Friday, February 08, 2008

Shall I....?



'இது காதல் தானா..?'

எனக்குத் தெரியவில்லை. அவ்வப்போது ஒரு சின்ன ஹாய். முகத்தில் பூசிய புன்னகையின் சுவடு என் முகத்திலும் பதிந்து விடும். கஃபேயிலோ, ரெஸ்டாரெண்டிலோ எதிர்பாராமல் எதிரே பார்க்கையில், ஒரு புன்முறுவல். வார்த்தைகளே பரிமாறப்பட்டதில்லை. ஆனாலும் ஒரு மென் முனை, இதயத்திற்குள்.

வீட்டில் சொல்லி விட வேண்டும். ஆனால் யாரிடம் என்று தான் தெரியவில்லை. அதற்குள் அவளிடம்..! ஒரு வார்த்தை. இல்லாவிட்டால் இரண்டு வார்த்தைகள்.

இப்போதெல்லாம் தனிமையின் கரங்களைப் பிடித்துக் கொண்டு, மாடியில் நின்று கொண்டு, மினுக்கின்ற நகரத்தை இரசித்துக் கொண்டே இருக்கப் பிடிக்கின்றது. காலடியில் வெளிச்சப் புள்ளிகளை உமிழ்ந்து கொண்டே நகர்கின்ற ஊர்திகளையும், தலைக்கு மேலே வெண் மொட்டுக்களைத் திறக்காத முல்லைப் பந்தலின் சிந்துகின்ற ஒளியையும் இணையாக ரசித்துக் கொண்டே கேப்பசினோவை உறிஞ்சிக் குடிக்கப் பிடிக்கின்றது.

போன Springல் பார்த்த மஞ்சள் மலர்கள் இன்று எங்கு மலர்ந்திருக்கும் என்ற எண்ணம் கொஞ்சம் தலை தூக்கிப் பார்க்கின்றது. அந்த மலர்களைப் பார்த்தால் கேட்க வேண்டும், அன்று நடந்ததை நீங்கள் யாரிடமும் சொல்லவில்லை தானே என்று.

வாடைக் காற்று என்று ஊரில் காற்று வீசும். மலைத் தொடரின் கண்டிப்பான முறைப்பையும் மீறி, அள்ளிக் கொள்ள பாய்ந்து வரும். அது போல், இங்கு அடிப்பதில்லை. மாலை நேரங்களில் போட்டிருக்கின்ற கோட்டையும் மீறி சிலுசிலுப்பை மட்டும் தூண்டிச் செல்கின்றது, ஒரு இதமான தென்றல்.

ஏரிக்கரையின் நடை பாதைகளை அடுத்து போட்டிருந்த காய்ந்த மலர்கள் படுத்திருந்த அமர் நாற்காலிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்திருந்தேன். எப்போதாவது இந்தப் பக்கம் வரும் போது அதில் மட்டுமே அமர்வேன்.

மூச்சின் மெல்லிய புகை ஊர்வலமாய்ப் போய்க் கொண்டிருந்த அந்த மாலை நேரத்தில், அருகில் நிழலாடிய தருணத்தில் நிமிர்ந்து பார்த்தேன். கண்டவுடன் பிடித்துப் போகும் ஒரு திருத்தமான அழகு. தெளிவான முகம். பொட்டு பொட்டாய்ப் பூத்திருந்த வியர்வைத் துளிகளை , கைகுட்டைகளில் ஒற்றிக் கொண்டாள்.

அருகில் இருந்த மற்றுமொரு இடத்தில் அமர்ந்தாள்.

கைகளில் கனத்த ஓர் ஆங்கிலப் புத்தகம். பல்கலைக் கழகத்தின் ஒரு பறவை என்று தெரிந்தது. புதிய முகம். இது போல் ஏரிக்கரையில் நடை போடுகையில், பற்பல தேசத்தின் புறாக்களைக் கண்டதுண்டு. ஆனால் இது வேறு மாதிரியானது.

தலையைத் திருப்பித் தொலைவில் வானத்தில் பறந்த மற்றுமொரு பறவையைப் பார்த்தேன். சிறகின் புள்ளிகளைப் பிடித்துக் கொண்டு நடை பழகும் அதற்கு வானம் ஓர் எல்லையா என்று தோன்றியது.

ஏதோ சரசரக்கும் சத்தம் கேட்டது. அவ்வப்போது காதுக்குள் ஒரு பூரான் ஊறும் சத்தம். இது பழகிப் போய் விட்டது. திரும்பிப் பார்த்தேன். அவள் தான் ஏதோ கேட்டாள். கொஞ்சம் பொறுக்கச் சொல்லி, மெஷின் எடுத்து மாட்டிக் கொண்டதும், அவள் கண்களில் ஒரு அதிர்ச்சி, சின்ன வியப்பு. எதிர்பார்த்திருந்தேன், இந்த எதிர் வினைகளை. பழகிப் போன இந்த விஷயம், வளைகுடாப் போரில் மிக அருகில் விழுந்த ஸ்கட்டில் இறந்து போன செவிப் புலன்களின் நிலைமை முதன் முதலில் தெரிய வரும் போது, எனக்கும் இது போன்ற அதிர்ச்சியைத் தான் கொடுத்தது.

அருலில் இருக்கும் இந்திய ரெஸ்டாரெண்ட் பற்றிக் கேட்டாள். ந்நன் அழைத்துச் செல்கிறேன் என்று கூறியதும், மகிழ்வோடு வந்தாள். பாதைகளின் பதிவுகளில் எல்லாம் அவள் வார்த்தைகளும், எனது 'உம்'களும் நிரம்பிக் கொண்டே வந்தன.

தொடர்? - உம்!

C I N E M A P A R A D I S O :

James Brunt - My Life is Brilliant.

James Blunt - ன் மற்றுமோர் அற்புதப் பாடல். 'மற்றுமோர்' என்றால்.. இதை விட மற்றொரு அற்புதப் பாடல் இருக்கிறதா என்று கேட்கிறீர்களா..? அதைத் தான் நானும் தேடிக் கொண்டிருக்கிறேன்.

அப்படியொரு பாடல் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில். ஆனால் இன்னும் கிடைத்த பாடில்லை.!




My life is brilliant.
My love is pure.
I saw an angel.
Of that I'm sure.
She smiled at me on the subway.
She was with another man.
But I won't lose no sleep on that,
'Cause I've got a plan.

You're beautiful. You're beautiful.
You're beautiful, it's true.
I saw your face in a crowded place,
And I don't know what to do,
'Cause I'll never be with you.

Yeah, she caught my eye,
As we walked on by.
She could see from my face that I was,
Flying high,
And I don't think that I'll see her again,
But we shared a moment that will last till the end.

You're beautiful. You're beautiful.
You're beautiful, it's true.
I saw your face in a crowded place,
And I don't know what to do,
'Cause I'll never be with you.

You're beautiful. You're beautiful.
You're beautiful, it's true.
There must be an angel with a smile on her face,
When she thought up that I should be with you.
But it's time to face the truth,
I will never be with you.

The Beach Boys - Don't Worry Baby...!

The Beach Boys - ன் ஓர் பாடல்.

Thursday, February 07, 2008

காதல் ஒரு பறவை.



கூடு கட்டும் பறவைகளைப் பார்த்திருக்கிறாயா? கொத்திக் கொத்தி விரிசல் உண்டாக்கி, வீடு கட்டும். இலை, தழைகளைப் பொறுக்கி வந்து, சின்னச் சின்னதாய் உண்டாக்கும்.

ஆகாயமே கூரையாக, பூமியே வீடாக சிறகடித்துப் பறக்கும் கருங்குயிலைக் கண்டிருக்கிறாயா நீ? வானகத்தின் வரிசைப் புள்ளிகளில் வட்டமிட்டுப் பறக்கும் நீலக்குயிலின் நிறம் கொண்டதடி உன் காதல்.

காற்றின் வெளியில் காரணம் தெரியாத ரணம் நிறைந்த குரலில் கூவுகின்ற இக்குயிலை கூட்டில் அடைக்க மனம் வந்தது. கம்பி வேலிகளிலும், காட்டின் கரு மரங்களிலும், அபூர்வமாய் நெடுஞ்சாலைகளில் செல்கையில் தோளின் அருகிலும் அமர்ந்து பறக்கின்ற இக்காதலை யாருக்கென்று ஒப்படைக்க முடியும்?

ரேகை தேய்கின்ற விரல்களின் அணைப்பில் தொலைதூரத்தில் கரைகின்ற குரலின் ஓசை அப்பொழுதை மூளையின் செல்களில் உறைந்து செல்ல விடுகின்றது......


Wednesday, February 06, 2008

பா.. ப்ரீதி காணிகே...



ன்னுமொரு முறை சுவாசிக்கத் தோன்றுகிறது, ஆழமாய்..! காற்றின் பயணம் செல்லும் பாதையில் நானும் அலையடித்துச் செல்கையில் ஒரு குழந்தையைப் போல் விரல் பிடித்துக் கொள்ள ஒரு கை தேடுகிறேன். பொன்னிறத்தில் வளைகள் அணிந்த அந்தக் கரத்தின் விரல்களை எதிர்பார்க்கிறேன்...!

மற்றுமொரு முறை இந்த நேரத்தில் ஆடுவதற்கு விரும்புகிறேன். முன்பு என்னோடு கரங்கள் கோர்த்து, கால்கள் பின்னப் பின்ன உடலெங்கும் ஊற்றாய்ப் பெருகிய வியர்வையின் ஈரத்தைப் பங்கிட்டுக் கொண்ட அந்த உயிரைத் தேடிப் பார்க்கிறேன்.

இந்தப் பாதையில் கடைசி முறையாய் நடை பழக நினைக்கிறேன். நினைவுகளின் வழிகளில் தடம் பதித்துச் சென்ற அந்த பாதங்களின் நிழல் ரேகைகளில் புள்ளி, புள்ளியாய் நிற்கும் மணல் துகள்களின் வரிசையில் என்னையும் சேர்க்க..!

ஓராயிரம் தூறல்களைத் தூவி விட்ட பின்னும் ஈரத்தை மொழிகின்ற காற்றின் இறக்கைகளில் ஏறிக் கொண்டு ஒரு பயணம் செய்ய, முன்னொரு காலத்தில் கூட வந்த அந்தப் பார்வையைத் தேடி....!

கருங்குயில்கள் நிறைந்த கானகத்தின் கானங்களின் கழுத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, தொலை தூரம் சென்று விட்ட ஒரு இரவின் உறக்கத்தைத் தேடிப் போகிறேன்.

Monday, February 04, 2008

மதுரச் சிற்பம்.



ருளைப் பூசி இருந்தது காற்று. குளுமையின் குரலில் ஒரு மெளன கானத்தை இசைத்தவாறே, வீசிக் கொண்டிருந்தது. 'ஸ்... ஸ்' என்று உச்சரித்தவாறு, காற்றை எச்சரித்தவாறு தன் குட்டிகளைச் சிறகுகளால் மெல்லப் போர்த்திக் கொண்டு, கண்கள் வழி உறக்கத்தைக் கசிய விட்டுக் கொண்டிருந்தன தாய்ப் பறவைகள்.

விழிகள் போல் அகண்டும், விரிந்திருந்தும் இருந்த பச்சை இலைகள் மேல், இரவின் கருமை இழைந்திருந்தது. வெள்ளிக் கதிர்களின் வெள்ளோட்டம் இன்னும் இந்த கானகத்தின் கடைக்கண் பாதைகளுக்குள் பதியவில்லை.வெண் பனி முத்துக்கள் விழவா, வேண்டாமா என்று சிந்தித்துக் கொண்டிருக்க, இலைகளின் மேல் தடவிச் சென்ற தென்றலின் கரங்கள் அவற்றைத் தள்ளிச் சென்றன.

வானில் இருந்து மினுமினுத்துக் கொண்டிருந்த மீன்களின் ஒளித் துணுக்குகள் சிதறிக் கொண்டிருந்தன. கானகக் குளத்தின் அலையாடிய நீரில் மிதந்து கொன்டிருந்த தாமரை இலைகள் ஒத்திசைவோடு அசைந்து கொண்டிருந்தன. செந்தாமரையின் இதழ்கள் கதிரவனின் ஒளியைக் காணாமல் கூம்பிப் போயிருந்தன.

மயக்கும் குளிரின் ரீங்காரங்கள் மட்டும் இசைந்து கொண்டிருந்த இந்த இரவின் ஆடையில் ஒரு பட்டு நூலாக ராதை நடந்து வந்து கொண்டிருந்தாள்.

பட்டு வண்ண ஆடையின் ஓரங்களில் பதித்திருந்த வெண் முத்துகளுக்குப் போட்டியாக அவளது கண்ணீர்த் துளிகள் புள்ளி இட்டிருந்தன. நடக்கையில் சிந்தித் தெறித்திட்ட பொற்காசுகளும், நகைகளும், மணியாரங்களும் அவளது கவனத்தைப் பெறவில்லை. பின் எதன் மீது தான் அவளது கவனமெல்லாம்? அவலது கைகளில் பிடித்திருந்த பொற்கூடையில் தான்.

வளது வீட்டுத் தோட்டத்தில் இராதா ஒரு மலர்ப் பந்தல் வளர்த்து வந்தாள். ஆநிறைகளை மேய்த்து விட்டு, மாலை மயங்கும் அந்தியில் மனை திரும்பிய பின், அவளை வேறு எங்கும் காணவியலாது. மலர்த் தோட்டத்தில் தான் காண முடியும்.

சும்மாவா அங்கு மலர்களை வளர்த்தாள்...?

"பூச் செடிகளே! என்னைக் காணவில்லை என்று வருந்தினீர்களா? இதோ வந்து விட்டேன். இது என்ன, நான் வந்தும் நீங்கள் முகம் வாடி இருப்பது ஏன்? ஓ.. நீங்கள் உங்கள் காதலனான கதிரவன் சென்று விட்டானே என்று கவலைப்படுகிறீர்களா? இந்த ஆண்களே இப்படித் தான். நீங்கள் ஏன் அவ்வளவு உயரத்தில் இருக்கும் ஆதவனைக் கண்டு காதல் கொள்ள வேண்டும்? உங்களுக்கு வேண்டியது தான்.

இக் காதலன் வருவான் என்று நாம் இரவெல்லாம் கண் விழித்திருக்க வேண்டியது. ஆனால் அவன் இரவெல்லாம் வருவதில்லை. உறங்காமல் பூத்த கண்களோடு, மனதை தேற்றிக் கொண்டு பகல் பொழுதிற்காக காத்திருப்போம். காலம் கண் முன்னே நழுவிச் செல்ல, காதலனது திருமுகம் காண்பதற்குள் கையசைத்து காணாமல் சென்று விடுகிறான். வாழ் நாளெல்லாம் இவ்வாறே கழிகின்றது. உங்களுக்காவது தினமும் கதிரவன் வருகிறான்.

இந்த மாயக் கண்ணன் இருக்கிறானே? அவனை என்ன சொல்லிச் செல்வது என்றே தெரியவில்லை. வருவான் என்று கை நிறைய பட்சணங்களும் , தின்பண்டங்களும் எடுத்துச் சென்று பார்த்தால் நாளெல்லாம் அவன் வருவதில்லை. மண்ணிற்கும், மரங்களுக்கும் அவற்றை தாரை வார்ப்பதிலே நான் இழக்கின்ற மகிழ்வெல்லாம் அவை பெற்று உய்கின்றன.

வர மாட்டான் என்ற வருத்தத்தில் வாடி அமர்ந்திருக்கையில், எங்கிருந்தோ வந்து குதிப்பான். 'ஏனடி ராதே, எனக்கென்று என்ன கொண்டு வந்தாய்' என்பான். கோடைக் கால மழைத்துளிகள் போல் அவன் கூறும் மொழிகள் கேட்ட பின் பூக்கின்ற கண்ணீர்த் துளிகள் அவன் கைகளில் துவண்டு விழுகின்றன.

ஆயர்பாடியின் நாயகன், நந்தரின் செல்வமகன் என் முன் கையேந்தி நிற்கையில், கொடுக்க ஏதுமில்லை என்ற வார்த்தைகள் எனக்குள்ளேயே வட்டமிட்டுச் செல்லும். தலை கவிழ்ந்து நான் நிற்பதைக் கண்ணுற்றதும், ஒரு விஷமச் சிரிப்போடு, அந்த மாயவன் குழல் இசைக்கத் தொடங்குவான்.

கேட்பது என்ற ஒன்றை மட்டுமே அறிந்த உயிர் போல் என் அத்தனை உணர்வுகளும் அவன் பால் இழுக்கப்பட்டுச் செல்லும். செவிப் புலன்களின் மடல்களில் தவழ்ந்து செல்லும் அக் குழலோசை, மாய லோகத்தின் மழைக் காலத்தைக் கண் முன் காட்டும். நம்மிடம் கேட்டு வரும் கண்ணன் கொடுத்து மறைவான், பிரபஞ்சத்தின் நாதம் தன்னை..!

இரவின் பிடிக்குள் சிக்கிய வெண்ணிலா மெல்ல மெல்ல கண்களுக்கு முன் மறைந்து, பகலின் வெம்மை இரவி எழுவது போல், மெதுவாகத் தேய்ந்த பின், நிஜவுலகுக்கு நம்மை இழுத்து வரும் அவனது இசை.

மொட்டுக்களே..! மெதுவாகப் புலருங்கள். அவசரம் வேண்டாம். நீங்கள் அலங்கரிக்கப் போவது அக் கருமேனியனின் திருப் பாதங்களை..! வண்டுகள் வருமிடத்து உங்கள் வாசல்களை அடைத்து வையுங்கள். 'இத் தேன் துளிகள் அவனது பாத அணிகளின் பொட்டுத் துளிகள்' என்று கூறி விடுங்கள். இலைகளே! இரவெல்லாம் சேகரித்து வைத்திருக்கும் பனித் துளிகளைப் பகலவனின் கைகளில் அள்ளிக் கொடுத்து விடாதீர்கள்.

பகலெல்லாம் பசுக்களை மேய்த்து விட்டு, வெம்மையின் சூட்டில் பொறிந்து போயிருக்கும் அவன் கால்களை நனைத்து பேறு பெறுங்கள்...."

அப்படியொரு ஆசையோடு வளர்த்து வந்த தோட்டத்தில் இருந்து பார்த்துப் பார்த்துப் பொறுக்கி எடுத்த மலர்களையும், குளிர்ந்த இலைகளையும், மண்ணின் மணம் வீசும் வேர்களையும் அல்லவா அவள் அள்ளிப் போட்டுக் கொண்டு வருகிறாள்.

கரில் இருந்து கானகத்திற்குச் செல்லும் பாதை இரவால் போர்த்தப்பட்டிருந்தது. ஒளியின் சிறு துகள்களும் அங்கே தென்படவில்லை. தோட்டத்தின் நீர்க்குளத்தில் அவளோடு சிறகடித்து விளையாடும் அன்னப் பறவைகளை அழைத்துக் கொண்டு ராதா வருகிறாள்.

வேறு ஏதேனும் ஒளி வேண்டுமா என்ன? உயிரின் கயிற்றைப் பிடித்து அசைக்கின்ற மென் அசைவில் அழைக்கின்ற நாத இசை அல்லவா அங்கு ஒளி ஊட்டிக் கொண்டிருந்தது..! காட்டின் இலைகளிலும், கிளைகளிலும், பூக்களிலும், தென்றல் காற்றின் கைப் பிடித்து கானகமெங்கும், வானகமெங்கும் வியாபித்திருந்த கண்ணனின் மென் குழலோசை அல்லவா அங்கு வழி அமைத்துக் கொண்டிருந்தது..! தேன் துளிகள் நிரம்பிய காற்றின் அணுக்களில் மயங்கிய மரங்களின் மோனத்தில் இலயித்த இலயிப்பும் அங்கே அவளுக்கு வழி காட்டிக் கொண்டிருந்தது.

இராதா வந்தே விட்டாள்.

"இராதே..! என் அன்புக்குரியவளே..! ஈதென்ன இவ்வளவு காலம் எடுத்துக் கொள்கிறாய்..? உனக்காக எவ்வளவு காலம் காத்துக் கொண்டிருப்பது..?" அந்த மதுசூதனன் கேட்டான்.

கண்களில் பெருகிய ஈரத்தோடு அவன் முன் தண்டனிட்ட ராதா மொழிந்தாள்.

"கண்ணா..! இரவின் கர்ப்பத்தில் ஆயர்பாடி நுழைந்த மாயவா! கோகுலத்தின் இல்லங்களின் வெண்ணெய்ப் பானைகளின் வேந்தே! சிறிது நேரம் காத்திருப்பதற்குச் சொல்கிறாயே?

உனக்காக எத்தனை யுகங்கள் நான் காத்திருந்தேன்? கழிந்த பிறவிகளின் நிழல்களைச் சுமந்து இப்பிறவியில் உனைக் கண்டு கொண்டேன். பகலின் வெம்மையில் நனைந்த தேகத்தில் பூக்கின்ற வேர்வைத் துளிகள் போல், எத்தனை நினைவுகள்? யமுனா நதிக்கரையில் தோணி ஓட்டிக் கொண்டு செல்கையில், அந்த நீல நிற நீர் உன்னை அல்லவா காட்டியது? நிமிர்ந்து பார்க்கையில் பிரபஞ்சமெங்கும் சூழ்ந்திருந்த அந்தக் கரு வானம், உனது மேனி வண்ணத்தை அல்லவா சொல்லிச் சென்றது?

மனையின் ஒவ்வொரு தூணையும் கேட்டுப் பார். இறந்த அந்த மரங்கள் இன்னும் வளர்ந்து கொண்டே செல்கின்றன, ஏன் தெரியுமா? எனது கண்ணீரால் அவற்றுக்கு நீர்ப் பாய்ச்சுகிறேன். உளறிச் சென்ற தெருக்களின் மண்ணைக் கேட்டுப் பார்.என் பாதங்களின் தடங்களின் அருகில் உனது நிழல் விழுகின்றதா என்று நான் நின்று, நின்று சென்ற நேரங்களைச் சொல்லும். வைகறையில் குளிக்கின்ற யமுனையின் கரைகளைக் கண்டாயானால், நான் பொழிந்த கண்ணீரின் தாரைகள் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறதா என்று கேள். நீ காளிங்கனை வதம் செய்து, குருதியில் கரைய வைத்த யமுனையைத் தூய்மை செய்தது அவை தான் என்று சொல்லும்.

இக்கானகத்தின் மரங்களில் சாய்ந்து பார். உனது மேனியில் வலி உண்டாக்கக் கூடாதென, நான் செதுக்கி வைத்த வனப்பில், வலியைக் கூறும்.

காலங் காலமாய், கற்ப கோடி ஆண்டுகளாய் நாம் சேர்ந்திருந்த கனவுப் பொழுதுகளின் மிச்சங்கள் உனக்கு நினைவிருந்தால், அவை உனக்குச் சொல்லும். ராதா உனக்காக காத்திருந்த வலி நிறைந்த பொழுதுகளின் நிழல்களை.."

"ராதே..! உனக்குக் கோபம் ஆகாதேடி..! இசை கேளடி ஆதுரமாய்..!" குழலின் நாயகன் இசைக்கலானான்.

"ஏ மாதவா! வெயிலின் வெப்பத்தில் கொதித்திருக்கும் குளத்தின் நீரைக் குளிரச் செய்கின்றது மோகன நிலவின் மயக்கும் கிரணங்கள். புழுக்கத்தின் மேனியிலும் ஈரத்தைத் தூவிப் பூக்கச் செய்யும் பனிக்காற்றின் பரவல். ஆண்டாண்டு காலத்தின் இரவையெல்லாம் கணப்பொழுதில் கலைத்துச் செல்லும் சிறு பொறியின் ஒளி...! அது போல் எத்துணை கோபத்தோடு உன்னோடு ஊடல் கொள்ள ஓடோடி வந்த என் இதயத்தை சாந்தப் படுத்துகின்றது உனது மாயக் குழலோசை.

உனக்காகப் பூத்திருந்த இம் மலர்களை எடுத்துக் கொள். உனது பாதங்களில் ஒரு பூ போல் நானும் விழுந்திருக்க, உனது நாதக் குரலில் இசைக்கின்ற இந்த இரவின் காலத்தில் விடிவே இருக்கக் கூடாதென அருள் செய்ய மாட்டாயா...?"

அங்கே அரங்கேறுகிறது காதலின் பொன் அர்ச்சனை...!

Happy Days...!

ப்போது ஆந்திராவில் வரலாறு காணாத வெற்றி பெற்று, கரை கடந்து சேர தேசத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டு , இங்கும் வெற்றி நடை போடுகின்ற Happy Days என்ற படத்தில் இருந்து, ஒரு நல்ல பாடல்..!



தமன்னா.... தமன்னா...