Friday, May 24, 2013

தமிழ் - இனமா, மொழியா?

மீபத்தில் தமிழ் மாநிலமெங்கும் நடந்த மாணவர் போராட்டத்தின் போது, ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது அவர் இவ்வாறு கேட்டார். தமிழ் என்பது மொழியா, இனமா? அப்போதைக்கு ‘தமிழ் என்பது ஓர் இனத்தின் மொழி’ என்று பதில் கூறினேன். பின்பு சிந்தித்துப் பார்க்கையில் இவ்வாறு எளிமையாக முடிக்கக் கூடிய கேள்வியாக அது தோன்றவில்லை.

முதலில் இவ்விரு சொற்களின் வரையறையைப் பார்ப்போம்.

Race is a classification system used to categorize humans into large and distinct populations or groups by anatomical, cultural, ethnic, genetic, geographical, historical, linguistic, religious, or social affiliation. (wikipedia)

உடற்கூறு, கலாச்சார, மரபு, புவியியல், வரலாற்றியல், மொழி, மதம் மற்றும் சமூக வாழ்வியல் ஆகிய கூறுகளின் அடிப்படையில் மனிதர்களை வகைப்படுத்தும் ஒரு அமைப்பு முறையே இனம் எனப்படுகிறது. (ethnic என்றால் இனம் தானே?)

Language is the human capacity for acquiring and using complex systems of communication, and a language is any specific example of such a system. (wikipedia).

பொதுவாக மனிதர்கள் தமக்குள் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள பயன்படுத்தும் வழிமுறைகளில் ஒன்று மொழி எனலாம். (ஓரளவான மொழிபெயர்ப்பு)

நாம் தற்போது ‘தமிழினம்’ என்ற சொல்லை அடிக்கடி கேள்விப்படுகிறோம். இது சரியாக எதை அல்லது எவரைக் குறிக்கின்றது?

1. தமிழ் மொழியைப் பயன்படுத்துகின்றவர் (பேச மற்றும் எழுத மற்றும் படிக்க) தமிழர். அவர் தமிழினத்தைச் சேர்ந்தவர் ஆகிறார் என்று கொள்ளலாமா?

அ. மேற்கண்ட பயன்பாடுகளில் ஏதேனும் ஒன்று செய்ய இயலாதவர் தமிழர் அல்லரா? உதாரணமாகப் பேச மற்றும் படிக்கத் தெரிந்து ஆனால் எழுதத் தெரியாதவர்.

ஆ. ஒருவர் மேற்கண்ட பயன்பாடுகளைச் செய்யத் தெரிந்தவர் என்று எந்த அளவுகோலைக் கொண்டு முடிவு செய்வது? உதாரணமாக ஆயிரம் சொற்கள் பேசத் தெரிந்தால் போதும் போன்று.

இ. தமிழ் மொழியில் பல வட்டார மொழிகள் உள்ளன. நெல்லைத் தமிழ், குமரித் தமிழ், மதுரைத் தமிழ், கோவைத் தமிழ், ஆற்காட்டுத் தமிழ், சென்னைத் தமிழ், எழுத்து நடைத் தமிழ் போன்றன. இவற்றுள் எந்த மொழியைப் பேசுபவர் எல்லாம் தமிழர்? வட்டார மொழிகள் மட்டும் பேசத் தெரிந்த எழுத்து நடைத் தமிழ் தெரியாத மக்கள் தமிழர் ஆவரா, மாட்டாரா?

ஈ. தாம் பிறந்த சாதி மற்றும் செய்கின்ற தொழிலைப் பொறுத்துத் தமக்குள் தனிப்பட்ட தமிழ் மொழியைப் பல தலைமுறைகளாகப் புழங்கிக் கொண்டு வரும் மக்களை எவ்வாறு வகைப்படுத்துவது? உதாரணமாக பிராமணர் மற்றும் மீனவர்கள்.

உ. தமிழே இல்லாத மொழிகளைப் பேசுகின்ற பழங்குடியினர், நரிக்குறவர்கள் என்ன ஆவார்கள்?


2. தமிழ் நாட்டில் வாழ்கின்றவர் தமிழர். அவர் தமிழினத்தைச் சேர்ந்தவர் ஆகிறார் என்று கொள்ளலாமா?

அ. தமிழ்நாடு என்ற அரசியல் பகுப்பு 1956-ல் ஏற்படுத்தப்பட்டது. அப்பகுப்பின் காரணமாக வேறு மாநில எல்லைக்குள் சென்று விட்ட, தமிழ் பேசுகின்றவர் தமிழர் ஆக மாட்டாரா?

ஆ. வரலாற்றின் வழியே பல காலகட்டங்களில் இன்றைய தமிழ்நாட்டின் பல நிலங்கள் வேறு மொழி பேசுபவரின் ஆளுகையின் கீழ் இருந்து வந்துள்ளன. எனவே தற்போதைய அரசியல் நில எல்லைகளைக் கொண்டு அவற்றின் கீழ் வருபவர் மட்டும் தமிழர் என்று சொல்லலாமா? உதாரணமாகக் குமரி மாவட்டம், முதலில் கேரள மாநிலத்தில் சேர்க்கப்பட்டுப் பின் பல போராட்டங்களின் பின் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது. அம்மாவட்டம் கேரளத்துடன் இருந்த காலத்தில் ‘தமிழ் நாட்டில் வாழ்கின்றவர் மட்டுமே தமிழர்’ என்று வரையருக்கப்பட்டிருந்தால், குமரி மக்கள் தமிழர் ஆகியிருக்க மட்டார்கள் அல்லவா? இக்கோணத்தை இன்னும் நீட்டித்தால், ஒருவேளை இன்றைய தமிழ்நாட்டு அரசியல் எல்லை மாற்றி அமைக்கப்பட்டு, சில பகுதிகள் வேறு மாநிலம் என்று ஆனால், அவர்கள் தமிழினத்தார் என்ற வகைப்பாட்டில் இருந்து நீக்கப்படுவார்களா?

இ. தமிழ்நாடு என்ற அரசியல் பகுப்பில் பிறந்து தற்போது உலகமெங்கும் பறந்து பரந்து வாழ்பவர் தமிழினத்தார் ஆவாரா மாட்டாரா?

ஈ. தமிழ்நாட்டில் பிறந்த ஒரு வெளிநாட்டுக் குழந்தை, தமிழ்நாட்டிலேயே குடியுரிமை பெற்று வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் தமிழினத்தில் சேர்த்து கொள்ளப்படுமா?

உ. தமிழ்நாட்டில் வாழ்க்கை நடத்தும் வேறு மொழி பேசுபவர் தமிழினத்தார் ஆவாரா, மாட்டாரா?



3. தாய் மொழியாகத் தமிழைக் கொண்டவர் தமிழர், அவர் தமிழினத்தைச் சேர்ந்தவர் ஆகிறார் என்று கொள்ளலாமா?

அ. ஒருவருடைய பெற்றோர் பேசும் மொழி தமிழ் என்றால் அவருடைய தாய்மொழி தமிழ் ஆகும். அதனாலேயே அவர் தமிழினம் ஆவாரா?

ஆ. பெற்றோர் தமிழ் மற்றும் வேறொரு மொழியைத் தாய்மொழிகளாகக் கொண்டவர் எனில், குழந்தை தமிழினம் ஆகுமா?


4. பல தலைமுறைகளாகத் தமிழ்நாட்டில் வாழ்பவர் தமிழினத்தார்.

அ. பல தலைமுறை என்றால் எத்தனை?

ஆ. ஒருவர் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகிறார். அவருடைய ஐந்து தலைமுறைக்கு முந்தைய முன்னோர் வரை வேறு மொழி பேசிக் கொண்டிருந்தவர்கள். காலப் போக்கில் தமிழ்நிலத்தில் வந்து பொருந்திக் கொண்டு தமிழ் பேசி வாழ்கிறார்கள். இவருக்கு இப்போது தமிழ் மட்டும் தான் தெரியும். இப்போது இவர் தமிழினம் ஆவாரா? நாளை இவருடைய முன்னோர் வாழ்ந்த பகுதிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஏதேனும் மோதல் வந்தால், இவர் யாருக்குச் சாதகமான நிலைப்பாடு எடுக்க வேண்டும்? (சமீபத்தில், தமிழ்நாட்டுக்குக் காவிரி நீர் வழங்கக் கூடாது என்று பெங்களூரு தமிழ்ச் சங்கத்தார் போராட்டம் நடத்தினார்கள். தமிழ்ப் பற்றே கிடையாதா என்று இவர்களைக் கடிந்து கொண்டார்கள் சிலர். தமிழ்நாட்டில் பிறந்து, வேறு மொழி பேசும் பகுதியில் வாழ்பவர்கள் எப்பகுதிக்குச் சாதகமாக நிற்க வேண்டும் என்பதை மாற்றுக் கோணத்தில் யோசிப்பது நல்லது.)

5. மொழி தவிர்த்து வேறு என்னென்ன காரணிகள் ’தமிழினம்’ என்று வரையறுக்கத் தேவை/ தேவையில்லை?

***

இது ஓர் அர்த்தமற்ற விவாதம் அல்ல. இன்றைய காலத்திற்குத் தேவையான ஒன்று. ‘தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்’ என்ற கோட்பாடு உறுதி பெற்று வருகின்ற நேரத்தில் அக்கோட்பாட்டை முன்னிறுத்துவோர், யாரெல்லாம் தமிழர் என்ற வகைப்பாட்டில் வருவார் என்பதை வரையறுத்தாக வேண்டும்.

மேலும் விடுபட்ட பகுதிகளை நிரப்பி, குறைகளைக் களைந்து இவ்விவாதம் நீள்வது, தெளிவைக் கொடுக்கும்.