Wednesday, November 10, 2010
பின் தொடரும் நிழலின் குரல்.
சென்ற ஞாயிற்றுக்கிழமை ஈரோட்டுக்கு, கைக்குப் பொருந்தாத வளையல் மாற்ற ப.செ.பார்க்குக்குச் சென்றார். கூடப் போயிருந்தேன். மழை வரும் போல் காற்று சில்லிட்டது. தீவாளி மயக்கம் தீராத கட்டில் கடைகள் ஏறக்கட்டப்பட்டிருந்தன. நேரம் எட்டைத் தொட்டது. வேலா புத்தக நிலையம் சாத்தியிருந்தது. வளையல் கடைக்கு அவர் சென்று விட, வேலாவுக்கு எதிரில் இருந்த மற்றொரு சிறு நூற்கடையில் நான் ஒதுங்கி கண்ணாடிக் கூண்டுகளுக்குள் காகிதங்களை விசாரித்தேன்.
பெரும்பாலும் கிழக்கின் நூல்கள். கொஞ்சம் ப்ராடிகி. கோலம் கோர்ப்பதையும் ஜோசியம் பார்ப்பதையும் தோசை வார்ப்பதையும் சொல்லிக் கொடுக்கும் என்றும் பச்சை ஒல்லி நூல்களுக்கு இடையில் 'பின் தொடரும் நிழ்லின் குரல்' கேட்டது. வாங்கிக் கொண்டேன். 290 ரூ. தமிழினி பதிப்பகம். கூட அம்பானி வாழ்வுச் சுருக்கும்.
ஞாயிறு இரவில் துவங்கி நள்ளிரவு இரண்டரை வரை படித்துப் பின் திங்கள் முழுதும் படித்து நேற்று கடைசி கொஞ்சம் பக்கங்களையும் இரவில் படித்து விட்டு இன்று எழுதுகிறேன். இப்பதிவு நாவலைப் பற்றிய எவ்வித மதிப்புரையோ, விமர்சனமோ அல்ல. படித்து முடித்து யோசிக்கும் போது தோன்றிய எண்ணங்கள் மட்டுமே.
தலைப்பின் பொருள் என்ன? நம்மைப் பின் தொடர்ந்து வருகின்ற நிழலின் குரல். அந்த நிழல் என்ன? ஓர் ஒளியின் முன் நாம் நிற்கையில் நம் பின்னே உற்பத்தியாகின்ற நம் வடிவ எல்லை. உண்மையில் ஆசிரியர் குறிப்பிடும் நிழல் அது தானா? நாவலுக்குள் செல்லச் செல்ல வேறு அர்த்தங்களுக்கும் நம்மைக் காட்டுகின்றது.
கம்யூனிசம் என்ற ஒரு சித்தாந்தத்தின் அடிப்படையில் உருவாக்காப்படுகின்ற சோவியத் யூனியன் வீழும் போது, (சிலர் ருஷ்யாவில் அமலாக்கப்பட்டது மார்க்ஸ் சொல்லிய கம்யூனிசமே இல்லை என்று சொல்கின்றார்கள்) அச்சித்தாந்த ஆட்சிக் காலத்தில் அதைச் சொல்லி நடத்தப்பட்ட பேரழிவுகளுக்கு என்ன பொருள்? அதில் வாழ்விழந்த மக்கள் பெருங்கூட்டங்களுக்கு என்ன பதில்? என்ற அடிப்படைக் கேள்விக்கு ஆசிரியர் இந்திய அளவில் பொதுவுடைமை இயக்கம் இயங்கும் விதம் மற்றும் காலப்போக்கில் அது ஜனநாயக வழிக்குத் திரும்ப முற்படும் காலகட்டத்தைக் கொண்டு எழுதியிருக்கும் நாவல் இது.
கம்யூனிசம் பற்றியும் ருஷ்யாவில் நிகழ்ந்தன பற்றியும் எதுவும் தெரியாது என்பதால், அவற்றுக்குள் செல்லாமல் ஒரு படைப்பு என்ற ரீதியில் மட்டும் இதை அணுகுகிறேன். ஆனால் நாவல் அரசியல் பேசுவதால் அதைப் பற்றியும் வரும்.
பொதுவான நாவல் என்ற கட்டமைப்புக்குள் இதைப் பார்க்க முடியவில்லை. ஒரு சீரான கட்டுக்கோப்புக்குள் பயணப்படும் கதை மாந்தர்கள், அவர்களது மனநிலைகள் என்று துவங்கி முடியும் நாவல்களுக்குள் இது ஒரு மாறுபட்ட வடிவம் கொண்டது. கதைப் போக்கின் ஊடாக நாடகங்கள் வருகின்றன; கவிதைகள் வருகின்றன; கடிதங்கள், உரையாடல்கள் என்று பல (உத்திகள் என்று சொல்லலாமா என்று தெரியவில்லை.) உருவுகளில் கதை நகர்கின்றது.
அருணாசலம் என்ற தொழிற்சங்கவாதியிடம் வீரபத்திரப் பிள்ளை என்ற இயக்கத்திலிருந்து துரத்தப்பட்ட, இயக்கப் பதிவுகளில் இருந்து முற்றிலும் நீக்கப்பட்ட குடிக்குத் தன்னை இழந்து சக்கடையில் மரிக்கும் ஒரு முன்னாள் தோழரின் கைப்பதிவுகள் கிடைக்கின்றன. அவையே மேற்சொன்ன புனைவுகளாக நாவலில் அமைகின்றன.
வீரபத்திரப் பிள்ளையைப் பற்றித் தேடிப் போகையில் அருணாசலம் சந்திக்கின்ற நிகழ்வுகள் அவரைக் கொஞ்சம் கொஞ்சமாக மனப்பிறழ்வுக்கு ஆளாக்குகின்றன.
ஸ்டாலின் புகழ் பாடிக் கொண்டிருந்த அக்காலத்தில் பிள்ளைக்கு சைபீரியப் படுகொலைகள் பற்றியும் புகாரின் என்ற ருஷ்யப் புரட்சியாளரைப் பற்றியும் தகவல்கள் கிடைக்கின்றன. அதனைக் கொண்டு கேள்வி கேட்டதால் இயக்கம் அவர் மீது புழுதி வாரித் தூற்றி வெளியே எறிகின்றது. இது காலம் காலமாய் நடப்பது தான் என்பது போல் கெ.கெ.எம். பிள்ளைக்குச் செய்ய, கெ.கெ.எம்.மிற்கு நாராயணன் செய்கிறார்.
நாவலில் வரும் தர்க்க விவாதங்கள் தெளிவாக உள்ளன. ரப்பர் தொழிற்சங்கத்தை உருவாக்கிய கெ.கெ.எம். இறுதியில் கிருஷ்ண பக்தராவதும் (அவர் கடைசியில் வந்து சேரும் வயதான காதலி கிறித்துவராய் இருப்பினும்), அருணாச்சலம் பலிபூஜைக்கு வருவதும் ஆசிரியரின், மரபின் மேலான ஆர்வத்தைக் காட்டுகிறது.
வீரபத்திரப் பிள்ளை எழுதியதாக வரும் சிறுகதைகள் ருஷ்யப் பனிநிலத்திற்கே கூட்டிச் சென்று விடுகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. அருணாச்சலம் மனநலவிடுதியில் படித்து உள்ளேயே விழுந்து விடுகின்ற நாடகம், ஆசிரியருக்கு மிக எளிதாகக் கைவசப்பெறும் அங்கத வகையில் எழுதப்பட்டிருப்பது அபாரம். ஜெயமோகன் என்ற இளம் எழுத்தாளரும் அருணாசலத்திற்கு எரிச்சலைக் கொடுத்துக் கொண்டு நாவலில் வருகின்றார்.
இறுதியில் மனுஷகுமாரன் வருகின்ற சிறுகதையில் அவனது வாசகங்களாக வருபவை, நாவல் மண்ணில் ஊன்றி நிற்கின்ற ஆணிவேரைச் சொல்கின்றன.
நாவலை முடிக்கும் போது தலைப்பின் கலைடாஸ்கோப் பரிமாணங்கள் தெரிகின்றன.
வீரபத்திரப் பிள்ளையைப் பின் தொடர்ந்தது ஒரு நிழலின் குரல். அது, ட்ராட்ஸ்கியை ஒழித்த அதே ஆயுதத்தால் ஒழிக்கப்பட்ட, சைபீரிய ரயில் நிலையத்தில் கொத்துக் கொத்தாய்க் கும்பல் கும்பலாய்க் கொல்லப்பட்டுக் கிடத்தப்பட்ட எளிய மக்களின் பிணக் குவியல்களில் தேவகுமாரனைக் கண்ட புகாரினின் குரல். அருணாசலத்தைப் பின் தொடர்வது மற்றொரு நிழலின் குரல். அது, ஐம்பது வருடங்களாய் இரும்புத்திரையின் பின் நிகழ்ந்த உண்மைகளை மறைத்து மேடைகளிலும் எழுத்துக்களிலும் முழங்கி வந்த சொந்த இயக்கத்தவரை எதிர்த்து அறம் தேடிய வீரபத்திரப் பிள்ளையின் குரல். அருணாசலத்தின் மனப்பிறழ்வுக் காலத்தில் பின் தொடர்ந்தது ஒரு நிழலின் குரல். அது மனைவி நாகம்மையின் குரல். ருஷ்யக் கனவுகளிலும், பிள்ளையின் புனைவுகளிலும் கரைந்து தறிகெட்டுத் திக்கெட்டும் சிதறிப் போய்த் தன் மாய நினைவுகளில் தொலைந்திருந்த மனதை மீட்டுக் கொணர்ந்த காமத்தின் தீராக் குரல்.
அறம் என்பதன் பொருள் என்ன? மனிதன் ஏற்படுத்திக் கொள்கின்ற சித்தாந்தங்களுக்கு ஏற்படுகின்ற வெற்றி தோல்விகளைக் கொண்டு அறத்தை நிர்ணயிக்க முடியுமா? நீதிக்கான இன்றைய பொருள் நாளை செல்லுபடியாகுமா? என்றென்றைக்குமான அறம் என்று ஏதேனும் உள்ளதா? தியாகத்தின் மதிப்பு என்பது எதைச் சார்ந்தது? போன்ற கேள்விகளின் மேலே நின்று செதுக்கப்பட்ட ஒரு பெரும்புனைவு இந்நூல்.
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.
கொடுங்கோல் ஆட்சியினால் துன்பப்பட்டுத் தாங்க முடியாமல் மக்கள் குமுறி அழும் கண்ணீரே அந்த ஆட்சியை அடியோடு அழிக்கும் ஆயுதமாகும்.
அறத்தாறிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
பல்லக்கில் செல்பவன் சுமப்பவன் இருவரையும் வைத்து அறத்தின் வழி இதுவே என நினைக்கவேண்டாம்.
இக்குறட்பாக்களின் சாரத்தில் மிளிர்கின்றது ஜெயமோகர் காட்டுகின்ற தரிசனம்.
***
புத்தகம் : பின் தொடரும் நிழலின் குரல்
புத்தக வகை : நாவல்.
ஆசிரியர் : ஜெயமோகன்
கிடைக்குமிடம் : நூற்கடைகள்.
பதிப்பகம் : தமிழினி பதிப்பகம்.
விலை : 290 ரூ.
Labels:
நானும் கொஞ்ச புத்தகங்களும்.
Subscribe to:
Posts (Atom)