Saturday, November 15, 2008

நெய்தல்.

ந்திணைத் தமிழ் நிலங்களைக் களங்களாக வைத்துக் காதலைப் பாட நினைத்து முயன்றதில் முல்லை மட்டும் கையில் சிக்காமல் போனது. மற்றவை கொஞ்சம் கொஞ்சம் கிடைத்தது.

குறிஞ்சி இங்கே..!

***

நெய்தல் இங்கே உப்புக் கரிக்கின்றது..!

அலைகளில் நனைந்த பாதி நிலவின் உப்பு நிழல், மீன் நாற்றமுடைத்த படகின் மேல் மோதி உடைந்து கொண்டிருக்கும் முன்னிரவுக் காலம்.

பெருநகரில் இருந்து தப்பி வந்த பேரிரைச்சல், கரையெங்கும் நுரை ததும்பிக் களிக்கும் நேரம்.

தனிமையில் மிதக்கின்ற விண்மீன்களின் துயர் நிரம்பிய ஒளியைச் சுமந்து வரும் குளிர்காற்றின் ஈரம் பிசுபிசுப்பை வழியச் செய்கின்றது.

ஒற்றை விளக்கின் வழியே தம் பயணச் செய்தியைச் சொல்லியவாறு நகர்கின்றன, தூரத்துக் கப்பல்கள்.!

பல்லாயிரம் பாதச் சுவடுகள் பதிந்த, மணற்பரப்பின் மேல் ஊர்கின்ற நண்டுகளின் குறுங்கால்கள் ஈரம் பூக்கச் செய்கின்றன.

உன் பெயரை நானும், என் பெயரை நீயும் எழுதிப் பார்த்து, அலைகள் வந்து கலைக்காமல், கோர்த்த விரல்களால் அணை கட்டிய நாம், இப்போது மெளன முலாம் பூசிய முகமூடி அணிந்திருக்கிறோம்.

காலடியில் மணல் அரிக்கும், இந்த மகாசாகரம் நம்மைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிப்பதைக் கண்டு, கைகட்டி அமர்ந்திருக்கிறோம்.

"இது தான் கடைசி இரவா.?"

"இனி மீண்டும் வருவதில்லை இந்த இரவும், மீண்டு வருவதில்லை நம் உறவும்..!"

பிரிதலில் கசிகின்ற கண்ணீரால் நிரம்பிய , இந்தக் கடலின் உப்புநீர், காற்றின் சுவையையும் மாற்றி விடுகின்றன.

தினம் பிரிந்து செல்கையில், நீ பதிக்கின்ற ஐந்து புள்ளிக் கோலங்கள் மேல், நான் நடந்து தொடர்வதை நீ அறிகிலையா?

ஒவ்வொரு முறையும் கலங்கரை விளக்க ஒளி தொடுகையில் எல்லாம், நீ முகம் மறைக்கையில் வெளிப்படும் வெட்கமோ, பயமோ, உன் வளையல்கள் மேல் தெறிப்பதை நீ அறியவில்லையோ?

அருகிய சிலுவைக் கோயிலின் இரவுமணி கேட்டு, அவசரமாக எடுத்திருப்பாயோ, அப்போதெல்லாம் அந்த சிலுவை என் மீது பாய்வதை அறியமாட்டாயா?

இன்னொரு முறை கடற்கரையிலும், கோயிலும், பேருந்து நிறுத்தத்திலும், பால் பூத்திலும் சந்திக்க வேண்டாம் என்று சொல்லி விட்டுச் செல்கின்றாய். ஒரு தூரம் சென்ற பின் புள்ளியாய் மறைகின்றாய்.

ஊனமுற்ற ஓர் உடைந்த வெண்சங்கின் உலர்ந்த, உள்ளார்ந்த மெளன ராகம் மட்டும் கேட்டுக் கொண்டே இருக்கின்றது..!

அவள் ஒரு குழந்தை...!

19.Nov.2005.

ரு நாள் பொழுதின் இறுதியில், உடைந்த நிலாவின் உலா துவங்கும் நேரம்! பூமியின் மேனியைப் பல்லாங்குழி மேடையாக்கியபடி பெய்கின்ற அடர்மழையின் பெய்தல் எல்லாம் ஈரமாக்குகின்ற பின்மாலைக் காலம்.

சின்னஞ்சிறு குமிழிகளில் சிரித்துக் கொண்டிருக்கும், திரிமுனைச் சுடர் விளக்குகள் நிரம்பிய மாடங்கள் கொண்ட உன் வீடு!

பாசிகள் படர்ந்திருக்கும் சுவர்கள் சூட்டிய, உன் வீட்டில் ஒரு மென்பனிக் காலப் பூ போல் நீ பூத்திருந்தாய்.

நீ அசையும் போதெல்லாம், ஆனந்தக் கூச்சலிடுகின்ற மணிகள் கட்டிய வெண்தந்தத் தொட்டிலில் நீ துயில்கின்றாய்.

தொட்டிலில் தொங்கியபடி இருக்கும் வைரங்கள், தங்க மாலைகள், முத்து அணிகலன்கள், ,மரகதம் பதித்த பேடுகள் என்ன பேசுகின்ரன?

"அம்மா! இங்கே இருக்கும் பொன் நகைகளில் நான் தானே அழகு?" குட்டி வைரம் தாய் வைரத்திடம் கேட்கின்றது.

"இல்லை, என் கண்ணே! அதோ, அங்கே தூங்கிக் கொண்டிருக்கும் தேவதையைப் பார்! பிரியாமல் சிரிக்கின்ற உதடுகளின் சிவப்பைப் பார்! இந்த மரகத மொட்டுகள் நிறத்தைப் போல் இல்லை? தெரியாமல் முளைத்து விட்டது போல், கொஞ்சம் கொஞ்சம் பூத்திருக்கும் புருவமுடிகளைப் பார்! ஊதாப்பூவாய் இருக்கும் ரூபிக்கல்லை விட அழகல்லவா அது! மல்லிகைப் பூ மொட்டின் மேல் பனித்துளி சொட்டுகையில், மடங்குகின்ற நுனிகள் போல் சுருண்டிருக்கின்ற பிஞ்சு விரல் நுனிகளைப் பார்! அமைதியாக மூடியிருந்தாலும், அசைகின்ற சிப்பிமுத்து போல் அசைகின்ற கருவிழிகளைப் பார்! பஞ்சுப் பொதி போல் படர்ந்திருக்கும், அந்த பிஞ்சு வயிற்றைப் பார்! கைகள், கால்கள் எனப் பெயர் பெற்ற கண்ணின் மணியைப் பார்! கொலுசுகளும், வளையல்களும் நிரம்பிய ஒரு குட்டிப் பாப்பாவைப் பார்! நாம் அழகா, இவள் அழகா?"

"நான் எப்போது இவள் போல் அழகாவேன்?"

"அழாதே என் வைரமே! நாம் விரைவில், இவள் மேனியை அலங்கரிப்போம்! அப்போது இவள் அழகைத் திருடிக் கொஞ்சம் ஊட்டி விடுகின்றேன். நீயும் அழகாவாய்! ஆனால் மறந்து விடாதே! இவள் அழகைத் திருடத் திருட, மேலும் இவள் அழகு தான் திரளும்!"

சின்னச் சின்னதாய்ப் பேசுகையில், சிணுங்கிக் கொள்கின்ற உன்னைப் பார்த்து, வைரங்கள் இரண்டும் வாய் மூடிக் கொள்கின்றன.

Friday, November 14, 2008

பார்க்கும் இடத்திலெல்லாம் உன்னைப் போல்...!

யற்கையும், காதலும் கவிஞனுக்கு அள்ள அள்ள வற்றாத கற்பனை ஜீவ ஊற்றுகள். இயற்கையில் காதலையும், காதலின் இயற்கையையும் அவன் கலந்துக் களித்துக் கூடி முயங்கி புது வர்ணத்தில், பொதுக் குணங்களைப் பட்டியலிடும் போது... வார்த்தைகளுக்கே வெட்கம் வந்து வ்டுகின்றது.

தாகூரின் கீதாஞ்சலி படித்துப் பாருங்கள்...! ஆஹா..! அமரத்துவ அழகையெல்லாம் அல்லவா அவர் வரிகளில் வடித்துள்ளார்..! கிறக்கம், போதை, மயக்கம் வேண்டுமா...? கீதாஞ்சலி குடியுங்கள்.

25.Dec.2005.

பெயர் வைத்திடாத பூக்களையெல்லாம் தொட்டுச் செல்கிறது தேனீ.! பாதை தெரிந்திடாத நதிகளின் மேலெல்லாம் தடவிச் செல்கிறது வெயில்.! இருள் படர்ந்த காட்டின் மரங்களின் இடையில் எல்லாம் நுழைந்து செல்கிறது காற்று! எல்லைகள் தெரிந்திடாத நாடெங்கும் பறந்து திரிகிறது பறவை! எங்கேனும் நகர்ந்திடாத மரங்களின் அமைவிடம் தாண்டியும் அலைகிறது வேர்! எங்கோ உரமாகும் வகையில், உதிர்கிறது இலை! எதிர்க்காற்றுக்கும் அணைவதில்லை, எரிகிறது நெருப்பு! எந்த நாளிற்கும் மறந்தும் உதிப்பதில்லை, மேற்கில் கதிர்! நகர்ந்து சென்றாலும் பாதைகளை நனைத்து விட்டே செல்கிறது நதி! வெடித்துச் சிதற, நொடிகளே ஆனாலும் வர்ணம் காட்டி வாழ்கிறது நுரை! நெடுங்காலம் மறைந்தே இருந்தாலும், பெரும் அழிவிற்குப் பின் குடியேறுகிறது அமைதி!

காயங்கள் தந்தாலும், ரணங்களின் மேடுகளில் வசிப்பது நீ! காயங்கள் கசந்தாலும் நீ தந்ததால், அதன் கோடுகளை ருசிப்பது நான்.!

ன்
தோட்டத்தின்
மரங்களிலிருந்து
இலைகளாய்
நீயே
உதிர்கின்றாய்.!

என்
காலைப்
புல்வெளியில்
பனித்துளிகளாய்
நீயே
பூத்திருக்கிறாய்.!

நான்
பார்க்கும்
இடங்களிலெல்லாம்
நீயே இருக்கின்றாய்,
பாதி புகைந்த
பீடித் துண்டுகளாகவும்,
முற்றும் கிழிந்த
பயணச்
சீட்டுகளாகவும்..!

குறு வரிகள்.

பெருங் கவிதைகளை விடவும் கடினமான செயல் குறு வார்த்தைகளால் எழுதுவது. சின்னச் சின்ன வரிகளிலேயே, அர்த்தத்தை உணர்த்தி விட முயல்வது எந்தக் கவிஞனின் முயற்சிகளிலும் முக்கியமான ஒன்று. அந்த சவாலே அவனுக்கு சுவாரஸ்யம் ஆகின்றது.

04.Nov.2005.

பெருமழையின்
பொழிதலில் உடைகின்ற,
அணைக்கட்டுகள்
போல் அல்ல,
சிறு தூறலில்
நனைகின்ற
மஞ்சள் சுவர் போல்
நான் இருக்கின்றேன்.
நீ
எப்படி வருகின்றாய்.?

விர்த்து விட்டு
நீ போகையில்,
தவிக்கத் தவிக்கப்
பற்றும்
என் மனத்தை
மரணத்தின் வலி.!

விடியலில்
உடைகின்ற
கனவுகளின் நுரைகளின்
மேல்
மாறுகின்ற
வண்ணப் படலமாய்
நீ...!

தாயற்ற
கைக் குழந்தையுடன்
தகப்பன் போல்
தவிக்கிறேன்
நீயற்ற
நம் காதலுடன்..!

ன்னைத்
தவிர்க்கப் பார்ப்பதிலும்
தள்ளி
வைப்பதிலும்
நீ
சொல்லும்
பொய்களின்
சாயம்
வெளுக்கும் போதெல்லாம்
கூசிப் போவது
நீயில்லை..!

ஆயுசுக்கும் வரமாட்டன்..!

ப்பனைகளைக் கலைத்து விடு, களைந்து விட்டு மனதின் உண்மையான குரலில் பேச முயலும் போது தான், கவிதையின் மொழி நமது அடித்தளத்தை நமக்கே காட்டுகின்றது. 'நான் இத்தனை எளியனா..?' என்பது நமக்கு சற்று அதிர்ச்சி கொடுத்தாலும், உலகமெல்லாம் சுற்றினாலும் நமது வேர்கள் இன்னும் அறுபடவில்லை என்ற ஒரு நிம்மதி பிறக்கின்றது.

இதோ மனதின் ஒரு நேரடிக் கவிதை..!

13.Nov.2005.

காஞ்சு போன கருவேல முள்ளுக,
காரம் போட்டு கன்னி சொன்ன சொல்லுக,
கண்ணுக்குள்ள குத்துது, நெஞ்சுக்குள்ள நிக்குது!
குலை வரைக்கும் நொழஞ்சு, கடைசி வரைக்கும் கொல்லுது!

பச்சைப் பசும் பாறை போல வழுக்குது,
பகல்வேசம் போட்டு, நல்லாத் தான் நடிக்குது,
பர்சாக் கொடுத்திருச்சு, பதுக்கி வெச்ச ஒரு நெனப்பு,
தரிசாப் போயிடுச்சு, ஒதுக்கி வெச்ச ஒரு மனசு.!

எரு போட்டு, ஒரம் போட்டு, வளத்து வத்தேன்,
எதமான நெனப்புகள் எடுத்துச் சொல்லி நெனச்சு வந்தேன்,
எடுத்துச் சொல்லயில, எடுத்தெறிஞ்சு வீசயில, இருந்த
எடம் தெரியாம போயிடுச்சு, எதயும் தாங்கற எம் மனசு.!

நேத்து வரைக்கும் நெனக்கலயே, நெஞ்சுக்குள்ள தோணலியே,
பாத்து வெச்ச சிரிப்பெல்லாம் பஞ்சாப் போகுமின்னு,
காத்தடிச்சு கலஞ்சு போன கருமேகக் கூட்டம்போல,
சேத்து வெச்ச கனவெல்லாம், செதறி செதறிப் போனதம்மா.!

உருப் போட்டு, உருப் போட்டு, உம் முகத்தைப் பதிச்சு வெச்சேன்,
கருப் போல, கருப் போல, கவனமாத் தான் காத்து வெச்சேன்,
தெருவோரம் போகயில, தெறிச்சு விழுந்த சேறு போல,
ஒரு வார்த்த கேட்கயில, ஒதறிப் போச்சு, என் உசிரு.!

ஆனப் பசி கொண்ட என் வீடு அடுப்புக்குள்ள,
பூன வந்து தூங்குதம்மா, புழுவெல்லாம் ஊறுதம்மா!
வானம் பாத்த பூமி போல, வறண்டு போன கெணறு போல,
ஊனமாகிப் போனேனம்மா, உருப்படாம ஆனேனம்மா.!

பக்கமிருந்தும் பாத்துக்கல, பாத்திருந்தும் பேசவில்ல,
திக்கித் திக்கிச் சொன்ன வார்த்தை, தீயா பதிலை,
துக்கத்தோடு கேட்டுக்கறேன், தூரமாப் போயிக்கறன்,
அக்கம்பக்கம் நகந்திடறன், ஆயுசுக்கும் வரமாட்டன்..!

***

வாய்க்கா வரப்போரம்...

வெறுமைக் கணங்களை நிரப்பும் தமிழ்த் துளிகள்.

அசத்திப்புட்ட புள்ள...!

போறவளே பொன்னுத்தாயி...!

மூன்று வருடங்கள் + 1 நாள் முன்பு எழுதிய கவிதைகள்.

மிகச் சரியாக மூன்று வருடங்கள் மற்றும் ஒரு நாள் ஆகின்றன. இந்த கவிதை வரிகளைப் படிக்கும் போது, ஒரு வீச்சு அப்போதைய கவிதைகளில் இருந்ததை உணர்கிறேன்.

இப்போதும் கதைகளின் பக்கம் மனம் சாய்ந்து கிடந்து, தர்க்கமாக யோசித்து சம்பவங்களைக் கோர்ப்பதில் சலிப்படையும் போது, ஆழ்மனப்பிரவாகமாக எழும் கவிதைகளிடம் சரணடைந்து களிப்புறுகிறேன்.

13.Nov.2005

சிரிப்பான
பொழுதுகளின் போது
படிந்த
உன்னழகின்
இனிப்பான பதிவுகளைத்
தொட்டு அழிக்கிறது,
மறுப்பின் போது
நான் கண்ட
வெறுப்பு முகத்தின்
ஈரக்கை..!

பாராமல்
நீ
நகரும் போதெல்லாம்
பாரமான
ஒரு கல்லாய்
மனதில்
உருக் கொள்கிறது
ஒரு பாரா(றா)ங்கல்..!

ல்லறையில் பூத்திருக்கும்
புளியஞ்செடி
அறிவதில்லை,
கிளைகளில்
பேய்கள் வந்து ஆடும்
என்று..!

கொல்லையிலே நனைந்திருக்கும்
மாஞ்செடி
நினைப்பதில்லை,
கல்லடி
வாங்கித் தர
காய்கள் கனிக்கும்
என்று..!

எல்லையிலே காத்திருக்கும்
பெருவீரனுக்குத்
தெரிவதில்லை
எந்தப் போரில்
இறுதி நாள்
என்று..!

சொல்லையிலே
உனக்குப்
புரிவதில்லை,
பேசிக் கொண்டிருப்பது,
இறந்து போன
ஒரு
பிணத்தோடு
என்று..!

Gaaனா பாttu..?

றைந்த காதல் கவிதைகளைப் படித்து விட்டு, ஒரு தோழி, 'உச்..' கொட்டி விட்டு, ' ரொம்ப சோகமா இருக்கு. பாவம் தான் நீ..! எப்படி தான் இவ்ளோ சோகத்திலயும் கூப்பிடாத ட்ரீட்டை எல்லாம் கூட தவறாம அட்டெண்ட் பண்ணி, சோகமா மூஞ்சிய வெச்சுக்கிட்டே, சோகமா ரெண்டு சிக்கன் பிரியாணி, மூணு எக் தோசா, ஒரு ப்ளேட் சிக்கன் லாலிபாப், ரெண்டு ஐஸ்க்ரீம், ஒரு மொசாம்பி ஜூஸ் சாப்பிடறயோ..? உன்ன நினைச்சா சோகமா தான் இருக்கு. ஒரு சேஞ்சுக்கு ரொமாண்டிக்கா... குஜால்ஸா எழுதிட்டு வா..' என்று எக்கச்சக்கமாக காலை வாரி விட, ரொம்ப நேரம் யோசித்து ஒரு ட்ரை பண்ணினேன்.

28.Oct.2005

Kabul grapes Eyesஸோடு,
Babool Paste Taste Teethதோடு,
Mysore Sandal Soapபோடு வரும்
மயிலே இவளுக்கு 'ஓ' போடு..!

Lalbagh Garden Rose போலே,
லாலா Shop Sweet போலே,
Kashmir Apple, Cherry Juice வருமா,
கண்ணே உந்தன் Face போலே..!

Bangalore City பூ Garden,
Gang இன்றி சுற்றும் உனக்கு me warden!
உனக்கும், எனக்கும் இடையே war done,
உளறாமல் சொல்கிறேன், கேள் Burden!

Complan, Horlicks, Farex,
உன்னோடு ஒட்டிக் கொள்ளவா as Nerolax,
Cola, Pepsi, seven up, Thumbs-up
Gold Winner நீ பேசினாலே எனக்கு warm - UP...!

துயர்க் காதல்கள்.

விஞர்கள் பெரும் காதலர்கள். அல்லது காதலர்கள் கவிஞர்கள் ஆகின்றார்கள்.

எதிலும் உறங்கிக் கொண்டிருக்கும் ஓர் அனுபவத்தை எழுத்துக்களில் கொண்டு வருவது யார்க்கும் சுலபம். ஆனால் எங்கும் காதலையே காண்பவர்கள் சொல்லும் மொழியில் சொற்களின் மேல் சொர்க்க வாசம் வீசுகின்றது.

பெரும் சல்லாத் துணி விரித்த நீல ஆகாயம். மிதிக்க மிதிக்க கால்களின் நரம்புகளின் வழி பூக்கின்ற அழுத்த பூமியின் ஸ்பரிசம். போதைக் குழறலாய்த் தலையாட்டும் வண்ண மலர்கள். குடிக்கவா, கொடுக்கவா என தள்ளாடும் வண்டுகள். பொங்கும் குதூகலாமாய்ப் பேரிரைச்சலோடும், பிரம்மாண்டமோடும் பாய்ந்து வரும் பேரருவி. மிதக்கிறானா, முகில்களில் மூழ்குகிறானா என்று கவனம் கலைக்கும் வெண்ணிலா. உற்சாகமாகக் கரம் பரப்பி, விரிசலிட்ட பானையின் இடுக்குகளில் இருந்து பீச்சியடிக்கும் செந்நிறத் துளிகளாய் எழுந்து வரும் பொன் கதிர். இரவின் மெளனச் சந்துகளில் காற்றோடு இரகசியம் பேசும் ஓங்கி வளர்ந்த காடும், மலைகளும்.

அனைத்திலும் அவன் காண்பது காதலையே!

கல்லிலும், காற்றிலும், காட்டிலும், காரிருளிலும் அன்பெனும் மாபெரும் அழகின் வடிவமாய்க் காதலைக் காணும் அவன் கண்களுக்கு உயிருள்ள விழிகளும், ஏதோ ஒரு கவர்ச்சியாய் மயக்கும் மென்னகைப் புன்னகையும், போதை தரும் தேன் தானோ என்று ஐயமுற வைக்கும் பேசும் சொற்களும் கவிஞனைக் காதலன் ஆக்குகின்றன.

ஐயகோ...! அந்த அமுத கணங்களைப் பிளந்து கொண்டு பிரிவு எனும் பேய் கிளம்பி அவன் முன் ஆங்காரமாய்ச் சிரிக்கும் போது, அப்படியே உடைந்து போகிறான். செய்வதறியாது குழம்புகிறான்.

அப்போதும் அவனுக்குத் துணையாக வருவது அவனது மொழி!

அவனது வார்த்தைகள்...!

உணர்ச்சிகளுள் பெரும் பாதிப்பைக் கொடுக்கும் பிரிவின் நிமித்தம் அவனை எழுத வைக்கின்றன நெஞ்சை அடைத்துக் கொண்டு துளிர்க்கின்ற துயரங்கள். அந்நிலையில் அவனது கவிதைகளும் கல்லறையில் இருந்து வந்தன போல் கரிய துக்கம் அப்பிக் கொண்டிருக்கின்றன. அவனது எழுத்துக்கள் சோகச் சாற்றில் மிதக்கின்றன. அழுகையுடன் கனம் மிதக்கின்ற தொண்டைக் குழியில் இருந்து சுரக்கின்ற கண்ணீர் நிறைந்த வரிகள், ஈரக் காற்றின் முதுகின் மீதேறி மிதக்கும் மண்ணுருண்டையின் காற்றில் கரைகின்றன.

காலங்கள் மெல்லப் பின் சென்று, அவனை முன் நகர்த்தி, நினைத்துப் பார்க்கையில்...!

ரண்டு வருடங்களுக்கு முன் தொலைந்து போனதாக நான் கருதி இருந்த ஒரு கவிதை நோட், சென்ற வாரத்தில் சர்ட்டிபிகேட் ஃபைலோடு பத்திரமாக இருப்பதாக இவன் சொன்னான். மறக்காமல் அனுப்பி வைத்து, இன்று கிடைத்தது.

நீண்ட நாள் பார்க்காத பள்ளி நண்பனைப் பார்க்கும் பிரியத்தில் அதைப் பார்த்தேன். முழுக்க முழுக்க வலி ததும்பும் வரிகள் நிரம்பி இருக்கின்றன.

இனி அவ்வப்போது அவை கொஞ்சம், கொஞ்சம் இங்கே...!!

நிறைய கவிதைகள், பேர் வைக்காத பிள்ளைகள். ஆனால் பேர் சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.

***

14.Oct.2005

ழிப் பயணியாய்
என்னை
ஏற்றிக் கொண்டது
காதல்...!
பயணம் முழுவதும்
உறங்கி விட்டு
திடீர் நிறுத்தத்தில்
அழுகின்ற
குழந்தையாய்
நான்...!

06.Jan.2006

னியாய் ஓர் இடம் தேடினேன். இரவின் நிழல் படர்ந்த மொட்டை மாடியின் மூலையில் அமர்கிறேன். வறுமைத் தந்தையைத் துரத்துகின்ற, பிள்ளையின் பசிக்குரலாய், எங்கு நான் ஒளிந்தாலும் வந்து சேர்கின்றன உன் நினைவுகள்.

அது ஒரு மார்கழிக் காலம்.

குளிரும், பனியும் குதித்தாடும் காலம். மணம் பேசத் தொடங்கியதும், கன்னிப் பெண்ணின் கன்னங்களில் ஊடுறுவும் வெட்கம் போல், சூரியனின் மென்னொளி ஊதல் நிறைந்த காற்றில் ஊடுறுவிப் பாய்கிறது.

என் கடன் பேப்பர் போடுவதே, அப்போது! இளங்காலையில், மெல்லிய இருசக்கர வாகனத்தில், சூடான எழுத்துக்கள் கொண்ட தாள்களை, ஒவ்வொரு வீட்டின் முகத்திலும் வீசியடிப்பது, வீட்டைத் துரத்தும் கடன்காரர்கள் முகத்தில் கட்டுப்பணம் வீசும் இனிய நினைவுகளைத் தந்தது.

ஒவ்வொரு முறையும், உன் வீட்டைக் கடக்கும் போதெல்லாம், அறிவியலும், தமிழும் என் காதுகளைத் தாக்கும். அது உன் வீடென்று அறியுமுன், விரைவாய் நகர்ந்தது காலம்.

மற்ற நாட்களில் அப்பக்கம் பணியில்லை என்பதால், உன் முகம் பார்க்கும் நிலை இல்லை.

இது மார்கழிப் பருவம்.

பக்கத்துக் கோயிலில் படிக்கிறார்கள் திருவாசகம். முடிந்தபின் கிடைக்கும் சுண்டலும், பொங்கலும், முடிந்தால் கண்ணன் திருவருளும் என்று, என் பாட்டி, கொட்டைப்பாக்கை கொட்டினாள், என்னையும் சேர்த்து...!

காலைப்பணி முடிந்து, கோயில் சேர்கிறேன். என்ன இது...? குயில்கள் எல்லாம் தாவணி அணியுமா என்ன? மான்கள் எல்லாம் மைக் முன் அமர்ந்திருக்கிறதே? இது என்ன, மைனாக்களின் கைகள் எல்லாம், மை பூசிய தாள்களைப் பிடித்திருக்கின்றன...?

சாமந்திப் பூக்கள் கொட்டிக் கிடக்கும் கூடைக்குள், பூத்திருந்தது ஒற்றை ரோஜா..! சிரித்து நின்ற, சின்னக் கண்ணனைப் பார்த்தவாறு அமர்கிறேன், உனக்கு நேராய்..!

இந்த அம்மாக்களும், மாமிகளும் அறிவிழந்து போனார்களா என்ன? துணையாக அனுப்பியிருக்கும் சிறுவர்கள் தூங்கி வழிந்து அமர்ந்திருக்கையில், அந்தக் கூட்டத்தில், அமர்கிறேன் நானும்.!

பாடத் தொடங்குகிறாய் நீ..! கொட்டும் பேரருவியின் பெரும் இரைச்சலோடு சேர்ந்து கொள்ளும் சிற்றோடைகளின் கீச்சுக்குரல்களாய்ச் சேர்ந்து கொள்கின்றன, தோழிகளின் குரல்கள்..!

தினம், தினம் வெப்பமானிகள் பற்றியும், மனப்பாடப் பாடல்களையும் மொழிந்த குரல் தான் நீ என்று நான் உணர்முன், நீ பொழிந்த திருப்பாவை, தீர்த்தாமாய் நனைக்கிறது, என் செவிகளை..!

இனிப் பொங்கலும், சுண்டலும் எதற்கு வேண்டும்? இனிப்புப் பொங்கும் உன் பாடல்கள் கேட்ட பிறகு?

தினம் தவறாமல் நான் அமர்கிறேன், உன் முன்னால்! நிமிர்வதில்லை உன் முகம், திறப்பதில்லை உன் கண்கள்! நிற்பதில்லை என் பயணம்!

மற்றுமொரு நாள், உன் வீட்டின் முன், வெண் கோடுகள் நீ வரைகையில், சைக்கிளை நகர்த்தி நான் செல்கையில், நிமிர்ந்து ஒரு நன்றி பகர்ந்தாய்.உன் கைவிரல்களில் இருந்து உதிர்கிறது கோலப்பொடி மாவுடன், என் மனம்..!

மற்றொரு மழை தூறிக் கொண்டிருந்த, அதிகாலை..! நீ போட்டு வைத்த கோலம் மேல், மழைத்தூறல்கள் பருவப்பெண்ணின் பருக்கள் போல் புள்ளி போட்டன. ஒரு பழைய தாள் எடுத்து, கோல மையமான, மஞ்சள் பிள்ளையார் மேல் குடையாய் விரித்து வைத்தேன். மழையில் நனைந்த கோலம் மெல்ல கரைகையில், கடந்து செல்கிறது மற்றொரு இனிப்பு!

தினம் உன் வீட்டைக் கடக்கையில், திறந்து மூடுகின்றது உன் வீட்டின் ஜன்னல்..! 'கணகண' என்று கனைக்கிறது என் சைக்கிள் மணி..!

நாடகம் முடிவதாய் இருக்கிறது, திரை விழுவதற்குள்..!

திடீர் இடமாறுதலால், உன் குடும்பம் வெளியூர் பெயர்ந்ததையும், வேலை தேடி நான் வேற்றூர் நகர்ந்ததையும், வெறித்துப் பார்த்தபடி வேதனையாய் முனகுகின்றன, கொக்கி உடைந்த உன் வீட்டு ஜன்னலும், கம்பி அறுந்த என் சைக்கிள் மணியும்..!

மீண்டும் ஒரு மழை வந்து கழுவிச் செல்வதற்கு பூக்கவேயில்லை, உன் வீட்டு வாசலில், எங்கு தொடங்குகிறது, எங்கு முடிகிறது என்ற அறியவியலா, வெள்ளைக் கோலமும், நம் மெளன உறவும்..!

Thursday, November 13, 2008

திருக் குற்றாலக் குறவஞ்சி - 3.


5.
கனக தம்புரு கின்ன ரங்களி
யாசை வீணை மிழற்றவே
அனக திருமுத்தின் சிவிகை கவிகைபொன்
ஆல வட்டம் நிழற்றவே
வனிதை மார்பல குஞ்சம் சாமரை
வரிசை விசிறி சுழற்றவே
தனதனிந்திரன் வருணன் முதலிய
சகல தேவரும் வழுத்தவே.
(பவனி)


பொன்னாலான தம்புரு கின்னரங்கள்ல், வீணை எல்லாம் இசைபாட, என்றும் உள திருமுகத்திற்கான பல்லக்கு, வெண்கொற்றக் குடை ஆல வட்டம் ஆட, மங்கைகள் பலர் குஞ்சம் வைத்த சாமரம் வீச, குபேரன், இந்திரன், வருணன் முதலான தேவர்களும் வந்து வாழ்த்த, ஈசன் பவனி வருகின்றான்.


6.
சைவர் மேலிடச் சமணர் கீழிடச்
சகல சமயமு மேற்கவே
கைவலா ழியங் கருணை மாலொடு
கமலத் தோன்புடை காக்கவே
ஐவர் நாயகன் வந்த னன்பல
அமரர் நாயகன் வந்தனன்
தெய்வ நாயகன் வந்த னன்எனச்
சின்ன மெடுத்தெடுத் தார்க்கவே
(பவனி)


சைவ மக்கள் துவங்கி சமணத் துறவியர் வரை அனைத்து சமய மக்களும் ஏற்று வணங்க, ஆழி அளவிற்கு கருணை உடைய திருமாலோடு, தாமரையில் அமர்ந்திருக்கும் பிரம்மனும் கூட வர, மக்கள் அனைவரும் பாண்டவரைக் காத்த கண்ணன் வருகிறான்; தேவர்களின் தலைவன் வருகிறான்; இறைவன் வருகிறான் என்று ஆர்வமாகச் சுட்டிக் காட்டி வணங்க ஈசன் பவை வருகிறான்.

கைவல் ஆழியம் கருணை என்றால் என்ன..?


7.
சேனைப் பெருக்கமுந் தானைப் பெருக்கமுந்
தேரின் பெருக்கமுந் தாரின் பெருக்கமும்
ஆனைப் பெருக்கமுங் குதிரைப் பெருக்கமும்
அவனி முழுதினு நெருங்கவே
மோனைக் கொடிகளின் காடு நெடுவெளி
மூடி யடங்கலும் ஓடி யிருண்டபின்
ஏனைச் சுடர்விரி இடப கேதன
மெழுந்து திசைதிசை விளங்கவே
(பவனி)


சாதாரண கூட்டமா அங்கே இருப்பது...? ஒரு பக்கம் மக்கள் கூட்டம் கூட்டமாய் இருக்கிறார்கள். தேர்கள் நெருக்கமாக நிற்கின்றன. மணக்கும் மாலைகள் அத்தனை அத்தனை...! மலையில் இருந்து வந்த யானைகள் கொத்துக் கொத்தாய் நின்று பிளிறுகின்றன. 'பிர்ர்ர்...' என்று ஆஜானுபாகுவான குதிரைகள் கத்துகின்றன. இப்படி எல்லாப் பக்கமும் இருந்து அத்தனை நெரிசல் அடைத்திருக்கும் நிலையைப் பார்த்தால், அடர்த்தியாகப் பின்னிப் படரும் கொடிகள் இறுக்கமாக வளர்ந்து பெருங்காட்டையே மூடி அடங்குவது போலவும், அப்படி இருண்ட பின், ஒளிச்சுடர் விரிக்கும் சந்திரன் ஒளி எழுந்து திசையைக் காட்டுவது போல், ஈசன் பவனி வருகின்றான்.

தானைப் பெருக்கம்...?


8.
கொத்து மலர்க்குழல் தெய்வ மங்கையர்
குரவை பரவையை நெருக்கவே
ஒத்த திருச்செவி யிருவர் பாடல்க
ளுலக மேழையு முருக்கவே
மத்த ளம்புயல் போல்மு ழங்கிட
மயில நார்நடம் பெருக்கவே
சத்தி பயிரவி கெளரி குழல்மொழித்
தைய லாளிட மிருக்கவே
(பவனி)


கரிய கூந்தலிலே வாச மலர்ச் சூடிய தெய்வப் பெண்கள் குரவைப் பாட்டு பாடி தம் பங்கிற்கு தொடர்ந்து வர, பாடிய பாடல்கள் ஏழு உலகங்களையும் உருக்கி மயக்கவே, மத்தளங்கள் புயல் போல் முழங்கி...'தொம் தொம்' என அதிரடிக்க, மேகம் தான் இடி இடிக்கின்றதோ என்ற மயக்கத்தில் மயில்கள் தம் பசுந் தோகைகளை விரித்துப் பரவசமாக ஆட, பராசக்தி, பைரவி, கெளரி ஆகியோரோடு குழல்மொழி அம்மையும் இடது பக்கம் சேர்ந்து வர, ஈசன் பவனி வருகிறான்.

யார் அந்த ஒத்த திருச்செவி இருவர்...?

குற்றாலத்தின் திருவீதியிலே இத்தனை அலங்காரங்களோடும், இத்தனை பிரம்மாண்டமாகவும் ஈசன் பவனி வரும் போது, மனையில் வேலையாக இருக்கும் அழகிய தமிழ் மங்கைகள் மட்டும் இவனைக் காண ஓடோடி வர மாட்டார்களா என்ன..?

ஆர்வமாக வருகிறார்கள்... அடுத்த பதிவில்...!

Wednesday, November 12, 2008

திருக் குற்றாலக் குறவஞ்சி - 2.

ட்டியக்காரன் வரவு

1.
தேர்கொண்ட வசந்த வீதிச் செல்வர்குற் றாலத் தீசர்
பார்கொண்ட விடையி லேறும் பவனியெச் சரிக்கை கூற
நேர்கொண்ட புரிநூன் மார்பும் நெடியகைப் பிரம்பு மாகக்
கார்கொண்ட முகிலே றென்னக் கட்டியக் காரன் வந்தான்.


திருக் குற்றாலத்தில் வசிக்கின்ற ஈசன் பவனி வரப் போகிறார். அவர் சாதாரணமாகவா வருவார்? மகா நந்தியின் மீதல்லவா ஏறி வரப் போகிறார். அப்போது வீதியில் கலகலவென மக்கள் கூட்டம் இருந்தால் அவருக்கும் சிரமம்; மக்களுக்கும் சிரமம். வீதியைக் கொஞ்சமாவது ஒழுங்குபடுத்த வேண்டாமா..? நாயகர் வரப் போவதை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டாமா..? அவரவரும் தத்தமது உலக வேலைகளில் மூழ்கி இருந்து, இறைவனையே மறந்திருக்கும் போது, அவன் வருகையை நினைவூட்ட ஒருவன் வருகிறான். அவன் தான் கட்டியக்காரன்.

அவன் எப்படிப் பட்டவனாக இருக்க வேண்டும்? சாதாரண ஆளாக இருந்தால் போதுமா..? இடி முழக்கக் குரல் இருக்க வேண்டுமல்லவா..? அவன் முனகல் போல சொன்னால், ஒருவருக்கும் ஒன்றும் கேட்காமல், 'ஏனப்பா..? என்ன விபரம்..?' என்று கேட்கும் அளவிற்கு வைத்துக் கொள்ளலாமா..? கூடாது அல்லவா..?

அவன் எப்படி இருக்கிறான் என்றால், மார்பில் நூல் அணிந்து, கைகளில் நீண்ட பிரம்பும் கொண்டு, கருமையான முகிலும், கர்ஜிக்கும் சிங்கம் போல் வருகிறான். கரும் மேகத்தின் இடியோசை அவன் குரல். சிங்கத்தின் கர்ஜனை அவனது முழக்கம்.

நீண்ட பிரம்பு எதற்கு..? கூட்டத்தின் கவனத்தைக் கவர்வதற்கு!

விடை = நந்தி; ஏறு = சிங்கம். அன்ன = போல.

இராகம் - தோடி, தாளம் - சாப்பு.

2.
கண்ணிகள்.

1. பூமேவு மனுவேந்தர் தேவேந்தர் முதலோரைப்
புரந்திடிஞ்செங் கோலான் பிரம்புடையான்

2.மாமேருச் சிலையாளர் வரதர்குற் றாலநாதர்
வாசற் கட்டியக்காரன் வந்தனனே.


அந்தக் கட்டியக்காரன் யாருடையவன்? மன்னர்கள், தேவர்கள், அவர்தம் தலைவர் ஆகியோரைக் காக்கின்ற செங்கோல் கொண்டவன்; பாம்புகளை உடையவன். அவன் மிகப் பெரிய மேருமலை போன்றவன். வரதன். குற்றாலநாதர். அவருடைய வாசலில் இருக்கும் கட்டியக்காரன் வருகிறான்.

பூமேவு, மாமேரு - பாடுவதற்கேற்ற இலகு.


திரிகூடநாதர் பவனி வருதலைக் கட்டியக்காரன் கூறுதல்

விருத்தம்
3.
மூக்கெழுந்த முத்துடையா ரணிவகுக்கும் நன்னகர மூதூர் வீதி
வாக்கெழுந்த குறுமுனிக்கா மறியெழுந் கரங்காட்டும் வள்ள லார்சீர்த்
தேக்கெழுந்த மறைநான்குஞ் சிலம்பெழுந்த பாதர்விடைச் சிலம்பி லேறி
மேக்கெழுந்த மதிச்சூடிக் கிழக்கெழுந்த ஞாயிறுபோல் மேவினாரே.


மேற்கிலே உதிக்கின்ற சந்திரனைத் தலையில் சூடிக் கொண்டு, கிழக்கில் எழும் சூரியன் போல் வருகிறார். எங்கே..? இந்த நல்ல நகர வீதிக்கு. அடேயப்பா..! எப்படிப்பட்ட வீதி இது..! முத்துக்கள் பதித்த மூக்குத்தி அணிந்த மக்கள் இங்குமங்கும் சென்று கொண்டிருக்கிறார்கள். தமிழ் மொழியைக் கொடுத்த குறுமுனி வசித்த பொதிகை மலை அருகில் இருக்கிறது. தமிழ் வளர்ப்பவர்களுக்கெல்லாம் ஆதரவு தரும் வள்ளல்கள் பலர் வாழ்கிறார்கள். இப்பேர்ப்பட்ட வீதிக்கு, நந்தியின் நான்கு கால்களும் நான்கு வேதங்களாய் இருக்க, ஈசர் வருகிறார்.

பாடலில், தமக்கு ஆதரவு தரும் வள்ளல்களைப் போற்றிப் பாடியிருக்கிறார் போலும்! தூத்துக்குடி குற்றாலத்திற்குப் பக்கம் தானே..! முத்துக்களுக்கா பஞ்சம் இருக்கப் போகின்றது..?


இராகம் - பந்துவராளி, தாளம் - சாப்பு

4.
பல்லவி

பவனி வந்தனரே மழவிடைப் பவனி வந்தனரே

அநுபல்லவி

அவனிபோற்றிய குறும்பலாவுறை மவுனநாயகர் இளமைநாயக்ர்
சிவனுமாயரி அயனுமானவர் கவனமால்விடை அதனிலேறியே

(பவனி)

விடை என்றால் நந்தி. மழவிடை என்றால் என்ன..? குறும்பலாவுறை என்றால்...?

உலகமே போற்றுகின்ற மெளன நாயகர். பின்னே, யோகேஸ்வரன் அல்லவா..? இளமை நாயகர். கல்பகாலமும் தியானமும், யோகமும் செய்கின்ற தட்சிணாமூர்த்தி அல்லவா..? தேஜஸும், இளமையும் பொங்கும் நாயகன் அல்லவா? இவன் யார்..? சிவனும் இவரே..! ஹரியும் இவரே..! பிரம்மாவும் இவரே..! அத்தகைய நாதர் நந்தி மீதேறி பவனி வருகிறார்.

சரணங்கள்

1.
அண்டர் கூட்டமு முனிவர் கூட்டமும்
அசுரர் கூட்டமு மனித ராகிய
தொண்டர் கூட்டமும் இமைப்பி லாரெனச்
சூழ்ந்து தனித்தனி மயங்கவே
பண்டை நரரிவர் தேவ ரிவரெனப்
பகுத்து நிறுவிய வேளை தொறுந்தொறும்
மண்ட லீகரை நந்தி பிரம்படி
மகுட கோடியிற் புடைக்கவே
(பவனி)


வீதியில் வசிப்பவர்கள், முனிவர்கள், அசுரர்கள், தொண்டர்கள்... இத்தனை பேரும் சூழ்ந்து கொள்கிறார்கள். அவனைச் சூழ்ந்து ஒவ்வொருவரும் அவரவர்க்குத் தக மயங்கிச் சொல்லிக் கொள்கிறார்கள். தமக்குள் தோன்றும் எண்ணங்களை எல்லாம் மறந்து, இவர் ஆதி நாதரா, தேவரா என்று தமக்குள் பேசிக் கொண்டிருக்க, நந்தியில் ஏறி வருகிறான்.

மண்டலீகரை நந்தி பிரம்படி மகுட கோடியிற் புடைக்கவே - என்ன சொல்கிறது..?


2.
தடுப்ப தொருகரம் கொடுப்ப தொருகரம்
தரித்த சுடர்மழு விரித்த தொருகரம்
எடுத்த சிறுமறி பிடித்த தொருகரம்
இலங்கப் பணியணி துலங்கவே
அடுத்த வொருபுலி கொடுத்த சோமனும்
ஆனை கொடுத்தவி தானச் சேலையும்
உடுத்த திருமௌங் கசைய மலரயன்
கொடுத்த பரிகல மிசையவே.
(பவனி)


ஈசன் அலங்காரம் தான் என்ன..? பக்தர்களுக்கெல்லாம் தீயன வராமல் தடுக்கின்ற ஒரு கரம், நல்லன எல்லாம் கொடுக்கின்ற ஒரு கரம். ஒரு கரத்தில் மழுவின் மேல் சுடர் ஜொலிக்கிறது. சும்மா ஜொலிக்குமா அது..? நான்கு திசைகளிலும் பரவி தகதகக்கிறது. எனவே அது 'விரித்த சுடர்மழு'! மிச்சம் இருக்கும் மற்றொரு கையில் சூலம். இவை தான் அவனது அலங்காரங்கள். புலித்தோல் தான் அவனது அரையாடை. இவை எல்லாம் அணிந்து, மலர் மேல் அமர்ந்திருக்கும் பிரம்மன் கொடுத்த குதிரை கூட வர, நந்திமேல் பவனி வருகிறான்.

எந்நாட்டவர்க்கும் இறைவனது அலங்காரங்கள் தான் எத்தனை எளிமை...! சும்மாவா, சுடலையாண்டி அல்லவா...?


3.
தொடரு மொருபெருச் சாளி யேறிய
தோன்றற் செயப்படை தாங்கவே
அடல்கு லாவிய தோகை வாகனத்
தரசு வேல்வலம் வாங்கவே
படலை மார்பினிற் கொன்றை மாலிகை
பதக்க மணியொளி தேங்கவே
உடைய நாயகன் வரவு கண்டுகண்
டுலகெலாந் தழைத்தோங்கவே.
(பவனி)


கூட யாரெல்லாம் வருகிறார்கள்..? பெருச்சாளி மீதேறி மூத்தவன் வருகிறான். தோகை மயங்கி, மயங்கி ஆட அதில் வேல் பிடித்த ஓர் அழகன் வருகிறான். மார்பினில் கொன்றை மலர்கள் பதித்த மணிகள் மின்ன மின்ன ஈசன் வரும் போது, கண்டவர் எல்லாம் களிப்படைகின்றனர்.

படலை மார்பு என்றால் என்ன..? படர்தல் என்ற வினைப்பெயரா..? பரந்த மார்பு என்பதைச் சொல்கிறதா..?

மயிலுக்குத் தோகை விரித்தாட தடையா என்ன..? குற்றால மலை..! மலையும், மலை சார்ந்த இடமும் குறிஞ்சி..! குறிஞ்சித் தலைவன் யார்...? குன்றெல்லாம் குடியிருக்கும் குமரன் அல்லவா..? பின்னே... மயிலின் குதூகலத்திற்கு குறைவு இருக்குமா என்ன...?


4.
இடியின் முழக்கொடு படரு முகிலென
யானை மேற்கன பேரிமு ழக்கமும்
துடியின் முழக்கமும் பரந்து திசைக்கரி
துதிக்கை யாற்செவி புதைக்கவே
அடியர் முழக்கிய திருப்ப லாண்டிசை
அடைத்த செவிகளும் திறக்க மூவர்கள்
வடிசெய் தமிழ்த்திரு முறைக ளொருபுறம்
மறைக ளொருபுறம் வழங்கவே.
(பவனி)


அடடடடா...! ஈசன் வரும் போது ஆரவாரமான மகிழ்ச்சியான சத்தங்கள் தான் என்னென்ன..? கோலாகலமும், குதூகலமும் அல்லவா அங்கே கரைபுரண்டு ஓடுகின்றன...!

இடி முழங்குவது போல் பேரிகை முழக்கமிடுகின்றது. எங்கிருந்து..? மிதக்கின்ற பெரிய கரு மேகம் போல் யானை மேலிருந்து! உயரத்தில் இருந்து வருகின்ற முழக்கம், கீழிருப்பவர்களுக்கு வானில் இருந்து மேகங்கள் தான் 'டமார் டமார்' என மோதிக் கொண்டு எழுப்பும் சத்தமோ என்ற சந்தேகத்தைத் தருகின்றது. அது மட்டுமா..? மற்ற பல யானைகளின் பிளிறல்களும், எல்லாத் திசைகளிலும் புகுந்து புகுந்து பெருஞ் சத்தம் போடுவதால், யானைகளின் துதிக்கை கொண்டு தமது காதுகளை அடைத்தார்ப் போல் இருக்கின்றது. ஆனால் அப்படி ஈசன் பெருமை உள்ளே சென்று உவப்பு தராதவாறு, அடைத்தவாறு இருக்க விடுவார்களா அடியவர்கள்..? அவர்கள் தமது கூட்டமான பெருங்குரலில் திருப்பல்லாண்டு பாடி செவி அடைப்பைத் திறக்கிறார்கள். இப்படி மாறி மாறி செவி அடைத்து திறந்து கொண்டிருக்க, போதும் போதாதற்கு மூவர் தேவாரத் தமிழ் மறைகளையும், நான்கு வேதங்களையும் மற்றொரு புறம் வேறு சில அடியவர்கள் உச்சஸ்தாயில் பாடிக் கொண்டு வர... சுற்றுப்புறமே 'சலார் புலார்' என்று மந்திர மயமாக இருக்க, ஈசன் பவனி வருகிறான்.

Tuesday, November 11, 2008

திருக் குற்றாலக் குறவஞ்சி.

ரசிகமணி திரு.டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்கள் கி.பி.1937-ல் கொடுத்திருக்கும் மதிப்புரையை வைத்துப் பார்க்கும் போது, திரிகூடராசப்பக் கவிராயர் இந்நூலை 1700களில் எழுதி இருக்க வேண்டும் என்று தெரிகின்றது. குற்றாலத்தில் கோயில் கொண்டிருக்கும் திருக் குற்றால நாதரையும், குழல்வாய்மொழியம்மையையும் நாயகன், நாயகியாகக் கொண்டு இந்நூல் வசந்தவல்லி, குறவன், குறத்தி என்ற சில பாத்திரங்களால் பாடுகின்றது.

இந்நூல் சிற்றிலக்கியம் என்ற வகைப்பாட்டின் கீழ் வைத்திருக்கிறார்கள். சின்ன இலக்கியம்.

இதில் இருக்கும் தமிழின் சுவை தான் எனக்கு ரசிக்கின்றது. கனிந்த ஆரஞ்சுப் பழச் சுளைகளில் எத்தனை இனிப்பாக, குளிர்ச்சியாக இனிநீர் ஒழுகும்..? அது போல!

தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு, தெரிந்த அர்த்தங்களைக் குறிப்பிடுவதுடன் கூட, தேன் தமிழ் புகுந்து விளையாடும் அழகை ரசிக்கலாம்.

http://pm.tamil.net/pmfinish.html மதுரைத் திட்டத்தில் இருந்து இறக்கிக் கொள்ளலாம்.

ஒரு குறிப்பு, நான் இதுவரை குற்றாலம் சென்றதில்லை.

***

திரிகூடராசப்பக் கவிராயரின் திருக்குற்றாலக் குறவஞ்சி.

தற்சிறப்புப்பாயிரம்


விநாயகர் துதி

1.
பூமலி யிதழி மாலை புனர்ந்தகுற் றாலத் தீசர்
கோமலர்ப் பாதம் போற்றிக் குறவஞ்சித் தமிழைப் பாட
மாமதத் தருவி பாயு மலையென வளர்ந்த மேனிக்
காமலி தருப்போ லைந்து கைவலான் காவலானே.


இதழ்கள் நிறைந்த பூமாலைகள் அணிந்த குற்றாலத்தின் அரசனான ஈசனின் திருப்பாதங்களைப் போற்றிக் குறவஞ்சித் தமிழைப் பாட, பெரும் அருவி பாய்கின்ற மலை போன்ற மேனியுடைய விநாயகர் காவலிருக்கட்டும்.

'மாமதத் தருவி', படித்தவுடன் நினைவுக்கு வருகின்ற ஒரு வாக்கியம் 'மரத்தில் மறைந்தது மாமத யானை; மரத்தை மறைத்தது மாமத யானை'. இந்த மாமத என்றால் என்ன..? பெரிய என்ற பொருள் இருக்கலாம்.

'ஐந்து கைவலான்'. யாருக்கு ஐந்து கை..? வழக்கமாக நமது தெய்வங்களுக்கு நான்கு கரங்கள் வைத்து படங்கள் பார்த்திருப்போம். பிள்ளையாருக்கு எப்படி ஐந்து கைகள்..? நான்கு கைகள் + தும்பிக்கை என்று கொள்ளலாமா...?

முருகக்கடவுள்

2.
பன்னிருகை வேல்வாங்கப் பதினொருவர் படைதாங்கப் பத்துத் திக்கும்
நன்னவவீ ரரும்புகழ மலைகளெட்டும் கடலேழு நாடி யாடிப்
பொன்னின்முடி ஆறேந்தி அஞ்சுதலை யெனக்கொழித்துப் புயநால் மூன்றாய்த்
தன்னிருதாள் தருமொருவன் குற்றாலக் குறவஞ்சித் தமிழ்தந் தானே.


நல்ல ஒன்பது வீரர்களும் புகழும் வகையில், பன்னிரெண்டு கைகளிலும் வேல் முதலான ஆயுதங்கள் கொண்டு பதினொரு பேர் படைதாங்கி, பத்து திசைகளும் (கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, தென் கிழக்கு, தென் மேற்கு, வட கிழக்கு, வட மேற்கு, மேலே, கீழே), மலைகள் எட்டும், கடல்கள் ஏழும் சென்று, வென்று, தங்கத்தால் ஆன கிரீடங்களை தனது ஆறு தலைகளிலும் அணிந்து, என் பயப்படுதலை ஒழித்து, தனது இரு பாதங்களைத் தரும் முருகனே, குற்றாலக் குறவஞ்சி எழுதத் தமிழ் தந்தான்.

முருகனின் வரலாறு (கந்தபுராணம்) தெரிந்தால் மட்டுமே யாரந்த பதினொருவர்? மலைகள் எட்டும் கடல்கள் ஏழும் என்ன? புயநூல் மூன்று என்னென்ன..? என்ற கேள்விகளுக்கு பதில் தெரிந்து பாடலை முழுக்க ரசிக்க முடியும்.

இருந்தாலும் தமிழ்க்கடவுளைப் பாடலாம். மகிழ்வான்.

திரிகூடநாதர்

3.
கிளைகளாய்க் கிளைத்தபல கொப்பெலாஞ் சதர்வேதம் கிளைக ளீன்ற
களையெலாஞ் சிவலிங்கம் கனியெலாம் சிவலிங்கம் கனிகளீன்ற
சுளையெலாஞ் சிவலிங்கம் வித்தெலாஞ் சிவலிங்க சொரூ பமாக
விளையுமொரு குறும்பலவின் முளைத்தெழுந்த சிவக்கொழுந்தை வேண்டு வோமே.


கிளை கிளையாகக் கிளைத்திருக்கும் கொப்புகளாய்ச் சதுர் வேதம் உள்ளது. அந்தக் கிளைகளில் இருக்கும் களைகள் சிவலிங்கம். கனிகள் சிவலிங்கம். கனிகளில் இருக்கும் இனிப்பான சுளைகள் சிவலிங்கம். அவற்றில் இருக்கும் வித்துக்கள் சிவலிங்கம். அந்த சொரூபமான சிவக்கொழுந்தை வேண்டிக் கொள்வோம்.

வெறும் மரம், கிளைகளாக இதைப் பாடியிருப்பார் என்று தோன்றவில்லை. ஏதோ உட்பொருள் இருக்க வேண்டும் என்று சிந்தித்தால், இப்படி தோன்றுகின்றது.

நான்கு வேதங்களும், அவற்றின் பாடல்களும், அவற்றின் உட்பொருட்களும், அதிலிருந்து வரும் கேள்விகளும், அவற்றுக்கான பதில்களும்... அத்தனையும் சிவரூபமே!

சதுர் வேதம் (சதுர் = சதுரம் = நான்கு) மரமாக உருவகிக்கப்பட்டிருக்கலாம். கொப்பு என்பதற்கு முழுமையான அர்த்தம் தெரியவில்லை. 'கொப்பும் குலையுமாக' என்றால் புரிகின்றது. குறும்பலவின் முளைத்தெழுந்த...? தெரியவில்லை. ஒரு வரிசைப்படி வருவதால், களை என்றால் காயாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

குழல்வாய்மொழியம்மை

4.
தவளமதி தவழ்குடுமிப் பனிவரையின் முளைத்தெழுந்து தகைசேர் முக்கட்
பவளமலை தனிலாசை படர்ந்தேறிக் கொழுந்துவிட்டுப் பருவமாகி
அவிழுநறைப் பூங்கடப்பந் தாமரையு மீன்றொருகோட் டாம்பலீன்று
குவலயம்பூத் தருட்கொடியைக் கோதைகுழல் வாய்மொழியைக் கூறு வோமே.


குளிர்ச்சியான நிலா ஈசனின் தலை மேல் தவழ்கின்றது. அவன் இருக்கும் இடமான கயிலையிலே பிறந்து, ஈசனை அடைய வேண்டி, பவளமலைக்கு வந்து வளர்ந்து பருவமடைந்த மங்கை குழல்வாய்மொழியம்மையை வேண்டுவோம்.

தவளம் என்றால் குளிர்ச்சி. பவளமலை என்பது மரங்கள் அடர்ந்த பசுமையான குற்றால மலையைத் தான் குறித்திருக்க வேண்டும். பவளம், பச்சையாகத் தான் இருக்கும் அல்லவா..? அம்மனை பல பூக்கள் கொண்டு வர்ணிக்கிறார். சரியாகத் தெரியாதலால், அவற்றை விட்டு விட்டேன்.

தாமரை, கோட்டாம்பல், குவலயம் என்ற பூக்களை மட்டுமே அடையாளம் காண முடிகின்றது.

சைவசமயாச்சாரியார் நால்வருள் மூவர்.

5.
தலையிலே யாறிருக்க மாமிக் காகத்
தாங்குகட லேழழைத்த திருக்குற் றாலர்
சிலையிலே தடித்ததடம் புயத்தை வாழ்த்திச்
செழித்தகுற வஞ்சிநா டகத்தைப் பாட
அலையிலே மலைமிதக்க ஏறினானும்
அத்தியிலே பூவையந்நா ளழைப்பித் தானும்
கலையிலே கிடைத்தபொரு ளாற்றிற் போட்டுக்
கனகுளத்தில் எடுத்தானுங் காப்ப தாமே.


அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் என்ற சைவக்குரவர் நால்வருள் மாணிக்கவாசகர் தவிர்த்த (அவர் அடுத்த பாடலில் அகத்தியரோடு சேர்ந்து வருகிறார்) மூன்று பேரை வாழ்த்திக் காப்பிருக்கப் பாடுகிறார். பெரிய புராணம் தெரிந்தால் மட்டுமே இப்பாடலில் சொல்லப்பட்டிருக்கும் சம்பவங்களை எடுத்துச் சொல்ல முடியும்.

எனினும் 'அலையிலே மலை மிதக்க ஏறினான்' என்பது திருஞானசம்பந்தரைச் சமணர்கள் பாறையோடு கட்டி வைகையில் தள்ளி விட்டதைச் சொல்கிறது எனத் தோன்றுகிறது. 'கலையிலே கிடைத்த பொருள் ஆற்றில் போட்டுக் கன குளத்தில் எடுத்தான்' என்பது ஓடுகின்ற ஆற்றில் செல்வங்களைப் போட்டு குளத்தில் எடுத்த நிகழ்ச்சியைச் சொகிறது. ஆனால் யார் என்பது தெரியவில்லை. மற்றொரு நிகழ்ச்சி தெரியவே இல்லை.

தலையிலே ஆறு கொண்டவன் கங்கையணிந்த ஈசன்.

அகத்திய முனிவர், மாணிக்கவாசக சுவாமிகள்

6.
நித்தர்திரி கூடலிங்கர் குறவஞ்சி நாடகத்தை நிகழ்த்த வேண்டி
முத்தர்திரு மேனியெல்லா முருகவே தமிழுரைத்த முனியைப் பாடி
இத்தனுவி லாத்துமம்விட் டிறக்குநாட்சி லேட்டுமம்வந் தேறா வண்ணம்
பித்தனடித் துணைசேர்ந்த வாதவூ ரானடிகள் பே ணுவோமே.


இப்பாடலைச் சொற்களைப் பிரித்து எழுதினாலே எளிதில் புரிந்து கொள்ளலாம்.

நித்தர் திரிகூடலிங்கர் குறவஞ்சி நாடகத்தை நிகழ்த்த வேண்டி, முத்தர் திருமேனி எல்லாம் உருகவே தமிழ் உரைத்த முனியைப் பாடி, இத்தன் விலாத்துமம் விட்டிறக்கும் நாள் சிலேட்டுமம் (இதை சரியாகப் பிரிக்கவில்லை என்று நினைக்கிறேன்) வந்து ஏறா வண்ணம், பித்தன் அடித் துணை சேர்ந்த வாதவூரான் அடிகள் பேணுவோமே.

தமிழ் உரைத்த முனி..அகத்தியர்.

வாதம், பித்தம், சிலேத்துமம் என்ற மூன்றும் உடலில் மாறுபட்டால் நோய்கள் வரும் என்பது ஆயுர்வேத மருத்துவம் சொல்லும் அடிப்படை. இப்பாடலில் சுவையாக சிலேத்துமத்தை மட்டும் பிரச்னையாகச் சொல்லி விட்டு, பித்தத்தை இறைவன் பேராகச் சொல்லி ('பித்தா பிறைசூடிப் பெருமானை'), வாதத்தை மாணிக்கவாசகர் ஊரான திருவாதவூர் பெயரில் சொல்கிறார்.

சரசுவதி

7.
அடியிணை மலருஞ் செவ்வா யாம்பலுஞ் சிவப்பினாளை
நெடியபூங் குழலு மைக்க ணீலமுங் கறுப்பினாளைப்
படிவமும் புகழும் செங்கைப் படிகம்போல் வெளுப்பாம்ஞானக்
கொடிதனைத் திருக்குற்றலக் குறவஞ்சிக் கியம்புவோமே.


மலர் போன்ற இரு பாதங்கள். செவ்வாயோ ஆம்பல் மலர் போன்ற சிவப்பு. பூக்கள் நிறைந்த நெடிய கூந்தல் கறுப்பு. மை பூசிய கண்கள் நீலவிழிகள் போன்ற ஞானக் கொடியான சரசுவதிக்கு இந்நூலைச் சொல்வோம்.

'செங்கைப் படிகம் போல் வெளுப்பு' என்றால் என்ன...? அன்னை வெள்ளை ஆடை அல்லவா அணிந்திருப்பாள்..? அதைப் பற்றி ஏதேனும் குறிப்பா..?

நூற்பயன்

8.
சிலைபெரிய வேடனுக்கும் நரிக்கும் வேதச்
செல்வருக்குந் தேவருக்கு மிரங்கி மேனாள்
கொலைகளவு கட்காமங் குருத்து ரோகங்
கொடியபஞ்ச பாதகமும் தீர்த்த தாலே
நிலவணிவார் குற்றாலம் நினைத்த பேர்கள்
நினைத்தவரம் பெறுவரது நினைக்க வேண்டிப்
பலவளஞ்சேர் குறவஞ்சி நாட கத்தைப்
படிப்பவர்க்குங் கேட்பவர்க்கும் பலனுண் டாமே.


சிலை பெரிய வேடனுக்கும், நரிக்கும் வேதச்செல்வருக்கும் தேவருக்கும் இரங்கி மேனாள், கொலை, களவுகள், காமம், குருத்து, ரோகம், கொடிய பஞ்சமா பாதகங்களைத் தீர்த்ததாலே, நிலவணிகின்ற (நாயகர் இருக்கும்) குற்றாலத்தை நினைத்தவர்கள் நினைத்தவரம் பெறுவர். அது போல இந்தக் குறவஞ்சி நாடகத்தைப் படிப்பவர்க்கும் கேட்பவர்க்கும் பல வளங்கள் உண்டாகும்.

பெரிய வேடன் யார்...? பசுபதிநாதருடன் வில் போர் நடத்திய அர்ஜுனனா? கண்ணப்பனா..? மேனாள் என்றால் என்ன..?

நமக்கு, நாம் வேண்டும் வரம் கிடைக்கும் என்பது உறுதி!

அவையடக்கம்

9.
தாரினை விருப்ப மாகத் தலைதனில் முடிக்குந் தோறும்
நாரினைப் பொல்லா தென்றே ஞாலத்தோர் தள்ளு வாரோ?
சீரிய தமிழ்மா லைக்குட் செல்வர்குற் றாலத் தீசர்
பேரினா லெனது சொல்லைப் பெரியவர் தள்ளார் தாமே.


ஒரு பூமாலை இருக்கின்றது. அதை ஆசையாகத் தலையில் வைத்துக் கொள்ளும் போது, மணமே இல்லாத நாரைத் தேவையற்றது என்று உலகத்தார் ஒதுக்கி விடுவார்களா என்ன? அது போல அழகிய தமிழ் மாலைக்குப் பூக்கள் போல் குற்றாலத்து ஈசர் பெயரை வைத்து, மணமற்ற நாரைப் போல் எனது சொற்களை வைத்திருக்கிறேன். இந்த மாலையையும் பெரியோர்கள் ஒதுக்க மாட்டார்கள்.

என்ன ஒரு ஒப்புமை...! என்ன ஓர் அடக்கம்...!

பூமாலையில் பூக்கள் தான் வாசம் தரும். நார் வாசம் தருவதில்லை. அதற்காகப் பூச்சூடும் போது நார் தேவையற்றது என்றா ஒதுக்கி வைக்கிறோம்? நமக்குத் தெரியும், அந்த நார் தான் பூக்களைத் தாங்கி நின்று, இணைத்து வைக்கின்றது என்று! பூமாலைக்கு பூக்களும் முக்கியம்; நாரும் முக்கியம். ஆனால் நார் இல்லாமலும் பூக்களால் மணம் தந்து இருக்க முடியும். ஆனால் பூக்கள் இல்லாமல் நாரால் பயன் ஏதும் இல்லை.

தார் = மாலை. ஞாலம் = உலகம்.

ற்சிறப்புப்பாயிரம் நிறைவுற்றது. அடுத்த பதிவில் நூலுக்குள் நுழைவோமா...?

நன்றி Dada - The Roaring Bengal Tiger...!!!


தாவது சொல்ல நினைத்து சொன்னால், அது நீர் நிரம்பித் தளும்பித் தளும்பி வழியும் பெரும் ஏரிக் கரையில் ஒரு சிறு உடைப்பு ஏற்பட்டு அதில் வடியும் அளவிற்கே அமையும்.

சொல்லாமல் இருப்பது ஏரியளவிற்கு உள்ளே தளும்புகின்றது.

Good Bye....Prince....!!! :((

We have grown with you guyz and now it is really very hard to see everyone is going out of the field...!!

Best Wishes for whatever you want to do Further...! Hope there will be no politics play on you...Again...!!!









http://content-ind.cricinfo.com/india/content/current/gallery/377613.html

***

Good Bye... Jumbo!
சச்சினும் ஏ.ஆர்.ரகுமானும்...!

Monday, November 10, 2008

மனமோகினியும் சில மந்திர கணங்களும்...!



ருதாணி வைத்துச் சிவந்த மல்லிகை மொட்டுகள் விரல்களாய் மாறிக் களிநடனம் புரிகின்றதா..! மயிலிறகுகளின் வருடும் சிறகுகள் விழியிமைகளின் விளிம்புகளில் விளையாடும் மென் முடிகளா...!

மனமோகினி...!

இரவின் உண்மை நிறம் நின் கொலுசுகளின் குரல் குளுமையில் சிணுங்கும் பூச்சிகளின் ரீங்காரமா...! நதியலைகள் நடுக்கத்துடன் கரையோரப் படிக்கட்டுப் பாறைகள் மேல் வந்து வந்து மோதி உடைந்து, நுரை கவிழ்த்துப் பின்னோக்கி விரைகின்றனவே...! பாதரசத் துளிகளாய் வெண்மைப் பொழியும் நிலவின் வெண்ணிழல் மிதக்கும் ஆற்று மேனியை அள்ளும் கரங்களின் பொன் வளையல்கள் சலசலக்குமோ...!

மனமோகினி...!

எழிலாய் மேகப் பூக்கள் மறைக்கும் முகப் பதுமையே நாணல் புதர்கள் தலையாட்டும் வாடைத் தென்றல் தடவும் மெதுவான முன்னிரவுப் போதில், ஈர வேர்கள் குடிக்கும் நிலத்தடி நீர் கரைந்து குளிரெடுக்கும் பூஞ்சோலை நின் மேனியோ...! வயலின் பயிர்கள் கிறக்கத்தில் தலையசைக்கும்; வரப்போர தென்னை மரங்கள் வெண்ணொளியில் கூரை கட்டும் மண் மேடுகளில் மிதக்கின்ற எண்ணங்கள்... எண்ணம் கள்... என் நம் கள்....!!!

மனமோகினி.....!

ரதி தேவி ரதம் ஏறி வர, அமுதக் குரல் கொண்டு பாடும் பறவைகள் கீச்சுக்கீச்சென ரீங்காரமிடும் வண்டுகள் கைகோர்த்து ஆனந்தப் பெருவெளியில் ஆலோலம் ஆடிப் பாடிக் கூடி பாவம் பெருக்கெடுத்தோட, ஆகாயம் முழுதும் தெரியுதடி ப்ரேமையில் பதிந்த நினது திருமுகம்...! படலங்கள் படலங்களாய்ப் பனி படருதடி...! மென் சூட்டில் உருகும் மெல்லிய விளக்கொளியில் மெல்ல மெல்ல விலகிடும் பேரின்ப ரகசியங்கள் மிதக்கின்ற மோனத் திருக் கோலம் நின் புன்னகையின் ஒற்றை நொடியில் உருக்கொள்ளுதடி!

மனமோகினி....!

பொன் முலாம் பூசும் நேரத்தில் வாசம் வீசும் மலர் தேங்கியடிக்குதடி பாவை உன் பார்வை வீச்சுக்கள்! பாதங்கள் வந்து வந்து வைக்கும் ஓர் அடிக்கும் மிதக்கின்ற நறுமணம் காற்றின் கரைகளில் கவின் ஏற்றிச் செல்லுதடி! வனமெங்கும் வானமெங்கும் நினது ராகம் படரும் நொடிகளில் எந்தன் சிந்தை உந்தன் வழிகளில் வீழ்ந்து வணங்கி துளைகளில் உருகும் இசை போலவும், பொங்கும் பாலில் கரையும் பவித்ரம் போலவும், திரைகளின் பின்னே நடக்கும் ரகசிய ராக ஆலாபனைகளில் கலந்து மணக்கும் காலம் போலவும், தொழத்தக்க வடிவெடுக்கும் தெய்வப் பெருந்தகை நீ மோகன வடிவமெடுத்து வந்தது போலவும்....

மனமோகினி....! மனமோகினி....!


Get Your Own Hindi Songs Player at Music Plugin

***

படம் நன்றி :: http://www.naturemagics.com/kerala-oil-paintings/swinging.jpg

IRFCA.



'பா'வென விரிந்த இரு கரங்கள் மீண்டும் இணைந்து, ட்ராக் ஃபார்ம் ஆக, அதன் வழி சென்று, அலையிலாக் கடலில் தீர்த்தமாடி, இராமநாதர் கோயிலில், பல கிணறுகளில் இருந்து மொண்டு மொண்டு தலையில் ஊற்றி வழிபட்ட இராமேஸ்வரப் பயணம் தான் முதல் இரயில் பயணம் என்று நினைக்கிறேன். மேக மூட்டமாய் இருக்கின்றது.

தெளிவான நினைவாய் இருப்பது மதுரையில் ஏறி (பாண்டியன்...?) இரவு முழுதும் உறங்காமலே, சென்னை அடைந்து ரசகுல்ல மூன்று தடவை வாங்கி உண்ட முதல் பஃபே வட நாட்டு இரவுக் கல்யாணத்தை அட்டெண்ட் செய்த இரயில் ஞாபகம்!

மற்றும் சில மறக்க இயலாத பதிவுகளை இரயில்வே தந்துள்ளது.

+2 விடுமுறையில் சென்னை வந்து திருமயிலை வரை மட்டுமே வளர்ந்திருந்த பறக்கும் ரயிலில், 'ஹா'வென கட்டிடங்களின் மேல் மிதந்தது, கல்லூரியில் முதலாண்டு விடுப்பில் என்.சி.சி. ஆர்மி கேம்புக்காக சிங்கப்பெருமாள் கோயில் ஸ்டேஷனுக்கு கிண்டியில் இருந்து நண்பர்களோடு சென்றது, 16:30க்கு எழும்பூரில் இருந்து கிளம்பும் ராக்ஃபோர்ட்டைப் பிடிக்க முயன்று, கடைசி நேரத்தில் சேத்துப்பட்டுக்கு நான் மின்சார ரயிலில் வர, எதிரில் பூதம் போல் கடந்தது, நான்கு வருடமும் ஏற்காடு எக்ஸ்ப்ரஸே வாகனம் ஆனது, ஒரு தீபாவளிக்கு நான்கு பேர்கள் உட்கார்ந்திருந்த ஜெனரல் கம்பார்ட்மெண்ட்டின் முதல் தளக் கம்பிகளில் படிப்பின் மேல் ஆர்வம் இல்லாத +2 பையனைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டே வந்த ஸ்கூல் டீச்சர், ராமாவரத்தில் தங்கியிருந்த ஆரம்பக் கட்டங்களில் ஒரு செவ்வாய் பரபரப்பான காலையில், கிண்டி ப்ரிட்ஜைக் கடக்கும் போது, மீட்டர் கேஜ் டு ப்ராட் கேஜுக்கு மாறிக் கொண்டிருந்த நேரமாதலால், கூட்டம் அப்பிய பீச் ட்ரெயினில் இருந்து பறந்து விழுந்து, நூறு அடிகள் புரண்டு எழுந்த கல்லூரி மாணவனின் முகம், டாய்லெட்டின் கீழே அதி வேகத்தில் விரையும் தண்டவாளங்கள், முட்டி போட்டு நகரும் காலின் கீழே துணியால் கூட்டி விட்டு, கை நீட்டி இரக்கும் சிறுவர்கள், சென்னைக்கும் பெங்களூருக்கும் பந்தாடப்பட்ட போது பார்த்த பெயர் மாற்றங்கள், குளிர் மாற்றங்கள், சேலம் வழி செல்லும் இரவுப் போதில் பனி பொங்கும் கவிதைகள், பகல் நேரச் சுட்டெரிக்கும் கம்பிகள், மணலோடும் பாலாற்றுப் படுகை, மெஜஸ்டிக் ஜங்ஷனில் 'லா' பேசிய டை இளைஞன் மேல் உடைத்த மரக் கட்டையோடு பாய்ந்த சிறுவனின் முகத்தில் தெரிந்த போலீஸுக்கு கைமாற்றிய இருபது ரூபாயின் தைரியம், திருமுல்லைவாயிலில் இருப்பதாகச் சொன்ன ஒரு ஆர்ட்டிஸ்டின் அறிமுகம், சென்னையில் இருந்து ஊருக்கு வருகையில், ஓரிடத்தில் இரண்டு மணிநேரம் நின்று விட, காத்திருந்து, பின் பொறுமை இழந்து இறங்கி இடம் கேட்டு நொந்த நேரம் (பள்ளிபாளையம், ஈரோட்டில் இருந்து வெறும் 2 கி.மீ.), அரக்கோணத்தில் இங்க்லீஷ் டி.வி.டி. விற்கும் கிராமத்துப் பெண், சப்போட்டா விற்கும் கிழவிகள், பொட்டு, ஊசி, காலண்டர், டார்ச் விற்கும் மின்சார ரயில் விற்பனையாளர், வெளி உலகிற்கே சம்பந்தமே காண விரும்பாத ரேபான் கண்கள், ஐ-பாட் காதுகள், ரீபோக் கால்கள், தி ஆல்கெமிஸ்ட் படிப்பு பையன், ஓரிடத்தின் காற்றை வேறிடத்தில் கக்கும் காற்றுத் தலையணைகள்...!

இரயில் பயணங்கள் எப்போதும் அலாதியானவை.

குஷ்வந்த் சிங்கின் 'Train to Pakistan'. கல்கியின் அலை ஓசை. பஷீர் வாழ்நாளின் பாதிப் பயணங்கள் இரயிலின் வழி! தி.ஜ.வின் ஒரு சிறுகதை.

ஓடு இரயில் என்பது நகரும் ஒரு சமூகம். ஒரு நழுவல்.

அமெரிக்காவின் இந்திய இரயில்வே விசிறிகள் சங்கத்தின் (Indain Railways Fan Club of America) தளத்தை இன்று பார்த்தேன். தேச இரயில்வேயில் தங்கள் அனுபவங்களைச் சொல்லி இருக்கிறார்கள்.

காணுங்களேன் :: IRFCA

***

Henry Beam Piper எழுதிய Operation R.S.V.P என்ற குட்டிச் சிறுகதையைப் படித்தேன். அதன் முதல் ஒரு பகுதி கீழே ::

Vladmir N. Dzhoubinsky, Foreign Minister, Union of East European Soviet Republics, to Wu Fung Tung,
Foreign Minister, United Peoples' Republics of East Asia:
15 Jan. 1984

Honored Sir:

Pursuant to our well known policy of exchanging military and scientific information with the Government, of friendly Powers, my Government takes great pleasure in announcing the completely successful final tests of our new nuclear-rocket guided missile Marxist Victory. The test launching was made from a position south of
Lake Balkash; the target was located in the East Siberian Sea.

In order to assist you in appreciating the range of the new guided missile Marxist Victory, let me point out that the distance from launching-site to target is somewhat over 50 percent greater than the distance from launching-site to your capital, Nanking.

My Government is still hopeful that your Government will revise its present intransigeant position on the Khakum River dispute.

I have the honor, etc., etc., etc.,

V. N. Dzhoubinsky.

இதன் தொடர்ச்சியை இங்கே சென்று டவுன்லோட் செய்து படித்துக் கொள்க!

ப்போதோ எழுதிய ஒரு கு.க!

எதிர் பாராமல்
உன்னை
எதிரே
பார்க்கையில்
என்ன பேசுவது
என்பதை
இந்த மனதிற்கு
யார்
கற்றுக் கொடுப்பது?