Showing posts with label கொங்கு நாடு.. Show all posts
Showing posts with label கொங்கு நாடு.. Show all posts

Wednesday, December 29, 2010

ஈரோடு - சங்கமம்-2010.

மாநகராட்சிப் பேருந்து நிலையத்தை அடைந்த போது மதியம் வந்து கொண்டிருந்தது. ஞாயிற்றுக்கே உரிய கொஞ்சக் கூட்டம். மஞ்சள் மணக்கும் இலவசக் கழிப்பிடங்கள். தள்ளுவண்டி நீர்மோர்ப் பானைகள். தினத்தந்திஅலுவலகம் . டீசல் இன் பார். காணாமல் போன சைக்கிள் ஸ்டாண்ட். வர்ண மினி பஸ்கள். வரிசையான பழக்கடைகள். தொங்கும் பத்திரிக்கைகள். காரைத் தளங்கள். ஹாரன் சத்தங்கள். மூட்டைகள். மனிதர்கள். நான்கைந்து மரங்கள். மெல்லிய மேகங்கள். வெயில்.

பெருந்துறை செல்லும் பேருந்து ஒன்று சினை பஸாய் நகர யோசித்துக் கொண்டிருந்த இடைவெளியில் நாங்கள் ஏறிக் கொண்டோம். நானும் அவளும். சத்தியமூர்த்தி(?)க்காகப் பள்ளிச் சீருடைகளில் பையன்களும், பெண்களும். "பரிமளம் மஹால் ரெண்டு. ஸ்டாப்பிங் வந்தா சொல்லுங்க...!" "ம்.."

சவிதாவில் லெஃப்ட் கட் அடித்து பார்க் வரை சென்று தொட்டும் தொடாமல் U எடுத்து ஜி.ஹெச்.சில் நிற்கும் போது அன்னை சோனியா காந்தி பிறந்த நாள் விழா பேனர்களில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும், வாசனும் 'நண்பேன்டா...' போஸ் கொடுத்துக் கொண்டிருந்தது ஜூ.வி. வரை ரிப்போர்ட்.

ஆட்சியர் கட்டிடம் தாண்டி ஓர மரங்களையும் பச்சை வயல்களையும் கடந்து ஸ்டாப்பிங்கில் நின்றது. இறங்கிச் சாலையைக் கடந்து ஆட்டோ நிறுத்தத்தில் "டைஸ் அண்ட் கெமிக்கல்ஸ் அசோஷியேஷன் பில்டிங் எங்க இருக்குதுங்க..?" "ரொம்ப தூரமாச்சுங்களே..! ஒரு கிலோமீட்டர் வரும். (கைகாட்டி) இப்படியே போனீங்கனா லெஃப்ட்ல ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம் வரும். ஒட்டி சந்துல உள்ள போயி மூணாவது கட்டுங்க.."

வெயில் தாரைகள் ஒழுகிக் கொண்டிருந்த வெளியில் நனைந்து கொண்டே அந்த மூன்றாவது கட்டிற்குள் செல்லும் முன்பே கட்டிடம் தெரிந்தது. முந்தைய ஜெயமோகன் நிக்ழவொன்றும் இங்கே தான் நடந்திருந்தது. அப்போது திறந்திருந்த கார் பார்க்கிங் சாத்தப்ப்ட்டிருக்க, சங்கக் கட்டிடத்தில் நுழையும்போது கைகளில் பழமைபேசியின் புத்தகத்தையும் ஒரு நோட்பேட் பேனாவையும் புன்னகையுடன் கொடுத்தனர் இரு சிறுமிகள். அழகாய்.

நாங்கள் அடைந்த போதே பதினொன்று தொட்டிருந்தது. முதல் பேச்சே என்னுடையது என்று தயாராய் வந்திருந்தால், காலி நாற்காலிகள் காற்றாடியின் கீழ் நான்கு கால்களாட்டிக் கொண்டிருந்தன. தாமோதர் சந்துரு வரவேற்றார். மதுரைக் கார்த்திகைப் பாண்டியன், ஸ்ரீதர் கை கொடுத்தனர். அரூரன் வணக்கம் சொன்னார். கதிர் அங்குமிங்கும் ஓய்வின்றி இயங்கிக் கொண்டே இருக்க, ஒரு சலாம் கொடுத்து விட்டுக் காற்று வரும் வழியில் அமர்ந்து கொண்டோம்.

அவள் பழமைபேசி புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையில் நானும் ஸ்ரீதரும் வெண்பாக்கள் பற்றிப் பேசினோம். கா.பாண்டியனும் க.கொண்டார். ஒவ்வொருவராக வரத் தொடங்கினர்.

நிகழ்ச்சி நிரலின் படி துவங்கி, எழுத்தாளர் பெருமாள் முருகன் பற்றி சிறு அறிமுகம் கொடுத்து விட்டு அமர்ந்து கொண்டேன். 'சிறுகதைகளை உருவாக்குவோம்' பற்றி நிறைய சொன்னார்.



அம்மாவும் வந்து எங்களோடு சேர்ந்து கொண்டார்.

கோவை பாமரன் தான் எவ்வாறு எழுத்துக்கு வந்தேன் என்று இயம்பிக் கொண்டிருக்க, 'உலக மொக்கையர்களே ஒன்று சேருங்கள்' என்ற அவரது தலைப்பிற்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்று ஆய்ந்து கொண்டிருந்தேன்.

'தமிழ் ஸ்டுடியோ' அருண் இளைஞராக இருந்தார். மேடைத் தமிழை மேலேற்றாமல் இயல்பாகப் பேசினார். அவரது நிறுவனத்தில் குறும்படம் எடுக்க விரும்புபவர்களுக்காகச் செய்து தரும் வசதிகளைப் பற்றிச் சொல்லச் சொல்ல, நாமும் ஒரு குறு எடுத்தால் என்ன என்று கைகள் கொஞ்ச நேரம் பரபரத்தன.

நிரலில் கொஞ்சம் தடம் மாறி 'உலகத்திரைப்படங்கள்' பற்றி சிதம்பரம்.கி. பேசினார். அதற்குள் உணவு வேளை வந்து விட, கவனம் எல்லாம் கவளம் பக்கம் சென்று விட்டதால், இவர் என்ன சொன்னார் என்பதே மூளை ட்ராக்குகளில் சென்று சேரவில்லை. பசி வந்திட படமும் பறந்து போம்!

உணவுக்குப் பின் கொஞ்சம் கூட்டம் கரைந்து போய் விடக்கூடும் என்பதை உஷாராக உணர்ந்து கொண்டு எல்லோரையும் தற்போதே அறிமுகம் செய்து கொள்ளச் சொன்னார் கதிர். ஏதோ பரிசு வாங்கும் பள்ளியர்கள் போல் ஒவ்வொருவராக வந்து மைக்கைக் கைப்பற்றித் தம்மைப் பற்றி மூன்றே வரிகள் சொல்லி அகன்றனர். வழக்கம் போல் ஒரு கூட்டம் பின்புறம் அமர்ந்து கொண்டு சத்தமாகப் பேசி இடைஞ்சல் கொடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்குப் பின் நவீனத்துவமாகப் பிரியாணியை இனிமாவில் கொடுத்திருக்க வேண்டும்.

மேலே முதல் மாடியில் தனித்தனியாகச் சைவம் மற்றும் அசைவம் டேபிள்கள் இருந்தன. அசைவத்தில் அமர்ந்து வகையாக உண்டபின் 'இனிது இனிது மானிடராய்ப் பிறத்தல் இனிது; அதனினும் இனிது ஈரோட்டுப் ப்ளாக்கராய்ப் பிறத்தல்' என்று கவி பாடிக் கொண்டே கைகழுவினேன். நானும் பரிமாறுகிறேன் பேர்வழி என்று சொல்லி ரசக் குண்டாவை எடுத்தேன்; வேறு கைகளில் தரவேயில்லையே..! இலை வழிய, சோற்றுக் குழியில் ஊற்றி, கைகளில் நனைத்து... ஒரே ரசமாய் இருந்தது.

(எஸ்.வி.சேகர் : சின்னம்மாவுக்கு ரசம் வைக்கக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.

பெரிய மாப்பிள்ளை : என்ன ரசம்?

எஸ்.வி.சேகர் : சிருங்கார ரசம்..!

- சின்ன மாப்ளே..பெரிய மாப்ளே... அல்லது ஹனிமூன் இன் ஹைதராபாத்)

களைப்பாகப் போயிற்று என்று எனக்குள் சொல்லிக்கொண்டு மற்றுமொரு பாயசம் டம்ளரை எடுத்துக் கொண்டு கீழே அரங்கத்திற்கு விரைய, கல்யாண கோஷ்டிகள் போல் ஆங்காங்கே குழுமியிருந்தனர். வெற்றிலை பாக்குத் தட்டும் மொய் நோட்டும் தான் குறை.

கொஞ்ச நேரம் கழித்து கிளம்பிய ஒரு குழு எல்லா வாசல்களையும் ஷட்டர் போட்டு அடைத்தது; ஜன்னல்களில் ஸ்க்ரீன் முடிச்சுகள் போட்டு வெளிச்ச மறைப்பு ஏற்பட்டதும் எனக்கு ஜனகராஜ் - ப்ரொஜக்டர் - நீலம் நினைவுக்கு வந்தது. நல்ல ( :( )வேளை அப்படியொன்றும் இல்லையாம். 'நிழற்படங்களில் நேர்த்தி' பற்றி ஓர் அமர்வு.

கருவாயன் என்ற சுரேஷ்பாபு தன் கன்னி மேடை நிகழ்வை நிகழ்த்தினார். தமிழ் வலைப்பதிவுகளில் உருப்படியான சிலவற்றுள் ஒன்றான பி.ஐ.டி. பற்றியும் கேமிராவில் அபெர்ச்சர், ஜூம், ஃபோகஸ், லைட்டிங் ஆகியவற்றின் பயன்பாடு பற்றி ஒரே காட்சியின் வேறுபட்ட நிழற்படங்களைக் காட்டி விளக்கினார். கறிச் சோற்றுத் தூக்கத்தை அண்டவே விடாத ஓர் அருமையான நிகழ்வாக அது இருந்தது.



(சப்ஜெக்டாக என்னை ஃபோகஸ் செய்து பேக் க்ரெண்டில் கதிர் மற்றும் பரிசல்காரனை ஜூம் அவுட் செய்து லைட்டிங்கை டீஃபால்ட்டில் வைத்து... Thanks Suresh, Now I can use some technical terms.)

சாரு நிகழ்ச்சியில் அவரது நட்பார்ந்த துரோகியான மிஷ்கினைப் போலவே கறுப்புக் கண்ணாடியைக் கழட்டவே செய்யாத ஓசை செல்லா தமிழ் இணையம் பற்றிச் சொன்னார். வயிற்றில் தர்மத்தின் தலைவன் தலைவர்(ரெளடி) போல் ஒரு பை இருந்தது. அவரது முகநூல் பக்கத்தில் சில படங்களையும், பி.ஐ.டி.யில் தனது முதல் பதிவையும் காட்டினார்.

அம்மாவும் அவளும் ஷாப்பிங்கிற்குக் கிளம்பிப் போனார்கள்.

கூழாங்கற்கள் தளத்தைச் சேர்ந்த லட்சுமணராஜா (ராம்கோவில் மென்பொருளர்) 'நிழற்படங்கள் வழியே ஆவணப்படுத்துதல்' நிகழ்வின் வழியாக எப்படித் தாமும் தன் நண்பரும் சேர்ந்து நிகழ்ச்சிகளை வேறுபட்ட கோணத்தில் பார்த்து நிழற்படத்தில் ஆவணப்படுத்துகிறோம் என்று விளக்கினார்கள். வேதாந்தாவை எதிர்க்கும் ஓர் ஒரிஸாப் பழங்குடிக் கிராமத்தை எடுத்திருந்த கறுப்பு வெள்ளைப் படங்கள் மூலமாக எவ்வாறு அவர்கள் தத்தம் கலாச்சாரக் கூறுகளை இழந்து வருகிறார்கள் என்று காட்டப்பட்டது. வேதாந்தாவின் ஒரு தொழிற்சாலையைத் தூரத்திலிருந்து ஒரு க்ளிக் செய்திருந்தார்கள். "ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் ஒரு ஜெர்மன் ஜர்னலிஸ்ட் போய் அதை போட்டோ எடுக்கப் பார்த்து அடி வாங்கி வந்தான்" புன்முறுவல்.

தேநீர் இடைவேளை விட்டால் இன்னும் நேரமாகி விடக்கூடும் என்பதால் இருக்கும் இடத்தைத் தேடிக் கோப்பை கொண்டு வந்தனர். ஓர் ஓட்டை கப்பில் டீ வந்து விட்டது என்று ஒருவர் நிகழ்ச்சியைக் கவனிக்காமல் மாற்றுக் கப்பில் டீ எப்போது வரும் என்று தேடிக் கொண்டிருந்தார். ஓட்டை அவர் கை கப்பில் மட்டும் இருந்திருக்கவில்லை.

ஆவண நிகழ்ச்சி முடிந்ததும் கதிர் வந்து நன்றி சொன்னார். குழும உறுப்பினர்களின் அயரா உழைப்பு தான் வெற்றி அடைந்ததன் காரணம் என்றார். நிழற்படம் எடுத்துக் கொள்வோம் என்று அனைவரையும் அழைத்தார். எனக்குக் கூச்சமாய் இருந்தது. ரசத்தை ஊற்றியதன்றி வேறொன்றும் யானறியேன் என்றிருந்தேன். இருப்பினும் ஈற்றாகச் சென்று தலையைக் காட்டி விட்டு வந்தேன்.

மேடை திருப்பூர் சேர்தளம் அமைப்பின் வசம் ஒப்படைக்கப்பட்டது.

ஒரு கலந்துரையாடல் போல் அரை வட்ட வடிவாக உட்கார்ந்து கொண்டோம். எதிர்கால கோபிநாத் ஆகும் உத்தேசம் கொண்டவர் போல் தோன்றிய திருப்பூர் செல்வம் மைக்கர் ஆனார். வெயிலான், சீனா அவர்கள், பரிசல்காரன் மற்றும் கார்த்திகைப் பாண்டியன் ஆகியோர் மேடையில்.

நிறைய கேள்விகளை ஸ்லைடில் காட்டிக் கீழே ஒரு பொன்மொழியை வேறு எழுதி கவர்ச்சியாக நடத்த விரும்பியிருந்தனர். ஆயினும் நேரப் பற்றாக்குறையினாலும் பங்கேற்பாளர்கள் சரிவர கலந்துரையாடாததாலும் கடைசி ஸ்லைடுகளைத் தாவிச் சென்று நன்றி சொன்னர். ஜாக்கி சேகரும், வால்பையனும் மாறி மாறி மைக்கை எடுத்துக் கொண்டு பேசினர். ஒரு பத்திரிக்கையாளர் வந்து தரையைக் கோபாவேசத்தோடு பார்த்துக் கொண்டு 'பதிவர்கள் சமூகக் கொடுமைகளைப் பற்றி எழுத வேண்டும்; பல பிரச்னைகளைப் பற்றிப் பதிவிட வேண்டும்' என்று வேகமாய்க் கேட்டுக் கொள்வதை, சண்டே சாயங்கால மந்தமாய்ப் பார்த்தோம்.

எல்லோரும் மெல்ல மெல்லக் கலைய அரேஞ்ச் செய்யப்பட்டிருந்த ஆம்னி வேனில் ஓட்டுநருக்கு கீர் மாற்றுவதில் சிரமத்தைக் கொடுத்துக் கொண்டு நான் அமர்ந்து, நிலையத்தை வந்து சேர்ந்த போது அதே கலைந்த பேருந்துகள். தியேட்டர் சனங்கள். லாந்தர் ஒளியில் வறுகடலைகள். மஞ்சள் வானம். மஞ்சள் சோடியம் விளக்குகள். மஞ்சள் மாநகரம்.

Wednesday, February 25, 2009

பண்ணாரிக்குப் போனேன்.

சென்ற ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 10:30 மணிக்கு பாலாஜி வந்தான். 'இன்னும் ரெடியாகலியா..?' என்று கேட்டபடியே படுக்கையில் விழுந்தான். அவன் வருவதை உறுதிப்படுத்திக் கொண்டு தான் துவங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். எனவே பிறகே குளிக்கச் சென்று, குளித்து விட்டு, எல்லா துணிகளும் நீரோடு செம்புலப் பெயலாக கலந்து விட்டபடியால் ஒரு பழைய டீ ஷர்ட்டை அணிந்து கொண்டேன். சொல்லப்போனால், இன்னும் முன்னதாக எட்டு மணிக்கே கிளம்ப வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். ஏனெனில் போட்டிருந்த ப்ளான் அப்படி..!

பவானியில் இருந்து ஈரோடு செல்லும் சாலையில் அப்படியே கொஞ்சம் தெற்காகப் போய், தே.நெ.47-ஐக் கைப்பற்றி கோவை பாதையில் சென்று சித்தோட்டில் முற்றிலுமாக மேற்காகத் திரும்பி, கவுந்தப்பாடி தாண்டி, கோபியைக் கடந்து, குன்னத்தூர் வழியாக சத்திக்குள் நுழைந்து, தொலைத்து, கோயமுத்தூரில் இருந்து தாளவாடி, சாம்ராஜ்நகர், மைசூர் செல்லும் சாலையில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோயிலுக்குச் சென்று, திரும்பும் வழியில், சத்தி, கள்ளிப்பட்டி, அத்தாணி, அந்தியூர் ரூட்டில் மீண்டும் பவானியை அடைவது!

அங்கங்கே கொஞ்சம் எலி கறண்டிய ஒரு முழு வட்டப் பயணம்.

சொன்னவுடனே பாலாஜி சுத்தமாக மறுத்தான். "நம்ம வண்டில காலையில ஆரம்பிச்சமுன்னா நீ சொன்ன ரூட்ல போய்ட்டு வந்தா, திங்கள் மதியம் வந்து சேரலாம்..." என்றான். எனவே திட்டம் திருத்தப்பட்டு நேர்க்கோட்டிலேயே போய் வருவது என்று ஒல்லியாக்கப்பட்டது.

அவன் மாமா ஞாயிற்றுக் கிழமை வெளியே கிளம்பினால் மட்டுமே வண்டியை ஜூட் விட்டு வரமுடியும். அன்றைக்குப் பார்த்து அவர் 11 மணிக்குத் தான் கிளம்பினார். எனவே நேரம் ரெண்டு மணிநேரம் ஷிஃப்ட் அடிக்க வேண்டியதாகப் போனது.

11:30 மணிக்கு இருவரும் டாடா காட்டி விட்டு, டி.வி.எஸ்.50-ஐக் கிளப்பினோம்.

'தி மோட்டர்சைக்கிள் டைரீஸ்' பார்த்து ஏற்கனவே ஊற்சுற்றியான எனக்கு இன்னும் கால்கள் கள் அடித்தது போல் சுற்ற ஆசை ஏறி விட்டுருந்தது. கொஞ்சம் அது போல் அனுபவங்களும் ஏற்பட்டன.

'முள்'ளென்று வெயில் அடித்தது. முதலில் வண்டியின் கண்டிஷன் அறுபது கி.மீ தாங்குமா என்று பார்த்துக் கொண்டோம். பவானியின் மேற்கு எல்லையில் இருக்கும் முனியப்பன் கோயில் அருகே இருக்கும் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்கில் 50 ரூபாய்க்கு பெட்ரோல் அடிக்க, டாங்க் தளும்பியது. தாங்கும் என்று ஸ்திரமானோம். ஏர் செக் வேறு எங்காவது போய் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம்.

காடையம்பட்டி, திப்பிசெட்டிபாளையம், சின்னமோளபாளையம் ரோடுகளில் பெயர்ந்திருந்த திட்டுக்களில் குதித்து, கண்ட்ரோல் பண்ணி, சில டி.டி.எஸ்-களை, பல்ஸர்களைக் கடந்தோம். கைப்பிடி கடைசி ம்றுக்கில் இருந்தது. இதற்கு மேல் திருப்ப முடியாத நிலையில் பறந்தது. இருவர் கையில் ஒரு நாரையோடு ஹோண்டாவில் 'ஹோ'வென போய்க் கொண்டிருக்க, அதன் கண்களில் கொஞ்சம் பயம் ஒளிந்திருந்தது.

ஜம்பையைத் தாண்டி ஒரு குறுகலான மோரி வரும். 'மோரி' என்றால் சிற்றோடைகளைக் கடக்கும் குறும்பாலம். பெரிய மோளபாளையம் தாண்டி தளவாய்பேட்டை வரை ஸ்டாப்பிங்கே கிடையாது. சும்மா 'சல்'என செல்...!!!

தளவை தாண்டி பள்ளியில் படிக்கும் போது பச்சையாய்க் கண்டிருந்த கரும்பு வயல்கள் நிரவப்பட்டு, வரிசையாக அளவுகளோடு கற்கள் பதிக்கப்பட்டு, இரு குச்சிகள் தோள் கொடுக்க வெடவெட போர்டு ஒன்று ஏதோ ஒரு நகர் வரப்போவதாகக் கட்டியம் கூறிக் காற்றில் ஆடியது.

ஒரிச்சேரி, ஒரிச்சேரிப் புதூரில் துருபடர்ந்த ரஜினி, விஜயகாந்த் போர்டுகள் நடப்பட்டிருந்த பஸ் ஸ்டாப்பில் இன்னும் பிள்ளையார் கருங்கல்லில் பிரம்மச்சாரியாக இருந்தார். புதூர் தாண்டி விஜயா காலனி போகும் ஒரு வளைவில் கொத்திக் குதறப்பட்டிருந்த சாலையைக் குதித்து குதித்துத் தான்டினோம். அங்கே சில வீடுகள் புதிதாக அழகாய் இருந்தன.

அதற்குள் கரும்பு காய்ச்சும் வாசம் காற்றோடு கலந்து வர, பத்து வருடங்கள் பின்னோக்கிப் போய் நினைவுகளை மீண்டும் புதுப்பித்து, அன்றும் இன்றும் தாவினோம்.

தொழுநோய் மருத்துவமனையில் இருந்து ஆப்பக்கூடல் செல்லும் சரிவில் ரோட்டோரம் இருந்த சரஸ்வதியில் 'எங்க ஊரு பாட்டுக்காரன்' வந்திருந்தார். நால்ரோட்டின் நடுவில் துளியூண்டு பசியப் பூங்கா இருந்தது. சக்தி சுகர்ஸ் மெய்ன் கேட்டுக்குக் கொஞ்சம் மேடு ஏற வேண்டும். அதற்குள் எத்தனை ஞாபகங்கள்...!!

பாலு சார் ட்யூஷன் முடிந்தவுடன் கத்தரித்த வாழை இலைத் துண்டில் சூடாக பஜ்ஜியும், காரச் சட்னியும் யார் காசிலாவது சாப்பிடுவோம். அந்தச் சட்னி அன்று எலக்ஷனில் நின்றிருந்தால், எதிர்த்தவர்களுக்கு டெப்பாஸிட் கூட கிடைத்திருக்காது. அதற்கு அத்தனை அடிமைகள்..! அண்ணன் சைக்கிளை அழுத்த பாரில் அமர்ந்து வரும் பூனை மீசை வைத்திருந்த சதீஷ் ஒன்பதாவதில் ஒரு நாள் தற்கொலை செய்து கொண்டது ஏன் என்று இன்னும் தெளிவில்லை..! மலை முருகன் கோயிலைத் தாண்டி, பவானி ஆற்றின் மறுகரையின் பெருந்தலையூரில் இருந்து பச்சை ஒயர்கூடையில் கொஞ்சம் புத்தகங்களை ஒளித்து சைக்கிளை மிதித்து வரும் அசோக் இன்று சிங்கப்பூரில் இருக்கிறான்.

குனிந்து பார்க்கும் எலெக்ட்ரிக் விளக்குகள் சோடியம் மஞ்சள் பூசி இருக்கின்றன. டீக்கடைகள் கொஞ்சம் வளர்ந்து பேக்கரி ஆகி இருக்கின்றன. கொஞ்சம் புதுக் கட்டிடங்கள் வந்து, ஒரு புதுப் பள்ளி வந்து, பெட்ரோல் பங்குகள் குட்டி போடிருந்தாலும், அந்த கந்தன் மலையும், ஊர்வலக் கரும்பு வண்டிகளும், பேக்டரிக் கறுப்புப் புகையும், சாய்ச்சும் போதை வாசமும், க்வார்ட்டர்ஸ் வாசல் அரசமரப் பிள்ளையார் எண்ணெய்த் திரிகளும் இன்னும் மாறவேயில்லை.

ப்ரம்மாண்ட ஏரிக்கரையில் ஒரு ஆலமரம் இருந்தது. இன்று இல்லை.

ரைஸ் மில் ஸ்டாப்பிங்கில் ஒரு மைல்கல்லில் உட்கார்ந்து கதை அளப்போம். கடக்கையில் சில யூனிஃபார்ம் சிறுவர்கள் அதே போல் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அந்தக் குடிசை டீக்கடையும், திட்டு வைத்த டீ பாய்லரும் அப்படியே..!

பள்ளி முகப்பைப் பார்த்துக் கொண்டோம். 'கன்ஸ்யூமர் க்ளப்' போன்ற புதுப் புது போர்டுகள் மின்னின. எஸ்.ஐ.டி.யின் வாசல் இன்னும் கொஞ்சம் முன் வைத்து கோட்டை போல் வடிவத்திருந்தனர்.

காலனியின் வாசல் பஸ் கூரையின் கீழ் எதேச்சையாகப் பார்க்க திருமுருகன் இருந்தான். பொழுதே போகாத ஞாயிறின் முற்பகலில் சோம்பி இருந்தவனிடம் கொஞ்சம் போல் பேசி விட்டு மீண்டும் மேற்கு நோக்கிப் போனோம்.

மூங்கில்பட்டி அல்லது கீழ்வாணி என்று குறிக்கப்படும் கீவானியில் ஒரு பள்ளி இருக்கின்றது. அந்த வழியில் கண்ட ஊர்களான அத்தாணி, பங்களாபுதூர், கள்ளிப்பட்டி அத்தனையிலும் தெற்கை நோக்கி ஒரு தார் வரப்பு வெட்டப்பட்டு, 'கோபிக்கு செல்ல இங்கே திரும்புக' என்று அம்புக்குறிகள் மூக்கை நீட்டிக் கொண்டிருந்தன.

கள்ளிப்பட்டியில் சந்தை. குறுகலான சாலையில் புகுந்து புகுந்து சென்றோம். ஊரை விலக்கி, கொஞ்சம் தூரம் செல்ல, மெய்ன் ரோட்டை முறைத்துக் கொண்டு கணக்கம்பாளையம் ஊருக்கு செல்லும் பாதை இருபுறமும் மரங்கள் கூடு கட்டியிருக்க, செம்மண் படர்ந்திருந்தது.

தூக்கநாய்க்கன்பாளையத்தில் இருக்கும் ஜே.கே.கே. கல்லூரியைப் பார்த்துக் கொண்டு அபாய வளைவைக் கடந்து எதிர் பாய்ந்த கார்களை அலட்சியத்து, இன்னும் வேகம் பிடித்து, ரிவ்யூ மிரரில் தெரிந்த வெள்ளைக் காண்ட்ஸாவை முந்த விடக் கூடாது என்ற அபத்த முறுக்கலில், கதறியது டி.வி.எஸ்.50....!

இதுவரை எல்லாம் நலமே...!!!

ர்களை மீறி, சுற்றிலும் அலையாடிய பச்சை வயல்கள் பரப்பில் வண்டி அலைபாய்ந்ததை உணர்ந்தேன். தடாரென்று ஓரங்கட்டி செக் செய்ய, பின் டயர் பஞ்சர்...!!!

திக்கென்றானது. எந்த ஊர் என்று தெரியாது; இந்த ஊர்களில் ரிப்பேர் கடைகள் இருக்குமா என்ற சந்தேகம்;

இறங்கிய பின் தான் அடிக்கின்ற வெயிலின் சுட்டெரிப்பு தெரிந்தது. ஓட்டி வந்த என் கைகள், கால்களில் அந்த 'புறுபுறுப்பு' சுறுசுறுவென கூசிக் கொண்டிருந்தது. கொஞ்ச தூரத்தில் முந்தானையால் தலையை மூடி, அந்த வெயிலிலும் மற்றொரு பெண்ணிடம் ஒரு பெண் பேசிக் கொண்டிருந்தார்.

"அக்கா... இங்க பஞ்சர் ஒட்டற கடை எங்க இருக்குங்கா..?"

தைரியம் பெற்ற அக்கா, "இப்புடியே போனீங்கனா மேட்டுல ஒரு கட இருக்குதுங்க..." என்றார்.

பாலாஜி 'வினையே' என்று தள்ளிக் கொண்டு போகத் தொடங்க (இல்லாவிட்டால் மாமாகிட்ட வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியிருக்குமே..!), நான் பொறுமையாக நடக்கத் தொடங்கினேன். அப்போது தான் சுற்றுப்புறத்தைக் கவனிக்க...!!



விசிறி அடித்திருந்த வெயில்; உதறிப்போட்ட துணிகள் போல் கலைந்திருக்கும் மேகங்கள் துளியும் இல்லை; குறுக்கும் நெடுக்குமான மின் வயர்கள்; கேபிள் கடத்திகள்; சாலையோரப் புளிய மரங்கள்; முகம் கிடத்தி வைத்திருக்கும் மாட்டு வண்டிகள்; அச்சாணி செருகி கறுப்பு எண்ணெய் வட்டமாய்ப் புசின மரச் சக்கரங்கள்; ஒரு பக்கம் கிழிந்த இலை வாழைத் தோப்புகள்; ஓங்கி உயர்ந்து உலகளந்த தென்னைக் கூட்டங்கள்; சோளக் கருதுக் குருத்துகள்; புகையிலை மூட்டைகள்; சிதறியிருந்த கரும்புச் சக்கைகளும், பழுத்து, கழன்று காற்றில் சுற்றி விழுந்திருந்த பழுப்புத் தென்னை ஓலைகளும், செம்மண் பூமியும், காப்பாக வளர விட்டிருந்த நெருஞ்சி முள் செடிகளும், ஆடுகளும், கொஞ்சம் கிட்டத்தில் ஒன்றுக்குள் ஒன்றாக மடிப்புக்குள் படலம் படல்மாய் வகிடெடுத்து வளைந்து தொடர்ந்து வரும் மேற்குத் தொடர் மலைகளும், கூடவே மதியத்தின் மெளனமும்....!!!!





மேட்டில் ஏறிச் சென்றால், பஸ் ஸ்டாப்பில் ஒரு தள்ளுவண்டி இருந்தது. அதில் மோர் மிளகாய், மிளகாய்ப் பொடி தடவிய அரிந்த மாங்காய்த் துண்டுகள், டயர் மேல் கிடத்திய பானைகளில் மோர், கம்புச் சோற்றுக் கூழ், இளநீர் என்று எல்லாம் இருந்தது. அவரிடம் கேட்க ரோட்டின் அந்தப்பக்கம் கை காட்டினார். அங்கே ஒரு சரிந்த புளியமரக் கிளையில் கட்டிய கிணற்றுக் கயிறில் சில டயர்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அது ஓர் அடையாளம். சைக்கிள் ரிப்பேர் ஷாப்புக்கான அடையாளம். நன்றி சொல்லி விட்டு அங்கே நகர்ந்தால், அந்தக் கடை பலகைகளால் மூடப்பட்டு, பூட்டு தொங்கியது. பக்கவாட்டில் இருந்து சத்தம் வர, அங்கே ஒரு தாத்தா - பாட்டி இருந்தனர். தளர்ந்த உடல். நடுங்கும் குரல். ஆனாலும் கேட்ட போது, "இங்க கட இல்ல சாமி. அவங்க காலி பண்ணிட்டு போய்ட்டாங்களே... கீழாக்க போனீங்கனா ஏளூர்ல கட இருக்கும் கண்ணு..." என்று பாசம் பொழிந்த அவர்கள் அமர்ந்திருந்த திண்ணையை ஒட்டி இருந்த வீடு வெளியே பூட்டியிருந்தது.

இன்னும் தள்ளிக் கொண்டே மேற்கு நோக்கிச் செல்ல, ஒரு பள்ளம் இரங்கி ஏற, ஏளூர் வந்தது. 'எழூர்' என்று அரசாங்க மஞ்சள் போர்டு சொல்லியது. தனியார் கடை போர்டுகளோ 'ஏளூர்'!

கொஞ்சம் ஒப்பிட பெரிய ஊர் போல் தெரிந்தது. எண்ணிப்பார்க்க நூறு/ நூற்றைம்பது பேர் அப்போது கண்ணில் பட்டனர். ஒரு சைக்கிள் கடை தெரிய, அங்கே விசாரித்தோம். அவரே டி.வி.எஸ்ஸையும் பார்ப்பார் என்று சொல்ல, அவரிடம் பாலாஜியையும் வண்டியையும் தள்ளி விட்டு, கொஞ்சம் சுற்றுமுற்றும் ஊர் சுற்றிப்பார்த்தேன்.

புளியமரத்தினடியில் இக்கடை. பின்பக்கம் ஒரு சாக்கடைக் குழி. கொஞ்சம் ஓடிக் கொண்டிருந்தது. அதன் பின்புறம் வரிசையாகக் கடைகள். ஒரு சலூன். இரண்டு பேர் காத்திருந்து அன்றைய தினத்தந்தியைப் படித்துக் கொண்டிருக்க, உள்ளே ஒருவர் தலை கொடுத்திருந்தார். குறுக்காக கடந்த ஒரு தார் ரோட்டின் அந்தப்பக்கம் ஒரு பலசரக்குக் கடையில் பாட்டிலில் பொருட்கள் சிறைப்பட்டிருந்தன. உள்ளே ப்ரிட்ஜில் கலர்கள். வெளியே நீர்த் தொட்டியில் குண்டடைத்த சோடாக்கள். எதிர்ப்புறம் ஒரு கோயில். வெக்கை படர்ந்திருந்தது. பஸ் ஸ்டாப்பில் சிலர். அவர்களில் கொஞ்சம் சிலர் உட்கார்ந்திருக்க, மிச்ச சிலர் படுத்திருந்தனர். அக்கூட்டத்தில் சேராமல், குடை பிடித்த பெண்மணி. மூன்று கழுதைகள் நாங்கள் அங்கிருந்து கிளம்பும் வரை அசையாமல் அவை நின்ற போஸிலேயே நின்று கொண்டிருந்தன. மற்றொரு பஞ்சர் ஷாப் தெரிந்தது. அது கொஞ்சம் நவீனம். காற்றடிக்க ப்ரெஷர் மெஷின். பூச்சிமருந்துக் கடையும், ஏரியா மூட்டைகள் அடுக்கிய உரக்கடையும் தெரிந்தன. ஒரு மளிகைக் கடை, ஒரு டீக்கடை, ரோட்டோர மரங்கள், நின்றிருந்த சைக்கிள்கள், ஒரு என்ஃபீல்டு, பால் டின்கள் இவற்றோடு கொஞ்சம் தாண்டினால், சரேலென விரியும் பச்சை வயல்கள் என்று டிபிக்கல் தமிழ்க் கிராமமாகக் காட்சியளித்தது.



நாங்கள் கொடுத்திருந்த சைக்கிள் ஷாப்பில் சின்னப் பையன்கள் நான்கு பேர் ஒரு சைக்கிளைப் போட்டுப் படாத பாடு படுத்திக் கொண்டிருந்தனர். ஒருவன் கவிழ்த்துப் போட்டு சீட் ஸ்ப்ரிங்குகளை அழுத்திப் பிடிக்க, மற்றொருவன் செய்ன் பாடி மேலேயே ஏறி அமர்ந்து கொண்டு ஸ்க்ரூ ட்ரைவரால் திருப்பிக் கொண்டிருக்க, மற்றொருவன் டயரைச் சுற்றிக் கொண்டிருக்க, மீ இளையன் மட்டும் தள்ளி நின்று கற்றுக் கொண்டிருந்தான். எனக்குப் பார்க்கையில், மாட்டிற்கு லாடம் அடிக்கும் காட்சி நினைவுக்கு வந்தது.

அவ்வப்போது இவர் அதட்டிக் கொண்டிருந்தாலும், அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை. அவரும் இப்படியெல்லாம் செய்து தான் சைக்கிள் ரிப்பேர் செய்யக் கற்றுக் கொண்டிருந்திருக்க வேண்டும்.

பஞ்சர் இல்லையாம். வந்த உச்ச வேகத்தில், பதினொரு மணி கொதி வெயிலில் கொப்பளித்துக் கொண்டிருந்த தார் ரோட்டின் சூடு ஏறிப் பரவி, உரசல் வெப்பத்தில் ஏற்கனவே பஞ்சர் ஒட்டிய பகுதி பிய்த்துக் கொண்டு வந்திருக்கின்றது. அதை மீண்டும் ஒட்டி, அடைத்து, காற்றை கைப்பம்பில் நிறைத்து முக்கால் மணி நேரத்தில் தயாரித்திருந்தார். இருபது ரூபாய்.

ப்ரதேசப் பொருளாதாரத்தின் மேல் நம்பிக்கை வைத்து, இருந்த மற்றொரு கடையில் ஏர் செக் செய்து, ப்ரெஷர் கருவியில் காற்றை இன்னும் கொஞ்சம் ஏற்றி விட்டோம். 'எவ்வளவு தரணுங்க..?' என்று கேட்டோம். 'ஒரு ரூபா குடுங்களேன்...' என்றார், ஏதோ புள்ளைங்க குடுக்க ஆசப்படறாங்க, தடுப்பானேன் என்ற பாவனையில்! இந்த வேலைக்கெல்லாம் இந்த ஊரில் காசு குடுக்க மாட்டாங்க. இதெல்லாம் காலெஜுக்குப் போகும் போது அவசர அவசரமாக சலூனுக்குள் நுழைந்து கிடைத்த சீப்பில் தலைவாரிக் கொண்டு, போய்க் கொண்டே இருப்பது போல்! என்று மனதிற்குப் பட்டது.

மீண்டும் பயணம் கிளம்பினோம். மற்றொரு நால்ரோடு குறுக்கிட்டது. நேராகப் போனால் சத்தி. இடது திரும்பினால் பெரிய கொடிவேரி. வலதில் மாதேஸ்வரன் மலைக்கு! நேராகப் போனோம். கொடிவேரி பெயரைப் பார்த்தவுடன் தான் மனதில் வரும் போது அங்கும் ஒரு விசிட் அடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றி உறுதி செய்து கொண்டோம்.

ஒரு வழியாக சத்தி நெருங்கினோம். ஆனால் சத்தி நகருக்குள் செல்ல வேண்டிய அவசியமில்லை. இன்னும் நேராகச் சென்றாலே மைசூர் ஹைவேயைப் பிடித்து விடலாம் என்று சொன்னார்கள். சத்தியிலிருந்து ஒன்பது கி.மீ. பண்ணாரி கோயில். எனவே நகருக்குள் சென்று ட்ராஃபிக் இன்னல்களில் சிக்கிக் கொள்ள இச்சை இல்லாததால், கொஞ்சம் ரோடு மோசமாகவே இருந்தாலும் பரவாயில்லை என்று லெஃப்ட் கட் அடித்து நகருக்குள் செல்லாமல், நேராகவே சென்றோம். வழியில் ஒரு கல்யாண மண்டபம், ஒரு சுடுகாடு, சில வயல்கள், ரோஸ் பூசிய புதுக் கட்டிடங்கள், அரட்டைக் குழாம் ஒன்று என்று கண்ணில் பட்டனர்.

ஹைவேயை அடையும் வரை தத்தளித்து தான் தவித்து சிக்கி முக்கி, தட்டுத் தடுமாறிச் என்ற வண்டி, பின் ஜிவ்வென்று பறந்த்து.

கொஞ்ச தூரம் செல்லும் போதே ஏதோ கர்நாடகாவிற்கே சென்றது போல் உணர்வு. அத்தனை கே.எஸ்.ஆர்.டி.ஸி. பஸ்கள் கடந்தன. கோவை - மைசூர், சத்தி - மைசூர் / சாம்ராஜ் நகர் / தாளவாடி என்று கலர் பஸ்கள், ட்ராவலர்ஸ்கள், சரக்கேற்றிய லாரிகள் அத்தனையையும் பார்த்தோம். வண்டி தரைத் தளத்தில் இருந்து, மலையேறிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது. ஊரே தென்படவில்லை. அங்கங்கே சில ஓட்டு வீடுகள் மட்டுமே. திடீரென 'வனச் சரகம் வரவேற்கிறது' போர்டு வந்தது. பாரஸ்ட் ரீஜன் என்று புரிந்தது. யானை படம் போட்ட போர்டு தென்பட்டது. சுற்றிலும் காடுகள்; வறண்ட காடுகள்; முட் செடிகள்; புளிய மரங்களில் புளியங்காய் அடித்துக் கொண்டிருந்தனர். அப்படி அடித்தே மூட்டைகள் நிரம்ப இறுக்கக் கட்டியிருந்தனர். பார்க்கும் போதே நாவூறியது.

(நீங்கள் புளியங்காய் சாப்பிட்டு இருக்கிறீர்களா..? அதுவும் நம் வீட்டில் போடும் புளி அல்ல. அது வேறு தினுசில் செய்யப்படும். மரப்புளியின் சுத்திகரிக்கப்பட்ட எச்சம். மரத்தில் இருந்து அடித்து..? சாலையில் அரசாங்கப் புளிய மரங்கள் வெள்ளையும் கறுப்புமாய் வர்ண அடையாளம் பூசியிருக்கும். அவற்றில் குச்சித் தொடர்போடு தொங்கிக் கொண்டிருக்கும் புளியங்காய்கள். கல்லெடுத்துக் குறி பார்த்து அடித்தாலோ, அல்லது கொத்தாய்ப் பிடித்து உலுக்கினாலோ சிந்திச் சிதறும். அவ்வையாரைக் கேள்வி கேட்ட முருகச்சிறுவன் பற்றிய பயமின்றி எடுத்து ஊதித் தட்டுவோம். பின் பிரிக்க வேண்டும். அந்தக் காம்பைப் பிடித்து மெல்ல பிரித்தால், சுவையாக ஒரு வாசம் பரவும் பாருங்கள். யப்பா...! சமையற்கட்டில் இருக்கும் புளியின் வாசம் எல்லாம் இதற்கு உறை போடக் காணாது. பிறகு அதை அப்படியே கடித்துச் சாப்பிட்டால..... ம்ம்ம்ம்ம்...!!! அதெல்லாம் அந்தக் காலம்...!!)

சரேலென ரோடு வளைகிறது; ஏறுகிறது; இறங்குகிறது; நதி மட்டும் அல்ல, பெண்ணுக்கு நெடுஞ்சாலையும் ஒப்புமை சொல்லலாம் என்று தோன்றியது.

ண்ணாரி என்பது ஊரல்ல; அது ஒரு கோயில் மட்டுமே என்று பார்த்தவுடன் நினைத்தோம். சாலையோரக் கோயில். அதனைச் சுற்றி சர்வைவல் கடைகள்; இளநீர், மோர்க் கடைகள்; ஐஸ்க்ரீம், தண்ணீர், உப்பு, விளையாட்டுச் சாமான்கள் என்று கலந்து கட்டிய கடைகள்.

ஒதுங்கியிருந்த ஒரு கட்டிடத்தின் அருகிலேயே நிறுத்தி விட்டு, மேலே விளையாடிக் கொன்டும், ஓடிக் கொண்டும், தாவிக் கொண்டும் இருந்தா முன்னோர்களைக் கொண்டு கொஞ்சம் மிரட்சி இருந்தாலும், காட்டிக் கொள்ளாமல் நகர்ந்து கோயிலுக்குள் நுழைந்தோம்.

அன்று பிரதோஷம். அடுத்த நாள் மகா சிவராத்திரி. எனவே கூட்டம் கணிசமாக இருந்தது, அந்த மதியம் 13:30லும்! வளைந்து சென்ற நான்கு வரிசைக் கம்பித் தடுப்பான்களில் மெல்ல நகர்ந்தோம்.

ஓர் அம்மா மாவிளக்கு ஏற்றி வந்தார். வெண் பஞ்சு போல் இருந்த சிறு பெண்குட்டி அடுத்த வரிசை ஆளிடம் கொஞ்சினாள். சிவப்பு ட்ராயர் பையன் அதை இழுத்து விட்டுக் கொண்டேயிருந்தான். லைட் ப்ளூ மாருதியில் வந்த ஒரு குடும்பம் அவ்வப்போது விசிறிக் கொண்டது. தேங்காய் உடைத்து உடைத்துக் கொடுத்தவர் "நகருங்..நகருங்..நகருங்..நகருங்..." என்று பீரியாடிக்காக சொல்லிக் கொண்டேயிருந்தார். பர்தா அணிந்த பெண்ணும் நின்றதை யாரும் வித்தியாசமாகப் பார்க்கவில்லை.

உச்ச வரிசைக்கு வந்து அலங்காரத்தில் இருந்த மாரியம்மனை வணங்கிக் கொண்டே வெளியே வந்து விட்டோம். கருப்பாக சாம்பல் போன்ற ஒன்றைத் தான் ப்ரசாதமாகத் தருகிறார்கள். அதை வாங்கி பிரகாரம் விட்டு வந்தவுடன் நாம் காலண்டர் தாளைத் தேடுவதைக் கண்டு, இருவர் சூழ்ந்து தயாராக வைத்திருந்த துண்டுக் காகிதங்களைக் கொடுத்து ரெண்டு ரூபாய் வாங்கிக் கொண்டு அடுத்த ஆளைப் பார்த்தார்கள்.

மண்டபத்தை விட்டு வெளியே குண்டத்திற்காகத் (ஏப்ரல் 4) தயார் செய்யப்ப்டும் தீ மிதிக்கப்படும் இடத்தைப் பார்த்தோம். அதைச் சுற்றிலும் கன்னடக் கொடி நிறம் பூசிய கம்பங்கள் காவலுக்கு இருந்தன. ஊஞ்சல் இருந்தது. ஆட்டி விட்டு வணங்கினோம். குண்டத்தில் இருந்து கல் உப்பைக் கொஞ்சம் எடுத்து சுவைத்துக் கொண்டு மீண்டும் மண்டபத்திற்கு வந்து இளைப்பாறு முன் பஞ்சாமிர்தம் வாங்கினோம்.

ஸ்தல வரலாறு படித்து விட்டு, கோவை, ஈரோடு செல்லும் பேருந்துகளைப் பார்த்து விட்டு, ஓரமாக குத்த வைத்திருந்த பாட்டியிடம் மோர் ரெண்டு டம்ளர்கள் குடித்து விட்டு, கொதித்த தாரில் நடந்து மீண்டும் வண்டியைக் கிளப்பு முன் சில க்ளிக்குகள் ::













மலைக்கு அந்தாண்ட கர்நாடகம்.



கோயிலில் இருந்து திரும்ப சத்திக்கு வரும் போது, காட்டுப் பகுதி அல்லவா, "இப்ப திடீர்னு புலி ஒண்ணு எதுக்க வந்தா எப்டி இருக்கும்..? யான வந்தா எப்டி இருக்கும்..?" என்று கிலியூட்ட முயன்று கொண்டே வந்தான் பாலாஜி. மேற்சொன்னவை வராமல் வேறொன்று வரப் போவதாகத் தெரிந்தது. காலையில் வண்டியில் கிளம்பியதில் இருந்தே எங்கும் டவுன்லோட் செய்யாததால், ஆள் அரவமற்ற இடம் பார்த்து கண்டுபிடிக்க ஒரு போர்டு இருந்தது. 'வன விலங்குகள் கடக்கும் பகுதி'. வழி தவறிக் கன்னட / கேரள நிலத்தில் இருந்து ஏதேனும் விலங்குகள் வந்து விட்டால், எங்கே கடக்க வேண்டும் என்பது தெரியாமல் குழம்பி விடக் கூடாது என்ற அக்கறையில், மும்மொழிக் கொள்கைப்படி 'WILD ANIMAL CROSSING'.



அங்கே போய் ரிலாக்ஸ் ஆகி விட்டு, அந்த போர்டுக்கு சத்திய ஆதாரமாக இருந்த அடையாளத்தையும் புகைப்படமாகச் சேகரித்து விட்டு மீண்டும் உற்சாகமாக முறுக்கினேன்.



ஒரு வளைவில் சில வண்டிகள் நின்று சாலையின் அந்தப்புறத்தை ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். 'என்னடா'வென்று பார்த்தால், அட, காட்டு யானைக் குடும்பம் ஒன்று குளித்துக் கொண்டிருந்தது. நம்மாட்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா..? குளிப்பது யானையோ, த்ரிஷாவோ, பூமிகாவோ, வேடிக்கை பார்ப்பது என்றால் அல்வா சாப்பிடுவது போல் தானே!

இலக்கணத்திற்கு கொஞ்சமும் மாறாமல் நாங்களும் கீழ் இறங்கிப் பார்த்தோம்.

ஒரு யானைக் கூட்டம். நீளமான தந்தத்துடன் ஒரு கொம்பன். சுற்றியும் அவரது மனைவிகள். இரண்டு குட்டிகள். வெயில் காலத்தில் காட்டுக்குள் நீர் ஆதாரங்கள் வறண்டு விட, ஊருக்குள் வந்து எல்லோரையும் மிரட்டக் கூடாது என்று விலங்குகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே ஒரு டீல் போல, ஆங்காங்கே நீர் நிரம்பிய தொட்டிகள் / குளங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மோட்டர் மூலம் பம்புகள் வழியாக குபுகுபுவென நீர் பாய்ந்து கொண்டே இருந்தது. நாங்கள் அவர்களை, அவர்கள் எங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். 'மானங்கெட்ட பயலுவ, அடுத்தவங்க குளிக்கறத எப்புடி வேடிக்க பாக்கறானுவோ" என்று ஒன்று சொல்ல, மற்றவை 'இதை நாங்கள் வழிமொழிகிறோம்' என்று பதில் பிளிறின.



பார்த்தார்கள்...! நாங்கள் நகருகின்றதாக இல்லை என்று புரிந்து கொண்டதும், 'பொளப்பத்த மனுசனுக..' என்று முனகிக் கொண்டே, அவை குளத்தில் இருந்து வெளியேறி, மண்ணை வாரி தன் மேல் இறைத்துக் கொண்டு, எங்களுக்குப் பழிப்பு காட்டி வனத்திற்குள் செல்லத் துவங்கின.

அவை சென்ற பின் தான் ஒரு மரத்தின் அடியில் மான் ஒன்று நிற்பதைப் பார்த்தோம். இந்நேரம் வரை அது கண்ணில் படவில்லை.

மீண்டும் நகருக்குள் நுழைவதற்கு முன் இந்த படம் ஒரு ஹைக்கூவாகத் தோன்றியது. க்ளிக்கினேன்.



இந்தப் பயணப் பதிவிற்கு 'அலீம் பீடியும் அய்யனார்களும்' என்று Catchyயாகத் தலைப்பு வைத்திருந்தால் எப்படி இருந்திருக்கும்...?

த்தி பேருந்து நிலையத்திற்கு எதிரில் இருந்த ஒரு சுத்தமான வெஜ் ஹோட்டலுக்கு நுழையும் முன் அம்மா call செய்தார்கள். கோயிலுக்குப் போய் விட்டு வருவதால், சண்டே என்று பார்க்கக் கூடாது.வெஜ் தான் லஞ்ச் சாப்பிட வேண்டும் என்று கண்டிஷனாகக் கூறினார்கள். எனவே அந்த வெஜ் ஹோ.க்குச் சென்று காளான் ரைஸ் ஆர்டரிட்டு ஈட்டினோம். காளான் வெஜ் தானா என்ற சந்தேகம் இருந்தாலும் பசிக்கு முன் எடுபடவில்லை.

பெட்ரோல் அடித்து விட்டு, ஊருக்குத் திரும்பலாம் என்று செல்லும் வழியில் கொடிவேரி சென்று ஒரு விசிட் அடித்து விட்டு வரலாம் என்று ட்ராக் திருப்பி உள்ளே ஏழு கி.மீ சென்று ஓர் ஒற்றையடிப் பாதையில் ஜிங் ஜிங் என்று ஆடி ஆடி, ஒரு குட்டையோரமாகவே போய், காக்கிக் காரர் இருவர் தூங்கிக் கொண்டிருக்க, சீட் கிழித்துக் கொண்டிருந்தார் ஒருவர். அவரிடம் ஏழு ரூபாய் சீட் வாங்கி அணைக்கட்டுக்குச் சென்றோம்.

என்னவாகி விட்டது என்றால், நாங்கள் சென்றது அணையின் மறுகரை. இங்கே குளிக்க வழியில்லை. அக்கரைக்குச் என்றால் தான் குளிப்பதற்கான வசதிகள் இருக்கின்றன. செம கடுப்பாகிப் போய் விட்டது. பரிசல்காரர்கள் ஒரு ட்ரிப் அடித்து அங்கு போய் வரலாம் என்றார்கள். ஆனால் வண்டியை இங்கே விட்டுப் போய் வருவதற்குத் தயங்கினோம். அந்தக் கரைக்குப் போவதென்றாலோ, மீண்டும் வந்த 7 கி.மீ. தூரம் ரிட்டர்ன் அடித்து, சத்திக்குள் புகுந்து நகருக்குள் ஊர்ந்து கோபி செல்லும் மெய்ன் ரோட்டைப் பிடித்து கோபி நோக்கி விரைய, சத்தியிலிருந்து நான்கு கி.மீ தள்ளி இந்த அணைக்கான கட் பிரிந்து உள்ளே இரண்டு கி.மீ. வர அக்கரை வருமாம்.

பார்த்தோம். 'இது ஆவறதில்லை' என்று முடிவு செய்து, இன்னொரு நாள் முழுக்க ஆட்டம் போட வருவோம் என்று சோகமாக (இருக்காதா பின்னே..? ;-( காலுக்கெட்டிய அருவியில் குளிக்காமல் போகிறேனே..!!! காண்க :: தலைக்குள் சிக்லெட்ஸ்! பொன்முடி ) சில க்ளிக்குகள் மட்டும் அடித்து திரும்பினோம்.





இந்தப் படத்தைப் பார்க்கும் போதே அள்ளி அள்ளிக் குடிக்கணும் போல இருக்கு இல்ல..?









முதலில் இதைப் பார்த்து விட்டு 'இது தான் அருவியா'ன்னு பாலாஜி கேட்டான்.



வசர அவசரமாக மாலை மங்கிக் கொண்டு, மேலை அடிவானமெங்கும் விரிந்திருந்த பொன் மஞ்சள் போர்வை எங்களை ஜொலிக்க ஜொலிக்க மூடிக் கொண்டு வர, அந்த ஞாயிற்றுக்கிழமை அற்புதமான ஒரு நாளாக நிறைவுற்றதை மனதில் இருந்த களிப்பும், உடலில் இருந்த களைப்பும் உணர்த்திக் கொண்டே இருக்க, கடைசியாக எடுத்த இந்த இரு படங்களோடு திரும்பிக் கூட பார்க்காமல் வந்த வழியிலேயே வீடு நோக்கி விரைந்தோம்.

ஒரு பக்கம் மொட்டை வெயில்...!



மறுபக்கம் பச்சை நிழல்...!



ஆதியும் தெரியாமல் அந்தமும் அறியாமல் இரண்டிற்கும் இடையில் ஊடுறுவிச் சென்று கொண்டே இருக்கின்றது பயணம்...!

Saturday, March 08, 2008

பயணங்களால் கட்டமைந்த எட்டு நாட்கள். - 2.

இப் பதிவின் தொடர்ச்சி இது.

சென்ற முறை பயணம் செய்தது போல் இன்றி, இம்முறை உண்மையாகவே பேருந்து விட்டுப் பேருந்து தாவித் தான் பயணிக்க வேண்டியதாகி இருந்தது.

கழக்குட்டத்தில் இருந்து கிளம்பி, பவானியில் இருக்கும் உறவினர் வீட்டை அடைய மொத்தம் எட்டு பேருந்துகள் தேவைப்பட்டன.

கழக்குட்டம் - கொல்லம், கொல்லம் - எர்ணாகுளம், எர்ணாகுளம் - திருச்சூர், திருச்சூர் - பாலக்காடு, பாலக்காடு - கோவை, கோவை - லட்சுமி நகர் பைபாஸ், பைபாஸ் - அந்தியூர் பிரிவு.

நல்லவேளையாக, கொல்லம் - எர்ணாகுளம் இடையில் ஆலப்புழை வரை செல்லும் பேருந்தில் மாட்டிக் கொள்ளாமல், ஸ்ட்ரெய்ட்டாகவே செல்ல முடிந்தது.

இப்பயணம் முழுதும் இரவிலேயே நடந்து முடிந்ததால், எதுவும் சிறப்பாகச் சொல்ல இல்லை. சென்ற பயணத்திலேயே, பகல் பயணத்தைக் கண்டு விட்டதால், இம்முறை இராப்பயணம்.

விரிவாக எதுவும் இம்முறை எழுத முடியவில்லை. பின்பு விளக்கமாக எழுதுகிறேன்.

இப்பண்டிகைகளின் போது, எடுத்த புகைப்படங்களை மட்டும் இத்துடன் இணைக்கிறேன்.

திரும்ப வரும் பயணம் பவானி - ஈரோடு, ஈரோடு - திருச்சூர், திருச்சூர் - கழக்குட்டம் என்று சுருக்கமாக முடிந்து விட்டது சற்று எளிதாக இருந்தது.














Saturday, September 01, 2007

செங்கோட்டுப் பயணம்.

"திருமுருகன் பூண்டியோடு திருநல்அவி நாசி
திருநணாவும் கொடுமுடியும் திருச்செங்கோடிவைகள்
கருவுருவா நிலைவெஞ்சன் கூடலிவை ஏழும்
கவின்பேரூர் முதல்வைப்புத் தனிநகர்கள் எமதே!"
- கோவைக்கிழார் சி.எம். இராமச்சந்திரன் செட்டியார் - கொங்கேழு தலங்கள்.

மீபத்தில் உடன் பணியர் ஒருவரது திருமணத்திற்காகத் திருச்செங்கோடு வரை சென்று வந்தோம். அதைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு.

மிதமாக மழை பெய்து கொண்டிருந்த ஒரு சென்னையின் மாலை நேரம். வீட்டில் உண்டு விட்டு, கிளம்புகையில் இரவு 9 மணி. 10:30க்கு சென்னை சென்டிரல் நிலையத்தில் இருந்து ஏற்காட்டில் கிளம்புவதாகத் திட்டம்.

விஜயநகர் சென்று D70 பேருந்தைப் பிடித்து கிளம்பும் போது 9:17 ஆனது. தண்டீஸ்வரம் கோயிலைக் கடக்கையில் ஆரம்பமானது தடங்கல்.

கோயிலுக்கு முன் உள்ள ஒரு சந்திப்பில், ஒரு பேருந்து செயல் இழந்து நின்று விட்டது. அதனால், அனைத்து பக்கங்களில் இருந்தும் வர வேண்டிய அனைத்து வாகனங்களும் அப்படியப்படியே நின்று விட்டன. இலேசாகத் தூறிக் கொண்டிருந்த மழை வேகம் பிடிக்க ஆரம்பித்தது.

'மழை வந்ததால் மின்சாரம் போனதா' இல்லை 'மின்சாரம் சோரம் போனதால் மழை வந்ததா' என்று பிரித்தறிய முடியா வண்ணம், உடனே மின்சாரம் போனது. எங்கும் இருள் சூழ்ந்தது. மழை வெட்டித் தள்ளும் வாகனங்களின் ஒளி மட்டும் மினுக்கிக் கொண்டிருந்தது. பேருந்தின் ஜன்னல் கண்ணாடிகள் 'பட் பட்' என இழுத்து மூடப்பட்டன.

நேரம் நழுவிக் கொண்டிருந்தது.

9:31...

9:32...

பின் மெது,மெதுவாக நகரத் தொடங்கினோம். நானும் மற்றொரு நண்பரும் மீண்டும் நம்பிக்கை பெறத் தொடங்கினோம். அந்தப் புள்ளியைக் கடந்த பின் வேகமெடுத்த பேருந்து, கிண்டி நிறுத்தத்தில் நிற்கையில் மணி, 9:45.

அவசர, அவசரமாகப் பின்னோக்கி நடக்கத் தொடங்கினோம்.

சேறும், சகதியும் நம் உடையோடு சேரும் எண்ணத்தோடு சாலை முழுதும் பரவி இருந்தது.

பாஸ்ட் புட் பிரியாணிக் கடை...

சங்கீதா...

பெட்ரோல் பங்க்...

சாய்பாபா கோயிலின் பிரிவு...

மற்றோரு பெட்ரோல் பங்க்...

டாஸ்மாக் கடைச் சந்து..

அனைத்தையும் கடந்து, பயணச்சீட்டுக் கவுண்டர் முன் நின்று மணி பார்க்க...

9:52.

பயணச்சீட்டு எடுத்துக் கொண்டு, தாவிக் குதித்து, படிகளில் ஏறிப் பாய்ந்து, மேலேறி, கீழே குதித்து, நடைமேடையை அடைகையில்.. மணி..9:55.

இன்னும் அரை மணி நேரம் மட்டுமே..!

பெருமூச்சோடு வந்து நின்ற மின்சார இரயிலின் ஒரு பெட்டியில் அமர்ந்து, மணியைப் பார்த்துக் கொண்டே, ஸ்டேஷன்களை எண்ணிக் கொண்டே வந்தோம்.

சைதை...

மாம்பலம்..

கோடம்பாக்கம்..

நுங்கம்பாக்கம்...

சேத்துப்பட்டு...

எழும்பூர்...

பார்க்...

நிறுத்தியும் நில்லாமலும், நின்ற பின் இறங்கி, நடைமேடையைக் கடந்து சாலையில் இறங்க ஆயத்தமானால் மற்றுமொரு அதிர்வு.

ரோடெங்கும் சாக்கடை நீர் கரை புரண்டு ஓடுகின்றது. சாலையின் இருபுறமும் பிளாட்பாரக் கடைகள். ஓரமாக எங்கும் ஒதுங்கி நடக்கவே முடியாது. பார்த்தோம். 'இது ஆகிறதில்லை' என்று முடுவெடுத்து, இறங்கினோம்.

'சளக் புளக்' என்று மிதித்துக் கொண்டே, கிட்டத்தட்ட ஓடினோம். சாலையின் இறுதியை அடைந்து, சுரங்கப் பாதை வழி இறங்கி ஓடினோம். கடந்து, மறுபுறம் மேலேறி.. பிரியாணிக் கடையில் யார் மீதோ இடித்து விட்டு, யாரென்றும் பார்க்காமல் ஓடினோம்.

10:20.

மழை நீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்த, ஆட்டோ ஸ்டேண்ட் தாண்டி, பார்க்கிங் பக்கத்தையும் தாண்டி விட்டு, டிக்கெட் கவுண்டரைக் கடந்து, நடை மேடை 6-ஐ அடைந்தோம்.

10:28.

ஏற்காடு எக்ஸ்பிரஸ் நீண்ட உடலைக் கிடத்தியிருந்தது. எஸ் - 5 கோச் இன்னும் 0.5 கி.மீ நடக்க வேண்டும் என்று தோன்றியதால், அவசர அவசரமாக நடந்தோம். பொதுப் பிரிவு, ஏ.ஸி. கோச், தன்டி எஸ் பிரிவுகளை அடைந்தோம்.

ஏறிக் கொண்ட பின் தான் மூச்சே வந்தது.

சரியான சீட்டை அடைந்து அமர்கையில்...

'கூ ஊஊஊஊஊஊஊஊ....'

ஒரு நீண்ட விசிலோடு நகரத் தொடங்கியது மின்வண்டி.

ஹிக்கின்பாதம்ஸில் ஏதும் புத்தகம் வாங்கவில்லையே என்ற குறையோடு, வேகமாக ஓடத் தொடங்கிய ஏற்காட்டின் வழியே பின்னுக்கு நகர்கின்ற சென்னையை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினேன்.

மெல்லப் புலர்கின்ற அதிகாலை ஆறு மணி அளவில் சங்ககிரி நிறுத்தம்.



சங்ககிரி நிறுத்தம்.



பால்மடை ஈஸ்வரன் கோயில்.



பால்மடை நல்லபுள்ளி அம்மன் கோயில்.





காவல் தெய்வத்தின் புரவி வாகனங்கள்.


சப்த கன்னிமார்.



திருக்கோயிலின் அருகில் உள்ள வயற்காடுகள்.







திருவிளக்கு.


மலைக்கோயிலை நோக்கிப் நடைப்பயணம் தொடங்கியது.



ஆரம்பத்தில் காணும் சித்தர் மருத்துவ மடம்.



பாறைகளின் மேல் ஏறிச் செல்கின்ற படிக்கட்டுகளின் அணிவரிசை.



நாகராஜா.


பாதி வழியில் வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கையில் பார்த்த நகரின் பறவைப் பார்வை.


பாறையில் பொறித்த பாம்புப் படம்.


'இதோ நெருங்கி விட்டோம்' என்று நம்பிக்கை ஊட்டுகின்ற இளைப்பறல் மண்டபங்கள்.


திருக்கோயிலின் ஒரு வாசல்.


மண்டபத்தின் சில தூண்கள்.






ஒற்றைக் கால் தவம் புரியும் பரசுராம முனிவர்.


திருக்கோயிலின் ஒரு வாயில் வழி.


ஆஞ்சநேயர் கோயில் செல்லும் வழியில் இருந்து கோயிலின் ஒரு பார்வை.


தென்னாடுடைய சிவனே போற்றி..!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!