Thursday, November 02, 2006

இப்ப இன்னான்ற..?

"க்கா..யக்கா.."

பொன்னாத்தா தான். இவளுக்கு இப்பக்கி இன்னா கேடு வந்திச்சினு இப்புடி கத்திக்கினுகீறா..? சோசப்பு தொளிலுக்கு போச்சொல்லோ, தட்டிய நல்லா இறுக்கச் சாத்திக்கினு போவான். இன்னிக்கி மறந்து போய்க்கினான் போல. இல்லாங்காட்டி இவ இப்புடி கத்தறதெல்லாம் கேக்குமா..?

"இன்னாடி.. இப்புடி எளவு வுளுந்த கணக்கா கத்தற..?" கொண்டையை முடிந்து கொண்டே, சரசக்கா தட்டியை ஒதுக்கி விட்டு வெளியே வந்தாள்.

"எளவெல்லாம் ஒண்ணும் இல்ல. உன் வூட்டு முன்னாடி பாரு.." என்றாள் பொன்னாத்தா.

அப்போது தான், கண்களை நன்றாகக் கசக்கிக் கொண்டு சரசக்கா பார்த்தாள். வீட்டின் முன்னே ஒரு கிழவன் சுருண்டு விழுந்து கிடந்தான்.

பரட்டையாய் சூம்பிப் போன தலை. கண்கள் எல்லாம் குழி விழுந்து, கன்னங்கள் எல்லாம் ஒடுங்கி இருந்தன. கை, கால்கள் இருக்கும் இடங்களில் எல்லாம், சுருங்கிய தோல் போர்த்திய குச்சிகள் இருந்தான்.

சரசக்கா அதிர்ச்சியுறாததில் இருந்து, ஏற்கனவே இந்தக் கிழவனை அறிந்தவள் போல் இருந்தது.

"யாருக்கா, இந்த ஆளு..? ஓடிப் போன உன் வூட்டுக்காரனா..?" கேட்டாள் பொன்னாத்தா.

"அந்தாளு எதுக்குடி இங்க வரப் போறான்? போன தபா, ராயபுரத்துல நம்ம சேட்டாண்ட, குண்டா ஒண்ண அடகு வெக்கப் போச்சொல்ல, இந்தாளப் பாத்தன். முனீசுவர் கோயிலு முன்னாடி குந்திக்கினு, பிச்ச எடுத்துக்கினு இருந்தான்.."

"சரி.. இப்ப இன்னா பண்ணப் போற..? உன் வூட்டு முன்னாடி வுளுந்து கெடக்கான்.."

"ஒரு கை புடி..வூட்டு ஓரமா தூக்கிப் போட்டுருவோம்.. சை.. காலங்காத்தால முளிச்ச மொகமே சரியில்ல.. இன்னிக்கு வேல வெளங்கினாப்ல தான்.."

"யக்கா.. என்னயவா சொல்ற.. முளிச்ச மொவம் சரியில்லனு..?"

"அட.. நீ வேற..இந்தா நீ கையப் புடி.."

இருவரும் அந்தக் கிழவனைப் பிடித்து வீட்டின் வெளியே ஓரமாய்ப் போட்டார்கள்.

"க்கா.. உனக்கு விசயம் தெரியுமா..?" பொன்னாத்தா கத்திக் கொண்டே ஓடி வந்தாள்.

மீன் சுட்டுக் கொண்டிருந்த சரசக்கா, நிமிர்ந்து பார்த்தாள்.

"இன்னாடி..?"

"அடுத்த வாரம், நம்ம முனிசிபாலிடி இஸ்கூலுல வேட்டி, சேல தராங்களாம். பொங்கலுக்கு வருசா, வருசம் தருவாங்கல்ல, அது.."

"அதுக்கு ஏண்டி இந்த குதிகுதிக்கிற..? எப்பவும் தர்றது தான..? செரி.. உனக்கு எப்புடி இந்த மேட்டரு தெரியும்..?"

" நம்ம எம்மெல்லே மணியண்ணன் கூடவே சுத்திக்கினு இருப்பான்ல, பளனி அவன் நேத்து ராவா வூட்டாண்ட வந்துருந்தான். போச்சொல்ல காசு கேட்டேன். எல்லாம் பொங்கலுக்கு இலவச வேட்டி, சேல குடுக்கச் சொல்ல தர்றன்னுட்டான்..."

"பாவிங்க.. இதுலயுமா கடன் சொல்லிக்கினு போறாங்க.. தூ..ஏண்டி, இலவசமா சேல தர்றான்ட்டு, இவனுக்கு இலவசமா வுட்டிட்டியாக்கும்..?"

"ளனி..! எனக்கு வேட்டி ஒண்ணு குடுடா.." சரசக்கா கேட்டாள்.

"யக்கா..! உன் கார்டுக்கு, குடுக்குற வேட்டிய இப்ப தான் சோசப்பு வந்து வாங்கிக்கினு போனான்.." என்றான் பழனி.

"தெரியுண்டா...! இப்ப எனக்கு வேட்டி கெடைக்குமா, இல்லயா..?"

"என்னக்கா..? புதுசா எவனயாவது புடிச்சிக்கினியா..?" கண்ணடித்தான் பழனி.

"தூ..! செருப்பால அடி நாய..! என் வூட்டுக்காரன் என்ன வுட்டு ஓடிப் போனதுல இருந்து, நெருப்பு மாதிரி இருந்துக்கினு இருக்கேன். பேச்சப் பாரு!.." கத்தினாள் சரசக்கா.

பழனி பயந்து போனான்.

"யக்கா..! மன்னிச்சுக்கோ..! உன்னப் பத்தி தெரியாதா..! சும்மா வெள்ளாட்டுக்கு கேட்டேன். ஆனாலும், உன் கார்டுல வேட்டி ஒண்ணுக்கு மேல தர முடியாதேக்கா..!"

குறுக்கே புகுந்தாள் பொன்னாத்தா.

"யோவ்..! இன்னா பேச்ச வளத்துக்கினே போற. இப்ப என்ன? அக்கா கார்டுக்கு வேட்டி இல்ல. அவ்ளோ தான். என் கார்டுக்கு குடு.."

"உன் வூட்டுக்கு வர்ற எல்லா ஆம்பளக்கும் ஒண்ணு தரணுமா..?" நக்கலாக கேட்டான் பழனி.

"இந்தா..! இந்த எகத்தாளப் பேச்செல்லாம் ராத்திரி வரச் சொல்லொ, பேசிப் பாரு. அப்பாலக்கி இன்னா சேதினு சனம் அடுத்த நா பேப்பர பாத்து தெரிஞ்சிக்கும்.."

"கோச்சுக்காத பொன்னு. இந்தா இந்த வேட்டிய எடுத்துக்கோ.."

"ரத்திரி வருவயில்ல.. உன்ன அங்க வெச்சுக்கறன்.. நீ வாக்கா போலாம்.." சரசக்காவை இழுத்துக் கொண்டு நடந்தாள் பொன்னாத்தா.

"க்கா..! இப்ப இன்னாத்துக்கு பளனியாண்ட உனக்கு இன்னோரு வேட்டி வேணும்னு சண்ட போட்ட.." கேட்டாள் பொன்னாத்தா.

"அது ஒண்ணும் இல்லடி.! நம்ம வூட்டாண்ட கெளவன் கெடக்கான்ல. அவனுக்காத் தாண்டி.."

ஆச்சரியப் பட்டாள் பொன்னாத்தா.

"எதுக்கொசரம் அந்தக் கெளவனுக்கெல்லாம் துணியெடுத்துக் குடுக்கற..? உன் சொந்தமா..?"

"அய்ய..! அப்டியெல்லாம் ஒண்ணும் கெடியாது. ஒருத்தருக்கும் சொல்லாத ரகசியம் உனக்கு இப்ப சொல்றன். கேட்டுக்க.கைக் கொளந்தையோட என்ன வுட்டு ஓடிப் போன என் புருசன், வட நாட்டுக்கு போயி, ஒருத்திய கட்டிக்கினானாம். அப்பாலக்கி அவன் ரத்தம் எல்லாம் சுண்டிப் போனப்புறம், அவ அவனத் தொரத்தி வுட்டுட்டாளாம். அதுவும், அங்கன எங்கயோ காசிப் பக்கம் பிச்ச எடுத்துக்கினு கீறானாம். ராயபுரம் சேட்டு தான் ஒரு தபா சொன்னாரு. அது போலவே, இந்தக் கெளவனும் எங்கயோ அடிபட்டுக்கினு வந்திருக்கான். அட, இவனுக்கு எதுனா நல்லது நாம பண்ணினா, நம்ம புருசனுக்கும் ஏதாவது மவராசன் நல்லது பண்ணுவான்னு ஒரு ஆச தான்.."

"யக்கா..! எதுக்கு ஓடிப் போன புருசன் மேல போயி இம்பூட்டு அக்கற காட்டற..?"

"ஓடிப் போனாலும், அவன் எங்கனயாச்சு உசுரோட கீறான் அப்புடிங்கிற நம்பிக்க தாண்டி என்ன வாள வெக்குது. அவன் கட்டுன தாலி தான், இந்த மோசமான உலகத்துக்கிட்ட இருந்து என்ன காப்பாத்திக்கினு இருக்கு. இல்லாங்காட்டி, நானும் உன்ன மாதிரி... சரி வுடு. அது என்னாத்துக்கு, இப்ப..?"

பொன்னாத்தா மெளனமானாள்.

இருவரும் வேகமாக நடந்தனர்.

(தேன்கூடு - நவம்பர் 06 - போட்டிக்கான பதிவு.)

Tuesday, October 31, 2006

50..!

இதுவரை பதிவுகள் பல இட்டு என்ன சாதித்துள்ளேன் என்ற கேள்வி என்னைக் கேட்டுப் பார்க்கிறேன். வாழ்வில் நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் ஏதேனும் சாதிப்பதற்காக மட்டுமே என்று இருக்குமா? நாம் நடப்பது, சுவாசிப்பது போன்ற செயல்கள் 'சாதரணமா' இல்லை ஏதேனும் சாதனையா என்று எண்ணிப் பார்க்கின்றேன்.

இவை போல பதிவுகள் இடுவதையும் மிகச் சாதாரண நிகழ்வாக நான் நினைத்துக் கொண்டால், ஏதேனும் சாதித்துள்ளேனா என்று கேள்வி எழுப்பியிருக்க மாட்டேன்.

ஆனாலும் சில நன்மைகள், சில பிழை திருத்தல்கள் மற்றும் கருத்து மாற்றங்கள் என வாழ்வின் கூறுகளைப் பாதியளவிலாவது பாதிக்கக் கூடிய, இயக்கங்கள் நிகழ்ந்துள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை.

வசனக் கவிதைகள் என்ற பெயரில், கட்டுரைகளைக் கிறுக்கிக் கொண்டிருந்தேன். அருமையான தோழி ஒருத்தி, 'இது போன்ற பெரிய வரிக்கு வரி, வர்ணிக்கின்ற கவிதைகளைப் படிக்க யாருக்கும் காலமில்லை. சுருக்கமாகவும், இனிமையாகவும் எளிமையாக எழுத முயற்சி செய்து பார்' என்றாள். முயன்றதில் குறுங்கவிதைகள் வரை குறுக்கி எழுத வந்தது. அந்தத் தோழிக்கு நன்றி. அது போல வெறும் கவிதைகளும், சோகப் புலம்பல்களுமாய் கிறுக்கிக் கொண்டிருந்த என்னாலும் சிறுகதைகள் எழுத முடியும் என்று எனக்கே உணர்த்திக் காட்டியது 'தேன்கூடு' போட்டிகள்.

சில நண்பர்கள் கிடைத்தார்கள். பல பதிவர்கள் அயல் நாடுகளில் இருந்து இயங்குவதைக் கண்டதும், நாமும் அயல் நாடு சென்று பணியாற்ற வேண்டும் என்று எண்ணம் தோன்றியுள்ளது. இப்படி ஊக்கிகளாய் பதிவர்களின் பதிவுகள் பயன்பட்டன.

அருமையான கருத்துக்கள், ஆரோக்கியமான விவாதங்கள், விதவிதமான மொழி நடைகள், சில்லென்ற சிறுவயதுக் குறும்புகள், இளம் வயதைக் கிளர்வுறும் பலதரப்பட்ட காதல்கள்....

இப்படிப் படிக்கப் படிக்க விழிகளுக்குத் தேனாய் இனிக்கின்ற பதிவுலகத்தை வாழ்த்தி வணங்குகிறேன்.

எனக்கும் 'ப்ளாக்' ஆர்வத்தை ஏற்படுத்திய மாய வரிகளுக்கு உரிமையாளர்களான
'கொங்கு ராசா' அவர்களுக்கும், அண்ணன் 'டுபுக்கு' அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

அப்புறம் பல பேரைப் பார்த்தாச்சு.

எதற்கு இப்படி உருகி, உருகி நெஞ்சை நக்குகிறேன் என்று நினைக்கிறீர்களா...
ஏனென்றால்...

இது என்னுடைய 50வது பதிவு.

(50க்கெல்லாம் இவ்ளோ பந்தாவா என்று கேட்பவர்களுக்கு என் பதில்..
:-)............ :-)
)

அக்டோபர் போட்டியில்..!

அக்டோபர் மாதத் தேன்கூடு போட்டியில் நமது வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டு விபரங்கள்.

வலைப் பதிவர் வாக்கு:

1. விடுதலை எதற்கு? - வசந்த் 15.6%

2.வாங்கிய விடுதலை. - வசந்த் 12.5%

3.விடுதலைத் திரு நாளில்... - வசந்த 12.5%

4.வாசம். - வசந்த் 9.4%

5.இரகசியம். - வசந்த் 9.4%


வாசகர்களின் ( வலைப் பதிவு இல்லாத) வாக்கு:

1.விடுதலை எதற்கு? - வசந்த் 4.2%

2.வாங்கிய விடுதலை. - வசந்த் 4.2%

3.விடுதலைத் திரு நாளில்... - வசந்த 4 .2%

4.வாசம். - வசந்த் 4.2%

5.இரகசியம். - வசந்த் 4.2%

பெருவாரியாக வாக்களிக்காமல் , சிறுவாரியாகவாவது வாக்களித்து, குறைந்தது களத்திலாவது இருக்கச் செய்த வாக்காளப் பெருங்குடி மக்களுக்கு என் நன்றிகள்.

மீண்டும் நவம்பர் மாதப் போட்டியில் பார்ப்போமா..?

Monday, October 30, 2006

கடங்காரப் பய.

"Hello மிஸ்டர்! எப்படி இருக்கீங்க..?" கொஞ்சம் காட்டமாகவே கேட்டான் கதிரவன்.

"உங்க புண்ணியத்தில் நல்லாவே இருக்கேன்."

இப்போது கதிரவனுக்கு கோபம் வந்து விட்டது.

"என்னது..? என் புண்ணியத்திலயா..? சொல்லுவடா, சொல்லுவ. ஏன் சொல்ல மாட்டே? உனக்கு கடனும் குடுத்திட்டு, திருப்பி வாங்க முடியாம இருக்கேன் பாரு, இதுவும் சொல்லுவ. இன்னமும் சொல்லுவ.."

" நான் என்னங்க பண்ணறது..? உங்க கடனைத் திருப்பிக் குடுக்கிற நிலைமையில நான் இல்லையே..?"

"திருப்பிக் குடுக்க முடியாதவன் எல்லாம் ஏண்டா கடன் வாங்கறீங்க..? பொதுவா கடன் கொடுத்து திருப்பி வராட்டி, வயிறு தான் எரியும்னு சொல்லுவாங்க. எனக்கு உடம்பே எரியுதுடா.."

"அண்ணே.. கொஞ்சம் மெதுவா பேசுங்க. ஊரு, உலகத்துல எல்லாரும் தூங்கற நேரம்.."

"அவ்ளோ ரோஷம் இருக்கிற பய, வாங்கின கடனை வட்டியோட திருப்பித் தர வேண்டியது தான. யப்பா, எவ்ளோ வருஷமா கடன் வாங்கிட்டு இருக்க. ஏண்டா உங்க அண்ணன், தம்பி ய்யர்கிட்டயாவது வாங்கிக் குடுக்கலாம் இல்ல..?"

"எங்கண்ணே.. அவங்களும் உங்கள மாதிரி நல்லவங்க கிட்ட கடன் வாங்கித் தான் ஓட்டிட்டு இருக்கோம்.."

"அது சரி..! குடும்பமே இப்படித் தானா.! சரி, பகல்ல எல்லாம் கண்ணுலயே பட மாட்டேங்கற, இராத்திரி மட்டும் தான் வெளியவே வர்ற அப்படினு எல்லாம் ஊருல பேசிக்கறானுங்க.., நெசமாலுமா..?"

"அடப் போங்கண்ணே..! ஒண்ணுமே தெரியாத மாதிரி தான் கேப்பீங்க. அதெல்லாம் ஊருல இருக்கற பயலுகளுக்கண்ணே..! நான் உங்க கூட தான் இருக்கறேன் அண்ணே..!"

"சரி..! உன்ற அண்ணன், தம்பி, மாமன், மச்சான், பங்காளிங்களை எல்லாம் அடிக்கடி பாக்கறதுண்டா..?"

"எங்கண்ணே..! அடிக்கடி எல்லாம் பாத்துக்கறதில்ல. எப்பவாவது குடும்பத்தோட வழியில சந்திச்சுக்கிட்டா உண்டு. அவன் அவன் பொழப்ப பாத்து, ஊரு, உலகம் சுத்தறதுக்கே நேரம் சரியா இருக்கே. நீங்க எப்படிண்ணே..?"

" நீ சொல்றதும் சரி தாம்பா. நானும் ஒரு காலத்துல ஒண்ணா, மண்ணா ஒரே குடும்பமா இருந்தவங்க தான். நல்லா தான் போய்ட்டு இருந்துச்சு. நீயெல்லாம் அப்ப பொறந்திருக்கவே இல்ல. ஒரு நா, ஏதோ ஒரு கோபத்துல சண்டை போட்டு எல்லாரும் குடும்பத்துல இருந்து வெடிச்சு செதறினோம். அன்னிக்குப் பிரிஞ்சவுக தான். இன்னி வரைக்கும் ஒருத்தர ஒருத்தர் பாத்துக்கவே முடியல. என்னையும் ஓரமா ஒதுக்கி வெச்சிட்டாங்க. என்ன பண்றது..? குடும்பம் பெருத்துப் போச்சு. என்னை நம்பி ஒம்போது உருப்படிங்க வந்திடுச்சு. எதுக்கெடுத்தாலும், என்ன வேணும்னாலும் என்னையவே சுத்தி, சுத்தி வர்றானுங்க. அவனுங்களை உட்டுட்டுப் போகவும் மனசு வரல. இப்படியே காலம் வேகமா ஓடிட்டு இருக்கு. இப்ப என் கவலையெல்லாம் என் காலத்துக்கு அப்புறம் இவங்களை யார் பாத்துக்குவாங்கங்கறது தான்.. நான் செத்துப் போய், என் ஒடம்பு சூடெல்லாம் அடங்கிப் போனதுக்கு அப்புறம், இவங்க எல்லாம் என்ன பண்ணுவாங்கனு நெனச்சாலே, எனக்கு கஷ்டமா இருக்கு தம்பி.."

"சரி விடுங்கண்ணே..! அதுக்குத் தான் இன்னும் ரொம்ப காலம் இருக்குல்ல..?"

"அதெல்லாம் ஊர்ல பாக்குற பயலுகளுக்கு. எனக்குத் தான தெரியும். சரி நீ கெளம்பு..!"

"சரி பாக்கலாம்ணே.." கிளம்பியது சந்திரன்.

கதிரவன் தன் அருகில் உருண்டோடிக் கொண்டிருந்த கிரகங்களை வாஞ்சையோடுப் பார்த்தது.

இலக்கு.

நான் தற்போது படித்து வரும் பலதரப்பட்ட புத்தகங்களில் ஒன்று 'தி கோல்' எனும் ஆங்கிலப் புத்தகம். இலியாகூ எம்.கோல்ட்ராட் மற்றும் ஜெப் காக்ஸ் இணைந்து எழுதி இருக்கிறார்கள்.


நிறுவன மேலாண்மை தொடர்பான பல புத்தகங்கள் வந்துள்ளன. தற்போதும் வந்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் வெறும் கருத்துக்கள், யோசனைகள் ஆகியவற்றால் அவை நிரப்பப் பட்டிருக்கும். தற்போது இந்தியாவில் முது நிலை மேலாண்மை பட்டதாரிகளுக்கான தேவை பல மடங்கு பெருகி இருப்பதால், நம் நாட்டுப் புத்தகச் சந்தையையும் பல மேலாண்மை புத்தகங்கள் எட்டியுள்ளன.


இப் புத்தகமும் மேலாண்மை தொடர்பாக இருந்தாலும், வெறும் கருத்துக் கூட்டங்களாகவோ, அறிவுரை அருவியாகவோ இல்லை. மாறாக ஒரு நிறுவனப் பிரிவின் தலைவர் 'தம்-மொழிதல்' முறையில் கூறுவது போல் எழுதப்பட்டுள்ளது.


அவரும் அவர்தம் பிரிவின் துணைத் தலைவர்களும் சேர்ந்து எவ்வாறு தம் பிரிவை இழுத்து மூடுவதிலிருந்து காப்பாற்றுகிறார்கள் என்பதை ஒரு தெளிவான த்ரில்லர் நாவல் போன்று எழுதியுள்ளார்கள்.


இதனிடையே அவருடைய குடும்ப வாழ்வில் ஏற்படுகின்ற கணவன் -மனைவி உறவில் ஏற்படுகின்ற விரிசலையும் எப்படி சமாளிக்கிறார் என்பதும் கிளைக் கதை போல் கூறப்பட்டுள்ளதால், படிப்போர் மேலாண்மைக் கூறுகளில் இருந்து சற்று நிதானித்துக் கொள்ளவும் அவகாசம் கிடைக்கின்றது.


பிரிவுத் தலைவரது பள்ளி இயற்பியல் ஆசிரியரின் வழிகாட்டுதலால், அவர் புது பார்வை பெற்று, பிரிவை இலாபத்தின் பக்கம் திசை திருப்புகிறார்.


இன்னும் படித்து முடிக்கவில்லை. எனினும் படித்ததில் இருந்து அறிந்து கொண்ட விஷயங்கள்:


1. மேலாண்மை என்பது வேறு ஒன்றுமில்லை. இயற்பியல், வேதியியல் போன்று அதுவும் அறிவியலே.! மிகச் சிக்கலான அமைப்புகளுக்கு அடிப்படையாக எளிய அறிவியல் விதிகள் இருப்பது போல், மேலாண்மைச் சிக்கல்களுக்கும் எளிய விதிமுறைகளை உபயோகித்தாலே போதுமானது.

2. நம்மைச் சுற்றி நடக்கின்ற நிகழ்வுகளில் இருந்தே நாம் பல பிரச்னைகளுக்கு தீர்வு பெறலாம்.

3. மூலக்கதையை மூல மொழியிலேயே படிப்பது தான் (மொழி தெரிந்திருக்கும் பட்சத்தில்) சிறந்தது. விகடனில் இப்புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுகிறார்கள். நன்றாகவே இல்லை.

முழுதும் படித்து விட்டு மேலும் கூறுகிறேன்.

சென்னையில் இது ஒரு மழைக் காலம்.

தொடார்ந்து பெய்கின்ற கனமழையால், சென்னை புற நகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. போதாக்குறைக்கு புயல் அச்சுறுத்தல்களாலும் மா நகரெங்கும் பய மேகங்கள் சூழ்ந்துள்ளன. நான் தற்போது படூர் கிராமத்தில் இருந்து, வேளச்சேரி வந்து பணியாற்றுகிறேன். இடைப்பட்ட பகுதிகளான நாவலூர், சோழிங்க நல்லூர், துரைப்பாக்கம், காரப்பாக்கம், பெருங்குடி ஆகிய அனைத்து பகுதிகளும் பெரு வெள்ளக் காடாய் காட்சியளிக்கின்றன.

இத்தனைக்கும் இந்த பழைய மகாபலிபுரம் சாலையை 'ஐ.டி. நெடுஞ்சாலை' என்று அரசு அறிவித்து உள்ளது. மேலும் நான்கு வழிச் சாலையாக இதனை மாற்றவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மென்பொருள் நிறுவனப் பேருந்துகள் சாலையின் குழிகளில் விழுந்து எழுந்து சென்று கொண்டிருக்கின்றன.

அவை மட்டுமல்ல, நகரப் பேருந்துகள் தமது கச்சடா அமைப்பை வைத்துக் கொண்டு தடுமாறியபடி சென்று கொண்டிருக்கின்றன.

சென்ற வாரம் சைதை அருகில், ( வேளச்சேரி பிரிவு என்று நினைக்கிறேன்) ஏற்பட்ட கடும் வாகன நெரிசலில் மாட்டிக் கொண்ட பல நூறு சென்னைவாசிகளில் நானும் ஒருவன். அந்த தாமதத்தால் நான் படூர் சென்று சேர்வதற்குள் நள்ளிரவு 12:30 தாண்டி விட்டது.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள ஊராட்சி/ நகராட்சி/ பெரு நகர உறுப்பினர்களுக்கான பணிகள் காத்துக் கொண்டிருக்கின்றன.