Tuesday, November 07, 2017

நீலாம்பல் நெடுமலர்.25.


பொற்றனல். பைங்கிளிக்கூட்டம். வெண்முகில் சாரம். பூந்துகில் மடிப்பு. பண்மொழிப் பாவை.

தீச்சரம் தீய்க்கும் படுக்கைப் போர்வையின் பேச்சரவம் கேட்டிலையோ, நீ? மென்விரல் பிடித்திழுத்தணைத்திதழீரம் பரிமாறிக் கொள்ளும் இரவுப் போது இப்போது போதுமா? தேங்கும் நதி அணைக்கட்டில், ஏங்கும் உயிர் காக்கும் வந்தணைக்கட்டில்.

மெளனம் ஒரு விழி. மதுரம் மறு விழி. செந்தாமரைச் சேற்றிலூறி எழும் பொன் மாலையில், வெண்ணிலா வானிலேகும் முன்னிரவில், தென்றல் வழிகளில் குளிர்ப்பதியன் இடும் நேரங்களில், ராகமெழுப்பிக்குழலீனும் மோகக்கடலில் நீந்தும் சிறுமீன் நான்.

சிற்றவை நுழைந்த சிற்றெறும்பைப் போல் திகைத்து நின்றேன் உன் முகம் தெரியாமல் தென்படுகையில். செழுந்தீ எழுப்பி ஆகுதியாகும் குருதிக் குடுவையாய்க் குலுங்கல் இவ்வுடல் கொளும் அதிர்வு.

நேற்றைய நாள் ஒரு சொல்லில் முடிந்தது. நேற்றைய இரவு இன்னும் குளிர்மையாய் நீண்டு கொண்டே இருக்கின்றது.

பூப்பறிக்கும் குளிர் விரல்கள் கோதுதல் போல் இலை பரப்பி இதழ் பிரித்து மகரந்த மொட்டுகளை மெல்ல மலரள்ளும் பின் மணம் நிறைக்கும்.

இரு தாளொற்றி இரு கைப்பற்றி மற்றுமிரு விழிகள் கண்டு மாற்றுரு கொண்டு வாழ்நாளெல்லாம் வனைந்திருக்க.