Saturday, February 23, 2008

மோக்ளியின் ஷா - இன் -ஷா.றடிக்குக் கொஞ்சம் குறைவான உயரம். கறுப்பு நிறம். காற்றில் பரபரக்கின்ற முடி. சின்னச் சின்னதாய் இரு கண்கள். பார்ப்பவர்களை அப்படியே வசீகரித்துக் கொள்கின்ற முகராசி.

இந்த மனிதரிடம் அப்படி என்ன ஈர்ப்பு சக்தி இருக்கிறது என்று மோக்ளி மயங்கினான்?

முதலில் இது போன்ற எந்த திரை நடிகர்க்கும் இரசிகனாய் இல்லாமல் தான் இருந்தான். அவன் திரைப்படங்கள் பார்ப்பதே மிகவும் அரிது என்பதால், இதில் விசிறியாய் இருப்பதெற்கெல்லாம் அவனுக்குத் தெரியாமல் இருந்தது.அவ்வப்போது செல்லும் உறவினர் வீடுகளில் இருக்கும் அவன் வயதையொத்த சிறுவர்கள் பைத்தியமாய் இருப்பதைக் கண்டு தான் அவனும் மயக்கம் கொள்ள ஆரம்பித்தான்.

அவனுக்குக் கொஞ்சம் விபரம் தெரிய ஆரம்பித்த காலங்களில் வீடியோ, டெக், கேசட் எடுத்துப் பார்த்த ராஜாதி ராஜா தான் அவனை முழுதும் அவர் பக்கம் திரும்ப வைத்தது எனலாம். எல்லோரும் கமலின் 'அபூர்வ சகோதரர்கள்' தான் முழுமையான கமர்ஷியல் படம் என்று சொல்லிக் கொள்வார்கள். அது எந்த அளவுகோலில் என்று அவனுக்குத் தெரியாது. அவனைப் பொறுத்தவரை 'ராஜாதி ராஜா' தான் சரியான கமர்ஷியல் படம்.

நாகரீக இளைஞன், கிராமத்து இளைஞன் (ஏ சென்டர், பி & சி சென்டர் இரண்டையும் கவர் செய்தல்), ஏமாற்றி விட்ட சொந்தக்காரர்களிடம் இருந்து சொத்தை மீட்க வேஷம் போட்டு வெற்றி பெறும் என்றும் பசுமை எம்.ஜி.ஆர். பார்முலா (நடுத்தர வர்க்கம் கவர்தல்), கோழையான இளைஞன் மாமா பெண்ணால் வீரனாய் மாறுவது (உள்ளிருக்கும் வீரத்தை உசுப்பி விடுதல் என்ற வகையில் இளைஞர்களையும், துறுதுறுவென இருக்கும் நதியாவால் பெண்களையும்..) எல்லவற்றிற்கும் மேலாக படம் முழுதும் இருக்கும் நகைச்சுவைக் காட்சிகளால் எல்லாரையும் ஈர்க்கும் வகையில் வந்த இப்படம் தான் அவனை பரம விசிறியாக்கச் செய்தது.

இது வளர்ந்து திருவிழாக் காலங்களில், கேசட் எடுத்துப் பார்க்கையில், தியேட்டருக்குச் செல்கையில் என்று தேடித் தேடிப் பார்த்த ராஜா சின்ன ரோஜா, மனிதன், பணக்காரன், மாப்பிள்ளை, பில்லா, ரங்கா, குரு சிஷ்யன், தர்மதுரை, தர்மத்தின் தலைவன், கொடி பறக்குது, மாவீரன், படிக்காதவன், போக்கிரி ராஜா, தில்லு முல்லு, வேலைக்காரன், தம்பிக்கு எந்த ஊரு எல்லாம் அவனையும் அந்தப் பைத்தியங்களின் கூட்டத்தில் ஓர் உறுப்பினர் ஆக்கியது.

பக்கத்து வீடுகளில் பார்க்கச் செல்லும் ஒளியும் ஒலியும் முடியும் வரை அவன் காத்திருக்க வேண்டியதானது. ஏனெனில் கடைசியாகத் தான் அவர் பாடல் ஒளிபரப்புவார்கள். நிகழ்வு தொடங்கும் போது இருக்கும் உற்சாகம் போகப் போகத் தேய்ந்து போனாலும் அவர் பாடலின் இசை தொடங்கினால் போதும், அவனது கண்களில் ஒளி பிறந்து விடும். அவ்வீட்டுப் பெரியவர்கள் கடுப்பாகி, 'இவன் ஒரு நடிகன் என்று இந்தப் பசங்க ஏன் தான் பைத்தியமாக இருக்கிறார்களோ' என்று கூறுவதுடன், இன்னும் நிறைய சொல்லுவார்கள்.

அதெல்லாம் வேண்டாம். (பிறகு இது ஒரு ஜெயமோகன் கட்டுரையாகி விடும் வாய்ப்பு இருக்கிறது.) எனக்கு என்ன வேண்டும்? அவரது படங்கள் எனக்குப் பரவசம் அளிக்கிறது. அது போதும். மற்றபடி அவரது தனி வாழ்வில் என்னவாய் இருந்தாலோ, என்ன செய்தாலோ எனக்கு என்ன வந்தது? இந்தப் பெரியவர்கள் எல்லாம் ரஜினியைத் தூஷிப்பதற்கு மனரீதியில் ஒரு காரணம் கண்டுபிடித்து வைத்துள்ளேன். அது பிறகு.

ஞாயிறு அவர் படம் போட்டால், ஏழு மணிக்கு ஒரு பத்து நிமிடம் இடைவேளை விடுவார்கள், தலைப்புச் செய்திகளுக்காக. அந்த குறுகிய இடைவெளியில் அவன் சென்று 500 மீட்டர் தொலைவில் இருக்கும் பொரி கடலைக் கடைக்குச் சென்று, கேட்டு, பொட்டலம் கட்டி, பணப் பட்டுவாடா முடிந்து வீட்டிற்கு வர வேண்டும். அவனது ஓட்டம் அன்று மட்டும் தான் ஊர் பார்க்கும்.

அவ்வப்போது பார்க்கும் பழைய படங்களில் அவரது நடிப்புத் திறமையும் அவனை ஈர்த்துக் கொண்டே போனது. மிகச் சரியான உதாரணம் ஜானி.அவருக்கே பிடித்த படம் என்று அவர் கூறிக் கொள்வது 'முள்ளும் மலரும்' என்றாலும், இவனுக்குப் பிடித்து அவர் நடிப்பின், ஆளுமையின் உச்சம் ஜானி என்று தான் கூறுவான்.

ஏன் என்று சொல்லத் தெரியாது. ராஜாவின் இசை மழையா, ஸ்ரிதேவியின் அமைதியான நடிப்பா (கமல் படங்களில் கெட்ட ஆட்டம் (குரு)), அற்புதமான ஒளிப்பதிவா , இரு வேடங்களில் வெளுத்து வாங்கி இருக்கும் ரஜினியின் நடிப்பா என்று பிரிக்கத் தெரியாது. ஆனாலும் அவனுக்கு மிகப் பிடித்த அவரது படங்களில் ஜானியும் ஒன்று. இப்போதும் எப்போதாவது இரவு நேரங்களில் இப்படம் போட்டால், சானல் மாற்றுவதே இல்லை இவன்.

பிறகு தொடங்கியது தான் மற்றொரு வரிசைப் படங்கள்.

தீபாவளிக்கு தளபதி, பொங்கலுக்கு மன்னன், தமிழ்ப் புத்தாண்டுக்கு அண்ணாமலை, அடுத்த பொங்கலுக்கு எஜமான் என்று வரிசையாகத் திருவிழாக்களை அவன் கொண்டாடத் தொடங்கினான்.

தீபாவளிக்கு வந்த தளபதியின் முன்னால் குணா ஊற்றிக் கொண்டது அறிந்து அவன் அவ்வளவு சந்தோஷப் பட்டான். அப்போது 'மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்' என்று விஜயகாந்த் படமும் வந்தது. அது வந்த இழுப்பிலேயே மூச்சை நிறுத்திக் கொண்டது. அதைப் பற்றியெல்லாம் அவன் கவலைப்பட்டது கிடையாது. தலைவர் படம் ஓடுகின்றது எல்லா படங்களையும் தூக்கி உடைப்பில் போட்டு, அது போதும்.

பின் பொங்கலுக்கு வந்த மன்னனைத் தாண்டி 'சின்னக் கவுண்டர்' ஓடியதில் கொஞ்சம் வருத்தம் இருந்தாலும், தமிழ்ப் புத்தாண்டுக்கு வந்த அண்ணாமலை கூட வந்த சிங்கார வேலனையும், ரோஜாவையும் மீறி ஓடியதில் மகிழ்ந்து தான் போனான். பிறகு பார்க்கும் போது 'ரோஜா' ஓட வேண்டிய படம் தான் என்று புரிந்து கொண்டான். ஆனாலும் 'சிங்கார வேலனை' ஏற்றுக் கொள்ளவில்லை அவனது அன்றைய மனம்.

பின் தலைவரது பயணம் கொஞ்சம் கொஞ்சமாய் அரசியலின் திசையில் மாறத் தொடங்கியதும், படங்களும் அந்த நோக்கிலேயே வரத் தொடங்கியதும், அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாகப் பக்குவம் வரத் தொடங்கியதும் கொஞ்சம் குறையத் தொடங்கியது, அவனது வெறித்தனமான இரசிப்பு.

வீரா அளவுக்கு அருணாச்சலம் அவனுக்குப் பிடிக்கவில்லை. தலைவரும் கொஞ்சம் படங்களை நிறுத்திக் கொண்டதில் பிற நடிகர்களின் நல்ல படங்களையும் பார்க்கத் தொடங்கினான். முக்கியமாக கமலின் பல படங்கள். ஆனாலும் தலைவர் என்று ஒருவர் தான் இருக்க முடியும்.

பத்தாம் வகுப்பு படிக்கையில் ஒரு படம் கூட பார்க்கக் கூடாது என்று உறுதியோடு இருந்ததில் இருந்து அவன் விதிவிலக்கு எடுத்துக் கொண்டது ஒரே ஒரு படம் பார்ப்பதற்கு மட்டும் தான். அது 'முத்து'.

பின் வந்த பாட்ஷா, படையப்பா, பாபா, சந்திரமுகி எதுவும் அவன் தியேட்டரில் சென்று பார்க்கவில்லை. தொலைக்காட்சியில் பார்த்தது தான் படையப்பா. அதற்கு முன் கல்லூரி விடுதியில் தான் முதல் முறையாகப் பார்த்தான். விடுதியில் எல்லா வகைப் படங்களும் எல்லோருடைய ஹார்டு டிஸ்குகளுக்கும் வராது. சிலர் பார்ப்பார்கள், சிலர் பார்க்க மாட்டார்கள். அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் படங்கள் அழிக்கப்படும். ஆனால் ஒரு வருடம் வரை கல்லூரி விடுதியில் சுற்றிக் கொண்டே இருந்தது 'படையப்பா' சி.டி. அப்போது தான் புரிந்தது நம்மைப் போல் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பது.

சந்திரமுகி பார்க்கையில் இந்தச் சிங்கத்தின் பார்வையில் இருக்கும் தீ அவ்வளவு சீக்கிரம் அணையக் கூடியதில்லை என்று புரிந்தது. என்ன ஒரு வில்லத்தனம்!!

பாபா பிறகு பார்க்கும் போது அது ஒன்றும் அப்படி மோசமான படம் இல்லை என்று அவனது இரசிக மனத்திற்குப் பட்டது.

மோக்ளியின் மனத்திற்கு இன்னும் புரிபடாமல் இருக்கும் ஒரு விஷயம், இன்னும் அவன் ஏன் 'சிவாஜி - THE BOSS' பார்க்கவில்லை என்பதும், அதை விட முக்கியம் அவன் பார்க்காதிருப்பதை ஏன் அவன் சீரியஸாக எடுத்துக் கொள்ளவிலை என்பதும் தான்.

ன்று சின்னச் சின்னப் பசங்கள் எல்லாம் 'இளைய தளபதி', சின்னத் தளபதி', 'புரட்சித் தளபதி', 'லிட்டில் சூப்பர் ஸ்டார்' என்றெல்லாம் போட்டுக் கொள்வதைப் பார்க்கும் போது அவனுக்குச் சிரிப்பு தான் வருகிறது.

ஏண்டா, உங்களுக்கே இதெல்லாம் ஓவராகத் தெரியவில்லை? எருமை மாட்டு மேல் சாக்பீஸால் 'மகாராஜா' என்று எழுதிக் கொண்டால் அது மன்னன் ஆகி விட முடியுமா? இப்படி வெட்கமே இல்லாமல் காப்பி அடிக்கிறோமே என்ற வெட்கம் கொஞ்சம் கூட இல்லை?

தலைவர் வரும் போது, இருந்த எந்த நடிகரைப் பார்த்து ஸ்டைல் செய்தார்? அவர் அவரது தனி இராஜபாட்டையில் செல்லவில்லையா? உங்களிடம் சொந்த சரக்கு என்று ஏதும் இல்லை போல். அதனால் தான் அவரது பாதையில் போக முயற்சிக்கிறீர்கள். உங்களுக்கே தெரிய வேண்டும்.

ஒருவரது நல்ல பண்புகளைப் பிரதியெடுத்துக் கொள்வது தவறில்லை. தலைவரது பெருந்தன்மை, எளிமை, பரோபகாரக் குணம், வேகம், ஆன்மீகம், இவ்வளவு பெரிய நிலையை அடைந்த பின்னும் இருக்கும் அடக்கம் (கன்னட திரை உலகில் இராஜ்குமார் மற்றும் குடும்பத்தினரின் திரை அரசியல் இங்கு இவர் செய்கிறாரா?) இதையெல்லாம் யார் வேண்டுமானாலும் பின்பற்றலாம். ஏன் நானும் நீங்களும் கூட கற்றுக் கொள்ள வேண்டிய நற்பண்புகள் அவரிடம் உள்ளன.

ஆனால் அந்த உயர் பண்புகளை கற்றுக் கொண்டு நமக்கான நம் பாதையில் செல்ல வேண்டும். அதை விட்டு விட்டு அவரது பாதையிலேயே போக முயல்வது, யானை அவிழ்த்துக் காயப் போட்டிருக்கும் அண்டர்வேரில் எலிக்குஞ்சு நுழைய முயல்வது போல். எவ்வளவு முயன்றாலும் உங்களால் அதைப் போட்டுக் கொள்ள முடியாது. அது மட்டுமல்ல கீழே விழுந்து கொண்டே இருக்க வேண்டியது தான்.

போங்கடாங்க.......!!!நன்றிகள் : http://www.rajinifans.com மற்றும் YouTube ரசிகக் கண்மணிகளுக்கு.

செம குத்துப் பாட்டு.க் குத்துப் பட்டு இப்போதும் கேட்கும் வகையில் மெலோடியாக இருக்கின்றது. ஆனால் இன்றைய பாட்டுக்கள் கேட்கக் கூடிய வகையில் இருக்கிறதா என்ன?

Thursday, February 21, 2008

நதியலையின் பேரெழிலே!

பொங்கி வரும் நதியலையின் பேரெழிலே! தங்கு தடையின்றி தாவி வரும் பெருந்தமிழே! எங்கும் நிறைந்து யாவு நீயான பூங்காற்றே! அங்குமிங்கும் ஏன் அலைகிறாய், அமர்க என் உளத்துள்!

அந்திமேகம் பொழியும் மஞ்சள் மழையே! வந்திருந்து வாழ நெஞ்சத்துள் நுழையே! சுந்தர மொழியால் நனைக்கின்ற இதழே! எந்த கணத்தில் சிறைத்தாய் எனையே?

என்னோடு எட்டு வைத்து நடக்கின்ற போதுகளில் வெயிலின் கிரணங்கள் தீண்டத் தீண்டப் பொன்னிறம் மின்னும் சிலை போலும், மெளனமான நேரங்களில் காற்றின் சீண்டலுக்கும் கலையாத நிழல் தந்தாய்!

பொன்பேழையின் ஒளி உமிழும் பாதங்களின் விரல்களின் கிரீடங்கள், கூர் அன்ன நினது பெயர் தாங்கும் இதயத்தின் மேலேறி மிதித்துச் செல்லுமா?

காற்றோடு தூது விடும் மாயச் சொற்கள், உரைப்பதை விட மறைப்பது எத்தனை எத்தனை?

முகில் சிந்திடும் ஈரத் துளிகளென நனைக்கின்ற பார்வைகளில் பதுங்கிடும் சிறு முயல் குட்டியாய் மனம்! போதுமென எண்ணுகையில் என்னு கையில் கிடைக்கின்ற நினது நிழலின் கருமை என் கண்களைச் சுற்றிக் கரை கட்டுவதை மீறி, காலமென நில்லாது பாய்கின்றது கண்ணீர்!

பெரும் போதை, பெறும் போதைக் குறித்துக் கொள்ள கண்களைப் பிடுங்கி கல்லில் கிறுக்க, சிந்திச் சிதறியது ஊமைக் காற்றின் குரல்!

மலையுச்சியில் பூத்திருக்கும் ஒற்றை மலரென, எதிர்பாரா நேரங்களில் கிடைக்கின்ற புன்னகைப் பூக்கள் வாடுவதேயில்லை என் உளப் பூங்காவினில்! நிழல் நீண்டு செல்லும் மாலை நேரங்களில் நெஞ்சில் புதைத்துக் கொள்வதற்கென பார்வைகள் தந்து விட்டுப் போகின்றாய். அவை இரவின் கனவுகளுக்கும் இடம்பெயர்கின்றன.

புதிதாய் ஒரு வார்த்தை சொன்னாய், புரியாத பொருளைத் தேடிப் புதிது புதிதாய் அர்த்தம் கொள்கிறேன். மன மோகன ராவினில் எனைச் சுற்றும் மின்மினிகளாய் முத்தங்கள் பறக்க விட்டாய். உறங்க விடாமல் உள் நோக்கிப் பறந்து கொண்டேயிருக்கின்றன.

காலையில் விழிக்க கனவுகளைப் பலியிட்டு எழுந்து பார்க்க, சிவந்த துளிகளாய்ச் சிந்திக் கிடந்தன, பொழுதுகளின் ஈரம் பூத்திருந்த பனித் துளிகளென நனைந்த பச்சை இலைகள்.

வேறெங்காவது பிறந்திருக்கலாம் என திகைக்க வைக்கின்ற இனிய அழகே, துரத்திக் கொண்டு வருவாயா எங்கே நான் சென்றிடினும்? பெற்றுக் கொள்ள நிறையா பாத்திரமாக மனம் திறந்திருக்க இட்டுக் கொண்டேயிருக்கின்றாய், காதல் புதைந்த பார்வைகளின் வழி உயிர் வாழச் சொல்லும் ஒரு நம்பிக்கை...!!!!


Get Your Own Hindi Songs Player at Music Plugin

Wednesday, February 20, 2008

அந்த மோக்ளி என்ன ஆனான்...?

டந்த கால் நூற்றாண்டு மனித வரலாற்றிலோ, மானுட சகாப்தத்திலோ வியக்கத்தக்க மாறுதல்களை கொண்டு வந்ததோ என்னவோ, எனக்கு ஒரு முக்கியமான காலகட்டம் தான். அட, நான் பிறந்து வளர்ந்த குழந்தைப் பருவமும், சிறுவன் காலமும் எனக்கு மிக முக்கியம் இல்லையா? அதைத் தான் கூறினேன்.

எத்தனை எத்தனை சம்பவங்கள்...! எத்தனை எத்தனை நிகழ்வுகள்..! எல்லாவற்றையும் காலக் கரையான் அரித்துக் கரைக்கும் முன் ஓரளவாவது நினைவுக்குக் கொண்டு வந்து பதிவு செய்வது, 'பின்னாடி வர்ற சந்ததிகள் பார்த்து தெளிவா புரிஞ்சு நடந்துக்குவாங்க' என்ற அக்கறையில் என்று இங்கு அவ்வப்போது எழுத நினைக்கிறேன்.

'ஆமா, இவரு பெரிய இவரு.. இவர் சொந்தக் கதை எல்லார்க்கும் தெரியணுமாக்கும்' என்று நினைப்பவர்கள் அப்படியே ஓடி விடவும். யாருக்குத் தெரியும், பிற்காலத்தில் 'உங்கள் வாழக்கை வரலாறு எழுத வேண்டும்' என்று ஏதேனும் சிறு பெண், மைக், காமிராவுடன் வந்து, சாய் நாற்காலியில் சாய்ந்து, பேரன், பேத்திகளைக் கொஞ்சிக் கொண்டிருக்கும் என்னை வந்து கேட்டால், அவளிடம் சொல்வதற்கும் எனக்கு ஞாபகம் இருக்குமா என்ன? அதற்காக என்று வைத்துக் கொள்ளலாமே!

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் எத்தனையெத்தனையோ நடந்திருக்கும். அவை அப்படியப்படியே மனதின் அடியாழத்தில் புதைந்து கொண்டிருக்கும். இன்றைய தினப்படி நாட்களில் நாளின் பெரும்பாலான காலம் கணிப்பொறியின் முகத்தைப் பார்த்தே கழிந்து கொண்டிருக்கின்றது. 'நான் இப்படி இருந்தவன் இல்லையே' என்ற எண்ணம் தோன்றும் போதெல்லாம், ' வால் பையனாக' சுற்றிக் கொண்டிருந்த காலங்கள் கண் முன் நிழலாடுகின்றன.

பெரும்பாலும் யாருடைய பெயரையும், அடையாளத்தையும் மறைத்தே சொல்ல விழைகிறேன். எதற்கு வீணாகப் பொல்லாப்பு? என்னைத் தெரியாதவர்களுக்கு அவர்கள் முகம் தெரியாத மனிதர்கள். என்னை அறிந்தவர்களுக்கு அவர்கள் யாரென்று தெரியும். எனவே தான்..!

மற்றபடி உங்கள் வாழ்வில் நிகழ்ந்த அத்தனை சுவாரஸ்யமான, சோகமான, கோபமான, நெகிழத்தக்க அத்தனையும் என் நாட்களிலும் நிகழ்ந்துள்ளன. அவற்றைப் பகிர்தலே இதன் நோக்கம். மறைக்க வேண்டிய அத்தனை விஷயங்களும் கண்டிப்பாக மறைக்கப்படும். நான் ஒன்றும் காந்தி இல்லை. சுவாரஸ்யமான 'பகிர்ந்து கொள்ளலாம், தற்/பிற் காலங்களில் எனக்கும், யாருக்கும் எந்தப் பிரச்னையும் வராது' என்று நான் நம்பும் விஷயங்கள் மட்டும் வெளி வரும்.

எவ்விதமான காலக் கணக்கும் வைத்துக் கொள்ளாமல், ஒரு வரிசை இல்லாமல் நினைவுக்கு வரும் போது வரிசைப்படுத்தலே சுவாரஸ்யமாய் இருக்கும் என்று நம்புகிறேன்.

காவிரிக் கரையோரம் ஒரு வளப்பமான டவுனில், பிறந்து வளர்ந்த அந்தச் சிறுவன் அவ்வப்போது வந்து அவன் கதையைக் கூறுவான். நானும் ஓரமாய் அமர்ந்து உங்களோடு அவன் கதையைக் கேட்கிறேன்.

த்தாவது வரைக்கும் எங்க வீட்டில டி.வி. இல்லை. ஏதாச்சு பாக்கணும்னா பக்கத்தில இருக்கற சித்தப்பா வீட்டுக்கோ, இல்ல ரேவதிக்கா வீட்டுக்கோ தான் போகணும். தீவாளி, பொங்கல் சமயமுன்னா அத்த வீட்டுக்குப் போய்க் கறிக் கொழம்போட இல்லனா கரும்பு ஒடச்சுத் தின்னுகிட்டு பட்டிமன்றம், பேட்டினு பாத்துட்டு வீட்டுக்கு வர வேண்டியது.

சனிக்கெழமயினா பக்கத்துல கொமாரபாளயத்துக்கு எங்க பெரீமா வீட்டுக்குப் போய்ட்டு ஞாயித்துக் கிழமை சாயந்திரம் படம் முடிஞ்சு தான் வீட்டுக்கு வருவோம். அவங்க வீட்டுல தான் Dyanora டி.வி.இருக்குதே. சனிக்கெழம சாயங்காலம் இந்திப் படம் பாப்போம். அப்புறம் அடுத்தா நா காலயில ராகிக் கஞ்சி குடிக்க (எங்கக்கா நல்லா செய்வாங்க. எங்கம்மா அந்த மாரி செஞ்சு தர மாட்டேங்கறாங்க.)

காலைய்ல ஏழு மணிக்கு கரெக்டா ஜங்கிள் புக் பாப்போம். எப்படியாவது எழுந்திருச்சு பாத்திடுவோம். மோக்லி தான் எங்க ஹீரோ. அப்புறம் மத்தியானம் க்ரெக்டா சாப்புடப் போகும் போது மாநில மொழித் திரைப்படம்னு ஏதாவது ஒரு பாஷையில படம் போடுவாங்க. கீழயே இங்கிலீஷ்ல வேற எழுத்து ஓடிக்கிட்டு இருக்கும். படமும் புரியாது. எழுத்தும் மண்டையில ஏறாது. இருந்தாலும் சாப்புடற வரைக்கும் அதை தான் பாப்போம். அப்புறம் தூங்கிடுவோம்.

சாயந்திரம் எழுந்திருச்சா காபி இல்லனா டீ மிக்சரோட படம் பாத்துட்டு ஏழு இல்ல எட்டு மணிக்கு வீட்டுக்கு சைக்கிளலயோ இல்ல பஸ்ஸுலயோ காவிரி ஆத்த தாண்டி வந்திடுவோம். சோகமா படுத்து தூங்குவோம். அடுத்தா நா ஸ்கூலுக்குப் போகணுமே!

அப்புறம் தலைவர் ஃபேன் ஆனதுக்கப்புறம், வெள்ளிக் கெழம சாயங்காலம் எப்படா தலைவர் பாட்டு போடுவாங்கனு பாத்துக்கிட்டே இருப்பேன். சில சமயம் போடுவாங்க. சில சமயம் இருக்காது. கமல் பாட்டு போடுவாங்க. எந்திரிச்சு வெளிய போயிடுவம்ல..!

சில நாள்ல திடீர்னு ஸ்கூல் லீவு விட்டுடுவாங்க. அப்பல்லாம் என்ன பாக்கறதுனே தெரியாது. டி.வி.ல ஏதாவது இந்தியில பேசிக்கிட்டே இருப்பாங்க. அதயே பாக்க வேண்டியது தான்.

தளபதி படத்துல தலைவர் திரும்புறாப்ல ஒரு போஸ் குடுப்பார்ல. அத பொங்கல் வாழ்த்தா வாங்கறதுக்குள்ள செம ரகளையாகிப் போச்சு. எல்லா படமும் சீக்கிரமே வித்துப் போயிடும். மத்தவங்க பொங்கல் வாழ்த்தெல்லாம் அப்படியே இருக்கும். ஆர்.எஸ்.பி. பக்கத்துல ஒரு கட்டில் கடயில தான் கடசியில கெடச்சுது. யாருக்கும் அனுப்ப மாட்டேன். வாங்கி வாங்கி நானே வெச்சுக்குவேன்.

Tuesday, February 19, 2008

இருவர் - இரு பாடல்கள்.

ருவர் படத்தில் இருந்து, இரு பாடல்கள்.
Get Your Own Hindi Songs Player at Music Plugin

ன்று தூய தமிழ் வரிகளுக்காகவும், பழைய பாணியில் ஒளிப்படுத்தியதற்காகவும் பிரபலமானது. இது போல் எழுத வேண்டும் என்பது என்னதான் பிட்ஸாவில் மூழ்கிய மனதினனானாலும், தமிழ் எழுதுபவர்களுக்குத் தோன்றாமல் இருக்காது. தேனில் பிழிந்த சுவைப் பலாச் சுளையை வெண் பாலில் நனைத்து ஊற வைத்து இனிக்க இனிக்க ரசிக்கச் சுவைத்தால், எப்படி தேவாமிர்தமாய் இருக்குமோ அத்தகைய இனிமையைப் பொழிகின்றது இசையில் நனைந்த செந்தமிழ்..!

ஆஹா! இத்தமிழை அறிவதற்கும், எழுதுவதற்கும் எத்துணை பேறு பெற்றிருக்க வேண்டும்! இது போல் எழுத முயன்று ஒரு மாதிரி கொணர்ந்த கதை இங்கே, தங்கள் பார்வைக்கு!

இத்தகைய வலுவும், வளமும் நிறைந்த மொழியில் பிறந்து விட்டு, நீர்த்த தமிழ் பேசிக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருப்பவர்களைக் காண்கின் வருத்தமே மேலிடுகிறது.

தாமரை நிறைந்த தேன் குடத்தை வைத்துக் கொண்டு தாங்க முடியாமல், தலை கவிழ்ந்திருக்குமாம். குளத்திலேயே வசிக்கின்ற தவளைக்கு அது தெரியாது. பூச்சிகளின் மேல் கண் வைத்து தாவிக் குதித்துக் கொண்டிருக்கும். எங்கிருந்தோ ஆயிரமாயிரம் தொலைவுகளுக்கு அப்பால் இருந்து வரும் தேனிக்கு மட்டுமே இந்தத் தேன் துளிகளை சுவைத்து இரசிக்கும் மனம் இருக்குமாம். பாவம் தவளை, அருகில் இருந்தும் அருமை அறியாத வண்ணம் வாழ்ந்து மடியும், பரிதாபம்..!
Get Your Own Hindi Songs Player at Music Plugin

ற்றொன்று அருமையான கஜல் இசையின் மயக்கும் இராகத்தை வெளிக்காட்டியதற்காகவும் இனிமை மிகுந்த இசைக்காகவும் சிறப்பானது. ஜானகி அவர்கள் பாடியது போல் இருக்கிறது. 'சந்தியா' என்று தெரிகிறது. இவர் யார் என்று எனக்குத் தெரியவில்லை. மிக்க நன்றாய் உள்ளது.

ரு பாடல்களுக்கும் இனிமை கூட்டுகின்றது குழலோசை...! கவனித்துப் பார்த்தீர்களானால் தெரியும் நீங்கள் எதையெல்லாம் மெலோடி , இனிமையான பாடல், காலங்கடந்தது என்று நினைக்கிறீர்களோ அவை அனைத்திலும் புல்லாங்குழலின் இசை கண்டிப்பாக இருக்கும். அக்குழலிசையில் மனதை வருடும் ஒரு மெல்லிய நாதம் மறைந்திருக்கின்றது. இந்த உண்மை அறிந்ததனால் தான் மாயக் கண்ணனும் குழல் நாயகன் ஆனான் போலும்!

ஒதுங்கிக் கொள்வது நன்று!

விகடனில் வந்த ஜெயமோகன் அவர்களின் பதிவைப் பற்றிய கட்டுரையைப் பற்றி எழுதாவிட்டால், அது தமிழ் வலைஞரின் இலக்கணம் ஆகாது என்பதால் இப்பதிவு.

அக்கட்டுரையை வாசித்ததோடு சரி. பிறகு ஜெயமோகன் அவர்களின் வலைக்குச் சென்று மீதத்தையும், மீதக் கட்டுரைகளையும் வாசிக்கவில்லை. அது எனக்குத் தேவையில்லாதது. எனவே இது விகடனில் படித்ததன் பேரில் எழும் விளைவு மட்டுமே.

அவர்களது ஊரில் இவர்களைப் பற்றி எப்படியெல்லாம் பேசிக் கொண்டார்கள் என்பதைப் பற்றி மட்டும் கூறியுள்ளார். வேறு ஏதேனும் ஊரிலும் இவரைப் பற்றி தரக்குறைவாக கூறலாம். அதையும் இவர் பதிவு செய்வாரா? நேற்றைய தலைமுறைக்கும், இன்றைய தலைமுறைக்கும் இவர்களைப் பற்றிய பதிவுகள் நிச்சயம் நல்லதாகவே இருக்கும். ஜெ கூறியுள்ளதைப் போல் வெறி ரசிகர்கள் வேண்டுமானால் கூறிக் கொள்ளலாம்.

நாம் இவர்களின் படங்களில் இருந்து ஏதேனும் நன்மை இருக்குமானால், அதனை எடுத்துக் கொள்வோமானால் அது நன்மை பயக்கும். மாறாக பொது வாழ்வில் உள்ளவர்கள் பற்றி வருகின்ற ஆயிரக்கணக்கான வதந்திகளைப் பதிவு செய்வதால் யாருக்கும் எவ்விதமான பலனும் இருக்கப் போவதில்லை. அது மஞ்சள் பத்திரிக்கைகளின் விற்பனைத் தந்திரம். அவர்களிடமும் ஆதாரம் ஏதேனும், அந்த வதந்திகளை ருசுப்படுத்த இருக்குமா என்றால், இருக்காது.உற்சாகம் ஊட்டக் கூடிய பாடல்களையும், வாழ்வில் எப்படி இருக்க வேண்டும் என்ற கருத்துக்களைத் தன் படங்களில் பயன்படுத்தியதன் மூலம் பார்ப்பவர்களுக்குப் பயன் தந்தார் எம்.ஜி.ஆர். அவர் அதனை ரசிகர் குழாம் கூட்டவும், பின் கட்சி தொடங்குகையில் ஓட்டுப் பொட்டலம் கட்டவும் பயன்படுத்தினார் என்று கூறுபவர்கள் கவனிக்கவும். அப்படி மக்கள் கூட்டத்தைக் கவர்வது தான் இவரது குறிக்கோளாக இருந்திருக்குமானால், கவர்ச்சி நடிகைகளை ஆட விட்டு, 'மஞ்சள் தேய்க்கவா, மஞ்சத்தில் பூசவா' என்று பாடல்களை ஓட விட்டிருக்கலாம்.

இல்லையே! எத்தனை தத்துவமான பாடல்கள், அறிவுரைப் பாடல்கள்.! அவற்றை அவர் தன் வாழ்வில் பயன்படுத்தினாரா என்பது எனக்குத் தெரியாது! நாம் பயன்படுத்திக் கொள்ளலாமே! சுவர் அறிய வேண்டியதில்லை சுவரொட்டியின் வாசகங்கள்!

ஒருவரது உடல் நிலையை வைத்து அவரை எடை போடுவது எப்படி சரியான அளவீடாக இருக்க முடியும்? குண்டடி படுவதற்கு முன் அவரது குரல் நன்றாகத் தானே இருந்தது. பிறகு ஏற்பட்ட நிகழ்விற்குப் பின் உடல் நிலை மாற்றமடைந்தாலும் செயல்பாடுகளில் மாற்றம் ஏதேனும் இருந்ததா?

அவ்வப்போது படிக்கின்ற துணுக்குகளில் எம்.ஜி.ஆர். அவர்களின் தயாள குணமும், பரோபகார பண்பும், தெரிய வந்து கொண்டிருக்கின்றது. இதெல்லாம் எப்போது செய்தார் என்பது யாருக்கும் தெரியாது. பின் உதவி பெற்றவர் கூறும் போது தானே தெரிய வருகிறது.

தன்னைக் காண மலையாளி எவரேனும் வரின், அவரிடம் மலையாளத்தில் பேசுபவர், வேறு யாரேனும் தமிழர் அறைக்குள் நுழைய தமிழுக்குத் தாவி விடுவாராம். ஏனெனில் வருபவர் மனம் கோணி விடக் கூடாதெனவும், முக்கியமாக மூவருக்கும் புரியும் மொழியில் பேசுவது தான் நன்று என்றும் அந்த படிக்காத மேதைக்குத் தெரிந்திருக்கிறது. இப்பண்பைப் பற்றி எழுதுவார்களா? மாட்டார்கள்.சிவாஜி அவர்களது நடிப்பு ஓவர் ஆக்ட் என்பவர்கள், அவர் நாடக உலகில் இருந்து வந்தவர் என்பதும், அவர் ஏற்று நடித்த வேடங்கள் அத்தகைய நடிப்பை அவரிடமிருந்து எதிர்பார்த்தன என்பதையும் வசதியாக மறந்து விடுகின்றனர்.

சிவாஜியை 'நடிப்பின் இலக்கணம்' என்று கூறுகிறார்கள். அந்தளவுக்கு ஒப்பிட எனக்குத் தெரியாது. நான் பார்த்த சில படங்களிலேயே எனக்குப் பிடித்து விட்ட நடிப்பு அவரது! குறிப்பாக அவரது பிற்காலப் படங்கள். தேவர் மகன், படையப்பா, முதல் மரியாதை..!

தங்கை மணமாகிச் செல்ல காத்திருக்கையில் பாடுவது என்னய்யா தவறு? எல்லார் வீட்டிலும் மனதிற்குள் அழுவார்கள். மனதில் அழுவதை திரையில் காட்டவும் பாடல் தேவை.

இன்னும் நான் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்று இல்லை. தமிழ் மொழி தெரிந்தவர்களுக்கு எல்லாம் தெரியும்.

ந்த எழுத்தாளருடைய எழுத்துக்களை நான் படித்ததில்லை. படித்து, அவருடைய படைப்புகளை வைத்து மட்டுமே அவரைப் பற்றி நான் கூற முடியும். மற்றப்டி இவர் கண்ணாடி போட்டுள்ளார், 'சுத்த கண்ணு தெரியாத கபோதி' என்று எங்கள் தெருமுனைக் கூட்டத்தில் கதைப்பார்கள் என்று நான் எழுதினால், அது அவரைப் பற்றிய நல்ல பதிவாய் இருக்க முடியுமா? இது தான் நீங்கள் உங்களைப் பற்றி வருங்காலம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி என்று நினைக்கிறீர்களா?

அன்னம் தண்ணிப்பாலில் இருந்து பாலை மட்டும் தனியே பிரித்து எடுத்துக் கொள்ளுமாம். பன்னி இலை நிறைய சாப்பாடு போட்டாலும் எதையோ தேடி ஓடுமாம். என்ன செய்ய, அவையவை பழக்கம் அப்படி! நாம் ஒன்றும் செய்ய முடியாது.

ஒதுங்கிப் போய் அவற்றைக் கண்டு கொள்ளாமல் விடுவது தான், நம் மீது சேறு படாமல் தப்பிக்கும் முறை. மாறாக அறிவுரை சொல்லக் கிளம்பினால் நம்மேலும் பாயும்!

தேவையா நமக்கு?

சத்தமாய்ப் பேசும் சக்கைகள் கால வெள்ளத்தில் காணாமல் போகும். சத்துக்கள் மட்டுமே சவுக்கியமாய் வாழும்....!

Monday, February 18, 2008

பொன்முடி...!

பொன்முடிச் சிகரங்கள் பற்றி கேள்விப்பட்டதில் இருந்து அங்கு ஒரு பயணம் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.ஆனால் செல்வதற்கான காலம் நேற்று தான் கனிந்தது. அப்பயணம் பற்றிய ஒரு பதிவு இது. செல்வதற்கு முன் இங்கே் சென்று ஒரு பார்வை பார்த்து விட்டு வந்து விடுங்களேன்.

http://en.wikipedia.org/wiki/Ponmudi

ஞாயிறு காலை 7 மணிக்கு கழக்குட்டத்தில் இருந்து கிளம்பி, தம்பானூர் சென்றடைந்தேன். இது தான் திருவனந்தபுரத்தின் மத்தியப் பகுதி. அங்கிருந்து அடுத்த பொன்முடிக்கே செல்லும் நேர்ப் பேருந்து அடுத்து காலை 9:20 மணிக்குத் தான் என்றார்கள். நானோ (இது டாடா கார் இல்லீங்க..) அதிகாலை 8:10க்கே வந்து விட்டேன். (பின்னே, ஞாயிறு காலை 8 மணி என்பது அதிகாலை தானே!)

என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே, அங்குமிங்கும் நடந்து, நின்று, செல்லும் வரும் பேருந்துக்ளில் எழுதியிருக்கும் எழுத்துக்களைக் கூட்டிப் படித்து ஒரு மாதிரி ஓட்டிக் கொண்டிருந்தேன். அதற்குள் 'நெடுமங்காடு' செல்லும் பேருந்துகள் வந்து கொண்டே இருந்தன. அங்கு சென்று பேருந்து மாறிக் கொள்ளலாமா என்று தோன்றியது.

ஆனால் முதன்முறையாகச் செல்லப் போவதால், வேண்டாம் இந்த ரிஸ்க் என்று நேர்ப் பேருந்திலேயே செல்லலாம் என்று முடிவெடுத்து காத்திருக்கலானேன். (ஆனால் ரிஸ்க் எப்படித் துரத்தியடித்தது என்பது பிறகு வரும்.)

மர்பி'யின் விதிகள் படிக்கும் முன் வரை 'ஏன் தான் எனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்கின்றதோ?' என்று தோன்றியது. இப்போது அது அப்படித்தான் நடக்கும். ஏனெனில் அது அப்படி நடந்தால் தான் அது , அதுவாக இருக்கிறது என்று அர்த்தம். இல்லாவிடில் அது வேறு எதுவாகவோ மாறிக் கொண்டு இருக்கின்றது என்று பொருள்.

பின்ன என்னங்க, நான் அமர்ந்த பக்கம் மட்டுமே வெயில் அடித்துக் கொண்டே வந்தால், ஒரு மனிதன் என்ன தான் செய்ய முடியும். ஒளிகிறேன், நெளிகிறேன், ஜன்னலை மூட முடியாமல் வெயிலின் கரங்கள் விளையாடியதில் வேட்டையாடப்பட்டது என் கலர்.( ஆமா, இவரு பெரிய..)

எதிர்பக்க மக்கள் ஜாலியாக வர , நான் மட்டும் கடுப்பாக.! கொஞ்ச நேரத்தில் இதெல்லாம் இந்தியாவில் சகஜம் தானே என்று நானும் வெயிலோடு விளையாடப் போனேன்.

வெயிலின் வெண்மை கரைந்த பனிப் புகைகள் வீடுகளின் கூரைகளின் மேல் படர்ந்திருந்தது. முதலில் நெடுமங்காடு, பின் விதுரா, பின் கல்லார் வரை பேருந்து பறந்து கொன்டிருந்தது. மெது மெதுவாக மலை ஏறிக் கொன்டே இருப்பதை உணர முடிந்தது. குளிரும் மெல்ல மெல்ல குசலம் விசாரித்துக் கொள்ள ஆரம்பித்தது.

சாலை கொஞ்ச கொஞ்சமாக தடம் மாறத் தொடங்கியது. நிறம் மாறத் தொடங்கியது. கல்லார் வரை அகலமாக இருந்த சாலை, மெல்ல குறுகக் குறுக ஆரம்பித்தது.

22 கொண்டை ஊசி வளைவுகள் தொடங்கப் போவதை சுற்றுலாத் துறையின் போர்டுகள் பறைசாற்றின. எண்ணிக் கொண்டே வந்தேன். சில இடங்களில் சாலை படு மோசம். இதில் எப்படித் தான் ஓட்டுகிறார்களோ என்றே தெரியவில்லை. தொடர் மழைகளில் ஏகப்பட்ட பெயர்ப்புகள். கொஞ்சம் திகிலாகத் தான் இருந்தது.

வளைவுகளில் மிக்க கவனமாகத் தான் ஓட்டினார், ஓட்டுனர்.நாமும் சும்மா இருக்காமல், காமிராவால் சுட்டுக் கொண்டே வந்தேன். வழியில் சில இடங்களில் தேயிலைத் தோட்டங்களின் ஊழியர் குடியிருப்புகள்.

எல்லாவற்றையும் கடந்து சென்று, பேருந்து ஓரிடத்தில் நிறுத்தினார்கள்.

காவல் நிலையம் ஒன்று, அரசாங்கத் தங்குமிடம், ரெஸ்டாரண்டுகள் 2, ஒரு ஸ்டோர், குழந்தைகள் விளையாட சறுக்கு மரங்கள்.. அவ்ளோ தான். வேறு எதுவுமே இல்லை. பயங்கர ஷோக். 'என்னங்க, இங்க டூரிஸ்ட் ஸ்பாட் என்று எதுவும் இல்லையா?' என்று கேட்டேன். இது தான் தம்பி என்றார்கள். சுற்று முற்றும் மலைச் சிகரங்கள், மேகம் முட்டும் உச்சிகள், பச்சைப் பசேலென தேயிலைத் தோட்டங்கள்.

வேறு வழியின்றி அவற்றை வீடியோ மட்டும் எடுத்து சேகரித்து விட்டு, வேறு ஏதாவது பார்ப்பது போல் இருக்கிறதா என்று கேட்டேன்.இன்னும் 2 கி.மீ. மேலே சென்றால், உச்சியை அடையலாம். அங்கிருந்து இதையே இன்னும் நன்றாகப் பார்த்து இரசிக்கலாம் என்றார்கள். சரி இதுவே போதும் என்று, வேறு? கேட்டேன்.'தாழ' போனால் கல்லாரில் அருவி இருப்பதாகச் சொன்னார்கள். சரி நமக்குத் தான் அருவியும், தண்ணீரும் தண்ணி பட்ட பாடு ஆயிற்றே என்று அதை' டிக்' செய்து வந்த பேருந்திலேயே கல்லாரில் இறக்கி விடுமாறு கேட்டுக் கொண்டேன்.

சரி வந்ததற்கு ஏதாவது வாங்குவோமே என்று, அங்கேயே தோட்டத்தில் பறித்த தேயிலைப் பாக்கெட்டும், மலைத்தேன் என்று விற்றார்கள் என்று அதையும் ஒரு பாட்டில் வாங்கினேன். அத்துடன் காலையில் ஒன்றும் சாப்பிடவே இல்லையெ என்று ஒரு பாக்கெட் வறு கடலையை வாங்கினேன். அது தான் வினையாகிப் போனது. அது பிறகு.

வாங்கிய சரக்குகளோடு பேருந்தில் ஏறி அமர்ந்து, இம்முறை உஷாராக வெயில் வர முடிஆத இடமாக அமர்ந்து கொண்டேன். வேறெங்கே, வரும் போது அமர்ந்த அதே இடத்தில், அதே பேருந்தில்!

ஏறும் போது மெதுவாகச் சென்றது போல் இருந்த பேருந்து, இறங்கும் போது 22 வளைவுகளையும் வேகமாகக் கடந்து விட்டது போல் இருந்தது. கல்லாரில் இறக்கி விட்டார்கள்.

ர் தெரு என்று சொல்லும் அளவுக்காவது இருக்குமா என்று தோன்றவில்லை. ஒரு மாதிரி வித்தியாசமா பார்த்த மக்களிடையே நடந்து சென்று , இங்கே Falls எங்கே இருக்கிறது என்று கேட்டேன். அந்த வயதானவர்க்கு தெரியவில்லை. 'மலையாளம், இந்தி' என்று கேட்க, நான் தலையாட்டிய திசையைதைப் பார்த்து, இப்படி இந்தி தெரியாத இவன் கண்டிப்பாக தமிழனாகத் தான் இருக்க வேண்டும் என்று உணர்ந்தவர் போல் 'தமிழ்?' என்றார். ஆமாம் என்றேன். 'அருவ்'' என்று கேட்டேன், பிறகு. இது தான் அருவி என்று ஓர் ஓடையைக் காட்டினார்.

சரிதான் என்று நானும் தலையை ஆட்டி நன்றி சொல்லிக் கொண்டு, அந்த ஓடையில் இறங்கி சில்லென்று கடந்து சென்றேன். யாரும் நடந்தே வந்திருக்க மாட்டார்கள் போல் இருந்தது. காட்டாறு. இப்போது வெயில் காலம் என்பதால் அவ்வளவாகத் தண்ணீர் வரத்து இல்லை. எனவே கூழாங்கற்களும், சரளைக்கற்களும் கால்களைப் பதம் பார்த்தன. கருங்குருவிகளும், கொக்குகளும் பறந்து சென்றன. ஏதாவது காட்டு விலங்குகள் எதிர்ப்படுமோ என்று நினைத்துக் கொண்டே செல்ல, அடுத்த பக்கம் ரோடு வந்தது. 'அடச்சீ' என்றாகி விட்டது.

அங்கிருந்த, மொக்கை போட்டுக் கொண்டிருந்த மூன்று பேரிடம் எங்கே என்று கேட்க, கொஞ்ச தூரம் செல்லுங்கள் என்றனர்.

அங்கே செல்ல, அரசுக் காவலாக ஒருவர் இருந்தார். அவரிடம் சீட்டு வாங்கி, பொருட்களை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லி, வெளியே இருந்த ஒரு பெட்டிக் கடையில், ஒரு துண்டு வாங்கினேன். அங்கே ஒரு டம்ளர் மோர் வாங்கி குடித்ததன் பலன் பிறகு தெரிந்தது.

பிறகு 1.5 கி.மீ சென்றால் அருவியை அடையலாம் என்றனர்.

பாதை போகப் போக ஒற்றையடிப் பாதையாக மாறிக் கொண்டே வந்தது. மிகவும் இறக்கமாகவும், மிக மிக ஏற்றமாகவும் பாதை மாற ஆரம்பிக்க, உதறல் எடுக்கத் தொடங்கியது. இவ்ளோ கஷ்டப்பட்டு அருவியில் குளிக்கத் தான் வேண்டுமா என்று ஒரு கேள்வி எழும்பியது. இருந்தாலும் சென்று கொண்டே இருந்தேன்.

காலையில் ஒன்றும் சாப்பிடவில்லை. முன் மதியத்தில் கொறித்த எண்ணெயில் பொறித்த வறுகடலை உடலில் இருந்த நீரையெல்லாம் உறிந்து விட்டிருந்தது. சற்றுமுன் குடித்த மோர் மட்டுமே கொஞ்சம் ஈரப்ப்பதம் தந்திருந்தது.

ஒரு கட்டத்திற்கு மேல் இனிமேல் இது ஆவறதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டேன். மிக்க தாகம் எடுக்கத் தொடங்கி, மயக்கம் முதல் நிலை வர ஆரம்பித்திருந்தது. ஏற்கனவே திருச்செங்கோடு மலையேறுகிறேன் பேர்வழி என்று கிறுகிறுவென இருட்டிக் கொண்டு வந்த அனுபவம் இருந்ததால், கீழே இறங்கத் தொடங்கினேன். அங்காவது நண்பர்கள் இருந்தார்கள். இங்கே யாரும் இல்லை. மயங்கி விழுந்தால், கண்டு கொள்ள யாருமில்லை என்றதால், பயம்.

கொஞ்ச தூரம் கீழே வந்து, பின் ஆற்றில் இறங்கி, நீரை மொண்டு மொண்டு குடித்த பின் தான் கொஞ்சம் பலம் ஊற ஆரம்பித்தது. ஆசை யாரை விட்டதோ இல்லையோ, என்னை விடவில்லை. 'ஏன் பாதை வழியே போக வேண்டும், இந்த ஆறும் அருவியில் இருந்து தானே வருகின்றது. இதன் வழியே போனால் என்ன என்று தோன்ற... பயணம் வேறு வடிவம் கொள்ளத் தொடங்கியது.

'ரிஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி' என்று கூறிக் கொண்டே பாறைகளின் மேலே படர்ந்தவாறும், குதித்தும், தாவியும், பாது பேண்ட் நனையும் வரை ஆற்றைக் கடந்தும் அப்படி, இப்படி என்று ஓடியும், அருவியை அடைந்தேன்.

ஆஹா..! சிறிய அருவி தான் என்ற போதும், அதை அடைந்த விதம் சாகசத்திற்குரியது என்றதால் மிக்க மகிழ்வாய் இருந்தது. குதித்து குதித்து குளித்தேன், பட்டினத்தார் ஸ்டைலில். ஆனால் அது மிக்க ஆழமான பகுதி என்பதால், அருவியின் அடி வரை செல்லாமல், ஓரமாகவே நீந்தினேன்.

பின், முன்பே குறித்து வைத்திருந்த சிற்றருவிகள் வரை நடந்து சென்று, அங்கு தான் ஓர் 2 மணி நேரம் குளித்து மகிழ்ந்து, பசி கிள்ளியெடுக்க திரும்பினேன்.

பின் ஆரம்பித்தது வினை.

அந்நேரத்திற்கு நேர்த் திருவனந்தபுரம் செல்ல பேருந்து இல்லை என்பதால், அங்கிருந்து விதுரா. அங்கிருந்து நெடுமங்காடு. அங்கிருந்து தான் திருவனந்தபுரம் என்று அடைந்தேன்.

அங்கே இரவு உணவை முடித்து விட்டு, 'வார்கலை' செல்லும் பேருந்தில் ஏறி, 'அவுட்லுக்' படித்துக் கொண்டே சரியாக கழக்குட்டம் வர இரவு 9 ஆகி விட்டது.

வந்ததும், படுத்ததும் தான் தெரியும். இன்று காலை எழ, தொடைகள் வலிக்கத் தொடங்கியதும் தான் நேற்றைய பயணம் நினைவில் ஒரு சுகமான கனவாக புலனானது.
Get Your Own Hindi Songs Player at Music Plugin