Friday, January 23, 2009

பிரிவோம் சந்திப்போம் - சுஜாதா.

நெல்லையில் இருக்கும் நண்பனின் தங்கை திருமணம் பாபநாசம் கோயிலின் அருகே நடந்தது. அதற்காக அதிகாலையில் வீட்டில் இருந்து கிளம்பி, வேனில் கொஞ்சம் தூக்கத்தோடு மிதந்து, பாய்கின்ற ஆற்றங்கரையில் திருமணத்திற்கு கலந்து கொள்வதற்கு முன் நினைவுகள் பறந்தன.

பாபநாசம்... அப்பர் டேம்... அம்பை... ரகுபதி... மதுமிதா... ரத்னா... சுஜாதா...பிரிவோம், சந்திப்போம்..!

சிறுவனாக இருந்த போது அத்தை வீட்டில் வாராவாரம் வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் பார்த்துக் கேட்டுக் கொண்டே படித்த ஞாபகங்கள்.

விசா பப்ளிகேஷன்ஸ்ஸில் இருந்து வாங்கிய இரண்டு பாகங்களையும் இந்த வருட சென்னை நூல அழகத்தில் வாங்கிப் படித்த போது, அத்தனை இனிமை..!

இளமை துள்ளத் துள்ள ஒரு சூப்பர் காதல் கதை..! நமக்கு ஆச்சரியம் தருகின்ற எழுத்துக்கள். தொடர்கதையாக வந்த படியால், அத்தியாயக் கடைசி வரிகள் கொக்கி போடுகின்றன.

ஆனந்த விகடனில் இவருக்கு அண்ணா சாலையில் பெரிய கட் அவுட் வைக்கப்பட்டது. 'அமெரிக்க சென்று வந்து எழுதுங்கள்' என்று எஸ்.பாலசுப்ரமணியன் அனுப்பி வைத்து இரண்டாம் பாகம் முளைத்து வந்தது.

இப்போது படமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்களாம். பயமாக இருக்கின்றது!

புத்துணர்ச்சி பெற படிக்க வேண்டிய நாவல், Fresh வாத்தியாரின் எழுத்துக்களில்..!

புத்தகம் : பிரிவோம்... ...சந்திப்போம் 1 & 2

புத்தக வகை : நாவல்.

ஆசிரியர் : சுஜாதா.

கிடைக்குமிடம் : விசா பப்ளிகேஷன்ஸ்.

பதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ்.

விலை : 65 & 115 ரூ.

பதேர் பாஞ்சாலி நிதர்சனத்தின் பதிவுகள் - எஸ்.ரா.

ப்போது நான் மெட்ரிக்கில் படித்துக் கொண்டிருந்தேன். தெளிவான கிறித்துவப் பள்ளி. டை, இன் செய்த ஷர்ட், ட்ராயர் என்று ஒரு மாதிரி துரைத்தன ஆடைகள் அணிந்திருக்க வேண்டும். மூன்றாம் வகுப்பிலோ, நான்காம் வகுப்பிலோ, பேச்சுப் போட்டி என்று நினைக்கிறேன். முதல் பரிசாக ஒரு புத்தகம் கொடுத்தார்கள். இப்போது நினைத்துப் பார்க்க ஆச்சரியமாக இருக்கின்றது. காரணம், புத்தகம் சாரதா தேவி பற்றியது. இராமகிருஷ்ண மடத்தின் ஒரு முப்பது பக்க ஜூ.வி. சைஸ் புத்தகம்.

பக்கம் முழுதும் ஒரு ஓவியப்படம் இருக்கும். கிடைத்த இடைவெளியில் அந்த சம்பவம் கலந்த கதை சொல்லப்பட்டிருக்கும். இர்ண்டாம் பக்கத்திலேயே கூமார்புகூர் கிராமத்தின் ஓவியம் வரையப்பட்டு, திண்ணையில் சாரதாவின் தந்தை பூணூல் அணிந்த, தொந்தி கொண்ட, ஹுக்கா பிடிக்கும் பிராமணராகவும் அவரது மனைவி இழுத்துப் போர்த்தி உள்ளே நின்று கொண்டிருக்க, திண்ணையில் அமர்ந்து வழிப்போக்கருடன் பேசுவதாக இருக்கும். பின்புலத்தில் வரையப்பட்டிருந்த கிராமப் படம் ஒரு வித சிலிர்ப்பான நிலையைத் தந்தது.

ஆங்காங்கே ஒற்றைப் பனை மரங்கள்; சணல் வயல்; வானில் பறக்கும் நாரைக் கூட்டப் புள்ளிகள்; மஞ்சள் தீற்றல் அடிவானம்.

இன்றும் அப்படி ஒரு பரவச நிலையைத் தருகின்றது அந்த ஓவியம்.

பக்கங்களைப் புரட்டிப் படிக்கையில், சிறு வயது சாரதா புடவையைக் கட்டிக் கொண்டு மாதா வழிபாடு செய்வதும், இள பரமஹம்ஸரையே கணவராகக் கை காட்டுவதும், நோய் வாய்ப்படும் போது நீலக்காளி மாதா அவளை ஆதுரமாய்க் கோதுவதும், முதலையை மிதித்து விடுவதும், பஞ்சம் என வந்தவர்க்கு உணவிடும் காட்சியும் நினைக்க நினைக்க பூர்வ வங்காளத்திற்கே போய் விடுவது போல் தோன்றும்.

பதேர் பாஞ்சாலியில் சிறுமி துர்காவை அதே போன்ற புடவையில் காணும் போதும், தீம் இசையைக் கேட்கும் போது மீண்டும் மீண்டும் அதே வங்காள நினைவுகள் காரணமின்றி என்னுள் தூண்டப்படுகின்றன.

சில வாரங்களுக்கு முன் பீமப்பள்ளியில் சி.டி. கடைகளுக்குச் சென்று சில உலக சினிமாக்கள் வாங்கி வந்தேன். City of God, Irreversible, Pather Panjali, The Color of Paradise மற்றும் சில.

ரே எடுத்திருக்கும் முதல் படமான பதேர் பாஞ்சாலி (சாலையின் பாடல்) ஓர் அழகான படம். வங்காள கிராமத்தின் ஒரு குடும்ப வாழ்க்கையைச் சொல்கிறது. துர்கா மற்றும் அபுவின் பரிசுத்த அன்பின் மேல் அவர்களது நிலைமையைப் பற்றி எடுக்கப்பட்டிருக்கும் படம் எஸ். ராமகிருஷ்ணனைப் பலமாகப் பாதித்திருக்கின்றது. படத்தின் பல கூறுகளை அனுபவித்து எழுதி இருக்கிறார் இந்நூலில்!

படத்தில் எனக்குப் பிடித்தது எல்லோரையும் போல் இரயில் காட்சி! பிறகு துர்காவுக்கும் அவளது பாட்டிக்கும் இடையிலேயான குழந்தமை உறவு, அபுவின் அக்கா மேலான காட்சிகள்...!

கண்டிப்பாக எல்லோரும், ஓர் உன்னத அனுபவம் பெற இப்படம் பார்க்க வேண்டும். பின் மறக்காமல் எஸ்.இராமகிருஷ்ணனின் இப்புத்தகத்தைப் படித்து மீண்டும் அந்த அனுபவம் பெற வேண்டும்.

Train Sequence ::Theme Music ::புத்தகம் : பதேர் பாஞ்சாலி நிதர்சனத்தின் பதிவுகள்.

புத்தக வகை : அனுபவக் குறிப்புகள்.

ஆசிரியர் : எஸ்.இராமகிருஷ்ணன்.

கிடைக்குமிடம் : உயிர்மை பதிப்பகம்.

பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம்.

விலை : 90 ரூ.

சாயாவனம் - சா.கந்தசாமி.

ரில் எங்களது பழைய வீட்டில் கொஞ்சமாய் ஒரு வெற்றிடம் இருந்தது. மூன்று தறிகள் போட்டிருந்தோம். காஞ்சிபுரத்தில் நெய்வது போல் கைகளால் செய்யப்படுவது இல்லை. கால்களால் கட்டைகளை மாறி மாறி அடித்து, கோர்த்த நூலை பாவின் வழியாக ஒவ்வொரு முறையும் எதிரெதிர் திசைகளில் செலுத்திக் கொஞ்சம் கொஞ்சமாக ஜமுக்காளங்கள் வடிவம் பெறும்.

வீட்டிற்கும் தறிகளுக்கும் இடையில் இருந்த பிரதேசத்தில் நாங்கள் ஒரு காய்கறித் தோட்டம் அமைத்திருந்தோம். கிணற்றில் இருந்து சகடை போட்டு சேந்திச் சேந்தி நீர் எடுத்து வார்த்து ஒரு மாதிரி குட்டித் தோட்டம் அது.

பழுத்த தக்காளியைப் பிழிந்து போட்டு, தண்ணீர் ஊற்றினால், இரண்டு நாட்களில் பூனை முடிகளோடு தக்காளிச் செடிகள் பிறக்கும். நான்கு குச்சிகளை நட்டு வைத்து அவரைக் கொடி போட்டது இன்னும் நினைவிருக்கிறது. வெங்காயச் செடிகள். கீரைகள். பாம்பே கொத்தினாலும் ஒன்றும் ஆகாமல் 'சூ..சூ..' என்று உதறி விட்டுச் செல்லும் வலு தரும் கீழாநெல்லிச் செடி. இலைகள் நூறு வேப்ப இலைகளுக்குச் சமம். அத்தனை கசப்பு. இன்னும் முட்டைத் தோல்களைக் கவிழ்த்துப் போட்டு, மாட்டுச் சாணிகளை மருதாணி போல் மொட்டை முனைகளில் பிடித்து வைக்க, ஐந்து இலைகளா, ஏழு இலைகளா என்று எண்ணிப் பார்த்து, முதல் பூ மொட்டை ஒவ்வொரு நாளும் பள்ளி விட்டதும் பையைக் கழட்டி எறிந்து விட்டு, அருகில் போய் 'பூத்து விட்டதா...பூத்து விட்டதா' என்று ஆவலாய் எட்டிப் பார்த்து, ரோஸ் நிறத்தில் பூத்திருந்த ரோஜாப் பூவை ஆசையாய்த் தடவும் போது முள் குத்தி துளி இரத்தம் பூத்தது.

இன்று அந்த இடங்களில் பெட் ரூமோ, பூஜை ரூமோ இருக்கும். சகடைகளும், ஓர் இரவு முழுதும் கத்திக் கொண்டே இருந்த பூனைக்குட்டியை வெளியே எடுத்துப் போட உதவிய பாதாளக் கரண்டியும் ரிட்டையராகிப் போய், மோட்டார் செருகிக் கொண்டு, கிணறு இழுத்து மூடப்பட்டுள்ளது.

அந்த வீட்டிற்குப் பிறகு, உள்ளூரிலேயே சில பத்துக்குப் பத்து ஜோசியக் கூண்டுகள் மாறி, சென்னை ஹாஸ்டலில் நான்காண்டுகள் வாழ்ந்து, கோட்டூர்புரம், கோடிஹள்ளி, வேளச்சேரி, கேளம்பாக்கம், லால்பாக், இந்திராநகர், கழக்குட்டம், ஸ்ரீகார்யம் என்று வசித்தாலும் இன்றும் மூச்சு வாங்கி வேர்த்து திடுக்கிட்டெழும் கனவுகளின் களனாக இருப்பது, தோட்டமும், கிணறும், பச்சை நிற வெயில் ஊடுறுவும் தண்ணீர்த் தொட்டியும், ஓட்டுப் பட்டாசலையும், ஓரங்களில் பூ பொறித்த சிவப்புத் திண்ணையும் கொண்ட பாட்டி வீடு தான்!

இன்று பாட்டியும் இல்லை..! வீடும் இல்லை..!

ஆசையாய் வளர்த்த தோட்டம் அழிக்கப்பட்ட வலி இன்னும் அடியாழத்தில் இருக்கின்றது.

காலச்சுவடின் க்ளாஸிக் வரிசையில் வெளியிடப்பட்டிருக்கும் சா.கந்தசாமியின் சாயாவனம் நூல், காவிரிக் கரையில் ஒரு காடு அழிக்கப்பட்டு சர்க்கரை ஆலை கட்டப்படுவதின் நிகழ்வுகளைச் சொல்கிறது.

சிதம்பரம், சிவனாண்டிப் பிள்ளை, குஞ்சம்மா, பாப்பா, பஞ்சவர்ணம், ஊர்ப்பெரியவர்கள், பழனியாண்டி, கலியபெருமாள் மற்றும் பலர் கதாபாத்திரங்கள் வழியாக ஒரு திருமணச் சடங்கு, காடு அழிப்பு, இலேசான சாதி நிலவரம் என்று வ.உ.சி. காலகட்டத்தை எடுத்துக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் நாவல் இது! மெல்ல மெல்ல பண்டமாற்று மாறி பண வியாபாரம் சிதம்பரத்தால் அறிமுகப்படுத்தப்படுகின்றது. சாயாவனத்தில் இருந்த புளியந்தோப்பில் இருந்து வருடாவருடம் எல்லோரும் பறித்துக் கொண்டிருந்த நிலை மாறி வில்லியனூரில் இருந்தும் மேலூரில் இருந்தும் புளியங்காய்கள் கொண்டு வரப்படும் நிலை வருகின்றது. ஆற்றங்கரைப் பிள்ளையார் கோயிலில் கிழவி புளியின் சுவை மாறியதைச் சொல்லி சலித்துக் கொண்டு போவதோடு கதை முடிகின்றது.

முன்னுரை பாவண்ணனால் எழுதப்பட்டிருக்கின்றது. காலங்காலமாக நின்றிருக்கும் காட்டின் அழிவும், அங்கு ஆலை கொண்டு வரப்பட்டு இயந்திரங்கள் மூலம் மனித சக்திக்கு வலுவான மாற்று அறிமுகம் செய்யப்படும் காலகட்டம் வெறும் கதை அல்லை; தேசத்தின் நிலை மாறி வருவதின் குறியீடாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்கிறார்.

மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன. நம் கண் முன்னும் தெளிவாகத் தெரிகின்றது.

ஒவ்வொரு முறை ஊருக்குச் சென்று வரும் போதும், பால்யத்தில் கண்ட அடையாளங்கள் திருத்தப்பட்டிருக்கின்றன. ஊருக்கே சின்னங்கள் என்று நான் நினைத்திருந்த கடைகள் காணாமல் போய் அங்கே பேக்கரியும், எஸ்.டி.டி. பூத் இணைந்த பொரி கடலைக் கடையும் வந்திருக்கின்றன. சாலையை அகலப்படுத்தும் முயற்சிகளில் ஒல்லியான கட்டிடங்கள் உயரமாக மாறி இருக்கின்றன. டவுசர் போட்டு பின் குத்தியிருந்த பையன் இன்று பெருவயிறும் லுங்கியுமாக டி.வி.எஸ்ஸில் வந்து இறங்கி, நான் கண்டிராத காளான் சூப் கடையில் இரண்டு ப்ளேட் வாங்குகிறான். ட்யூப் லைட்கள் மினுக்கின கம்பங்களில் மஞ்சள் பூசப்பட்ட சோடியம் வேப்பர் குளிர்க்கின்றது. ஆகாயத் தாமரைகள் மிதக்கும் பவானியாறும், பாறைகள் இடுக்கில் பாயும் காவிரி நீரும், கூடல் புள்ளியில் அமைதியில் உறைந்திருக்கும் கோயிலும், சரிந்திருக்கும் இலந்தை மரமும், மதில்கள் உயர்த்தப்பட்ட ஸ்கூல் காம்பவுண்ட்டும், தவிர்த்து ஊர் மாறிக் கொண்டே தான் வருகின்றது.

மாற்றங்களை ஏற்றுக் கொண்டே தான் ஆக வேண்டி இருக்கின்றது, பிடித்தாலும், இல்லா விட்டாலும்!

புத்தகம் : சாயாவனம்.

புத்தக வகை : நாவல்.

ஆசிரியர் : சா.கந்தசாமி.

கிடைக்குமிடம் : காலச்சுவடு பதிப்பகம்.

பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்.

விலை : 150 ரூ.

Thursday, January 22, 2009

இரு மலர்கள் - முன்ஷி பிரேம்சந்த்.

சென்னையில் இருந்த ஒரு காலகட்டத்தில் ஒருமுறை எழும்பூர் சென்றிருந்தேன். எம்.எம்.சி.யின் பெண்கள் விடுதி அங்கே இருக்கின்றது. அங்கே தங்கி படித்துக் கொண்டிருந்த ஒரு தோழியைக் காணச் சென்றிருந்தேன். அவள் இன்னும் வரவில்லை; தாமதமாகும் என்று தெரிய வந்ததில், அப்படியே கால் போன போக்கில் நடந்து பாந்தியன் சாலைக்கு வந்து, மேம்பாலம் மறைக்கும் ம்யூசியத்துக்குள் நுழைந்தேன். பலமுறை பார்த்து இருந்ததால், இம்முறை அருகில் இருந்த செங்கல் கட்டிடமான கன்னிமரா பொது நூலகத்திற்குச் சென்று விட்டேன்.

பல பிரிவுகளில் எத்தனையோ புத்தகங்களில் தலை நுழைத்து, பலர் இருக்க, அட்மினிஸ்ட்ரேஷன் பதவிகளுக்குத் தயார் செய்யும் தனிப்பிரிவின் எதிரில் இருக்கும் ஒரு பகுதியில் கைக்கு கிடைத்த ஒரு ஒல்லி புத்தகத்தை எடுத்து, மூட்டைப்பூச்சி ராஜ்யமான ஒரு நாற்காலியில் அமர்ந்து, புரட்டினால் அது ப்ரேம்சந்தின் ஒரு சிறுகதைத் தொகுப்பு.

அப்போது தான் முதன்முறையாக இப்படி ஒரு ஆளைக் கேள்விப்படுகிறேன். அவரது சில இந்தி கதைகள், சில உருது கதைகளின் தமிழாக்கங்கள். யார் செய்தது என்று மறந்து விட்டது. அதில் ஒரே ஒரு கதை, தீபாவளி சம்பந்தமாக, ஒரு சிறுவனைப் பற்றிய கதை. நினைவில் இருக்கின்றது.

மென்மையான நடை. ஒரு டெர்மினல் பாய்ண்ட்டை வைத்துக் கொண்டு, அதை நோக்கி நம்மை இழுத்துச் செல்லும் வரிகள். மூல இந்தியிலேயே படித்தால் இன்னும் சுகமாக இருக்கும் என்று தோன்றியது.

ந்தியில் இருந்து கா.ஸ்ரீ.ஸ்ரீ. அவர்கள் மொழிபெயர்த்து, 2006-ல் அல்லயன்ஸ் வெளியீடாக வந்த இருமலர்கள் என்ற அவரது இரண்டு சிறுகதைகள் என்று சொல்லலாமா, அல்லது குறுநாவல்..? சின்ன சின்னதாக பத்து சேப்டர்கள் கொண்ட இரு கதைகள். ஆனால் உண்மை சம்பவங்கள் போல் தெரிகின்றது.

ஒளரங்கசீப் காலத்துக் கதை ஒன்று. சாம்ராஜ்யம் வீழ்ச்சியடையத் துவங்கிய காலகட்டத்தில், பல தென்னிந்திய அரசுகள் சுதந்திரப் போர் நடத்திய போது, 'ராணி ஸாரந்தா' நடத்திய ஒரு தேச மானப் போராட்டம் முதல் கதை.

கொடூரனாக வரலாறெங்கும் வர்ணிக்கப்பட்டிருக்கும் தைமூரின் மனதிலும் அன்பை ஊறச் செய்து, கொன்று குவிப்பதல்ல இஸ்லாம் காட்டும் வழி என்று தைரியமாகச் சொல்லி அவன் படையெடுப்புகளை மென்மைப்படுத்திய, ஆண் வேடமிட்ட உமத்துல் ஹபீப் என்ற பெண்ணின் கதை 'தைமூரின் உள்ளம்'. பின் அவள் அவனது உள்ளத்திற்கும் இராணி ஆகின்றாள்.

இரு குறுங்கதைகளும் எளிமையாகப் பாய்கின்றன. அரை மணி நேரத்தில் முடிந்து விட்டன. எனினும் தெளிவான நடை நம்மை மேலும் அவரது எழுத்துக்களைத் தேடச் செய்கின்றது.

புத்தகம் : இரு மலர்கள்.

புத்தக வகை : குறுங்கதைகள்.

ஆசிரியர் : முன்ஷி பிரேம்சந்த் (தமிழில் : கா.ஸ்ரீ.ஸ்ரீ.)

கிடைக்குமிடம் : உங்கள் அபிமான நூல் விற்பனையகங்கள்.

பதிப்பகம் : அல்லயன்ஸ் பதிப்பகம் (srinivasan@alliancebook.com)

விலை : 20 ரூ.

சென்னை நூல் அழகம் - 2009 AD.டைசி நாளில் தான் போக முடிந்தது.

29 என் பிடித்து ஈகா சிக்னலில் முப்பது விநாடி காத்திருத்தலில் குதித்து, இடதுபுறம் கட் செய்து முக்கால் கி.மீ. வரை நடந்து, பச்சை நிற பெய்ண்ட்டுகள் அடித்த சுவர்கள் சொல்லிக் கொண்டிருந்த 'பச்சையப்பா கல்லூரி'யின் வாசலின் எதிர்ப்புற எண்ட்ரன்ஸ் வாசலில் நுழைந்து, இவ்வருட சென்னை நூல் அழகத்தை அடைந்தோம்.

கீழைக்காற்றில் இருந்து துவங்கி, அத்தனை ஸ்டால்களையும் ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் என்று நடந்து, நடந்து மூட்டைகளைச் சுமந்து வெளிவருகையில் மணி 21:10 ஆகி இருந்தது. வாங்கிய நூல்களை வரிசைப்படுத்தி வைத்து வெளியிட இப்போதைக்கு மனம் இல்லாததால், இங்கே நோ!

அவற்றைப் படித்து விட்டு எழுதலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.

'ஓ ஞாநி' அவர்களை என் தம்பி பார்த்துச் சொன்னான். 'காவ்யா' என்று நினைக்கிறேன். அதற்கருகில் சென்று கொண்டிருந்தார். அங்கிருந்து விலகி நடக்கும் போது எதிரில் 'ந.முத்துசாமி' அவர்கள் தனியாக வந்து கடந்து சென்றார். நக்கீரன் கோபால் குடும்பத்தினருடன் வந்திருப்பார் போலிருந்தது. அவரது ஸ்டாலில் பொறுமையாக உதவி செய்து கொண்டிருந்தார். கிழக்கு பதிப்பக ஸ்டாலில் பத்ரி மற்றும் சீருடை குழாம் கேட்பவர்களுக்கு உதவியும், பில்லிடலும் செய்து கொண்டிருந்தனர். பத்ரியிடம் தேவன் கலெக்ஷன் எந்த ஸ்டாலில் கிடைக்கும் என்று கேட்டதற்கு கையில் ஒரு மேப்பைத் திணித்து, வழி சொன்னார். அதற்குள் கொண்டு வந்திருந்த துட்டு காலியாகி இருந்ததால், வாங்கவில்லை. அல்லயன்ஸில், 'சி.ஐ.டி. சந்துரு' முதல் பாகம் மட்டும் கிடைத்தது. இரண்டாம் பாகம் கிடைக்காமல் இதை மட்டும் படித்து விட்டால், சரியாக வராது என்பதால் அதை வாங்கவில்லை. காலச்சுவடு கருமைத் திரை போட்டிருந்தது. க்ரியா அழகாக, எளிமையாக வுட்டன் டிசைன் செய்திருந்தார்கள். தமிழகராதி வாங்க வேண்டும் என்று இருந்தேன். ஆனால் மீண்டும் பைசா இல்லாததால், விலாசம் மட்டும் குறித்துக் கொண்டேன். இந்திரா செளந்தரராஜன் ஒரு ஸ்டாலில் முன் அமர்ந்து பேசிக் கொன்டிருந்தார். உயிர்மையின் வாசலில் மனுஷ்யபுத்திரன், சாரு நிவேதிதாவுடன் பேசிக் கொண்டிருக்க, அவரது 'தீராக் காதலி'யில் என்றும் அன்புடன் ஏன்று எழுதி கையெழுத்திட்டார்கள். ('சார், அடுத்த குட்டிக்கதைகள் எப்ப வரும்? எத்தனை வரும்? 108-ஆ..? இல்ல, இந்த தபா 1008 போவீங்களா..?' 'சீக்கிரமே! எவ்ளோ வேணா வரும்')மக்கள் சக்தி இயக்கத்தில், 'எண்ணங்கள்', நான் ஸ்ட்ராங்காக சிபாரிசு செய்ததில் தம்பி அதை வாங்கிக் கொண்டு வந்திருந்த எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களிடம் ஆசி பெற்றான். அவன் வாங்கிய மற்றொரு புத்தகம் 'ஆயிரத்தொரு இரவுகள்'. இதற்கு யாரிடம் ஆட்டோக்ராஃப் வாங்குவது என்று தெரியவில்லை. சாருவிடமே காட்டி கேட்டிருக்கலாம்.

அறுபது ஸ்டால்களைக் கடப்பதற்கே கவலையுடன் கவனம் இழந்த குடும்பங்கள், தத்தம் இலகு ஸ்நாக்ஸ்களை வாங்கிக் கொண்டு கிடைத்த பரப்புகளில் அமர்ந்து கொண்டும், மேடைப் பேச்சுக்களைக் கேட்டவாறும், கொறித்துக் கொண்டும் நாற்காலிகளில் நகர்ந்து கொண்டும் சென்றனர். மஞ்சள் வேனில் இரத்த தானம் செய்ய அழைத்தனர். வெட்கப்பட்டு தலை சாய்த்திருந்த இரண்டு கால் பெட்ரோல் பைக்கின் இடை மீது 'நோ பார்க்கிங்' போர்டு ஒன்று செருகப்பட்டிருந்தது.

எல்லோரும் சமையல் புத்தகங்களும், சாமி புத்தகங்களும், கம்ப்யூட்டர் மொழி கற்றல் வரிசைகளும் வெளியிட, பெயர் தெரிந்த விகடன், குமுதம், கிழக்கு, காலச்சுவடு, க்ரியா பதிப்பகங்களோடு, காலம் காலமாய் நிற்கும், விற்கும் மணிமேகலை பதிப்பக 'எப்படி'களும், மாணிக்கவாசகர், இரமணாஸ்ரம, இராமகிருஷ்ண மட, சைவ சித்தாந்த நூல் கழக 'விளக்கங்களும்', வேறு பரிமாணத்தில் வெளியிடும் சுரா, விலி, அமெரிக்கன் லைப்ரரி ஆங்கில மற்றும் டெக்னிக்கல் தலையணைகளும், இப்போது தான் நான் தெரிந்து கொண்ட அம்ருதா, காவ்யா, பாரதி பதிப்பக தீவிர, மென்மையான, அதி மெல்லிய இலக்கியங்களும், சி.டி.க்களும், கேஸட்களும், தலைக்கு ஐந்து ரூபாய் கட்டணத்தோடு கிடைக்க, வெளியே இலவசமாக கிடைத்த மேடைப் பேச்சுகளோடு பெற முடிகின்ற பலூன்கள், ஊதிகள், எடை காட்டும் டிஜிட்டல் கருவிகளும், காரம் இறக்கிய மிளகாய் பஜ்ஜிகளும், வாய் முழுதும் வழியும் ஐஸ்க்ரீம்களும், சுண்டல் பட்டாணி தட்டுகளும், ஜூஸ்களும், ப்ளாட்பார சாக்கு விரிப்புகளோடு கிடைக்கும் பழைய புத்தகங்களோடு, மெல்ல மெல்ல ஒரு வெகுஜன பொழுதுபோக்குத் தலமாக உருவாகி வரும் சென்னை புத்தக கண்காட்சியின் வாசல் பேருந்து நிறுத்தத்தில் ஒரு வற்றிய பெண் சுருண்டு படுத்திருந்தாள்; அவள் வைத்திருக்கும் கரிய அழுக்கு மூட்டையில் இருந்து ஒரு குழந்தை வெளியே தவழ்ந்தது.

வாத்தியார் வராத நூல் அழகம். ;-(