Wednesday, December 31, 2008

இராதாப்ரேமி!யர்பாடியின் பொன் அந்தி மாலை நேரம் அது.

யமுனை நதி சலனமின்றி ஓடிக் கொண்டிருக்கின்றது. அதன் நீரலைகள் காற்றின் மென் தீண்டல்களின் போதெல்லாம் அசைந்தாடி, நளினமான இளம் பெண்ணின் இடை போல வளைந்து நகர்ந்து, நகர்ந்து செம்மண் கரைகளின் மீது மோதிக் கொண்டிருக்கின்றன. அதன் கரைகளின் வளர்ந்திருந்த நாணல் செடிகள், மாலைக் கால ஊதற் காற்றுக்குத் தலையாட்டிக் கொண்டிருக்கின்றன. படிக்கட்டுகளில் விரவியிருந்த ஈரம் அவ்வப்போது, வந்து மோதிய சிலுசிலுப்புத் தென்றலில் தவழ்ந்து கொண்டே இருக்கின்றது. வெண்மை நிற நுரைகளைக் கண்ட சிறுவர்கள் வெண்ணெய் என்று நினைத்து அள்ளி அள்ளித் தின்கிறார்கள். கண்ணன் வாழும் ஊரின் கரைகளைத் தொட்டுக் கடக்கும் நதியின் நுரைகள் அல்லவா..? அவையும் இனிக்கின்றன.

நதியின் அக்கரையில் இருந்து ஆரம்பிக்கின்றது ஒரு வனம். பலவித மரங்கள், காற்றுக்கு அடையாளம் தரும் பலவித மணம் பூக்கும் மலர்கள், பசுமையான புற்செடிகள், மூங்கில்கள், குளங்கள், மலைகள். இயற்கையின் முழுமையான அன்பான அரவணைப்பில் கட்டுண்டிருக்கும் காடு அது. மாலை ஆகி விட்டதல்லவா..? ஆநிரைகள் மேய்த்த யாதவச் சிறுவர்கள் களைப்புடன் மீண்டும் வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். பசுக்களும், மாடுகளும், ஆடுகளும் கூட தமது எஜமானர்களோடு முட்டாமல், மோதாமல் தமக்குள் இரகசியங்கள் பேசிக் கொண்டு வந்து கொண்டிருக்கின்றன.

எங்கிருந்தோ ஒரு தேமதுரக் குழலோசை கேட்கின்றது.

வேறு யாராக இருக்க முடியும்..? சூரியனைத் தவிர கதிர் ஒளி தர யாரால் முடியும்..? சிலுசிலுவென ஈரம் கலந்த குளிரைத் தர தென்றல் காற்றையன்றி வேறு யாரால் இயலும்..? உச்சி முகடுகளில் இருந்து கிளம்பி ஒவ்வொரு மலராய் முத்தமிட்டு தேன் அள்ளி சேகரித்து, சேர்த்து வைத்து இனிக்க இனிக்கச் சொட்டுச் சொட்டாய்க் கொடுக்கத் தேனீக்களால் அன்றி வேறு யார் செய்ய முடியும்..? கேட்பவர் அத்தனை பேரையும், கிறங்கச் செய்து, விழிகளில் நீர் பெருகச் செய்து, அந்த மயக்கத்தில் மனதில் மிதக்கின்ற கசடுகளையும் கவலைகளையும் கனமிழக்கச் செய்யும் அந்த கண்ணனை அன்றி யாரால் அத்தகைய குழலோசையை வழங்க முடியும்..?

வனத்தின் மரங்களின் இடுக்குகளில் எல்லாம் சின்னச் சின்னதாய்க் கூடுகள் இருக்கின்றன. அவற்றின் கையகல இடங்களில் எல்லாம் சிட்டுக் குருவிகளும், மைனாக்களும் தத்தம் குட்டிகளோடு இருக்கின்றன. அவை அத்தனையும் அந்த நாத ஓசையில் மயங்கி சிறகடிக்கவும் மறந்து பொட்டுக் கண்கள் மூடி இருக்கின்றன. நதியில் வரும் நீரோட்டத்தை எதிர்த்தும், அதன் வழியோடு சென்றும் துள்ளித் திரியும் மீன்களும் அந்த குழல் இசையைக் கேட்க வேண்டும் என்பதற்காக, நீரில் இருந்து மேலே மேலே எம்பித் துள்ளித் துள்ளிக் குதிக்கின்றன. அப்போது நதியைப் பார்த்தால், அதன் மேல் மழைக் கம்பிகள் விழும் போது எப்படி துளிகள் தெறிக்குமோ, அப்படி காட்சியளிக்கின்றது. அந்த மச்சங்களுக்கெல்லாம் தரையில் வாழும் ஜீவன்களைக் கண்டு பொறாமையாய் இருக்கின்றது. பின்னே என்ன, தரை உயிர்கள் எல்லாம் நொடி அளவும் இடைவெளி இன்றி உயிர் மயக்கும் இசையைக் கேட்கின்றன அல்லவா..?

நதியின் கரைகளில் படர்ந்திருக்கும் தாமரை இலைகளின் மேல் தவளைகள் தாவித் தாவி விளையாடுகின்றன. காற்றில் எம்பிக் குதிக்கும் மீன்களுக்கு அவற்றைக் காணும் போது, தம்மைக் கிண்டல் செய்கின்றனவோ என்று தோன்றியது. மீன்களின் சந்தேகத்தை உணர்ந்தது போல், தவளைகள் வேறோர் இடத்தைக் காட்டின. அங்கே பாம்புகள் மயக்கத்தில் தலை அசைத்து, தத்தம் வால்களால் தாளம் போட்டுக் கொண்டிருந்தன. 'கால்களே இல்லாத பாம்புகளே, உற்சாகத்தில் ஊறிக் கிடக்கும் போது, அவற்றைப் பற்றிய பயமில்லாமல், நான்கு கால்களோடு நாங்களும் மகிழ்ச்சியோடு குதித்துக் கொண்டிருக்கிறோம்..' என்று சொல்லின போலும்..!

மரங்களின் கிளைத்திருந்த இலைகள் காற்றில் அசைந்து கொண்டிருகின்றன. அவையும் இசையை இரசிக்கின்றன. கிளைகளும், இலைகளும், பூக்களும், காய்களும், கனிகளும் யாவும் மொத்தமாக இசையமுதை அள்ளி அள்ளி அருந்திக் கொண்டிருக்கின்றன.

காற்றின் அணுக்களை எல்லாம் நிரப்பி, கானத்தால் கருவம் கொண்டலையச் செய்கின்ற கண்ணனது குழலிசை ஆயர்பாடியுள் மட்டும் செல்லாமல் இருக்குமா..? அப்படி செல்லாமல் இருக்கத் தென்றல் காற்று தான் விட்டு விடுமா என்ன..?

வளது வீட்டின் பின்கட்டில் தோட்டம் இருக்கின்றது. வெள்ளைப் பளிங்கினால் ஆன படிக்கட்டுகளைக் கடந்தால் தோட்டம். இராதா முதலாம் படிக்கட்டின் மேல் அமர்ந்திருக்கின்றாள். அங்கிருக்கும் ஒரு நெடும் தூணின் மேல் சாய்ந்திருக்கிறாள். அவளது கைகள், ஆசையோடு வளர்க்கும் புள்ளிமானுக்குப் புற்களைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால அவள் கவனம் அங்கே இல்லை. அந்த மான், இந்த மானின் நிலையைப் புரிந்து கொண்டது. மேலும் அவளைத் தொல்லை பண்ணாது, தானே புற்களை மேய்ந்து கொண்டிருந்தது. அதனை அறியாத இராதா, ஒவ்வொரு புல்லாக எடுத்துப் போட்டுக் கொண்டே, மேலும் அந்த மானிடம் பேச்சைத் தொடர்ந்தாள்.

"அடியே..! எத்தனை கொடுத்தும் தின்று கொண்டே இருக்கின்றாயே..? இத்தோடு மூன்று கட்டுகள் புற்களைக் கொடுத்தாயிற்று. இன்னும் பசி அடங்கவில்லையா உனக்கு..? நீ சாதாரண மான் தானா..? இல்லை ஒரு காலத்தில் யமுனை நதியில் பெரும்பசி எடுத்து வந்தவர்களை எல்லாம் தின்ற காளிங்கனின் அவதாரமா..?" காளிங்கனை நினைத்ததும் அந்த பாம்பரசனை நடனமாடிக் கொன்ற ஒரு தீரனது நினைவு அவளுக்குள் எழுந்தது. கையில் இருந்த புற்களைக் கண்ணீர்த் துளிகள் நனைத்தன.

தெருவில் ஒரு கிழவியின் குரல் கேட்டது."தயிர்...பால்...வெண்ணை...வெண்ணை..." வெண்ணைக் குரல் இந்தப் பெண்ணைத் தீண்டியவுடன் அவள் எண்ணத்தை நிரப்பியது ஒரு கள்ளனின் குழந்தை முகம். அதில் எப்போதும் ததும்பும் குறும்புப் புன்னகை.

இராதைக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.

அப்போது அவள் இதே தோட்டத்தில் மான்களோடும், மயில்களோடும், புறாக்களோடும், குயில்களோடும் விளையாடிக் கொண்டிருந்தாள். குயில்கள் ஒரு சமயம் 'கூ...கூ..'வெனக் கூவும். இராதை அகமகிழ்ந்து அவற்றைத் தடவிக் கொடுப்பாள். அதனைக் கண்டு, மயில்களும் தாமும் தடவல் பெற வேண்டும் என்பதற்காக, அவற்றால் இயன்ற அளவிற்கு கோரமாக அகவும். விழுந்து விழுந்து சிரிக்கும் இராதை, அவற்றையும் ஓடிப் போய்த் தடவுவாள். மகிழ்ந்து போகும் மயில்கள் தேகம் சிலிர்த்து, தோகை ஒன்றைக் கொடுக்கும். அப்படி கிடைத்த தோகைகளை இராதை பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்ளுவாள், ஒரு மாயவனுக்கு கொடுப்பதற்காக! தாம் கொடுக்கத் தோகை ஏதும் இல்லையே என்று சோகத்தில் குயில்கள் மேலும் கூவும். இப்போது இராதை இங்கும் ஓடி வருவாள்.

இந்த விளையாட்டை அவளது தோளின் மேல் அமர்ந்து வெண்புறாக்கள் பார்த்துக் கொண்டு கண் சிமிட்டிக் கொண்டிருக்கும். இது போன்ற சிறுபிள்ளைத்தனக்களில் தாங்கள் கலந்து கொள்வதில்லை என்ற இறுமாப்போடு புள்ளிமான்கள் அவை பாட்டுக்குத் தத்தம் புல் மேய்தல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்.

அப்போது, அவளது படுக்கையறையில் சத்தம் கேட்டது. யாரோ புகுவது போல! சிறிது நேரத்தில் அந்த சத்தம் அடங்கி அமைதியாகி விட்டது. யாரோ புகுந்து மறைந்திருக்கிறார்கள் என்று தெரிந்து விட்டது. 'யாராயிருக்கும்..?' என்ற சந்தேகத்தோடு இராதா தோட்டத்தில் இருந்து நீங்கி, அவளது அறையை நோக்கிச் செல்லும் போது, எதிரே பக்கத்து வீட்டுக்காரி வந்தாள். பின்புற வாசல் வழியாக உள்நுழைந்தாள் போலும்!

"இராதா..! இராதா..! கண்ணன் இங்கு வந்தானா..?" என்று கேட்டாள்.

புரிந்து விட்டது. அவளது அறைக்குள் நுழைந்தவன் அவனே தான்.

"ஏனக்கா..?" என்று கேட்டாள் இராதா.

"என்னவென்று சொல்வதம்மா..! இந்தப் பயலின் குறும்புகள் வர வர அதிகமாகிக் கொண்டே வருகின்றது. வளர வளர பொறுப்பு வரும். நந்தகோபரின் இல்லப் பெயர் சொல்லுமாறு வளர்வான் என்று பார்த்தால் இவன் இன்னும் சிறுவனாகிக் கொண்டே போகின்றான். போன வாரம் இவன் எங்கள் வீட்டுச் சமையலறையில் தரையில் வைத்திருந்த வெண்ணெய்ப் பாத்திரங்களை உருட்டி, உடைத்து, தின்று விட்டுப் போயிருக்கிறான். இவனுக்குப் பயந்து, அதற்கப்பால் தரையிலேயே பாத்திரங்களை வைப்பதில்லை. எல்லாவற்றையும் இறுக்க மூடி பரண் மேல் வைத்து விட்டு வெளியே சென்று விடுவேன். இன்று வந்து பார்த்தால், அந்த கள்ளன் என்ன செய்திருக்கிறான் தெரியுமா..? பரணின் மீதேறி எல்லாவற்றையும் தின்று விட்டு, ஒரு பூனையை வேறு அங்கே கொண்டு வந்து விட்டிருக்கிறான். இவன் தின்றது போக மிச்சம் மீதி இருந்தவற்றையாவது நாங்கள் பயன்படுத்துவோம். இப்போது அவன் கொண்டு வந்த பூனை, மிச்சம் மீதியையும் வழித்து தின்று விட்டிருக்கின்றது. இந்த முறை இவனைச் சும்மா விடுவதில்லை. அவனைப் பிடித்து நேராக நந்தகோபரிடமே கொண்டு போய்ச் சேர்க்கப் போகிறேன். அவனை மட்டுமல்ல, அந்த திருட்டுப் பூனையையும் பிடித்துக் கொடுக்கப் போகிறேன். யசோதையிடம் சொல்லி ஒரு பயனுமில்லை..! நான் துரத்திக் கொண்டு வரும் போது, அவன் இங்கே வந்தது போல் இருந்தது. வந்தானா..?" என்று பெருமூச்சு விட்டாள்.

இராதையின் படுக்கையறையில் சிறு சிறு சத்தங்கள் கேட்டன.

இராதை யோசித்து, "இல்லையக்கா..! அவன் இங்கே வரவில்லை..! நான் இங்கே தானே இருக்கிறேன். அவன் வரவில்லை..!" என்றாள்.

"கவனமாய் இரம்மா..! அந்தக் கள்ளன் பொல்லாதவன். இங்கே வந்து உன்னிடமிருந்தும் ஏதேனும் திருடிக் கொண்டு போய் விடுவான்..!" என்று சொல்லி விட்டுப் போனாள் அவள்.

'இன்னும் என்னிடமிருந்து எதைத் தான் திருட வேண்டியிருக்கின்றது அவன்..? என் பரிமள இதயத்தையும், உறக்கத்தையும் ஏற்கனவே களவாடிக் கொண்டு விட்டான். மிச்சமிருப்பது என் உயிர் மட்டும் தானே..!' பெருமூச்செறிந்தாள் இராதா.

பக்கத்து வீட்டுக்காரி சென்று விட்டாள் என்பதை உறுதி செய்து கொண்டு, இராதா அவளது அறைக்குச் சென்றாள். அதன் வாசலில் நின்று கொண்டு, உள்ளே பார்த்து கூவினாள்.

"யாரது என் அறைக்குள்ளே..? வெளியே வந்து விட்டால், அவர்கள் விரும்பிய பொருள் தரப்படும். நினைவிருக்கட்டும். எங்கள் தொழுவத்தில் நிறைய பசு மாடுகள் இருக்கின்றன. அவற்றில் இருந்து பெற்ற வெண்ணெய் எங்கள் வீட்டில் நான்கைந்து உறிகள் நிறைய இருக்கின்றன. உள்ளே இருப்பவர்களுக்கு வேண்டுமா, வேண்டாமா..? வேண்டுமெனில் அவர்களே வெளியே வர வேண்டும்.." என்றாள்.

"அவள் போய் விட்டாளா..?" என்று உள்ளே இருந்து குரல் கேட்டது. கூடவே, "மியாவ்..."

அவனே தான்.

"போயாயிற்று..! போயாயிற்று..!" என்றாள் இராதா.

கண்ணன் வெளியே வந்தான்.

ஆஹா..! அவன் வந்த கோலம் தான் என்ன அழகு..? நள்ளிரவில் வானம் முழுதும் கரியதாக இருளென இருக்கும். ஒரே ஒரு வெண்ணிலா மட்டும் பளீரென வெண்மையாய்க் காட்சியளிக்கும். ஆங்காங்கே புள்ளிப் புள்ளியாய் நட்சத்திரங்கள் மினுக்கும். அது போல கண்ணனது திரு கருமுகத்தில் உதடுகள் மட்டும் இப்போது தான் உண்ட வெண்ணெயின் வெண்மை நிறத்திலும், கன்னங்களில் எல்லாம் வெண்ணெய்த் தெறிப்புகளும் இருந்தன.

வானில் இருக்கும் கரு மேகங்களில் மழையானது சிறு சிறு பொட்டுத் துளிகளாய் இருக்கும். அந்த முகில்கள் போல, ஆடைகள் கலைந்திருந்தன. அவற்றின் மேல் வியர்வைத் துளிகள் பொட்டுப் பொட்டாய் துளிர்த்திருந்தன.

அவன் கைகளில் ஒரு பூனை. வெளியே வந்தவுடன், வெளிச்சம் கண்டு மிரண்ட அது, அவன் கைகளில் இருந்து துள்ளி குதித்து, 'தப்பித்தோம்; பிழைத்தோம். அப்பா கண்ணா..! நீ கூப்பிட்டாய் என்று வந்து, நான்கு சொட்டு வெண்ணெய் தின்பதற்குள் உயிருக்குப் பயந்து ஓட வேண்டியதாகி விட்டது. இன்றோடு நீ இருக்கும் திசைக்கே ஒரு வணக்கம்!' என்று சொல்லி விட்டு ஓடி மறைந்தது.

"இராதா..! நல்லவேளை நீ காப்பாற்றினாய். இவளிடம் சிக்கி இருந்தேன் என்றால், என் நிலைமை என்ன ஆகி இருக்கும். அப்பாவிடம் கூட்டிப் போயிருப்பாள். நான் ஆநிரை மேய்க்கப் போகாமல், வெண்ணெய் திருடுகிறேன் என்று அப்பாவுக்குத் தெரிந்திருக்கும். போகட்டும். வெளியே வந்தால் ஏதோ தருவதாகச் சொன்னாயே..? என்ன அது காட்டு..?" என்று கேட்டான் கண்ணன்.

அதுவரை கைகளில் மறைத்து வைத்திருந்த மயில் தோகைகளை நீட்டினாள், இராதா. தோட்டத்தில் இருந்து ஜன்னல்கள் வழியாக வீசிய காற்றுக்கு அந்த பசிய தோகைகள் அசைந்தாடின.

"ஆஹா..! இராதா..! எத்தனை அழகு..! எத்தனை அருமை..! கொடு..! எனக்கு மிகப் பிடித்தமானதையே நீ கொடுக்கிறாய்..! அருகே வா..! என்னை அவளிடமிருந்து காப்பாற்றியதற்கும், பரிசு கொடுப்பதற்கும் உனக்கு ஒன்று தருகிறேன். வா..!" என்று அவள் கைப்பிடித்து இழுத்தான், அந்த மாயன்.

மிக அருகில் சென்று நின்றவுடன், கண்ணன் அவளது செழுமையான பொன்னிறக் கன்னத்தில், தன் இதழ்களைப் பதித்தான்.

சடாரென அவளை விட்டு, ஓடி வெளியே மறைந்தான்.

கோதை என்று ஒருத்தி இருந்தாள். அவள் என்ன கேட்கிறாள்? " வெண் சங்கே..? அந்த மாதவனின் செவ்விதழ்ச்சுவையும், நறுமணமும் எது போல் இருக்கும்..? பச்சைக் கருப்பூரத்தின் வாசம் போலவா..? சிவந்த தாமரைப்பூவின் மணம் போலவா..? அவனது இதழ் ஸ்பரிசம் தித்திப்பாய் இருக்குமா..?" என்று!

அப்படி ஒரு இனிய சுந்தரனது திருவாய்ச் சுவையோடு இப்போது உண்ட வெண்ணெய் மணமும், சுவையும், இராதையின் கன்னங்களில் ஒட்டிக் கொண்டது.

இராதையின் கன்னத்தில் கண்ணன் பதித்த வெண்ணெய்ச் சுவடு எது போல் இருக்கின்றது தெரியுமா? வழக்கமாக அழகான குழந்தைகளின் மேல் திருஷ்டி விழக்கூடாது என்பதற்காக கருப்புப் பொட்டு வைப்பார்கள். ஆனால இராதையின் கன்னத்தில் இருந்த வெண் வெண்ணெய் உதட்டுச் சுவடானது, அவளது அழகுக்குத் திருஷ்டி போல் அமைந்தது எனில், அவளது திருவடிவழகைத் தான் எவ்விதம் இயம்ப..?

அன்றிலிருந்து இராதைக்கு வெண்ணெய் பற்றி நினைத்தாலோ, யாரேனும் சொல்வதைக் கேட்டாலோ, இந்நிகழ்ச்சி நினைவுக்கு வந்து விடும். கண்ணீர்ப் பெருக்குவாள்.

ஆயர்பாடியுள் கண்ணனது கான நாதத்தைச் சுமந்து நுழைந்த காற்று, இராதையின் தோட்டத்திலும் புகுந்து மயக்கியது. இராதையின் செவிகளிலும் குழைந்து இனித்தது.

இராதை அகமகிழ்ந்தாள். இது யாருடைய குரல் என்பது தெரியாதா..? குழலே அவனது குரல் அல்லவா..? அப்படியே ஓடினாள்.

நெடுங்காலம் பிரிந்திருந்த கடலை நோக்கி நதி அப்படி ஓடுவதில்லை; இரவெல்லாம் தனித்துக் கவலையோடிருந்த பனித்துளி காலைக் கதிரை நோக்கி அப்படி பாய்வதில்லை; பள்ளத்தில் பாயும் பேரருவி அவ்வளவு ஆக்ரோஷத்துடன் விழுவதில்லை; பலகாலம் காணாத காதலனைக் காண காதலி அப்படி துடிப்பதில்லை;

இராதை அப்படி ஓடினாள்.

முனா நதிக்கரையின் இக்கரையில் ஊரில் இருந்து கொஞ்சம் தள்ளி ஒரு நந்தவனம் அமைந்திருக்கின்றது. பெயரிலேயே தெரிகின்றது அல்லவா..? அது நந்தனது வனம். நந்தன் மகனது வனம். எத்தனை பூக்கள்; எத்தனை பழங்கள்; எத்தனை ரீங்காரமிடுகின்ற வண்டுகள்; தாமரையும், அல்லியும் மாறி மாறிப் பூத்துக் குதூகலிக்கின்ற பொய்கை ஒன்று மத்தியில் உள்ளது. ஆங்காங்கே மர மேடைகள். வேலிகளை எல்லாம் வளைத்து பூக்கொடிகள்! மரங்களை எல்லாம் கட்டி அணைத்து காய் காய்க்கும் கொடிகள். பறவைகள் எல்லாம் பேடைகளோடு கூடிக் கலந்து, நீலவானில் ஆனந்தச் சிறகடித்துப் பறக்கும் பெருவனம் அது..!

அங்கே கண்ணன் வீற்றிருக்கிறான். கண்களை மூடி அவன் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருக்கிறான். அவன் அருகிலேயே ஒருத்தி தம்புரா வாசித்துக் கொண்டிருக்கிறாள். ஒருத்தி மிருதங்கத்தால் காற்றை அதிரச் செய்து கொண்டிருக்கிறாள். ஒருத்தி தாமரைத் தண்டுகளை அள்ளி அள்ளி அவனது காலடியில் அமர்ந்திருக்கிறாள். மற்றுமொருத்தியோ, பறித்த மலர்களில் திருப்தியுறாமல், மேலும் மரங்களில் இருந்தும் பல வர்ணப் பூக்களை அள்ளிக் கொண்டிருக்கிறாள்.

இராதை ஓடி வந்து கண்ணன் அருகில் அமர்ந்து தலை குனிந்து அமர்கிறாள்.

தாமரை சூரியன் வரும் வரை எங்கே அவன் என்று தேடிக் கொண்டேயிருக்கும். அவன் வந்து விட்டாலோ, வெட்கம் வந்து தலை கவிழ்ந்து கொள்ளும்; கதிரவன் அவனது பொன் கிரணங்களால் மெல்ல மெல்ல அவளைத் தட்டி எழுப்பி இதழ் திறக்க வைப்பான்.

அல்லி மாலை வரும் வரை எங்கே சந்திரன் இன்னும் காணவில்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கும்; மாலையில் அந்த குளிர் அழகன் வந்து தனது வெண்ணொளியால் அல்லியை மடல் அவிழ்ப்பான்.

அது போல் இராதையும் இப்போது கண்ணனின் அருகிலே வெட்கத்தோடு அமர்ந்திருக்கிறாள்.

கண்ணன் தனது புல்லாங்குழலை ஒருபுறம் வைத்து விட்டு, தனது ஒரு கையால் அவளது தோளைத் தடவிக் கொடுக்கிறான். மறுகையால் அவளது திருமுகத்தைத் தாங்கி எடுக்கிறான். இராதை இன்னும் வெட்கப்படுகிறாள்.

"இராதா..! இராதா..! இங்கே பாரேன்..! என் உள்ளங்கையைப் பார். அது சிவந்திருக்கின்றது. அது எதனால் தெரியுமா? உன் முகத்தில் இருந்து நான் வழித்துக் கொண்ட வெட்கத்தால் தான். ஆனாலும் என்ன ஆச்சரியம்? எத்தனை வெட்கத்தை நான் உன் முகத்தில் இருந்து வழித்தெடுத்தாலும், வெட்கம் உன் திருமுகத்தில் ஊறிக் கொண்டே இருக்கின்றது. பிற்காலத்தில் பாஞ்சாலிக்கு கொடுக்க வேண்டிய அட்சய பாத்திரத்திற்கு உன் முகமே நல்ல உதாரணம். இராதா..! என் உதடுகளும் சிவந்திருக்கின்றன, பார்த்தாயா? அது எதனால் தெரியுமா..?

உன் வெட்கம் நிறைந்த என் கைகளை முத்தமிட்டேன். அதனால் தான்.

இங்கே எத்தனை தாமரை மலர்கள் இருக்கின்றன, பார்த்தாயா..? அவை எல்லாம் நீ அணிந்துள்ள இந்த மென் நிற உடைக்குத் துளியும் சமானமாகவில்லையே..? மலையின் மஞ்சள் கிரணங்கள் எங்கிருந்து அவற்றின் பொன்னிறத்தைப் பெறுகின்றன என்ற என் ஐயமும் இப்போது நீங்கி விட்டது. உன் அழகில் பட்டு எதிரொலிக்கும் பொன்னிற ஒளி தானே அது..?

நான் ஆயர்பாடியை நீங்கி, துவாரகையில் நிலைபெற்று விட்டேன் என்று நினைத்துக் கலங்கினாயா கண்ணே..? உயிர் இங்கே இருக்கும் போது வெறும் உடல் அங்கே என்ன செய்ய முடியும்..? மழை இங்கே பெய்து கொண்டிருக்கும் போது வர்ண வானவில் மட்டும் அங்கே தோன்றுவது எங்ஙனம்..? பொருள் இங்கே ஆயர்பாடியுள் இருக்கும் போது வார்த்தை அங்கே சென்று ஆவதென்ன..?

இங்கே பார்..! உன் தோட்டத்து மயில் தோகைகள் தான் என் சிகையை அலங்கரிக்கின்றன. உன் வனத்து மலர்மாலைகள் தான் என் மேனியோடு தழுவி இருக்கின்றன.

இனியும் நீ பேசாதிருந்தால், நான் குழலிசைப்பேன்..."

கண்ணன் அவனது புல்லாங்குழல் எடுத்து இனிமையாக வாசிக்கத் துவங்குகிறான். அதைக் கேட்டதும் இராதை கண்களில் ஆனந்தம் பெருக, கண்ணனது திருமார்பில் சாய்கிறாள்.

இரு காதலர்களின் இரகசிய லோக சஞ்சாரத்தில் நமக்கென்ன வேலை..?

வாருங்கள் போகலாம்..!

***

I Wish You All A Very Happy New Year A.D.2K9..!

Tuesday, December 30, 2008

IFFK - 2K8 :: Son of a Lion.


Son of a Lion
Australia/2007/35mm/Colour/92'/Pashu

Direction Screenplay: Benjamin Gilmour
Producer: Carolyn Johnson
Cinematography: Benjamin Gilmour, Haroon John
Editing: Alison Croft
Music: Amanda Brown
Cast: Sher Alam Miskeen Ustad, Niaz Khan Shinwani, Baktiyar Ahmed Afridi
டமேற்கு பாகிஸ்தானில் அரசாங்கச் சட்டங்கள் செல்லுபடியாகாத மாகாணங்களின் ஒன்று டாரா. இது ஆப்கானிஸ்தானைத் தொட்டு இருக்கின்றது. ப்ரிட்டாஷார்கள் அகண்ட பாரதத்தைக் கட்டமைத்த காலத்தில் இருந்தே இங்கு வாழ்ந்து வரும் பஷ்டூன் என்ற இனத்தவரின் குலத்தொழில், 'ஆயுதம் செய்வோம்'. மட்டுமின்றி துப்பாக்கி கடத்தல், எல்லை தாண்டுதல் என்று அட்வென்ச்சர் ஜீவனம்.

ஆப்கான் சந்தித்து வந்த/வரும் அத்தனை யுத்தங்களிலும் இவர்களது பங்கு எமகாதகம். ரஷ்ய ஆக்ரமிப்பின் போதும், 'அவர்களை எதிர்க்கிறேன் பேர்வழி' என்று சொல்லிக் கொண்டு சி.ஐ.ஏ., பாகிஸ்தானில் குதித்து ஐ.எஸ்.ஐ.யுடன் இணைந்த கைகளாகி, இவர்களை முஜாஹிகிதீன்கள் என்று பேரிட்டு களத்திற்கு அனுப்பிய போதும், பிலேடன் பாயுடன் ஒற்றைக்கண் ஓமர் ஆட்சி செய்த தாலிபான்கள் அரசாட்சியின் போதும், இப்போது அமெரிக்கப் படைகள் தண்டு இறக்கியிருக்கும் போதும் இவர்களது தொழிலின் பிரத்யேகத் தேவை உணரப்பட்டுள்ளது.

இவர்களில் ஒருவரின் மகனான நியாஸ் பள்ளிக்குப் படிக்கப் போகிறேன் என்று முடிவு செய்வதில் இருந்து, அவனது வீரத் தந்தையுடனான மோதலும், பெஷாவரில் இருக்கும் பெரியப்பாவின் பெண்ணான ஆயிஷாவுடனான நட்பும், படம் முழுதும் அவனது தடைகளைத் தாண்டிச் செல்ல வேண்டி, அவனது வாழ்க்கையைக் கூறும் படம் இது - Son of a Lion.

ஆஸ்திரேலிய இயக்குநரான Benjamin Gilmour அறிமுகப் படம் இது!

சி.என்.என். டாகுமெண்ட்ரி::

Sunday, December 28, 2008

IFFK - 2K8 :: Rupantor.

Rupantor
Transformation
Bangladesh/2008/35 mm/Colour/86'/Bangla

Direction, Screenplay:Abu Sayeed
Producer:Abu Sayeed
Cinematography:A.R.Jahangir, Abu Sayeed
Editing:Junaid Halim
Sound:Sujan Mahmud
Cast:Ferdous, Jayonto Chottopadhya, Sakiba, Habibur Rahman Habib, Shatabdi Wadut Bikrom, Mithun, Sahdat


மேற்கண்ட படங்கள் ஒலிம்பிக்ஸில் அம்பு எய்தும் போட்டியில் எடுத்த படங்கள். கொஞ்சம் உற்றுப் பாருங்கள். அம்பைப் பிடித்து இழுப்பதற்கு வலது கையின் இரண்டு விரல்கள்; திசையைத் தீமானிப்பதற்கு இடது கை விரல்கள். நன்றாக கவனித்துப் பார்த்தால், வலது கையின் கட்டை விரலுக்கு அம்பை இழுத்து வைப்பதில் எந்த பங்கும் இல்லை என்பது புலனாகும்.

எனில், அர்ஜூனனை விட சிறப்பாக அம்பு எய்தும் வல்லமை பெற்றவன் ஏகலைவன் என்று அறிந்த பின்பு, அரச குரு துரோணாச்சாரியார் ஏன் குருதட்சணையாக வலது கை கட்டை விரலைக் கேட்டார்...?

அதைப் பற்றிப் பேசும் படம் தான் ரூபந்தர் அல்லது மாற்றம் எனும் பங்களாதேஷ் படம்.

ரிஃப் இளம் இயக்குநர். மகாபாரதத்தின் ஏகலைவன் கதையைப் படமாக எடுக்க முயல்கிறார். அதற்காக அவரது குழுவுடன் மலைப்பாங்கான ஒரு காட்டுக்குள் செல்கிறார். அங்கு ஒரு கெஸ்ட் ஹவுஸ்ஸில் தங்குகிறார்கள். ஓர் இளம் பெண் தான் உதவி இயக்குநர். (ஆனால் படத்தில் ஒரு வெங்காயமும் காட்டப்படவில்லை. டிபிக்கல் அவார்டு மூவி. :( )

காட்டுப்பகுதிக்குச் செல்கிறது டீம். வேடிக்கை பார்க்கின்ற கூட்டத்தின் நடுவே, ஷாட் வைக்கிறார்கள். திடீரென்று சலசலப்பு. இயக்குநர் கொஞ்சம் கோபமடைந்து என்ன பிரச்னை என்று விசாரிக்க, வேடிக்கை பார்க்க வந்த காட்டுவாசி ஒருவர், நீங்கள் அம்பு விடும் முறை தவறு. நாங்கள் இவ்வாறு அம்பு விடுவதில்லை என்று சொல்லி விடுகிறார். இயக்குநர் ஆச்சரியமடைந்து, அவரை அம்பு விடச் சொல்ல, மேற்கண்ட படங்களில் இருப்பது போல், வலது கை ஆட்காட்டி விரல் மற்றும் நடு விரல் கொண்டு சரியாக அம்பு எய்ய, 'நச்'சென்று ஒரு மரத்தில் குத்தி அதிர்கின்றது.

'எனில், அர்ஜூனனை விட சிறப்பாக அம்பு எய்தும் வல்லமை பெற்றவன் ஏகலைவன் என்று அறிந்த பின்பு, அரச குரு துரோணாச்சாரியார் ஏன் குருதட்சணையாக வலது கை கட்டை விரலைக் கேட்டார்...?'

இரவு இணையத்தில் பார்க்கும் போது, ஒலிம்பிக்ஸிலும் அனைவரும் வலது கை கட்டை விரலைப் பயன்படுத்தாமலேயே அம்பெய்கிறார்கள். டிஸ்கஷன் நடக்கின்றது. 'நாம் சின்ன வயதில் விளையாடும் போது, கட்டை விரலைப் பயன்படுத்தி இருக்கிறோமே' என்கிறார்கள். ஆனால தொழில்முறை வேட்டையர்களான காட்டு மனிதர்கள் மாற்றி கூறுகிறார்களே என்று குழம்புகிறார்கள். சிலர் மக்கள் இதை எல்லாம் கவனிக்கவா போகிறார்கள். ஏகலைவன் கதை, காலம் காலமாக சமுதாயத்தில் கர்ண பரம்பரையாகப் பேசப்படும் கதை. எனவே நாம் திட்டமிட்டபடியே எடுக்கலாம் என்கிறார்கள். இயக்குநர் மறுத்து விடுகிறார். 'நம் கதையின் அடிநாதமே, ஏகலைவனின் தியாகம் தான். அதற்கு அர்த்தமே இல்லாத நிலை இப்போது. எனவே நான் இதற்கு முதலி ஒரு தீர்வு காண வேண்டும். பிறகே ஷூட்டிங்'.

அடுத்தா நாள் இயக்குநரும், உதவி இயக்குநர் பெண்ணும் காட்டுக்குள் செல்கிறார்கள். வேட்டை மனிதர்கள் வசிக்கும் குடிசைகளை அடைந்து, அவருக்குத் தப்பு சொல்லிய மனிதரைச் சந்திக்கிறார்கள். அவர் அவரது பத்து வயது மகனை அழைத்து, அம்பு விடச் சொல்ல, அவனும் கட்டை விரலைப் பயன்படுத்தாமலேயே, 'விஷ்....'.

'கண்டிப்பாக இப்படி கட்டை விரலைப் பயன்படுத்தாதற்கு காரணம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.' என்று முடிவு செய்த ஆரிஃப், அம்மனிதரிடம், அவர்களது இனத்திலேயே மிக வயதானவரைக் கேட்க, அவர் டாக்கா சென்றிருப்பதாகவும், திரும்பி வந்தவுடன், அழைத்து வருவதாகவும் சொல்கிறார்.

கெஸ்ட் ஹவுஸில் தீவிர சிந்தனையில் சிகரெட் புகைகளில் ஆழ்கிறார்.

அடுத்த நாள், அந்த வயதானவரும் வந்து ' அவருக்கு வில் பயிற்சி கொடுக்கும் போதும், இதே முறையில் தான் சொல்லிக் கொடுத்தார்கள்' என்று ஒத்துக் கொண்டு செல்கிறார்.

ஏன் ஏகலைவன் காலத்தில் இருந்து, இவர்களது அம்பெய்யும் முறை மாற வேண்டும் என்று சிந்தித்து..... படத்தின் கதையை மாற்றி விடுகிறார், இயக்குநர். 'ஏகலைவா' என்ற கதை 'மாற்றம்' என்ற பெயர் பெற்றது, இப்படித் தான்!

அது வரை வலது கை கட்டை விரலைப் பயன்படுத்தியவர்கள், எப்போதிலிருந்து அர்ஜூனனை மிஞ்சிய வில்லாளி இருக்கக் கூடாது என்பதற்காக, தர்மத்திற்கும், நியாயத்திற்கும் விரோதமாக, மனுதர்மப்படி க்ஷத்ரியர்களின் நலனுக்காக சூத்திரனான ஏகலைவனின் கட்டைவிரலை குருதட்சிணையாக இராஜகுரு துரோணாச்சாரியார் கேட்டாரோ, அப்போதிலிருந்து ஏகலைவனின் வம்சத்தவர்களும் கட்டை விரலை வெட்டாமல், மிச்சம் இருக்கும் விரல்களைக் கொண்டு அம்பெய்ய முயன்று வெல்கிறார்கள் என்று படத்தை மாற்றி விடுகிறார், ஆரிஃப்.

இதற்காக அந்த வேட்டையர்கள் இனத்திலிருந்தே இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து ஷூட்டிங் நடத்திப் படத்தை முடிக்கிறார்.

கடைசியாக மன நிம்மதியுடன் கெஸ்ட் ஹவுஸில் ஈஸிசேரில் அமர்ந்து சிகரெட் ஊதிக் கொண்டிருக்கும் போது, காட்டுவாசிகளின் நடனமும், பாட்டும் கேட்கிறது.

திரை இருள்கிறது.

டமும் படத்தில் எடுக்கப்படுகின்ற படமும் கலந்து கலந்து வருவது நம் மனதின் காலநிலைகளைத் தற்காலத்திற்கும், மகாபாரதக் காலத்திற்கும் மாற்றி மாற்றிக் கொண்டு செல்கின்றது. மிக மெதுவாக நகர்வது ஒருகட்டத்தில் தாங்க முடியவில்லை. வில் வீரர்கள் படத்திற்காகக் கஷ்டப்படுவதும் அவர்களது பாட்டும், நடனமும் இனிமை.

யோசித்துப் பார்த்தால், இது வெறும் ராஜவம்ச சதியில் இருந்து கீழ்சாதி ஏமாறாமல், தங்களது வாழ்வமைப்பை மாற்றிக் கொள்வது மட்டும் அல்ல, அதற்குப் பின்பும் நிறைய அர்த்தங்கள் நிறைந்து உள்ளது என்பதை உணரலாம்.

http://www.24bangladesh.com/2008/11/19/abu-sayeed%E2%80%99s-rupantor-gearing-up-for-indian-film-festivals/

Saturday, December 27, 2008

கிடைத்து விடுகின்றது!

ப்போதும்
ஒரு சம்பவம்
கிடைத்து விடுகின்றது.!

அதிகாலைத்
தேநீர்க்கடையில்
வடையில்
செருகியிருக்கும்
ஊதுவத்திச்
சாம்பல்!

தெருவில்,
குப்பைத் தொட்டியில்
கத்தும்
நாய்க்குட்டிக்
குரல்கள்!

மதில் சுவர் மேல்
பாயத்
தயாராயிருக்கும்
வெண் மென்
பூனை!

யாரும்
கவனிக்காது
பெய்யும்
இராமழை!

ஓடும் பேருந்தில்
கிழிந்த
தகரக்கூரையில்
இருந்து
சொட்டும்
வெயில் துளி!ராட்டினத்தில்
வேகமாகக்
கீழ் இறங்கும் போது
அடிவயிற்றில்
அழுத்தும்
பய கனம்!

வயல் நடுவே
கைகள் நீட்டிய
வைக்கோல்
பொம்மைத்
தலையின் மேல்
அமர்ந்த
கருங் காகம்!

ஆய்வுத் தவளை
போல்
அடிபட்டு
சாலையில்
குழப்பமாய்ப்
பிளந்து கிடக்கும்
ரத்த நாய்!

பிச்சை கேட்கும்
குரல்
தொடாத
திசை நோக்கி
நகர்ந்து செல்பவன்
கைத்
தங்க ப்ரேஸ்லெட்!

ஒவ்வொரு இருக்கையிலும்
மஞ்சள் கார்டு
வைக்கும்
பழுப்புச் சிகை
சிறுமி
கோர்த்திருக்கும்,
வற்றிய குழந்தையின்
புன்னகை!

ஒரு கவிதை
எழுதத் துவங்க
எப்படியோ
காரணங்கள்
கிடைத்து விடுகின்றன.

முடிப்பதற்குத் தான்
நிரம்பவும்
திணற வேண்டியதாக
இருக்கின்றது!

இந்தக்
கவிதைக்கு
நேர்வதைப்
போலவே!

Friday, December 26, 2008

IFFK - 2K8 :: My Marlon and Brando.

My Marlon and Brando
Gitmek
Turkey/2008/35mm/Colour/92'/Turkish,English

Direction:Huseyin Karabey
Producers:Huseyin Karabey, Lucinda Englehart, Sophie Lorant
Screeplay:Huseyin Karabey, Ayca Damgaci
Cinematography:A.Emre Tanyildiz
Editing:Mary Stephen
Sound:Mohammed Mokhtari
Cast:Ayca Damgaci, Hamali Khan, Emrah Ozdemir, Mahir Gunsiray, Volga Tekinoglu, Ani Ipekkaya, Cengiz Bozkurt Nesrin Cavadzade


ன்றைய தினமே மதியம் கைரளி தியேட்டரில் இப்படம். போட்டிக்கென வந்த படங்களில் இதுவும் ஒன்று. அந்த வரிசையில் முதலில் திரையிடப்படும் படம் இது என்பதால், கூட்டம் அள்ளியது. சுந்தர் வரத் தாமதம் ஆகும் என்பதால், முன்னதாகவே சென்று, சீட் பிடித்து வைத்திருந்தேன். அவர் வந்து படம் துவங்கும் போது, எல்லா சீட்டும் நிரம்பி, நடைபாதைகளில் எல்லாம் குந்திக் கொண்டனர். படத்தின் இயக்குநர் ஹுஸைன் வந்திருந்தார். 'இந்தப் படத்திற்கு ஏன் இவ்வளவு கூட்டம்' என்று ஆச்சரியக் கேள்வியிட்டார். பால்கனியில் சிறிது சலம்பல் சத்தம் கேட்டது. பின் வரிசைகளில் ஏதோ சண்டை கேட்டு, பின் சிரிப்புச் சத்தம் கிளம்பியது.

படம் துவங்கிய கொஞ்ச நேரத்திலேயே மெளனம் ஆக்ரமித்துக் கொள்ள, எனக்கு இடது பக்கம் அமர்ந்து கொண்டிருந்த ஒரு மத்திய வயது மனிதர் சாய்வாகச் சரிந்து விட்ட குறட்டை சப்தத்தின் மெல்லிய இடையூறின் பின்புலத்தில் படம் பார்க்கத் தொடங்கினேன்.

ய்ச்சா ஒரு துருக்கிய தியேட்டர் நடிகை. கொஞ்சம் குண்டானவள். அவளுடன் நடிக்கும் மற்றோர் இளம் நடிகை (Nesrin Cavadzade) இண்டர்நெட்டில் தன்னை விட இரண்டு வயது இளையவனுடன் டேட்டிங் செய்பவள். ஆய்ச்சாவின் காதலரும் ஒரு நடிகர். அவர் வடக்கு ஈராக்கில் இருக்கின்ற ஒரு குர்திஷ் இனத்தவர். ஏதோ ஒரு சந்திப்பில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு விரும்புகிறார்கள். இருவரும் பரஸ்பரம் வீடியோக்கள் அனுப்பித் தங்கள் காதலைச் சொல்கிறார்கள். ஹமா அலி தான் பயணிக்கும் ராட்டினத்தில் அமர்ந்து கொண்டு, நாட்டைச் சூழ்ந்திருக்கும் அமெரிக்க ஆக்ரமிப்புப் போர் பயத்தைச் சொல்கிறார். தான் சூப்பர்மேன் போல் பறக்கும் காமெடி வீடியோக்கள் அனுப்புகிறார்.

நாடகத்தில் சரியாக கவனம் செலுத்த முடியாத வகையில், பயம் அவளுள் பரவி விடுகின்றது. நாளுக்கு நாள் அதிகரிக்கின்ற போர்ச் செய்திகளும், வதந்திகளும் அவளை பீதி அடையச் செய்து விடுகின்றன. அவள் ஒரு முடிவெடுக்கிறாள். எல்லையைக் கடந்து, ஈராக் சென்று காதலருடன் சேர!

அமெரிக்க ஆக்ரமிப்பு ஆரம்பித்துள்ளதால், ஈராக்கின் எல்லைகள் மூடி சீல் வைக்கப்படுகின்றன. செக் போஸ்டுகளில் பாதுகாப்பு தீவிரம் செய்யப்படுகின்றது. எனவே நேரடியாகச் செல்லாமல் ஈரான் வழியாக, ஈராக் செல்ல நினைக்கிறாள்.

ஈராக்கில் இருந்து கள்ளத்தனமாகத் தப்பி வந்த ஒருவன் உதவி செய்வதாகக் கூறுகிறான். அவன் அதற்குப் பதிலாகத் தனது ஓவியங்களைப் பாதுகாத்து வைக்குமாறு கூறி, அவளது வீடு வரை வந்து வைத்து விட்டுப் போக, அவளது நடத்தை மேல் சந்தேகப்பட்டு ஒரு கிழவர் கத்துகிறார். இஅவளும் திருப்பிக் கத்தி அவரைத் துரத்தி விடுகிறாள். இதனாலும் ஊரை விட்டுக் கிளம்பும் அவள் எண்ணம் உறுதியாகிறது.

துருக்கியில் இருந்து ஈரான் சென்று, அங்கு டாக்ஸிகள், பஸ்கள் வழியாக பல தொலைவு கடக்கிறாள். ஓர் இடத்தில் செக் போஸ்ட்டில் காத்திருக்கச் செய்ய, அங்கு எதேச்சையாக ஒரு நாடக ஆதரவாளரைக் கண்டு, அவரது சிபாரிசில், ஈரானில் நுழைகிறாள். லஞ்சம் புழங்கும் எல்லைகளில், ஒரு டாக்ஸி வழியாக நகருக்குள் சென்று விடுகிறாள். அங்கு மகா இரவு நேரத்தில் ஒருவன் பின் தொடர, பயந்து கொண்டே ஹோட்டல் அறைக்குத் திரும்புகிறாள்.

மீண்டும் பஸ் பயணம் செய்து, ஈராக்கில் நுழைந்து விடுகிறாள். அங்கே ஒரு சின்ன கடை. அதன் வாசலில் ஒரு கிழவர் குந்தி இருக்கிறார். பனி பெய்யும் மலைகள். ஒரு நாய். இவள் வரும் முன்பாக இருந்த இரு பர்தாப் பெண்கள் கொஞ்ச நேரத்தில் சென்று விடுகிறார்கள். இவள் மட்டும் தனியாக! மாலை மயங்கி வருகிறது. அந்தக் கிழவர் மட்டும் இவளைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார். கொஞ்ச ஏரத்தில் அவளை உள்ளே கூப்பிடுகிறார். பனி பெரியதாகப் பெய்யத் தொடங்குகிறது. உள்ளே சென்ற அவளுக்குச் சூடாக குடிக்கத் தருகிறார். குடிக்கிறாள். மீண்டும் காத்திருக்கத் தொடங்குகிறாள்.

தூரத்தில் இருக்கின்ற பனிமலைகளுக்கு காமிரா மாறுகிறது. காமிராவின் பார்வை ஹமா அலியின் பார்வை ஆகிறது. காமிரா நடக்கின்றது. வெகு தூரத்தில், ஆய்ச்சா இருக்கும் வீடு புள்ளியாகத் தெரிகின்றது. காமிரா சொல்கிறது,'இன்னும் இரண்டு மணி நேரம் தான். ஆய்ச்சா, நான் வந்து விடுவேன்.ஐ லவ் யூ. ஐ மிஸ் யூ... ஐ கிஸ் யூ...!' காமிரா ஒரு மலையில் ஏறுகின்றது. வெகு அருகில் ஒரு தோட்டா வெடித்துப் பாயும் சத்தம் கேட்கின்றது. காமிரா அப்படியே சுற்றி விழுகின்றது. காமிரா இப்போது வானம் பார்க்கின்றது. கூட வரும் நண்பர் ஒருவர், 'அலி...அலி..' என்று காமிராவை உலுக்குகின்றார். காமிரா மெல்ல மெல்ல இருள்கின்றது.

திரையை இருள் கவ்விக் கொள்ள.... சுருள் சுருளாக அரபி இசை அவிழத் தொடங்க... எழுத்துக்கள் மெல்ல மெல்ல மேலேறுகின்றன.

யணம்...பயணம்...பயணம்..! படம் முழுக்கப் பயணம் தான். ஈரான், ஈராக்கின் எல்லைகளில் படர்ந்திருக்கும் பனிமலைகளின் முன் சின்னதாக பஸ் செல்கின்றது. வழியில் காணும் ஒரு திருமணக் கொண்டாட்டத்தில் ஆய்ச்சா கலந்து கொண்டு, நடனமாடும் போது, வேன்களில் கடக்கின்றனர் அமெரிக்க இராணுவ வீரர்கள். எல்லோரும் பர்தா அணிந்து கொண்டிருக்க, ஹோட்டலில் இவள் மட்டும் ஜீன்ஸ், சல்வார் போட்டிருக்க, வெய்ட்டர் வந்து மான் போல் சைகை காட்டுகிறான். கொஞ்சம் குழம்பி, பின் புரிந்து கொண்டு, தலை வரை இழுத்துக் கொள்கிறாள். ஈரானுக்கும், துருக்கிக்கும் இடையில் இருக்கும் கலாச்சார வேறுபாட்டைச் சொல்கிறது.

எல்லையில் அமர்ந்து புலம்பும் கிழவியின் வார்த்தைகள் உண்மை பூண்டிருக்கின்றன. லஞ்சம் புழங்கும் பார்டர்கள், டி.வி.ஷோக்கள், சி.என்.என்., தெரிவிக்கும் போர்க்களக் காட்சிகள், காத்திருத்தலின் வலிகள், கள்ள இம்மிகிரண்ட்களின் சிறைபிடிப்பு, பெண்ணுக்குப் பாதுகாப்பற்ற இரவு....!!!

டத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள இணையத்தைப் பிறாண்டியதில், இது படம் அல்ல என்பதும், ஆய்ச்சாவின் உண்மைக் கதை என்பதும், ஹமா அலி காட்டும் வீடியோக்கள் உண்மையாகவே அவர் அனுப்பி வைத்தவை என்பதும், இப்போது அவர் இல்லை என்பதும்...படத்தின் மேல் வைத்திருந்த பிரமிப்பை முற்றிலும் வேறொரு தளத்திற்கு நகர்த்தி விட்டது.

Wednesday, December 24, 2008

குற்றம் - The Wrong Thing.

மூன்று தினங்களாகப் பதிவுகளாகப் பார்த்துக் களைத்துப் போனவர்களுக்காக, எனது முதல் நாடக முயற்சி.

ஒரே ஓர் ஆள் மட்டும் வைத்து ஒரு நாடகம் எழுத முயன்றிருக்கிறேன். எனது தனி வலைப்பதிவில் இட்டால், என்னையும், என் அம்மாவையும் தவிர இன்னும் மூன்று பேர் (மட்டும்) பார்ப்பார்கள். 'வலைச்சரம்' பொது இடத்தில் வைத்தால், பலர் வந்து பார்த்து கருத்து சொல்லுவார்கள் என்று நம்புகிறேன்.

***

(மேடை முழுதிலும் இருள். மையத்தை நோக்கி மெல்ல ஒரு ஒளிக் கற்றை பாய்ச்சப்படுகிறது. அதில் ஒரு முகம் தெரிகின்றது. முகம் மட்டும், மற்றபடி மேடை இருளாக இருக்கின்றது. வயதான முகம். ரிட்டையர்ட் ஏஜ். ஆனாலும் கம்பீரமான முகம். அரங்கத்தைப் பார்த்துப் பேசுகிறார்.)

ஆசாமி : நான் ரங்கராஜன். ரிட்டையர்ட் போலீஸ். பொள்ளாச்சி, நெல்லை, பாபநாசம், அந்தியூர், நாகர்கோவில் என்றெல்லாம் மாறி விட்டு செங்கல்பட்டில் கடைசியாக உதிர்ந்த போது, என்ன போஸ்ட் என்பது முக்கியமில்லாத ஒன்று. பேரன்களோடு விளையாடும் வயதிலும் சில கேஸ்கள் என்னைத் தேடி வரும். கெளரவக் காரணத்தால் வெளியே சொல்லக் கூடாத பிரச்னைகளை நான் தீர்த்து வைப்பேன் என்ற நம்பிக்கையில் தரப்படுபவை. நானும் முடிந்த வரை முயல்வேன்...வெளியே சொல்லாமல் இருக்க! இப்போது சொல்லப் போகும் கேஸ் அப்படி மூடி மறைக்க வேண்டிய கட்டாயம் இல்லாத ஒன்று. சம்பந்தப்பட்ட பெயர்கள் மாறி இருக்கும். ஆனால் சம்பவம் நம் தினவாழ்வில் எதிர்கொள்ளும் நிகழ்வுகளின் மற்றொரு வடிவம்.

போகலாமா..?

(மெல்ல மெல்ல மேடை வெளிச்சம் ஆக்கப்படுகின்றது. முகத்திற்குச் சொந்தக்காரர் பேப்பர் குனிந்து பேப்பர் படிக்கத் தொடங்குகிறார். அவர் ஒரு சோபாவில் அமர்ந்திருக்கிறார். பக்கத்தில் ஒரு சின்ன மேஜை. அதில் செல்போன். சில பேப்பர்கள். பேப்பர்களின் மேல் வெய்ட்டுக்காக
ஒரு பேனா. வலது பக்கம் ஒரு அறைக்குச் செல்லும் திறப்பு. இடது பக்கம் பின்புறமாக ஓர் அறை. இரண்டு அறைகளின் முகங்களிலும் ஸ்க்ரீன்கள். ஒன்றில் பூக்கள் வரையப்பட்டிருக்கின்றன. மற்றொன்றில் இரண்டு யானைகள், பூத்தூவ, நின்ற கோலத்தில் சரஸ்வதியின் ஓவியம். ஒரு மூலையில் ஒரு மேஜை. அதில் ஒரு ப்ளாஸ்டிக் பூஜாடி. சுவரில் ஒரு காலண்டர். பின்புற அறை சமையலறை போல், குக்கர் விசில் சத்தம் கேட்கின்றது. வலது புற அறையில் இருந்து விதம் விதமான சேனல் சத்தங்கள் வருகின்றன. ஓர் இயல்பான குடும்பச் சூழல். ஆசாமி ஆர்வமாகப் பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறார்.)

ரங்கராஜன் : ஓஹோ..! அடடே..! அப்படியா..? ம்ம்ம்...! (பக்கத்தைப் புரட்டுகிறார்..!) இப்படி வேற நடக்குதா..? கலி காலம் தான்.

(அப்போது பக்கத்தில் வைத்திருக்கும் செல்போன் அடிக்கிறது. பேப்பரை மடித்து வைத்து விட்டு செல்போனை எடுத்து நம்பரைப் பார்க்கிறார்.)

ர : அட, நம்ம விசு..!

(காதருகில் வைத்து பேசத் தொடங்குகிறார். மைக் அவர் காலரில் இருந்தால் நல்லது. பார்வையாளர்களுக்கு அவர் பேசுவது மீத் தெளிவாகக் கேட்க வேண்டும். ஒவ்வொரு வசனத்திற்கும் இடையே மூன்று, நான்கு வினாடிகள் இ டை வெ ளி விட வேண்டும்.)

ர : ஹலோ..! ரங்கராஜன் ஸ்பீக்கிங்..! யாரு, விசுவா..?

...

ர : நல்லா இருக்கேன்டா. நீ எப்படி இருக்க..? வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க..? உன் பிஸ்னெஸ் எல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு..?

...

ர : சந்தோஷம். கடைசியா எங்க பார்த்தோம்..? பாலனோட பொண்ணு மேரேஜ்ல, இல்லியா..? ஒரு மாசம் முன்னாடி..! ஆமா, இப்ப என்ன விஷயம் சொல்லு..! காரணம் இல்லாம போன் பண்ண மாட்டியே நீ!

...

ர : பின்ன, பிஸ்னெஸ்மேன் ஆச்சே..! ஏதாவது ஒரு காரணம் இருக்கணுமே..! ஒரு நிமிஷம் இரு..!

(இடது பக்கம் திரும்பி, கிச்சனைப் பார்த்து)

சாந்தி, கொஞ்சம் அந்த பால் குக்கரை அடக்கும்மா..! ஒரு முக்கியமான கால் பேசிட்டு இருக்கேன்.

(பால் குக்கர் விசில் நிறுத்தப்பட வேண்டும்.)

இப்ப சொல்லுடா. என்ன விஷயம்..?

...

ர : ஓ..! அப்படியா..? எவ்ளோ பவுன்..?

...

ர : எவ்ளோ நாள் ஆச்சு? போலீஸ்கிட்ட கம்ப்ளெய்ண்ட் கொடுத்தியா...?

...

ர : ஏண்டா... திருட்டுப் போய்... ஸாரி...உன் வார்த்தைகள்ல காணாமப் போய் ஒரு வாரம் ஆகி இருக்கு..? இன்னும் கம்ப்ளிய்ண்ட் பண்ணாம இருக்கறது நல்லதில்ல.

...

ர : சரி. உன் பிரச்னை புரியுது. வெளியே தெரிஞ்சு போனா, பேர் பாதிக்கும்னு சொல்ற. நான் என்ன பண்ணணும்னு எதிர்பாக்கற..?

...

ர : குடும்பத்திலேயே யாரோ எடுத்திருக்கலாம்னு சொல்ற. நீயே எல்லாரையும் கூப்பிட்டு வெளிப்படையா பேசலாமே! 'த பாருங்கப்பா..! எனக்கு நகை போனது முக்கியம் இல்லை. பட், நம்ம ஃபேமிலிக்குள்ளயே ஒரு திருட்டு நடக்குதுனு வெளிய தெரிஞ்சா எல்லார்க்கும் அவமானம். நீங்களே சொல்லிடுங்க. யாரு எதுக்கு செலவு பண்ணிணீங்கனு சொல்லிடுங்க'னு கேட்டுப் பாரு.

...

ர : சரி, விடு! என் கிட்ட குடுத்திட்ட இல்ல, கவலைப்படாத, நான் பாத்துக்கறேன்.

...

ர : அட, தேங்ஸ் எல்லாம் ஃப்ரெண்ட்ஸ்குள்ள எதுக்கு! சரி, என்கொயரியை ஆரம்பிச்சுடறேன். உனக்கு யார் மேல சந்தேகம்?

...

ர : போப்பா..! என்ன இருந்தாலும் பெத்த பையன் மேல போய் யாராச்சும் சந்தேகப்படுவாங்களா..?

...

ர : உனக்கும், அவனுக்கும் ரிலேஷன்ஸ் சரி இல்லைனு நினைக்கறேன். அதான் இவ்ளோ காட்டமா பேசற. நான் முன்னாள் போலீஸ்காரன். எல்லார் மேலயும் எனக்குத் தான் சந்தேகம் வரணும். உன் பையன் விஜய், பொண்ணு அனிதா, வொய்ஃப் லக்ஷ்மி... வீட்டு வேலைக்காரி பேரென்ன...(கொஞ்சம் இடைவெளி விடுகிறார்.) அஞ்சலை... எல்லோரையும் என்கொயரி பண்ணப் போறேன். டோண்ட் வொரி மேன். கண்டுபிடிச்சரலாம்.

...

ரா : எனக்குத் தெரியாதா..? உங்க ரிலேஷன்ஸை கெடுத்திடற மாதிரி என் விசாரணை இருக்காது. ஐ ஏம் ஷ்யூர் எபவுட் திஸ். ஓ.கே..? டன். நீ என்ன செய்ற..? இந்த லிஸ்ட்ல இருக்கற எல்லாரோட மொபைல் நம்பரையும் எனக்கு மெஸேஜ் பண்ணிடு. அஞ்சலைகிட்ட செல் இருக்கா..?

...

ரா : நல்லது. ஏழைக்கேத்த எலிஃபெண்ட். வெச்சிடறேன்.

(மொபைலை வைத்து விடுகிறார். முகவாயைத் தடவிக் கொண்டு யோசிக்கிறார். பேப்பரைப் புரட்டுகிறார்.)

ர : ஓ..! பவுன் இவ்ளோக்கு வந்திடுச்சா...?

(மனதுக்குள் கணக்கு போடும் பாவனையை முகத்தில் காட்டுகிறார். மொபைலை எடுத்து ஒரு கால் செய்கிறார். காத்திருந்து பின்...)

ர : ஹலோ, குமரனா..? நான் தான் ரங்கராஜன் பேசறேன்.

...

ர : குட்மார்னிங்..குட்மார்னிங்..! ஸ்டேஷனுக்குப் போய்ட்டீங்களா..? இல்லை எங்கயாவது ட்யூட்டி போட்டிருக்கா..?

...

ர : ஜாக்கிரதையா இருங்க. அந்த ஏரியால மைன் பாம்ஸ் இருக்கறதா கேள்விப்பட்டிருக்கேன். ஜமுனா எப்படி இருக்கா? பொண்ணு என்ன சொல்றா..?

...

ர : ஓ.கே. எனக்கு ஒரு சின்ன வேலை பண்ணனும் நீங்க..?

...

ர : ஒண்ணும் பெரிசா இல்ல. போன ஒரு வாரத்துக்குள்ள சிட்டிக்குள்ள எந்த நகைக் கடையிலயாவது எழுபத்தஞ்சு பவுன் நகை விற்கப்பட்டிருக்கா இல்ல அடகு வெச்சிருக்காங்களானு ஒரு தகவல் வேணும். ஒரு சின்ன விசாரணைக்கு.

...

ர : இல்ல, அவங்க கம்ப்ளெய்ண்ட் எல்லாம் குடுக்கல. ஃபேமிலிக்குள்ள டவுட் பண்றார். அதனால் போலீஸ் வரைக்கும் போக வேணாம்னு இருக்கார். நான் சைலண்டா இதை டீல் பண்றேன். நீங்க இத மட்டும் கொஞ்சம் விசாரிச்சு சொன்னா சந்தோஷம்.

...

ர : அவ்ளோ நேரம் ஆக வேண்டியதில்லைனு நினைக்கறேன். சிட்டிக்குள்ள இவ்ளோ பெரிய அளவுக்கு நகைகளை டீல் பண்றவங்க ரொம்ப கம்மி. செளகார்பேட் சேட்களை எல்லாம் விடுங்க. என்கொயர் டைரக்ட்லி தி ஜூவல்லரி ஷாப்ஸ். எனக்கு கொஞ்சம் அர்ஜெண்ட்டா இன்ஃபர்மேஷன் வேணும். நம்ம கையை விட்டு ஜூவல்ஸ் போயிடக் கூடாது. அஞ்சு நிமிஷம். அதுக்குள்ள முடியும், பாருங்க.தேங்க்ஸ். வெச்சிடறேன்.

(மொபைலில் மெஸேஜ் டோன் கேட்கிறது. எடுத்துப் பார்த்து, பக்கத்தில் இருக்கும் டேபிளில் இருந்து பேப்பரையும் பேனாவையும் எடுத்து, மொபைலைப் பார்த்து, பேரையும், செல் எண்ணையும் குறிக்கிறார். ஒரு எண்ணை கால் செய்கிறார்.)

ர : ஹலோ விஜய்! ஹவ் ஆர் யூ...?

...

ர : அங்கிள் இஸ் ஃபைன். எவ்ரிஒன் இஸ் ஃபைன். வேர் ஆர் யூ நவ், மை யங் மேன்..?

...

ர : குட். ஷட்டில் இஸ் குட் ஃபார் ஹெல்த். சரி, உனக்கும் அவனுக்கும் டெர்ம்ஸ் சரி இல்லையா..? போன் பண்ணி புலம்பறான்.

...

ர : அது ஜென்ரேஷன் கேப், விஜய். உனக்கே தெரியுமே...? நான் அருண்கிட்ட எவ்ளோ சண்டை போட்டிருக்கேன் தெரியுமா..?

...

ர : இல்ல. நீ வந்து உன் ஃப்ரெண்ட்கிட்ட கேட்டுப் பாரு. அவனும் என்னைப் பத்தி இதே மாதிரி தான் குறை சொல்லுவான்.

...

ர : எல்லாம் உங்க மேல இருக்கற அக்கறையினால தான். ஓ.கே. ஸ்டடிஸ் தவிர மத்தபடி உனக்கும் அவனுக்கும் எதுவும் க்ளாஷ் இல்லையே..? பாக்கெட் மணி எல்லாம் ஒழுங்காத் தர்றானா...?

...

ர : அது போதும். ஓ.கே. பை. அவன் கூட அளவா சண்ட போடு. பி.பி.பேஷண்ட் அவன். ஷுகர் இருக்கு. டேக் கேர். பை.

(குறித்து வைத்த சீட்டில் ஒரு டிக் செய்கிறார். கொஞ்ச நேரம் யோசித்து விட்டு, மீண்டும் கால் செய்கிறார்.)

ர : ஹலோ..! அனிதா..! நான் தான்...

...

ர : ஸ்வீட் கேர்ள். எஸ்..! அங்கிள் ரங்கு தான் பேசறேன். எங்கம்மா இருக்க..? சல்ஸா க்ளாஸா..? ஹார்ஸ் ரைடிங்கா..?

...

ர : குட்..! நான் எதுவும் டிஸ்டர்ப் பண்ணிடலையே...?

...

ர : ஓ.கே..! இப்ப எதுக்கு ஃபோன் பண்ணிணேன்னா, உங்க டேடிக்கும், விஜய்க்கும் இடையில பிரச்னைகள் இருக்கா..? சரியாகவே பேச மாட்டேங்கறாங்க ரெண்டு பேரும்..?

...

ர : இவனைக் கேட்டா அவன் மேல குறை சொல்றான். அவன் இவன! நார்மல் ஃபாதர் சன் க்ளாஷ் தான..? வேற எதுவும் சீரியஸா இல்லையே..?

...

ர : ஓ.கே.டா. அங்கிள் அப்புறமா கால் பண்றேன். டேக் கேர்.பை.

(வைத்து விட்டு அடுத்த டிக் செய்கிறார். கால் வருகின்றது.)

ர : சொல்லுங்க குமரன். விவரம் தெரிஞ்சிடுச்சா..?

...

ர : ஓ...! என்னிக்கு...? யார் வந்தாங்களாம்..?

...

ர: ஓஹோ..! அதுவும் அப்படியா..? ஓ.கே. தேங்க்ஸ் ஃபார் தி டைம்லி ஹெல்ப், குமரன்.

...

ர : இல்ல. வேணாம். நானே பாத்துக்கறேன். அவர் தான் கம்ப்ளெய்ண்ட் பண்ணலைன்னு சொல்லிட்டாரே..? அதுக்கப்புறம் நாம எப்படி ஏக்ஷன் எடுக்க முடியும்..? மோர் ஓவர், எனக்கு இன்னும் கொஞ்சம் குழப்பம் இருக்கு. நீங்க சொன்னவங்க அதைத் திருடித் தான் அடகு வெச்சிருக்கணும்னு இல்ல. ஐ வில் டேக் கேர் அபவுட் திஸ். ஓ.கே. வெச்சிடறேன்.

(காலை கட் செய்கிறார். தீவிரமாகக் கொஞ்ச நேரம் யோசிக்கிறார். குறித்து வைத்திருந்த எண்களை மீண்டும் ஒருமுறை பார்த்து விட்டு, மீண்டும் செல்போனில் கால் செய்கிறார்.)

ர : அஞ்சலை..! நான் உன் முதலாளியோட ஃப்ரெண்ட் பேசறேன். ரிட்டையர்ட் போலீஸ் ஆபீஸர். இரு.. பதறாத..! இப்ப எங்க இருக்க..?

...

ர : நல்லது. நான் ஒரே ஒரு கேள்வி கேக்கறேன். உண்மையான பதில் வந்திச்சுனா ஒண்ணும் செய்ய மாட்டேன். பொய்யோட வாசம் கொஞ்சம் அடிச்சாலும், கால்கள்ல முட்டினு ஒரு ஏரியா இருக்காது. என்ன சொல்றியா..?

...

ர : ஒரே கேள்வி..? எழுபத்தஞ்சு பவுன் நகையை ஏன் நீ திருடினே..?

...

ர : இல்ல. இது நடிக்கறதுக்கான நேரம் இல்ல. நீ அடகு வெச்ச டி. நகர் ஷாப்ல அன்னிக்கு என்ன கலர் ரிப்பன் கட்டிட்டுப் போயிருந்தங்கறதுல இருந்து எல்லா தகவலும் தெரிஞ்சிடுச்சு. 'இல்ல.. தெரியாது'னு சொல்றதுல அர்த்தம் இல்ல. எனக்கு ஒரே ஒரு உண்மை தெரிஞ்சா போதும். நீயா இந்த வேலையச் செஞ்சியா இல்லை யாராவது செய்யச் சொன்னதாலா..? ஏன்னா எனக்கு நம்பிக்க இருக்கு. நீயா செய்யல. அப்படி செய்யறவளா இருந்தா நகைகளை அடமானம் வெச்சிருக்க மாட்ட. வித்திட்டு ஊர விட்டே ஓடிப் போயிருப்ப. மறுபடியும் அங்கயே வேலை பாக்கறத வெச்சுப் பார்த்தா, இதுல தெரியாம நீ மாட்டிக்கிட்டனு தான் தோணுது. உஷ்...! அழக் கூடாது. யாரு உங்கிட்ட நகைகளை கொடுத்தா..? அத மட்டும் சொல்லிடு.

...

ர : ஆகாது. அவங்களுக்கு எதுவும் ஆகாது. நான் கேரண்டி.ம்.. சொல்லு..!

...

ரா : ஓ..! எதிர்பார்த்தது தான். சரி. இப்ப ஒண்ணு செய். இனிமேல் அந்த வீட்ல காட்டிக் குடுத்திட்டமேன்னு குற்ற உணர்ச்சியோட நீ வேல செய்ய வேணாம். மனிதர்களைப் பத்தி உனக்குத் தெரியாது. அவங்களுக்கு சாதகமா இருக்கற வரைக்கும் தான் ஒத்துப் போவாங்க. இல்லாட்டி கழிச்சுக் கட்டிடுவாங்க. அவங்களே உனக்கு திருட்டுப் பட்டம் கட்டி அனுப்பினாலும் அனுப்பிடுவாங்க. அதுக்காக கவலப்படாத. அந்த வேலய விட்டுடு. என்னிக்கு உன்னை வீட்டை விட்டு அனுப்பறாங்களோ அன்னிக்கு எனக்கு போன் பண்ணு.. நான் வேற எடத்துல வேல வாங்கித் தரேன். இப்ப மார்க்கெட்ல இருந்து அவங்க வீட்டுக்குப் போய் வழக்கமா வேலையப் பாரு.

(போனை வைக்கிறார். அடுத்து ஓர் எண்ணைக் குறித்துக் கொண்டு கால் செய்கிறார்.)

ர : ஹலோ..! நான் தான் ரங்கராஜன் பேசறேன்.

...

ர : fine. நீங்க நல்லா இருக்கீங்களா..?

...

ர : ஆமா, சும்மா இல்ல. காரணம் இருக்கு. உங்களுக்கு திடீர்னு எழுபத்தஞ்சு பவுன் நகைய அடமானம் வெக்கற அளவுக்கு என்ன தனிப்பட்ட வகை கஷ்டம்..? அவன்கிட்ட கேட்ட குடுக்க மாட்டானா..? வீட்ல யாருக்கும் தெரியாம அப்படி என்ன திரைமறைவு வேலைகள்..?

...

ர : இருங்க. அழாதீங்க. எல்லாம் தெரிஞ்சிடுச்சு. எனக்கு மட்டும் தான் தெரியும். அவனுக்குத் தெரியாது. உங்க வேலைக்காரிகிட்ட குடுத்து விட்டு, ரகசியமா பணம் வாங்கி... எதுக்கு இதெல்லாம்..?

...

ர : என்கிட்ட நீங்க தைரியமா சொல்லலாம். என்னை விட்டு எங்கயும் வெளிய போகாது. எனக்குள்ள மட்டும் இருக்கும். உங்களுக்கு நினைப்பிருக்கானு தெரியல. ஒரு தடவ ரெண்டு ஃபேமிலியும் மூணாறு டூர் போனப்ப, என் கைல ராக்கி கட்டி விட்டீங்க. இருபது வருஷத்துக்கு முன்னாடி. அதுக்கு அர்த்தம் தெரியும் இல்லையா..?

...

ர : சொல்லுங்க. (நீண்ட மெளனம்.) இதை எல்லாம் நீங்க முன்னாடியே போலீஸ்கிட்ட சொல்லி இருக்கலாம். அட்லீஸ்ட் என்கிட்டயாவது..! fine. இப்பயும் ஒண்ணும் காரியம் கெட்டுப் போயிடல. அந்த ஆள, உங்க மாமானு தான சொன்னீங்க... மூணே நாள்ல கண்டுபிடிச்சு, குடுக்கற எனிமால இனிமேல உங்க வழிக்கே வராம பண்ணிடலாம். அவன்ட்ட இருந்து பணத்த மறுபடியும் வாங்கி, நகைய மீட்டிடலாம்.

...

ர : கண்டிப்பா அவனுக்கு டவுட் வரும். காணாம போன நகை எப்படி திடீர்னு திரும்பி எப்படி வந்திச்சுனு அவன் கேட்பான். நான் சொல்ற மாதிரி சொல்லுங்க. உங்க வீட்டு வேலைக்காரி அஞ்சல தான் நகையைத் திருடிட்டு போய் அடமானம் வெச்சிருக்கா. சமயம் பாத்து வேலய விட்டு ஓடிப் போக திட்டம் போட்டிருந்தா. யதேச்சையா கண்டுபிடிச்சுட்டேன். நகை எல்லாம் மீட்டுக் கொண்டு வந்திட்டேன்னு அவன்கிட்ட சொல்லுங்க.

...

ர : குதிக்கத் தான் செய்வான். போலீஸ்கிட்ட போறேன். கம்ப்ளெய்ண்ட் குடுக்கறேன்னு கத்துவான். குடும்ப நிலவரம் வெளிய தெரிஞ்சா மீடியாவுக்குத் தான் அவல். அதனால, வேலைக்காரிய, வேலைய விட்டு மட்டும் துரத்திடலாம்னு சொல்லிடுங்க. மீடியான்னா அவனுக்கு கொஞ்சம் பயம். ஒருதடவ போர்ட் மீட்டிங் முடிஞ்சு ஆனுவல் ரிப்போர்ட் டிஸ்ட்ரிப்யூட் பண்ணும் போது, ஒரு ஜர்னலிஸ்ட் கூட தகராறு ஆகி, இப்போ இவன் மேல ப்ரெஸ் ஒரு கண் வெச்சிருக்கு. சின்ன திரி கிடைச்சா போதும். வெடி வெச்சிடுவாங்க. இது அவனுக்கும் தெரியும். சோ ரெண்டு மூணு நாள்ல பணம் கிடைச்ச உடனே, நகைய மீட்டுக் கொண்டு வந்திடுங்க. நான் சொன்ன மாதிரி செஞ்சிடுங்க.

...


ர : இல்ல. நகை எங்கயும் போகாது. ப்ளாக் பண்ணி வெச்சிருக்கோம்.

...

ர : அழாதீங்க. இனிமேலயாவது உஷாரா இருங்க. நானும் அவன் கிட்ட சொல்லி போலீஸ் அளவுக்கு போக வேணாம்னு சொல்றேன். பணத்தை மீட்டப்புறம் உங்களுக்கு மறுபடியும் கால் பண்றேன். சரி, இப்ப வெச்சிடறேன்.

(போனை வைத்து விடுகிறார். சமையலறைச் சத்தங்கள் அமைதியாகின்றன. சேனல் குரல்கள் ஓய்ந்து மெளனமாகின்றன. ரங்கராஜன் முன்னே நிமிர்ந்து பார்க்கிறார். விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டு, மீண்டும் ஒற்றைக் கற்றை ஒளி அவர் முகத்திற்கு மட்டும் பாய்ச்சப்படுகிறது. அரங்கத்தைப் பார்த்துப் பேசுகிறார்.)

ர : இது தான் நான் செய்த வேலை. பிறகு லக்ஷ்மியின் மாமாவைப் பிடித்துப் பணத்தை மீட்டு, நகையை மீட்டு, வேலைக்காரி மேல் லக்ஷ்மி திருட்டுக் குற்றம் சுமத்தி, அவளைத் துரத்தி, அவள் என் மூலமாக வேறொரு வீட்டில் வேலை செய்கிறாள்.

இதில் எத்தனை பேரை நான் ஏமாற்றி இருக்கிறேன்? விசு, அவன் மனைவி லக்ஷ்மி, வேலைக்காரி அஞ்சலை.

விசுவைப் பொறுத்தவரை, நகை திருடியவள் வேலைக்காரி. அவள் மூலமாக நகை மீண்டும் கிடைத்து விட்டது. அவளுக்குத் தண்டனை பணிநீக்கம். அவனுக்கு குடும்பத்தின் மேல் இருந்த அவநம்பிக்கை போய், மீண்டும் குடும்பத்தில் இன்பம் வீசுகிறது.

லக்ஷ்மிக்கு அவள் செய்த குற்றம் அவள் கணவனிடம் இருந்து மறைக்கப்பட்டு, நல்லவளாகவே தொடர்கிறாள். அவளுக்கு அவள் மாமன் தொல்லையும் ஒழிந்தது. பணமும், நகையும் கிடைத்தது.

வேலைக்காரி அஞ்சலைக்கு 'இப்படி தன்னை உபயோகப்படுத்தி விட்டு, தன் மேலேயே திருட்டுப் பட்டம் கட்டி, துரத்திய வீட்டிலிருந்து' விடுதலை. வேறொரு நல்ல வீட்டில் வேலை.

மூன்று பேருக்கும் சுகமான முடிவைத் தரும் வகையில் சம்பவங்கள் என்னால் டிசைன் செய்யப்பட்டன. இதில் எதுவும் தவறு நான் செய்து விட்டதாக நினைக்கவில்லை. ஆனால் ஒவ்வொருவருக்கும் நான் செய்தது நல்லது. மொத்தமாகப் பார்த்தால், ஒரு வகைக் குரூரமாகவும் தெரியலாம். ஆனால் தனிப்பட்ட அவர்களது நன்மைகளுக்காக கலெக்டிவான செயல்முறைகள் சில சமயம் இப்படிக் கொடூரமாகத் தெரியலாம். நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா..?

(அந்த ஒற்றை ஒளிக் கற்றையும் அணைகிறது. மேடையைப் பழையபடிக்கு இருள் முழுக்க முழுக்க சூழ்கிறது.)

***

கலைவனாக நாடகம் எழுத, கற்றுத் தந்த துரோணருக்குச் சமர்ப்பணமாக, 'ரங்கராஜனை' நாயகனாக்கி இருக்கிறேன். வாத்தியாருக்கு நன்றிகள்!நன்றி!

***

டிசம்பர் முதல் வாரத்தின் சீனா சார் அனுமதி கொடுத்த படியால், வலைச்சரத்தில் ஒரு வாரம் தோன்றியதை எல்லாம் எழுதிக் கொண்டிருந்தேன். அப்போது பதிவுகளின் இடையே ஒரு நாடக முயற்சி செய்து பார்த்ததில், உருவானது இது.

நாடகத்திற்கு வந்த சில கமெண்ட்டுகள் ::

13 comments:
தமிழ்ப்பறவை said...

நண்பர் வசந்த்துக்கு....
நல்ல முயற்சி. நன்றாகத்தான் இருந்தது.குறைகள் அவ்வளவாக இல்லை.
ஆனாலும் வேலைக்காரிக்கு இன்னமும் அஞ்சலை என்றுதான் பெயர் வைக்க வேண்டுமா...?
என்னதான் சமாதானம் சொன்னாலும் 'லஷ்மி'யின் மானம் காக்க , ஒரு வேலைக்காரியை திருட்டுப் பட்டம் கட்டியது சரியில்லைதான்.
வலியோர் வலியோர்தான்... மெலியோர் மெலியோர்தான் எனும் பூர்வாசிரமக் கருத்துக்களை மறுபடியும் வலியுறுத்தும் கதை.
ஆனால் நடைமுறையில் இவ்வாறுதான் நடக்குமென்பதால் வாய் பொத்திக் கொள்கிறேன்.
வாழ்த்துக்கள் வசந்த்...

December 4, 2008 12:56:00 AM IST
தமிழ்ப்பறவை said...

just for mail folloup

December 4, 2008 12:56:00 AM IST
இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

வாழ்த்துக்கு நன்றிகள்.

/*ஆனாலும் வேலைக்காரிக்கு இன்னமும் அஞ்சலை என்றுதான் பெயர் வைக்க வேண்டுமா...?*/

சட்டென்று வேறு பெயர் தோன்றவில்லை.

/*பூர்வாசிரமக் கருத்துக்களை மறுபடியும் வலியுறுத்தும் கதை.*/

அப்படி இல்லை. இப்படித் தான் நடக்கும் என்று சொல்ல வந்தேன். நான் வலியுறுத்தவெல்லாம் இல்லை.

December 4, 2008 1:07:00 AM IST
வீரசுந்தர் said...

இன்னமும் வேலைக்காரிகள் அஞ்சலைகளாகவே இருக்கிறார்களா!? ஒரு மாறுதலுக்கு ஸ்ரேயா, நமீதா என கதைக்காக மட்டும் பேர் சூட்டினால் என்ன!?

வித்தியாசமான கதைக்களம். ஒரு விதத்தில் நிர்வாக மேலாண்மைக் கருத்துடன் ஒத்துப் போகிறது. நிறுவன மேலாளர், பெரிய வேலைகளை தனக்கு கீழே வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு சிறிது சிறிதாகப் பிரித்துக் குடுத்து வேலை வாங்குவதைப் போல.

December 4, 2008 1:11:00 AM IST
இரா. வசந்த குமார். said...

அன்பு சுந்தர்...

மிக வித்தியாசமான பார்வையாக மேனேஜ்மெண்ட் கான்செப்ட்கள் இதில் இருக்கின்றன என்று சொல்லி இருக்கிறீர்கள்.

December 4, 2008 1:28:00 AM IST
துளசி கோபால் said...

நாடகம் நல்லா வந்துருக்கு. நம்ம தமிழ்ச் சங்கத்துலேபோட நாடகம் தேடிக்கிட்டு இருக்கேன்.

இது கொஞ்சம் நீளமா மட்டுமில்லே ஒரே ஆள் என்றதாலே பார்வையாளர்களுக்கு அவ்வளவா சுவாரசியப்படாது.

முதல் ரெண்டுவரிசையைத் தவிர எல்லாரும் யுகயுகமாப் பிரிஞ்சு இருந்தவங்க, இப்பத்தான் பார்த்த மாதிரி சளசள ன்னு பேசிக்கிட்டு இருப்பாங்க(-:

வேற நகைச்சுவை நாடகம் எதாவது எழுதியிருக்கீங்களா?

December 4, 2008 1:45:00 AM IST
கபீஷ் said...

//என்னதான் சமாதானம் சொன்னாலும் 'லஷ்மி'யின் மானம் காக்க , ஒரு வேலைக்காரியை திருட்டுப் பட்டம் கட்டியது சரியில்லைதான்.//

ஆமா

December 4, 2008 6:07:00 AM IST
இரா. வசந்த குமார். said...

அன்பு துளசி கோபால் மேடம்...

வாசக இடைவெளி என்ற ஒன்று நல்ல சிறுகதைகளில் இருக்க வேண்டிய ஒரு கூறு. அந்த இடைவெளியை படிப்பவர்கள் தத்தம் மன உயர்விற்கேற்ப நிரப்பிக் கொள்வார்கள். நம் மனநிலை நாம் வளர்வதேற்கேற்ப பக்குவம் அடைந்து கொண்டே வரும் என்பதால், அந்த சிறுகதைகளை ஒவ்வொரு முறை படிக்கும் போதும் வெவ்வேறு அர்த்தங்களைக் கொடுக்கும். அதனால் அவை அமரகதைகள் ஆகின்றன.

அந்த மாதிரியான வாசக இடைவெளி ஒன்றை நாடகத்திலும் கொண்டு வர செய்த சிறு முயற்சியே இது.

எதிர்முனையில் இருப்பவர் பேசுகின்ற வசனங்கள் அனைத்தும் பார்வையாளர்களின் யூகத்திற்ல்கே விடப்பட்டு, இந்த முனையில் பேசுபவரின் ரிப்ளைகளைக் கொண்டு மட்டுமே, பார்ப்பவர்கள் உணர்ந்து கொள்ளுமாறு எழுத விரும்பினேன்.

இதில் இருக்கின்ற கவனங்கள் தேவைப்படும் இடங்கள்,

1. இந்த முனையில் இருப்பவர் தான் அதிக வசனங்களைப் பேச வேண்டும். வெறும் ஆங்... ஆங்... சரி... ஒ.கே.. என்றவாறு பேசக் கூடாது.

2. முக்கியமாக ஒரே ஒருவர் மட்டும் நடிப்பதால், நீங்கள் சொன்ன மாதிரி பார்ப்பவர்கள் சலிப்புற்று விடக் கூடாது என்பதால், கூர்மையான, சுவாரஸ்யமான வசனங்களின் பங்கு மிக முக்கியம். அந்த இடத்தில் ஓரளவு மட்டுமே நன்றாக வந்துள்ளது என்பதை தங்களது பின்னூட்டத்தில் இருந்து புரிந்து கொள்கிறேன். Miles to go.

இது தான் எனது முதல் நாடக முயற்சி என்பதால், இந்தக் குறைகளை மன்னித்தருளுமாறு கேட்டுக் கொள்கிறேன். வேறு நாடகங்கள் எதுவும் எழுதவில்லை. இன்னும் எவ்வளவு நாட்களில் நகைச்சுவை நாடகம் தேவை என்று சொன்னீர்கள் எனில், முயற்சி செய்து பார்க்கிறேன்.

நன்றிகள்.

***

அன்பு கபீஷ்...

தினப்படி வாழ்க்கையில் நடக்கின்ற ஒன்றைத் தான் சொல்லி உள்ளதாக நினைக்கிறேன். ஆனாலும் அதனைப் பற்றிய குற்ற உணர்வு (எனக்கும்) இருப்பதால் தான் நாடக ஆரம்பத்திலும், கடைசியிலும் பார்வையாளர்களிடம் கேட்கிறார், 'நான் செய்தது சரியா?' என..!

அந்தக் கேள்விக்கான பதிலை பார்ப்பவர்கள் தத்தம் மனதில் தான் தேட வேண்டும்.

நன்றிகள்.

December 4, 2008 6:39:00 AM IST
துளசி கோபால் said...

வசந்து,

எப்ப முடியுமோ அப்ப எழுதித்தாங்க. பொங்கலுக்கு இல்லைன்னா புதுவருசத்துக்கு ஆச்சு.

நாடகத்துலே நடிக்க மக்களை ரவுண்டுகட்டி ரிகர்ஸல் நடத்தறதுக்குள்ளே போதும் போதுமுன்னு போயிரும்.

மூணு நாடகம் இயக்கி நடிச்ச பெருமை ஒன்னு நமக்கு இருக்கே:-)))

December 4, 2008 7:15:00 AM IST
சதங்கா (Sathanga) said...

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

December 4, 2008 9:26:00 AM IST
கிருத்திகா said...

புதிய முயற்சின்னு சொன்னாலும் அருமையா வந்திருக்கு. வாழ்த்துக்கள்.

December 4, 2008 12:31:00 PM IST
இரா. வசந்த குமார். said...

அன்பு துளசி கோபால் மேடம்...

கண்டிப்பாக முயற்சி செய்கிறேன். இன்னுமொரு இலக்கிய முறையில் கை வைக்கலாம் என்று வழி காட்டியிருப்பதற்கு நன்றிகள்.

***

அன்பு சதங்கா...

மிக்க நன்றிகள் தங்கள் வாழ்த்துற்கு..!


***

அன்பு கிருத்திகா மேடம்...

வாழ்த்துக்கு நன்றிகள்.

December 4, 2008 9:19:00 PM IST
அனுஜன்யா said...

வசந்த்,

கன்னி முயற்சிக்கு நிச்சயமாக நல்லாவே இருக்கு. சற்று நெருடிய விஷயங்களை தமிழ்ப்பறவை சொல்லி, நீங்கள் விளக்கமும் கொடுத்து விட்டீர்கள். ஆங்கிலப் பிரயோகத்தில் இன்னும் சற்று கவனம் செலுத்தலாம். மொத்தத்தில் அதகளம் செய்யும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

December 6, 2008 12:33:00 PM IST

சிராப்பள்ளிச் சிற்றுலா.

ன்று உடையானை, தீயது இலானை, நரை-வெள்ஏறு
ஒன்று உடையானை, உமை ஒருபாகம் உடையானை,
சென்று அடையாத திரு உடையானை, சிராப்பள்ளிக்-
குன்று உடையானை, கூற, என் உள்ளம் குளிரு(ம்)மே.

பதிகம்: 1:98
பண்: குறிஞ்சி
தேவாரம்.

முன்னிரவு 21:30க்கு வர வேண்டிய ஏர்பஸ் மிகத் தாமதமாக 22:30 மணிக்கு ஸ்டேஷன் ஃபவுண்டனில் திரும்பி, கைரளி தியேட்டர் ரோட்டில் கொஞ்சம் சென்று, ரிவர்ஸில் வந்து, களைத்த பயணியரைக் கொட்டி நின்ற போது, உள்ளே டி.வி.க்களில் ஸ்ரீமன் பேசிக் கொண்டிருத்தார். 'அருமை பெருமையா வளத்தமே என் தேசிங்கு ராசா.. இப்படி அக்ரகாரத்துல போய் வாக்கப்படப்..'

'யாரும் ஏறாதீங்க. எல்லார்க்கும் சீட் இருக்கு. வண்டிய கொஞ்சம் வாஷ் பண்ணிட்டு தான்..' கண்டக்டர். ட்ரைவர் இறங்கி முகம் கழுவிக் கொடார். என்னோடு, ஒரு இந்திக் குடும்பம். இறுக்கமான பேட், கவுனில் ஒரு சிறுமி. கையடக்க வீடியோ கேம்ஸ் கைப் பையன். சுடிதார் மனைவி. ஒரு கல்லூரி மாணவன். இரு கிழவர்கள்.

கொஞ்ச நேரத்தில் எல்லோரும் ஏறிக் கொண்டு, சிதறி அமர்ந்து கொண்டோம். ஜன்னல்கள் திறக்கப்பட்டும், அடைக்கப்பட்டும்! சீட் புஷ்பேக் வேலை செய்கிறதா என்று பரிசோதனை.

22:50க்கு பஸ் உறுமியது. மெல்ல நகர்ந்தது. திருவனந்தபுரம் சென்ட்ரல் ரெயில்வே ஸ்டேஷனில் கலைந்து கிடக்கும் ட்ராக்குகளின் மேல் தாவி நழுவும் ஓவர்பிரிட்ஜைக் கடந்து, கிள்ளிப்பாலத்தின் மீதேறி, நாகர்கோவில் ரோட்டில் சீராக ஓடத் துவங்கும் போது, கண்டக்டர் அருகில் வந்து, சீட் கம்பிகளில் சாய்ந்து நின்றார். முன்னூறு ரூபாய்களைக் கொடுத்து, ஏற்கனவே கணக்கிட்டு வைத்திருந்த போதும்,"லேட்டா கிளம்பறதுனால, சுமாரா எத்தனை மணி சார் ஆகும்..?"

"காலைல பத்து மணி ஆகும் திருச்சி போய்ச் சேர..!" என்றார்.நெல்லையைக் கடந்து, விருதுநகர் தாண்டி, சாத்துரை நீங்கி, மதுரை செல்லும் நெடுஞ்சாலையில் பாதியை விழுங்கும் போதே, பூமியின் இந்தப் பகுதி சூரியனைப் பார்க்கத் துவங்க, வானத்தின் கீழ் எல்லை சிவக்கத் தொடங்கி விட்டது. பாதி வழியிலேயே சேதுவை நிறுத்தி விட்டிருந்ததால், புதிதாக வாங்கி இருந்த இயர்போனில் (ஒரிஜினல் ப்ரைஸ் 250 ரூ. உங்களுக்காக 10 ரூ. ரிடக்ஷன் பண்ணிக்கறேன்.), தொகுத்து வைத்திருந்த கதம்பப் பாடல்கள் மீண்டும் மீண்டும் லூப்பில் உலா வந்து கொண்டிருக்க, அவ்வப்போது இடையே எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ.வின் 'யாமிருக்க பயமேன்'.

மாட்டுத் தாவணியில் நுழைந்தது.பொலபொலவென புலர்ந்து விட்டிருந்தது. டீக்கடைகளில் சூடாக நுரைகள் பொங்கிக் கொண்டிருந்தது. சூடான மெது வடைகள், பக்கோடாக்கள், நாளிதழ்கள், மறைவான சிறுநீர்க் கழிப்பிடங்கள். நீல குப்பை ப்ளாஸ்டிக் பக்கெட்கள் அழுக்கடைந்திருந்தன. தாடியும், சந்தனப் பொட்டுக்களுமான மாலை போட்டிருந்த ஆட்டோ டிரைவர்கள், இறங்கியவுடன் சூழ்கிறார்கள். களைத்த காற்றுப் பேருந்துகள் ஆங்காங்கே செருகிக் கொண்டு நின்றன. சி.டி. கடையில் இருந்து 'வில்லு' கிளம்புகின்றது.

பசித்ததால், சில வடைகள் வாங்கி உள்ளே தள்ளிக் கொண்டேன். அது தான் வம்பாகிப் போய் விட்டது.

வண்டி ஸ்லோ பிக் அப் என்பதால் தான் இவ்வளவு லேட் என்றார் ட்ரைவர். "பத்து மணிக்குப் போயிடலாம்..."

கூட ஒரு மாணவர் வந்தார். சின்னப் பையனாய், ஒல்லியாய், வெடவெடப்பாய், பூனை மீசைகள் போல் வைத்திருந்தவரிடம்,

"நீங்க ஃபர்ஸ்ட் இயரா..?"

"இல்ல. fourth year. ஏரோநாட்டிகல் எஞ்சினியரிங்.."

ஜெர்க்கடித்து, "பார்த்தா அப்படி தெரியலயே. ஸ்கூல் பையன் மாதிரியே இருக்கீங்க. எப்படி இப்படி யூத்தாகவே இருக்கீங்க..?" வடைப் பொட்டலத்தைப் பிரித்தவாறே கேட்டேன்.

ஆட்காட்டி விரலால் வடைகளைச் சுட்டிக் காட்டி,"இதை எல்லாம் நான் சாப்பிடறதில்லை.."

மேலும் கிழக்கு நோக்கிப் பயணம் துவங்கித் தொடர்ந்து, மேலூர், துவரங்குறிச்சியைத் தொலைத்து, திருச்சி ஜங்ஷனை அடைந்து, மத்திய பேருந்து நிலையத்தைத் தொட்டு நிற்கும் போது, சரியாக சனிக்கிழமை காலை 10:10. வடைகளின் புண்ணியத்தில் வயிறு கலக்கத் தொடங்கி இருந்தது.திருச்சிராப்பள்ளி ஒரு வசீகரமான ஊர்.

நகரப் பேருந்து நிலையம் சுற்றி எத்தனை கல்லூரிகள்! ஒரு குளத்தைச் சுற்றி, மூன்று நான்கு அறைகளில் சரக்குகள். கவிழ்த்துப் போட்ட குடைகளில் வட்ட வரிசைகளில் வாட்சுகள். சாலைகளில் அலட்சியமாக கடக்கும் மாடுகள். கறுப்பாய், வெடவெட கால்களோடு சிக்னலை மீறும் ஆடுகள். அகண்ட காவேரி என்ற வெண் மணல் பிரதேசம். தியேட்டர் காம்ப்ளக்ஸ்கள். ரெயில்வே ட்ராக்குகள். கந்தக வெயில். கால் ரிக்ஷாக்களும், ஸ்க்ரீன் மூடிய ஒல்லி ஆட்டோக்களும் உயிர்த்திருக்கின்ற மிகச் சில நகரங்களில் ஒன்று. மலை உச்சி சைவக் கோயில்கள். ஆற்றுத் தீவில் வைணவப் பெரும் கோயில். நீரிலேயே மூழ்கி இருக்கும் சிவத் தலம். ஆடி வெள்ளிகளில் நிறையும் மாரி ஆலயம். நகரின் நிழல்கள் சட்டென்று மடிந்த பிறகு பச்சை வயல்கள் படர்ந்திருக்கும், மலைக்கோட்டையைச் சுற்றி அமைந்திருக்கும் மகாநகர்.இரண்டு நாட்களில் சனிக்கிழமை இரவு ஸ்ரீரங்கமும், ஞாயிறு காலை மலைக்கோட்டையும் சென்று வந்து விட்டு, மதியம் கிளம்பி விட்டேன்.அண்ணா சிலை பஸ் ஸ்டாப்பில் 1-ம் தட பஸ்ஸைப் பிடித்து, காவிரிப் பாலத்தைக் கடந்து, இடது புறம் வெட்டி (பெரியார் நகர்... திருவானைக்கா கோயில் போறவங்க எறங்கிக்கோங்க..!) சென்று, தெற்கு கோபுரத்தில் இறங்கிக் கொண்டோம்.

திருவரங்கத்தில் கூட்டம் அள்ளுகின்றது. மார்கழி மாதம். சனிக்கிழமை. ஐயப்ப பக்தர்கள் கூட்டம் தான் எங்கிலும்! நாங்கள் சென்ற நேரம் தரிசனம் இல்லாத நேரம் (18 - 19:00). இலவசத் தரிசனத்தில் நீண்ட நேரமாக நின்று, தெலுங்குப் பெண்களின் இடைபுகுதலைத் தடுத்து, கருஞ் சட்டைக் காரர்களின் பல கோஷங்களைக் கேட்டு, பொதுக் க்யூவில் நுழைந்தோம். இரண்டு சுற்றுகள் கடந்து, பள்ளி கொண்ட பெருமாளை, அரங்கநாதனைக் கண்ணாரக் கண்...அதற்குள் வெளியே திருப்பப்பட்டு, தங்கக் கோபுர பிரகாசத்தின் அடியில் விழுந்தோம்.

அணியார் பொழில்சூழ் அரங்க நகரப்பா!
துணையேன் இனிநின் அருளல்ல தெனக்கு
மணியே! மணிமாணிக்கமே! மதுசூதா!
பணியா யெனக்குய் யும்வகை, பரஞ்சோதீ!
- பெரிய திருமொழி 11-8-8
(திருமங்கையாழ்வார்)

இரவு நெடு நேரம் ஆகி விட்டிருந்தபடியால், தாயார் சன்னிதியை மூடி இருந்தார்கள். கோதண்டராமர், பட்டாபிராமர் சன்னிதிகளும் அவ்வணமே இருந்தன. சனிக்கிழமை சக்கரத்தாழ்வார் தரிசனம் நல்லது என்று சொல்லப்பட்டிருந்ததால், அவசர அவசரமாகச் சென்று 21:40க்கு மேல், நாளின் கடைசி பூஜையை அட்டெண்ட் செய்தோம்.

சுற்றி வரும் போது, பகல் பத்து விழாக்கள் நடந்து கொண்டிருந்தன. மஞ்சல் சோடியம் வேப்பர் லைட்டின் ஒளியின் கீழ், சுற்று மதில் அருகில் ஒருவர் கதாகாலேடபம் செய்து கொண்டிருக்க, மொட்டை அடித்த கூட்டம் ஒன்று ஆயிரம் கால் மண்டபத்தில் என்ன இருக்கின்றது என்று தேடிக் கொண்டிருந்தது.

தயிர் சாதம், புளியோதரைப் பிரசாதங்கள். அன்னமூர்த்தி ஃபோட்டோ. ஏறத்தாழ சாத்தி விட்ட கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தோம். நல்லவேளை காலணி பாதுகாப்பிடம் இன்னும் அடைக்கவில்லை. அணிந்து கொண்டு, மீண்டும் தெற்குவாசல் வழியாகவே பஸ் ஸ்டாப்பை அடைந்த போது, இரண்டடுக்கு கம்பி வேலிகளோடு படித்துக் கொண்டிருக்கும் பெரியார் சிலை.

திருவரங்கத்தில் சில ஸ்நாப்கள்::

தெப்பக்குளத்தின் கிழக்குக் கரையில் பல புத்தக நிலையங்கள் இருக்கின்றன. அகஸ்தியர், இண்டர்நேஷனல், லிப்கோ, சைவ சித்தாந்த மட புத்தகாலயம். ஆங்காங்கே சில புத்தகங்கள் வாங்கிக் கொண்டு வந்து, சாரதாஸில் சில துணிகள் பொங்கலுக்காக எடுத்துக் கொண்டோம்.

பின் மலைக்கோட்டை சென்றோம்.

இந்தப் பதிவிலேயே விளக்கமாக எழுதி விட்டதால், இங்கே சில போட்டோக்கள் மட்டுமே!

* ஒரு மலேஷிய சுற்றுலாக் கூட்டம் வந்திருந்தது. பக்திப் பரவசம் மேலிடப் பாடல்கள் பாடினார்கள். கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த அடையாள அட்டைகள். நெற்றி முழுதும் பல அடையாள்ச் சின்னங்கள். மலேஷியச் சிறுவர்கள் கைகளில் வைத்திருந்த நவீன கேமிராக்களில் மகேந்திரவர்மர் செதுக்கிய கல்வெட்டுகளைச் சிறைப்பிடித்தார்கள். கனம் ஏறிய சுடிதார் ஆண்ட்டிகள், டிஷர்ட் பிதுங்கிய அங்கிள்கள் என நகரச் சுவடுகள் பூண்டிருந்தனர்.* காற்று பிய்த்துக் கொண்டு போகின்றது, ஜன்னல்கள் வழியாக. வேப்ப மரங்களின் அடியிலிருந்து பார்க்கும் போது, மாநகரத்தின் பல் வரிசை வீடுகளையும், பரந்த காவேரி நிலத்தையும், ரயில் மற்றும் ரோட்டுப் பாலங்களையும், கோபுரங்கள் எழுந்த திருவரங்க நிலத்தையும் பார்க்க முடிந்தது.* உச்சிப் பிள்ளையாரின் கருவறையின் மேல் வைத்திருந்த போர்டில், ஆங்கிலப் பிள்ளையார், பிள்ளியாராக ஆகியிருந்தார். இவ்வளவு நாளாக ஏன் யாருக்கும் இது கண்ணில் படவில்லை..?

* தாயுமானவர் சன்னிதிக் கதவில் வாத்சாயனர் சொன்ன ஒரு முறையின் சிற்பம் பார்த்தேன்.

* படி ஏறும் போது, ஓரிடத்தில் தாயுமானவர் கதையை விளக்கி ஒரு வினைல் போர்டு வைத்திருக்கிறார்கள். நம் தமிழ்க் குலக் கொழுந்துகள் பால் பாய்ண்ட் பென்களால் தம் உளம் கவர் கள்ளிகளின் திருப்பெயர்களை இணைத்துக் கிறுக்கி இருந்தார்கள். ஓர் இடம் பாக்கி இல்லை. சிவலிங்கம், அம்மன் முகம்..! ம்ஹூம்..! எதுவும் தப்பவில்லை. கல்வெட்டு வைக்கும் அளவிற்குச் செய்ய இயலாத இவர்கள் செய்யும் இது போன்ற காரியங்களையும், அதனைக் கண்டுகொள்ளாது இன்னும் அப்படியே வைத்திருக்கும் திருக்கோயில் நிர்வாகத்தையும் என்னவென்று வைவது?* மெளனகுரு மடத்தைச் சேர்ந்த பசுபாதுகாப்புத் தொழுவத்திற்குச் சென்று, வாங்கி வைத்திருந்த கீரைத் தண்டுகளைக் கொடுத்து மகிழ்ந்தோம். பசு மாடுகளைத் தடவிக் கொடுத்தோம். கொஞ்ச நேரம் ராமராஜன் ஃபீலிங் வந்தது.

திருச்சியில் இருந்து நான்கு மணிக்குக் கிளம்பி மதுரை வந்து சேர்ந்து, ஊருக்கு வந்திருந்த தமிழ்ப்பறவையைச் சந்தித்துப் பேசினேன். அவர் எனக்காக வெகு நேரமாகக் காத்திருந்து, சுற்றி விட்டு, மதுரை காந்தி ம்யூசியம் சென்று சில புத்தகங்கள் வாங்கி வந்திருந்தார். கொடுத்தார். சந்தித்த ஞாபகத்திற்காக நாங்கள் அமர்ந்து பேசிய இடத்தின் அருகில் இருந்த ஒரு குப்பைத் தொட்டியைப் படம் எடுத்துக் கொண்டேன். சில விஷயங்கள் பேசி விட்டு, பதினொரு மணிக்கு நாகர்கோயில் பேருந்தைப் பிடித்தேன்.***

ஹிஷாம் அப்பாஸின் ஒரு பாடல்.

Tuesday, December 23, 2008

IFFK - 2K8 :: Flooded Out.

Flooded Out
Los Inundados

Argentina/1962/35mm/B&W/87'/Spanish

Direction : Fernando Birri
Producer : Carlos Alberto Parrilla
Cinematography : Adelqui Camuso
Editing : Antonio Ripoll
Sound : Jorge Castronuovo
Cast : Pirucho Gomez, Julio Omar Gonzalez, Kector Palavecino, Lola Palombo, Carlos Rodriguez, Maria Vera

IFFK திரைப்பட விழாவில் பார்த்த முதல் படம் இது. சனிக்கிழமை (13.டிசம்பர்.2008) காலை, கலாபவன் திரையரங்கில்!

கடைசி வரிசைக்கு இரண்டு முன் தள்ளி, rowவின் மத்திய ஏரியாவில், மத்திய சீட்டில், 'ஸ்வீட் ஸ்பாட்' என்று எழுதி ஒட்டி இருந்தது, ஆடியோபைலான என் கண்களுக்குத் தெரிந்தது. சரியாக அமர்ந்து கொண்டேன். நான்கைந்து வரிசைகள் தவிர, தியேட்டர் காலியாக இருந்தது.

ஒன்றரை மணி நேரம் மட்டுமே ஓடிய படம் முழுக்க முழுக்க காமெடியும், சட்டையருமாக இருந்தது.

ர்ஜெண்ட்டினா நாட்டின் ஒரு கிராமத்தில் வெள்ளம் புகுந்து விடுகின்றது. மிஞ்சிப் போனால் இருநூறு பேர் கூட தேறாத அதன் மக்கள் கையில் கிடைத்த பொருட்களை எடுத்துக் கொண்டு தப்பிக்க முயல்கிறார்கள். கதாநாயகன் ஒரு குடும்பத் தலைவன். சரியான சோம்பேறி. குடும்பத்தை அமைப்பதில் அந்தளவிற்குச் சுணக்கம் காட்டாதவர் (ஒரு வயது வந்த பெண, இரு சிறுவர்கள், ஒரு கைக்குழந்தை, ஓர் ஆட்டுக்குட்டி, இரு வாத்துகள்), அதனை கட்டிக்காப்பதில் மகா சோம்பல் பட்டுக் கொண்டிருப்பதால், குடும்பத்தலைவியின் சமாளிப்பால் ஓடிக் கொண்டிருக்கின்றது.

காலையில் தூங்கி எழ முயற்சிக்கும் போதே, கால் வைத்தால், முட்டி வரை தண்ணீர். எல்லோரும் வீட்டை காலிச் எய்து கொண்டிருக்க, நம்மாள் சுற்றுமுற்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டும், 'அரசாங்கம் காப்பாற்ற வேண்டும்' என்ற கருத்தோடும் இருக்கிறார். இந்த கருத்து படம் முழுதும் வருகின்றது.

இராணுவம் வந்து மீட்கின்றது. அனைவரையும் நகரத்தின் ஒரு பெரும் மைதானத்தில் தங்க வைக்கிறார்கள். அப்போது தேர்தல் நேரம். இரண்டு கட்சிகள் கன்னாபின்னாவென்று திட்டிக் கொள்கின்றன. ஹெலிகாப்டரில் இருந்து நோட்டிஸ் விடுகிறார்கள். ட்ராஃபிக் முனைகளில் எதிர்பாராமல் சந்திக்கும் போது, எதிர் கோஷம் போட்டுக் கொள்கிறார்கள்.

நிவாரணப் பொருட்கள் வந்து குவியும் போது, அடித்துப் பிடித்துக் கொண்டு வாங்கிக் கொள்கிறார்கள். நம்மாள் குடும்பத்தினர் கையில் கிடைத்த அளவிற்கு அள்ளிக் கொண்டு, 'வீட்டில்' வைத்து விட்டு, மீண்டும் ஓடுகிறார்கள்.

வீடென்பது, ஓடாமல் நின்று கொண்டிருக்கும் ரெயில் கோச்சுகள். வேலை கொடுக்கிறோம் என்று பலரும் உதவ முன்வர, நம்மாள், 'நான் ஏன் வேலைக்குப் போக வேண்டும்? I am flooded!' என்று சொல்லிக் கொள்கிறார்.

இரயில் பெட்டிகளைக் காலி செய்யுமாறு வேண்டுகோள் விடப்பட்டும் இவர் குடும்பம் மட்டும் காலி செய்யாததால், கோச் தனியாகக் கழற்றி விடப்பட்டு, ஓடும் ஒரு ரெயிலோடு இணைத்து விடப்படுகின்றது. தூங்கிக் கொண்டிருந்த குடும்பம், குலுக்கலை உணர்ந்து எழுந்து, மரக்கட்டைக் கதவுகளின் இடைவெளியில் பார்க்க, நிலங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன. தாங்கள் எங்கோ சென்று கொண்டிருக்கிறோம் என்று புரிகின்றது. நம்மாள் மட்டும் படுக்கையில் இருந்து எழுந்தரிக்காமல், பெட்ஷீட்டை இன்னும் இழுத்துக் கொண்டு சுகத்தூங்கி ஆகிறார்.

ஏதோ ஒரு ஸ்டேஷனில் நின்று விடுகின்றது. இப்படி ஒரு கோச்சே, இந்த ரயிலில் வருவதற்கான ரெக்கார்டு இல்லை என்பதால், ஸ்டேஷன் மாஸ்டர் குழம்பி, அரசாங்கத்திற்கு தகவல் தெரிவித்து, ஆர்டர் வரும் வரை கோச் அங்கேயே கழற்றி விடப்படுகின்றது.

அங்கிருக்கும் ஊர் மக்கள் இவர்களை விரோதி போல் பார்க்க, ஒரு பாட்டி மட்டும் ப்ரெட் எடுத்து குடும்பத்தின் கைக்குழந்தையிடம் கொடுத்து, வாங்கிக் கொள்கிறாள். பிறகே அங்கே சகஜமான நிலை வருகின்றது. 'we are flooded' என்று சொல்லிக் கொண்டே, இவர்கள் ஊரோடு ஐக்கியம் ஆகின்றார்கள்.

நம்மாள் அங்கே ஒரு விளையாட்டில் சிறப்பாக விளையாடி அனைவரது கவனத்தையும் அள்ளிக் கொள்கிறார். குடும்பத் தலைவி, அங்கேயே ஓர் ஓரமாக அடுப்பு மூட்டி, சமையல் செய்து செட்டில் ஆக முயலும் போது, இரண்டொரு நாட்களில் கவர்ன்மெண்ட் ஆர்டர் வந்து, கோச்சை மீண்டும் அவர்களது கிராமத்திற்கு அருகேயே அனுப்பி விடுமாறு சொல்லி விட, மீண்டும் கோச் மற்றோர் இரயிலோடு இணைக்கப்படுகின்றது.

'கோச் கிளம்புகிறது' என்று அப்பாவிடம் சொல்லச் சொல்லி விட, அவன் ஓடி வந்து சொல்லும் போது, அலட்சியப்படுத்து விட்டு, விளையாட்டில் தீவிரம் ஆகின்றார் நம்மாள். தூரத்தில் இரயில் ஓடத் துவங்கி விட்டதைப் பார்த்து, அதில் சில கோச்சுகள் முன்பாக, குடும்பமே 'அப்பா, அப்பா' என்று கத்துவதைப் பார்த்து, ஓடுகிறார்; வேலியைத் தாண்ட முயறு, முடியாமல், குனிந்து, உடை கிழிந்து, எழுந்து ஓடுகிறார்; ரயில் பெருமூச்சிட்டு கனைத்து, ஓட்டத்தை வேகப்படுத்துகிறது. பாதையின் செடிகளை மிதித்து விட்டு ஓடுகிறார்; ஆங்காங்கே நின்று கொண்டிருக்கும் ஆண்களும் பெகளும் சிரிக்கிறார்கள்; கைகளைப் பரத்திக் கொண்டு, ஓடுகிறார்; பையன்களும், பெணும் அழுது கதறுகிறார்கள்; மனைவி கைக்குழந்தையைப் பிடித்துக் கொண்டு கத்துகிறாள்; கைக்குழந்தையும் எதுவும் புரியாமல் அழுகிறது; ரயில் வேகமெடுக்கின்ரது; புகை பெருகிப் பெருகி துடித்து வெளியேறுகிறது; ஓடி கடைசி கோச்சைத் தாண்டி ஓடுகிறார்; அத்தனை பேரும் ஒரு கையால கதவைப் பிடித்துக் கொண்டு மறு கையை நீட்டுகிறார்கள். தலை கலைந்து, முடிகள் காற்றில் துவம்சமாகிப் பறக்க, சட்டை திறந்து, பனியன் வியர்த்து ஊற்ற, உயிரைப் பிடித்துக் கொண்டு ஓடி, ஓடி..... கோச்சை நெருங்கி, கைகளைப் பிடித்து, உள்ளே இழுத்துக் கொள்ளப்பட்டு, மனைவியில் மடியில் விழுகிறார்.

வெள்ளம் வடிந்த கிராமத்திற்கே மீண்டும் அனைவரும் வந்து சேர்கிறார்கள். குடும்பம் வழக்கமான வேலைகளில் ஈடுபடத் துவங்குகிறது. நம்மாள் பல் கொப்பளிக்கிறார்.வானத்தைப் பார்க்கிறார். பளிச்சென்று இருக்கின்றது; சூரியக் கதிர்கள் பொங்குகின்றன. கூறுகிறார்,'those were good days. when will the next flood come?'

தையின் ஊடாக மூத்த பெண்ணின் காதலும், முத்தமிடல்களும் வந்து போகின்றன. ஐம்பதாண்டுகளுக்கு முற்பட்ட வயல்கள், மனிதர்கள், இரயில்கள், அரசாங்கங்கள் என்று பார்ப்பது அழகாக இருக்கின்றது. முதலில் எழுத்துப் போடும் போதே, ஒரு வித கொண்டாட்ட நக்கலான இசை வந்து படத்தின் தளத்தைச் சொல்லி விடுகின்றது. ஸ்லைடுகளின் பின்புலம் வெள்ள்ம். அதில் மிதப்பவை, கவிழ்ந்த பாத்திரங்கள், கட்டில் கால், மேரி மாதா புகைப்படம், சுற்றும் குண்டா, செடிகள், மீன்கள் மற்றும் அசையும் சூரியன்.

கொஞ்சம் நாஸ்டால்ஜிக் உணர்வை ஏற்படுத்தும் இப்படம், பார்த்து சிரித்து விட்டு வருவது, யோசித்துப் பார்த்தால், நமக்குள் இருக்கும் ஒரு சோம்பேறி தான் என்று அறிந்து கொள்வதில் சுகமாக இருக்கின்றது.

Sunday, December 14, 2008

IFFK - திரைகள் சொன்ன கதைகள்.

ரு படைப்பு என்பதன் காரணமும், காரியமும் என்ன..?

அனுபவக் கடத்தல். படைப்பாளி தான் அனுபவித்த ஒரு சிறு நிகழ்வையோ, ஓர் உறுத்தலையோ, ஒரு கற்பனையையோ யாருக்காவது 'இதைப் பாருங்களேன்.' என்று காட்டி மகிழ்தலே படைப்பின் காரணமாகவும், அந்த உணர்ச்சியை முடிந்த அளவிற்கு மனதில் ஏற்றி விடுவதும் தான் அதன் காரியமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

கதை, கவிதை, ஓவியம், இசை, நடனம் முதலான அத்தனை கலைகளின் அடிப்படை சாராம்சம் இந்தப் பகிர்தலே!

சினிமா என்ற மற்றுமொரு கலை வடிவத்தின் முற்றான அர்த்தமும் இது தான் என்பதை இந்த இரண்டு நாட்களில் கண்ட படங்களின் வழியாக உணர முடிந்தது.

கேரளத்தின் சர்வதேச திரைப்பட விழா, சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் அன்று துவங்கி, 19.டிசம்பர் அன்று முடியுமாறு இவ்வருடம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. நகரின் மையப்பகுதியில் இருக்கும் கைரளி, ஸ்ரீ, அஜந்தா, க்ருபா, ரெம்யா, தன்யா, நியூ மற்றும் கொஞ்சம் தள்ளி உள்ள கலாபவன், தாகூர் தியேட்டர்களிலும், நிஷாகந்தி என்ற திறந்த வெளி அரங்கிலும் தினமும் ஐந்து காட்சிகள் உலகப் படங்கள் திரையிடப்படுகின்றன.

காலை 9, முற்பகல் 11, மதியம் 3, மாலை 6, இரவு 9 நேரங்களில்.

நேற்றும் இன்றும் பார்த்த படங்களில் இருந்து பிரமித்த காட்சிகள், கலங்கிக் கொண்டு நாசூக்காக கண்களைத் துடைத்துக் கொண்டேயிருந்த கணங்கள், வேறு ஏதேதோ நிலங்களுக்கு பயணித்துச் சென்ற பயணங்கள்....

வெளியே இருக்கும் உலகத்தினோடு முற்றிலுமாக மன அளவில் துண்டிக்கப்படுகிறோம். மெல்லிய ஏ.ஸி. குளிர் காற்றில் தடவுகின்றது. விரவியிருக்கும் எர்ர் ஃப்ரெஷ்னர் வாசம் நிரடுகின்றது. சற்று சாய்ந்து உட்கார்ந்து கொள்கிறோம். அரங்கின் மத்தியில் எரிந்து கொண்டிருக்கும் பிரகாச விளக்குகள் அணைக்கப்படுகின்றன. குட்டியாய்த் துளிர்த்துக் கொண்டிருக்கும் மின்மினி விளக்குகள் உயிரழக்கும் போது, திரையில் காட்சிகள் விரிகின்றன. மெல்ல அந்த உலகத்துக்கு நாம் இடம்பெயர்கிறோம்; அல்லது நமக்குள் அந்த உலகம் ஊடுறுவுகின்றது.

வாருங்கள்... IFFK திரைகள் எனக்குச் சொன்ன கதைகளைப் பார்ப்போம்.

Friday, December 12, 2008

எந்தக் கேள்வி கேட்டாலும்..!

28.Jan.2006

ந்தக் கேள்வி கேட்டாலும், சில துளிகளில் விடையளைக்கிறது வானம்! எத்தனை முறை பூத்தாலும் அலுப்பதேயில்லை, ஈரம் குளித்த புல்வெளி! கருமையான கரு மையில் கரைந்த தார் ரோடுகளின் மேல் மஞ்சள் சாயம் அடிக்கின்றது மதிய வெயில்! நடக்கின்ற பாதையெங்கும் வாழ்ந்த வாழ்க்கையை விளம்பிச் செல்ல்ம், உதிர்ந்த சருகு!

நில்லாமல் நகர்ந்து கொண்டே இருக்கின்றது, வழியெங்கும் ஈரப்பந்தல் போடுகின்ற நதியலை! ஓயாமல் பறந்த பின்னும் ஓய்வு எடுப்பதில்லை வெள்ளை நாரைகள்! பழமை படர்ந்த சிலைகளை விழுங்கியவாறு காலத்தின் பாதங்களில் மிதிபட்டு வாழ்கின்றன கோயில்கள்!

ஏதும் சொல்லத் தோன்றாமல் மெளனத்தின் பாற்பட்டு நிற்கின்ற, மண்குதிரைகளாய், எல்லைகளில் காவல் நிற்கின்றன, என் வார்த்தைகள்! பற்றிக் கரைந்த கறுப்புத் திரைகளின், சாயல் அருகில் காலங் காலமாய்க் காத்திருக்கின்றன காவல் தெய்வங்களின் வாகனங்கள்!

மென்னொளி வந்து நனைக்கின்ற மேகத் தூறல்களில் சிதறுகின்றது, போன வருடம் காய்ந்து போன, தோட்டக் கிணற்றின் தண்ணீர்! வேறென்ன செய்ய, என்று கேட்டவாறு, மலைமுகடுகளின் பின்புறம் ஒளிந்து கொள்கிறது, துக்கத்தால், உன்னைத் தீண்டியும், தீண்டாமலும் இறந்து போகின்ற, இந்த மதிய ஒளியின் சூரியக் கதிர்..!

Tuesday, December 09, 2008

நான்கு இரவுகளும், நடுவில் இருந்த பகல்களும்!

மாலை நான்கு மணிக்குத் தான் (05.DEC.2008) அலுவலகத்தில் இருந்து கிளம்ப முடிந்தது. திருவனந்தபுரம் - சென்னை டி.வி.சி. எக்ஸ்ப்ரஸ் தி.புரம் சென்ட்ரல் ஸ்டேஷனில் இருந்து 17:25க்குக் கூர்மையாக கிளம்பி விடும். அதைப் பிடித்தாக வேண்டும்.

டெக்னோபார்க்கில் இருந்து ஆட்டோவில் கழக்குட்டம் பஸ் ஸ்டாப்பிற்கு (15 ரூ.) வந்து, கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்ஸைப் பிடித்து, ஸ்ரீகார்யத்தில் இறங்கி, அவசர நடையாக நடந்து அறைக்கு வந்து பார்த்தால்... இன்னும் துணிகள் எடுத்து வைக்கவில்லை' சர்ட்டிபிகேட்ஸ் எல்லாம் ஒருபக்கம் கலைந்து...! புரிந்து விட்டது. ட்ரெய்னைப் பிடிக்க முடியாது.

கரண்ட் வேறு இல்லை. பயங்கரமாக வேர்க்க ஆரம்பித்து விட்டது. அவசரமாக எல்லாவற்றையும் பேக் உருட்டி பேகின் உள்ளே தள்ளி, சர்டிபிகேட்ஸை அள்ளி, திணித்து, ஒருமாதிரி ரெடியாகினேன்.

இனி ஆட்டொ பிடித்து, ஸ்டேஷன் போய், டிக்கெட் வால்களில் நின்று, ட்ரெய்னைப் பிடிப்பது என்பது கிட்டத்தட்ட சாத்தியம் இல்லாத ஒன்று.

எதற்கும் கேட்டுப் பார்க்கலாம் என்று, ஆபிஸில் இருந்த மிதுனைக் கேட்க, அவன் செக் செய்து, கொல்லத்தை ஆறரை மணிக்குச் சேரும் என்று தெரிந்து, இங்கிருந்து இப்போதே கிளம்பினால் கூட, அதே ஆறரைக்குத் தான் பஸ்ஸும் கொல்லம் அடையும் என்பதால், அந்த ஸ்டேஷனில் இருக்கும் குட்டி வாலில் இணைந்து, டிக்கெட் எடுத்து, ஜெனரல் கம்பார்ட்மெண்ட்டை நோக்கி ஓடி உள்ளே ஏறுவதற்குச் சாத்தியங்கள் மின்மினி ஒளி அளவு மட்டுமே என்பதால்...

"எந்தா..?"

"எர்ணாகுளம் ஒந்நு..!"

பஸ்ஸிலேயே ஏறி விட்டேன்.

எதிர்பார்த்தது போலவே, 18:28க்கு கொல்லம் ஸ்டேஷனை பஸ் அடைந்தது. வழியில் கனியாபுரம் அருகே, சாலையில் யானைகள் மேல் கடாம் அமைத்து, ஐயப்பன் சிலைகள் ஊர்வலம் வந்தன. இரு வரிசைகளாக மஞ்சள் சேலை மங்கைகள் விளக்குகள் பிடித்துக் கொண்டு, மஞ்சள் ஒளி சிந்த வந்தது, அந்த மஞ்சள் மாலையில் மனம் நிறைந்த காட்சி.

பஸ்ஸில் பெண்கள் அமரும் சீட் தான் கிடைத்தது. பக்கத்து சீட்டில் பாட்டி உட்கார்ந்திருக்க, டேக் இட் ஈஸியாக எடுத்துக் கொண்டு பயணித்தேன். இந்தப் பயணத்திற்காக எடுத்து வைத்திருந்த துணைகள் இரண்டு.

ஓஷோவின் தம்மபதம் (புத்தரின் வழி) பாகம் ஐந்து, கண்ணதாசன் பதிப்பகம் மற்றும் b.guttman முதலான நான்கு பேர் எழுதிய Genetics - a beginner's guide.

இந்தப் புத்தகத்திலும் அத்தனை பிம்பங்களையும் போட்டு உடைக்கிறார் ஓஷோ. வெண் பொங்கல் மிளகாக நான்கு பக்கங்களுக்கு ஒரு முறை தெளிக்கின்ற 'ச்சீ' கதைகளை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு, கருத்துக்களைத் தவற விட்டால், அது முட்டாள்தனம். 2 கதைகளை மட்டும் இங்கே இணைக்கிறேன். அவற்றைப் படித்து விட்டால், ஓஷோவைத் தேட உங்களுக்குப் பிடிக்கும். ஆனால் அதற்கான காரணங்கள்..?

வீட்டு வேலைக்காரி ஒருத்தி. அவளுக்குத் தன் வேலை பிடித்தமானது. திடீரென ஒரு நாள் வேலைக்கு வருவதில்லை என்று சொன்னாள்.

எசமானி கேட்கிறாள். "எங்கே போகணும்கிறே? ஏதாவது சரியில்லாமப் போச்சா?"

"இந்த வீட்டுலே இந்த சஸ்பென்ஸைப் பொறுத்துக்க முடியல்லே."

"சஸ்பென்ஸ்? அதென்ன?"

"என் கட்டிலுக்கு மேலே ஒட்டி வெச்சிருக்கீங்களே. கவனமா இரு. எசமான் எப்போது வருவார் என்பது உனக்குத் தெரியாது."

கிறித்துவ வார்த்தைக்கு அவர் சொல்லும் கதை.

யூதர்களின் நகைச்சுவை உணர்வை வெகுவாகச் சிலாகிக்கிறார் ஓஷோ. கான்சன்ட்ரேஷன் கேம்ப்களிலும் கூட அவர்கள் சிரித்து தான் பயத்தை தவிர்க்க முயன்றார்கள் என்கிறார். யூதர்கள் தங்களது யூத பாதிரிமார்களையும் வெகுவாகக் கவிழ்ப்பார்களாம். ஒரு யூதக் கதை.

ஒரு யூதச் சமூகத்தில் ஒரு விழா. தங்கள் கோயிலுக்காகப் பணம் திரட்டிக் கொண்டிருந்தார்கள். கோயில் கொஞ்சம் மோசமாகத் தான் இருந்தது. பழுது பார்க்க வேண்டியிருந்தது. லாட்டரி டிக்கெட்டுகள் அடித்து விற்றார்கள். முதல் மூன்று பரிசுகள் தர வேண்டிய நாளும் வந்தது.

ஒருவர் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டார்கள். அவனுக்குத் தான் மூன்றாம் பரிசு. அருமையான கார். மேடையில் இருந்தது. அதுதான் மூன்றாவது பரிசு.

பிறகு இன்னொருவனைக் கூப்பிட்டார்கள். இரண்டாவது பரிசு. ஒரு பெரிய கேக் கொடுத்தார்கள். மூன்றாம் பரிசு கார் என்றால் தனக்கு விமானமே கிடைக்கும் என்று நினைத்திருந்தான் பாவம். மூன்றாவது பரிசு அருமையான கார். இரண்டாவது பரிசு கேக்தானா? பரிசுகளைக் கொடுத்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து, "உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?" என்று கேட்டான்.

அவனோ,"உனக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த கேக் நம்ம ராபியின் மனைவியே தயாரித்தது."

கேட்டவனுக்குக் கோபம் வந்து விட்டது."ஃபக் தி ராபீஸ் வைஃப்" என்றான்.

"அட, அது முதல் பரிசப்பா..!"

அடக்க முடியாமல் சிரித்து விட்ட போது, பக்கத்தில் இருந்த மலையாள பாட்டி, "எந்தா..?" என்று கேட்டார். "ஒந்நும் குழப்பம் இல்லா.." என்றேன் சிரித்தவாறே..!

லப்புழை வந்து விட்ட பிறகு ஓர் ஐந்து, பத்து நிமிடம் சாப்பிடச் சென்று விட்டார்கள், ட்ரைவரும், நடத்துனரும். கடலை மிட்டாயை கவர் செய்து விற்றார்கள். கொஞ்சம் தூரத்திலேயே, பேக் வாட்டர் வழி ஒன்று, ஒளி சிந்தும் மின் விளக்குகளின் பிம்பங்களைச் சுமந்து அசைந்து கொண்டிருந்தது.

எர்ணாகுளத்திற்கு பத்து மணி அளவில் வந்து சேர்ந்தது. இறங்கி அவசரமாகப் பார்த்த போது, சேலம் பஸ் ஒன்று நின்று கொண்டிருந்தது. விசாரித்து ("பத்து நிமிஷம் ஆகும்..!") ஆசுவாசப் படுத்திக் கொண்டேன். பயணத்தில் தமிழ்ப் பத்திரிக்கைகள் கிடைக்கும் முதல் ஸ்தலமான இங்கே, சில புத்தகங்கள் வாங்கினேன். சில ஸ்நாக்ஸ். பழங்கள்.

ஏர் பஸ்ஸில் சுகமாகப் படுத்துக் கொண்டு, தூங்கி, விழித்து, இரவின் மெளன வானத்தை ஜன்னல் வழி எட்டிப் பார்த்து, கொஞ்சமாய்க் குளிரை அனுபவித்து, திருச்சூர், பாலக்காடு, கோயம்புத்தூர், திருப்பூர், பெருந்துறை, ஈரோடு என்று வந்து சேர, சனிக்கிழமை காலை ஆறு மணி ஆகியிருந்தது.

உடனடியாக அந்தியூர் பஸ் ஒன்றுக்கு எகிறி சீட் பிடித்துப் பார்த்தால், அது அக்ரஹாரம் வழி இல்லையாம்; சித்தோடு போய்ச் செல்லும் என்று சொன்னார்கள். இன்னும் கொஞ்சம் லேட் ஆகும். எனினும் இழுத்து உட்கார வைத்து விட்டன, அந்த அதிகாலை விடியல் பயணத்தில் டி.டி.எஸ். எஃபெக்ட்டில் கேட்டுப் பார்த்து வந்த ராமராஜன் பாடல்கள்.

கண்களுக்கு கருப்பும், உதடுகளுக்கு சிவப்பும் அடிக்கின்ற கலரில் ஆடைகளுமாய், கிராமத்து வயல் வரப்பில் கெளதமியையோ, சீதாவையோ, ராணியையோ, ரேகாவையோ துரத்திப் பாடும் போது, பஸ் கடக்கின்ற கிராம வயல்களுக்குச் சட்டென அவர்களது பிம்பங்கள் இடம் மாறுகின்றன.

டவுசர் மட்டும் போட்டுக் கொண்டு, செந்தாமரை சலித்து, துண்டை உதறி மறுதோளில் போட்டுக் கொண்டு உள்ளே செல்ல, 'பட்டுப் பட்டுப் பூச்சி போல எத்தனையோ வண்ணம் மின்னும்..' என்று பாட ஆரம்பிக்க, நிஷாந்தி அப்படியே காண்ட்ராஸ்ட்டாக ஃபுல் மேக்கப் தாவணியில் ஊஞ்சலாடும் போது, பவானி புது பஸ் ஸ்டாண்ட்டில் இறங்கினேன்.

வீட்டிற்குப் போய் உண்டு, களைத்துறங்கி, குளித்து சில வேலைகள் முடித்து விட்டு, மீண்டும் வீடு வரும் போது, குமாரைக் கால் பண்ணிக் கேட்டுக் கொண்டேன். "வந்தா தங்க முடியும்லடா..? நீயும் எங்கயும் போயிட மாட்டியே..?"

அடுத்த நாளுக்குப் போட்டுக் கொள்ள வேண்டிய செட்டை மட்டும் எடுத்துக் கொண்டு, சில போட்டோக்கள், ஸ்டடி மெட்டீரியல்ஸ் (என்னமோ அந்த ஒரு நாள்ல மட்டும் படித்து முடித்து விடுவது போல்!), ரெண்டு பென்சில், ஷார்ப்னர், எரேசர் எடுத்துக் கொண்டு, புது பஸ் ஸ்டேண்ட் வந்தேன்.

சேலம் செல்லும் ஜே.கே.பி.எஸ்.ஸில் ஏறிக் கொண்டேன். குமாரபாளையத்திற்குத் திரும்பாமல், நேராக பைபாஸ் வழியாகச் சென்று, சேலம் சென்றடையும் போது மாலை ஆறு.

இங்கும் கொஞ்சம் பழங்கள், ப்ரிட்டானியா பட்டர் க்ரீம் பிஸ்கெட் பாக்கெட் (அநியாயம்! இதைக் கடைசி வரை சாப்பிடவே இல்லை.), ஹனி கேக் நான்கு வாங்கிக் கொண்டு, பஸ் ஏறிக் கொண்டேன்.

பஸ் டி.வி.யில் 'காலபைரவன்' ஓடிக் கொண்டிருந்தது. தீப்பிடித்து எரியும் எலும்புக்கூடு 'நிக்கோலஸ் கேஜ்' எல்லோரையும் மிரட்டிக் கொண்டிருந்தார். அந்த டி.வி. ரிப்போர்ட்டினி அழகாய் இருந்தாள்.

பிறகு முடிந்தவுடன், கீனு ரீவஸின் 'கான்ஸ்டன்டைன்'. தாங்க முடியவில்லை. பொறுக்க முடியாமல், மாற்றி, 'போக்கிரி'(தமிழ்) போட்டார்கள். சற்று நேரத்திலேயே, ஒரு குரல் கேட்டது, "ட்ரைவர் சார், காலபைரவனையே மறுபடியும் ஒரு தடவ போட்டுருங்க. இல்லைனா ஆஃப் பண்ணிடுங்க. தூங்கலாம்.."

சொல்ல மறந்து விட்டேன்.

கண்டக்டர் ஒவ்வொருவரிடமாக டிக்கெட் பின் அடித்துக் கொடுத்து, என்னிடம் வந்த போது, நூறு ரூபாயைக் கொடுத்து, அவரது கேள்விப் பார்வைக்குப் பதிலாய், "பேங்ளூர்.." என்றேன்.

JLPT என்று ஜப்பான் ஃபவுண்டேஷன் ஒரு தேர்வு வைக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் முதலாம் ஞாயிறு உலகெங்கும் நடத்தப்படுகின்றது. ஜப்பானிய மொழியறிதலுகான பரீட்சை. நான்கு வருடங்கள் எழுத வேண்டும். மொத்தம் நான்கு நிலைகள். லெவல் நான்கு தான் அடித்தளம். அங்கிருந்து மெதுவாக ஊர்ந்து, முதல் நிலையை எட்டிப் பிடித்துப் பாஸ் செய்தால், நாமும் ஜப்பானியரோடு 'வாங்க பழகலாம்.' அடுத்த வருடத்தில் இருந்து, வருடம் இரண்டு முறை. ஜூலை மற்றும் டிசம்பர்.

ஆனால் ஒவ்வொரு நிலையும் கடினமாகவே இருக்கும். மூன்று வகையான எழுத்து முறைகள். அதில் சீனாவிடமிருந்து வந்து கலந்து போன 'கஞ்சி' என்ற எழுத்து முறையில் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட எழுத்துக்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் வாக்கியங்களுக்கேற்ப உச்சரிப்பிலும், அர்த்தங்களிலும் பல அவதாரங்கள் எடுக்கும்.

இம்மொழியை நிஹாங்கோ என்கிறார்கள். நிஹோன் என்றால் ஜப்பான். கோ என்றால் மொழி. ஜப்பானிய மொழி. இது போன்ற காரணப் பெயர்கள் கொஞ்சம் நிறைய!

இலக்கணத்தைப் பொறுத்தவரை நமக்கு, இன்னும் சொல்லப் போனால் இந்தியர்களுக்கு பெரிய பிரச்னையே இருக்காது. மேற்கத்தியவர்களுக்குத் தான் ஆதியிலிருந்தே தடுமாறும். முக்கிய காரணம், வாக்கிய அமைப்பு.

நாமும் ஜப்பானியர்களும் Subject Object Verb.

அவர்கள் Subject Verb Object.

எனவே நாம் சுலபமாக "நான் ஜப்பானுக்குப் பேனேன்" என்பதை நம் தாய்மொழியிலேயே உருவாக்கி, அப்படியே வார்த்தைக்கு வார்த்தை ட்ரான்ஸ்லேட் செய்து, "வதாஷி வ நிஹோன் எ இகிமாஷித" என்று சொல்லி விடலாம்.

ஓசூர் ரோட்டில் உள்ள க்றைஸ்ட் காலேஜில் 2008 டிசம்பர் 7 காலை 8:30க்கு எக்ஸாம். அதற்காகச் சென்றேன்.

ஆட்டோவில் சென்று இறங்கிய போது, க்றைஸ்ட் காலேஜ் மாறி, க்றைஸ்ட் யூனிவர்சிட்டி ஆகி இருந்தது. சின்ன வாசல் வழியகப் பலரும் உள்ளே சென்று கொண்டிருந்தார்கள். மறித்து ஜப்பான் லேர்னிங் ஸ்கூல் சார்பாக வாழ்த்தி, ஒரு பேனா கொடுத்தார்கள்.

ஒவ்வொரு லெவலுக்கும் தனித்தனியாக எக்ஸாம் ஹால் பிரித்து வைத்திருக்க, நான் எழுதச் சென்ற நான்காம் நிலைக்கு, மெய்ன் பில்டிங். அருகில் லைப்ரரி.

ஒருவரிடம் சென்று விசாரிக்க, "ஸ்ட்ரெய்ட் கோ. தென் லெஃப்ட்" என்றார். ஆங்காங்கே நோட்டீஸ் போர்ட்களில் ஷெட்யூலும், ஹால் விபரங்களும் தெளிவாகக் கூறப்பட்டிருக்க... அதிர்ச்சி!

ஹால் டிக்கெட்டில் 08.30 ம்தல் 10.00 மணி என்று குறிப்பிட்டிருந்ததால், தேர்வு முடித்து விட்டு டிபன் கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன். மாற்றி விட்டிருந்தார்கள். 09.00 முதல் 11.20 வரை.

மொத்தம் மூன்று தேர்வுகள். இரண்டு இடைவெளிகள், இருபது நிமிட அளவில்.

ஏன் லேட் என்று ஆளுக்காள் கேட்டுக் கொண்டார்கள். கொஞ்ச நேரத்தில் 'இன்னும் பொட்டி வரலையாம்' என்று தகவல் பரப்பினார்கள். ஆங்கில, இந்தி, தமிழ், கன்னட மொழிகளில் அதே வசனம். அவர்களுக்கு யாராவது நிஹோங்கோவில் சொல்லி இருப்பார்கள்!

உடனே ஃபோன் செய்து ப்ளான்கள் எல்லாம் மாற்றி விட்டேன்.

மெய்ன் பில்டிங் வரப்பின் திட்டுக்களில் ஒன்றில் வெயில் படாத நிழல் பிரதேசத்தில் சென்று அமர்ந்து, சுற்றிப்புறத்தை நோட்டமிட... குளுமை..!

பலவித வயதுகளில், பலவித மனிதர்கள். ஜீன்ஸ் அணிந்த வெண்ணிற பெண்கள், சுடிதார் அழகிகள், அங்கிள்கள், ஆண்ட்டிகள், கைக்குழந்தையைத் தட்டிக் கொடுத்த கணவனிடம் தேர்வுக் கவலையுடன் உரையாடும் பெண்கள், 'யோ' பையன்கள், சீரியஸாக லெவன்ந்த் ஹவர் ப்ரிப்பரேஷன் அவசரர்கள்... இடையில் சரேலென குறுக்கே பாய்ந்து ஓடிய ட்ராக் ஷுட் கல்லூரி மாணவர்கள்.

8.50 அளவில் உள்ளே அனுமதித்தார்கள். எனது தேர்வெண்ணிற்கு, 217-ம் அறையைத் தேடி, இரண்டாம் மாடிக்குச் சென்று பார்த்து, 'காலபைரவராக' நின்று கொண்டிருந்த எக்ஸாம் சூபர்வைசரிடம் ஹால் டிக்கெட் காட்டி விட்டு, சீட்டை நோட் செய்து விட்டு, வெளியே வந்து நிற்க.. ஆச்சர்யம்.

எதிர்பாராத விதமாகப் பழைய கம்பெனி ஒன்றின் நண்பர். அவரிடம் கொஞ்ச நேரம் 'அந்த நாள் ஞாபகம்' பேசி விட்டு, ஆரம்ப மணியடிக்க உள்ளே சென்றேன்.

சுற்றிலும் இளம் பெண்கள். எனக்கு அருகில் பெஞ்சின் அந்த எண்டில் மட்டும் ஒரு மகா ஆண்ட்டி.'உனக்கு மட்டும் ஏன்டா எப்பவுமே இதே மாதிரி நடக்குது?' என்று மனதிற்குள் நொந்து கொண்டேன்.

டெஸ்க்கைப் பார்த்தேன். காம்பஸ் கீறல்கள். ஆங்கிலப் பெயர்கள், அம்பு துளைக்கும் ஹார்ட்டின், பக்கவாட்டுப் பெண் முகம், ஏதேதோ கன்னடக் கிறுக்கல்கள். மனம் பள்ளி நினைவுகளுக்கு ஜம்ப் அடிக்க முயன்ற போது, அருகிலேயே தேர்வெண் ஒட்டி வைத்த சின்ன துண்டுப் பேப்பர். ஓ..! எக்ஸாம்..!

ஒவ்வொரு தேர்வையும் பற்றி விளக்கமாகக் கூறி, உங்களைக் கடுப்படிக்க விரும்பவில்லை.

முடித்து விட்டு, வெளியே வந்து விட்டேன். நெடு நாள் கழித்துக் கண்ட நண்பருடனே வெளியே வரத் துவங்கிய போது, மாறு வேடப் போட்டி நடந்த ஹாலைப் பார்த்துக் கொண்டே கடந்தோம். சிறு குழந்தைகள் பல வேடங்களில்! மற்றொரு ஹாலில் டான்ஸ் காம்படீஷன்.

பைக்கில் ஏறி, ஃபாரமில் இறங்கிக் கொண்டேன். அவரிடம் பேசிக் கொண்டே, எலிக்காகக் காத்திருக்கத் தொடங்கினேன்.

இப்போது, நாம் கொஞ்சம் அரை நாள் முன் போவோமா?

சேலம் - பெங்களூரு விரைவுப் பேருந்தின் ஜன்னல் இடுக்குகள் வழியாக குளிர் காற்று ஜிலீரென வீசிக் கொண்டிருந்ததில் இருந்து, எல்லையைக் கடந்து கொண்டிருக்கிறோம் என்பது புரிந்தது.

காற்றில் இருக்கும் அந்த மதுரமான வாசம் என்னை இரண்டு ஆண்டுகளுக்கு முன் அழைத்துச் சென்றது. 2006 அக்டோபர்க்குப் பின் இப்போது தான் அடுத்த விசிட். கொஞ்சமாய் எட்டிப் பார்த்தேன்.

மஞ்சள் சொரியும் விளக்குகள். அந்தரத்தில் மிதக்கின்ற மேம்பாலங்கள். மேம்பாலத் தூணை நனைக்கும் மனிதன். நல்ல முகூர்த்த நாட்கள் என்பதால், சீரியல் செட்களால் மினுக்கும் மண்டபங்கள். பூ அலங்கார மும் வளைவுகள். வடக்கு நோக்கிச் செல்லும் நீண்ட உடல் கண்டெய்னர்கள். லாரிகள். ட்ராவல் பஸ்கள். குளிர். மேலும் குளிர். பான் வாசம்.

நள்ளிரவுக்குக் கொஞ்சம் முன்னே, பதினோரு மணி அளவில், மடிவாலாவில் நடுங்கிக் கொண்டே இறங்கினேன். ஆட்டொ பிடித்து திப்பசந்த்ராவுக்குச் செல்லச் சொன்னேன். 200 ரூபாய் வாங்கி விட்டார்கள். கடக்கும் போது மடிவாலா ஆஞ்சநேயருக்கு பல வருடங்கள் கழித்த வணக்கம். 'இப்போதைக்கு நம்ம ஊர்' சாமியான ஐயப்பா கோயிலுக்கும் ஒரு வணக்கம். எக்ஸாம் தான் ஒரு மனிதனை எப்படி எல்லாம் மாற்றி விடுகின்றது..?

ரைட் டர்ன் அடித்து, இன்னர் ரிங் ரோடை அடைந்து, கடந்து, தொம்லூர் சிக்னல் ஃப்ளை ஓவரில் ஏறி இறங்கி, இந்திரா நகரில் நுழைந்து, குமார் கொடுத்திருந்த அட்ரஸ் வீதிக்குள் சென்று விட்டு, அவனை call செய்து வரச் செய்து, அவன் வந்து கை காட்ட, நான் ஆட்டோவில் இருந்து இறங்கி, பைசா கொடுத்து, ஆட்டோவை ரிட்டர்ன் அனுப்பி விட்டுப் பார்க்க, 200 அடி தூரத்தில் நின்று கை காட்டிக் கொண்டிருந்த குமாருக்கும் எனக்கும் இடையில் உறக்கம் கலைந்த வெறிக் கண்களோடு ஐந்தாறு புஷ்டியான தெரு நாய்கள்.

'யார்ரா இவன் பேட்டைக்கு புச்சா இருக்கறது..?'

கொஞ்சம் பயமாக இருந்தாலும், துணிந்து நடந்து சென்றேன். பெங்களூரு தெரு நாய்களின் திருவிளையாடல்கள் லோகப் பிரசித்தம். காலபைரவன் படத்தைப் பார்த்த வாசம் அடித்ததோ என்னவோ, அவை என்னைச் சுற்றிச் சுற்றி வந்து, கால்களை மோப்பம் பிடித்து விட்டு நகர்ந்து சென்று விட்டன.

சனிக்கிழமை முடிந்து கொண்டிருந்தது. அவசர அவசரமாக, இந்தப் பதிவை எழுதி, குமாரின் வீட்டில் இருந்து தான் போஸ்ட் செய்தேன்.

இரவு முழுதும் உறங்காமல் படித்து விட்டு (கடைசி நேரத்தில் படிக்கிறவராம்!) அப்படியே அந்த சூட்டோடு சூடாகக் களத்தில் குதித்து விடலாமா என்று யோசித்து, இரண்டு மணி நேரங்கள் படித்தேன். சென்ற இரவும், இந்த இரவும் தூக்கம் இல்லாமல் போனதால், கண்கள் எரியத் தொடங்கின. எல்லாவற்றையும் மூடி வைத்து விட்டு, ஃபேன் போடத் தேவை இல்லாத, டிசம்பர் மாத பெங்களூரு குளிரை அனுபவித்துக் கொண்டே, 5 மணிக்கு அலாரம் வைத்து விட்டு, முழுதாகப் போர்த்திக் கொண்டு, தூங்கி விட்டேன்.

காதுக்குள் கிணிகிணித்த 5 மணி அலாரத்தை அணைத்து விட்டு, கஷ்டப்பட்டு எழுந்தே விட்டேன். 6.30க்குள் தயாராகி, குமாரிடம் விடைபெற்று, (பத்து மணிக்கு எக்ஸாம் முடிஞ்சிரும். காலேஜுக்கு வந்திடு. கொஞ்ச நேரம் ஊர் சுத்திட்டு, மதியமா நான் கிளம்பிடறேன்) வெளியே வந்து விட்டேன்.

இந்திரா நகர் பஸ் ஸ்டாப்பை நோக்கிச் செல்ல, அதிகாலை ஜாகிங் மனிதர்கள். ஒருவர் தன் செல்ல நாய்க்கும் கூட கழுத்தில் ஸ்கார்ஃப் கட்டி இருந்தார். ஒரு பூங்காவைக் கிழவர்களும், பேரிளம் பெண்களும் வேண்டுதல் போல சுற்றிக் கொண்டிருந்தார்கள். பேப்பர்கள் விசிறியடிக்கப்பட்டன. நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடி ஜன்னல்கள் பனிப் போர்வை பூண்டிருந்தன. ஒரு கேவ்ரலெட்டின் மேல் விரல்களால் கையெழுத்திட்டேன்.

201கள் சில தொம்லூர் சிக்னலில் புதுப்பெண் போல் ஒதுங்கிக் கொள்ள, சில மடிவாலா செல்வதாக அறிவித்தன. ஒன்றில் ஏறிக் கொண்டேன். மஞ்சள் கம்பிகள். நீல முகங்கள். மடிவாலா ஒந்து வாங்கிக் கொண்டேன். இன்னும் கொஞ்சம் பேர் ஏறிக் கொண்டார்கள். அவர்கள் கைகளில் ஜப்பானிய எழுத்துக்கள். படித்துக் கொண்டே வந்தார்கள்.

ஒழுங்காக மார்க்கெட் தாண்டி லெஃப்ட் டர்ன் அடிக்கும் போதே இறங்கியிருக்கலாம். அழகாக ரோட்டைக் கடந்து, மார்க்கெட் அல்லது மெஜஸ்டிக் பஸ்ஸில் ஏறி, டயரி சர்க்கிளை அடைந்திருக்கலாம். ஏதோ நினைப்பில் அங்கு இறங்காமல் விட்டு விட்டு, சில்க் போர்டில் குதித்தேன்.

தலையைச் சுற்றி விட்டது. எந்தப் பக்கம் போக வேண்டும் என்று!

அந்த ஞாயிறு அதிகாலை (7 மணி) பான் பெட்டிக் கடைக்காரர்களையும், பஸ் காத்திருப்பவர்களையும் கேட்டால் 'கொத்தில்லா' என்றார்கள். எல்லாத் திசைகளிலும் பேருந்துகள் ஓடிக் கொண்டேயிருக்க, கடைசி வழியாக 'அட்ரஸ் இல்லா தெருவும் அறிந்தவரான' ஆட்டோக்காரரைச் சரணடைந்தேன். நாற்பது ரூபாயில் காலேஜ் வாசலுக்கு கொண்டு வந்து இறக்கி விட்டார்.

லி என்று நட்புடனும், சரோ என்று பாசத்துடனும் அழைக்க்கப்படுகின்ற சீனியர் அனலாக் டிசைன் எஞ்சினியரான கே.சரவணன் ஏற்கனவே ஃபாரமில் தான் இருப்பதாக கால் பண்ணி சொல்லி விட, ஃபாரம் வரிசையில் நின்றேன். சமீப குண்டு வெடிப்புகளில் இருந்து ஃபாரமில் மெட்டல் டிடெக்டர் வரவேற்பு தான். உடலைத் தடவிப் பார்க்கிறார்கள். கையில் ஏதேனும் பேக் கொண்டு போயிருந்தால், பிரித்துப் பார்க்கிறார்கள். ஆனால் இந்த பாதுகாப்பு போதாது என்றே தோன்றியது.

என் பேக்கில் அடைத்திருந்த ஸ்டடி புத்தகங்களையும், ஒரு செட் அழுக்கு துணியையும் நுனி விரல்களால் தொட்டுப் பார்த்து விட்டு, உள்ளே அலோவினார்கள்.

ஃபாரமில் நான் வழக்கமாகச் செல்லும் ஒரே இடமான விருப்ப லேண்ட் மார்க்கில் சந்தித்தோம். பெங்களூருவில் வசிக்கின்ற காக்கா, பண்டானந்த் மற்றும் பலர் வெள்ளிக்கிழமை சென்னையில் நடந்த மண்டையின் திருமணத்திற்குச் சென்று விட்டிருந்தபடியால, மிஞ்சியிருந்த எலியுடன் மட்டுமே சந்திப்பு.

எப்போதும் போல் முதலில் புக் செக்ஷனை அலசி ஆராய்ந்து, இரண்டே இரண்டு புத்தகங்கள் மட்டுமே வாங்கினேன். ரஸ்கின் பாண்ட் தொகுத்த ரூபா பப்ளிகேஷன்ஸ்ஸின் The Rupa Book of Great Suspense Stories. விலை :: 95 ரூ. ஆங்கில எழுத்துக்களைப் படிப்பது அரியது என்பதால், எலி சஜஸ்ட் செய்த The Adventures of Sherlock Holmes.80 ரூ.

அரவிந்த அடிகாவின் வெள்ளைப் புலியைத் தேடினால், கொஞ்சம் விலை அதிகம். ப்ளாட்பாரக் கடைகளில் புலி வேட்டை ஆடலாம் என்று விட்டு விட்டேன்.

வழக்கமாக ஞாயிறு இப்படி இருக்காது. ரிசஸன் டைம் என்பதால், எல்லோரும் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்கள் என்றான் எலி. உண்மை தான். கொஞ்சம் கூட்டம் குறைவாகத் தான் இருந்தது. அதற்காக காலியாக இருந்தது என்று சொல்ல முடியாது. காசு இருக்கிறவர்கள் வாங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள், எல்.சி.டி. ஸ்க்ரீன் டி.வி.யையோ, செரித்துக் காணாமல் போகும் கேக்குகளையோ, டெரிலீன் துணிகளையோ, தேவையோ, தேவை இல்லையோ...!

மதியம் சரோ அக்கா வீட்டிற்குச் சென்று சூப்பராக மீன் குழம்பும், மீன் வறுவலும்..! ஆஹா..! என்ன தான் கேரளாவில் ஃபிஷ் ஃப்ரையும், மீன் குழம்பும் சாப்பிட்டாலும் வீட்டு சாப்பாடு போல் வருமா? அதுவும் அங்கே கடல் மீன்கள். பெங்களூருவில் நன்னீர் (காவிரி?) மீன்கள். முந்தின இரவிலும், காலையிலும் வேறு சாப்பிடவில்லை அல்லவா..? ஒரு ஃபுல் கட்டு கட்டி விட்டு, கையோடு இந்தப் பதிவை அங்கேயே எழுதி முடித்து, போஸ்ட் செய்து விட்டேன்.

மீண்டும் ஆறு மணிக்கு சில்க் போர்டிலேயே சேலம் செல்லும் ஏர் பஸ்ஸைப் பிடித்து, பதினோரு மணியளவில் சேலம் 'பாரத ரத்னா எம்.ஜி.ராமச்சந்திரன் நினைவு சேலம் மத்திய பேருந்து நிலையம்' வந்தடைந்து, உடனடியாக 11.20க்கு பவானி கிளம்பும் கடைசி பேருந்தைக் கேட்ச் செய்து, பின்னிரவு, அதாவது திங்கட்கிழமை வெகு அதிகாலை 1 மணி 10 நிமிடங்களுக்கு ஊரை அடைந்தேன்.

இந்த இரவும் தூக்கம் போனது.

கேரளாவில் பக்ரீத் திங்கள். எனக்குத் தெரிந்து தமிழகத்திலும், கர்நாடகத்திலும் செவ்வாயில்! திங்கட்கிழமை வீட்டு வேலைகளை கவனித்து விட்டு, திருவனந்தபுரம் கிளம்பினேன். அம்மா கட்டிக் கொடுத்த பொருட்கள் லிஸ்ட் இது : மாஸ் பாதாம் பவுடர் 200 கி (அட, கிலோ இல்லைங்க, கிராம் தான்!), ஸ்ரீ ஆஞ்சநேயா சத்துமாவு 500 கி, லயன் சீட்லெஸ் டேட்ஸ் 200 கி, மன்னா யொயிட் ஓட்ஸ் அரை கிலோ, ஜோஸப் ஸ்பைசஸ் தயாரிப்பான fenugreek (வெந்தயங்க!) 50 கிராம் மூன்று பாக்கெட்டுகள், வறுத்த கோதுமை மற்றும் தால் பருப்பு ரெண்டு மூட்டைகள்..!

21:40க்கு ஈரோடு ஜங்ஷன் இரண்டாவது தடத்திற்கு வந்த சென்னை - திருவனந்தபுரம் அதிவிரைவு ரயிலின் ஜெனரல் கம்பார்ட்மெண்ட்டில், மாடியில் இடம் கிடைத்தது. கம்பிகளின் மேல் அமர்ந்து கொண்டேன்.

கையில் கிடைத்த ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டே, திருப்பூரில் ஏறி, திருச்சூரில் இறங்கிய ஓர் அழகான பெண்ணை அவ்வப்போது கவனித்துக் கொண்டு, தூங்கி விழுந்த ஒரு குட்டிப் பெண்ணைத் தன் மடியில் இழுத்துப் போட்டுக் கொண்ட ஜன்னலோரம் அமர்ந்திருந்த சிறுவனின் தாயுள்ளத்தை வியந்து கொண்டு, திருச்சூரில் காலியான எதிர் கம்பிக் கட்டுகளைப் படுக்கையாக்கிப் படுத்துக் கொண்டு அவ்வப்போது உறங்கிக் கொண்டு, கொல்லத்தில் கிட்டத்தட்ட காலியாகி இருந்த பெட்டியை புத்துணர்ச்சியான பூவாசத்தோடும், குளித்த சுக தெளிவான முகத்தோடும் கல்லூரி மாணவ/மாணவிகள் ஆக்ரமித்துக் கொண்டு சத்தமாகப் பேசிக் கொண்டே வருவதைக் கண்டு, எழுந்து, முகம் கழுவி, வாசலில் எதிர் வந்து பெருவேகத்தில் முகம் மோதும் கேரளக் குளிர்க் காற்றை அனுபவித்து, திருவனந்தபுரம் சென்ட்ரல் ரெயில்வே ஸ்டேஷனில் பேக்கைச் சுமந்து இறங்கும் போது செவ்வாய்க்கிழமை காலை 07:40 ஆகி இருந்தது.

ஆபீஸுக்குப் போக வேண்டும்.