நீலவானத்தின் ஒரு சதுரத்துண்டு சீலிங்கில் செதுக்கியிருந்த கண்ணாடி வழியே கசடுகளோடு தெரிந்தது. விழித்தேன். நேரம் காலை எட்டு. சனிக்கிழமை. ஜே.கே. ஒரு போர்வைக்குள் மடங்கியிருந்தான். எங்கிருந்தோ சமஸ்கிருதம் கேட்டது. தொலைக்காட்சியின் சின்னச் சிவப்புக் கண் மட்டும் ஒளிர்ந்து கொண்டிருந்தது. முந்தைய இரவின் ப்ரேசில் கொடுத்த அதிர்ச்சி இன்னும் கலைந்திருக்கவில்லை. பாயைச் சுருட்டி விட்டு அடைத்திருந்த ஜன்னலைத் திறந்தால், ஜில் காற்று காத்திருந்தாற்போல் உள் பாய்ந்தது. பக்கத்து மாரியம்மன் கோயில் வாசலில் கோலம். கதவைத் திறந்து வெளிவந்து பால்கனியில் நின்று வீசிக் கொண்டிருந்த குளிரை நீண்டதாக உள் இழுத்துக் கொண்டேன்.
இந்திரா நகர் எய்ட்டி ஃபீட் சாலையில் கார்களும், பேருந்துகளும் கடந்து கொண்டிருந்தன. தெருவுக்குள் நாய் ஒன்று நடந்து வந்தது. முனையில் ஓர் அயர்ன் செய்பவர் சுறுசுறுப்பாய் இருந்தார். மூன்றாவது மொட்டை மாடியில் துணிகள் காய்ந்தன. கோயிலை ஒட்டிய கரையற்ற குளத்தில் ரோஸ் தாமரைகள் மொட்டாய் மலராய் நடுங்கின.
தமிழ்ப்பறவைக்கு கால் செய்தேன். கிளம்பிக் கொண்டிருந்தார். திப்பசந்த்ரா ஸ்வப்னா புத்தக நிலையத்திற்கு ஒரு விசிட் அடிப்பதாகத் திட்டம். அங்கே தமிழ் நூல்கள் கிடைப்பதாகக் கேள்விப்பட்டிருந்தார். பிறகு நண்பர்களிடம் விசாரித்துக் கொன்டு தமிழ்நூல்கள் கிடைக்க வாய்ப்பில்லை என்று தெரிந்து விட, வேறோர் பிரபலப் பிரதேசம் செல்வதாக முடிவு செய்தோம். "ஒன்பதரைக்கு வந்து விடுவேன்..!" என்றார். கிளம்பத் தொடங்கினேன்.
ஆறு வருடங்களுக்கு முன் லீலா பேலஸின் பின் மதிலுக்கு அருகே இரண்டாம் மாடி வீட்டில் தங்கியிருந்தேன். இரவெல்லாம் கேட்கும் ஆம்புலன்ஸ் ஒலிகளும், ஏஸி உறுமல்களும் இன்னும் நினைவில் இருக்கின்றன. அப்போது அரண்மனையின் எதிரே நிறைய மரங்கள் நின்று கொண்டிருக்கும். ஃபவுண்டனில் அரை ஸைன் போல் செய்றகையாய் நீர் பொங்கி விழுந்துச் சிதறிக் காணாமல் போய் மீண்டும் உற்சாகமாய் எழும்பும். செல்வந்தக் கார்கள் நுழையும் தனி வழியில் சல்யூட் வைப்பவர் பெரிய மீசை வைத்திருப்பார். கண்ணாடி வாசல் 'வா..' என்று திறக்கும். மாடங்களில் பூச்செடிகள் மாறி மாறி பூத்துக் கொண்டிருப்பதும் உள்ளே திறந்தவெளியில் நாற்காலிக் குழுக்களில் திரவங்களை அருந்திக் கொண்டிருப்பதும் இப்போதும் பெரிதாக மாறியிருக்கவில்லை, ஒன்றைத் தவிர.
உள்ளே நுழையும் முன்பாக மெட்டல் டிடெக்டர் நம்மைக் கவ்வித் துப்புகின்றது. பளிச்சென சுத்தம் செய்யப்பட்ட பாதுகாவல் அதிகாரி மற்றொரு முறை கருவியால் நம்மைத் தடவி அனுமதிக்கிறார். நானும் பரணியும் வழவழ பளிங்கின் மேல் நடந்து தளக் குறிப்பைப் பார்த்தோம்.
பரணி சில வருடங்களுக்கு முன் பார்த்தது போலவே இருந்தார். முடி வெட்டியிருந்தார். தோளில் ஒரு பயணப் பை. அதில் சில சமாச்சாரங்கள். அதே புன்னகை. அதே பேச்சு. அதே எஸ்.ரா. ஆதர்சம்.
பேலஸின் கீழ்த்தளத்திற்குத் தானியங்கிப் படிக்கட்டுகளில் நின்று இறங்கினோம். ஏஸி செய்யப்பட்டிருந்தது. க்ராஃப்ட் ஷாப்பில் புத்தர் சிலை. சேலைகள் சுருள் சுருளாய்த் தொங்கிக் கொண்டிருந்தன. ட்ராவல் ஏஜென்ஸியில் சிலர் காத்திருந்தனர். இடது பக்கம் வெட்டினால் ஓர் செயற்கை நீர்வீழ்ச்சி படர்ந்து விழுந்து கொண்டிருந்தது. அதன் முன்புற டைல்ஸ் கரைக்குளத்தில் ரோஜாப்பூவிதழ்கள் தூவப்பட்டிருக்க, அங்கிருந்து நிர்வாண மங்கை ஒருத்தி எழுந்திருக்க விரும்பினேன். நடக்கவில்லை.
ஆக்ஸ்போர்ட் நூல் விறபனையகத்தைக் கண்டுபிடுத்து வாசலை அடைந்தோம். பரணி, "புத்தகத்தைப் பிரிப்பது போல் திறக்க வேண்டும்..!" என்று கைப்பிடிகளைப் பிடித்து திறக்க அத்தனை புத்தகங்கள் எங்களுக்காக ஆர்வமாய்க் காத்திருந்த சொர்க்கத்திற்குள் நுழைந்தோம். ஏஸி இருந்த மாதிரி தெரியவில்லை. பரணி கொண்டு வந்த பையை முன்னே கொடுத்து விட்டு டோக்கன் வாங்கிக் கொண்டார். ஹாட் விற்பனை புத்தகங்கள் சுழல் அடுக்கில் இருந்தன.
காமசூத்ராவும், பியானோ கற்றுக் கொள்ளலும், இண்டியன் பெய்ண்டிங்கும், கொட்டேஷன்ஸும் அருகருகே காத்திருக்க, ஸ்பீக்கர்களில் இந்துஸ்தானி ஃப்யூஷன் பாடல்கள் பெருகிக் கொண்டிருந்தன. குழந்தைகளுக்கான வரிசைகளில் அமர்சித்ரகதா இருந்தது. பிக்ஷன், நான் பிக்ஷன், லிட்ரேச்சர், சமையல், ஆர்ட், யோகா, ரிலீஜன் என்று புத்தகங்களும் பிரிந்திருந்தன. காஃபி ஷாப்பும் உள்ளேயே இருக்க, அங்கே அமர்ந்தவர்கள் பொன் பழுப்பாய்க் குடித்துக் கொண்டிருந்தது காஃபி தான் என்று நம்ப விரும்பினோம். பேனா, நோட்டுகள், கீசெய்ன் எல்லா இருந்தன. சந்தித்ததன் நினைவாக பரணி ஒரு புத்தகம் பரிசளித்தார்.Days of Raj - Life and Leisure in British India - Pramod K.Nayar - Penguin - Rs.350/-. வெளியேறினோம்.
கோடிஹள்ளியின் அருகில் இருந்த தலை-மேல்-சாலை-கடத்தியை நீங்கிப் பேருந்து நிறுத்தத்திற்குப் போனோம். விளிம்பில் அமைந்த எஸ்.டி.டி. பூத்தில் 'சிட்டி மார்க்கெட்' செல்லும் பேருந்தை விசாரித்துக் கொண்டிருக்கும் போதே வந்து விட்டது பஸ். மற்றுமொரு முறை ஓட்டுநரிடமும் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டு (மார்க்கெட் ஹோகுதல்லே..? மல்லு வாசம் இன்னும் போகவில்லை!) கடைசிச் சீட்டில் அமர்ந்து கொண்டோம்.
ஏறி இறங்கும் வளையும் நீளும் பெங்களூர்ச் சாலைகளெங்கும் வினைல் போர்டுகளும், ஃப்ளக்ஸ் ஷீட்டுகளும் பூத்திருந்தன. வெயில் குறைந்தபாடில்லை. முகத்திற்கு நேராக அடிக்கின்றது. பள்ளிப் பூக்கள் பல வர்ணச் சீருடைகளில் கலைந்து நின்று கொண்டிருந்தனர். ஒவ்வொரு சிக்னலிலும் மூவர்ண எல்.ஈ.டிச் சுழிகள் இயக்கத்தை ஒழுங்குபடுத்தின. தூரத்து வானில் மேகங்கள் கூட்டம் திரட்டிக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. கார்ப்பரேஷன் சர்க்கிளிலிருந்து விடுபட்டு எஞ்சின் சுமக்கும் எறும்புகள் போல் மிதந்து மார்க்கெட்டை அடைந்ததை சந்தை இரைச்சல்களும் ஜூம்மா மசூதிப் புறாக்களும் குழிந்த பாலச் சாலையும் அறிவித்தன.
கும்பலாய் ஊர்வலம் கிளம்பிய கருமேகங்கள் சிதறிப் பெருமழையாய்ப் பெய்து எங்களை ஓரம் கட்டின. மீண்டும் சூரியன் எட்டிப் பார்ப்பதற்குள் அரைமணி ஆகியிருந்தது.
ப்ரெளனியன் இயக்கத்திற்கே சவால் விடும் வகையில் அத்தனை திசைகளிலும் நகர்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள், கம்பிச் சரங்களை ஒட்டிச் சின்னச் சின்னக் கடைகள், குடையைக் கவிழ்த்துப் பூட்டு சாவி விற்பவர்கள், பானிபூரி ஊற்றுபவர்கள், நின்று கொண்டே உண்ணும் சாஹர் ஓட்டல்கள், பொம்மை விற்பவர்கள், பழக்கடைகள், நீலக் கோடணிந்த அரசுப் பேருந்து வரிசைகள், டிப்போ, சப்வே, பச்சைத் தூரிகை மரங்கள், பலபாஷை கூச்சலிடல்கள் இவர்களுக்கிடையே தேடினால் கிடைக்கின்றது பெங்களூர்க் கோட்டை.
விஜயநகரப் பேரரசில் இப்பகுதியின் குறுநில மன்னராக இருந்த கெம்ப கெளடா அவர்களால் மண் கோட்டையாக எழுப்பப்பட்டு கி.பி.1761-ல் ஹைதர் அலியால் கற்கோட்டையாக மாற்றப்பட்டது. கி.பி.1791-ல் மூன்றாம் மைசூர்ப் போரில் லார்ட் காரன்வாலிஸால் கைப்பற்றப்படும் வரை திப்பு சுல்தான் வசம் இருந்த கோட்டையை நாங்கள் அடைந்த போது மிஞ்சியிருக்கின்ற டெல்லி வாசலில் சட்டை திறந்த ஒருவர் பீடி பிடித்துக் கொண்டிருந்தார்.
தொல்பொருள் இலாகாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக நவீனக் கல்வெட்டு ஒன்று மழையில் சொட்டிக்கொண்டே தெரிவித்தது. மாடிக்குச் செல்லும் படிக்கட்டுகளின் முன்னே கிராதிக் கம்பிக் கதவு தாழிடப்பட்டிருக்க, பிரதான வாசலின் மரக்கதவு பிரம்மாண்டமாய் வரவேற்றது. எத்தனை பெரியது..! எதற்கு இத்தனை உயரம்..? யார் நுழைவிற்கு என்று தோன்றியது. அதன் கீழேயே கொஞ்சம் குனிந்தாலே சென்று விடும் அளவுக்கு இடைவெளி இருந்தது. சென்றோம்.
முதலில் ஒரு கோயில் எதிர்ப்பட்டது. முகப்பில் பிள்ளையார் சிலை. ஓடுகளால் வேயப்பட்டிருந்தது. கதவு தாழ் போடப்பட்டிருக்க, உள்ளே எட்டிப் பார்த்தால் கருகும். இடதுபுறம் திரும்பி நடந்தால் ஒரு வெற்று வெளி. கோட்டைச் சுவர் சற்று வெளிப்புறமாக்ச் சாய்ந்திருக்க, தமிழ்ப்பறவை " எதிரிகள் வரும் போது சறுக்கிக் கொள்ள வேண்டும் என்று செய்திருக்கிறார்கள் போலிருக்கின்றது..!" என்றார். வெளியெங்கும் பச்சை அடிவாரம். கற்சுவர்களில் கவனிப்பாரற்று சில சிற்பங்கள்.
முன்னூறு ஆண்டுகளாக வேல், அம்புகள், ராக்கெட்டுகள், பீரங்கிகளுக்கும் அஞ்சாமல் உறுதியாய் நின்று கொண்டிருக்கும் பெரும் பாறைகளுக்கு இடையிலே பசிய இளந்தளிர்கள் முளைத்திருக்கின்றன.
ஒரு சுற்று சுற்றி விட்டு, மீண்டும் வந்த வழியே வெளியேறுகையில் உயரமான ஒரு பாறையில் கலவிச் சிற்பம் ஒன்றைக் கண்டு உய்ந்தோம்.
கோட்டையிலிருந்து சினிமா போஸ்டர்களையும், சிறுநீர்க் கழிப்பிடங்களையும், விக்டோரியா ஆஸ்பத்திரியையும், சிக்னலையும் நீங்கினால் திப்புவின் பெங்களூர் தர்பார் வருகின்றது.
மரங்களாலும், காரைகளாலும், ஓவியம் வேய்ந்த கூரைகளாலும் அழகமைய கட்டப்பட்டுள்ள இம்மண்டபம் திப்பு ராஜாவின் மக்கள் குறைதீர் ஸ்தலமாய் இருந்திருக்க வேண்டும். தொல்பொருள் இலாகா உள்நாட்டவர்க்குத் தலைக்கு ஐந்து ரூபாயும், வெளியார்க்குத் தலைக்கு நூறு ரூபாயும் கட்டணமாய்ப் பெற்றுக் கொண்டு திவ்யமாய்ப் பராமரிக்கிறார்கள்.
சுல்தானின் அரண்மனைக்கு அருகே வெங்கடநாராயணர் கோயில். வாசலில் பொங்கல் வாழ்த்து பத்து ரூபாய்க்குக் கிடைக்கின்றது. பாதையின் இருமருங்கிலும் பச்சைப் பதியன்கள். உயரமான தூண்கள். சுற்றி வரப் பூங்கா. இடது ஓரத்தில் ரெஸ்ட் ரூம். அலுவலகர் அறை.
பிறகு மார்க்கெட் பேருந்து நிலையத்திற்கு வந்து அவரவர் வழியில் சென்றோம்.
Saturday, July 03, 2010
Monday, June 28, 2010
மீண்டும்..!
சில்க் போர்டில் சோளத் தோல்கள் அலைபாய்கின்றன. மதுக்கோப்பைகளை வரிசையாக நட்டு வைத்தது போன்ற தூண்களின் மேல் மேம்பாலங்கள் சறுக்குகின்றன. ஆட்டோ ஸ்டாண்டுகளிலும், தெருமுனைகளிலும் கண்ணாடித் தள்ளுவண்டிகளில் பானிபூரிகள் நொறுக்கப்படத் தயாராய் இருக்கின்றன. கண்ணாடி ஜன்னல் வழியே பார்க்க, மரங்கள் குறைந்து கொண்டிருக்கும் நகரின் இயக்கம் மெளனமாய்த் தெரிகின்றது.
மீண்டும் பெங்களூருக்கு வந்திருக்கிறேன்.
முதன்முறை 2003-ல் வந்தேன். லால்பாக் அருகே கஸின் வீட்டில். பனீர்கட்டா சாலையில் ஆரக்கிள், ஐ.பி.எம். துவங்கி, கோரமங்களா முழுக்கச் சுற்றி, இன்னர் ரிங் சாலை முழுக்க நடந்தேன். அப்போது பேருந்து நிறுத்தம் எதுவும் கிடையாது என்று தெரியாததால், நடந்து கொண்டே சென்று ஆர்மி பயிற்சிகளைப் பார்த்தேன். தொம்லூர் சிக்னலைத் தொட்டபின் தான் மறுபடியும் ஊருக்குள் வந்தது போல் இருந்தது.
பெங்களூரிலேயே பல இடங்களில் தங்கியிருக்கிறேன். கோடிஹள்ளி, லால்பாக், இந்திராநகர், திப்பசந்திரா. இப்போது கக்கதாசபுரா ரெயில்வே கேட் அருகே.
இரண்டாம் முறை 2006-ல். குறைந்த காலமே இருக்க முடிந்தது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய நிகழ்வாக அப்போது தான் வலைப்பதிவு எழுதத் தொடங்கினேன். பிறகு சென்னைப் பயணம், திருவனந்தபுரத்தில் இரண்டரை ஆண்டுகளைக் கழித்து விட்டு, இப்போது மீண்டும் பெங்களூருக்கே திரும்பியிருக்கிறேன்.
இந்த தடவை பெங்களூரையும், கர்நாடகத்தையும் சுற்றலாம் என்ற ஐடியா இருக்கின்றது. போதாக்குறைக்கு நிறைய நண்பர்களும் இப்போது இங்கே இருக்கிறார்கள். நீண்ட நெடுங்காலம் இந்தூரில் பாவ்பாஜி, சப்பாத்திகளூக்கிடையே வாழ்ந்த தமிழ்ப்பறவை சிறகு விரித்துப் பறந்து, இப்போது வெல்லச் சாம்பார் இட்லியும், புதினாச் சட்னியும் கொள்ள ஐ.டி.பி.எல்.லை அடைந்திருக்கின்றது.
இனி பயணப் பதிவுகள் பெங்களூர் மற்றும் சுற்றுப்புறங்கள் சார்ந்து வரலாம்.
***
Image Courtesy :: http://phanimitra.files.wordpress.com/2007/07/bangalore-techie.jpg
Subscribe to:
Posts (Atom)