Saturday, June 09, 2007

இருக்கா... இல்லையா..?மேலே உள்ள காமெடியை பார்த்து ரசித்தீர்களா..? நன்றாகச் சிரித்தீர்களா..? நன்று. சிரிப்பை நிறுத்துங்கள். நான் சொல்லப் போவது, கொஞ்சம் சீரியசான மேட்டர் தான்.

"பேய் இருக்கா இல்லையா" என்று வடிவேலு கேட்பாரே, அது போல் உங்களைக் கேட்கிறேன். உங்களுக்கு அனுபவம் ஏதாவது இருக்கிறதா..?

என் அனுபவத்தில் உணர்ந்த ஒரு நிகழ்வைச் சொல்கிறேன்.

சிறு வயதில் எல்லோரையும் போல் தான் எனக்கும் பயம். இரவில் தனியாகப் போக பயம். கரண்ட் போய் விட்டால் , வீட்டிலேயே இருக்க மாட்டேன். உடனே தெருவிற்கு ஓடி வந்து விடுவேன். விளக்கு பற்ற வைப்போம் என்ற எண்ணமும் தோன்றாது. நள்ளிரவுக்கு மேல், பக்கத்தில் இருக்கின்ற வேறொரு அறைக்கு கூட போக மாட்டேன். ஆறாவதோ, ஐந்தாவதோ படிக்கும் போது 'உருவம்' படத்திற்கு அப்பாவோடு போய், படம் பார்த்த வரையில், வாட்டர் பாட்டில் கொண்டு சென்ற பிளாஸ்டிக் கூடையை முகத்தில் மறைத்து, அதன் இடுக்குகள் வழியே திரையைப் பார்த்தேன். இடைவேளையின் போதே, 'விட்டால் போதும்' என்று ஓடி வந்தேன். (இதற்காகத் தனியாகப் பாட்டு வாங்கியது தனி.)

இந்தி டியூஷன் செல்லும் போது, சாரின் கடைசிப் பையன், வெண்டைக்காயின் காம்புகளை முகம் முழுதும் ஒட்ட வைத்து, 'திடீர்' என்று முன்னால் வந்து நிற்க, 'உருவம்' மோகன் தான் நினைவுக்கு வந்தார். விழுந்தடித்து, மேலிருந்து கீழே ஓடி வந்தேன்.

'நாளைய மனிதன்' என்றொரு கதையை அப்பா சொல்கையில், ஓடோடி வந்து வீட்டுக்குள் புகுந்து கொண்டதுண்டு.

இதையெல்லாம் எல்லோர்க்கும் ஏற்படும் அனுபவங்கள் என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் முதன்முதலாய் கேள்விப்பட்டிராத அனுபவம் ஒன்று ஏற்படுகையில், ஆடிப் போய் விட்டது தான் இனி சொல்லப் போவது.

ட்டாவதோ, ஒன்பதாவதோ படிக்கையில், தனியறை கொடுத்து விட்டார்கள். இரும்பு கட்டில், பெட் என்று.

ஒருநாள் இரவு இரண்டு மணி வரை படித்து விட்டு, உறங்கச் செல்கிறேன். எப்போதும் எதிரில் இருக்கும் ஒரே ஒரு ஜன்னலைச் சாத்தி விட்டு தான் உறங்குவேன். நமக்கு வெளிச்சம் துளிகூட இருக்கக் கூடாது. தூக்கம் வராது. 'டக்'னு துளி சத்தம் கூட கேட்கக் கூடாது. உடனே தூக்கம் கலைஞ்சிடும்.

ஆனா அன்னிக்கு நல்ல நிலா வெளிச்சம். பெளர்ணமியானு ஞாபகம் இல்லை. அப்படியே இளம் நீல வெளிச்சம் ஜன்னல் வழியா வந்து கொண்டிருந்தது. லேசா காத்து வேற வீசிக் கொண்டிருந்தது.

'சரி, ஒரு நாள் ஜன்னலைத் திறந்து வெச்சு தான் தூங்குவோம்' என்று ஜன்னலைத் திறந்து வைத்தவாறே படுத்தேன். எப்போதோ மெட்ரிகுலேஷன் ஸ்கூலில் படித்த 'மாரல் சயின்ஸில்' இந்த மாதிரி ' தூங்கும் போது , ஜன்னலைத் திறந்து வைத்து தான் தூங்க வேண்டும் என்று படித்திருந்தது, அன்றைக்குப் பார்த்து ஞாபகம் வந்து தொலைத்தது.

ஜன்னலைத் திறந்து வைத்தவாறே, நீல வெளிச்சத்தைப் பார்த்தவாறே படுத்தேன். 'மல்லாந்து படுக்கற்துல என்ன சுகம்' என்று எண்ணியவாறே, கண்களை மூடியது தான் தாமதம்.

என்ன நடந்தது என்றே தெரியவில்லை.

விரிந்தவாறே இருந்த கைகளையும், கால்களையும் யாரோ இறுக்கப் பிடித்துக் கொண்ட உணர்வு. அவற்றை துளிக் கூட அசைக்க முடியவில்லை. கண்களைத் திறக்கப் பார்க்கிறேன். ம்ஹூம்... கொஞ்சம் கூட நகர்த்த முடியவில்லை.

கண்களைத் திறக்க வேண்டும், கை, கால்களை அசைக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். அந்த நினைவு நன்றாக வேலை செய்கிறது. ஆனால், உடலை மட்டும் அசைக்க முடியவில்லை.

பயங்கரமான அதிர்ச்சி.

நிஜமாகவே ப்ரும்பாடு பட்டு, கை, கால்களை அசைத்தேன். 'தடார்' என்று எல்லாம் ஒழுங்காயிற்று. கை, கால்களை அசைக்க முடிந்தது. கண்களைத் திறந்து பார்த்தேன். அதே நீல வெளிச்சம் ஜன்னல் வழியாக விழுந்து கொண்டிருந்தது.

இதயம் எப்படித் துடித்தது என்று அப்போது எனக்குத் தான் தெரியும்.

விழுந்தடித்துக் கொண்டு ஓடி, அப்பாவிடம் சொல்லி, நெற்றி நிறைய திருநீறு பூசி, அங்கேயே படுத்துக் கொண்டேன். பிறகு வரவில்லை.

இது தான் 'பேய்' என்று எனக்குப் புரிந்து போனது.

அப்புறம் கொஞ்ச நாளைக்கு அது போல் எதுவும் நடக்கவில்லை. ஆனால், ஜன்னல் மட்டும் நான் இரவில் தூங்கும் போது திறக்கவேயில்லை.

10-வது படிக்கையில், மீண்டும் 'அது' வந்தது.

ங்கள் பள்ளியில், பொதுத் தேர்வு மாணவர்களுக்கு மட்டும் , இறுதித் தேர்வு நேரங்களில் பள்ளியிலேயே இரவு தங்கி படிக்க அனுமதிப்பார்கள். வீட்டுச் சூழல் படிப்பைப் பாதித்து விடக்கூடாது என்பதற்காக.

அப்படி ஒரு நாளின் இரவு.

உட்காரும் பெஞ்சுகளை எல்லாம் இழுத்துப் போட்டு, ஒரு படுக்கை மாதிரி செய்து, அதன் மேல் பெட்ஷீட்டை விரித்துப் படுத்தேன். உஷாராக, எல்லா ஜன்னல்களையும் சாத்தி விட்டுத் தான். பிற மாணவர்கள் வெளியே படுத்துக் கொண்டார்கள். நான் ஏன் வெளியே படுத்துக் கொள்ளவில்லை என்று சரியாக நினைவில் இல்லை.

நினைத்துப் பாருங்கள்.

பெரிய வகுப்பறையில், நான் மட்டும் தனியாக. எல்லா ஜன்னல்களையும் அடைத்தாகி விட்டது. அறையின் விளக்குகள் எல்லாவற்றையும் அணைத்து விட்ட பிறகு, வகுப்பறையே முழு இருட்டில் மூழ்கியது.

கிராமத்துச் சூழலின் இரவுக்கே உரிய, சில்வண்டுகளின் ரீங்காரங்கள், எப்போதாவது கடக்கின்ற கரும்பு ஏற்றிய மாட்டு வண்டியின் சக்கரச் சத்தங்கள், தூரத்தில் தொடர்ந்து குலைத்துக் கொண்டேயிருந்த தெருநாயின் ஓலக் குரல், வெளி ஜன்னல்களின் இடுக்குகள் வழியே கசிகின்ற நிலவொளி...

ஏதோ கனவு கண்டு, முடிக்கும் போது, 'அது' பிடித்தது.

என்ன செய்வதென்றே தெரியவில்லை.

மீண்டும் போராட்டம்.

ஒரு நொடியில், சடாரென்று கயிறு அறுந்து, கண் திறந்தேன். மூச்சு பலமாக வாங்கியது. கண்களை மூடினாலோ, நெஞ்சு துடிக்கின்ற சத்தம், கண்களை திறந்தாலோ கருகும்மென்ற இருட்டு...

எந்த மூலையில் என்ன இருக்கின்றதென்றே தெரியவில்லை.

அடித்துப் பிடித்து ஓடி கதவைத் திறந்து வெளியே வந்து படுத்துக் கொண்டேன்.

தோ இரவில் மட்டும் தான் 'அது' வரும் என்று நினைத்து விடாதீர்கள்.

ஒரு நாள் ,சனிக்கிழமை மதியம். 12:30க்கு மேல் இருக்கும். இன்னொரு நண்பனுடன் பஸ்பாஸ் எடுக்க ஐ.ஆர்.டி.டி. செல்வதாகத் திட்டம். அவன் வரும்வரையில், கொஞ்ச நேரம் கண் மூடலாமே என்று, கீழே படுத்தவாறு, சோபா மேல் காலைத் தூக்கிப் போட்டு, கண் மூடினேன்.

'அது' வந்து விட்டது.

பின், விடுபட்டவுடன் பார்த்தால், அவன் வந்திருந்தான். அவனோடு மதிய உணவு உண்கையில், இதைப் பற்றிக் கூறினேன். அப்போது, அவன் கூறினான். அவனுக்கும் இது போல் ஆவதுண்டு, இது உடலிலிருந்து வலி வெளியே போகின்றதென்று சொன்னான்.

வித்தியாசமாக இருந்த கருத்து.

பின்பொரு நாள், சுஜாதாவின் 'ஏன், எதற்கு, எப்படி' ஏதோவொரு பாகம் படிக்கையில், அவர் ஒன்று குறிப்பிட்டு இருந்தார்.

'பல பேருக்கு வருகின்ற இதற்கு பேர் 'அமுக்கான்'. இதற்கு காரணம், தூக்கத்தில் இருந்து விழிக்கும் போது , உடல் உறுப்புகளின் விழிப்பும், உள்ளத்தின் விழிப்பும் ஒரே நேரத்தில் நிகழ வேண்டும். அப்படித் தான் எப்போதும் நிகழும். அவ்வாறு இல்லாமல், இரண்டின் விழிப்புகளுக்கும் இடையில், மைக்ரோ செக்ண்ட் அளவில் இடைவெளி இருக்கும் போது, உணர்வு முதலில் விழித்துக் கொள்ளும். ஆனால் உடல் இன்னும் விழித்துக் கொள்ளாததால், நம்மால் உடலை அசைக்க முடியாமல் போய்விடுகின்றது' என்று கூறியிருந்தார்.

இந்த விளக்கம் தான் 'அது'வா என்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை.

பின் கல்லூரியில் சேர்ந்து, பசங்களோடு இருக்கும் அறைகளிலும், தனியறை கொடுத்த பின்னும், வேலையில் சேர்ந்த பின்னும், இன்னமும் கூட 'அது' அடிக்கடி வந்து அட்டெண்டென்ஸ் போட்டு விட்டுச் செல்கின்றது.

சிலசமயம், முயற்சிக்காமல் அப்படியே விட்டால் என்ன என்று சும்மா கை, கால்களை அசைக்க முயற்சிக்காமல் இருப்பேன். பின் கொஞ்ச நேரம் (மைக்ரோ செகண்டு தானோ ? நமக்கு தான் ரிலேட்டிவிட்டி தியரிபடி கொஞ்ச நேரமாகத் தோன்றுகிறதோ..?) கழித்து, பயம் வந்து முயற்சித்து விட்டு விடுதலையாவேன்.

எனக்கு என்ன சந்தேகம் என்றால், இது எல்லோர்க்கும் ஏற்படுகின்ற விஷயம் என்றால், ஏன் இது நாள்வரை அதைப் பற்றி ஏதும் நாம் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோம்? இதனை யாராவது ஆராய்ந்து இருக்கிறார்களா?

நாம் முயற்சியே செய்யாமல் விட்டால், அதுவாகவே நம்மை விட்டு போய் விடுமா..? இதைப் பற்றி மருத்துவ வரலாறு என்ன சொல்கின்றது?

நம் பெரியோர்கள் இதைப் பற்றி ஏன் நம்மிடம் சொல்வதில்லை? 'அவனவனே அனுபவித்துத் தெரிந்து கொள்ளட்டும்' என்று விட்டு விட்டார்களோ?

இன்னும் புரியாத (எனக்கு) மர்மமாகவே இது இருக்கின்றது.

ஒருவேளை உயிர் பிரியும் போது, இப்படித் தான் இருக்குமோ? அதற்கான டெமோ தானோ, இப்படி வருவதெல்லாம்? இதைப் பற்றி சொல்லி வைத்தால், மனிதன் பயத்திலேயே உயிரை விட்டு விடுவான் (அப்போதும் இதே முறையிலா..?) என்று தான் பெரியவர்கள் மறைத்தார்களோ..?

ஒண்ணுமே புரியலப்பா.

'அது' பேயாகத் தான் இருக்க வேண்டும் என்று தான் இன்னமும் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

PodWorks.In - Day 1.

சென்னை டைடல் பூங்காவில் தற்போது நடந்து கொண்டிருக்கின்றது. அங்கு தான் இருக்கின்றேன்.

காலை 10 மணி சுமாருக்குத் தான் செல்ல முடிந்தது.:-(.

கேள்வி நேரம் நடந்து கொண்டிருந்து, தற்போது சிறு இடைவேளை முடிந்து, பதில் நேரம் தொடங்க வேண்டியுள்ளது.

பல அடிப்படை கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. சுவாரஸ்யமாகவும், அறிவுபூர்வமாகவும் உள்ளன.

Update செய்கிறேன்.

இன்னும் சற்று திறமையாகவும், பொறுப்போடும் செய்ய வேண்டும் என்ற கவனத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரு வேலையாக எடுத்துச் செய்ய வேண்டியதன் கவனத்தை ஏற்படுத்தி உள்ளது.

முதல் மாடியில், பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. NDTV- ல் வரலாம்.

பின் பாடகி சின்மயி அவர்கள், ஆடியோ பதிவு செய்யும் போது மேற்கொள்ள வேண்டிய முறைகளைப் பற்றிக் கூறினார். கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

ஆடியோ பாட்காஸ்டிங் செய்யும் முறைகளைப் பற்றியும், தொழில் நுட்ப நிறுவனங்கள் அவற்றில் ஈடுபடும் முறைகளையும் அறிந்து கொண்டோம்.

நல்ல உணவு, இடைவேளை சிற்றுணவு வழங்கினர்.

5 மணிக்கு நிகழ்வுகள் முடிந்ததும், வெளியூர்க் காரர்கள், ஈ.சி.ஆர் சாலையின் ரிசார்ட்டிற்குச் செல்ல, சென்னைவாசிகள் இல்லம் திரும்பினோம்.

நாளை பார்ப்போமா..?

Friday, June 08, 2007

நான்... ஒரு கூழாங்கல்.


சும்மா கிடக்கின்றது ஒரு கல்.

எவ்வாறோ, எதனாலோ நகர்த்தப்பட்டு, நகர்ந்து கொண்டு வந்து சேர்ந்தது ஆற்றின் போக்கிற்கு!

எங்கோ கிடந்த அதை, பேரோசையோடு தன்னுள் அணைத்து, உருட்டிப் பிரட்டி, அருவிகளில் விழுக்காட்டி, சரிவுகளில் முழுக்காட்டி, வேறு எங்கோ ஒரு புள்ளியில் கொண்டு வந்து சேர்க்கின்றது, நதி.

அப்போதைய புள்ளிக்கும், இப்போதைய புள்ளிக்குமான தொலைவை நீரால் நிரப்பி இருக்கின்றது ஒரு பயணம்.

நதியின் போக்கிற்கே தன்னை ஒப்படைத்த கல், எண்ணிய முடிவுப் புள்ளியை எட்டாமல் எங்கெங்கோ கொன்டு சேர்க்கின்றது, தன்னுள் இணைத்துக் கொண்ட ஆறு..!

எங்கெங்கோ பயணங்கள்...! ஏதேதோ நினைவுகள்..!

பாதையெங்கும் கீறிச்சென்றும், கல்லின் மேல் பாய்கின்ற நீர்த் துளிகளால், நிலை மாறுகின்றது, வெறுங்கல், கூழாங்கல்லாய்..!

Tuesday, June 05, 2007

நானென்பது நீயல்லவா..


வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. ஈரமான ஜன்னல் கண்ணாடிகளின் மீது துளிகள் நேர்க்கோடுகளாய் வழிந்து கொண்டிருந்தன. லேசாக வீசிக் கொண்டிருந்த காற்றில் திரை ஆடிக் கொண்டிருந்தது. மின்சாரம் இல்லாமல் போய்விட்ட இந்த மாலை வேளையில் ஏதோவொன்று நடக்கப் போகின்றது என்று உள்ளுணர்வு மட்டும் கூறியது.

மெல்லச் சுழலும் மின்னாடி, ஏகாந்தமாய் விழுங்குகின்ற இரவின் சகதியில் புதையும் போது தன்னை மறந்து சூரியன் வெளிப் படுத்தும் ஆரஞ்சுக் கதிர்கள், அறையின் கண்ணாடியின் மீது பட்டுத் தெறிக்கின்றன.

மெல்ல உள்ளே எட்டிப் பார்க்கின்றேன்.

அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறாள், அவள்.

நானும் சிறு வயதில் இப்படித் தான் இருந்தேன்.

கழுத்துவரை போர்த்தியிருக்கும் குளிருக்குக் கதகதப்பான போர்வை, ஜன்னல் வழியாக வழிந்து வரும் ஈரக்காற்றில் மெல்ல மெல்ல ஆடிக் கொண்டிருக்கின்ற முன் நெற்றி முடி, கட்டிக் கொண்டு தூங்க புசு புசு டெடி பியர்கள்...

என் இனிமையான குழந்தைப் பருவத்தில் நானும் இவள் போலவே இருந்தேன்.

உள்ளே சென்று அருகில் பார்க்கலாமா?

கதவை மெல்ல திறந்து உள்ளே சென்றேன். கதவின் சத்தங்கள் அவளது உறக்கத்தைக் க்லைத்து விடுமோ என்று பயப்பட்டேன். அதற்கு அவசியமில்லை. மழைக் காற்றில் கதவு ஆடிக் கொண்டு தான் இருக்கிறது.

அவளை எழுப்பலாமா? வேண்டாம். இன்னும் பள்ளி செல்லாத சிறு இளம் வயது. இப்பருவத்தை விட்டுவிட்டால், பின் நிம்மதியான மாலை உறக்கத்தை எந்த வயதில் மீண்டும் அடைய முடியும்?

எனது இந்தப் பருவத்தில் நான் என்ன நினைத்துக் கொண்டிருப்பேன்?

இதே போன்ற ஒரு மழை நாளின் மாலையில், இதே போன்று இறுக்கிப் போர்த்திக் கொண்டு படுத்திருக்கையில், துளித்துளியாகப் போகின்ற நீர்த் தடங்களால், தோட்டத்தை மறைக்கின்ற ஜன்னல் கண்ணாடியைப் பார்த்து என்ன நினைப்பேன்?

என் மூன்றாவது பிறந்த நாளன்று என்னை விட்டுப் பிரிந்து, மலையைத் தாண்டி சென்று விட்ட தந்தையைப் பற்றியா..?

பின்னல் கூடைகள் செய்தும், கிறிஸ்துமஸ் மெழுகுகள், கேக்குகள் செய்தும் என்னை வளர்க்கும் அம்மாவைப் பற்றியா..?

ஆ...! அதே புத்தகங்கள். நான் பார்த்து வளர்ந்த கதைகள். இது போன்ற பழைய நாற்காலிகளில் அமர்ந்து எவ்வளவு காலமாயிற்று? சுகமாய் இருக்கிறது.

ஒவ்வொன்றாய் நினைத்துப் பார்க்கையில், கண்கள் வழி கசிந்து செல்லும் கண்ணீரால் நனைகின்றன புத்தகத்தின் பக்கங்கள். மற்றுமொரு முறை இதே போன்ற வாழ்வு கிடைக்குமா..?

எட்டிப் பார்க்கின்ற நிகழ்ச்சிகளை கைகளில் ஏந்திக் கொண்டு மீண்டும் வாழ முடியுமா..?

முடியாது. ஏதோ, அறிவியலின் புண்ணியத்தில் மற்றுமொரு முறை இங்கு வந்து செல்ல முடிகின்றது. மிக்க நன்றி சொல்கிறேன்.

அவள் விழித்துக் கொண்டாள் போல் இருக்கிறது. புத்தகத்தை வைத்து விட்டு கிளம்ப வேண்டியது தான்.

நேரமாகி விட்டது. எனக்கான பணிகள் காத்திருக்கின்றன. செல்ல வேண்டும்.

மீண்டும் முடிந்தால் வருவோம்.

க்ளைமேட் சும்மா சில்லுனு இருக்கு. வெளிய மழை பெய்ஞ்சுட்டு இருக்கு. மழை எனக்கு ரொம்ப பிடிக்கும். மழையில் நனைய, பக்கத்து விட்டு ரோஸி கூட விளையாட, அப்புறம் மழை நின்னப்புறம் மரக்கிளைகளைப் பிடிச்சு உலுக்கி விளையாடறது, ஈரமா இருக்கற புல் மேல எல்லாம் படுத்துக்கறது...

எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆனா அம்மா இதெல்லாம் வேண்டாம்னு சொல்லுவா. அம்மாவுக்கு என்னைப் பத்தி ரொம்ப கவலை. ஆமா என்னைப் பத்திக் கவலைப்பட யாரு இருக்கா, அம்மாவைத் தவிர? அப்பா என்னோட மூணாவது பர்த்டேயப்போ, அதோ அங்க தெரியுதில்ல, பச்சை கலர்ல மலை, அதுக்கு அந்தப் பக்கம் போய்ட்டாரு.

'அப்பா எப்பம்மா வருவாரு'னு நான் அப்போ அம்மாவை அடிக்கடி கேட்பேனாம். ' அப்பா மலைக்கு அந்தப் பக்கம், சாக்லேட் வாங்கிட்டு வரப் போயிருக்கார்'னு அம்மா சொல்வாங்க. அதையெல்லாம் நம்பிட்டு இருந்தேன்.

நீங்க போய் அந்த ஜன்னல் கண்ணாடியெல்லாம் கொஞ்சம் நல்லா தொடச்சு விடறீங்களா? எனக்கு சரியா மலை தெரியல. அப்பப்போ அப்பா ஞாபகம் வரும் போதெல்லாம், அந்த மலையைத் தான் பாத்துப்பேன்.

இன்னிக்கு என்னமோ நல்ல மழை பெய்யுது. இந்த ஜன்னல், கதவெல்லாம் இந்த மாதிரி ஆடி நான் பார்த்ததில்ல. இந்தக் கதவு ஆடறதைப் பார்த்தா, யாரு வேணா உள்ள வரலாம் போல.

அம்மா எங்க போயிருக்கானு தெரியல. இந்த மழையில எதுக்கு வெளிய போகணும்? ஒரு வேளை அவ வெளிய போகும் போது, மழை பெய்யாம இருந்திருக்கலாம்.

அப்பா போனதுக்கப்புறம், அம்மா ரொம்ப கஷ்டப்பட்டாங்க. இப்போ தான் கிறிஸ்துமஸ் கேக்கெல்லாம் செஞ்சு நெறய இடத்துக்குக் கொடுத்து கொஞ்சம் ஏர்ன் பண்றாங்க. எனக்கு கேக் ரொம்பப் பிடிக்கும். அம்மா செய்யும் போது எனக்கும் கொஞ்சம் குடுப்பாங்க. நல்லா இருக்கும், தெரியுமா?

கேக் செய்யும் போது ,அம்மா நெறைய கதை சொல்லுவாங்க. அப்ப மட்டுமில்ல, டைம் கிடைக்கும் போதெல்லாம் கதை சொல்லுவாங்க. அந்தக் கதையெல்லாம்... ஆங்..இந்த புக்கைப் படிச்சு தான் சொலுவாங்க. நான் இன்னும் ஸ்கூலுக்குப் போக ஆரம்பிக்காததுனால, அம்மாவே இந்தக் கதையெல்லம் படிச்சு சொல்லுவாங்க.

என்ன.. இந்த புக் நனைஞ்சிருக்கு..? ச்சீ.. மழை பெஞ்சாலே, இது வரைக்கும் நனைஞ்சிடுது. அம்மாகிட்ட சொல்லி, ஜன்னல் எல்லாம் சரி பண்ணச் சொல்லணும்.

அதுல ஒரு கதை எனக்கு ரொம்ப பிடிக்கும். 'டைம் ட்ராவல்'னு சொன்னாங்க. அதாவது நாமே ஃப்யூச்சருக்குப் போனதுக்கப்புறம்,மறுபடியும் நெனச்ச நேரத்துக்குப் போய்ட்டு வர முடியும். இன்னமும் அது வரலை. ஒருவேளை என்னோட ஃப்யூச்சர்ல வந்தா எங்க எல்லாம் போவனு அம்மா கேட்டாங்க.

நான் சொன்னேன், இப்ப இருக்கற சின்ன வயசுக்கு மறுபடியும் வந்து பார்ப்பேன்னு..!

படம் நன்றி : http://content.answers.com/main/content/wp/en/7/7e/Bedtime.jpg

அதனைப் போல் இருந்தோம்.. அதனாலே பிரிந்தோம்.


தனைப் போல் இருந்தோம்?
எதனாலே பிரிந்தோம்?

அலையும், கரையும் போல்,
கரையும், நுரையும் போல் இருந்தோம்.

கலையும் மேகம் போல்,
காற்றாலே பிரிந்தோம்.

வழியும், நிழலும் போல் இருந்தோம்.
இருளாலே பிரிந்தோம்.

கண்ணும், கனவும் போல் இருந்தோம்.
ஒரு விழிப்பாலே பிரிந்தோம்.

மலரும், பனியும் போல் இருந்தோம்.
கதிராலே பிரிந்தோம்.

மனதும், நினைவும் போல் இருந்தோம்.
நீ மறந்ததினால் பிரிந்தோம்.

உனையும், எனையும் போல் இருந்தோம்.
நீ உதறிப் போனதால் பிரிந்தோம்.