"ப்ஜ்யூஷோ ஷிர்ம்ஸ்க்யோ..!"
"ஹயாஜிஷ் ஸிண்ஹெனியோ.."
"என்ன ஒளற்ரே..?"
"நீ கேட்டதுக்கு பதில் சொன்னேன்.."
"நான் என்ன சொன்னேன்னு எனக்கே புரியல. உனக்கு எப்படி புரிஞ்சு, பதில் சொன்ன..?"
"எனக்கும் புரியல. நீ ஏதோ உளற்ரேன்னு புரிஞ்சிடுச்சு. அதான் நானும் கொஞ்சம் உளறினேன். ஆமா, என்ன ட்ரை பண்ணினே?"
"காதலில் குழறுவதை சிமுலேட் செய்து காட்டினேன்..!"
"ஓ..! யார் மீதான காதல்..?"
"எந்த மங்கையின் காதலைப் பெற யுகங்கள் தோறும் தவங்கிடந்து வந்தேனோ, எந்த பேரழகியின் சிறு புன்னகைக்காக பெரும் மாளிகையைத் தூக்கி எறிந்து நடந்தேனோ, எந்த மகாராணியின் விரலசைவிற்காக, பெரும் போர்களில் நெடுங்குருதி சிந்தினேனோ, அந்த பெண்ணின் மேல் கொண்ட இந்த ஜென்மக் காதல்...!"
"அபாரம்...! அருமை,கவிராயரே! யாரங்கே..? இந்தக் கவிராயருக்கு, ராயர் காபி க்ளப்பில் ஒன்றரை வாரத்திற்கு ஸ்ட்ராங்கான காபி, வடை சாப்பிட யாம் ஒப்புதல் அளிக்கிறோம். ஓலைப் பத்திரத்தில் எழுதிக் கொண்டு வாரும்.."
"தேங்க்ஸ்! அப்படியே இந்தக் கவிஞரின் கன்னத்தில் ஒன்று கொடுத்தால் தன்யனாவேன்..!"
"கொடுக்கத் தான் வேண்டும்! இப்போதே வேண்டுமா? இல்லை பின்னொரு பொழுதில் பெற்றுக் கொள்கிறீரா..?"
"மகராணியின் சித்தம், என் பித்தம்.. ச்சீ, என் பாக்கியம்..!"
"இப்போதே கொடுக்கலாம். ஆனால் தாடி முட்கள் குத்துமே?"
"கூர்மையான விளிம்புகளைக் கொண்ட இலைகளை நீட்டிக் கொண்டு பனை மரங்கள் இருக்கின்றன. வலிக்குமே என்று பயந்து கொண்டு அவ்விடத்தில் மழை பெய்யாது போய் விடுமோ? அன்று அன்றோ? அது போல் இந்தக் கூரிய முகக் காட்டிலும் உனது ஈர இதழ்கள் பதிய என்ன தயக்கம்..? போனில் என்ன தாடி முடி..?"
"ஃபோனில் இருந்தாலும் நீ என் பக்கத்தில் தானே இருப்பதா நெனச்சிட்டு இருக்கேன்.."
"ஆ... டச் பண்ணிட்டயேம்மா..."
"இப்ப உத தான் குடுக்கப் போறேன்..! நான் கையால் கொடுக்கப்படும் பரிசைச் சொன்னேன்.."
"அறையா..? அதை பொது இடத்தில் கொடுக்க வேண்டாம். தனி அறையில் கொடுத்தால் போதும். அதனால் தான் அதற்கு அறை என்று பெயர்..! எப்படி என் கண்டுபிடிப்பு..?"
"புத்திசாலி தான்! உங்க ஐ.க்யூ. எவ்ளோ..?"
"அதை எல்லாம் நான் மெஷர் பண்ணல..! வேண்ணா ஒரு ஆயிரம் வெச்சிக்கலாமா?"
"லூசு..! அது மாக்ஸிமமே 120 தான். போன சென்டன்சிலயே தெரிஞ்சிடுச்சு, உங்க அறிவோட அளவு என்னனு..!"
"உன்னைக் காதலிக்கிறேனே.. இதை வெச்சே என்னோட ஐ.க்யூ. ஸீரோனு நீ தெரிஞ்சிருக்கலாமே..!"
"ஹ்ம்.. அப்டியா..? அப்ப என்னோட ஐ.க்யூ. நெகட்டிவ்ல தான் போகணும்... அதே காரணத்துக்காக..."
"ஹி..ஹி.. நான் சும்மா சொன்னேன்."
"பட், நான் சொன்னது உண்மை.."
"மேடம் கோவிச்சுக்கிடீங்க போல.. வாபஸ். நான் வாபஸ் வாங்கிக்கறேன்..."
"இல்ல. வாபஸ் வாங்கினா மட்டும் போறாது. நாளைக்கு ஷேக்ஸ் அண் க்ரீம்ஸ்ல ரெண்டு வெனிலா, ஒரு எக் ஸாண்ட்விச் மேல சத்யம் பண்ணினாத் தான் ஒத்துக்குவேன். ஓ.கே.வா..?"
"ஓ.கே. சொல்லாட்டி விடவாப் போறே..?"
"ஓ.கே. பை. குட் நைட்.."
"என்ன அதுக்குள்ள குட் நைட்? தூங்கப் போறியா என்ன?"
"ஹலோ சார்! இப்ப டைம் என்ன தெரியும்ல..? நைட் ஒண்ணு ஆகுது.. தூங்கப் போறியானு கேள்வி..?"
"ஸோ வாட்? அழகன்ல எப்படி மம்முட்டியும், பானுப்ரியாவும் நைட் ஃபுல்லா பேசிட்டு இருப்பாங்க.. நாம அந்த மாதிரி இன்னிக்கு ட்ரை பண்னினா என்ன?"
"ஆமா.. அது மாறி மாறி ஷாட் வெச்சு, எத்தன நாள் எடுத்தாங்களோ.. யாருக்குத் தெரியும்?"
"ஓ.கே. பை. லஹகியூஃபூஸிவ்ச்யா..."
"பை. ஹயாரெஸிஷ்க் யோப்ரியாஜ்..."
Thursday, June 05, 2008
Tuesday, June 03, 2008
ஆடாது... அசங்காது...
வான முகிலின் மேனியில் வாரிதி பொழிந்தது போலும், பாயும் நதியில் தன் நிறம் கண்டு கருவங்கொண்ட நீல மேகப் பிம்பத்தில் வெண் நுரை ததும்பியது போலும், கரையில் கொழித்திருக்கும் நாணல் புதர்களைத் தலையாட்டிச் செல்லும் தென்றலின் குளுமை போலும், பாறைகளின் மேல் முழுக்கியும், தழுவியும், பக்கவாட்டில் சரிந்தும் சலசலத்துப் பாய்கின்ற நதி நீரோட்டம் போலும் சின்னக் கண்ணன் தவழ்கிறான்.
தாவித் தாவித் துள்ளியோடி, தம் சின்னக் கண்களை வெருண்டி, குச்சிப் பாதங்களால் குதித்துச் செல்லம் கொண்டாடிப் பறந்தோடும் புள்ளிமானின் குறும்புக் கண்களைக் கொண்டவனாயும், செம்பவளம், வெம்பவளம் இரண்டையும் தனித்தனியாய்க் கண்டிருந்த கண்களுக்கு செம்பவள இதழ்களின் உள்ளே வெம்பவள முத்தென பற்களைப் பதுக்கிப் புன்னகைத்து உயிர் மயக்கம் தருவானாயும், இருளின் வர்ணமா, இருள் இவனின் வர்ணமா என்று குழம்பித் தெளியும் வண்ணம் சுருள் குழல்கள் காற்றில் அசைந்தாடுவனாயும், எத்துணை புன்யம் செய்தனையப்பா, எங்கள் குழந்தைக் கண்ணன் கூந்தல் மீது குத்தி நின்றாய் நீ என்று கேட்கத்தக்க பச்சை மயிற்பீலி காற்றில் சிரித்தாட, கண்ணன் தவழ்ந்து வருகிறான்.
அழகன் இவன் அமுதன் குரல் இனியன், குழல் இசைப் பிழியன் என ஆசைத் ததும்பத் ததும்ப மொழிகள் பொழிகையில் ஆனந்தப் புன்னகைச் சிந்தி, மலர் இதழ்கள் போல் சிரம் கிளைத்த செவி மடல்களில் அணிந்த காதணிகளில் ஒளிப் பிரசவித்து, 'என்னை அள்ளிக் கொள்ள மாட்டாயா?' என்று பூங்கரங்களை நீட்டி விரல்களை அசைத்து காற்றைத் தடவித் தடவி மீட்டி, எங்கணும் இனிமை பொங்கிப் பிரவாகித்து ஓடம் குழறலாய் 'அம்மா... அம்மா...' என்றழைத்து தவழ்ந்து வருகிறான் கண்ணன்..!
ஆயர்பாடி ஆநிரைகள் கொடுத்து நிறைந்த பொன் பானைகளில் வெண்ணுரை பொங்க பால் வரும்; அந்த பாலைக் கடைகையில் கண்ணன் எண்ணங்களை நினைக்கையில் மனதில் இருந்து கிளர்ந்து எழும் அருள் காதல் போல் வெண்ணெய் திரண்டு வரும்; அந்த வெண்ணெய் உண்டு உண்டு, பாலமுதென மென்மை படர்ந்த கொழுத்த கன்னங்கள் அசைய அசைய, 'அம்மா... அம்மா...' என்றழைக்கிறான்.
மேகத்திற்குப் பொட்டிட்டது யாரோ? அவன் கண்களுக்கு மையிட்டது யாரோ? கருணை மழை பொழியப் பொழிய விழி நனைந்து மையெல்லாம் அடியார் துயர் போல் கரைந்து ஓடுகிறதே! இவனைக் காணாத கணமெல்லாம் முள்ளின் மேல் படுக்கை போலும், நெருப்பின் மேல் நடக்கை போலும் தகிக்கிறதை அறிந்து, தம் கருணைப் பார்வையை செலுத்துகிறான்; அதனை கணத்தின் நுண்ணிய பொழுதும் மறைக்கின்ற வகையில் மேலிமை, கீழிமையைக் கவ்வுகிறதே!
திருநெற்றியில் நாமம் இட்டதும், புருவங்களில் வர்ணப் பொட்டுகள் வைத்தும் இவனை அழகுபடுத்தியது யார்? அழகே உனக்கே அழகா? சிணுங்கியபடி நீ பசு போல் நடந்து வருகையில், உண்மைப் பசுக்கள் எல்லாம் உன்னழகைப் பருகிப் பருகி 'ம்மா... ம்மா...' எனக் குழற, நீயும் 'அம்மா... அம்மா...' என்றழைக்க என் கைகள் உன்னை அள்ளிக் கொள்ள நீள்வதென்ன?
இதழ்ச் சிரிப்பு அழகா, இளஞ் சிவப்பு இதழ் அழகா என்று குழம்பிப் போய் நிற்கின்ற போது நீ சிரிக்கின்றாய். ஆகா! மனமயக்கம் கொள்ள வைக்கின்ற மதுரச் சிரிப்படா உனது! ஆசை மோகம் கிளர்ந்தெழ உனை அணைத்துக் கொள்ள பாய்ந்து வருகையில் உனது பெருஞ்சிரிப்பு, குறுஞ்சிரிப்பாய் குவிகின்ற புள்ளியில் கிறங்கி நிற்கிறேனடா!
இவன் பூங்கழுத்தில் யாரது மணியாரங்களும், முத்து மாலைகளும், பொன்னாபரணங்களும், ஜொலிக்கும் வெள்ளி நகைகளும் சூட்டி அழகுபடுத்திப் பார்ப்பது? அந்த சூடிக் கொடுத்த சுடர்க்கொடியா? இல்லையே, அவள் அன்பெனும் நார் எடுத்து, அவளது கனவுகளை மலர்களாய்த் தொடுத்து, காதலெனும் தேரில் விடுத்து, தன்னையே என் கண்ணனுக்குக் கொடுப்பவள் ஆயிற்றே! இவன் ஆரம் தாங்குமா, இந்நகைகளின் கனத்தை? ஒற்றை விரலால் கோவர்த்தனகிரி தாங்கும் வல்லமை உள்ளவனானாலும் தாயுள்ளம் தவிக்கின்றதே! என் மனதின் தவிப்புணர்ந்தும், தலையசைத்து தன்னகை கழட்டாமல் கூட புன்னகையும் அணிந்து கொண்டு அலைக்கழிக்கின்றானே, என் செய்வேன்...?
இரு பிஞ்சுக் கைகளில், அஞ்சு விரல்களில் மோதிரம் வேண்டாமடா உனக்கு! குழல் ஒன்று போதுமே! எழில் கொஞ்சும் ஆபரணங்கள் தத்தம் வாழ்பயனைப் பெற உன் மேனியில் விளையாடுகின்றன. இடுப்பில் ஒட்டியாணமும், பாதங்களில் கிலுகிலுக்கும் ஒலிக் கொலுசும், வளைகளும், மரகதக் கற்களும், பால் ஒளியன்ன வெள்ளிக் கழல்களும் ஜொலிக்கின்ற சின்னக் கண்ணனை அள்ளி அணைக்கையில் மகாகவி போல் 'உள்ளம் தான் கள்வெறி கொள்ளுதடா'!
மதன மோகன ஸ்வரூபா, மதி மயக்கக் கொஞ்சும் குறுஞ்சிரிப்பழகா, இணை சொல்லவியலா இளங்கன்றென துள்ளி வரும் பிள்ளாய், துணை நீயென என் மனம் சொல்ல உன்னைத் தூக்கி அணைக்கையில் ஜென்மம் அர்த்தம் கொள்ள, ஒரு குழந்தையென குதூகலிக்கும் குமரக் குறும்பா,
நீ ஆடாது, அசங்காது வா...!
|
Subscribe to:
Posts (Atom)