Thursday, September 28, 2006

கொஞ்சம்...! (A)



ஒளியுமிழ் வெண்பந்தின் பாதையெங்கும் பரவி நிற்கின்ற கருமேகங்கள் கலைந்து செல்கின்ற பேரிருள் பொழுது! மோனத் திருக்கோலமாய் ஆரோகணிக்கும், பிம்ப மரங்களின் இடைவெளியெங்கும் வழிந்து கொண்டிருக்கிறது வெண்ணொளி! மினுக் மினுக்கென்று மின்னிக் கொண்டிருக்கும் வெண்பொரித் துகள்கள் பதிந்திருக்கும் பெருவெளியெங்கும் விரவியிருக்கும் இருள் மாயம்!

இருந்தும் இல்லாத பனித்துகள்கள் பெய்யும் முன்னிலாக் காலம்! காற்றின் ஈரப்பதம் கொஞ்சம் கூடிப் போயிருக்கும் நேரம்!

நாம் இருவர் மட்டும் அமர்ந்திருக்கிறோம்.

வெண்முலாம் பூசிய நதியின் அலைகள் வந்து, நனைத்து விட்டு நகர்கின்ற, ஈரக் கரையோரம் நாம்! சில்வண்டுகளின் ரீங்காரம், கரகரத் தவளைகளின் குரல், பிசுபிசுப்பில் நனைந்த காற்று, தூரத்து ஒற்றை மின்விளக்கின் கண் சிமிட்டல் ஒளி சுமந்த தென்றல், சலசலத்த நாணல் புதரிலிருந்து எட்டிப் பார்க்கும் பாம்பு, இவற்றோடு நாமும்!

கண்களுக்குள் நம்மைத் தேடிப் பார்த்துவிட்டு, ஓய்ந்த நேரம், நம் கைகள் தம் பயணத்தைத் துவக்குகின்றன. வெண் போர்வையாய் நிலவொளியைப் போர்த்திக் கொண்ட நாம், பொங்கிய வேர்வைத் துளிகளை, நனைந்த புல்வெளிக்கு, நொறுங்கிய மண்துகள்களுக்கு நன்றியாய் தெரிவிக்கிறோம்.

மூடல் மறந்த நிலையில், துவங்கிய ஒரு பயணத்தின் தேடல், கூடலில் நிறைந்த பின் ஒரு பாடலை மெல்லியதாய் நீ முணுமுணுக்கிறாய்.

இந்த குளிர் இரவின் வாசம் எங்கும் நாம் வசியம் செய்திருக்கிறோம். அயர்ந்து விலகிய பின், பெருமூச்சுகள் செறிந்த பின்னிரவுப் பொழுதில், உன் விழிகளைப் பார்க்கிறேன்.

இருதுளிகள் பூத்த கண்கள் நிறைந்து வழியும் பால்கிண்ணத்தில் மிதக்கும் திராட்சைப் பழங்களாய் தோன்றும்.

தனிமை நடை!


மாலையின்
நீள நிழல்கள்
படிகின்ற சாலையில்
நடக்கின்றேன்,
தனிமையில்!

உன் நினைவுகளைக்
கைத்தடியாக
ஊன்றிக் கொண்டு,
நிலத்தைத் தட்டுகையில்,
உடைகின்றன
என் கனவுகள்!

மெல்ல
போர்வையாய்ப் போர்த்துகின்ற
மஞ்சள் வெயில்,
நிரப்புகின்றது
வெம்மை சூழ்ந்த
சில நினைவுகளை!

பருவத்தின் பாதையில்
பூத்த
நம் மலர்களைப்
ப்றித்தது,
வலுவான
வாடைக் காற்று!

கைகோர்த்து நடந்த
நாட்களின்
உறைந்த கனம்
தாங்காமல்,
தவிக்கும்
இன்றைய தினம்!

பனி பெய்கின்ற
மெல்லிரவில்,
ஏதோ ஒரு
படுக்கையின் மேல்,
கரைந்து போய்க்
கொண்டேயிருக்கின்றன
நம் சத்தியங்கள்...!

அஞ்சலி.

அந்த அழகிய ஆத்மா வானத்தை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது.

நீலப்போர்வையாய் ஈரத்துளிகள் வந்து மூடியவாறு, உருண்டோடுகின்ற, பூமிப்பந்தை திரும்பிப் பார்த்தது. பகையும், வெறுப்பும், கோபமும், சின்னச்சின்ன சந்தோஷங்களும், மலை போன்ற துக்கங்களும் நிர்ம்பிய பூமி மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. இனி இங்கு வர வேண்டாம் என்று, நினைக்கையில் ஏனோ ஒரு துக்கம் வந்தது. மெல்ல மேல் நோக்கிப் பறந்து கொண்டிருந்தது.

திடீரென வழியில் இரு தேவமங்கைகள் வந்து வணங்கினர்.

"அம்மா.. தங்களை தேவலோகத்திற்கு அழைத்துச் செல்ல வந்திருக்கிறோம்." என்றனர்.

ஆம்.. தேவலோகத்தைக் காண்பதில் இனிமையாகத் தான் இருக்கும். நறுமணம் வீசுகின்ற தேவதாரு மரங்கள். தெள்ளிய நீரோடை பாய்கின்ற தோட்டங்கள். குளிர் தென்றல் பவனி வருகின்ற அருவி பொழிகின்ற வனங்கள், என்றெல்லாம் தேவலோகம் இருக்கும் என்று தான் படித்திருந்தது நினைவுக்கு வந்தது. ஆனால், தான் பெரும் விருப்புடன், விரைந்து கொண்டிருப்பது இவற்றைக் காணவா..? அன்று. என் உளம் கவர்ந்த கள்வரை அல்லவா..? அவரைப் பற்றி நினைத்தாலே இந்த பாழ்மனம் கலங்கி விடுகின்றதே.

ஆத்மா அந்த தேவமங்கையரை வணங்கியது.

"தெய்வப் பெண்களே..! தங்கள் தரிசனம் கிடைத்ததில் பெரும் பேறு பெற்றேன். தேவலோகத்தைக் காண்பதில் நான் பேரார்வம் கொண்டுள்ளேன் என்பது உண்மையே! ஆயினும் என் உள் மனதில், யாரைக் காண நான் விரைந்து சென்று கொண்டிருக்கின்றேன் என்பதை தாங்கள் அறியமாட்டீரா? என்னைத் தயை புரிந்து அவரிடத்தில் அழைத்துச் செல்லுங்கள்.." என்று வேண்டிக் கொண்டது, அந்த ஆத்மா.

தேவகன்னியர் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்தனர்.

"வாருங்கள். தங்களை அவர் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறோம். அவரும் உங்களைக் காண காத்துக் கொண்டிருக்கிறார்" என்றார் ஒரு தேவகன்னிகை.

என்ன..? அவர் எனக்காக காத்துக் கொண்டிருக்கிறாரா?

ஏன் இந்தக் கால்கள் இவ்வளவு மெதுவாகச் செல்கின்றன? இந்தப் பெண்கள் இன்னும் சற்று வேகமாக சென்றால் தான் என்ன? இன்னும் எவ்வளவு தூரம் தான் செல்ல வேண்டுமோ..?

மூவரும் விரைந்து சென்றனர்.

ச்சைப் பசேல் என்ற தோட்டம். மினிமினுத்துக் கொண்டிருந்த லக்ஷோப லக்ஷ நட்சத்திரங்களுக்கு நடுவே அமைந்திருந்தது. எங்கிருந்தோ வந்து, மனதை மயக்கிக் கொண்டிருந்தது மென் குழலோசை. சிலுசிலுவென தென்றல் வீசிக் கொண்டிருந்தது.

"தாங்கள் காண வேண்டியவர், இங்கு தான் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். நாங்கள் வருகிறோம்." விடைபெற்று மறைந்தனர் தேவகன்னியர்.

என்ன..? அவர் இங்கு தான் காத்துக் கொண்டிருக்கிறாரா..? மெல்ல, மெல்ல உள்ளே நுழைந்தது, அந்த ஆத்மா.

அவர் தான்..! அங்கே நின்று கொண்டிருப்பவர் அவரே தான்.! எங்கோ பார்த்துக் கொண்டிருக்கிறார்.

"அன்பரே..!"

அந்தக் கம்பீர திருவுருவம் திரும்பியது. மறைகையில் இருந்த வயதான தோற்றம் இல்லை. குழந்தை தோற்றம். கொழு, கொழுவென இருந்த தேகம். கள்ளம் கபடமற்ற முகம்.

ஏன், என் கண்கள் தாமாகவே சுரக்கின்றன? அவரது உருவம் கூட மறைக்கிறதே..!

" நலம் தானா.. நலம் தானா.. உடலும் உள்ளமும் நலம் தானா.." ஆத்மா பாடியது.

"அன்பே..வந்து விட்டாயா..?"

"வந்து விட்டேன்.."

"இப்படி, அருகில் வந்து அமர்.."

"இங்கே வேண்டாம்.."

"இங்கே பார்! நம்மைப் பிரிப்பதற்கு எதுவுமில்லை. எந்த வேறுபாடுமில்லை. நான் தமிழன், நீ கேரளம் என்ற பேதமில்லை. நான் வேறு ஜாதி, நீ வேறு இனம் என்ற பிரிவு இல்லை. எந்தச் சமூகத்திற்காகவும் நாம் பயப்படத் தேவையில்லை. நமது தேகம் குறித்த எண்ணம் இல்லை. அத்தனை குப்பைகளையும் நாம் பூலோகத்திலேயே, புதைத்தும், எரிக்த்தும் வந்து விட்டோம். இங்கே இருப்பதெல்லாம் தூய்மையான அன்பு. நாம் எந்தக் கவலையும் இல்லாமல் பூரண அன்பு பூண்டிருந்த காலம், திரும்பியுள்ளது. இனி காலம் என்ற ஒன்றும் இல்லை.இனி என்றென்றும் இணைந்தே இருப்போம். தூய அன்பு. பரிசுத்தமான பாசம். இனி எந்தச் சக்தியும் நம்மை பிரிக்க முடியாது.."

திரைப்படங்களில் பக்கம் பக்கமாய்ப் பேசிய, அதே திருவுருவம் தான் இப்படி பொழிந்தது. இது பிறவிக்குணமா..? இல்லையில்லை, பிறவிகள் எல்லாம் தாண்டி வந்த பின்னும், இன்னும் இப்படிப் பேசுகிறார் என்றால், இது அதையும் தாண்டியது.

இவர் தெய்வமகனே தான்.

அருகில் அமர்ந்தனர்.

"எனக்காக நமது பாடலைப் பாடுவாயா..?"

"உங்களுக்கில்லாத்தா..?"

"மறந்திருந்து பார்க்கும் மர்மமென்ன..."

ஆனந்தத் தேன் துளிகள் சொரியச் சொரிய அந்த அழகுத் திருவுருவம் சுழன்றாடத் தொடங்கியது. அந்த தெய்வமகனோ, மறைந்திருந்து பார்க்க வேண்டிய அவசியமின்றி, முன்னால் அமர்ந்து பார்க்கத் தொடங்கினார்.

நன்றி.

நன்றி.. நன்றி...!!!

எனக்கு வாக்களித்த நல்ல உள்ளங்களே.. வாக்களிக்காமல் வந்து படித்து விட்டு மட்டும் போனவர்களே.. வாக்களிக்கலாமா, வேண்டாமா என்று தயக்கத்திலேயே வாக்களிக்க மறந்தவர்களே...!

அனைவருக்கும் என் நன்றிகள்.

பதிவு துவங்கிய முதல் மாதப் போட்டியிலேயே களம் கண்ட எனதருமை கண்மணிகள் பத்து வேட்பாளர்களும், ஆளுக்கு குறைந்தது 13 ஓட்டுக்கள் பெற்று வந்துள்ளனர் என்பதைக் காண்கையில், என் நெஞ்சம் எல்லாம் பூரிக்கின்றது. என் கண்களில் இருந்து ஆனத்தக் கண்ணீர் வழிகின்றது.

தோற்றோம் என்று கூறுவதை விட, வெற்றி வாய்ப்பை இழந்தோம் என்று மார் நிமிர்த்தி கூறுகிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதில் என்றும் முதலில் நிற்க வேண்டும் என்பது தான், நான் பயின்று வந்த பாசறை கற்றுக் கொடுத்தது.

முதல் மூன்று வெற்றிக் கோப்பைகளைக் கைப்பற்றிய ஆசாத் ஐயா அவர்களுக்கும், ராசுக்குட்டி அவர்களுக்கும் மற்றும் யோசிப்பவர் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்போ போறேன்... நெக்ஸ்ட் மீட் பண்றேன்.

வாக்குப்பதிவு நிலவரம் : ( கொஞ்சம் கலவரம் தான்..)

அன்புத் தோழி, திவ்யா..! - 9.1% (16)

கொஞ்சம் உடன் அழைத்துச் செல்வீர்களா..? 8.5% (15)

விரல் பிடிப்பாயா..? 8.5% (15)

மம்மி..மம்மி.. 8% (14)

அண்ணே..லிப்ட் அண்ணே..! - 8% (14)

லிப்டாக இருக்கிறேனே..! 8% (14)

மெளனம் கலைந்தே ஓட.. 8% (14)

கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? 7.4% (13)

இன்னா சார்? 7.4% (13)

லாந்தர் விளக்கு. 7.4% (13)

நன்றி.. நன்றி...!!!

Tuesday, September 26, 2006

மீண்டும் ஒரு நிலாச்சாரல்!

வானம் இருட்டிக் கொண்டிருந்தது. விடிந்து ஏழு மணி ஆகிவிட்டது என்பதாகத் தோன்றவில்லை. மேற்கிலும், கிழக்கிலும் கருமையான மேகங்கள் திரண்டிருந்தன. விரைவில் வானம் பொத்துக் கொள்ளும் போல் இருந்தது.

ரங்கசாமி சலிப்பாகத் திண்ணையில் அமர்ந்தார்.

வயதானவர் தான். ஊரிலேயே சற்று மரியாதையான மனிதர். கொஞ்ச காலம் ஊர்ப் ப்ரெசிடெண்ட் ஆக இருந்தவர். கிராமத்துக்கே உரிய கருத்த தேகக் கட்டு. முறுக்கிய தலைப்பாகை. மெல்ல வலதுகையை நெத்தியில் வைத்து, கண்களைச் சுருக்கி தூரத்தில் பார்த்தார். வெள்ளை நாரைக் கூட்டம் பறந்து புள்ளியாய் மறைந்தது.

"பாவாயி..பாவாயி.."

"வர்றேனுங்க.." என்றபடி ஓடி வந்தார் அந்த அம்மாள்.

Monday, September 25, 2006

பயணங்கள்...!

அப்பாடா...! ஒரு வழியா இந்த மாசத்துக்கான தேன்கூடு போட்டிக்கு, முடிஞ்சளவு படைப்புகள் எல்லாம் அனுப்பியாச்சு. பரிசு கெடைக்குதோ, இல்லயோ நல்லாயிருக்குனு நாலு பேரு சொன்னாங்க. அது போதும். கொஞ்ச நாளைக்கு வேற ஏதாவது பத்தி பதிவுகள் போடலாம்னு தோணுச்சு. ஏற்கனவே கொஞ்சம் ஊர்ப் புராணம் பேசியிருக்கோம். அதக் கொஞ்சம் கண்டின்யூ பண்ணுவோம். அங்கங்க கெடைக்கற எடத்துல நம்ம புராணத்தையும் போட்டு வெப்போம். அப்படியே ஒரு பெரிய கதை சொல்லலாம்னு இருக்கேன். என்ன சொல்றீங்க.?

வாழ்க்கையே ஒரு நெடும் பயணம் என்று பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள். அவர்களுக்கு அவர்கள் பெரியவர்கள் கூறியிருப்பார்கள். நாமும் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறோம்.

இப்படியெல்லாம் நான் 'ஜல்லியடிச்சு'(உபயம் யாரு? சுஜாதா சாரா..?) பேசப் போறதில்லங்க. நாமளும் இந்தா இருக்கற சூரியன 25 வருஷம் சுத்தி முடிச்சிட்டோம் . எத்தனையோ பயணங்கள் போயிருக்கோம். அதைப் பத்தியெல்லாம் கொஞ்சம் நெனப்புல நிக்கறதெல்லாம் எழுதி வெப்போம். பாக்கறவங்க, படிக்கறவங்க அவங்களும் அவங்க மனசுல இருக்கற அவங்கவங்க பயண நெனப்புகள அள்ளித் தெளிச்சாங்கன்னா, நல்லா இருக்கும்னு தோணுச்சுங்க. ஏன் இப்ப திடீர்னு கேட்டீங்கன்னா, அதில பாருங்க, நாம ஊர்கோலம் போன பல வாகனங்கள் நம்ம பசங்க காலத்துல இருக்குமான்னு தோணுச்சு. அதான், சர்தான் கழுத, ஒரு பதிவு அதப் பத்தி போட்டு வெப்போம்னு...!

குதிரை வண்டி:
எங்க ஊர்ப் பெருமையில கொஞ்சம் இங்க அள்ளி விட்ருக்கோம். காவிரி ஆத்தங்கரையில மேக்கால எங்க ஊரு இருக்குது. கெழக்கால 'கொமாரபாளையம்'னு ஒரு ஊரு இருக்குது. அது முந்தி சேலம் மாவட்டத்துல இருந்தது. இப்ப நாமக்கல் மாவட்டமா மாத்திட்டாங்க. நம்ம ஊரு எப்பவும் ஈரோடு மாவட்டம். நம்ம சொந்தக்காரங்க கொஞ்சம் பேரு அங்க இருந்தாங்க. நாங்க இங்க இருந்து போகணும்னா, ஆத்தைத் தாண்டித் தான் போகணும். 'தாண்டி'னா அனுமார் மாதிரியானுலாம் கேட்கக் கூடாது.

ஆத்தத் தாண்டிப் போக மூணு பாலம் இருக்கு. ஒண்ணாவது கோயமுத்தூர்ல இருந்து, சேலம் போற NH. அது எங்க ஊர்ல இருந்து கொஞ்சம் தூரம்கறதனால நாங்க அது வழியா போக மாட்டோம்.பண்டிகைக்கு வீட்டுப் பொண்ணுங்களுக்கு நகை வாங்கித் தருவோம். ரெண்டு கை நெறைய வளையல்கள் எலாம் போட்டுட்டு கலகலனு சுத்தி வருவாங்க. ஒரு தோடோ, ஒரு கை வளையலோ உடைங்சோ, தொலைஞ்சோ போச்சுன்னா அதுங்க மொகமே களையிழந்து போயிருங்க. அது மாதிரி பாலம் திறந்த புதுசுல, சும்மா ரெண்டு பக்கமும் சோடியம் லைட் போட்டு, ஜெகஜ்ஜோதியா இருந்துச்சுங்க. இப்போ ஒரு பக்க லைட் மட்டும் தான் இருக்கு. பாலமே சோபை இல்லாம போயிடுச்சுங்க.

மூணாவது இப்ப ரொம்ப புதுசா திறக்கப்பட்ட புதுப்பாலம். இது எங்க புது பஸ் ஸ்டேண்ட்ல இருந்து, எடப்பாடி போகறதுக்காக கட்டுனது.

ரெண்டாவதா வர்ற பாலம் வெள்ளக்காரன் கட்டுனதா சொல்வாங்க. பாலமும் அப்படித்தான் இருக்கும். ரொம்ப பழசா இருக்கும்னு நெனச்சுக்காதீங்க. சும்மா கிண்ணுனு 'கில்லி' மாதிரி இன்னிக்கும் நிக்குது. இதுல தான் நாங்க போவோம். பழைய பாலங்கறதுனால லாரி, பஸ்ஸுக்கெலாம் இங்க அனுமதியில்ல. சைக்கிள், பைக், கால் நடை (அட, நடந்து போறவங்கள சொல்றேங்க..) இப்படித் தான் இதுல போக முடியும்.

நாங்க கைப்புள்ளைங்களா (அம்மாவோ, அப்பாவோ கையில தூக்கிட்டு.. அப்புறம் அவங்க கையைப் பிடிச்சுக்கிட்டு நடக்கறப்போ நாம கைப்புள்ளைங்க தானுங்களே..) இருந்தப்போ, அந்தப் பாலத்து வழியா இன்னொரு வண்டியும் போய்ட்டு, வந்திட்டு இருந்துச்சுங்க. அதான் குதிரை வண்டி.

இந்த ரெண்டாவது பாலத்தோட ரெண்டு எல்லைகளிலும் குதிரை வண்டிகள் இருக்குங்க. மூணு பேர் உட்கார்ற மாதிரி பெட்டி மாதிரி பாடி, கட்டை சக்கரங்கள். இப்படித்தான் வண்டிகள் இருக்கும். குதிரை எல்லாம் ரொம்ப நொந்து போய், பார்க்கவே பாவமா இருக்கும். அதுங்க வழியில பார்க்கக் கூடாதுங்கற மாதிரி கண்கள்க்கு சைடுல மறைச்சிடுவாங்க. வாயைச் சுத்தி ஒரு பையில புல் (இது நிஜமாலும் புல்.. நீங்க வேற ஏதும் நெனச்சுக்காதீங்க..) நிரப்பி மாட்டி விட்டுடுவாங்க. வண்டியோட கீழ ஒரு சாக்கு மூட்டையை நாலு பக்கமும் இழுத்துக் கட்டி, அதுல இன்னும் நிறைய புல் வெச்சிருப்பாங்க. இந்த குதிரை வண்டியில தான் நாங்க ஆத்தைத் தாண்டி போறது, வர்றது எல்லாம்.

இப்ப இந்த மாதிரி வண்டிகள் எல்லாம் இல்ல. முடிஞ்சவங்க கார் வாங்க, சொல்லப் போனா எல்லாரும் டூ வீலர் வாங்க, குதிரை வண்டிக்காரங்க ஆட்டோ வாங்க, சாக்கடை நீர் காவிரியில கலக்கற இடத்துல வளர்ற கோரப்புல்லை மேய்ஞ்சுக்கிட்டு இருக்கு, குதிரைங்க..!