Sunday, December 30, 2007

மறக்க முடியுமா?

சென்ற பிறவிகளின் தொலைந்த காதல்களை நினைவூட்டுகின்றது இப்பாடல்...!

மழைத்துளி போல் ஒரு காதல்..!சில சமயங்களில் நம் மேல் நாம் கொள்கின்ற காதல்கள் மழையில் நனைகின்ற வானவில்லின் வர்ணங்களோடு வகைப்படுத்தக் கூடியதாய் இருக்கின்றன.

மெல்லிய புன்னகையில் பிரிந்து சென்ற இதழ்களின் கோடியில் தெறித்த உன் காதலின் இருப்பிடம் வந்து என் காதலைக் கலக்கையில், இன்னும் உயிர்ப்போடு உருகிச் சென்ற அந்த இளஞ்சிவப்பு நிறம் எனக்கு நினைவூட்டும்.

உறக்கமில்லாத இரவுகள் விட்டு விட்டுப் போகின்ற தடங்களாய் கண்களின் பரப்பில் போட்டுச் செல்கின்ற சிவந்த வரிக் கோலங்கள், அதிகாலையில் நீ கோலம் போடும் அழகைக் காண்கையில், உன் கன்னங்களுக்கு இடம் பெயர்கின்றது, என்ன ஒரு விந்தை...!

வானும், கடலும் சந்தித்துக் கொள்கின்ற நேர்க் கோட்டிற்கு இணையாக நாம் நடந்து போகையில், நமது காலடித் தடங்களில் வந்து நிறைகின்ற நீர் அலைகள் இன்னும் எனக்கு சொல்லிக் கொண்டிருக்கும் நீல நிறம் வேறெதுவுமில்லை, காலம் நீள நீள நீள்கின்ற அன்பெனும் தத்துவத்தை..!

மஞ்சள் பூசிக் கொண்டு வசீகரித்து பின் மாலையில் வெட்கத்தால் நிரம்பிக் கொள்கின்ற அந்த வானம் இன்னும் எனக்குச் சொல்கின்றது அதனைப் போல் மஞ்சள் பூசிக் கொண்டும், வெட்கப்பட்டும் சிரிக்கின்ற மற்றொரு முகத்தை...!

நெல் மணிகளைச் சுமந்து நிறைந்த கனத்தால் கவிழ்ந்திருக்கும் பச்சை வயலின் நிறைந்த பசுமை, நினைவூடும் முன்னொரு நாளின் இரவில் கண்கள் பருகிய பச்சை தேகத்தை...!

கருமை பூசிய இரவில், கருமை பூசிய கண்கள் என இருமை நிறைந்த காலங்களில் கழிந்த நினைவுகள் வீசிக் காட்டும் வர்ணங்கள் அனைத்தையும் உறிஞ்சிக் கொண்ட கரிய நிறத்தை..!

வர்ணக் கலவையைப் பூசிக் கொள்கின்ற பொம்மைகள் போல் இன்னும் ஆட்டம் நின்றபாடில்லை.

மலையாளக் கரையோரம் இடம் பெயர்ந்தது ஏன்?

த்தியமாக இக் காரணம் இல்லை..!ஆனால்...

ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சும்மா........!

காதல் போல் ஒரு மழைத்துளி..!மிதச் சூடாக மழை பெய்து கொண்டிருந்தது.

மாலை வெயிலில் பொன் முகடுகளைக் குளிர்வித்து பெய்கின்ற மழை நமது நிலத்தை அடைகையில் மட்டும் சூடு அடைந்து விட்டிருந்தது. நெருக்கமாக நின்றவாறு குசலம் விசாரித்துக் கொண்டிருக்கிந்தன மா-மரங்கள். கிளைகளைக் கிளைத்துக் கொண்டிருந்த சின்னச் சின்ன இலைகள் மழையின் குளிர்மையில் மெளனமாக நனைந்து கொண்டிருந்தன.

சற்று தூரம் நடந்து வரக் கிளம்பினோம்.

இன்னும் தூறிக் கொண்டு தான் இருந்தது. நடைபாதையின் ஓரங்களில் எல்லாம் பூத்திருந்த மஞ்சள் நிறப் பூக்களின் இதழ்களில் எல்லாம் மொட்டு மொட்டாய் திரண்டிருந்தது மழைத் துளி. பச்சை அலை நனைத்தது போல் ஈரமாக இருந்த புல்வெளியின் மேனியெங்கும் படர்ந்திருந்தது குளிர்.

நமது நடையின் நிழல் போல் பக்கங்களில் தெறித்தவாறு வந்த பழுப்புச் சிதறல்கள் பொழிந்து கொண்டிருக்கும் மழையின் மாறிப் போன குழந்தைகளாய்த் தோன்றின, நிறம் மாறிப் போன நம் நேசம் போல்..!

இதே போன்றதொரு மழை நாளின் மதியப் பொழுதில் தான் நாம் முதலில் சந்தித்தோம்.

பொறுக்கி எடுத்த சிலரைக் கொண்டு மாலை கோர்த்துக் கொண்டிருந்த ஒரு பேருந்து நிறுத்தத்தில், நாமும் ஓடோடி வந்து இணைந்தோம் மாலையின் இரு முனைகளில்..! மொத்தம் நால்வர் மட்டுமே இருந்த இடத்தில் ஒரு கிழவர், அவர் விரல் பற்றிய சிறுமி, நாம்..! வாழ்வின் அத்தனை நிலையின் பிரதிகளாய் நம்மை இணைத்துக் கொண்ட நிறுத்தம், மழையைப் பார்த்து புன்னகைத்த கடைசி நொடிகளில் ஒளி இழந்தது.

விரைந்து பறக்கின்ற வாகனங்களின் முன் விளக்கொளியில் மட்டுமே தெரிந்து கொண்டிருந்தது, நம் உடனடி காலம். மற்றபடி இருள் மட்டுமே போர்த்தியிருந்த இடத்தில் போர்வைக் கிழிசல்களாய் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன மின்னல் கீற்றுகள்..!

குறுக்கிக் கிடந்த குடையின் வாயைத் திறக்க நீ முயற்சி செய்து, திணறத் தொடங்கினாய். பலமுறை முயன்றும் அப்பாங்கு உன் விரல்களில் கூடி வரவில்லை. மெல்ல என்னைப் பார்க்கிறாய் நீ என்று நான் உணர்வதற்குள், என் உளம் வந்து நிறைந்து கொண்டனை.

நம் இருவரை மட்டும் பார்த்துக் கொண்டிருந்த சிறுமி அவ்வப்போது மழையின் கம்பிச் சரங்களைத் தட்டிப் பார்த்து விளையாடினாள். கிழவரின் விரல் நுனிகளில் இருந்து விடுவித்துக் கொண்டு, உனது குடையின் ஒற்றைக் கால விரலைப் பிடித்து என்னிடம் கொண்டு வந்தாள்.

உன்னிடமிருந்து இதயத்தை எடுத்து வந்து, என்னிடம் கொடுக்கின்ற ஒரு குட்டி தேவதை போல் இன்னும் மிருதுவாக, இன்னும் பத்திரமாக, இன்னும் அணைத்துக் கொண்டு...!

ஒரு மென் மல்லிகை மொட்டைத் திறக்கின்ற வண்டின் இலாவகத்தோடு, ஒரு மேகத்தின் ஈரமான இடங்களைத் தட்டி எழுப்பித் திறக்கும் குளிர்க் காற்று போலவும், தேன் கூட்டின் அறைகளில் நிரம்பிய தேன் துளிகளின் இனிப்பைத் திறக்கும் நாவின் வலு போலவும் குடையைத் திறந்து கொடுத்தேன்.

என் விரல் பட்ட குடைக் காலின் மேல் நீ விரல் பதித்து நடந்து சென்றாய், சற்று குறைந்து விட்ட மழையை வாழ்த்திக் கொண்டும், வரவே வராத பேருந்தை சபித்துக் கொண்டும், என்னை நன்றியுடன் பார்த்துக் கொண்டும்...!

ங்கே சற்று அமரலாம் என்று எண்ணிக் கொண்டு நனைந்து கிடந்த நடைபாதை மேடையில் அமர்ந்தோம்.

ற்றுமொரு நாளின் மாலை நேரம்.

எந்நேரமும் பெய்யலாம் என்ற நினைப்போடு நடை போட்டுக் கொண்டிருந்தன மேகங்கள். ஈரமான குளிர்க் காற்றில் அசைந்து கொண்டிருந்த பச்சை இலைகளின் ஊடாக சிதறிக் கொண்டிருந்த மாலை வெயிலின் கிரணங்கள் பூங்காவின் உடலோடு விளையாடிக் கொண்டிருந்தன.

ஒரு நடைபாதை மேடையில் அமர்ந்திருந்தோம். இன்னும் நம்முள் திறக்காத இரகசிய மொழியின் ஆடைகள் ஒவ்வொன்றும் உருவப்பட்டுக் கொண்டிருந்தன. அந்த கடைசி நிர்வாண வார்த்தைகள் மட்டும் இன்னும் உள்ளே உள்ளே சென்று ஒளிந்து கொண்டிருந்தன.

இருளின் மெல்லிய நூல்கண்டுகள் தம்மை உதிர்த்துக் கொண்டு சிதறி வந்து கொண்டிருந்தன. திசைக்கொன்றாய்ப் பிரிந்து உருண்டு வந்த அவற்றின் பாதையெங்கும் புள்ளி புள்ளியாய் தெறித்து இருந்தன மீன்கள்.

நம் சொற்களின் ஆட்டம் முடிந்த பின், வார்த்தைப் பஞ்சத்தால் நாம் பீடிக்கப்பட்ட பின், நம் கரங்களைக் கோர்த்துக் கொண்டோம். அந்த இறுக்கம், அந்த நெருக்கம் மொழிந்து விட்டுப் போனது வாய் வழி உதிர மறுத்த, மறந்த அந்த வார்த்தைகளை நரம்புகளின் வழி நழுவ விட்டபடி, மெளனப் புன்னகையோடு...!

ரு நீண்ட பெருமூச்சோடு, நம் நினைவுகளின் நிஜத்தை மீண்டும் வாழ்ந்து விட்டு வந்த பின், உலகுக்குத் திரும்பி வர, நம் கைகள் தாமாகக் கோர்த்திருந்த நிலை கண்டு சிரித்துக் கொண்டோம்.

இன்னும் நாட்கள் இருக்கின்றன. நம் ஊடல்களின் உள்ளர்த்தங்கள் எல்லாம் உதிர்ந்து போகும். கோபங்களின் குரல்வளை நெறிக்கப்படும். அந்த இளம் கால நினைவுகளின் பாத ரேகைகள் மேல் நடக்கையில் எல்லாம் தொலைந்து போகும் இந்த வயதின் கவலைகளும், எண்ணங்களும்...!

உணர்த்திக் கொண்டே இருக்கின்றார்கள், அங்கே தூரத்தில் தெரிகின்ற நம்மைப் போல் சிரித்து விளையாடும் சிறுவனும், சிறுமியும்...!

Friday, December 21, 2007

திருப்பாவை.

/*** ***/

சில பதிவர்கள் உரைக்கும் திருப்பாவைப் பதிவுகள். (கண்ணில் பட்டவரை.) ::

http://bhakthi.wordpress.com/

http://balaji_ammu.blogspot.com/

திருவெம்பாவை ::

http://thiruvempavai.blogspot.com/

/*** ***/

ந்த விளக்கங்களைப் படித்தவுடன் நாணமுற்றேன். இதுவரை எழுதி வந்த எனது மொக்கைகளை - விளக்கம் என்ற பெயரில் - பொறுத்துக் கொண்ட அனைவர்க்கும் மிக்க நன்றிகள்.

இந்தத் தொடர் இத்துடன் ஏறக் கட்டப் படுகின்றது.

நமது கைவரிசையை சொந்தக் கற்பனையிலேயே எடுத்து விடலாம் என்று முடிவு. ஆண்டாள் நாச்சியார் எவ்வளவு அற்புதமாக எழுதியுள்ளார்கள். அதைப் போய் தொல்லை கொடுப்பானேன்? ஆண்டாள் பார்த்தால் தலையிலேயே அடித்துக் கொள்வார் என்று தோன்றியது, இந்த பதிவுகளைப் பார்த்த பின்பு..!

எனவே... Anyway அடுத்த பதிவில் பார்ப்போம்.

Wednesday, December 19, 2007

ரங்கநாதனின் பாதம் வந்தனை செய்யடி..!

இன்று வைகுண்ட ஏகாதசி.

இந்த பாடலைக் கேட்போம்.

திருப்பாவை :: பாடல் இ.ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்க* குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.


ரவின் மெல்லிய கரங்கள் தாலாட்டும் நேரம்.

கொட்டிலில் இருந்து தாய்ப்பசுவும், கன்றுகளும் துள்ளி எழுந்து நடக்கத் துவங்குகின்றன. அந்த வைகறைப் பொழுதில் அருகில் இருக்கும் காட்டுக்கு மேயப் போனால், பின் பொங்கிப் பெருகும் பால் கிண்ணங்கள்.

இராதை மேலும் கூறுகின்றாள்.

"விண்ணையும், மண்ணையும் ஈரடியில் அளந்து விட்டு, மூன்றாமடிக்கு முடி சூடிய மன்னன் சிரசைக் கொண்டவன் அந்தப் பெருமான்.அந்த உத்தமன் பேர்பாடி, நாம் நம் பாவை நோன்பு மேற்கொள்ள என்னவெல்லாம் நற்காரியங்கள் நடைபெறும் தெரியுமா?

துளியும் பெய்யாமல் இரக்கமற்றோர் நெஞ்சம் போல் நிலத்தை வறண்டு விடச் செய்யாமலும், அளவின்றி பெய்து பெருமானை நிந்திப்போர் கண்களில் இருந்து பெருகும் கண்ணீர் போல் நிலத்தை நீர்மயமாக்காமலும், அள்வோடு மாதம் மும்மாரி பெய்யும்.

அதனால் வயல்வெளிகளில் நெற்பயிர்கள் நிரம்பியவாறு விளைந்திருக்கும். அந்த வயல்களின் இடையே நீர் தேங்கியிருக்கும். அவற்றுள் மீன்கள் துள்ளி விளையாடும். அத்தகைய நீர்த் தேக்கத்தில், குவளை மலர்கள் பூத்திருக்கும். அந்த குவளை மலர்களின் நிரம்பி வழிந்தோடும் தேனை அருந்துவதற்கு வண்டுகள் அங்கே ரீங்காரமிட்டு இருக்கும்.

அது மட்டுமா?

பசுக்களின் மடி முழுதும் பால் நிறைந்து இருக்கும். அத்தகைய செல்வ நிலையை அடைவோம்.

இந்த நோன்பினால், குறிஞ்சி மலைக் காடுகள் செழிப்பாக விளைந்திருப்பதால், மழை நன்றாகப் பெய்யும். முல்லை நிலக் காடுகளும் அதனால் செழிப்படையும். மருத நில வயல்வெளிகள் பயிரோடு நிறைந்திருப்பதால், இந்த வயல்வெளிகளின் தெய்வங்களான பசுக்கள் மடியோடு மனமும் நிறைந்து பால் கொடுக்கும். அத்தோடு நெய்தல் நிலச் செல்வங்களான மீன்களும் துள்ளியாடும்."

...(தொடரும்)

DISC ::

இந்த விளக்கங்கள் அனைத்தும் ஆண்டாளின் காதலை நான் அறிந்த வரையில் கூறுவதாகும். நடத்துவது நாராயணன் கைகள். நடப்பது நமது பாதம்.

Tuesday, December 18, 2007

திருப்பாவை :: பாடல் ஆ.


வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.


யர்பாடி அமைதியாக இருக்கின்றது.

மேற்றிசையில் திரண்டிருந்த கரும் முகில்கள், குளிர்மழையைப் பொழிவதற்குத் தயாராக இருந்தன. சிறு சிறு தாமரை மொட்டுகளும், மலரத் தயாராக உள்ள அல்லி மொட்டுகளும், குவிந்து நிற்கின்ற குவளை மலர் முகத்தின் பிம்பங்களும் தெரிகின்ற, நீர்க் குளத்தில் தேங்கியிருக்கின்ற குளிர்ந்த நீரைக் குழப்பி விடுகையில், அடியிலிருந்து தெளிந்து வருகின்ற மண்ணின் கரைசல் போல், வீசுகின்ற தென்றல் காற்றில் அசைந்து அசைந்து, கலைந்து கொண்டிருந்தன மேகங்கள்.

இணை இணையாகப் பறந்து கொண்டிருக்கும் சிட்டுக் குருவிகளும், வெண் புறாக்களும், நீர் நாரைகளும் அம்மேகங்களின் மேனியெங்கும் உரசி, உரசிப் பறப்பதைக் காண்கையில், கூட்டமாக உள்ள காகங்களின் கூட்டத்தில் வெண்மணி அரிசித் துகள்களை அள்ளித் தெறிப்பது போல் இருக்கும் அல்லவா?

அத்தகைய கரிய மேகத் தொகுதியைக் கிழித்துக் கொண்டு , அண்ட சராசரங்களும் கிடுகிடுக்க, கிளைகிளைத்துப் பாய்கின்ற ஒரு மின்னல் போல், இராதையின் குரல் ஆயர்பாடியுள் பாய்கின்றது.

குளிரில் தலையசைத்தவாறே தூங்கிக் கொண்டிருந்த , மஞ்சள் பூக்கள், படபடப்பாக அவள் இருந்த திக்கை நோக்குகின்றன. பின்னே அவற்றால் என்ன செய்ய முடியும்? அமைதியாக வீசிக் கொண்டிருக்கின்ற தென்றல் காற்று அவளைப் பார்க்க அவசரமாக வேகமாக ஓடி வருகையில், பூக்களும் அந்தத் திக்கைக் கொஞ்சம் திரும்பித் தான் பார்த்தாக வேண்டும் அல்லவா?

ன்னும் கண்கள் மூடிப் படுத்திருக்கின்ற தம் தோழியரிடம் தாங்கள் செய்ய வேண்டியவற்றை அவள் கூறுகின்றாள்.

ஆகா..! அவளுக்குத் தான் கோபம் யார் மீது..? பாவை நோன்பு இருக்கலாம் என்று சொல்லி இன்னும் உறங்கிக் கொண்டு இருக்கின்ற தம் தோழியர் மீதா? இல்லை, அந்த மாயக் கண்ணன் புகழைப் பாடாமல், அவனது நினைவை மறந்து உலக நினைவுகளில் மூழ்கி விட்டு, தம் உண்மை நிலையை அறியாமல், உணராமல் உறங்குகின்ற இந்த உலகத்தில் உள்ளோர் மீதா?

" உலகத்தில் வாழ்வீரே..! கேளுங்கள்..! நாங்கள் நம் பாவைக்குச் எய்யும் வழிபாட்டின் முறைகளைக் கேளுங்கள்.

பாற்கடலில் இலகுவாக உறங்குகின்ற அந்தப் பரந்தாமன் புகழ்பாடியபடி நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும் தெரியுமா?

இந்த ஆயர்பாடியுள் மிகவும் எளிதாகக் கிடைக்கின்ற நெய்யும், பாலும் எடுத்துக் கொள்ள மாட்டோம். பிரம்ஹ முகூர்த்தத்தில் நீராடுவோம்.

கண்களுக்கு மையிட்டு எழுத மாட்டோம். ஏனெனில் அந்தக் கார்வண்ணக் கண்ணனே நமது கண்ணில் உள்ளதால், அந்த வண்ணமே நம் கண்களுக்கு மையிட்டெழுதியது போல் இருக்கும்.

ஈரக் கூந்தலில் மலரிட்டு நாங்கள் முடிய மாட்டோம். ஏன் வைக்க வேண்டும்? அந்த மாயவன் தானே எங்கள் நெஞ்சமெனு மலரை மலர வைத்து விட்டானே? இன்னும் இந்த ' காலை அரும்பாகி, பகலெல்லாம் போதாகி, மாலை' உதிர்கின்ற இந்த நிலையற்ற சிற்றின்பம் தரும் மலரை நாங்கள் ஏன் அணிந்து கொள்ள வேண்டும்?

செய்யக் கூடாத காரியங்களைச் செய்ய மாட்டோம். எவையெல்லாம் செய்யக் கூடாதன தெரியுமா? அந்தப் பரந்தாமன் புகழ்பாடாத செயல்கள் அனைத்தும் தாம். தீயன சொல்ல மாட்டோம். அவையாவன யாவையெனில் கண்ணன் புகழ் கூறா மொழிகள் தாம்.

இவ்வாறு செய்து உய்யுவோம், வாருங்கள்.."

அடர்ந்த காட்டின் இருளுக்குள், ஒற்றைக் குரல் போல் ஊர்ந்து நகர்கின்ற குழலின் நாதம் போல், அவளது குரல் ஒற்றையாய் பரவுகின்றது.

DISC ::

இந்த விளக்கங்கள் அனைத்தும் ஆண்டாளின் காதலை நான் அறிந்த வரையில் கூறுவதாகும். நடத்துவது நாராயணன் கைகள். நடப்பது நமது பாதம்.

Monday, December 17, 2007

திருப்பாவை :: பாடல் அ.


மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்!
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்!


மெல்லப் பனி பெய்து கொண்டிருக்கின்றது.

பச்சை இலைகளால் தன்னை மூடிக் கொண்டிருந்த பல விருட்சங்களும் குளிர் தாங்காமல் இன்னும் தம்மை இறுக்கிக் கொள்கின்றன. அந்த சலசல்ப்பில் விழித்துக் கொண்ட சின்னச் சின்னக் குஞ்சுகளைத் தாய்ப் பறவை தம் சிறகுகளால் அணைத்துக் கொள்கிறது.

அந்த தாயின் கணகணப்பில் இன்னும் சுகமாக பறவைக் குஞ்சுகள் சுகமாக உறங்கத் தொடஙுகின்றன.

கரும்பச்சை இலைகளின் நரம்புகளின் மீதெல்லாம் நனைத்தவாறு உருண்டு, புரண்டு, ஓடி கீழே விழுகின்றன பனித் துகள்கள்.

சற்று தொலைவில் யமுனை நதி அமைதியாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

அக்கரையிலும் இக்கரையிலுமாக மினுக்கிக் கொண்டிருந்த தீப்பந்தங்களின் நிழலைத் தன் ஆடையாக அணிந்து கொண்டிருக்கின்றது. காற்றில் அசைந்தாடுகின்ற அந்த மஞ்சள் தழல்களின் அசைவைத் தன் மேல் அணிந்து கொண்டது மட்டிலும் திருப்தியுறாத யமுனை, மேலே பார்க்கின்றது.

பிரம்மாண்ட பிரபஞ்சத்தின் மேனியெங்கும் சிணுங்கிக் கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான, பல கோடிக்கணக்கான வெண் வைரப் பொறிகளை அள்ளி தன் மேல் வாரி இறைத்துக் கொண்டது, யமுனை நதி.

மஞ்சள் சரிகை மேல் பொறித்த கண்ணாடித் துகள்கள் போல் வண்ண ஆடை அணிந்த பின் தான் நதி பெரு மகிழ்வெய்தியது. அந்த பேரழகை தன் தாயான கடலன்னையிடம் காட்டிட வேண்டும் என்ற பேராவலோடு, நகர்ந்தது.

அதன் கவலை அதற்கு..! இன்னும் சற்று நேரம் சென்றால், அவளது மனம் கவர்ந்த காதலனான கதிரவன் வந்து விடுவான். இவள் இவ்வளவு நேரம் அணிந்து அழகு பார்த்த இந்தப் பேரெழிலான ஆடையை அகற்றி விடுவான். நாணமடைகின்ற நதிப்பெண் என்ன செய்வாள்? அந்தக் கதிரவனின் செந்நிறத்தைத் தான் பூசிக் கொள்ள வேண்டும்.

அத்தோடு விடுவானா அவன்? அவளது நாணத்தைக் கண்டு பெருமிதம் கொள்வதோடு விட்டு விடுகிறானா, என்ன? இல்லையே! அவளுக்கு நாணத்தைத் தந்தவனே, அதை எடுத்துக் கொள்கிறான். பின் அந்த பேதைப்பெண் என்ன தான் செய்ய முடியும்? தனது ஆவியோடு கலந்த நாயகனை ஆவிரூபமாகச் சென்று அடைகின்றாள்.

கல்பகாலமாக நடந்து வருகின்ற இந்த காதல் நாடகத்தை எண்ணி, எண்ணி ஆயர்பாடிக் கரையின் யமுனைப் பெண் புன்முறுவல் பூத்தவாறு நகர்ந்து செல்கின்றாள்.

ஆயர்பாடி மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? அங்கே நடக்கும் நாடகங்கள் தாம் எத்தனை?

ண்ணனின் நினைவாகவே வாழ்கின்ற இராதையின் கண்களில் உறக்கம் சிறிதும் இல்லை. அவளது எண்ணமெங்கும் நிறைந்து வழிவது கண்ணனின் நினைவுகளே! அவனோடு விளையாடிய கணங்கள், அவனது கைகளைப் பற்றி யமுனை நதியில் குதித்துக் கும்மாளமிட்ட நேரங்கள், அந்த மாயவனின் கரு நிறத்து விரல்களைப் பிடித்துக் கொண்டு காட்டில் சிறுவயதில் ஆடுமாடுகளோடு அருகில் அமர்ந்திருந்த காலங்கள், அந்த மாதவனின் செந்நிற இதழ்கள் தடவித் தடவி அவன் மூச்சுக் காற்றை நிரப்பி நிரப்பி தன்னை வெளிப்படுத்தும் குழலின் நாதம் கேட்டுக் கொண்டு பேரானந்தப் பெருவெளியில் கரைந்து போனது...

என்று எத்தனை நினைவுகள்..!

எப்படி அவளுக்கு உறக்கம் வரும்? அவள் கண் திறந்து பார்க்கும் இடங்களில் எல்லாம் அந்த மாயக் கண்ணனின் திருவுருவம் அல்லவோ வந்து நிற்கின்றது.

பச்சைப் பசேல் என்றிருக்கும் வயல்வெளிகள் அவனது 'பச்சை மாமலை போல் மேனி'யை அல்லவா காட்டுகின்றது? சலசலத்து ஓடுகின்ற நதியும், அகண்டு விரிந்துள்ள வானமும் அவனது நீலவண்ணத்தை அல்லவா நினைவூட்டுகின்றது? மேற்றிசையில் வந்து சூழ்கின்ற கருவண்ண முகில்கள் மட்டும் சும்மாவா செல்கின்றது? அவனது சுருள் சுருளான கருங்குழலை அல்லவா சொல்லிச் செல்கின்றது?

எதுவும் காண வேண்டாம் என்று கண்களை மூடிப் படுத்தாலோ, அந்த மாயன் சும்மா விடுகின்றானா? அவளது கண்களுக்குள்ளும் வந்து காதல் புரிகின்றானே, அவள் என்ன செய்வாள்?

இருந்தாலும் குடும்பத்தினர் கவலையுறுவரே என்று உறங்குபவள் போல் நடிக்கின்றாள்.

அவளது குடும்பத்தினர் மட்டும் அவளை, அவள் நிலையை அறியாரா? அவர்களும் அதனை அறியாதது போல் நடிக்கின்றனர்.

அது மட்டுமா? ஆயர்பாடியுள் இருக்கும் ஒவ்வொருவரும் இத்தகைய நாடகம் அல்லவா நடித்து வருகின்றனர்.

த்தகைய ஒரு மார்கழி மாதம்.

சிலுசிலுக்கின்ற ஈரக்காற்றின் ஊடாக ஒரு மெல்லிய ஆடையாக பாய்ந்து பொழிந்து கொண்டிருக்கின்றது வெண்ணிலா. தன் அமுதக் கிரணங்களால், யமுனை நதியை அந்தப் பரமன் உறையும் பாற்கடல் போலவே வெண்மையாக்கிக் காட்டுகின்றது. பரந்தாமனின் பேரன்பில் நனைந்த அடியவர்களது முகத்தில் ஜொலிக்கின்ற தேஜஸ் போல் வெண்ணிலா நிறைந்த வான்.

அத்தகைய ஒரு நன்னாள் இது.

இன்றைய அதிகாலை நேரத்தில், இராதை எழுந்து விட்டாள். தனது மனையின் கதவுகளை மெல்ல அணைத்து விட்டு வெளியே வருகின்றாள்.

சென்ற இரவில் பேசிக் கொண்ட படி தோழிகள் வந்திருப்பார்கள் என்று பொதுவிடம் சென்று பார்க்கின்றாள். அந்தோ! பேரிரவின் ஒற்றை வெண்ணிலா போலவும், பெரும் பகலின் ஒற்றைக் கதிரைப் போலவும், தோட்டத்தின் மரங்களின் இடையில் ஊடுறுவி வருகின்ற குளிர்க்காற்றுக்குத் துணையாகத் தனிமையாக அவள் மட்டும் நிற்கின்றாள்.

ஒவ்வொருவரின் மனையாகச் சென்று அழைக்க முடிவெடுக்கிறாள்.

பாடுகிறாள்.

" செல்வம் கொழிக்கின்ற ஆய்பாடியின் சிறுமிகளே! கண்ணனின் நினைவைச் சுமந்து சுமந்து கவலையில் சோர்வுற்றதால், கைகளில் இருந்து கழன்று விழுந்து விட்ட கருவளையங்களை எடுத்து கண்களைச் சுற்றி அணிந்து கொண்ட இளம் கன்னியரே! வாருங்கள் நீராடச் செல்வோம்.

பசுமாடுகளையும், ஆடுகளையும் மேய்த்துக் காமதேனுவைத் தன்னோடு வைத்துக் கொண்டிருக்கும் நந்தகோபனின் செல்வக் குமாரனும், தன் மகனைப் போன்றே நிறம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கண்களைச் சுற்றி மையிட்டு மையிட்டு கருவிழிகளைப் பெற்ற யசோதையின் இளம் மகன் அந்தக் கண்ணன்.

அவனது மேனி எத்தகையது? பொழியப் பொழியத் தீராத கருமுகில் போன்ற நிறத்தது அவன் மேனி. அவன் கண்களோ சிவந்த நிறமுடையது. அவன் கண்கள் எதனால் அப்படிச் சிவந்து போயிற்று? நீங்கள் அறிவீர்களா?

ஒருமுறை நமது ஆடைகளை அவன் எடுத்துக் கொண்டு நம்மிடம் விளையாடினானே? அப்போது கூச்சத்தால் நாம் நாணி நின்றோமே , அந்த நமது நாணம் தான் அப்படி அவன் கண்களில் அப்பிக் கொண்டது.

அவன் முகமோ மதிய நேரத்தில் நகர்ந்து வருகின்ற கதிரைப் போன்றது. அத்தகைய ஜொலிப்பும், தேஜஸும் ஒளிர்கின்ற தெய்வீக முகம் அது.

அந்தக் கண்ணன் வேறு யாருமல்ல. பாற்கடலின் அலைகளின் மேல் படுத்துக் கொண்டு அலகிலா விளையாட்டு ஆடுகின்ற நாராயணனே!

அவனே நமக்கு வாழ்வும், வளமும் தருவான். வாருங்கள் இந்த உலகத்தில் உள்ளோர் எல்லோரும் உணர்ந்து கொள்ள பாடிப் பரவுவோம்..!"

...(தொடரும்)

DISC ::

இந்த விளக்கங்கள் அனைத்தும் ஆண்டாளின் காதலை நான் அறிந்த வரையில் கூறுவதாகும். நடத்துவது நாராயணன் கைகள். நடப்பது நமது பாதம்.

Sunday, December 16, 2007

நாளை துவங்கும் மார்கழி...!மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று பரமாத்மா கீதையில் கூறியுள்ளார். அத்தகைய பேரும், புகழும், பீடும் உடைய மார்கழி மாதம் நாளை முதல் துவங்குகின்றது.

உறைய வைக்கின்ற குளிர், விசுவிசுவென்று வீசிக் கொண்டிருக்கும் ஊதல் காற்று, பால் மழையென அமுதைப் பொழிந்து கொண்டிருக்கும் வெண்ணிலா, ஈரக்காற்றெங்கும் பனித்துகள்கள் மிதந்து வருகின்ற அதிகாலை, ஊரெங்கும் உறக்கத்தின் பிடிக்குள் இறுகிக் கிடக்க...

தூரக் கோயிலின் தூண்கள் எல்லாம், ஒளி விளக்குகளால் நிரம்பி இருக்கும். அது மட்டுமா, இளம் சிறுமிகள், சிறுவர்கள், பெரியவர்கள் அனைவரின் பக்திப் பாடலாலும் நிரம்பி இருக்கும் திருக்கோயிலின் மண்டபங்கள்...!

அந்த திருநாட்களால் அமையப் பெற்ற மார்கழி மாதம் நாளை பிறக்கின்றது.

சுடச்சுடப் பொங்கலும், புளியோதரையும் மணமணத்துக் கொண்டிருக்கையிலும், மனம் அதன் பக்கம் செல்லாமல் கார்மேகவண்ணன், மணிவண்ணன், குழல் நாயகனின் திருப்பாதங்களை எண்ணி, கண்களில் அவனது திருக்கோலங்கள் நிறைந்திருக்க, வாய் திறந்து அவன் மேல் கொண்ட காதலை , அன்பை, பாசத்தை, பக்தியை ஆண்டாள் மொழிந்த மொழிகளில் நாமும் பாடப் பாட.... ஆஹா.. அந்த இன்பம் என்ன..? ஆனந்தம் என்ன..?

வாருங்கள்.. நாமும் அந்த தெய்வீகக் காதலின் மாகடலின் அலைகளில் நீராடுவோம்.

பெரும் அலைகள் வந்து மோதுகையில், பெரும் பாறைகளின் விளிம்புகளில் எல்லாம் பட்டு, தெறிக்கின்ற நுரைகளின் மேல் பயணம் செய்யும் இலைகள் போல், அந்த ஆண்டாள் பாடிச் சென்ற உயர் காதலின் வரிகள் மேல் நாமும் பயணிப்போம்.

Wednesday, December 12, 2007

ரொம்ப நாள் கழிச்சு...!

ன்னிக்கு தலைவரோட பிறந்தநாள். தலைவருக்கு 58-வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்ப்பா.

அப்புறம் இன்னொரு விஷயமும் சொல்லி விடுகிறேன். இப்போது தருமமிகு சென்னையில் இருந்து மலைநாட்டிற்கு வந்திருக்கிறேன். இன்னும் கொஞ்ச ஆண்டுகளுக்கு திருவனந்தபுர வாசம் செய்யலாம் என்று முடிவு செய்துள்ளேன்.

இந்த இடப்பெயர்வு பணிகள் இருந்ததால், இந்தப் பக்கம் அவ்வளவாக வர முடியவில்லை. இனிமேல் அடிக்கடி பார்க்கலாம்.

யாருப்பா அங்க.. சிச்சுவேஷனுக்கு சம்பந்தமா சாங்க் போடுங்கப்பா...

சரி.. அப்புறமா பார்க்கலாங்க...!

மலையாளக் கரையோரம்.

வர்ர்ர்ர்ர்ர்ட்டா...?

Friday, November 16, 2007

பழி.
ரு கன்னத்தை
அறைந்தால்
மற்றதைக் காட்டு
என்ற எண்ணத்தை
மிதித்துத்
தேய்த்து விடுகின்றன
கால்கள்,
அடுத்தவர் தன்னை மிதிக்கையில்!
கால்கள்
அறிவதில்லை
கன்னங்களின்
பெருந்தன்மை...!

Tuesday, October 23, 2007

எனது சுய சரிதை.சிடி சென்டரில் வாங்கிய மற்றுமொரு புத்தகம், 'எனது சுய சரிதை'. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு.

எங்கள் தந்தையும் அவரது நண்பர்களும் அக்காலத்திலேயே 'சிம்மக் குரலோன் சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம்' என்ற பெயரில், மன்றம் அமைத்து பல பணிகள் செய்துள்ளனர். திருச்சியில் ஒரு முறை நடந்த இரசிகர் மன்ற மாநாட்டில் கலந்து கொண்டு சிவாஜி அவர்களுடன் அருகில் நின்று புகைப்படம் எடுத்த போது, அவர் முகத்தில் சந்தோஷத்தை பார்க்க வேண்டுமே..!

அவர் தொகுத்த அப்போது வெளியான பாடல் புத்தகங்கள், புகைப்படத் தொகுப்பு ஆகியவற்றை இன்னும் நான் பத்திரமாக வைத்துள்ளேன்.

நாங்களும் அவருக்கு சிறிதும் சலிக்காமல், ரஜினியின் ஒரு பிறந்த நாளுக்கு தெருவெங்கும் மிட்டாய் கொடுத்து தூள் பரப்பினோம். அது அந்தக் காலம்...!

இந்தக் காரணங்களாலும், இயல்பாகவே சிவாஜி அவர்களது நடிப்பால் கவர்ந்திழுக்கப் பட்டதாலும், இந்தப் புத்தகத்தை வாங்கினேன். இன்னும் நினைவு இருக்கின்றது 'தங்கைக்காக' என்ற படத்தைப் பார்த்து விட்டு கொஞ்ச நேரம் அழுது கொண்டு இருந்தது...!

இது வரை படித்த வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் போல் இல்லாமல், இது வேறு மாதிரியாக எழுதப் பட்டு இருக்கின்றது.

டி.எஸ்.நாராயணசாமி என்ற எழுத்தாளர் அவரைப் பேட்டி கண்டு அதன் தொகுப்பாக இந்நூல் வெளியிடப் பட்டுள்ளது.

சிவாஜி அவர்களே, இந்நூலைப் பற்றி தன் கருத்தாக கூறியிருப்பது :

"என்னுடைய வாழ்க்கை ஒரு பரந்த கடல் போல. என்னுடைய கலையுலக வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும், நான் எத்தனையோ கலைஞர்களையும் பெரியோர்களையும் சந்தித்திருக்கிறேன். அவர்கள் அனைவரையும் வரிசைப்படுத்தி, இந்த 'சுயசரிதையில்' குறிப்பிடுவது கடினம். எனக்கு பாதிப்பு ஏற்படுத்திய சம்பவங்களையும், என்னைப் பாதித்து, வியக்க வைத்த சில மறக்க முடியாத கலைஞர்களையும், பெரியோர்களையும் மட்டுமே, நினைவில் கொண்டு குறிப்பிட்டுள்ளேன். இதில் விட்டுப் போனவர்கள் எல்லோரும் என் நினைவில் வராவிட்டாலும், என் இதயத்தில் எப்பொழுதும் குடி கொண்டிருப்பவர்கள் என்பதைக் கூறிக்கொள்கிறேன்."

புத்தகம் : எனது சுய சரிதை

புத்தக வகை : வாழ்வுக் கதை.

ஆசிரியர் : திரு.டி.எஸ்.நாராயணசாமி.

கிடைக்குமிடம் : உங்கள் அபிமான நூல் விற்பனையகங்கள்.

விலை : ரூ.70.

பதிப்பகம் : Sivaji Prabhu Charities Trust, Royapettah, Ch - 14.

Friday, October 19, 2007

மீண்டும், மீண்டும்...!ருவரிடம் ஒரு முறை மட்டுமே வரும் என்று கவிஞர் சொன்ன காதல், மீண்டும் ஒருமுறை தனது பொன் சிறகுகளால் அவனைத் தழுவுகின்றது.

வறண்டிருந்த பாலையின் வழி நடந்து சென்று கொண்டிருக்கையில், அவ்வப்போது அவன் மேல் தூறிக் கொள்கின்றன சில்லென்ற சில துளிகள். முட்களையே கடித்து தின்று கொண்டிருக்கும் மெளன ஒட்டகத்தின் வாயின் ஓரங்களை முத்தமிட்டுச் செல்கின்றன சில ரோஜா இதழ்கள்.

போகின்றது என்று பார்த்தபடியே நகர்கின்ற காலத்தின் முட்களோடு போட்டியிட்டு புலம் பெயர்கின்ற கரிய மேகங்களினோடு அவனது பார்வையும் தூரே எங்கோ பதிகின்றது.

அலை அலையாய் அடிக்கின்ற கானல் நீரின் நிழல்களின் கீழே அசைவற்று இருக்கின்ற கருஞ்சாலைகளின் மேலாக அவனது பயணம் தொடங்குகின்றது.

பகலின் கொடிய விரல்களால் கிழிபட்டும் அவனது நடை நிற்கவில்லை. மதியத்தின் கொடூர கரங்களில் கரும் பூச்சுகள் பூசிக் கொண்ட முகத்தினோடு அவன் இன்னும் நடக்கிறான். மெல்ல கவிந்து வருகின்ற மாலையின் போர்வையில், போர்த்திக் கொண்ட பின்னும் முத்து முத்தாய் வேர்த்துக் கொண்டேயிருக்கின்றது உடல்.

இலேசாக இரவின் பெரும் இராஜ்ஜியத்தில் நுழைகின்றான்.

எவரையும், எதனையும் தெரிந்து கொள்ள வேண்டியிராத இருளின் முகாமிற்குள் அவன் நுழைந்து விட்ட பின் கரிய ஆழம் காண முடியாத அவனது மனத்தின் பேராழத்திற்குள் குப்புற விழுகின்றான்.

வெளிப்புற பயணங்கள் இன்னும் எத்தனை எத்தனையோ பேரதிசயங்களையும், பெரு மயக்கங்களையும் தன்னுள் கொன்டு அவனுக்காகக் காத்திருக்க... அவனோ தனக்குள் இன்னும் மூழ்கிக் கொண்டு காணாமல் போய் இருக்கிறான்.

Sunday, October 14, 2007

சித்தர் பூமி சதுரகிரி.

நேற்று மயிலையில் உள்ள சென்னை சிடி சென்டருக்குச் சென்றிருந்தோம். வழமை போல் கால்கள் தாமாகவே லேண்ட்மார்க்குக்கு அழைத்துச் சென்று விட்டன. கொண்டு போயிருந்த பைசா கொஞ்சம் செலவழித்து நான்கு புத்தகங்கள் வாங்கினேன். அவற்றுள் ஒரு புத்தகம் தான் 'சித்தர் பூமி சதுரகிரி'.

பேருந்தில் வரும் போதும், வீடு திரும்பிய பின்னும் அமர்ந்து படித்து முடித்தேன். அதைப் பற்றி சில குறிப்புகள்.

திருவில்லிப்புத்தூரின் அருகில் உள்ள சதுரகிரி ஒரு சித்த பூமி. பதிணெண் சித்தர்கள் தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் இங்கு சென்று இருக்கிறார்கள். நூலாசிரியர் திரு.கே.ஆர்.சீனிவாச ராகவன் அவர்கள் தம் பயணக் கட்டுரை நூலாக இப் புத்தகத்தை எழுதியுள்ளார்கள். நாமும் கூடவே பயணிப்பது போல் உள்ளது.

மனிதன் கைபடாத வனப் பகுதிகள். சித்தர்கள் இன்னும் அரூபமாக நடமாடும் குகைகள். காட்டு விலங்குகள். பட்டப் பகலிலும் இருள் சூழ்ந்த காட்டுப் பகுதிகள். என்று பல பகுதிகளை தன்னுள் அடக்கியிருக்கும் சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்த சதுரகிரிக்கு ஒருமுறையாவது சென்று வர வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகின்றது, இந்நூல்.

ஆன்மீக யாத்திரையாகவோ, மலையேறும் பயணமாகவோ குழுவாக ஒரு வழியறித் துணையுடன் (கைடு) என்று வர அற்புத அனுபவங்கள் கிடைக்கும் என்பது தெளிவாகத் தெரிகின்றது.

இன்னும் தெளிவாக அறிந்து கொள்ள :

http://www.sathuragiri.com/index1.html

புத்தகம் : சித்தர் பூமி சதுரகிரி.

புத்தக வகை : ஆன்மீகம், பயணக் கட்டுரை.

ஆசிரியர் : திரு.கே.ஆர்.சீனிவாச ராகவன

கிடைக்குமிடம் : உங்கள் அபிமான நூல் விற்பனையகங்கள்.

விலை : ரூ.70.

பதிப்பகம் : www.nhm.in

Friday, September 28, 2007

மாமல்லையில் ஒரு நாள்...!தே இடத்தில் ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் மகேந்திர சக்ரவர்த்தியும் அவருடைய குமாரரும் வந்து இதே விதமாக நின்றதுண்டு. ஆனால், அங்கு நின்ற குன்றுகளும் பாறைகளும் அப்போது மொட்டைக் குன்றுகளாகவும், மொட்டைப் பாறைகளாகவும் இருந்தன.

"அப்பா! அந்தப் பாறையின் நிழலைப் பாருங்கள்! அது யானையைப் போல் இல்லையா?" என்றான் பல்லவ குலந்தழைக்க வந்த நரசிம்மவர்மன்.

அவன் சுட்டிக் காட்டிய நிழலைச் சக்கரவர்த்தி பார்த்தார்.

"ஆஹா!" என்று அவர் வாயிலிருந்து புறப்பட்ட வியப்பொலியில் விவரிக்க முடியாமல் பல உணர்ச்சிகள் தொனித்தன.

சற்றுநேரம் மகேந்திரர் சிந்தனையில் ஆழ்ந்து வெளி உலகப் பிரக்ஞையே இல்லாதவராய் நின்றார். பிறகு நரசிம்மனைத் தழுவிக் கொண்டு, "குழந்தாய்! எப்பேர்ப்பட்ட அதிசயமான உண்மையை நீ கண்டுபிடித்துக் கூறினாய்! நீ கூறிய வார்த்தையின் மகிமை முழுவதும் உனக்கே தெரிந்திராது!" என்றார்.

பன்னிரண்டு பிராயத்துச் சிறுவனான நரசிம்மன் மேலும் உற்சாகத்துடன், "அப்பா! அதோ, அந்தக் குன்றின் நிழலைப் பாருங்கள்! கோயில் மாதிரி இல்லையா?" என்றான்.

"ஆமாம், நரசிம்மா! ஆமாம்! அந்தக் குன்றின் நிழல் கோயில் மாதிரிதான் இருக்கிறது. அதை கோயிலாகவே செய்து விடுவோம். இந்த ஐந்து குன்றுகளையும் ஐந்து கோயில்களாக்குவோம். இன்னும் இங்குள்ள சிறு பாறைகளை யானையாகவும் சிங்கமாகவும் நந்தியாகவும் ஆக்குவோம். இந்தத் துறைமுகத்தைச் சொப்பன லோகமாக்குவோம். ஆயிரம் ஆயிரம் வருஷங்களுக்குப் பிறகு இந்தத் துறைமுகத்துக்கு வருகிறவர்கள் எல்லாரும் பார்த்துப் பிரமிக்கும்படியாகச் செய்வோம்!" என்றார்.

- பேராசிரியர் கல்கி, சிவகாமியின் சபதம், அதிகாரம் 26.Friday, September 14, 2007

மாலையின் அச்சில் வெட்கம் பறித்த கவிதை.மெளனமாய்க் காத்துக் கொண்டிருக்கின்றேன்.

இறுக்கிப் பெய்கின்ற பெருந்துளிகள் நனைக்கின்றன என் குடையை. நகரத்தின் ஊடாக நகர்கின்ற சிறுநதி போல் சாலைகளின் குறுக்கே சக்கரங்கள் மேய்வதற்கென இடப்பட்டிருக்கின்றது இருப்புப் பாதை.

ஓராயிரம் வெண்ணோடைகளின் இழைகளில் இருந்து பிரிந்து சிதறிய பஞ்சுத் துகள்கள் ஒளிதின்னும் மாலை நேரம்.

நனைந்த பெண்ணைப் பார்ர்க்கும் பார்வைகள் என்னைப் பற்றி எனக்கே காட்டுவது போல், மழைத்துணி புனைந்த ஈரநிலம் காட்டுகிறது மயக்கத்தின் மேல் புரண்டு கிடக்கும் என்னையே...!

போகிறதென்று தள்ளி விட்ட பொழுதுகளின் வெளிச்ச நிறங்களை உறிந்து கொண்டு சிதறுகின்றது சாலை விளக்குகளின் வழி, நிறமாலையின் சலசலக்கும் வர்ணக் கோவைகள்.

பனி தூவும் முன்னிரவுக் காலங்களில் நிழல் உண்ணும் இருட்டின் துணை கொண்டு நடக்கையில், கைப்பிடித்தபடி வருகின்றது இரு விளக்கொளி, தூர இரயிலின் முன் பற்களாய் நீட்டிக் கொண்டு..!

நன்றி : http://www.artwing.com/images/Prints/EveningRain.jpg

Sunday, September 09, 2007

ஒக்க ஸ்மால் பிராப்ளம்...

ங்க.. எனக்கு ரொம்ப நாளா ஒரு பிரச்சினை... இத எப்படி சரி செய்யறதுனு தெரியலைங்க...

யாராவது அனுபவஸ்தர் இருந்தீங்கனா, கொஞ்சம் சொல்லுங்கப்பா..

அட அது ஒண்ணும் இல்லீங்க.. இன்னிக்கு தி.நகர் போய் ஒரு புக் ஷாப்புல சுத்திட்டு இருந்தேங்க. அப்போ மொழிப் புக்ஸ் கொஞ்சம் வாங்கலாம்னு நெனச்சேன். திடீர்னு ஒரு ஞானோதயம்.

'அட... அது தான் நிறைய லேர்னிங் மெட்டீரியல்ஸ் நெட்டுலயே கிடைக்குதே.. அப்புறம் இத எதுக்கு காசு செலவு பண்ணி வாங்கணும்னு' தோணுச்சுங்க..

ஒண்ணும் வாங்காம வந்துட்டேன்.

ஆனா அப்புறம் நெட்ல கண்ட கழுதையெல்லாம் பாத்துட்டு இருக்கோமே ஒழிய அந்த ஸ்டடி மெடீரியல்ஸ் டவுன்லோட் செஞ்சு படிக்கத் தோண மாட்டேங்குது...

இந்த பிரச்னை ரொம்ப நாளா இருக்குங்க.. இத எப்படி சரி பண்ணலாம்னு யாராவது அனுபவஸ்தர் இருந்தீங்கனா.. கொஞ்சம் சொல்லுங்க சாமி.. உங்களுக்குப் புண்ணியமா போகும்...

Friday, September 07, 2007

காதலெனும் மழையினிலே...!வானெங்கும் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.

கர்ப்பம் கொண்டுள்ள பெண்ணைப் போல், நிறைவயிறாய் வந்து பொழிந்து தள்ளிக் கொண்டிருக்கின்றன மேகங்கள். அவற்றைக் கிழித்துக் கொண்டு எட்டுத் திசையெங்கும் பாய்ந்து மின்னிப் பளீரிடுகின்றன வெண் மின்னல்கள். பிரளயமே வந்தது போல், கிடுகிடுக்கின்ற இடிகள்.

தாரை தாரையாய் ஊற்றுகின்ற முற்றத்தின் தூணில் சாய்ந்தபடி இருக்கிறாள் ராதை.


Get Your Own Music Player at Music Plugin

Tuesday, September 04, 2007

யமுனை நதிக்கரையிலே...லசலத்துக் கொண்டிருக்கிறது யமுனை.

கரையைத் தழுவிக் கொண்டு, நுரை நுரையாய் மினுக்கிக் கொண்டிருக்கிறது நதி. உண்கையில் சிந்தித் தெறித்திருக்கும் பருக்கைகள் போல் சிதறிக் கிடக்கின்றன நட்சத்திரங்கள். உருக்கி ஊற்றிய வெள்ளித் தாரையாய் ஜொலிக்கின்றது வெண்ணிலா.

நிலவின் ஒளிக் கிரணங்கள் பட்டு நுனிகள் எங்கும் வெண் முலாம் பூசியபடி நகர்கின்றன மேகங்கள். முன்னிரவுக் காலத்தில் மெதுவாய்ப் பொழிகின்றன பனித்துகள்கள். பச்சைப் பசிய இலைகள், பழுப்பேறிய சருகுகள், ஈரம் நெகிழ்த்துகின்ற தென்றல் உலாவும் சோலைவனம்.

மெல்லிய நாதமாய்க் கண்ணனின் குழலோசை மிதந்து வருகின்றது...!

அமுதமென நினை நினைக்கையில் மெய்ஞ்ஞானமென ஊறுகின்றது நினைவுகள். ஓங்கி உலகளந்த பெருமான், பொங்கி வரும் கருணைக் கடலாய்ப் பொழிகின்ற நாதம் எங்கோ அழைத்துச் செல்கின்றது.

ஊரும், உறவும், வீடும், தெருவும் விட்டு ஓடோடி வந்துள்ளோம்.

நதிக்கரையில் நிற்கின்றது ஒரு பெரும் ஆலமரம். பலநூறு விழுதுகள், பல்லாயிரம் கிளைகள், பல இலட்சம் இலைகள், எண்ணிலா உயிரிகள் என்று அன்றொரு நாள் கோவர்த்தனகிரியின் அடியில் நாங்கள் நின்றிருந்தது போல்,வாழ்கின்றன.

ஹே.., கோவர்த்தனகிரி நாதா..! மதன் மோகன குரு!

நீ கண்மூடி, குழல் கொண்டு இசைக்கையில் அதிர்கின்ற எங்கள் சிறு நரம்பும் அமைதியுறுகின்றது. மந்தகாசமாய் மலர்கின்ற ஒரு மொட்டு போல் எங்கள் மனதில் பூக்கின்றது அன்பெனும் பேருணர்வு.

ஆயிரம் துளைகள் கொண்ட இரவின் வானம், வழியாக நனைகின்றது பூமி. அது போல், நவத் துளைகள் வழி நீ நிரப்புகின்ற இசையமுதம் பொங்கிப் பெருகி எங்களை நனைக்கின்றது.

நீல இரவின் நிறத்தை உறிஞ்சிக் கொண்ட நீலோற்பவ மலர்களும், சந்திரனின் கிரணங்கள் தொட்டுத் தடவி விளையாடிய களிப்பில் வெட்கப்பட்டுச் சிவந்த செந்தாமரை மலர்களும், பசிய பூமியின் பிரதிகளாய் நீர்த்துளிகள் நிரம்பிய வட்ட இலைகளுமாய், ஒதுங்கி ஆடுகின்றன யமுனை நதிக்கரையில்..!

பொன்னிறத் தகடுகள் மேவிய படகும் நதிக்கரையோடு, நதியலைகளோடு, காற்றோடு, காட்டோடு, புவியோடு, பிரபஞ்சத்தோடு நின் மதுர கானத்தில் மயங்கிக் கிறங்கி நிற்கின்றது..!

தாயின் மடியைத் தழுவி நிற்கின்ற கன்றுகள் போலவும், தரையைத் தழுவி நிற்கும் கொடியிலைகள் போலவும், இரவோடு பிணைந்து நிற்கின்ற பனி போலவும், இதயத்தின் ஒவ்வொரு மூலையிலும் இறுகிக் கிடக்கின்ற உன் நினைவைப் போலவும், நாங்கள் உன் காலடியில் கரைந்து நிற்கின்றோம்..!

டகில் உன்னோடு பயணிக்கிறோம்.

கோசலராமனோடு அன்றொரு நாள் வந்த குகனோடு ஐவரான பெருமானே, இன்று உம்மோடு ஐவராய் வந்தோம். பறவைகளோடு, கீச்சுகீச்சென்று இரையும் குருவிகளும், பூசுபூசென்று அலைகின்ற பூச்சிகளும், சலசலக்கும் தென்றலோடு இனிக்கின்ற நிழல்களும் ஓய்வெடுக்கின்ற இந்த முன்னிலாக் காலத்தில் நாம் மட்டுமே பயணிக்கிறோம்.

மோஹனராஜ..! உனது பிறை சூடி நெற்றியில் நிலைத்து நின்று அசைகின்ற மயிற்பீலியாக மாட்டோமா..? நீ இசைக்கின்ற இசையில் முதலில் கேட்டு இனிக்க இனிக்கத் திளைக்கின்ற செவியில் ஆடுகின்ற குண்டலமாக மாட்டோமா..? காலையும், மாலையும் நினது பூங்கழுத்தைத் தழுவி நின் மணத்தைப் பெறுகின்ற பூமாலையாக மாட்டோமா..?

மதுசூதனா..! உன் செவ்விதழ் தீண்டித் தீண்டி, உனது உயிர்மூச்சில் தன்னை நிரப்பி நிரப்பி,மோட்சம் தொட்டுத் தொட்டுப் பொங்கிப் பிரவாகிக்கின்ற புல்லாங்குழல் ஆக மாட்டோமா?

உன் கருமுகத்தின் உச்சியில், கலைந்து கலைந்து ஆடுகின்ற செந்திலகமும், வலிய புஜங்களில் வருத்தா வண்ணம் அமர்ந்துள்ள அணிகலன்களும், இடையை இறுக்கி அணைத்துள்ள பொன்மாலையும், பாதங்களின் மணியாரமும் என்ன தவம் செய்தனை அப்பா..?

முடிவிலாப் பயணமாய் நகர்கின்ற இவ்வாழ்க்கையில், மோதும் பாறைகளும், உடையும் படகுகளுமாய் நாங்கள் பயணம் செய்ய வேண்டி இருப்பதால், நாராயணா, உனது கானப் பெருமழையைக் கொள்கிறோம்.

பஞ்ச இந்திரியங்கள் துணை கொண்டு பிறவிப் பெருங்கடலைக் கடக்கையில், உனது நாதத்தைக் கொண்டால், இனிமை என்று கூறவே எங்கள் ஐவரையும் கொண்டு யமுனையில் பயணிக்கின்றாயா, கண்ணா..?

எங்கே நீ அழைத்துச் சென்றாலும், ஜனநாதா, நின் அருகில் மட்டும் இருக்கும் நிலை தருவாய்..! உடலை விட்டு நீங்காத நிழல் போலவும், உயிரை விட்டு நீங்காத உன் நினைவைப் போலவும், மணம் விட்டு நிங்காத மலர்கள் போலவும், எங்கள் மனம் விட்டு நீங்காத கிருஷ்ணனைப் போலவும்...!

கிருஷ்ணன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

Monday, September 03, 2007

தெற்கத்திக் கலைகள்.

சென்ற வாரம் சனிக்கிழமை சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள 'தட்சிண சித்ரா' சென்றிருந்தோம். அங்கு எடுத்த சில புகைப்படங்கள்::

வருக... வருக...:


வரவேற்கிறார்கள் நாயனக்காரர்கள் :


ஆடிய பாதமும், அருள் வழி இறையும் :


குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியிற் பால் வெண்ணீறும்
இனித்தம் உடையெடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம் மாநிலத்தே...!


தேரோடும் மண்ணில் எங்கள் தமிழ்ச் சீர் பாடும்:


நெல்லை இல்லங்கள்:
காரைக்குடி மனை:


'தமிழ்மணம்' :


எல்லைச்சாமிகள் :
காஞ்சி அம்மை:


பூக்கோலம் :


கன்னடச் சாமுண்டி:


ஆந்திர இல்லு:


தன் பிற்காலச் சந்ததிகளின் வள வாழ்வைக் காக்கும் அய்யனாரின் கூரிய உறைந்த பார்வை:


மது முன்னோர்களின் பிரம்மாண்டமான வாழ்வையும், அவர்கள் வாழ்ந்த இல்லங்களையும் கண்ணாரக் கண்டு வர தென்னகம் எங்கும் சுற்றத் தேவையில்லாமல், தருமமிகு சென்னை மாநகரின் அருகிலேயே அமைத்துள்ளார்கள்.

காண்க.

Saturday, September 01, 2007

செங்கோட்டுப் பயணம்.

"திருமுருகன் பூண்டியோடு திருநல்அவி நாசி
திருநணாவும் கொடுமுடியும் திருச்செங்கோடிவைகள்
கருவுருவா நிலைவெஞ்சன் கூடலிவை ஏழும்
கவின்பேரூர் முதல்வைப்புத் தனிநகர்கள் எமதே!"
- கோவைக்கிழார் சி.எம். இராமச்சந்திரன் செட்டியார் - கொங்கேழு தலங்கள்.

மீபத்தில் உடன் பணியர் ஒருவரது திருமணத்திற்காகத் திருச்செங்கோடு வரை சென்று வந்தோம். அதைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு.

மிதமாக மழை பெய்து கொண்டிருந்த ஒரு சென்னையின் மாலை நேரம். வீட்டில் உண்டு விட்டு, கிளம்புகையில் இரவு 9 மணி. 10:30க்கு சென்னை சென்டிரல் நிலையத்தில் இருந்து ஏற்காட்டில் கிளம்புவதாகத் திட்டம்.

விஜயநகர் சென்று D70 பேருந்தைப் பிடித்து கிளம்பும் போது 9:17 ஆனது. தண்டீஸ்வரம் கோயிலைக் கடக்கையில் ஆரம்பமானது தடங்கல்.

கோயிலுக்கு முன் உள்ள ஒரு சந்திப்பில், ஒரு பேருந்து செயல் இழந்து நின்று விட்டது. அதனால், அனைத்து பக்கங்களில் இருந்தும் வர வேண்டிய அனைத்து வாகனங்களும் அப்படியப்படியே நின்று விட்டன. இலேசாகத் தூறிக் கொண்டிருந்த மழை வேகம் பிடிக்க ஆரம்பித்தது.

'மழை வந்ததால் மின்சாரம் போனதா' இல்லை 'மின்சாரம் சோரம் போனதால் மழை வந்ததா' என்று பிரித்தறிய முடியா வண்ணம், உடனே மின்சாரம் போனது. எங்கும் இருள் சூழ்ந்தது. மழை வெட்டித் தள்ளும் வாகனங்களின் ஒளி மட்டும் மினுக்கிக் கொண்டிருந்தது. பேருந்தின் ஜன்னல் கண்ணாடிகள் 'பட் பட்' என இழுத்து மூடப்பட்டன.

நேரம் நழுவிக் கொண்டிருந்தது.

9:31...

9:32...

பின் மெது,மெதுவாக நகரத் தொடங்கினோம். நானும் மற்றொரு நண்பரும் மீண்டும் நம்பிக்கை பெறத் தொடங்கினோம். அந்தப் புள்ளியைக் கடந்த பின் வேகமெடுத்த பேருந்து, கிண்டி நிறுத்தத்தில் நிற்கையில் மணி, 9:45.

அவசர, அவசரமாகப் பின்னோக்கி நடக்கத் தொடங்கினோம்.

சேறும், சகதியும் நம் உடையோடு சேரும் எண்ணத்தோடு சாலை முழுதும் பரவி இருந்தது.

பாஸ்ட் புட் பிரியாணிக் கடை...

சங்கீதா...

பெட்ரோல் பங்க்...

சாய்பாபா கோயிலின் பிரிவு...

மற்றோரு பெட்ரோல் பங்க்...

டாஸ்மாக் கடைச் சந்து..

அனைத்தையும் கடந்து, பயணச்சீட்டுக் கவுண்டர் முன் நின்று மணி பார்க்க...

9:52.

பயணச்சீட்டு எடுத்துக் கொண்டு, தாவிக் குதித்து, படிகளில் ஏறிப் பாய்ந்து, மேலேறி, கீழே குதித்து, நடைமேடையை அடைகையில்.. மணி..9:55.

இன்னும் அரை மணி நேரம் மட்டுமே..!

பெருமூச்சோடு வந்து நின்ற மின்சார இரயிலின் ஒரு பெட்டியில் அமர்ந்து, மணியைப் பார்த்துக் கொண்டே, ஸ்டேஷன்களை எண்ணிக் கொண்டே வந்தோம்.

சைதை...

மாம்பலம்..

கோடம்பாக்கம்..

நுங்கம்பாக்கம்...

சேத்துப்பட்டு...

எழும்பூர்...

பார்க்...

நிறுத்தியும் நில்லாமலும், நின்ற பின் இறங்கி, நடைமேடையைக் கடந்து சாலையில் இறங்க ஆயத்தமானால் மற்றுமொரு அதிர்வு.

ரோடெங்கும் சாக்கடை நீர் கரை புரண்டு ஓடுகின்றது. சாலையின் இருபுறமும் பிளாட்பாரக் கடைகள். ஓரமாக எங்கும் ஒதுங்கி நடக்கவே முடியாது. பார்த்தோம். 'இது ஆகிறதில்லை' என்று முடுவெடுத்து, இறங்கினோம்.

'சளக் புளக்' என்று மிதித்துக் கொண்டே, கிட்டத்தட்ட ஓடினோம். சாலையின் இறுதியை அடைந்து, சுரங்கப் பாதை வழி இறங்கி ஓடினோம். கடந்து, மறுபுறம் மேலேறி.. பிரியாணிக் கடையில் யார் மீதோ இடித்து விட்டு, யாரென்றும் பார்க்காமல் ஓடினோம்.

10:20.

மழை நீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்த, ஆட்டோ ஸ்டேண்ட் தாண்டி, பார்க்கிங் பக்கத்தையும் தாண்டி விட்டு, டிக்கெட் கவுண்டரைக் கடந்து, நடை மேடை 6-ஐ அடைந்தோம்.

10:28.

ஏற்காடு எக்ஸ்பிரஸ் நீண்ட உடலைக் கிடத்தியிருந்தது. எஸ் - 5 கோச் இன்னும் 0.5 கி.மீ நடக்க வேண்டும் என்று தோன்றியதால், அவசர அவசரமாக நடந்தோம். பொதுப் பிரிவு, ஏ.ஸி. கோச், தன்டி எஸ் பிரிவுகளை அடைந்தோம்.

ஏறிக் கொண்ட பின் தான் மூச்சே வந்தது.

சரியான சீட்டை அடைந்து அமர்கையில்...

'கூ ஊஊஊஊஊஊஊஊ....'

ஒரு நீண்ட விசிலோடு நகரத் தொடங்கியது மின்வண்டி.

ஹிக்கின்பாதம்ஸில் ஏதும் புத்தகம் வாங்கவில்லையே என்ற குறையோடு, வேகமாக ஓடத் தொடங்கிய ஏற்காட்டின் வழியே பின்னுக்கு நகர்கின்ற சென்னையை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினேன்.

மெல்லப் புலர்கின்ற அதிகாலை ஆறு மணி அளவில் சங்ககிரி நிறுத்தம்.சங்ககிரி நிறுத்தம்.பால்மடை ஈஸ்வரன் கோயில்.பால்மடை நல்லபுள்ளி அம்மன் கோயில்.

காவல் தெய்வத்தின் புரவி வாகனங்கள்.


சப்த கன்னிமார்.திருக்கோயிலின் அருகில் உள்ள வயற்காடுகள்.திருவிளக்கு.


மலைக்கோயிலை நோக்கிப் நடைப்பயணம் தொடங்கியது.ஆரம்பத்தில் காணும் சித்தர் மருத்துவ மடம்.பாறைகளின் மேல் ஏறிச் செல்கின்ற படிக்கட்டுகளின் அணிவரிசை.நாகராஜா.


பாதி வழியில் வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கையில் பார்த்த நகரின் பறவைப் பார்வை.


பாறையில் பொறித்த பாம்புப் படம்.


'இதோ நெருங்கி விட்டோம்' என்று நம்பிக்கை ஊட்டுகின்ற இளைப்பறல் மண்டபங்கள்.


திருக்கோயிலின் ஒரு வாசல்.


மண்டபத்தின் சில தூண்கள்.


ஒற்றைக் கால் தவம் புரியும் பரசுராம முனிவர்.


திருக்கோயிலின் ஒரு வாயில் வழி.


ஆஞ்சநேயர் கோயில் செல்லும் வழியில் இருந்து கோயிலின் ஒரு பார்வை.


தென்னாடுடைய சிவனே போற்றி..!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!