Thursday, November 23, 2017

நீலாம்பல் நெடுமலர்.26.

 ப்ரியவதனி! ப்ரேமஸ்வரூபிணி! வித்யரூபிணி! பத்மவாஹினி! நித்யமோஹினி! காமதேஹினி! நிருத்யநாடஹி!

தேவி, தளிர்மை நிறைந்து ததும்பும் இரு விழிகள் உனதல்லவா? கடலாழத்தில் மூழ்கிக் கிடக்கும் இரு சிப்பிகள்; அவை தம்முள் உருண்டு விளையாடும் கருமுத்துக்கள். மையெழுதாப் பொய்யெழுதா மெய்க்கருமை விளிம்புகள்; வெண் வானில் விளைந்த முழுக்கரு நிலவுக் குட்டிகள்; அவை, கற்களைக் கண்டு கற்கண்டாக்கின; அவை பெரும் தேங்கற்கண்டு தேன் கற்கண்டாக்கின; மதுவூட்டும், மகிழ்வூட்டும், சினம் காட்டும், சிலிர்ப்பாக்கும். தினம் காணும் எனினும் திகைப்பூட்டும். குளிரூட்டும், களிகூட்டும், அணியாகும், அளியாற்றும்.  அவ்வாற்றில் எனை முழுக்காட்டி முக்தி கொளச் செய்யாது, இம்முழுப்பிறவியும் கழிதல் உந்தி வந்த முந்தி செய்த முன்வினைப் பயனா?

மொழியெழும் தேன்குகை; சொல் விழிக்கும் சூரியமனை; ஒலி குழைந்தொழுகும் ஓர ஈரங்கள்; பசுங்கிளியலகுச் செம்மை; பைந்தமிழ் நுரைத்த கள்ளினிமை; தின்னத் தின்னத் தீரா திகட்டல்; திளைக்கத் திளைக்க முழுதாய்ப் புகட்டல்;  புன்னகைப் புறப்பாடு; புதுநகைப் புனலாட்டு; இளந்தளிர் ஈரிலைகள்; மணங்கொண்ட மாவிலைகள்;  மந்தார மண மயக்கம்; மதுவூறும் மலரிதழ்கள். தேவி, நீ வாய் திறந்து சொல்லும் சொற்களைக் காற்றில் எங்கோ யாரோ சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிவாயா? கண்ணாடிப் பீங்கான் குடுவைக்குள் இட்டு நிரப்பி, இரவின் பின் பாரத்தில் நோக்க, பின்னொளிர் மின்மினிக்கள் போல் அவை தண்ணொளி கொண்டு சுழல்வதை, ஒளித்துளிகள் போல் அவை ஒசிவதைக் கண்டு கண்டு துயர் துடைத்துக் கொள்வதை, இப்போது தானே நீ அறிகிறாய்?

வண்டமர் மலர்க்குவை; வற்றாத அமிழ்துக்குலை; வளைந்தாடும் வனமுல்லைக் கொத்து; வெயிலறியா முகட்டுக் குன்றுகள்; குயிலறியாக் குரல் குழைவுகள்; தளும்பும்; தருக்கும்; தழையும்; தகையும்; நிறைந்தெழும்; நின்றமையும். தேவி, உன்னிலூறும் பெருங்கருணையும் பேரன்பும் இரு பொற்கோபுரங்களாய் எழுந்தனவா?

செழும் எழில் நிறைந்த திருப்பாதங்கள். முளைத்தெழுந்த ஈரைந்து விரல் கணுக்கள். கணு சூடிய பொன் மலர்களென மணிகள். அம்மணிகள் சப்திக்கக் காலடி மேல் காலடி வைத்து நீ வந்து நின்று என் குறைவுளம் நிறைவுளதாக்கத் திருவுளம் கொள மாட்டாயா? செம்மாந்த உள்ளங்கால்கள்; மண் காணா குளிர்மை உள்ளார்ந்தவை;பூத்த செந்தாமரை ஈரிதழ்கள்; அவை ஓரடி மண் வைத்து, வேறடி விண் வைத்து, ஈற்றடி மாபலி சிரம் வைத்த மோகனபாலனின் உளம் கொண்ட பொன்மகளின் செம்மை அல்லவா?

பார்வையைப் பற்றிக் கொள்க என்றளிக்கிறாய்; சொற்களைச் சேர்த்துக் கொண்டுய்க என்று தருகிறாய்; இழுத்தணைத்துச் சேர்த்து பசி தணிக என்றமுதூட்டுகிறாய்; தேவி, உன் மேலான செல்வங்களைக் கொண்டு வந்து இருளிலிருந்து எனைக் காத்த பின் உனக்கென்று கொடுக்க ஒன்றுளது என்னிடம்; உன் இரு தாள்களை முடி சூடி, அறிமொழியில் உனைச் சொல்லல்.