Friday, September 18, 2009

பளிச் செய்தி..!

திருவனந்தபுரம், செப்.18 :

இன்று மாலை மங்கிக் கொண்டு வந்த முன்னிரவு சுமார் 18:40 முதல் 19:00 மணிக்குள் திருவனந்தபுரம் நகரில் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. எமது சிறப்பு நிருபரிடம் அனுபவித்த டெக்னோபார்க்கில் பொட்டி தட்டும் வசந்த் தெரிவித்ததாவது :

"சார்... இன்னும் நடுங்குது..! இன்னிக்கு சாயந்திரம் ஒரு ட்ரீட்டுக்காக அலுவலக சகாக்களோடு அம்ப்ரோஸியா போகலாமா இல்லைன்னா பாஸ்கின் ராபின்ஸான்னு சீரியஸ் டிஸ்கஸ் பண்ணிக்கிட்டிருந்தேன். ஒரு ஆறரை மணி கிட்டக்க இருக்கும். படபடன்னு செகண்ட் ஃப்ளோரே நடுநடுங்கிச்சு. எல்லோரும் எழுந்திருச்சிட்டாங்க. வி ஃபெல்ட் த வைப்ரேஷன்ஸ். ஒரு ஆறு செகண்ட் தான் அதிர்ச்சி இருந்திச்சு. அப்புறம் மெல்ல அந்த அதிர்வுகள் அடங்கறது, க்யூபிக்கிள் மேல கை வெச்சப்போ ஃபீல் பண்ணினோம். நான் கீழ எறங்கி வந்திட்டேன். கொஞ்சம் பெரிய நல்ல மழை பெஞ்சிட்டிருந்திச்சு. அப்ப தான் நான் கூட ஒருவேள நிலநடுக்கமா இருக்கலாமோனு நெனச்சேன். ட்ரீட் ப்ளான் கேன்சல் ஆகி, எல்லோரும் அவங்கவங்க வீட்டுக்கு கிளம்பிட்டாங்க. நான் மட்டும் விடலையே..! அம்ப்ரோஸியா போய் க்ரிஸ்பி சிக்கன் பர்கர் சாப்பிட்டேன். டி.ஸி. புக்ஸ் ஷாப்புக்கு போய் தேவதாஸிகள் பற்றிய ஒரு புக்கும், டேவிட் இஸட் ஆல்பர்ட் எழுதிய டைம் அண்ட் சான்ஸ் பிஸிக்ஸ் புக்கும் வாங்கினேன்.

நிருபர் குறுக்கிடுகிறார் : சார், எர்த் க்வேக் பத்தி மட்டும் சொல்லுங்க..!)

இருங்க, அதுக்கு தான் வரேன். அப்புறமா மழயிலயே நனஞ்சிகிட்டு போய் ஐ.ஓ.பி. ஏ.டி.எம்ல கொஞ்சம் பைசா எடுத்திட்டு, வழக்கமான பெட்டிக் கடையில செவ்வாழைகளும், சன் ஃபீஸ்ட் ஆரஞ்ச் ஃப்ளேவர்ட் க்ரீம் பிஸ்கட்டும் வாங்கினேன். அப்ப விசாரிச்சா, கடக்காரரும் அப்படித் தான் சொன்னார். கடைல தொங்க வெச்சிருந்த குர்குரே பாக்கெட்டெல்லாம் அவர் மேலயே சரிஞ்சிச்சாம். பட்டத்திலிருந்து கிளம்பிய நடுக்கமாம் இது. அவர் வீட்டுக்கு செல்ல கேட்டப்போ, அவங்க அலமாரி பாத்திரமெல்லாம் விழுந்திடுச்சாம். ஏதோ பெருச்சாளி ஓடியிருக்குன்னு நெனச்சிட்டாங்களாம். சரியான காமெடி இல்ல..? (நிருபர் : ஊஃப்...) ஓ.கே. ஓ.கே..! தமிழ்ச்சங்கர் ஒருவரையும் ஃபோன் பண்ணி கேட்டேன். அவரும் ஆமான்னு சொன்னார். ஸோ, கேரளா கூட இப்ப ஸேஃப் கெடயாது..! கடவுளின் கண்ட்ரிலயே க்வேக்..! எப்பூடி...?"

http://www.technoparktoday.com/2009/09/earthquake-in-trivandrum/

http://aruninte.blogspot.com/2009/09/earthquake-in-trivandrum-kerala.html

http://www.hindu.com/2009/09/19/stories/2009091959380100.htm

updated :: it was a mild tremor and not an earthquake. recorded as in 3.5 scale.

Wednesday, September 16, 2009

ஓர் உரையாடல்.

ரையாடல் சிறுகதைப் போட்டியில் அறிவித்திருந்த நிபந்தனையின் காரணமாக ஒரு சிறுகதையை மற்றொரு வலைத்தளத்தில் பதிந்திருந்தேன். அதனை இங்கே இப்போது நகர்த்தி வைத்து விடுகிறேன். (உழக்கிற்குள் கிழக்கு மேற்கு..!!)


"ரொம்ப வலிக்குமா..?"

"நாட் தட் மச். ஒரே வலி தான். மொத்த வலியும் அந்த ஒத்த வலிதான். ஆனா, கால்கள் மட்டும் கொஞ்ச நேரம் துடிச்சிட்டு இருக்கும்.."

"கேட்கும் போதே பயமா இருக்கு. இதுல இருந்து தப்பிச்சுப் போயிட முடியாதானு இருக்கு..!"

"இம்பாஸிபிள். எங்க போனாலும் இது தான் உனக்கு. இது உன் விதி. மாற்ற முடியாது..! இருக்கும் இன்னும் கொஞ்ச நேரத்திற்கு உன் சந்தோஷக் கணங்கள் எதையாவது நினைத்துக் கொள்ளேன். பச்சைப் புல்வெளி, பாயும் அருவிநீர், விடியல் வெளி, காற்றில் அலையும் தாடி...! இப்படி எதையாவது. நான் சந்திப்பவர்களிடம் இப்படித் தான் சொல்வேன்.."

"ம்ம்..! அப்படி எனக்கு எதுவும் ஞாபகத்திற்கு வரலை. வந்தாலும், இந்த மரண பயம் ஒரு சல்லாத் துணி மாதிரி வந்து போர்த்திடுது..! ஒரு துக்கம் கவிந்த கடைசி நொடி இவ்வளவு பக்கத்திலன்னு நினைக்கும் போது முழுக்க சிலிர்ப்பா இருக்கு..!"

"அது எல்லார்க்கும் இருக்கு..! உனக்கு, எனக்கு, அந்த மரத்திற்கு, இந்த புழுவுக்கு, சூரியனுக்கு... எல்லார்க்கும்..! கால அளவுகள்ல தான் மாற்றம். எல்லோரும் ஒரே வேலையைத் தான் செய்றோம். பட், ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு செயல்கள் நீட்சியா இருக்கு. இந்த ஈசலைப் பாரு. மழை பேஞ்சா பிறக்குது. பறவோ பறன்னு பறக்குது. சில மணிகள்ல செத்துப் போய்டுது. அதே தான எல்லோரும் செய்றோம்...! உனக்கு ஒரு அனுமதிக்கப்பட்ட காலம். எனக்கு வேறு ஒன்று..! கடைசியில, அற்பமா காணாம போயிடறோம்..!"

"அது எல்லார்க்கும் இருந்தாலும், அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்ற வாய்ப்பு அவரவர்க்குத் தானே இருக்கணும்..? என் கடைசியை முடிவு செய்யும் அதிகாரம் இவனுக்கு எப்படி வந்தது..? யார் கொடுத்தது..?"

"சிலர் கடவுள்னு சொல்றாங்க. சிலர் இயற்கை. சிலர் எவால்யுஷன். எனக்கு என்ன தோணுதுன்னா, நத்திங். அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. உடல் முழுக்க எலெக்ட்ரிக் கரண்ட்கள் பொட்டுப் பொட்டா துடிச்சுக்கிட்டு ஓடிட்டு இருக்கு. அதெல்லாம் அதிர்ந்து போகற மாதிரி நிகழும் போது எல்லாம் முடிஞ்சிடுது. ஒரு ஸ்விட்ச் போடறாங்க; லைட் எரியுது; ஸ்விட்ச் அணைக்கறாங்க; லைட் அணைஞ்சிடுது; எங்கிருந்து ஒளி வந்திச்சு? எங்க ஒளி போச்சு? தெரியாது. இது என்ன வகையான ஸ்ட்ரக்சர்ல அமைக்கப்பட விதிகள்? தெரியாது. தெரிஞ்சுக்காம இருக்கறதுல தான் நமது மின்னல் துளி வாழ்க்கையோட இருப்பு இருக்குன்னு எனக்குத் தோணுது. ஒன்ஸ் தெரிஞ்சுக்கிட்டோம்னா, அந்த வாழ்க்கையே மறைஞ்சுடும்னு நினைக்கறேன். மனிதர்கள் முட்டி மோதித் தெரிஞ்சுக்கத் துடிக்கற கடைசி பூட்டு இந்த ரகசியமாத் தான் இருக்கணும். ஏதேதோ சாவி போட்டு முயற்சி பண்ணிக்கிட்டே இருக்காங்க. எப்பவாவது திறந்து பார்த்தாங்கன்னா என்ன இருக்கும்? வெறும் வெட்ட வெளி தான் இருக்குங்கறது என் அனுமானம்..."

"இவ்ளோ தத்துவங்கள் எனக்கு வேணாம். என்னை இன்னும் குழப்புது. நான் ரொம்ப எளிய ஆசாமி..! அந்த நொடிகள்ல என்ன நினைச்சுக்கலாம்? வலி குறைய. வலி மறைய. ஏதாவது சொல்லேன்."

"புரியுது. உன் வாழ்க்கையில் என்றும் நினைவில் வைத்துக் கொள்ள விரும்புகின்ற ஏதாவது ஒன்றை நினைத்துக் கொள்ளப் பார். உன் காதலிகள், கயிறு இறுக்கும் முடிச்சுகள், அம்மாவிடம் முட்டிப் பால் குடித்தது, சகோதரர்களுடன் சண்டைகள், இப்படி...!"

"நீ நிறைய பேரைப் பார்த்திருக்கியா..?"

"நிறைய..! வெகு நிறைய..! பல பேர் உன்னை மாதிரி தான் நடுங்குவாங்க.."

"நான் நடுங்கலை..!"

"பொய். உன் குரலே வேர்த்திருக்கு. கால்களைப் பார்க்கிறேன். இப்படியும் அப்படியுமா தடுமாறுது. பெரும்பாலும் இப்படித் தான். அவங்களைக் கொஞ்ச நேரம் இந்த மரணத்திற்காக காத்திருக்கும் துளி நொடிகள்ல சந்திச்சுப் பேசுவேன். ஆசுவாசப்படுத்துவேன். அப்படி ஒண்ணும் நடுங்கக் கூடிய அனுபவம் அல்ல. நாம் இல்லாம போற அந்த நொடி உங்க எல்லாருக்கும் அச்சுறுத்தல் தரக்கூடிய ஒண்ணா இருக்கு. வொய் நாட்? எனக்கும் அப்படித் தான் இருக்கும். தேங்க் காட், நான் மேடைக்கு இந்தப்புறம் இருக்கேன். என் வேஷம் வேற. உங்களிடமிருந்து மாறுபட்டது. எனக்கான முடிவு வேறு ஏதாவது வகையில் நிச்சயம் செய்யப்பட்டிருக்கும். எல்லோரும் அந்த முடிவுக் கணத்தை நோக்கித் தான் நகர்ந்து கொண்டிருக்கிறோம்.."

"இன்னும் எனக்கு முன்னாடி எத்தனை பேர் காத்திட்டு இருக்காங்க..?"

"அப்படி பிக்ஸ் பண்ணி சொல்ல முடியாது. ரேண்டம்னஸ் தான். அந்த எதிர்பாராத் தன்மை ஒரு வித நிச்சயமின்மையைச் சொல்லுது. மாறாக நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாக இருந்தால் நாம் அதற்காக காத்திருந்து எண்ணிக் கொண்டிருப்போம். நெருப்பு வேதனையா இருக்கும். சொல்லப் போனால், அந்த திடீர்த் தகவல் - 'நீ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாய்' - நம்மைத் தயார் செய்து கொள்ளக் கூட அவகாசம் தரப்படாத நிலை கொஞ்சம் நல்லது தான் என்றே எனக்குப் படுகின்றது. சட்டுனு எல்லாம் முடிஞ்சிடும்..."

"நான் பிறந்து எதுவும் சாதிச்ச மாதிரி தெரியல. நிறைய சகோதரர்களோட பிறந்தேன்; பாலுக்கு சண்டை போட்டேன்; ஒரு இடத்தில இல்லாம திரிஞ்சேன்; ஓடினேன்; வெயில அலைஞ்சேன்; கொட்டற மழைல ஒவ்வொரு முடியும் கம்பி மாதிரி சிலிர்த்துக்கிட்டு நிக்க, நனைஞ்சேன். தாடிகளை வளர்த்தேன்; ஜோடிகளைப் பிடிச்சேன்; ஒரே கொண்டாட்டம் தான்; இப்ப அத்தனையும் வெறும் நினைவுகளா, எனக்கு மட்டும் தெரிஞ்ச அனுபவங்களா என்னோடு மறைஞ்சு போகப் போகுது. நத்திங் ரிமைன்ஸ் ஃபார் எவர்...!"

"தட்ஸ் ட்ரூ..! ஆனா அந்த அனுபவங்கள்ல நீ திளைக்கும் போது, களைக்கும் போது உணர்வுகளின் உச்சத்தில இருந்த இல்ல...? எல்லா சந்தர்ப்பங்கள்லயும் நாம அந்த நேரத்து எலெக்ட்ரான்களின் பாய்ச்சல்கள்ல முழுமையா சிக்கிக் கொள்கிறோம். அப்புறமா நினைச்சுப்பார்த்தா சிரிப்பாக் கூட வரும்..."

"அப்ப, நான் அந்த கெமிக்கல் ஃப்ளூய்டுகளின் அடிமை தானா..?"

"அப்படி இல்ல. நான்னு தனியா எதுவும் இல்ல. நான், அப்படிங்கறதே அந்த கெமிக்கல்களும், அவற்றின் ந்யூரான் செய்திகளும் தான். நாம் தான் அவை; அவை தான் நாம்; இதுல அடிமைங்கறதெல்லாம் எங்க வந்திச்சு..?"

"அப்படின்னா இந்த வாழ்க்கையோட தாத்பரியம் தான் என்ன? நான் எதுக்காக இங்க வரணும்? ஏன் இப்படி வாழணும்? ஏன் என் விதி இப்படி ஒருவன் கைகள்ல முடியணும்..?"

"தேடறோம். எல்லோரும் இதைத் தான் தேடறோம். வி கேம் பேக் எகெய்ன் டு த கொஷன். ஏன் இதெல்லாம்..? தெரியாது."

"உயிர் போன பிறகு நான் எப்படி இருப்பேன். கொஞ்சம் சொல்லு.."

"வேணாம். ரொம்ப வருத்தப்படுவ.."

"பரவாயில்ல. ஐ வாண்ட் டு நோ தட். என்ன ஒரு வேடிக்கை பாரேன். எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டோம் அப்டின்னு ஆணவமா இருக்கோம். ஆனா, சிம்பிள்... மரணத்திற்குப் பின் நம்ம உடல், நம்ம கூடவே இருந்த உடல், இன்ஃபாக்ட் அது தான் நாமன்னு நினைச்சுக்கற உடல், எப்படி இருக்கும்னு கூட தெரியாத அப்பிராணிகளா இருக்கோம். வாட் எ ஸ்ட்ரேஞ் ரூல்ஸ் ஆல் திஸ்..?"

"தட்ஸ் த ஸ்ப்ரிட். நீ இதை ஒரு வேடிக்கையா எடுத்துக்கும் போது வலி உடல்ல மட்டும் தான் இருக்கும். உன் மனசுக்கு வராது. இதையும் நீ ஒரு எறும்பு கடிக்கற மாதிரி, எங்கயோ இடிச்சுகிட்ட மாதிரி எடுத்துக்கிட்டயினா இதுவும் ஒரு சம்பவமா கடந்து போயிடும். எனி ஹவ், நீ விரும்பற. நான் சொல்றேன். முடிந்தவுடன் குரல் வளைல காத்து சிவப்பு மொட்டுகளாய் 'கொப்ளக்..கொப்ளக்..'னு வெடிக்கும். கால்கள் மட்டும் உயிர் இருக்கோன்னு ஒரு வித சந்தேகத்துல அப்பப்போ துடிக்கும். காதுகள் விறைச்சுக்கிட்டு நிக்கும். தொடைகளுக்கிடையில் நெரிபடறதால் விரைகள் ரொம்ப கலங்கிப் போய்டும். முக்கியமா உன் வால்...!"

"வால்...? அதையும் சொல்லிடு..!"

"நத்திங். வால் விடைச்சுப் போய் நிக்கும். மெல்ல மெல்ல உன் உடல் ஒரு இறந்த கால உடலா மாறும் போது, தோல்கள் உறிக்கப்பட்டு, குடல் சுத்திகரிக்கப்பட்டு, ரத்தங்கள் சேகரிக்கப்பட்டு, ஒவ்வொரு துண்டாக நீ விற்பனையாகும் போது தனியான உன் தலையில் கண்கள் மட்டும் வெளிறிப் போய், எல்லாத்தையும் பார்த்துட்டு இருக்கற மாதிரி திறந்திருக்கும். சின்னக் கொம்புகள் மேல் ஈக்கள் சுத்தும்."

"ஓ..! என்ன ஒரு கோரம். பட், நான் இப்ப தயாரா இருக்கேன்."

"அவன் வர்றான். எல்லார்கிட்டயும் நான் ஒரு கடைசி கேள்வி கேப்பேன். உன்கிட்டயும் கேட்டுடறேன். உன் உடல்ல உனக்கு ரொம்ப பிடிச்ச பாகம் எது? முன்னங்கால்கள்? பின்னங்கால்கள்? ஈரல்? குடல்? ரத்தம்? எலும்புகள்...? தொடைகள்..?"

"எதுக்கு கேக்கற?"

"ஜஸ்ட் ஃபார் மை சேக். சொல்லேன்.."

"ம்...! என் ரத்தம் எனக்குப் பிடிக்கும். என் இரவுகள்ல அத்தனை சூடா பாயும் அந்த சிவப்பு வெள்ளம் எனக்கு ரொம்ப பிடிக்கும்..!"

"வெல். எனக்கு எதுக்குத் தேவைன்னா, உன்னை வெட்டும் போது நிறைய சதைத் துணுக்குகள் சுத்தியும் சிதறும். அதுல உனக்கு எது பிடிச்சிருக்குன்னு சொல்றியோ அதை மட்டும் அவனுக்குத் தெரியாம கவ்விட்டுப் போய் மண்ணைக் கிளறிப் புதைச்சிடுவேன். இது ஒரு மாதிரி உங்களுக்கு நான் செய்ற மரியாதைன்னு நினைச்சுக்கறேன். மத்த பார்ட்ஸை எல்லாம் சாப்பிடுவேன். அதை மட்டும் சாப்பிட மாட்டேன்."

"...."

"ஓ.கே. தேங்க்ஸ் ஃபார் எ நைஸ் கன்வர்ஸேஷன். பை. ஸீ யூ லேட்டர், சம்வேர். என்னைத் துரத்த கல்லை எடுக்கறான்.."

"ஓ.கே. பை. என்னை வெட்ட கத்தியோட வர்றான்.."

Tuesday, September 15, 2009

மொக்ஸ் - 15.Sep.2K9



ன்று முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணாதுரையின் நூற்றாண்டு நிறைவு நாள். அவரைப் பற்றி எனக்கு எந்த அளவுக்குத் தெரியும்? நிறைய அல்ல. ஓர் இரவு கதையை ஓர் இரவிலேயே எழுதினார். 'தென்னகத்தின் பெர்னார்ட்ஷா' என்று கல்கி பாராட்டியிருக்கிறார். பொடி போட்டே சீக்கிரம் மறைந்தார். குள்ளமானவர். துணைப்பாட நூலில் 'செவ்வாழை' என்ற கதை ஞாபகம் வருகின்றது. காங்கிரஸ் சர்க்காரில் கேரளாவுக்குப் போய்க் கொண்டிருந்த அரிசியை நிறுத்தி, முதலில் தமிழருக்கே என்று கிழங்கு சாப்பிட்ட ஏழைகளுக்கு அரிசிச் சாப்பாட்டைக் கொண்டு வந்தவர். ராபின்சன் பூங்காவில் தி.மு.க. தொடங்கியவர். சிவாஜியோடு 'சிவாஜி கண்ட இந்து ராஜ்யத்தில்' நடித்திருக்கிறார். மெட்ராஸ் ஸ்டேட்டைத் தமிழ்நாடு ஆக்கினார். No sentence start with because, because. because is an adjective. அண்ணாதுரை அவர்களின் மற்ற சமுகப் பணிகளைத் தவிர, இலக்கிய ரீதியாகச் செய்ததை முழுதும் படித்துப் பார்க்க ஆசைப்படுகிறேன். முக்கியமாக 'கம்பரசம்'.

ஆட்சிக்கு வந்த இரண்டு வருடங்களிலேயே இறந்து போகாமல் இன்னும் சில வருடங்கள் இருந்திருந்தால் (குறிப்பாக '72 வரை), தமிழக அரசியல் எப்படி மாறியிருக்கலாம் என்று சிந்தித்துப் பார்க்கலாம்.



சென்ற வெள்ளி மாலை சென்னை எக்ஸ்ப்ரஸில் செல்லும் போது ஒரு விபரீத ஆசை எழுந்தது. ஒரு பத்திரிக்கையை எடுத்துக் கொண்டு முன் அட்டை முதல் பின் அட்டை வரை ஓர் எழுத்து கூட விடாமல் - கவனிக்க, ஓர் எழுத்து கூட விடாமல் - தொடர்ந்து படித்து முடிக்க வேண்டும். முடித்தவுடன் மனநிலை எப்படி இருக்கின்றது என்று பார்க்க வேண்டும் என்ற விசித்திர ஆராய்ச்சியில் இறங்கினேன். இந்த படு பயங்கரமான சோதனையில் அபாய அளவை அதிகரித்துக் கொள்வதற்கென்றே எடுத்துக் கொண்ட பத்திரிக்கை, காலச்சுவடு, செப்டம்பர் 2009 எடிஷன்.

இதழ் எண் 117லிருந்து, கடைசி அட்டையில் விளம்பர ரெஜிஸ்ட்ரேஷன் எண் வரை கண்களை இடுக்கிக் கொண்டு படித்து முடித்ததில், இன்று வரை நினைவிருப்பவை, பெருமாள் முருகனின் கல்வி பற்றிய கட்டுரை, நோபல் பெற்ற பாட்டிக் கவிஞரின் கவிதை எழுதத் தெரியாத அக்கா பற்றிய கவிதை, ஸ்ரீராம் சிட்ஸ் விளம்பரம், வன்னிப் பதிவுக்கான எதிர் வினைகளில் இருந்த தர்க்கங்கள், நல்லி சில்க்ஸ் பட்டு மங்கையின் கால்வாசிப் புன்னகை. கொஞ்சமே சம்பவங்கள் நடந்த இந்த இடைப்பட்ட நான்கு நாட்களில் இந்த சங்கதிகள் மட்டுமே சடுதியில் நினைவிலிருந்து மீட்டப்பட்டிருப்பதை சைக்காலஜிஸ்டுகள் யாராவது சுரண்டிப் பார்க்கலாம்.

கரம் அமுதாவின் 'வெண்பா எழுதலாம் வாங்க' வலைப்பதிவு மெருகேற்றப்பட்டு இப்போது இன்னும் கொஞ்சம் மரபு அனுபவசாலிகள் கைகளும் கோர்க்கப்பட்டு இன்னும் சீரியஸாக வெண்பாக்கள் திருத்தப்படுகின்றன. புதிதாக அகவற்பா எனப்படும் ஆசிரியப்பா கற்றுத் தரத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழ்க் கவி வடிவங்களில் ஆசிரியப்பாவே மிக எளிமையானதாகத் தெரிகின்றது. வெண்பா போன்ற கடின விதிகள் இல்லாமல், கொஞ்சம் தமிழ் vocabulary தெரிந்தால் போதும், எழுதிக் கொண்டே போகலாம்.

இன்று கற்றுக் கொண்டு முயன்ற ஓர் ஆசிரியப்பா. இது நேரிசை என்ற வகையைச் சேர்ந்தது.

பாரதி கவனமாய்ப் பாஞ்சாலி சபதத்தில்
சாரதி உடைநல்கும் செய்யுளைச் செதுக்குகையில்,
செல்லம்மாள் சமையலறை இருட்டுள்
மெல்லமாய்ச் சொன்னார், "மதியத்திற் கரிசியில்லை..!"

தமிழ்த்தாய்க்கு ஓர் அகவற்பா எழுதுங்கள் என்று கேட்டதற்கிணங்கி எழுதியதில்,

தமிழென் மொழியெனத் தயங்கா துரைத்தேன்.
"அமிழ்தா?" கேட்டார் அயலார் ஒருவர்.
"இல்லை..!" என்றேன். இம்மியும் யோசியாது,
தொல்லை என்றெனைத் தூற்றினர் எந்தமிழர்.
அளவின்றிப் பருகிட அமுதும் நஞ்சாகும்.
புலவோர் பலர்தம் பூதவுடல் நீக்கினும்
நிலம்மேல் நிலையாக நீள்புகழ் பெற்ற
வள்ளுவனாய்க் கம்பனுமாய்ப் பாரதியாய் இளங்கோவாய்த்
தெள்ளுதமிழ்ப் பாவிசைத்துத் தேன் துளிகள் தான்கலந்து
அள்ளியள்ளிச் சுவைத்தாலும் அடங்காத ஆர்வமாய்,வான்
கள்ளினும் மேலாகத் தமிழைச்
சொல்லுவேன் அமிழ்தினுக்கும் அமிழ்தினுக்கும் அமிழ்தெனவே!

மேலே கண்ட பாவைப் பார்த்தாலே உங்களுக்குப் புரிந்திருக்கும். வள்ளு, தெள்ளு, அள்ளி, கள்ளி, சொல்ல்... என்று எவ்வளவு வரை போக முடியுமோ சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் தொடர்ச்சியான அர்த்தம் இருக்க வேண்டும். கவி அழகும் இருந்தால் மகிழ்ச்சியே..!

ரையாடல் குழுவினர் நடத்திய சிறுகதைப் பயிற்சிப் பட்டறைக்கு அதிக தூரத்தில் இருந்து வந்து, குறைவான நேரம் மட்டுமே கலந்து கொண்டவன் நான் ஒருவனாகத் தான் இருக்க வேண்டும். ஞாயிறு காலை 10.20க்குப் போய் 14.50க்கு ஜூட். பாஸ்கர் சக்தியின் கேள்வி பதில் பகுதியில் பாதியில் சென்று சேர்ந்து கொண்டேன். யுவன் சந்திரசேகரின் உரை மற்றும் கேள்வி பதில்களை மட்டுமே முழுதாகக் கேட்க முடிந்தது. மனிதர் வெகு நகைச்சுவையாகப் பேசித் தள்ளினார். நானும் கச்சேரிக்குப் போனேன் என்பதற்காக ஒரே ஒரு கேள்வி கேட்டு விட்டு அமர்ந்து விட்டேன்.

கே : எழுத்தின் பிற வடிவங்களான கவிதை, பொதுக்கட்டுரை, பயணக் கட்டுரை, நாவல், பாடல்கள் ஆகியவற்றை முயற்சி செய்து பார்ப்பது, ஒரு சிறுகதை ஆசிரியனுக்கு எந்த வகையில் மெருகேற உதவும்?

யுவன் : (நிறைய தன் அன்பவங்களைச் சொல்லி விட்டு, முத்தாய்ப்பாக) நானும் கவிதைகளிலிருந்து சிறுகதைக்கு நகர்ந்ததின் பலன் சுருக்கமாகச் சொல்லும் வல்லமை பெற்றது தான்.

தோளில் துண்டு போட்டு கிராமத்து நெசவாளி போன்று தோற்றமளித்த ஒரு முதியவரை யாரோ ஒரு பதிவரின் தந்தை போல என்று நினைத்திருந்தேன். பொழுது போகாமல் கூட்டி வரப்பட்டிருக்கிறார் என்று எண்ணினேன். நேற்று பிற பதிவர்களின் புகைப்படப் பதிவுகளில் பார்க்க்ம் போது தான் அவர் சா.தேவதாஸ் என்றும், அவரே 'உலகச் சிறுகதைகள்' பற்றியும் பேசினார் என்று தெரிந்ததும் நடுங்கிப் போய் விட்டேன். 'உருவு கண்டு எள்ளாமை வேண்டும்' என்பதை எப்போது தான் கற்றுக் கொள்ளப் போகிறேனோ..? இதன் மூலமாக அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

அவருடையதும், பா.ராகவன் அவர்களுடைய உரைகளையும் எனக்குப் பதிலாக கேட்டுத் தெரிந்து கொள்ள வானவில் வீதி கார்த்திக்கை அனுப்பி வைத்து விட்டு, 15:15 ரெயிலைப் பிடித்து, பைத்தியக்காரன் கொடுத்த புத்தகங்களைப் புரட்டிப் பார்த்து, கைக்காசைப் போட்டு பைத்தியக்காரனும், சுந்தரும் நடத்தும் இந்தப் பட்டறையினால் என்ன எதிர்பார்க்கலாம் என்ற் யோசித்தேன்.

ஒரு ஞாயிறு பட்டறையினால் சிறுகதை எழுதுபவராக மாறி விட முடியுமா என்றால் இயலாது தான். ஆனால் இது ஒரு நல்ல துவக்கமாக இருக்க முடியும். ரா.கி.ரங்கராஜனின் எப்படி கதை எழுதுவது, ஜெயமோகனின் நவீனத் தமிழிலக்கிய அறிமுகம், கோ.கேசவனின் தமிழ்ச் சிறுகதையில் உருவம் மற்றும் கதை கதையாம் காரணமாம் என்ற சூரியசந்திரனின் புத்தகங்கள் சிறுகதைக்குத் தேவையான மூலப் பொருட்களைப் பற்றியும், எப்படி, எங்கிருந்து அவற்றைத் தேர்வு செய்யலாம் பற்றியும் ஓர் அடிப்படைப் பாடத்தை நடத்துகின்றன.

நல்ல அவதானிப்புத் திறமும், பற்பல எழுத்தாளர்களின் கதைகளைத் தொடர்ந்து படிப்பதன் மூலம் நாம் நம் திறமையைக் கூர் தீட்டிக் கொண்டு ஒரு நல்ல சிறுகதையாவது எழுதுவதையே உரையாடல் குழுவும் எதிர்பார்க்கும் என்று கருதுகிறேன். வெறும் நானூறு ரூபாய்களுக்கு நான்கு பெரிய மனிதர்களின் பேச்சுக்களையும், நான்கு அரிய புத்தகங்களையும், சில ஃபோட்டோக்களையும், சில பதிவர் அறிமுகங்களையும், ஏ.ஸி. ஹாலையும், தயிர் சாதம், சிக்கன், ஃபிஷ், அப்பளம், ஐஸ்க்ரீம், ஜாமூன்களையும் ஏற்படுத்திக் கொடுத்ததற்காக நானும் கண்டிப்பாக முயல்கிறேன், பைத்தியக்காரன் மற்றும் சுந்தர்ஜி..!

சென்ட்ரலில் வானவில் வீதி கார்த்திக்கைச் சந்திக்க வேண்டும் என்று நான் காத்திருக்க, அவர் தாம்பரத்திலிருந்து கோடம்பாக்கம் வரை மட்டுமே டிக்கெட் எடுத்து இறங்கி, பின் அங்கே பூங்காவிற்கு மற்றொரு டிக்கெட் எடுத்து, ஞாயிறு ஆதலால் காத்திருப்பு அதிகமாகி, எலெக்ட்ரிக் ட்ரெய்ன் பிடித்து, பூங்காவில் குதித்து, சப்வேயில் நுழைந்து, ஏறி ஐந்தாம் ப்ளாட்பாரத்தில் என்னைக் கண்டுபிடித்து Khaled Hosseini-ன் A Thousand Splendid Suns கொடுத்தார். நான் வாத்தியாரின் 'கற்பனைக்கும் அப்பால்' என்ற அறிவியல் கட்டுரைத் தொகுப்பைக் கொடுத்து டாட்டா காட்டும் போது சென்னை - திருவனந்தபுரம் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்ப்ரஸ் நகரத் தொடங்கி விட்டது. எனக்குத் தமிழ்த் திரைப்பட க்ளைமாக்ஸ்கள் மேல் நம்பிக்கை பிறந்தது.