Saturday, May 19, 2007

முகேஷ் குமாரும் சனிக்கிழமை மாலைகளும்..!


(ஆஷா போன்ஸ்லேக்கும், எனக்கும் மிக மிகப் பிடித்த இப்பாடல், அற்புதமான வரிகளால் பின்னப்பட்டுள்ளது. படம் : The Great Gambler)

ஹிந்தி எனக்கு எப்படி அறிமுகமாயிற்று என்று நினைக்கிறேன்.

ஐந்தாண்டுத் திட்டம் போல், ஒவ்வோர் ஐந்தாண்டுக்கு மட்டுமே, ஒரு தேர்வு என்று முறை வைத்து எழுதினதில், இரண்டு தேர்வுகள் மட்டுமே முடிக்க முடிந்தது. 10-வதற்குப் பிறகு, ஹிந்தி தொடர்பே இல்லாமல் போன பின்னும், இன்னும் மொழியின் வார்த்தைகள் அர்த்தம் புரிகின்றது; பாடல்கள் அர்த்தம் கொள்ள முடிகின்றது; அட, எழுத்துக்களை அடையாளம் கண்டு கொள்ளவும், எழுதவும் முடிகின்றது என்றால், அதற்கு காரணம் என்னவாக இருக்கும்?

தொடர்ச்சியான உபயோகம் இல்லாமலே எப்படி, இப்படி?

காரணம், தொடர்பு விட்டுப் போகாத அளவுக்கு ஒட்டி வந்த இந்தி திரைப்படங்களும், பாடல்களுமே என்று தான் சொல்ல வேண்டும்.

10-வது வரை எங்கள் வீட்டில் தொலைக்காட்சி இல்லை. அதனால் வாராவாரம், அருகில் உள்ள ஊரில் இருக்கும் எங்கள் பெரியம்மா வீட்டுக்குப் போய் விடுவோம், நானும் எங்கள் தம்பியும். அவன் அங்கு செல்லம் வேறு!

அந்தக் காலங்கள், பொற்காலங்கள்...!

ஒண்ணே ஒண்ணே என்பது போல், தூர்தர்ஷன் மட்டுமே, அப்போது!

சனிக்கிழமை மாலை 5 மணி சுமாருக்கு இந்திப் படம் போடுவார்கள். மசாலப் பொரியோடும், சூடான இராகிக் கஞ்சியோடும், கழுத்தின் கீழ் இரண்டு தலையணைகள் வைத்து, சாப்பிட்டுக் கொண்டே, படம் பார்ப்பது.. ஆனந்தம்!

சசிகபூர், ரிஷிகபூர், திலீப் குமார், அசோக் குமார், ரேகா, ஹேம மாலினி, அம்ஜத்கான், தர்மேந்திரா, அமிதாப், தெரிந்தும், தெரியாத மொழி, வித்தியாசமான இசை, (நாளை விடுமுறை என்ற இனிய நினைவில் இருக்கும்) சனிக்கிழமை மாலை.... ஆஹா, வேறு ஓர் உலகத்திற்கே அழைத்துச் சென்று விடுபவை, அந்தப் பழைய இந்தித் திரைப்படங்கள்.

அக்காலத்தில் நான் பார்த்த எல்லா இந்தித் திரைப்படங்களில் சில காட்சிகள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்.

நாயகன்/ நாயகியின் அம்மா கண்டிப்பாக விதவையாகத் தான் இருப்பார்கள். நாயகனின் அப்பாவை வில்லன்கள் தான் கொன்றிருப்பார்கள். வெள்ளைப் புடவை கட்டிய தாய் வீட்டில், ஒரு கிருஷ்ணன் விக்ரகம், ஒரு சின்னக் கோயில் போல் இருக்கும் (சாலகிராமம்?). தாய் அங்கு தான் சோகப் பாட்டோ, வேண்டுதல் பாட்டோ பாடுவார்கள்.

நாயகன் கண்டிப்பாக மீசை வைத்திருக்கக் கூடாது. நாயகிக்கு அந்தக் கட்டுப்பாடு இருக்காது.

THE END என்பது 'சினிமாஸ்கோப்' முறையில், ஆரம்பம் மற்றும் இறுதியில் விரிந்தும், இடையில் குறுகியும் இருக்கும்.

ஆனால் எல்லாவற்றையும் மறக்கடித்து விடும் அருமையான சில பாடல்கள். அதில் ஒன்றைத் தான், மேலே பார்க்கிறீர்கள்.

'காபாரதம்', 'இராமாயணம்' போன்ற அக்காலத்து மெகா சீரியல்களில் இந்தி மேலும் பழக்கமானது. இத்தொடர்கள் முழுதும் இந்தியில் இருப்பதால், அதன் தமிழ்ப் படுத்திய வசனங்களை, தினமலர் ஞாயிறு தோறும் வெளியிடும். அப்படி ஒப்பிட்டுப் பார்த்ததில், மேலும் கொஞ்சம் தெரிந்தது. (இந்தத் தொடர்களுக்கு வசனங்கள் புரிய வேண்டுமா என்ன? கதை போகும் போக்கு, காலங்காலமாய் நாம் அறிந்தது தானே. வசனமே புரியாமல், வெறும் கதாபாத்திரங்களின் போக்கை வைத்து, இவர் இது தான் சொல்கிறார் என்று உணர்ந்து கொண்டது, இப்போது, மீட்டிங்குகளில், அரைத் தூக்கத்தில், மேலாளர் கூறுவது ஒன்றும் காதில் விழாமல், அவர் இது தான் சொல்லக் கூடும் என்று உணர்வதற்கு பெரிதும் உதவியாய் இருக்கிறது).

சித்ரஹார், சித்ரமாலா என்று பாடல் தொடர்கள், மந்தமான ஞாயிறு மதியத்தை நிரப்பும் மாநில மொழித் திரைப்படங்கள் என்று நாங்கள் தொலைக்காட்சி வாங்கிய புதிதில் நல்ல அறிமுகம் கிடைத்தது.

'சாந்தி -ஏக் கர் கா கஹானி', 'சக்திமான்', பேர் மறந்து போன வியாழக் கிழமை தோறும் வரும் ஒரு தொடர் (நல்ல தீம் பாடல் அதில்), மர்மமான தொடர்கள் என்று சில காலம் போனது. ஆனால், இவற்றையும் தமிழ்ப் 'படுத்தி' விட்டதில், தொலைந்தது இந்திப் பழக்கம்.

தூர்தர்ஷனோடு என் பழக்கத்தைப் பற்றி தனியே ஒரு பதிவு தான் இட வேண்டும். அவ்வளவு கதை இருக்கிறது அதில்!

இப்போது 'ஆஜ் தக்' ஒன்றைத் தொடர்ந்து பார்ப்பதில் மட்டுமே, இந்தித் தொடர்பு இருக்கிறது. அதுவும் 'கோலங்கள்', 'அரசி', 'கே.டி.வி. படங்கள்' வழி விட்டால்.

ப்போதும் அவ்வப்போது 'இராஷ்டிரபாஷா' முயற்சி செய்து பார்க்கலாமா என்று தோன்றுகின்றது.

பக்குவப்பட்ட நடைமுறை மனது, 'இனிமேல் இந்தி படித்து என்ன ஆகப் போகின்றது? தில்லிக்கா வேலைக்குப் போகப் போகிறாய். சென்னை அல்லது பெண்களூரு மட்டுமே. தமிழ் தெரிந்தால், பெண்களூருவில் பிழைத்துக் கொள்ளலாமே, அடி விழ ஆரம்பிக்காத வரை!' என்கின்றது.

ஆனால் ஆழ்மனதோ, ' வெறும் காசு பணம் தருகின்ற வேலை வாய்ப்புக்காக மட்டுமா, அன்று இந்தி படித்தாய்?' என்று கேட்கின்றது.

மொழி படித்து ஒன்றும் பெரிய இலக்கியம் படைக்கப் போவதில்லை என்ற போதினும், ஒரு அந்நிய மொழி தெரிந்திருப்பது, ஒரு கூடுதல் அழகைத் தருகின்றது என்பது என்னைப் பொறுத்த வரை உண்மை. ஒரு நிறைவை ஏற்படுத்தும்.

சில கதைகளைப் படிக்கையில், சில பாடல்களைக் கேட்கையில் அதன் மெய்யான(Original) மொழியில் அனுபவிப்பதில் தான் உண்மையான சுகம் உள்ளது.

அதுவும் நமது தேசிய மொழியை முழுதும் அறியாமல் இருப்பது, அவ்வப்போது உறுத்திக் கொண்டே இருக்கின்றது.

இந்தப் பாடலைக் கேட்டு நான் என்னை சமாதானப் படுத்திக் கொள்வது போல், நீங்களும் அமைதியுறுங்கள்.Get Your Own Music Player at Music Plugin


இன்றும் ஒரு சனிக்கிழமை இரவு என்பது இப்போது தான் நினைவுக்கு வருகின்றது. ஆஹா..!

Thursday, May 17, 2007

இரு நுனி எரி மெழுகு.ழை சடசடவென அடித்துக் கொண்டிருக்கின்றது. கரு மேகங்கள் விரைந்து வந்து கொண்டிருக்கின்றன. படபடவென முற்றத்தில் விழுந்த பெருந்துளிகள், மாளிகையெங்கும் அதிரச் செய்கின்றன. வெயில் தாழ்ந்து, மெல்ல மறைந்து கொண்டிருக்கின்ற இந்நேரத்தில், இருள் போல், கருக்கல் சூழ்கின்றது.

ஒவ்வொரு தூணிலும் ஏற்றப்பட்டிருந்த மணி விளக்குகள், ஒளியைச் சிந்தத் தொடங்கின.நெல் குவித்திருக்கும் குவலயறை, குதிரைகள் கட்டியிருக்கும் கொட்டகை, பசுமாடுகள் பாதுகாக்கப்படும் தொழுவம், பின்வாசல் அருகில் இருக்கும் கண்ணன் கோயில், தோட்டத்தின் துளசி மாடம்.... எங்கும் நனைகின்ற மதியப் பொழுதின் மழையில், ஜன்னலைத் திறந்து பார்க்கின்றேன்.

இது போன்ற மழையின் இரவில் நனைந்த என் மனதின் கதை சொல்லவா..?

ருளும் பனியும் பெய்து கொண்டிருந்த ஒரு மார்கழி நன்னாள். எங்கோ பெய்கின்ற பெருமழையின் சாரல் தூவிக் கொண்டு தென்றல் வீசிக் கொண்டிருந்தது. நிலவின் ஒளியோடு களித்துக் கொண்டிருந்தன தென்னங் கீற்றுகள். பனித்துளிகள் பூத்த ஈரப் புல்வெளியின் ஊடாக நடந்து செல்கிறேன்.

நிலவின் பிம்பத்தைத் தலையணையாக்கி, பிரபஞ்சத்தின் மீன்கள் பதித்த கரும்போர்வையை போர்த்திக் கொண்டு, செந்தாமரையும், வெண் தாமரையும் துயின்று கொண்டிருந்த குளிர்க் குளத்தின் படிக்கட்டுகளில் சென்று அமர்ந்தேன்.

சிறுசிறு கிண்கிணி மணிகள் பதித்த தூண்கள், வீசுகின்ற மென் காற்றிற்கு ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன. கரையெங்கும் வைத்திருந்த விளக்குகளின் தீபங்கள் சிமிட்டிக் கொண்டிருந்தன. பின்மாலையில் பெய்திருந்த சிறுமழையின் ஈரம் இலைகளில் இருந்து தெறித்துக் கொண்டிருந்தது. சிறுசிறு கூழாங்கற்களை எடுத்து, குளத்தில் போட்டுக் கொண்டிருந்தேன். என் மனதைப் போல, அலைவுற்றுக் கொண்டிருந்தது, குளம்.

எங்கிருந்தோ மென் குழலோசை என் செவிகளில் நுழைந்து, இதயத்தில் இறங்கியது. ஆஹா..! என் மாயக் கண்ணனின் மதுரகீதத்தில், நிறைகின்ற இம் மனம், வேறு எதனிடம் மயங்கும்? கண்ணன் அருகில் வந்து அமர்கின்றான்.

"ப்ரிய ராதே..! இந்த இரவில் குளக்கரையில் தனிமையில் ஏன் அமர்ந்திருக்கின்றாய்..?"

" என்னைப் போல், தனிமையில் வாடுகின்ற அந்த வெண்ணிலவைக் கண்டு ஆறுதலும், தேறுதலும் கூறிட வந்தேன் ப்ரபோ..!"

"நீ எனடி இனித் தனிமையில் இருக்க வேண்டும்? நான் வந்து விட்டேன் அல்லவா..?"

"கண்ணா! நீ இன்று இருக்கிறாய். நாளை கிள்ம்பி விடுவாய். துவாரகை உன்னை அழைக்கின்றது!"

"ராதே!.."

"முன்பொரு காலம், நாம் குழந்தைகளாய் இருந்தோம். மரங்களின் இடையிலே புகுந்து வருகின்ற காற்றைப் போல் இந்த வனமெங்கும் நாம் சுற்றித் திரிந்தோம். பாயும் நதியலைகள், கோகுலத்தின் வெயில் தீண்டும் தெருக்கள், ஒவ்வொரு இல்லத்தின் உறியடிப் பானைகளின் வெண்ணெய்ப் பாத்திரங்கள், ஆடு, மாடு மேய்க்கும் இடையர்களின் தொழுவங்கள், அடர்ந்த புழுதி பூண்ட நிலமெங்கும் நம் காலடித் தடங்கள் பதித்திருந்தோம். வெட்கமும், பயமும் அறியாத அந்த இளம் பருவத்தில் என் மனமெங்கும் நிறைந்த அன்பில் உன்னைக் குளிப்பட்டினேன், என் மனமோகனா!

பின்பு, சிறுவர்களானோம். வெண் கதிரின் ஒளியில் ஈர்க்கப்பட்டு, காணாமல் போய் விடுகின்ற ஈரப் பனித்துளி போல், நம் அறியாமைகள் வயதின் கரங்களால் உறிஞ்சப்பட்டு, நம்மைப் பிரித்து விட்டன. இதோ, இந்த குளக்கரையில், நாம் பேசாத கதைகளில்லை. பின் உன்னைக் காணும் போதெல்லாம், என் கண்களில் திரையிட்ட கண்ணீரில் நீ எப்போதும் நனைகிறாய். உன் பால்பொழியும் முகம் காண்கையில், என் மனமெங்கும் ஏதோ ஒரு வேதனை கவ்வியது. எப்போதும் உன்னைச் சேர்ந்து இருப்பது, நினைவில் மட்டுமே, நிஜத்தில் அல்ல என்பதை நினைக்கையில், என் உயிரின் துளிகள் எல்லாம் கண்கள் வழி கசிந்தோடின.

நீ ராதே என்று மதுரமாய் அழைக்கும் போதெல்லாம், மலரைச் சூழ்ந்த தேனியின் ரீங்காரம் போல் என் செவிகளில் எல்லாம் உன் குரலே நிரம்பியது. ஆதுரமாய் நீ என் கைவிரலகளைப் பற்றுகையில், கொதிநீரில் இட்ட மஞ்சள் தூளாய்ப் பரவுகின்றது உன் காதல்.

சென்றதொரு பிறவியில் ஈரேழு ஆண்டுகள் என்னைப் பிரிந்து வந்தாய். பின் கானகம் செல்லத் துடித்தேன். இப் பிறவியில் ஆதி முதல் அந்தம் வரை இணைந்தே வாழ்வோம் என்றனையே? இனி எப்போது உனைக் காணப் போகிறேன்...?"

"கலங்காதே ராதே! உனைப் பிரிகிறேன் என்று யார் சொன்னது? கதிர் வானை விட்டுப் பிரிந்தாலும், நிலவாய் மீண்டும் இரவில் ஒன்று சேர்வதில்லையா? மரத்தில் இருந்து பழம் கீழே விழுந்தாலும், வேரோடு, கலப்பதில்லையா..? அலை கடலை விட்டுப் பிரிவது போல் தான் வேகமாய்ச் செல்கிறது. ஆனால் பிரிகின்றதா? இல்லையே. கடலின் பேரன்பிற்கு உட்பட்டு மீண்டும் கடலோடு ஒன்றுவதில்லையா? மலையை விட்டு நீங்குவதாக அருவி சென்றாலும், மீண்டும் மழையாய்ப் பொழிந்து மலையோடு நனைவதில்லையா..? ராதா..! நான் எங்கு சென்றாலும், என் மனமெங்கும் நீயே நிறைந்திருப்பாய்..! இந்த இரவு வீணே கழிய வேண்டுமா? உன் தேன் குரலில் ஒரு கீதம் பட மாட்டாயா?"

"கண்ணா! நான் பாடுகிறேன். நீ உன் பூங்குழலின் நாதத்தில் துவக்கு..!"

ஒரு மதுர ஆலாபனை ஆரம்பமானது, மழைத் தூறலுடன்.

ன்றோடு எனைப் பிரிந்த கண்ணன், என்னைக் காண வருவான் என்று தினம் மாளிகையின் வாசலிலும் வந்து காத்து நிற்கின்றேன்.

Wednesday, May 16, 2007

சிறுதுளி - கோவையின் வெற்றிப் பயணம்.தூய கோவை. பசுமை கோவை. (Clean Kovai. Green Kovai.)

இந்த ஒரு குறிக்கோளோடு, கோவை மக்களால், துவக்கப்பட்டு தற்போது வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கின்றது 'சிறுதுளி' என்ற இயக்கம்.
குளுமையான காலநிலை, அழகான மக்கள், மரியாதையான பேச்சு, அன்பான வரவேற்பு, இனிய சுபாவம், ஊட்டி, கேரளம் அருகிலேயே இருப்பு, கல்வித் திறம், இவற்றோடு நகரின் பெருமைக்கு மேலும் புகழ் சேர்க்கின்றது, 'சிறுதுளி' அமைப்பு.
தமிழகத்தின் பிற பகுதிகளைப் போல், தண்ணீர்ப் பற்றாக்குறை கோவையிலும் நிலவுகின்றது. பெருகி வரும் ஒரு தேசத்தின், மாநிலத்தின், மாநகரின் முதன்மைப் பிரச்னை, அனைவருக்குமான குடிநீர். ஒருகாலத்தில் 'சிறுவாணி', 'பவானி' போன்று பெருகிய நதிகளின் மேல் இப்போதெல்லாம் அரசியல், சாயங்கள் படிந்து விட்டதால், அரசால் எதுவும் செய்ய முடியாத நிலையில், மாநகர மக்களே முன்நின்று நதிகளை, நகரின் நீர்நிலைகளை காக்கத் துவக்கிய அமைப்பு இது.


நகரின் பெருவணிகர்களைத் தலைமையாகக் கொண்டு, சில உயர்ந்த நோக்கங்களை மனதிற்கொண்டு, பணியாற்றி வருகின்றது.


அமைப்பின் குறிக்கோள்கள்:
  1. பழமையான நீர் மேலாண்மை அமைப்பை மேற்கொள்வதன் மூலம், கோவையின் பாரம்பரியத்தை மீட்டல்.

  2. மழைநீர் சேகரிப்பு, குளங்கள், வாய்க்கால்கள், நீர்வழிகளைத் தூர் வாருவதன் மூலம், நிலத்தடி நீ மட்டத்தை அதிகரித்தல்.

  3. காடு வளர்ப்பு.

  4. கல்வி நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

  5. கழிவுநீர் மேலாண்மை மூலம் சுத்தமான கழிவு நீரகற்று முறைகளை சமூகத்தில் மேம்படுத்துதல்.

  6. சுத்தமான மற்றும் பசுமையான சுற்றுப்புறத்தை ஏற்படுத்துவதற்கான பணிகளைத் துவக்குதல்.

  7. உறுதியான சமூகக் கட்டமைப்பை ஏற்படுத்தவும், மக்களிடையே இணக்கமான உறவை ஏற்படுத்தவும், பெருவாரியான மக்களின் பங்களிப்பை ஏற்படுத்துதல்.

அமைப்பின் முன்னர்ச் செய்த பணிகளையும், தற்போது செய்கின்ற பணிகளையும் இந்தச் சுட்டியில் காணலாம்.


உங்களால் முடிந்த பங்களிப்பையும் வழங்கலாம்.

Get Your Own Music Player at Music Plugin


Tuesday, May 15, 2007

துளி.


ன் கண்களின்

வெட்கம்

அறியாத


என் கைகளின்

வெப்பம்

அறியாதன


உன் கண்கள்.


நீ

இப்போது

என்ன

செய்து கொண்டிருப்பாய்

என்று

நினைப்பதையே

நான்

எப்போதும்

செய்து கொண்டிருக்கிறேன்.


ன் இதழ்களைச்

சுவைக்கும்

ஆப்பிளை அனுப்பியது

மறுபடியும்

அதே சாத்தானா?

மழை இல் வெட்கம்.


ன் வெட்கத்தை இந்த மழையிலேயே கழுவி விட்டு வா! அது எத்தனை சிகப்பு என்று அறியட்டும் இந்த மழை!

உன் புன்னகையை சற்று சிந்தி விட்டு வா! கள்ளினும் பெரும் போதையில் கலங்கட்டும் இந்தக் காற்று!

உன் கோபத்தைக் கொஞ்சம் காட்டி விட்டு வா! கோபமும் இத்தனை அழகா என்று குழம்பட்டும் இந்த வெயில்!

உன் பார்வையை ஆங்காங்கே பதித்து விட்டு வா! விளைந்து நிற்பதெல்லாம் உன் மேல் கொண்ட ஆசைகள் என்று விளங்கட்டும் இப் பெரு நிலம்!

உன் கூந்தலை துளி உதறி விட்டு வா! தெறிப்பது துளியல்ல, கரும் இருட்டின் நிழல் என்று உணரட்டும், பின் மாலை!

உன் நிழல் கூட இன்றி, நீ மட்டும் வா! எத்தனை ஆழம் நம் காதல் என்று தெளியட்டும், முடிவிலா இந்த இரவு..!

Monday, May 14, 2007

கூவக்கரையாண்ட...!

"ம்ஹூம்..! இந்த வூட்டுல எது என்ன மதிக்குது? கொஞ்சம் வயசானாப் போதும், செத்த எலி கணக்காத் தான் ட்ரீட் பண்றானுங்கோ! ரொம்ப ஆடாதீங்கடா! அப்பாலிக்கு ஒம் புள்ளங்களும் ஒங்கள அப்படித்தான் நடத்தும்.." பெருசு பொலம்பிக்கினே போச்சு.

"இன்னாத்துக்கு இது இப்புடி இஸ்துக்கினு, பொலம்பிக்கினு போகுது. வயசானேலே படா பேஜாருப்பா! புள்ளங்க பெருசாய்ட்டா, ஓரமா போய் ஒக்காந்துக்கினமா, வேளா வேளக்கு நாஸ்டா துன்னமானு இல்லாம, சொம்மா அது நொள்ள, இது நொட்டனு சொல்லிகினே கீறது...." கபாலி ரொம்ப வெசனப்பட்டான்.

"அத்த வுடு கபாலி! ஒனக்கொரு மேட்டர் தெர்யுமா..?" இது பக்கத்து வூட்டு கஜா. செம சோக்காளி. படா தாதா. ஏரியாவுக்குள்ள எவனாவது எதுனா புச்சா வாங்கினு வந்துரக் கூடாது. இவனுக்கு மூக்கு வேத்துரும். அப்பாலிக்கு டைம் பாத்து கபால்னு வூட்டுக்குள்ள பூந்து, ஆருக்கும் தெர்யாம, அட்ச்சுகினு வந்துடுவான்.

"இன்னா மாமு..? இன்னா மேட்டரு..?"கபாலிக்கு கஜா கையாண்ட பேசறதுனா செம குஜால்தான். இப்டியொரு சப்போட்டு கபாலிக்கு கீதுனு அல்லார்க்கும் தெர்யுங்கறதுனால, ஆரும் கபாலியாண்ட ப்ராப்ளம் பண்ண மாட்டாங்கோ.

"ஸ்ட்ரெயிட்டா மேட்டருக்கு வரேன். நேத்து, முனியன் வூட்டு கிச்சனாண்ட நம்ம மாரி போய் நோட்டம் வுட்டுகினு இருந்திருக்கான். அப்ப உன்ன போட்டுத் தள்ள அவன் ப்ளான் போட்டுக்கினு இருந்தானு மாரி நம்ம கையுல சொன்னான். அத்த நான் உன் கைக்கு பாஸ் பண்ணிவுட்டேன்.." கஜா எப்பவுமே கொஞ்சம் பெரிய வூட்டாண்ட தான் கண்ணு வெக்கிறதே. அதனால் ஏரியாவுல எதுனா விசேசமா நடந்துதுனா, அவன் கையுல வராம எங்கியும் போகாது. அவன் ஸோர்ஸ் அப்புடி.

"இன்னா கஜா..? இது ஒரு சப்ப மேட்டரு. இதுக்கு போய் என்னமோ பெருசா பிலிம் காட்டுற..? உன்னாண்ட இருக்கும் போது, எவனாவது எம்மேல கை வெச்சுற முடியுமா..?"


"அதுக்கில்ல கபாலி! டைம் சரியில்ல. போன வாரம் இப்டித் தான் உதார் உட்டுகினு இருந்த மணியப் போட்டுத் தள்ளிட்டாங்க. என்கவுண்ட்டர்னு சொல்லிகினு தனியா மாட்டுனா காலி பண்றங்கோ! எதுக்கும் கொஞ்சம் உசாரா இருந்துக்கோ. அப்பால பாக்கலாம். இந்த ஏரியா கவுன்சிலரு வூட்டாண்ட புதுசா பத்து மூட்ட வந்து எறங்கியிருக்காம். நான் போய் ஒரு தபா இன்னா, ஏதுனு ஒரு லுக் வுட்டுகினு வந்துரேன்பா. இன்னா..?"

"மூட்டனா... நம்ம சரக்கு தான...?"

"ஆமா.. அதே தான். ஸ்ட்ரெய்ட்டா அந்தாண்ட எங்கியோ தஞ்சாவூருக்கு கிட்டக்க இருந்து வந்துருக்காம்..."


"கஜா..! நாமெல்லாம் எப்ப அங்க எல்லாம் போறது. காலம் பூரா இந்தக் கூவம் ஓரத்துலயே தான் இருக்கணுமா..?"

"அய்ய..! இன்னா இப்புடி சொல்லிட்ட..! எங்க போனாலும் இது மாரி வருமா..? சொம்மா கெனவு காணாம, போய்ப் பொளப்ப பாரு. கொஞ்சம் உசாராவும் இருந்துக்க. அப்பால பாக்கலாம். வர்ட்டா.."


கபாலி செவுத்துல சாஞ்சிகினு யோசிச்சுகினு இருந்தான்.

"டம்ம்ம்ம்........."

எதுவோ மண்ட மேல வுழுந்த மாரி இருந்துச்சு. அலறி அட்ச்சிகினு ஓடப் பாட்த்தான் கபாலி. அங்கயும், இங்கயும் போய் மோதிகினான். செவுத்துல எல்லாம் போய் இடிச்சுகினான். கண்ணெல்லம் இருட்டிகினு வந்துச்சு. மூளஎல்லாம் கலங்கின மாதிரி இருந்துச்சு. தொம்னு மறுபடியும் எது மேலயோ போய் வுளுந்தான். படர்னு சாஞ்சான். யாரோ அவன் வாலப் புடிச்சு தூக்கற மாதிரி இருந்துச்சு. அப்பால அவனுக்கு ஒண்ணும் பிரியல. கபாலி செத்துப் போனான்.


"நைனா..! ஒடியாந்து பாரு..! நைட்டு ஃபுல்லா கீச்ச்கீச்சுனு கத்திகினு இருந்த எலி ஒண்ண கொன்னுட்டேன்..."


அப்பால கஜா அதப் பாத்து ஷாக் ஆகிட்டான்.

செத்துப்போன கபாலி :ஷாக்கான கஜா :

Sunday, May 13, 2007

கிருஷ்ணா - இராதை.


மோகன இரவின் பின்னிலாக் காலம். கருவானத்தின் மேகத் துகள்கள் எல்லாம், பரவியிருக்கின்ற வெண் ஒளித்துகள்கள் நிலவின் இருப்பைச் சொல்கின்றன. கருங்குயில்களும், வெண் அன்னமும், நாரைக் கூட்டங்களும், தங்க மீன்களும், பச்சைத் தவளைகளும், கல்லிடுக்கின் தேரைகளும் தத்தம் கூட்டுக்குள் ஒடுங்கி விட்டன.

நள்ளிரவின் கூதற்காற்று என் மனம் போலவே சோக கீதம் பாடிக்கொண்டு வீசுகின்றது. அலையடித்துக் கொண்டிருக்கும் குளிர்க் குளத்தின் இயக்கங்களும் நின்று போய் விட்டன. நான் யாரிடம் என் வேதனையைக் கூறுவேன்?

கோரைப் புற்கள் கூடு கட்டிக் கொண்டுள்ள நீலக் குளமே, உன்னிடம் தான் கூற வேண்டும். என் இதயக் கூட்டுக்குள் சிக்கிக் கொண்ட மதன மோகனைப் போல் உன்னால் என்னைப் பிரிந்து சென்று விட முடியாதல்லவா..?

இல்லை..! இல்லை..! நீயும் என்னை விட்டுச் சென்று விடுவாய். என்னை விட்டு மட்டுமா..? யாருமற்ற தனிமையின் இரவுக் காலங்களில் மட்டும், பால் ஒளியைப் பொழியும் நிலவைச் சுமந்து களித்திருப்பாய். பகல் நேரம் வர வேண்டியது தான். இரவில் கொஞ்சிக் குலாவிய நிலவை மறந்து கதிரோடு சென்று ஒட்டிக் கொள்வாய். பாவம் நிலவு! என்னைப் போல் அதுவும் நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே வர வேண்டும்.

முன்னொரு பிறவி என்று சொல்லத்தக்க காலம் உனக்கு நினைவிருக்கின்றதா?

து ஒரு மழைக் காலம். மேற்கின் மலைத் தொடர்களில் பொழிந்த செம்மண் நீர் எல்லாம் பாய்ந்து நிறைந்த நீர் நிலைகள். நீல ஆம்பல்கள், செந்தாமரைகள், பச்சை நிறத்தில் எங்கும் படர்ந்த ஆகாயத் தாமரைகள் என்று நாங்கள் அணிகின்ற ஆடைகளுக்கு கொஞ்சமும் குறையாமல் நீயும் அணிந்திருந்தாய். நம் தெருவெங்கும் ஈரம் பூத்திருந்தது. மாலை நேரங்களில் ஒளியால் நிரப்பும் சிறிசிறு விளக்குகள் கொண்ட எங்கள் வீடுகளை விட்டு, வெண்ணிலவின் ஒளியில் குளிக்கின்ற உன்னைத் தேடி வந்து கதை பேசுவோம்.

ஆஹா! என்னவென்று சொல்லுவேன்? அந்த மாயக் கண்ணன் அப்போது நம்மோடு இருந்தான். குளக்கரையில் அமர்ந்து நாங்கள் பேசிக் கொண்டிருக்கையில், இடை புகுவான். இடையைக் கிள்ளுவான். பொல்லாப் பிள்ளையாய் குளத்தில் இறங்கி, நீரை வாரி, வாரி எங்கள் மேல் இறைப்பான். நீயும் அலைகளால் ஆடி அதைக் கண்டு சிரிப்பாய். நாங்கள் கரைமண்ணை எடுத்து அவன் மேல் வீச, அதை அப்படியே விழுங்குவான். எங்கள் கூந்தல் பூக்களை அள்ளி, முகமெங்கும் தூவுவான்.

மரத்தின் மேல் ஏறி அமர்ந்து உலுக்குகையில், மாலையில் பெய்த ஈரத் துளிகள் எங்கள் மேல் தெறிக்கக் கண்டு விழுந்து,விழுந்து சிரிப்பான்.

'இரு..! இரு..! உன் அன்னையிடம் போய்ச் சொல்கிறோம்' என்று சொல்லிப் புறப்படுகையில், மண்ணை அள்ளிப் பூசிக் கொண்டு, 'இரு..! இரு..! உன் அன்னையிடம் போய்ச் சொல்கிறேன்' என்று விஷமச் சிரிப்புச் சிரிப்பான். மீறி யசோதாவிடம் சொல்லச் செல்கையில், ஓடிவந்து கன்னத்தில் முத்தமிட்டுச் செல்வான்.

கள்ளை உண்டவர் பிறகு நடக்க முடியுமோ? தேனை உண்ட வண்டு பிறகு பறக்க விரும்புமோ? அந்த மாதவனின் இதழ் பட்ட பின் அந்த நினைவில், முன்னர் நடந்தது, பின்னர் நடப்பதும் நினைவில் இருக்குமோ?

பின்பொரு நாள், நாங்கள் அந்தக் கோபாலனின் குறும்புகளைப் பேசியவாறு குளிக்க வந்தோம். அந்த மதுசூதனன் எங்கிருந்து கண்டானோ? எப்படி அறிந்தானோ? யார் சொன்னாரோ?, இந்த மரத்தின் மேல் அமர்ந்து கொண்டான். நாங்கள் அதைக் கவனியாமல், குளிக்கப் புகுந்தோம்.

கண்ட மாத்திரத்திலேயே, காண்போர் உள்ளத்தைக் கவர்ந்து கொள்ளும் கண்ணனுக்கு எங்கள் ஆடைகளையும் கவர்வதா கடினம்?. நாங்களும் பலவாறு துதித்தோம்.

'அட கண்ணா! மணிவண்ணா! கோவர்த்தனகிரி நாதா! காளிங்க ஸம்ஹாரி! குழலூதும் கோவிந்தா! ஆடைகளை கொடுத்து விடப்பா! கோபியர் கொஞ்சும் ரமணா! நீ என்ன செய்தாலும் ஏற்றுக் கொள்கிறோம். வெண்ணெய் வேண்டுமா? இனி நீ உறியடித்து பானைகளை உருட்டி, உடைத்து உண்ண வேண்டாம். நாங்களே உனக்கு ஊட்டி விடுகிறோம். ஹே! கோபாலா! உன் இனிமையான குழல் ஓசையில், பசுக்களும், ஆடுகளும், இடையர்களும், வன மரங்களும், பறவைகளும், விலங்குகளும், மலையும், காற்றும் மட்டும் மயங்கி நின்று விடுவதில்லை. நாங்களும் எங்கள் வேலையை விட்டு மெய் மறந்து விடுகிறோம். உன் வாசிப்பைக் கேட்டுக் கொண்டு தயிர் கடைகையில், வெண்ணெய் பொங்கிப் பெருகுகிறது. கிருஷ்ணா! உன் நாத ஓசையில் மயங்காத பேரும் உண்டோ? இதோ, இந்தக் குளத்தை கேட்டுப் பார்! சளசளவெனத் துள்ளிக் குதிக்கும் மீன்களும் அமைதியாகின்றன. அதோ அந்த மலையைக் கேட்டுப் பார்! மேலே வந்து மோதுகின்ற கருமேகங்களும், அமைதியாய் நின்று விடுகின்றன.யுகயுகமாய் ஓடிக் கொண்டிருக்கின்ற கிரகங்களும், சூரியனும், பிரபஞ்ச வெளியும் நின்று விடுகின்றன. அத்தகைய கருணை மகாப் பிரபு! நீ விளையாட கோபியர்கள் நாங்களா கிடைத்தோம்? எங்கள் மனத்தைக் கவர்ந்து விட்ட நாதா, இப்போது எங்கள் மானத்தையும் கவர வந்துள்ளாயோ? ஹே, கருமேக வர்ணா! ஆடைகளைக் கொடுத்து விடப்பா' என்று வேண்டினோம்.

இன்னும் பலவாறெல்லாம் வேண்டிக் கொண்ட பின் தான், அந்த அருமைப் பிள்ளை, ஆடைகளைக் கொடுத்தான். நீயும் கண்டு கொண்டுதானே இருந்தாய்?

ந்த நாட்களெல்லாம் ஒரு கனவாய்ச் சென்று விட்டன. இப்போது நமது மனம் கவர்ந்த மோகனன், ஒரு இராஜ்ஜியத்தின் தலைவன். அந்த நந்த கோபன் குமரன், பல பெரும் சேனைகளுக்கெல்லம் தளபதி. இனி அவன் நம் கோகுலத்திற்கு வருவானா? அவனை எண்ணி,எண்ணி கோபியர்களும், நானும் அந்த நிலவைப் போல் தேய்ந்து கொண்டே வருவதை அறிவானா? அந்த மன்னனைக் காணாமல் மற்றுமொரு இரவு கரைந்து கொண்டிருக்கின்றது என்பதை நிலவே, அவன் மாட மாளிகையின் உப்பரிகைகளில் நிற்கும் போது, சொல்வாயா? கூச்சம் சிறிதும் இல்லாமல், ஆடையைத் தள்ளி விட்டுச் செல்லும் தென்றல் காற்றே, அவனைத் தீண்டும் போதெல்லாம், கோபிகைவனத்தில், இராதா அவனுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறாள் என்று சொல்வாயா?

யாரது..? யாரது? என்னைத் தொடுவது?

ஆ..! ஆ..! யார் நீலமேக வண்ணனா? என் உள்ளம் கவர்ந்த மன்னனா? ஆம்! அவனே தான். இல்லை..!அவனாய் இருக்க முடியாது. எங்கள் கண்ணன் இப்படிச் சிவந்தவனாய் இருக்க முடியாது. அவன் கருநிறத்தான். துவாரகையில், அரண்மனைப் பெண்கள் அனைவரும் முத்தமிட்டு, முத்தமிட்டு என் கண்ணனைச் சிவப்பாக்கி விட்டார்களோ? இல்லை..! என்னைப் பிரிந்துச் சென்று இவ்வளவு நாட்களாகி விட்டதை எண்ணி, வெட்கப்பட்டு இப்படி சிவந்திருக்க வேண்டும்.ஹே பிரபு! இன்னும் ஏன் முதுகுப் புறம் மறைந்து நிற்கிறீர்?

மதனராஜ! உனது மந்தகாசம் பெய்யும் புன்னகையில் அமுதம் உண்ணும் பாக்கியத்தை அருள மாட்டீரா? மஹராஜ! இரவின் கூரையில் வந்து கூடு கட்டி விட்டு, விடிகையில் பறந்து செல்கின்ற கனவு அல்லவே, நீர் இப்போது வந்தது? இனி என்னைப் பிரிய மாட்டீர் அல்லவா?

மோகன குமாரா! பாலாய்ப் பொழியும் நள்ளிரவு நேரத்தில் உன் அருகாமையில் பூங்குழல் எடுத்து எனக்காகக் கொஞ்சம் இசையும். தயவித்து என் வேண்டுகோளுக்கு இசையும். உலகத்து உயிர்கள் எல்லாம் உறங்கி விட்டபின், உனக்காக உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கும் எனக்காகவும், இந்தக் குளத்துக்காகவும், இசைக்க மாட்டீரா?

மீரா பாடல்கள்.

எஸ்.பி.பி.


தேன் குரல் தேவன் எஸ்.பி.பி அவர்களின் தேவார்மித குரலில் மயங்கிய பல லட்சக்கணக்காண நேயர்களில் ஒருவனாக இப்பதிவை இடுகிறேன்.

நேற்று ஜெயா டி.வி.யில் அவரது 'என்னோடு பாட்டு பாடுங்கள்' நிகழ்ச்சியைப் பார்க்க நேர்ந்தது. என்ன குரல் வளமை..! இத்தனை பாடல்களுக்குப் பிறகும், பிசிறு தட்டாமல், சிதறாமல் நெடுஞ்சாலையில் வழுக்கிக் கொண்டு செல்லும் பயணம் போல் அவ்வளவு மென்மை. சாந்தம். மற்ற குரல்களைக் கேட்கையிலேதோ ஒன்று குறைவது போலவும், வட்டம் முழுமை பெறாமல் இருப்பது போலவும் தோன்றும். இவரது குரலில் பாடல்கள் கேட்கையில், ஒரு பரிபூரணம். ஒரு நிம்மதி. ஒரு சந்தோஷம். மிகச் சரியாகக் கூற, நிறைவு. மனதில் ஒரு நிறைவு ஏற்படுத்தும் வசியக் குரல்.

அதோடு சென்னை மாநகரில் எங்கும் காண முடியாத 'தாவணி போட்ட தீபாவளிகளை'க் கண் குளிர காண முடிவதில், என்னுடைய விருப்ப நிகழ்வாக மாறி விட்டது.

பின் விஜய் டி.வி.யில் உலா வருகையில், எஸ்.பி.பி. அவர்களும், கங்கை அமரன் அவர்களும் 'காபி வித் அனு' நிகழ்வில் பேசிக் கொண்டிருந்தார்கள். அருமையான நிகழ்வாக அமைந்தது.

உங்களுக்கான சில தொடர்க் கண்ணிகள் :

எஸ்.பி.பி. அவர்களின் இணைய முகவரி.

அற்புதமான பாடல்களின் தொகுப்பு.