பொதுவாக திரைப்படங்கள் அதிகம் பார்ப்பதில்லை. திரை தவிர்க்கும் பழக்கம் பத்தாவது படிக்கத் துவங்கியதில் இருந்து ஆரம்பித்தது. அவ்வாண்டு பார்த்த ஒரே படம், 'முத்து', தலைவருக்காக!
சென்ற வருட அந்தியில் வருடாந்திர சர்வதேச திரைப்பட விழா திருவனந்தபுரத்தில் நடந்த போது, 12 உலகப் படங்கள் பார்த்தேன். அவற்றைப் பற்றி எழுதுகிறேன் பேர்வழி என்று ஆரம்பித்து, அந்தப் பணி அந்தரத்தில் தொங்குகின்றது.
கொஞ்ச நாட்களுக்கு முன் இரு தமிழ்ப்படங்கள் பார்த்தேன். அவற்றைப் பற்றி சில.
பார்த்தது ::
வெண்ணிலா கபடி குழு :
ஒட்டன்சத்திரம், பழனி ஏரியாப்பகுதியில் நடக்கும் கதை. கொஞ்சம் செ - 28 ஆரம்பம் இருந்தாலும் கதை வேறு ஒரு தளத்தில் நடக்கத் துவங்கி, ஓடி, சடாரென எதிர்பாராத முடிவில் நிறைகிறது. அந்த க்ளைமாக்ஸ் கொஞ்சம் நிரடினாலும், படைப்பாளியின் சுதந்திரத்தில் நாம் தலையிட முடியாது என்பதால், ஒட்டு மொத்தமாக 'சூப்பர்..!'
கிராமத்து திருவிழா உணர்வைக் கொண்டு வந்ததில் வெற்றி பெற்றிருக்கின்றன பல காட்சிகள். உறியடித் திருவிழாவும், சைக்கிள் பந்தயமும், கொஞ்சம் ஆணை பூசிய குரல் ஒழுகும் மைக் கம்பங்களும் அந்த பரவச உணர்வைத் தந்தன.
வசனம் அருமை. குறிப்பாக பெண் பிள்ளைகள் கைகளால் தண்ணீர் மொண்டு பாட்டிலை நிறைக்கும் காட்சியில், மைக் குரல் : 'நல்லா..பாத்து, பாத்து ஊத்துங்கம்மா.. நம்மூரு பொண்ணுங்கள்ளாம் நல்லா கத்துக்குங்க... குடிக்க தண்ணி கொண்டு வர ரொம்ப தொலை போகணும்'
உள்ளூரில் கபடி நடந்து கொண்டிருக்கும் போது, மைக் குரல் : 'யப்பா... கமிட்டில இருக்கற எளந்தாரிக யாராவது போய் அந்த கரகாட்ட கும்பலுக்கு மறைவா நில்லுங்கப்பா.. பொம்பளைங்க துணி மாத்தும் போது சுத்தி சுத்தி நிப்பாங்க..'
'லைன்ல நின்னு ரூபா நோட்டு குத்துங்கப்பா'
மதுரையில் விருந்து சாப்பிடும் இடத்தில், 'சாமி, சாதி ரெண்டும் வேண்டாத சுமை. அத தூக்கிப் போட்டா தான் வேகமா ஓட முடியும்' என்று ஸ்ருதிகாவின் அப்பா பேசும் போது ஓரத்தில் பெரியார் போட்டோ.
சரண்யா மோகன் நன்றாக நடந்துள்ளார். 'லேசா மனசு..' நன்று.
நண்பர்கள் குழுவில் எல்லோரையும் போல 'ப்ரோட்டா' சுப்ரமணியம் பிடித்துள்ளார். சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி. பையன் தான் ஹீரோவாம். நல்லது.
கிராமத்து நாஸ்டால்ஜியாவைக் கொஞ்சம் நினைத்துப் பார்க்க பார்க்கலாம். இருந்தாலும், அந்த க்ளைமாக்ஸ் தான்...!!!!
பூ :
கொஞ்சம் லேட் தான். இருந்தாலும் பூ புத்துணர்வுடன் இருந்தது. பார்த்த பின்பு முன்னதாகவே பார்த்திருக்கலாம் என்று தோன்ற வைத்தது.
மாமா பையன் தங்கராசு மேல் ஆதி நாளில் இருந்து மகா ப்ரியம் வைத்திருக்கும் மாரியம்மாளின் அன்பு வேறொருவருடனான அவளது மணத்திற்குப் பின்பும் மாறாமல் இருந்து, ஆனால் அவளது தியாகத்திற்கு கிடைத்த பலனைக் கண்டு அவள் அடையும் பெரும் அதிர்ச்சியைக் காட்டி அழுகுரலில் முடிகின்றது இந்த திரைச் சிறுகதை.
விருதுநகர், சிவகாசி பெண்ணாகவே மாறி விட்ட கண்ணூர்ப் பெண் பார்வதி மேனனுக்கு செமத்தியான வாழ்த்துக்கள். சில இடங்களில் கனகா போல் கேமிரா கோணம் வந்தாலும், அழகாகவே இருக்கிறார். சொல்லணுமா, கேரளா பொண்ணில்ல...! (குறிப்பு : அம்மணி இங்கே தான், திருவனந்தபுரத்தில், செயிண்ட்ஸ் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படிக்கிறார்களாம். ஒரு நாள் போய் பார்த்து விட்டு வந்திடலாம் என்று நினைத்திருக்கிறேன். பார்க்கலாம், அவர் அதிர்ஷ்டம் எப்படி என்று..!)
ஸ்ரீகாந்திற்கு ஒரு கங்கிராட்ஸ். இந்த மாதிரி ஹீரோயின் ஓரியண்டட் படத்திற்கு நடிக்க ஒப்புக் கொண்டதற்கே வணங்கலாம். மற்ற பேர்கள் இயல்பாக இருந்திருக்கிறார்கள். பேனாக்காரரும், மாரி அண்ணனும் மற்றும் யாவரும்!
அண்ணன் தங்கைக்கிடையேயான வசனங்கள் இயல்பாக இருந்தன. பூ மாதிரி ஒரு பொண்ணு அவனுக்காக பொறந்ததில் இருந்து காத்திருக்க, அவன் மருத்துவக் காரணங்களையும் குடும்ப நிலையையும் உத்தேசித்து மாரியை கைவிட, அவன் வாழ்க்கை நரகமாகி விடுவதில் மாரியின் தியாகமே பொருள் இழந்து போவது...!!! யாரைக் குற்றம் சொல்வது...!!
இன்னும் கொஞ்ச காலத்திற்கு மனதிற்குள் தங்கியிருக்கும்.
கொசுறு ::
என்ன ஓர் ஒற்றுமை..! 'வெ.க.குழு'வில் கதாநாயகன் பெயரும், 'பூ'வில் கதாநாயகி பெயரும் 'மாரி' தான். இதில் ஏதாவது செண்டிமெண்ட் இருக்கிறதா..?
அழகி தொடங்கி வரிசையாக சொல்ல மறந்த கதை, ஒன்பது ரூபாய் நோட்டு, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, காதல், கல்லூரி, பருத்தி வீரன், சுப்ரமணியபுரம், வெண்ணிலா கபடி குழு, பூ... என்று தொடர்ந்து வரும் படங்கள் நிழலின் அருமையைக் காட்டிக் காட்டித் திகட்டத் தொடங்கி இருக்கின்றன.
'எந்திரன்' அல்லது 'வேட்டைக்காரன்' வந்து தான் வெயிலையும் கொஞ்சம் காட்ட வேண்டும்.
'ஆவாரம்பூ' அசத்தல். உதடும் மனமும் முணுமுணுத்துக் கொண்டே இருக்கின்றன.
படித்தது ::
கடலும், கிழவனும் :
Ernst Hemingway எழுதிய என்ற The Old Man and The Sea நாவல் (என்று சொல்லலாமா? சற்று பெரிய சிறுகதை என்கிறார்கள் சிலர்.) சென்ற வாரம் படித்தேன்.
ஒரு பெரும் வயதான கிழவன் மீன் பிடிக்கச் சென்று வெற்றி பெற்று வரும் போது, திமிங்கிலங்கள் அவன் பிடித்த பெரும் மீனைக் கைப்பற்ற வருகின்றன. கிழவன் ஜெயித்தானா? அவ்வளவு தான் கதை.
மீனவனாக அவன் வாழ்க்கையின் இரண்டு மூன்று நாட்கள் மட்டுமே சொல்லப்படுகின்றன. அவனுக்கும் ஒரு சிறுவனுக்கும் இடையேயான ஒருவிதப் பாசமும் அங்கங்கே சொல்லப்படுகின்றது.
நூல் முழுதும் அவனுக்கு அவனே நம்பிக்கை கோர்த்துக் கொள்ளும் வசனங்களும், வர்ணனைகளும் நம்மையும் கிழவனோடு கடல் பயணம் செல்லச் செய்கின்றன.
ஹெமிங்வேக்கு நோபல் பரிசு வாங்கிக் கொடுத்திருக்கின்றது இந்நூல்.
கவிஞர் வைரமுத்துவின் 'தண்ணீர் தேசத்திற்கு' இந்நூல் ஓர் இன்ஸ்ப்ரேஷனாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
பள்ளி கொண்ட புரம் :
காலச்சுவடு பதிப்பகத்தின் க்ளாஸிக் வரிசையில் வெளியிடப்பட்டிருக்கின்றது.
நீல.பத்மனாபன் அவர்கள் எழுதிய இந்நூல் கேரள இலக்கிய வரலாற்றில் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றது. காரணம், விமர்சகர்கள் சொல்கிறார்கள், 'ராமன் பிள்ளை, வாரியர் போன்ற பெரும் மலையாள எழுத்தாளர்களால் கொண்டு வர முடியாமல், தமிழ் எழுத்தாளரான நீல.பத்மனாபன் அவர்களால் தான் திருவனந்தபுர நகரின் ஆத்மாவைப் பிடித்து எழுத முடிந்திருக்கின்றது' என்று!
அன்றோடு தான் பிறந்து ஐம்பது வருடங்கள் ஆனதைக் கொண்டாடவோ என்னவோ அதிகாலை மூன்றரை மணிக்கெல்லாம் குளித்துக் கிளம்பி பழவங்காடி பிள்ளையார் கோயிலில் அனந்தன் நாயர் வழிபட துவங்கும் கதை, அடுத்த நாள் இரவு தனக்கும் தன் குழந்தைகளான பிரபாகரன் , மாதவிக் குட்டிக்கும் இடையே நடக்கும் பேச்சுக்கள் வழியாக அவர்களது வாழ்வில் தன் கடமையின் , பொறுப்பின் நிலை என்ன என்று சிந்தித்துக் கொண்டே தூங்கப் போகும் அனந்தன் நாயரோடு முடிகின்றது கதை.
நனவோட்டம் (Stream of Consciousness) என்ற உத்தியில் பின்னப்பட்டிருக்கும் நாவல் தற்காலத்திற்கும், கடந்த காலத்திற்கும் தாவித் தாவிச் சென்று வந்து நமக்கு அவரது வாழ்வைச் சொல்கின்றது.
முக்கியமாக அவர் உடைந்து போக காரணமாக இருந்த நிகழ்ச்சியான, அவரது மனைவி கார்த்தியாயினி அவரை விட்டு விட்டு அவரது மேல் அதிகாரியான தம்பியுடன் சென்று விடுவது, அவரை ஆட்டி விட்டது. அதற்கான காரணங்கள், அதன் விளைவுகள், கதை நடக்கும் இந்த இரண்டு நாட்களில் தான் கேள்விப்படும் தன் பிள்ளைகளைப் பற்றிய சங்கதிகள்....! என்று விரிகின்ற நாவல் இது!
கார்த்தியாயினி ஓடிப் போனதன் காரணம் அனந்தன் நாயரின் சந்தேக குணம் என்று கடைசியில் புரிகின்றது. தம்பியுடன் அவளது பழக்கத்தை தான் உபயோகப்படுத்துவது போல், தனது சீனியர்களை விடத் தனக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும் போதெல்லாம் மறுப்பு சொல்வதற்கு தயங்கி, ஒரு வித சந்தோஷத்துடன் ஏற்றுக் கொண்டு, ஆனால் வீட்டிற்கு வந்தால், இதெல்லாம் கிடைக்க கார்த்தியாயினியின் அபரிமிதமான அழகு தான் காரணம் என்றும் விலையாக தம்பி என்ன கேட்பானோ என்ற ஆத்திரமும் வந்து அவளை அடிப்பதிலும், ஒரு சராசரி கோழைக் கணவனின் கேரக்டர் வலிமையாக எடுத்தாளப்பட்டிருக்கும் நாவல் இது!
இறுதியில் நாயர் பெண்ணான மாதவிக்குட்டி ஓர் ஈழவப் பையனைத் திருமணம் செய்து கொள்ளப் போவதிலும், பிரபாகரன் தன் தாயோடு வெகு காலம் தான் பிரிந்திருக்கும் மனைவியோடு, அவந்து அம்மா கார்த்தியாயினியோடு பேச்சு வார்த்தைத் தொடர்பிலும், அவளது புதுக் கணவன் வீட்டிற்கெல்லாம் சென்று வருவதைக் கேட்டும் தனது தியாகத்திற்கு அர்த்தம் இல்லையோ என்று குமைகிறார் அனந்தன் நாயர்.
கதையின் சிறப்பம்சம் திருவனத்தபுரம் நகரின் பெரும்பாலான பகுதிகள் கதையோடு பாவு நூல் போல் பின்னி வருகின்றன. இனி சாலை வீதிக்குப் போனால் என்னால அனந்தன் நாயர் வேலை செய்த கடை இருக்கிறதா என்று பார்க்கத் தோன்றும். கோயிலின் பத்மக் குளத்தில் குளிப்பவர்களில் அனந்தன் நாயரின் மருமகன் பாஸ்கரன் நாயர் இருக்கிறாரா என்று பார்க்கத் தோன்றும்.
நாவலைப் படிக்கப் படிக்கவே எனக்கு இன்னொரு நாவல் இணையாக நினைவில் வந்தது. வாத்தியாரின் 'ஏறத்தாழ சொர்க்கம்'!
அதிலும் கதாநயகனின் அற்புத அழகிப் பெண்ணை எப்போதும் சந்தேகம் கொண்டு கணவன் வதைப்பதும், அவளது சிநேகிதம் வேண்டி பள்ளி மாணவனில் இருந்து கலீக் வரை வழிவதும், கொஞ்சம் கொஞ்சமாக அவள் மாறி, ஒரு சினிமா நடிகையாகி விட, அவன் அவளுக்கே கூஜா தூக்கும் அடிப்பொடி ஆகின்றான்.
இரண்டு கதைகளிலும் தான் எத்தனை வேறுபாடு..!!
கொசுறு ::
ஹெமிங்வே மற்றும் நீல.பத்மனாபன் இரண்டு கதைகளிலும் ஒரு வயதானவனின் இரண்டு நாட்கள் தான் சொல்லப்படுகின்றன. ஒருவனுக்கு உடலோடு போராட்டம்; வாழ்வதற்கான வெறியோடு சுறாக்களோடு போர். மற்றொருவனுக்கு மனதோடு போராட்டம்; தன் கைப்பிடியை விட்டு தன் பிள்ளைகள் முதல் எல்லாம் மாறிப் போக, தலைமுறை இடைவெளியில் தவிக்கும் மனப் போர்.
படித்து முடித்தவுடன் நீல.பத்மனாபன் அவர்களுக்கு போன் செய்து சொன்னேன். 'உங்களது தலைமுறைகள் மற்றும் இலையுதிர்காலம் ஆகியன படிக்கத் தொடங்கி இன்னும் பாதியில் நிற்கின்றன. காரணம் முதல் நாவல் முழுக்க முழுக்க மலையாளம் போர்த்திக் கொண்ட கன்னியாகுமரி மாவட்ட - கேரள எல்லைத் தமிழில் எழுதப்பட்டிருப்பதால், தொடர்வது சிரமமாக இருக்கின்றது. இலையுதிர் காலமோ வயதானவர்கள் படும் பாட்டைப் பேசுகின்றது. கொஞ்சம் உலர்ந்த (dry) சப்ஜெக்ட். ஆனால் பள்ளி கொண்ட புரம் அருமையாகப் படிக்க முடிகின்றது என்றேன். ஏறக்குறைய ஒத்துக் கொண்டார் : 'ஆமாம். நீ சொல்வது போல் இன்னும் சிலரும் சொன்னார்கள். பள்ளி கொண்ட புரம் readability அதிகம் என்று'.