Wednesday, December 20, 2017

விஷ்ணுபுரம் விருது விழா - 2017 - ஒரு பயணம்.


ருக்குச் செல்லாமல் நேரடியாகவே கோவைக்குச் செல்லும் திட்டம் என்பதால், தாமதமாகவே 10:30 மணி அளவில் தான் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தேன். பெங்களூரு கொஞ்சம் கொஞ்சமாகக் குளிர் கொள்ளத் தொடங்கியிருந்தது. மேம்பாலத்தடி சிக்னலில் இரவு வாகனங்கள் சிவப்புக்குக் கொஞ்சமாய்த் தான் தேங்கி நின்றன. சில்க் போர்ட் செல்லும் பேருந்து இனிமேல் வருமா என்று எண்ணிக் கொண்டிருக்கையில், ஆம்னி வேன் வந்து ‘மாரத்தஹள்ளி..?’ என்றது.  இங்கிருந்து காத்திருப்பதைக் காட்டிலும் ஹள்ளி சென்றால், பேருந்தோ ஐ.டி.பி.எல்.லிலிருந்து வரும் வேன்களோ நிறைய என்பதால், ஏறிக் கொண்டேன். டின் பாக்டரிக்கு இறங்கிக் கொள்வதாகச் சொன்னவர்கள் இடப்புற ஜன்னல் அமர்ந்து, என்னை அப்புறம் ஒதுக்கினர். கழுத்துக்குப் பின்புறம் கன்னட ஹாடுகள். சிமெண்ட் சாலைகள் மற்றும் புது மேம்பாலப் பணிகள் (வரும் வருடம் தேர்தல்!) காரணமாக ஊர்ந்து நகர்ந்த வண்டி, கிருஷ்ணராஜபுரம் தொடர்வண்டி நிலையம் கடந்து வேகமெடுத்தது. ஓட்டுனருடன் கன்னடத்திலேயே கதைத்துக் கொண்டு வந்ததில் இருவருக்கும் சிறு திருப்தி. மாரத்தஹள்ளியில் இறங்கிக் கொண்டு, வேறொரு வேன் பிடித்து சில்க் போர்ட் அடைந்தேன். ஏனோ கூட்டம் வழக்கத்தை விடக் குறைவு தான். தனியார் சொகுசுப் பேருந்தில் கோவைக்குக் கூவிக்கூடி அழைத்தனர். தவிர்த்துப் பின் நடந்து மேலே சென்றால், அதிசயத்திலும் அதிசயமாக சேலம் பேருந்துகள் நான்கு தொடர்ந்து வந்தன, பாதி மட்டுமே நிரம்பியனவாக. ஒன்றைத் தெரிவு செய்து வசதியாக அமர்ந்து கொண்ட பின் தெரிந்தது, அது சுற்றிச் செல்லும் வண்டி என்று.

எலெக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தை விட்டு, கீழேயே சென்று, அத்தனை ஊர்ப் பேருந்து நிலையங்களிலும் இளைப்பாறி, சுங்கச் சாவடிகளைக் கடந்தவுடனே ஓரமாய் நிறுத்தி, காணாமல் போய், வெகு நேரம் கழித்து வந்து சேலம் மத்தியப் பேருந்து நிலையத்தை அடைகையில் விடிந்தும் விடியாமலுமான 04:30 எட்டியிருந்தது. கோவை செல்லும் இடை நில்லாப் பேருந்தை எட்டிப் பார்த்தால் நிரம்பியிருந்தது. வேறு வழியின்றி தடமெங்கும் கால் பதிக்கும் மற்றொன்றில் அடைக்கலம் புகுந்தேன். சேலத்திலிருந்து கிளம்புகையில் 04:45. சீட்டெடுத்து விட்டு, செவிகளை மீண்டும் புதிதாய் வாங்கிய சீனா ஹெட்போனில் புதைந்தேன்.

ஊர் வாசமோ அன்றி நீர் வாசமோ தெரியவில்லை, காவிரிப் பாலத்தில் கண் விழித்தேன். கோயில் மின் ஒளிப் பிம்பங்கள் நிறைந்த நீரலைகளில் படிந்தலைந்தன. மீண்டும் உறக்கம். இறுதி வரிசையில் அமர்ந்ததால் தொடர்ந்து தழுவிய காலடிக்குளிர், குறைந்து குறைந்து செல்கையில் காலைப் பொன்னொளி ஜன்னல் அழுக்குகளை மின்ன வைத்தது. கருமத்தம்பட்டி கடந்து செல்கையில், கண்களில் தூக்கம் அப்பிய களைப்போடு காண்கையில் பேருந்துள்ளே புது மலர்களென நின்றிருந்த இளையோரைக் கண்ணுற்று மகிழ்வு எய்தினேன். வெளியே ஊர்கள் மற்றொரு நாளுக்குப் புலர்ந்திருந்தன.

அசிங்கமாக முழுக்க முழுக்கப் பச்சை நிறத்தால் பூசப்பட்டிருந்த மேம்பாலம் கண்களைக் கூச காந்திபுரம் வந்தது. இங்கே, பெங்களூருவில் மகாத்மா காந்தி சாலை மெட்ரோ பாலத்தூண்களில் வெர்டிகல் கார்டனிங் எனும் முறைப்படி பசுஞ்செடிகளைப் படர விட்டிருக்கிறார்கள். இயற்கைப் பசுமை. கடந்த சில ஆண்டுகளாக கோவை இழந்து வரும் பல்லாயிரம் மரங்களின் ஆத்மாக்கள் இப்பாலத்தில் அடை பிடித்து கிடக்கின்றன போலும்.

மத்திய நிலையத்திலிருந்து பொங்கல், இட்லிக்கென அழைக்கும் டிபன் கடைகளையும், சாலை விளிம்புகளில் வணிகம் விரித்திருக்கும் தள்ளுவண்டிகளையும் கடந்து சென்று சிறு எல்.ஈ.டி. குமிழ்களால் மருந்து விற்கும் குறுவீதி நுழைந்து பார்ப்பதற்கு எளிய விடுதி ஒன்றை அடைந்தால், ஆளில்லை. நாற்காலியை அடைத்து குன்றிய குஜராத்தைக் கைவிட்டு ஆர்.கே.நகர் என்று அலறிக் கொண்டிருந்த நாளிதழ்களைப் புரட்டுகையில், வந்தார். நூறு ரூபாய்க்குப் பேரம் படிந்தது. முதல் மாடியில் ஒற்றை அறை. தொங்கலைத் தாங்க இயலாதவாறு குட்டி மின்விசிறி; உயரமும் போதாது. குளித்துக் கிளம்பி சூடாய்ப் பொங்கலும், இரு வடைகளும் கொண்ட பின் ஏழாம் எண் நகரப் பேருந்தில் ‘பாதமலர் புட்வேர்’ போன்ற அழகிய கடைகள் அமைந்த சாலை வழி ஆர்.எஸ்.புரம் வந்தடைந்தேன்.

நவீன கோவையை வடிவமைத்த சி.எஸ்.இரத்தினசபாபதி முதலியார் என்பவர் பெயரால் அமைந்த (விக்கி!) ஆர்.எஸ்.புரத்தில், ராஜஸ்தான் விற்பனைப் பொருட்கள் சந்தை விரித்திருந்த கூடாரத்தருகில் ராஜஸ்தான் ஸங் என்ற சங்கத்தினரால் அமைக்கப்பட்டிருந்த கட்டிடத்தில் தான் ‘இவ்வருட விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா’ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தாமதமாக வந்து விட்டிருப்பதால், மின் தூக்கி வழி இரண்டாம் தளத்தை அடைந்து ஒரு வரிசையில் அமர்கையில், மேடையில் தூயனும் அசோக்குமாரும் பதிலளித்துக் கொண்டிருந்தனர். கொஞ்சமும் அறிமுகம் இல்லாமலிருந்ததால் செவி வழி உள்வாங்கி மட்டும் கொண்டிருந்தேன்.

தேநீர் இடைவேளையில் ஈரோடு பாரதி பதிப்பகத்தாருடன் ஓர் எளிய அறிமுகம் செய்து கொண்டேன். (”கொங்கு வரலாறு கிடைக்குமா சார்..?” “கண்டிப்பா..”) பின்பு அவர் பெட்டி கட்டிக் கொண்டு வந்திருந்த புது நூல்களை கடை பரப்பி, கிடைத்த மேடைகள் மேல் அடுக்கடுக்காக அடுக்கி ஒரு மாதிரி அத்தனையையும் நிரப்பி விட்டு, தேநீர் எடுத்துக் கொண்டு உள் நுழைய, ஆர்.அபிலாஷின் அமர்வு பாதி தாண்டியிருந்தது. குளிர்மையும் காற்றும் உலவும் ஓர் இனிய புள்ளியில் அமர்ந்து கொண்டு அவர் கூறியவற்றைக் கேட்டேன். அதன்பின் சுரேஷ்பிரதீப் மற்றும் விஷால்ராஜாவின் அமர்வு.

எதையும் உண்பவன், திருப்பிச்செய்ய வேண்டியன இரண்டு என்று என் தலைவன் பீமன் உணர்ந்திருப்பதை வெண்முரசுவில் ஜெ சொல்கிறார். சமைத்தல் மற்றும் பரிமாறுதல். இங்கே சமைக்கும் பணி இல்லை என்பதால், பரிமாறும் பணியில் இணைந்து கொண்டேன். கிடைத்த வாய்ப்புகளில் வாளிகளில் உணவள்ளிப் பரிமாறும் போது, கிடைக்கும் திருப்தி வேறெதிலும் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை அறிய முடிந்தது. இரு நாட்களும் பந்தி பரிமாறலில் பங்கெடுத்துக் கொண்டேன். ‘வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வந்த மனிதருக்கெல்லாம்’ என்று விருந்தோம்பிய விஷ்ணுபுரத்தினருக்கு பெருவயிறார்ந்த நன்றிகள்.

சனி மதியம் உணவு இடைவேளைக்குப் பின் போகனின் அரங்கு. உண்ட களைப்பிலிருந்து மீட்டுக் கொண்டு வந்த கலகலப்பான அரங்கு. தொடர்ந்து கவிஞர் வெய்யிலின் அரங்கு. கவிதை என்பதுமே களைப்பு பறந்து, அரங்கமே உற்சாக வெறியடைந்தது. நிறைய கேள்விகள் இதில் தான். எல்லா பந்துகளையும் திசைகளுக்குப் பறக்க விட்டார் வெய்யில்.  பின்பு மலேசிய வருகையாளர்களுடனான அரங்கு. மென்மையும் அமைதியுமாகப் பேசிய ஷண்முகசிவா, எப்போதும் புன்னகையுடனே இருந்த சுவாமி, இளமைச் சுடர் எரிந்த நவீன், கம்மென்று அமர்ந்திருப்பினும் சமயம் கிடைக்கையில் தெளிவாகப் பேசிய விஜயலக்‌ஷ்மி மற்றும் தயாஜி என ஐவர். இங்கே பத்திரமாக இருந்து கொண்டு, அயல் நிலத்தை எட்டிப் பார்த்து அங்கே நிகழ்வதை அறிந்து கொள்ள உதவினர்.

இரவுணவுக்குப் பின் நடந்த வினாடி-வினா நிகழ்வு எவ்வளவு நிரட்சரகுட்சியாக இருக்கிறேன் என்று தெரியவந்தது. நல்லவேளை, அனந்தபுரத்தில் குப்பை கொட்டிய சிலகாலத்தில் கிடைத்த அறிமுகத்தால், நீல.பத்மனாபன் அவர்கள் குறித்த கேள்விக்கு ஒரு பதில் அளித்து பறந்து கொண்டிருந்த மானத்தைக் கொஞ்சமாவது கீழிழுக்க முடிந்தது. அமைந்த அணியில் அனைவருக்கும் நூல் பரிசு கிடைக்க, பதில்களைப் பகிர்ந்து கொண்டதில் ஒரு நிறைவு.

இரு அறைத்துணைவர்களுடன் சேட் செமயாகக் கட்டி வைத்திருந்த சொகுசான அறையில் பொருட்களைப் பத்திரப்படுத்தி விட்டு, காலாற சிறு நடை சென்றோம். குளிர் குறைந்த கோவையைப் புலம்பி விட்டு, வெண்முரசுவைப் பற்றிக் கொஞ்சம், படித்த நூல்களைப் பற்றிச் சிறிது பேசி விட்டு, மூன்று நாற்சந்திமுனைகளைத் தாண்டி, ‘இப்போதைக்கு மூடுவதாயில்லை’ என்று இயங்கிக் கொண்டிருந்த கடையில் முதலிரவுக்குத் தயாராவது போல் பாதாம் பாலும், செவ்வாழையும் உண்டு விட்டு, விடுதிக்குத் திரும்பினோம். ஒருவர் விரைவில் சென்று உறங்கிவிட, ஜெ நடத்திய சபைக்குள் ஐக்கியமானேன். பல மொழிகளில் பல்லாண்டுகளாக மெளனமாக இருந்த கவியோகியைப் பற்றியும் மேலும் பல விஷயங்களையும் தெரிந்து கொண்டு, இரண்டு மணிக்கருகே சென்று படுத்துக் கொண்டேன்.

புது இடம்; மனமெங்கும் சொல்வெளி; தயங்கித் தயங்கித் தான் வந்த தூக்கத்தில் மூழ்குகையில் கனவில் இரு பாதமலர்கள்.

ஞாயிறு புலர்ந்தது. காலைநடையைத் தவற விட்டு, தேநீர்க் குடுவையருகே நிகழ்ந்து கொண்டிருந்த சிரிப்பான குறுங்கூட்டத்தை மேலிருந்து எட்டிப்பார்த்துக் கொண்டு விட்டு தயாராகி, மீண்டும் அரங்கிற்கே வந்தேன். காலையொளி கழுவிக் கொண்டிருந்த கருஞ்சாலையைப் பார்த்துக் கொண்டிருந்த மலேசியருடன் ஓர் அரை மணிநேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, சில கருத்துச் சிதறல்களைச் சிதற விட்டு, முதல் அரங்கிற்கு வந்தேன். பி.ஏ.கிருஷ்ணன் அவர்களுடனான அமர்வு.  சுவாரஸ்யமாகவும் ஆர்வத்துடனும் சென்றது. மருத்துவம் குறித்த திசைக்குச் செல்லும் முன் ஜெ இலக்கியத்திற்கு இழுத்துக் கொண்டு வந்தார். பின், பரிசு வாங்கப்போகும் எழுத்தாளர் சீ.முத்துசாமி அவர்கள். பெரும் அனுபவங்களையும் வாழ்வையும் மீண்டும் நாங்களும் வாழ்ந்தறிந்தோம். இறுதி அமர்வாக, மேகாலயா எழுத்தாளர் ஜெனிஸ் பரியத் அவர்களுடனான ஓர் இனிய அமர்வு. வழுக்கிக் கொண்டு சென்ற ஆங்கிலம், உற்சாகமான எழுத்தாளர். மற்றுமொரு உற்சாகமாக மணி சாருடைய வியத்தலும், வாழ்த்தும்.

கொஞ்சம் பெரிய இடைவெளிக்குப் பின், பரிசு வழங்கும் நிகழ்வு. அறையை காலி செய்து விட்டு, ஐந்தரைக்கு அரங்கிற்கு வந்தேன். செல்வேந்திரனின் ஆற்றொழுக்காகத் தொகுத்து வழங்கினார். மகிழ்மலர் இனிய குரலில் கிராதநாயகனைப் பாடினார். நகலிசைக் கலைஞர் ஜான்சுந்தர் தன் குழுவினருடன் வந்து சங்கை முழக்கினார். அவர் குரலே அவ்வளவு கணீரென இருக்கையில், சங்கொலி சற்று சுதி குறைவாகத் தான் இருந்தது. சீ. முத்துசாமி அவர்களுக்கு அரங்கிலிருந்த ஜெ, ’இளைய தளபதி’ நவீன், பி.ஏ.கிருஷ்ணன், ஜெனிஸ், ராஜகோபாலன் சூழ 2017-ம் ஆண்டுக்கான விஷ்ணுபுர விருது வழங்கப்பட்டது. அனைவரும் பேசிப்பேசி முடிக்க, முத்துசாமி அவர்கள் ஒரு நீண்ட ஏற்புரை நிகழ்த்தினார். தன் நீண்ட வாழ்வின் ஒளிரும் பொன் மணிகளில் ஒன்றாக இந்நிகழ்வை அவர் என்றும் நினைவில் வைத்திருப்பார் என்பதை அவருடைய உணர்ச்சி வயப்பட்ட உரை சொன்னது. பேசியது முடிந்ததும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. மீண்டும் ஓர் இரவு உணவு. முதலிலேயே உண்டு விட்டு, பொறுப்பாளரான விஜய்சூரியனிடம் மட்டும் விடைபெற்றேன்.

அரங்கை விட்டு வெளிவந்து, நிறுத்தத்தில் ஏழைப் பிடித்து, காந்திபுரம் மைய நிலையத்தில் சேலம் விரைவுப்பேருந்தில் ஓரிடத்தில் நிலைத்து மீண்டும் எனக்குத் திரும்பினேன்.

நன்றி ஜெ மற்றும் விஷ்ணுபுர இலக்கிய வட்டத்தினருக்கு.

நொறுக்கு:

* ஜெ ‘வளர்ந்து வரும் எழுத்தாளர்’ என்று சொல்லி பி.ஏ.கிருஷ்ணன் அவர்களிடம் சொன்னது, ஓர் ஜில்கட்டி கொடுத்தது.

* பாரதிமணி சாரிடம் நினைவுபடுத்திக் கொண்டதும், மீண்டும் மீண்டும் வீட்டுக்கு வரச் சொல்லி அழைப்பு விடுத்தார். பெருமகிழ்வு.

* நாஞ்சிலாரிடம் சிறிது நேரம் பேசியது ஒரு மனநிறைவு.

* முத்துசாமி அவர்களின் அமர்வில், சாரு போல் இருப்பதையும், 100 டிகிரி எழுதச் சொல்லி மணி சார் கேட்டதும் அதற்கு அவர் அளித்த பதிலும் ‘வயசானாலும் உம்ம குறும்பு போகலியே’ என்று தோன்றியது.

* அரங்கிலேயே இளைஞரான மணிசார் தான் ‘நீங்கள் ஓர் அழகிய பொம்மை’ போல் இருக்கிறீர்கள் என்று மற்றவர் சொல்ல மறந்த புகழுரையை ஜெனிஸ் பரியத்திடம் சொன்னார். ரசிகமணி.

* அமர்வுகள் அலைபாய்கையிலோ உறைந்து நின்று விட்ட போதுகளிலோ ஜெ தன் கேள்விகளாலும் கமெண்டுகளாலும் முன்னகர்த்திக் கொண்டிருந்தார்.

* வரிசையில் வண்ணதாசன், நாஞ்சில், கண்மணி, கோவை ஞானி என்று பலபேரை மொத்தமாகக் காண்பது கொடுத்த கிளர்வு, தனி.