ஒரேயடியாக மஞ்சள் பூக்கள் பூத்திருந்தன. அந்த வெளி முழுக்க யாரோ சாயங்காலத்தைக் கொண்டு வந்து பரப்பியது போல. ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு விதமான மஞ்சளில் இருக்கலாமோ? பட்டு ஜரிகையில் பரவிய மஞ்சள், நதியின் நுரைகளில் பட்டுத் தெறிக்கும் ஆகாய மஞ்சள், ஒற்றைச் சுடரொளி விளிம்பில் மினுக்கும் மஞ்சள், மழைக் கோடுகளில் நனையும் சூரியகாந்தி மஞ்சள்...மூச். அத்தனைப் பூக்களும் சொல்லி வைத்துக் கொண்டாற்போல் துல்லியமான ஒரே மஞ்சளைக் கொண்டிருந்தன.
பூக்கள் என்று சொல்லலாமோ? ரொம்பச் சின்னதாய் இருக்கும் செடிகளின் தலை அது. நான்கே நான்கு மடல்கள். ஒவ்வொரு மடலும் சுருண்டுச் சுருண்டு வடிவடைந்திருந்தன. மகரந்தக் கொத்து உள்ளே. காய்ந்த செங்குழம்பில் அடிவாரம். காம்பும் அதே நிறம். எண்ணி வைத்தால் ஒன்றரை விரல்களுக்கு மேல் தேவைப்படாத நீளம் அல்லது உயரம். அத்தனைச் செடிகளும் ஒன்று சேர்ந்து பூவெளியாக ஆக்கி வைத்திருந்தன.
நீல ராகத்தைப் பாடியபடி மேகங்கள் மிதந்து கொண்டிருந்த மாலையில், தெளிவாக அலைகளை நகர்த்திக் கொண்டிருந்தது ஒரு குளம். கரைகளில் பறவைகள் கொஞ்சம் வளர்ந்த அரிசித் துண்டுகளைப் போல் குதித்தன. மரங்களில் எங்கணும் பூச்சிகளின், புல்களின் பேராரவாரம். பசிய துகள்கள் படர்ந்த இருதய இலைகள் தங்களைச் சுமந்து கொண்டிருந்த தருக்களின் மிகப் பிரும்மாண்டங்களின் மீது தங்களது ஆழ்ந்த கருணையை அசைந்தாடிக் காட்டிக் கொண்டிருந்தன.
மேதினியில் மீதுலாவும் தென்றல் காற்றிடையே தொலைவில் ஒளி பாய்ச்சும் செங்கதிரின் சிகப்பான துளியமுதங்கள் நிரம்பிக் கொண்டிருந்தன. மலரடி ராகம் ஒன்று தன் மனதினிற்கினிய துளை மூங்கிலைத் தேடித் தேடி வன வனாந்திரங்களின் அத்தனை திக்குகளிலும் முட்டி மோதியது. விழுதுகளிலும், கிளைகளிலும், இலைக் காம்புகளிலும் சுரந்து சுரந்து வழிந்தோடுகின்ற இயற்கை விருப்பு, ஆதியில் கண் விழித்த முதல் தாவரத்தின் முந்தானை நூல் வாசனையை நினைவுபடுத்தியது.
சின்னஞ் சிற்றுயிர்களும் சில்லென இசை பாடும் வண்டுகளும் அமர்வதற்கு இடம் பார்க்க அங்குமிங்குமெங்கும் அலைந்து கொண்டிருக்கையில், பனைமரங்களும், தென்னை இலைக்கீற்றுகளும் கேலிக் கைகொட்டி எள்ளி நகையாடி இன்னும் ஏதேதோ செய்து, அப்படியுமிப்படியுமெப்படியும் அசைந்து கொண்டேயிருந்தன. முழவுகள் முழங்குமாறு கேட்ட ஒலி, ஏதோ ஒரு ஞாபகப் ப்ரியத்தை நெஞ்சத்தாழத்திலிருந்து எழுப்பி விட எத்தனிக்கையில் நுரை ததும்பும் கரையெங்கும் மொட்டு மொட்டாய் முளைத்தது நிகழ்.