கனல் கொண்ட மின்னல் ஒன்று கழன்று விழுகின்றது. விரிந்த விண்ணில் ஒரு வெற்றிடம் உருவானது. கருந்துளை போல் கிடைத்ததை எல்லாம் தின்று விழுங்கும் ஆவேசத்துடன் இளமைப் புகை நிமிர்கிறது. பூஞ்சைப் பற்கள் கொண்டு தடுக்கப் பார்க்கும் சுருங்கிய, வலுவிழந்த விரல்களை நசுக்கிப் போட்டு எட்டி உதைத்திட, நகங்களின் நிழல் கரைகிறது.
நரை ததும்பும் பூமியின் கரைகளை உடைத்துத் தகர்த்துப் பொடி செய்து, ஊதி எறிகையில் பிரபஞ்சத்தின் பின்புறத்தில் சென்று கரைகிறது. நடுங்கிடும் நட்சத்திரங்கள் கண்ணீர் சிந்திப் பெருகும் போது, வெள்ளைக் குள்ளர்கள் நடு விரல் காட்டி நகைக்கிறார்கள். பால்வெளியில் கீறல்களைத் தீட்டிய வெப்ப நேரங்களில் மென் கதிர்கள் வெளியேறுகின்றன.
மேகங்கள் சொகுசாய்ப் பூத்து கொண்ட அந்தர மேடையில் விளையாட்டு காட்டுகின்றன வானவில்கள். தீ தின்னும் பெருந்தீ கருக்கும் மலையின் உள்புறத்தில் கொதிக்கின்றது வெடித்துச் சிதற நெருப்புக் குழம்பு.
தார்ச் சாலையின் புறமேடுகளில் வேகப் பயணம், நிதானம் பெற்று, முன் சக்கரம் நின்று ஏறி, விரைவு பிடிக்க பின் சக்கரங்கள் புழுதி கிளப்பிப் புறப்படுகின்றன. பொன் சங்கிலிகளின் கண்ணிகளில் ஒவ்வொரு இறுக்கத்திற்கும் மின்சாரத் துளிகள் உறைந்து நிற்கும் போது, மேலந்தி வனத்தில் பருத்திப் பிசிறுகள் திசைகெட்டாய்ப் பறக்கின்றன.
ஓரமாய்ப் பழுப்பு படிந்த இரவின் குளிர் நாக்கு தடவும் ஒவ்வொரு நொடிக் கற்றையும், சடுதியில் காட்சிகள் மாறி, நீட்சிகள் மாறி, பாதாளத்திலிருந்து தலைகீழாய் எழுந்து வருகின்றன, ஒவ்வொரு விரலிலும் எண்பதாயிரம் ரெளத்திரங்கள் தின்ற எரிதழல் மிச்சங்கள்...!!!!