செங்கனல் தொடல், வெள்ளெருது முட்டல், உறைபனி உண்ணல், கடும்புளி நக்கல், நின் மறைநகை காணல்.
பொழி நிலவுப் பொழில் அரசிலை ஊறித் ததும்பி இலைக்குழி நழுவிச் சொட்டி இறங்கி மண் ஊறிற்று. தென் திசைக் குளிர்த்தென்றல் கிளைகளைக் குலுக்கி உலுக்கி உதிர்த்த முன்மலர்கள் பாதைகளில் பூத்துப் பழுத்து இதழ் சுருட்டி கூம்பிச் சரிந்து இரவின் வருகைக்குப் பாதை இட்டன.
தேவி, நின் சுயம்பிழம்பென செந்நெருப்பிட்ட கோலத்திருவுரு பூமியில் ஒரு கால் வைத்து அண்டப்பேரண்டமெங்கும் தீக்குழல் பரப்பி விரித்து எண் திசைகளிலும் கரம் நீட்டி மயக்குறு இரு விழிகளிலும் அமுது வடிய ஜகம் நிலைகொண்டாய். நீ நிற்கும் இவ்வோர் காலடி சூரிய சந்திரர்களை நிறுத்தியது. வாயு திகைத்து பாதம் பணிந்தான். வருணன் நீராட்டினான். அக்னி சிகை ஏறினான். பேரொளி சுமக்கும் ஆகாயப் பொற்கோலம் நின்புன்னகை தருவித்த மதுர கணம்.
பிறவி ஏழிலும் துணை வரும் பேரன்புப் பெரு விழியே! நீங்கா நிழலென நின் தீண்டல் என் ஆயிரம் பாதைகளிலும் தொடர்ந்து வருகின்ற செம்மையே! வானாயிர மீன்களிலும் இல்லா இரு மீன் உருளும் தவிக்கும் மயக்கும் கொஞ்சும் கெஞ்சும் துஞ்சும் விழியே! நீலப்பீலி ததும்பும் மென்மாலைப்பொழுதில், நீரலை உந்தும் கரைநுரை போல் மனம் நிரம்பும் பேரன்புப் பெருங்கனியே! தீதென்றும் நன்றென்றும் இரண்டிமை எனைத் தீண்டாப் பூங்கரம் நினதல்லவா! பேசாப் பூஞ்சுழலே! வெறும் திசைகள் சூழ் இவ்விரவின் கனம் எனையழுத்தி நொறுக்கித் துகளாக்க முயல்கையில், மென்கீற்று மின்னல் போல் ஒளிர்ந்து காத்தாய், மதுமலி செந்துறைக் கரைச் சிறு காம்புத் தீஞ்சுவை அமுதே!
மைத்துளி தீட்டித் தீட்டி வரைந்தெடுத்த பொட்டுச் செம்பொன் ஒளி சிதறும் எழில் சிலையென, நீ ஒசிந்து நிற்கும் கோலமதில், கிளை விட்டெழுந்த சிற்றிலை சுழன்று சுழன்று காற்றில் கிறுக்கும் முடியாப் பெருங்காவியம் தீராமல் எழுதுகிறேன்.
பகலும் இருண்மையுமாய் நாளுமிரவுமாய் வெயிலும் குளிருமாய் மழையும் காற்றுமாய் எழுதலும் அடங்கலுமாய்க் காலம் பெருக்கெடுத்துப் போகின்றது. தேவி, ஒளி நிறைக் கலம் ஒன்றை ஏந்தி செம்பூ பூத்த கொத்தொன்றைச் சூடி, அனல் பட்டு ஆடை அணிந்து வலக்கால் எடுத்து வைக்க நுழைவழைப்பு இது! சிறுமனக்குளம் கலங்க அலைகள் தளும்ப நீராடி மூழ்கிக் கரையவா!