைக் கண்டுபிடித்து, ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் கீழ் காரை நிறுத்தி விட்டு மண்டபத்துக்குள் நுழைந்தால், அதிரி புதிரியாய்க் காலியிடங்கள் தென்பட்டன. 'நான் மட்டும் தான் லேடீஸா இருக்கப் போறேன்' என்று அந்த அக்கா கவலைப்பட்டுக் கொண்டே வந்தார்கள். இல்லை; இன்னும் கொஞ்சம் பேரும் காணக் கிடைத்தனர்.

ஆறுமுகத்தமிழன் அவர்கள் காந்தி பற்றிய விழாவிற்குத் தான் மட்டுமே கதர் அணிந்து வந்திருப்பதை எண்ணி கவலைப்பட்டுக் கொண்டிருந்த போது, நாங்கள் கடைசி வரிசையில் ஓரச் சீட்டுகளைக் கைப்பறி வசதியாய்ச் சாய்ந்து கொண்டோம். என் பார்வை அங்கிருந்த ப்ளக் பாய்ண்டில் பதிந்தது.

ஜெயமோகன் பெரும்பாலான நேரங்களில் கண்களை மூடியே தோன்றினார். நாஞ்சில் நாடன் அவர்கள் பளிச்சென்ற ஆடைகளில் இருந்தார். கல்வெட்டாளர் செ.இராசு அவர்கள் எல்லோர் பேச்சையும் உற்றுக் கேட்டார். பின் வரிசையில் இருந்த பவா.செல்லத்துரை அவர்கள் இருபுறமும் நரிமுகம் பதித்த டீ-ஷர்ட் அணிந்து வந்திருந்தது, கொஞ்சம் பயத் தோற்றம் தருவதாய் இருந்தது. மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் அவ்வப்போது கால்களை மாற்றி மாற்றிப் போட்டுக் கொண்டிருந்தார்.

யாராவது தெரிந்தவர்கள் வந்திருக்கிறார்களா என்று ஒரு நோட்டமிட்டேன். பதிவர் ஆரூரன் மா.....திரி ஒருவர் தெரிந்தார். எங்கே கேட்கப் போய், 'மாட்டினியா? எங்கே தமிழ்த் தாய் வாழ்த்து சொல்லு!' என்று கேட்டு விடுவாரோ என்ற பயத்தில், அவர் கடைசி வரிசையில் இருந்து, கொஞ்சம் முன்னேறிய வரிசைக்குப் போகும் போது பதுங்கிக் கொண்டேன்.

காலியாக இருந்த ப்ளக் புள்ளியைப் பார்த்தேன்; சார்ஜ் போட்டு விடலாமா..?

பெரிய மீசை வைத்த இருவர் வந்து, அவற்றை விட பெரிய விளக்குகளின் ஐந்து தலைகள் சுமந்த கழுத்தையும், அகன்ற இடையையும் பிடித்து அரங்கிலிருந்து அப்புறப்படுத்தினர்.

திடீரென இருவர் வந்தனர். தள்ளி இருந்த வாசலுக்கு அருகில் சென்றனர். ஒருவர் ஸ்டாண்டை விரித்தார். வளர்ந்த முக்காலி போல் அது நீண்டது. அதன் தலையில் ஒரு வீடியோ கேமிராவை செட் செய்தார். மற்றொருவர் கைப்பையிலிருந்து மடிக்கணிணியை எடுத்துப் பக்கத்திலிருந்து நாற்காலியை இழுத்து, அதன் மேல் வைத்து பவர் ப்ளக்கில் இணைத்து உயிர்ப்பித்தார். முதலாமவர் யூ.எஸ்.பி. வாலால் கேமிராவையும், கணிணியையும் இணைத்து விட்டார். நேரம் உச்சியை நெருங்கும் வேளையில், அரங்கத்தின் அத்தனை ஜன்னல்களும், கதவுகளும் திறந்திருக்க, சில மட்டும் ஸ்க்ரீன் அணிந்திருக்க, 'மேடையில் வெளிச்சம் போதவில்லையே?' என்று முதலாமவர் விசனப்பட, இரண்டாமவர் சென்று, மிச்சமிருந்த ஸ்விட்சுகளையும் தட்ட, மேடையினர் மேல் இன்னும் கொஞ்சம் ஃபோட்டான்கள் கொட்டின. ஸ்க்ரீன்களை அட்ஜெஸ்ட் செய்து, கேமிரா வழி கண்டு திருப்தி கொண்டவர்களாய் இருவரும் இப்பொது கணிணி மீது கண் பதித்தனர்.

நாமும் சென்று காலியாக இருந்த ப்ளக்கைப் பயன்படுத்திக் கொண்டால் என்ன..? சங்கத்தினர் எங்கிருந்தாவது பாய்ந்து வந்து, 'சங்க கரெண்ட்; எங்க கரெண்ட்' என்று சொல்லிப் பிடுங்கி வைத்துக் கொள்வார்களோ என்ற அச்சம் வந்தது. 'ஸ்டேஜ் ஃபியர்' போல் 'நான் ஸ்டேஜ் ஃபியர்' என்றும் ஒரு வஸ்து இருக்க வேண்டும் என்று தோன்றியது.

ஆங்காங்கே செல்போன் சிணுங்கல்கள் கேட்டன. இரண்டு நொடிகளுக்கு மேல் கேட்க விடாமல், வாயைப் பொத்தி, வெளியே சென்று பேசினர். ஒருவர் மட்டும் ஐந்து நிமிடங்கள் மேடையில் பேசியவரை விட ஆறு டி.பி. குறைவாக, ஹாலில் இருந்தவாறே பேசினார். ஒருவர் பாலிதீன் கவரில் தான் வாங்கிய புத்தகங்களைப் போட்டு மடித்து வைத்துக் கொண்டே இருக்க, அந்தக் கசங்கல் சத்தம், துச்சாதனன் உருவிய சேலை போல் கேட்டுக் கொண்டேயிருந்தது.

ஆ..! கிடைத்தது வழி! பாத்ரூம் பக்கம் ஒரு மெய்ன் பாய்ண்ட் இருந்தது. அங்கே சென்று, செல்போனுக்குத் தின்னக் கொடுத்தேன். அசுர வேட்டை போல் அள்ளி அள்ளிக் குடிக்க, அதன் பச்சை வயிறு நிரம்பி நிரம்பித் தணிந்தது. நம்மவர்கள் மேல் நம்பிக்கை வைத்து, அப்படியே விட்டு விட்டு, ஹாலை வளைத்துச் சென்று, அடுக்கி வைத்திருந்த நூல்களைப் பார்த்தேன். எல்லாக் கன்னிகளும் புரட்டப்படக் காத்திருந்தனர்.

நன்றியுரை முடிந்ததும், எல்லோரும் கலைந்து நூல்கள் வாங்கி, ஜெயமோகன் அவர்களிடம் கையெழுத்துப் பெற்றனர். நானும் 'அனல்காற்று' என்ற குறுநாவலை வாங்காமல் அவர் கையெழுத்தை வாங்கினேன்.

எங்கள் குடும்ப நண்பர் 'நாஞ்சில் நாடனின்' பெரும் விசிறி..இல்லை... நண்பர் என்றே சொல்லலாம். 'பவானி வரும் போது வீட்டுக்கு வர மறந்துட்டேன்..' என்ற அளவுக்கு நாடன் அவர்கள் சொல்ல, அவர்களின் நெருக்கம் புரிந்தது. அவர்களுடன் ஒட்டிக் கொண்டே நின்றதால், நா.நா.வின் எக்ஸ்ட்ரா புன்னகை கிடைத்தது. வாங்கி பாக்கெட்டில் பத்திரப்படுத்திக் கொண்டு, கூடவே அவரது விசிட்டிங் கார்டையும் கேட்டுப் பெற்றுக் கொண்டேன்.

'சரி..கிளம்பலாம்' என்று வெளியே வந்தால், ஈரோடு வாசக இயக்கத்தினர் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர். 'சாப்பிட்டுத் தான் போகணும்..!' 'விடுங்க..! வீட்டில் ஆடும், கோழியும் எனக்காகத் தம் வாழ்விழந்து, மசாலாவில் நனைந்து காத்திருக்கின்றன..!' ம்ஹூம்..! கேட்கவேயில்லையே..! கையைப் பிடித்து மாடிப்பக்கம் தள்ளிவிட்டனர். தப்பிக்க வழியே இல்லை.

நன்கு அரைத்த பருப்புச் சாம்பார் (வள்ளிபுரத்தான்பாளையம் கேட்டரிங்!), புளி ரசம், புளிக் குழம்பு, மோர். பருப்பு வடை, உருளைக் கறி. அப்பளம். அவ்வளவு தான்.

வேறு வழியே இல்லாமல், மூன்று முறை சாம்பார், ஒரே முறை ரசம், டம்ளரில் மோர், இரண்டே இரண்டு வடைகள், ஒரு முழு அப்பளம், கடைசியாய்க் கிடைத்த ஃப்ராக்டல் அப்பளத் துண்டுகள் மட்டுமே சாப்பிட்டேன்.

நாங்களே பரிமாறினோம்; நாங்களே பசியாறினோம்.

'நாஞ்சில் நாடன் போன்றவர்களுக்குப் பரிமாறும் வாய்ப்பு கிடைத்ததே பெரும் பேறு' என்று குடும்ப நண்பர் என் காதில் கிசுகிசுத்தார். அவர் பின் 'ஈரோடு வாசக இயக்கத்தில்' உறுப்பினராகிக் கொண்டார். கீழே இறங்கி வரும் போது, ஜெயமோகன் படிக்கட்டுகளில் அமர்ந்து சிலருடன் பேசிக் கொண்டிருந்தார் (அரட்டை..?). 'போய் வருகிறேன்' என்று சொல்ல, எழுந்து நின்று கை கூப்பினார். காரணம், சொன்னவர் பெரிய மனிதர் ஒருவர். நானும் சந்தடி சாக்கில் வணக்கம் சொல்லி விட்டுக் கிளம்பினேன்.

மீண்டும் காரில் இப்போது, மெய்ன் ரோட்டைத் தொடும் போது, சாலை முகப்பில் நூல் வெளியீட்டு விழாத் தகவல் வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. நாங்கள் பின்வாசல் வழியாக வந்திருந்தது புரிந்தது.

முன் சீட்டில் குடும்ப நண்பர் அருகில் உட்கார்ந்து கொண்டு, 'இன்றைய காந்தி'யின் பக்கங்களை முகர்ந்த போது, சாலைகளை நான்கு மணி வெயில் சுட்டது. ப்ரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் என்றும் அஸ்தமித்திராத செஞ்சுரியன், ஈரோடு கலெக்டரேட் வாசலில் ஃப்ளெக்ஸ் பேனர்களின் நீண்ட நிழல்களைப் பிறப்பித்து, என் முதுகுப்புறம் மறைந்து கொண்டிருந்தான்.

***

மீட்டிங் பற்றி உண்மையாலுமே உருப்பாடியாய்த் தெரிந்து கொள்ள ::

ஜெயமோகன்

ஆரூரன்ஜி

5.கண்ணனைத் தாலாட்டல்.



போது நழுவியது; போக்கிடம் இன்றிநிலா
மாது தழுவினாள் மேகத்தை; - சாதுக்கள்
சத்திரம் ஏகினர்; சாமவேளை ஆனது;
ரத்தினமே கண்வள ராயோ.

தேன்வாழப் பூவிருக்கத் தெம்மாங்கு காத்திருக்க
வான்வாழ நீரிருக்க வந்ததென்ன - நான்வாழ
ராசாதி ராசாவா! ரோசா ஒதட்டாலே
பேசாம கண்ணா ஒறங்கு.

மேக்கால வெந்தவெயில் மெல்லமாய்ப் போனதும்
வேக்காட்ட வந்தநெழல் வீழ்த்தியதும் - தேக்கால
செஞ்சவொரு தொட்டிலில் செம்பவளக் கண்ணாநீ
கொஞ்ச கணமேனும் தூங்கு.

யமுனாப் படுகையில் மின்னல் துளிகள்
அமுதன் படுக்கையில் வைரம்! - குமுதம்
மலர்ந்து விரிந்து மதியில் நனையும்;
தளர்ந்து மகனே உறங்கு.

***

Image Courtesy :: http://jsk247.wordpress.com/category/bal-krishna/

Monday, January 25, 2010

Me 2 Tweetin..!!!

ப்போது நானும் ட்வீடுகிறேன்.

பொதுவாக குறு உரையாடல்கள், கண்ணிகளைத் தெரியப்படுத்தல் மற்றும் அன்றாட நிகழ்வுகளை உலகுக்கு அறிவித்துக் கொண்டே இருத்தல் போன்ற செயல்களின் சுவாரஸ்யம் எனக்கு கொஞ்சம் சலிப்பூட்டத் தொடங்கி விட்டது.

எனவே சின்னஞ்சிறு பொன்மொழிகளை உளறும் குட்டிப் பெட்டியாக ட்வீட்டரை உபயோகித்துக் கொள்ள நினைத்து, கொஞ்சமாய் வளர்ந்த வாக்கியங்களை எழுதுகிறேன்.

பிரபலங்களைத் தொடர்ந்தாலும், பெரும்பாலும் அவர்களது காலை, மேட்னி, ஃப்ர்ஸ்ட் மற்றும் செகண்ட் ஷோ செயல்களைத் தவிர வேறு எதுவும் சிலாக்கியமாகக் கிடைக்கவில்லை.

ட்வீட்டிய சில வரிகள் ::

At the peak, the star comes out of the word and revolve around the head...what the f*ck...!

A real number cant write poems... It doesnt have imaginary value...

'there is a beauty in everything' - i chant this ten times whenever i come across a full mirror...

I wish, i have a flat belly. Or at least a flat.

Once i was an innocent and donno acting... now i am acting as an innocent...

I said 'peacocks have 4 legs'. He laughed on me and advised, 'dont consider its horns as legs'.

When am drivin my car in de max speed of 120 kmph, a big container came ax 4m a turn. To avoid a horrible accident, i pressed 'game restart'

என் ட்வீட்டர் :: காலப்பயணி.

4.கண்ணனுக்குப் பாலூட்டல்.



தாய்மை உணர்ந்த தருணமே, ஏந்திய
சேய்மை விரல்தடவிச் செவ்விதழ் - வாய்மை
படர்ந்துப் பெருகியப் பாலைக் குடிக்கத்
தொடர்ந்துத் தொடர்ந்த கணம்.

அணிந்திடும் ஆரங்கள் மின்னல் ஒளியாம்
கனிந்திடும் அன்னைமார் கொண்டல் - தணிந்திடும்
கண்ணன் பசித்தீக்கு கொட்டும் பனிமழை
தண்ணிய தாயுடை பால்.

மென்விரல் கொண்டகை மெல்லியதாய் ஓர்மாரை
என்குரல் தேங்கத் தடவுவான் - வெண்மணல்
குன்றினில் ஊற்றுப் பெருகும் நேரத்தில்
என்னன்னை எண்ணுகிறேன் யான்.

முகிலில் ஒருபொழுது மூழ்கும் கடலில்,
தகிக்கும் அனலில் மற்றும் - முகிழ்க்கும்
குலைகளாய்ப் பெண்ணாய்க் குழைந்தேன் மகவென்
முலைகளாய்ப் பற்றிய போது.



***

Image Courtesy :: http://the-artist-varma.com/ravivarma_images/rrv3.jpg
and http://www.exoticindiaart.com/artimages/ep20.jpg