Friday, July 20, 2018

நீலாம்பல் நெடுமலர்.39.ரு மலரின் மலர்மை என்பது தான் என்ன? சூழ் இதழ் மெல்லப் பிரிந்து வளைந்து உள் மகரந்தம் காட்டுமே அதுவா? நறு சுகந்தம் காற்று வெளியில் தூவிப் பரப்புமே அதுவா? ஒற்றைக் காம்பில் மண் ஊன்றி மொட்டவிழ்ந்து சூரியப்பொழிவை அள்ளி அள்ளி அருந்துமே அதுவா? மலர்மையின் உச்சம் என்பதென்ன? அதன் ஒரு நாள் வாழ்க்கையில் அதன் ஆனந்தத் திளைப்பின் பெருங்கணம் என்பது தான் எது? அதை அடையத்தான் சிற்றணுவிலிருந்து முளைத்து வந்ததா அது? அதை அடைந்த பின் உடனே கீழிறங்கத் தொடங்குமா? இனி மீண்டும் அது அடையவே முடியாத அந்த களிப்புத்துளி நீண்டு நீண்டு வாழ்வெல்லாம் திகட்டாதா? உச்சத்தின் பீடத்திலேயே வீற்றிருக்கும் அம்மலர் தான் எது?

எழும் அனலின் அனல்மை என்பது தான் என்ன? சூழ் அனைத்தையும் எரித்துத் தன்னுள் கரைத்து தானாகிச் சுடர்ந்தெழும் கரைதலா? தீண்டும் இன்பம் திகட்டும் இனிமை கொதிக்கக் கொதிக்கக் கட்டியணைத்து உடன் எரிதலின் பதற்றமா? பொற்கட்டி உருகி வானோக்கிச் சுழலும் மஞ்சள் நிலவு தானா? தீச்சுடரின் நுனி நா சொட்டும் நாக நஞ்சின் குளுமை கொண்டிருக்குமா? நீலத்தணல், நெடும் உயரத்தில் நிலை கொண்டலையும் செழும்பிழம்பு தன்னைச் சுற்றிப் பரப்பியிருக்கும் ஒளிர்மை தான் என்ன? செம்பருந்து விழிக்கூர், வனம் விழுங்கும் பூந்தணல், புதுமுளை துளிர்க்கும் காட்டெரி, பொசுக்கிச் சாம்பல் உதிரும் மென்னுடல், நடுக்குறப் பாயு வெம்மை நதியின் வெள்ளம் விழுங்கும் பசி தான் என்ன? அந்நெருப்பின் வழிகுழம்பு பரவி வழிய இப்பூமிப்பரப்பு போதாமல், வானெங்கும் நிறை கதிர்கள் தான் எத்தனை எத்தனை?

மலர்மையும் அனல்மையும் பிணைந்து எடுத்த உருவென்று ஒன்றிருப்பின் அதன் இலக்கணம் தான் என்ன? கதிருண்ட மலரின் அனலும் நீரணைத்த நெருப்பின் குளிரும் வீசும் இரு விழிகள் கொண்ட செம்முகம் அது என்றமையுமா?  முகிலுறைக் குளிர் துளிகளாய்ப் பொழிந்து தெறித்தல் போல் பார்வை மலர் விழிகளென மலர்ந்திருக்குமா? சதைகிழி வாளின் கூர் முனை சுழலும் நாசி என சரிந்திருக்குமா? முற்காலையின் பனித்துளி ஈரம் சுமக்கும் மலரிதழ்களென முத்தியெடுக்க சிவந்திருக்குமா?  தீ அணைக்கும் மென் பஞ்சுக் குழுமமென கன்னம் எழுந்திருக்குமா? சொல்லென முளைக்கும் செந்தேன் துளிகளை ஏந்திச் சுவைக்கும் மடலிரு செவிகளென கிளைத்திருக்குமா? அமுது நிறை இரு குவலயங்கள் துளிர்த்து முகிழ்த்து மெல்ல கனிந்தமைந்த எழிலென நிலை கொள்ளுமா?  செந்தாமரையும் அக்கமலத்தின் மடி தவழ ஒரு குழவியும் தாங்க வழியுங் கொப்பூழென விழுந்தெழுமா? அருளும் அணைக்கும் அணையும் அன்புறும் நெடுங்கரங்கள் அன்னையென அழல் தணிக்குமா? ஊறும் கேணி இறைக்க இறைக்க நிரம்பா தொல்நிலம் முற்றா இளம்புல் மேய் மூதாதைக்கென முளைத்திருக்குமா? தாங்கும் வாங்கும் துயர்க் கரைக்கும் செழுந்துடை வலுவென நின்று உடல் தாங்கியிருக்குமா? பத்துச் சிமிழ் விளக்குகளின் அசையாச் சுடரென இரு தாள் முனைகளில் எழுந்தருளுமா?

தேவி, அனலெழுந்தோனும் நீரரவில் துயில்வோனும் முகத்திற்கொரு சொல் உதிர்ப்போனும் உன் பேரெழில் முன் நிலை மறப்பின், மானுடனென உள இவ்வுயிர் குனிந்து பாதத்துளிகளை முத்தமிடுகையில் பிழையென ஏதுமுண்டா? மலர் கனிதலும் அனல் குளிர்தலும் தளிர் மணத்தலும் தணல் அடங்கலுமாய் இப்பொழுதுகளில் நகரட்டும் இவ்வாழ்வு.