Showing posts with label குறுநாவல்.. Show all posts
Showing posts with label குறுநாவல்.. Show all posts

Thursday, March 12, 2009

ஆகாயக் கொன்றை. 1.

ஆகாயக் கொன்றை.2.
ஆகாயக் கொன்றை.3.



குளத்தின் கரையில் விதம் விதமாய்க் கற்கள் இருந்தன. சில பளிங்கு போல் பளபளப்பானவை. அலையாடும் நீர் வந்து வந்து காலகாலமும் மோதிக் கொண்டே இருக்க, வந்த பளபளப்பு அது. நுரை உரசும் கரையில் இருந்து கொஞ்சம் எட்டி நிற்கும் கற்கள் சொரசொரப்பாக இருந்தன. வெயிலின் கீறுகளைச் சுமந்திருக்கும் கோடுகளின் வழி எறும்புகள் ஊரத் தேய்ந்திருக்கும். இன்னும் காலைப் பதம் பார்க்கும் அழுத்தமாய் இடறல் கற்கள்; உருண்டையாய்ச் சில; வளைந்திருக்கும் சில. கரையோரப் பாறைகள் கரடுமுரடுப்படுத்தப் பட்டிருக்கும். நன்றாக அடித்துத் துவைக்கையில் அழுக்காய்ப் பழுப்பு கரைந்து போவதற்கென்றே அவை. மேற்குக் கரையில் இருந்த படித்துறையின் அருகேயான ஒரு சரிந்த பாறை மேலிருந்து கால்களைத் தொங்கப் போட்டு அமர்ந்திருந்த அருளின் கைகளிலும் சில கற்கள் இருந்தன.

இடது கையில் இருந்து வலக்கையால் ஒவ்வொன்றாக எடுத்து வீசிக் கொண்டிருந்தான். 'தொப்ளக்...தொப்ளக்' என்று நீரை முத்தமிட்டு அவை மூழ்கின. நனைந்த புள்ளியில் இருந்து கிளம்பும் குறுக்கலைகள் எழும்பி எழும்பித் தளும்பித் தளும்பிக் கரையில் முட்டிய பெருவட்டமாய் உடைந்தன. கட்டை விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் நடு விரலுக்கும் இடையில் வசமாய் ஒரு பழுப்புக் கல்லைப் பிடித்துக் கையைப் பின்னிக்கிழுத்து, உடலை வாகாக்கி, குனிந்து ஒரு விசிறு விசிறினான். அது தண்ணீரின் மேல் நேர்கோட்டில் தவளைக் குதியல்கள் போட்டு, முதலைப் பாறையில் போய் மோதி, இடித்து, வெடித்து, துகள்களாய் வெடித்து, ஜலசமாதிகள் ஆகியது.

இன்னும் கற்களைத் தேடிக் குனிந்து பார்க்கும் போது தான் கவனித்தான். கொன்றை மரத்தின் கிளைகளில் மஞ்சள் பூக்கள் அவசரமாகப் பூக்கத் தொடங்கியிருப்பதன் பிம்பங்கள் கலைந்து கொண்டிருந்த குளத்தின் முகத்தின் மேல் விழுந்து அசைந்து கொண்டேயிருந்ததை! அசுத்தமாய் இல்லாத பரிபூர்ண, பரிசுத்த மஞ்சள் நிற மலர்கள். கொன்றைப் பூக்களைத் தான் கற்புள்ள மஞ்சள் என்று சொல்ல வேண்டும். மற்ற மஞ்சள் பூசிய பூக்களெல்லாம் சிவப்பு தின்ற அல்லது ஆரஞ்சைப் போர்த்திக் கொண்ட கள்ள மஞ்சள்கள்.

மேலைக்காற்று வீசத் தொடங்கியிருந்தது. அடிவாரத்தில் இருந்து குளிரைச் சுமந்து வந்த காற்று கிளைகளின் இடுக்குகளில் எல்லாம் புகுந்து புறப்பட்டது. இலைகள் எல்லாம் சலசலத்தன. செடிகளும், அவற்றின் கொண்டைகளில் ஒய்யாரமாய் உட்கார்ந்திருந்த பலவர்ணப் பூக்களெல்லாம் 'லபோ..திபோ..' என்று தலையாட்டின; உடலாட்டின. குளத்தின் மேனி மீதே இறக்கைகளால் மிதந்து கொண்டிருந்த வெள்ளை நாரைகளும் விசுக்கென்று வேறு திசையில் திரும்பி உற்சாகமாய்ப் பறந்தன. வடக்குப் படித்துறையில் அமர்ந்து சிவப்புக் கதர் துண்டால் வெற்று முதுகைத் தேய்த்துக் கொண்டிருந்தவர்கள் சிலிர்த்தார்கள்.

தண்ணீர்ப் பாம்பு போல் நீண்டு வளர்ந்திருந்த கொன்றைப் பழம் ஒன்று சதிராடியது; மரத்தின் அடிக்கிளையில் ஒரு காலை ஊன்றி எம்பி, அதைப் பறித்தே விட்டான். காற்றுக்கு மரத்தில் இருந்து பிரிந்து வந்த பூச்சரம் குளத்தின் மேல் விழுவதற்கு முன், பூ கசங்காமல் பிடித்தான். காயத்ரியிடம் காட்டுவதற்காக கோயிலை நோக்கி ஓடினான்.

குளத்திலிருந்தும், மரத்திலிருந்தும் இருநூறு அடி தொலைவில் கோயில் அமைந்திருந்தது. சிவன் கோயில். சின்ன கோயில். சிங்கிள் ரூமில் சிவன் அடைபட்டிருக்க, மாடம் போல இருபுறமும் பிள்ளைகள் அமர்ந்தும் நின்றும் இருக்க, மூஞ்சூறும், மயிலும் வெயிலிலும் மழையிலும் நனைய, நந்திபெருமானுக்கு மட்டும் ஒரு குடை. சுற்றுச்சுவர் ஏதும் இல்லாமல், சீந்துவார் யாரும் இல்லாமல், சுவர் பெயர்ந்த செங்கல் பற்கள் காட்டும் கிணறும், சரிந்த வில்வ மரமும், பெயர் தெரியா சின்னஞ்சிறு செடிகளும், கொடிகளும், கசமுசா கூட்டணியில் மரங்களுமாய் காலத்தோடு ஓடிக் கொண்டிருந்த கோயிலில் மாதமிரண்டு பிரதோஷங்களின் போது மட்டும் கொஞ்சம் கூட்டம் கூடுவதும், மற்ற நேரங்களில் துடிதுடிக்கும் மண் விளக்குகளின் ஒற்றைத் திரி வெளிச்சங்களில் உற்றுப் பார்த்தால் தெரியும் 'உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவனுக்கு' சந்தி கால பூஜை செய்து கொண்டிருந்தார் ஈஸ்வர ஐயர்.

குளிர் தாங்கும் செம்போர்வையை இடுப்பில் கட்டியிருந்தார். முகம் பளபளத்தது. நெற்றியில் புதிதாக அப்பியிருந்த பட்டைத் திருநீர் வெம்மை வியர்வையால் கசங்கியிருந்தது. வெள்ளை முடிகள் தாடியாய், முகமெங்கும் முட்களாய் முளைத்திருந்தன. பூணூல் கருவறை வாசம் ஏறியிருந்தது. வில்வ மாலை போட்டிருந்த சிவன் கற்பூர தகதகப்பில் நனைந்து கொண்டிருந்தார். வெண்கல மணியின் சத்ததோடு இசையாமல் அதுபாட்டுக்குத் தன் முனைப்பில் சப்தம் எழுப்பிக் கொண்டிருந்தது, கிணற்றில் சகடை ஓடும் ஒலி.

காயத்ரியின் கைகளில் இருந்து அவசர அவசரமாக ஈர்ப்பு விசை இழுக்க கிணற்றுக்குள் இறங்கிக் கொண்டிருந்தது அரை வட்ட கைப்பிடியில் கயிறு கட்டிய பக்கெட். ஓடி வந்த அருள் கிணற்றின் திட்டில் இரண்டு கைகளையும் ஊன்றி அழுத்திக் கொண்டு கொஞ்சம் எம்பி உள்ளே எட்டிப் பார்த்தான். அவள் சிரித்தாள்.

அவனுக்குக் கிணற்றுக்குள் பார்ப்பது பிடிக்கும். வட்டமான அதன் ஆழ வாய்க்குள் சலசலத்துக் கொண்டேயிருக்கும் கரும்பச்சை நீர் பிடிக்கும்; ஓரங்கள் முழுதும் எப்போதும் ஈரவாசத்தில் படர்ந்திருக்கும் பாசிகள் பிடிக்கும்; சகடை உருளுகின்ற 'கடகட' ஓசை பிடிக்கும்; குடை போல் அந்தரத்தில் பரவியிருக்கும் வேப்ப மர இலைகள் விழ, காற்றில் சுழன்று சுழன்று போய் மிதக்கும் காட்சி பிடிக்கும்; பக்கெட்டில் நீரை மொள்ளும் போது, அது அங்கே இங்கே ஆடிக் கொண்டே வருவதும், சமயங்களில் கிணற்றுப் பக்கங்களில் இடிப்பதும், அதன் அடிவாரத் துளையின் வழியாக தீர்ந்து கொண்டே வரும் நீர் கோட்டோவியங்கள் வரைந்து கொண்டே வருவதும் பிடிக்கும்.

கிணற்றின் வாய்க்கு வந்து தள்ளாடிய பக்கெட்டை இடது கையால் பிடித்து, திட்டின் மேல் வைத்தாள்.

"அக்கா...! அக்கா..! மஞ்சப்பூ..!" விரல்களைப் பிரித்துக் காட்டினான். "உன்ன மாதிரியே அழகா இருக்கு..!"

காயத்ரி புன்னகைத்தாள். பொன் மஞ்சள் நிறம் தான் காயத்ரி. லேசாக அழுத்தித் தொட நினைத்தாலே சிவந்து போகும் தேகப் பொலிவு. பளபளக்கும் கண்கள். ஏதோ சொல்ல முடியாத ஒளி அவள் கண்களில் மின்னியது. கட்டான உடல். சலிக்காத உழைப்பால் அமைந்த ஜில்லென்ற வில்லென்ற உடல். பறபறக்கின்ற கூந்தல். இளமையின் செழுமையான வனவனப்பு. ஏழ்மையின் ஏளனப்பூச்சு மேலே பூசியிருந்தாலும், ஒரு ஜ்வலிப்பு அவளைச் சுற்றிலும் ஜொலிஜொலித்துக் கொண்டிருக்கும். தான் அழகாய் இருப்பதை உணராத ஒரு அறியாமை அவளுக்கு மேலும் உண்மையின் எழிலைக் கூட்டியிருந்தது.

பூக்கற்றையை வாங்கிப் பார்த்தாள்.அருள் அவளையும் பூக்களையும் மாறி மாறிப் பார்த்தான்.

"எப்படிடா பறிச்சே..? கிட்டக்கவே இருந்துச்சா..?" வெளிர் ரோஸ் நிற தாவணியால் கைகளைத் துடைத்தாள்.

காயத்ரியின் குரலைப் பற்றிச் சொல்லவேயில்லை அல்லவா..? கல்கண்டை எடுத்துக் கொள்ளுங்கள். உடைத்து கண்ணாடித்துகள்கள் போல் தூள்களாக்குங்கள். பச்சைக் கற்பூரம் எடுத்து, அந்த வாசத்தை மட்டும் உருவிக் கொண்டு வந்து, பன்னீரில் கலந்து, கல்கண்டுப் பொடிகளைக் கரைத்து சாருகேசி ராகத்தில் ஒரு 'ச..ரி..க..' போட்டால் எப்படி இருக்கும்..? அப்படி ஒரு சுகந்த குளிர்க் குரல்.

"இல்லக்கா..! மேல தான் வந்திருந்திச்சு..! எட்டிப் பறிச்சுட்டேன். பழம் ஒண்ணு கொண்டு வந்திருக்கேன். பார்த்தியா..?" பழத்தையும் காட்டினான்.

"அத தூக்கிப் போட்டிடு..! அதோட விதை எல்லாம் விஷம்..!" சொன்னதுடன் அவளே வாங்கி அதனை தூரமாக வீசியெறிந்தாள்.

"என்னம்மா..? என்ன சொல்றான் தம்பி..?" சிவப்புப் போர்வையால் போர்த்திக் கொண்டே வந்தார் ஈஸ்வர ஐயர். மேற்குத் திசையில் பார்த்தார்."மழ வர்றாப்ல இருக்கு. சீக்கிரம் ஆத்துக்குப் போயிடணும்.."

"ஒண்ணும் இல்லப்பா..! கொன்றைப் பூவக் காட்டி என்ன போல் அழகாயிருக்குன்றான்..!"

"அதிலென்னம்மா சந்தேகம்..! எம் பொண்ணு அழகு தான்! அப்சரஸ் மாதிரி..! ரம்பை மாதிரி.." என்றவரின் குரலில் பெருமை ஒலித்தது. அதன் அடியில் கொஞ்சம் கவலையும் தொனித்தது.

"போங்கப்பா..! நீங்களும் இவன் கூடச் சேர்ந்துண்டு கிண்டல் பண்றீங்க...!" என்றவாறே பக்கெட்டைக் கிணற்றுக் கயிற்றின் பிடியிலிருந்து விடுவித்து, கொஞ்சம் தள்ளி இருந்த செம்பருத்திப்பூ, நந்தியாவட்டை, நாகப்பூ, கனகாம்பரம், மல்லிகைப் பூக்களுக்கெல்லாம் ஊற்ற ஆரம்பித்தாள்.

கோயிலுக்கு யாரும் அவ்வளவாக வருவதில்லை என்பதால், பூச்செடிகள் பிடுங்குவார் தொல்லையின்றி கலகலப்பாக இருந்தன. இந்த தோட்டம் காயத்ரியே அமைத்தது. பள்ளி சென்ற நாட்களில் இருந்து அவளே இதை உருவாக்கினாள். தேவி, சவுந்தர்யா, அழகுமணி... எல்லோர் வீட்டில் இருந்தும் வாங்கிக் கொண்டு வந்த செடிகள் வளர்ந்து, கிளைத்து, பல்கிப் பெருகிக் குடும்பமாகி அவளது சுதந்திரத் தோட்டமாக வளர்ந்திருந்தது. அவளுக்கு நெருங்கின தோழியும் இவையே!

தனியாக வந்து பேசுவாள். ஒவ்வொரு செடிக்கும் பெயர் வைத்திருக்கிறாள். சில டீச்சர் பெயர்கள். சில தோழிகள் பெயர்கள். ஒரே ஒரு கனகாம்பரம் செடிக்கு அவள் அம்மா பெயர் வைத்திருக்கிறாள். ரொம்ப மனம் கஷ்டமாக இருக்கும் போது 'பார்வதிம்மா' என்று தடவித் தடவிப் பேசுவாள்.

"ஏம்மா..! மழ வர்ற மாதிரி இருக்கு..? இப்ப போய் தண்ணி ஊத்தறியே..?"

"இல்லப்பா..! என்ன தான் மழ வந்தாலும், நான் தண்ணி ஊத்தினாத் தான் குடிப்பேன்னு என்கிட்ட சொல்லியிருக்காங்க இவங்க எல்லாம்..!" என்று சிரித்தவாறே சொல்லி, மீண்டும் கிணற்றுத் திட்டுக்கு வந்தாள்.

தூறல் விழ ஆரம்பித்தது. இருள் கவ்வ ஆரம்பித்தது. பூவை வாங்கி வைத்திருந்த அருள் நிமிர்ந்து வானத்தைப் பார்த்தான். நேராக அவன் கண்களுக்குளேயே சில மழைத்துளிகள் பாய, 'சிமிட்'டென்று கண்களை மூடிக் கொண்டான்.

"அக்கா.! மழ வருதுக்கா..! போலாங்கா..! அம்மா தேடுவா..!"

"ஆமாம்மா..! ஆத்துக்குப் போகவே பதினஞ்சு நிமிஷம் ஆகிடும்..! போதும்மா தண்ணி ஊத்தறது. அதான் மழயே வர்றதே..!"

"சரிப்பா..!"

அவர் பாதையின் மரத்தடியில் சென்று நிற்க, காயத்ரி பக்கெட்டைக் கழட்டி, சிவன் கோயின் பின்புறம் சென்று வைத்தாள். அருளும் அவளும் முன்வந்து, கருவறைக் கதவின் முன் வந்து கொஞ்ச நேரம் கும்பிட்டு விட்டு, சரியாகப் பூட்டி இருக்கிறதா என்று பார்த்து, அவருடன் சேர்ந்து நடக்க ஆரம்பிக்கும் போது, மேற்கில் நின்றிருந்த மலையின் மேல் ஒரு மின்னல் வெட்டியதைப் பார்த்தார்கள். அவசர அவசரமாகக் காதுகளைப் பொத்திக் கொண்டு 'அர்ஜுனா.. அர்ஜூனா' என்று சத்தமாகச் சொல்ல, அவர்களது வேண்டுதலைக் கண்டு கொள்ளாது பெருத்த ஒலியோடு இடிகள் இரைய, பிள்ளையார் கோயிலின் விளக்குச் சுடர் நடுங்கியது.

ருக்குள் மழை நன்றாகப் பெய்து கொண்டிருந்தது. எல்லாக் கடைகளின் முன் டேபிள்களும் பெட்ரோமாக்ஸ் புகை வெளிச்சத்தில் உயிர்த்திருந்தன. டீக்கடைகள் பாலிதீன் கவர் தொப்பிகள் நீட்டிக் கொண்டிருக்க, சூடான பஜ்ஜி வியாபாரங்கள் நடந்து கொண்டிருந்தன. சாலையின் புழுதிகள் செம்மையாய்க் கலந்து, கரைந்து ஓரச் சாக்கடை தேடி சரிந்து ஓடின. அவ்வப்போது கடக்கும் நனைந்த ஒளிக் கோடுகள் சாலையை கண வெளிச்சப்படுத்த, மீண்டும் மீண்டும் இருள் கவ்வியது. தகரக் கூரைகள் 'சடசட' வென சலிப்பேயின்றி அடித்துக் கொண்டேயிருந்தன.

எம்.எஸ்.கே. டீ, காபி பாரில் சதுரக் கிழிசல் தினத்தந்திகள் எண்ணெயில் ஊற ஊற கைமாறிக் கொண்டிருந்தன. உள்லே அரசியல்கள் கிழிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. லிங்கம் தான் முதலில் கவனித்தார்.

"அய்யிரே..! வாங்க..! டீ சாபிட்டுட்டுப் போங்க..! அய்யருக்கு ஸ்ட்ராங்கா ஒரு டீ போடு. பொண்ணுக்கும் சேர்த்து. அது யாரு கூட..? நல்லசாமி பையனா..?"

ஒற்றைக் குடைக்குள் ஒண்டிக் கொண்டு வந்தாலும், அவ்வப்போது காயத்ரியும், அருளும் வட்டக் கட்டுப்பாட்டுக் கோட்டை மீறி மழைக்குள் சென்று விளையாடி விட்டும், நீர்த் துளிகளைச் சேகரித்து ஒருவர் மேல் ஒருவர் வீசிக் கொண்டே வருவதுமாய் இருந்ததால், நன்றாகவே நனைந்திருந்தனர். குரல் கேட்டு நிற்க, அவள் மேல் அத்தனை பார்வைகளும் பதிய, லிங்கத்தின் பார்வையில் கூடுதல் வெப்பம்.

"இல்லப்பா..! ஒண்ணும் வேண்டாம்..."

"அட.. சொம்மா வா அய்யிரே..! ஏண்டா மணி, டீயில எதுனா கறித்துண்டு போடறியா என்ன..?.."

மணி என்றழைக்கப்பட்டவர் கை பனியன் போட்டிருந்தார். லுங்கியை மடித்துக் கட்டியிருக்க, கொஞ்சம் பல் வெளியே எடுப்பாகத் தெரிய, சுருண்டிருந்த தலைமுடி விலகி விலகி ஆட, சிரித்தார். லிங்கம் புதிதாக அந்தப் அந்தப்பகுதிகளில் உருவாகியிருந்த கட்சியின் பகுதிச் செயலாளராக வருவார் என்று எதிர்பார்க்கப்படும் ஆள். கட்சிக்காரர் என்றதும் ஒரு தனி அவசர மரியாதை கிடைத்து விடுகிறது எங்கும்!

"என்ன கொஞ்சம் ஈ, எறும்பு மெதக்கும். தட்டிப் போட்டுட்டு குடிங்க அய்யிரே..!" வார்த்தைகள் அவரை நோக்கி இருந்தாலும், கண்கள் அவளை நோக்கி அலைபாய்ந்தன. அவள் இப்போது அப்பாவின் பின் ஒண்டிக் கொண்டிருந்தாள்.

"அம்மா..! நீயும் அருளும் ஆத்துக்குப் போங்கோ. அவன் அம்மா தேடுவாங்க. இந்தா இந்த கொட எடுத்திண்டு போங்கோ. நான் இங்க கடயில இருந்திண்டு மழ நின்னாப்ல வர்றன்..!" என்று குடையைக் கொடுத்தார். அவர்கள் இருவரும் வாங்கிக் கொண்டு விலக, எதிரிப்பார்வை பார்த்தான் லிங்கம்.

ரோட்டின் ஓரங்களாகவே இருவரும் சென்றனர். குடைக் கம்பிகளில் இருந்து அருவியின் மெல்லிய நகலாய் மழைத்தாரைகள் ஊற்றிக் கொண்டேயிருந்தன. கைகளை நீட்டி நீட்டி உள்ளங்கையில் பிறந்த சிதறல்களைத் தெறித்தனர்.

"அக்கா..! குளிருதுக்கா..!"

"எனக்கும் தான்..! ஆத்துக்குப் போனவுடனே உங்க அம்மாகிட்ட சொல்லி ஆவி பிடி, என்னா..?"

"நீ என்னக்கா பண்ணுவ..?"

"எனக்குத் தான் அம்மா இல்லியே..! நானே தான் சூடான ஜலம் வெச்சி குடிக்கணும்..!"

"உங்க அம்மா எங்க அக்கா போயிருக்காங்க..?"

"ம்....! எனக்கும் தெரியாதுடா..! சின்ன வயசுல அப்பா சொல்லியிருக்கா..! நான் பிறந்ததை பாட்டிகிட்ட சொல்லப் போயிருக்கான்னு..! அப்புறம் எனக்குப் புரிஞ்சுடுத்து..!"

"என்ன..?"

"ஷ்..! அதெல்லாம் உனக்கு சொல்ல மாட்டேன்..!"

"போக்கா...! என்கிட்ட சொல்ல மாட்டியா..? உன் கூட டூ..!!" பொய்க் கோபத்தில் திரும்பிக் கொண்டவனை சமாதானப் படுத்த,

"சரி..! உங்க அப்பா உனக்கு சைக்கிள் வாங்கித் தர்றேன்னு சொல்லி இருக்கார்ல..? எப்ப சைக்கிள் வரும்..?"

சைக்கிள் ஞாபகம் வந்தவுடன் கோபம் மறந்தவன்,

"க்வார்ட்டர்லி முடிஞ்சப்பறம் வாங்கித் தர்றேன்னு சொல்லி இருக்கார்.."

"என்ன மாடல் வாங்கப் போற..?"

"நெறய ப்ராண்ட் இருக்கு. எத வாங்கறதுன்னு தெரியல..! எல்லாத்துலயும் ஒண்ணொண்ணு வாங்கி வாசல்ல நிக்க வெக்கணும்னு ஆசயா இருக்குக்கா..!"

அதற்குள் மழையும் கொஞ்சம் குறைந்து தூறல்களாய்த் தன்னைக் குறுக்கிக் கொண்டிருக்க, விலகிப் போயிருந்த மின்சாரம் வெள்ளமென மீண்டும் பாய்ந்து எலெக்ட்ரான் அதிசயங்கள் ஒளிர்ந்தன.

"அருள்..! வா, அந்த சைக்கிள் கடைக்குப் போய் மாடல் பார்ப்போமா..?"

ஆர்வமடைந்த அருள், "சரிக்கா..!"

மம்மி & டாடி சைக்கிள் கடை போர்டு டயர்களாகத் தொங்க விட்டிருந்தது.

ஸ்டாண்டுகளில் சாய்ந்து குதிரைகள் போல் பல உயரங்களில் சைக்கிள்கள் நின்று கொண்டிருந்தன. பாப்பா சைக்கிள்கள் காதைப் பிடித்துத் தூக்கிய முகங்கள் போல் கம்பி கட்டி காற்றில் ஆடின. ப்ளாஸ்டிக் கவர்கள் சரசரக்கும் புது டயர்கள், ட்யூப் லைட்கள் கிடந்தன. பால் பேரிங்குகள், ட்யூப் வாசர்கள் நிரம்பிய டேபிள் முன் உட்கார்ந்திருந்தார் பலராமன்.

"அடடே..! அய்யிரு பொண்ணா..? வாம்மா..! என்ன சைக்கிள் வாங்க வந்தியா..? கூட... அட அருள் தம்பி..! உனக்கு சைக்கிள் சொல்லிட்டுப் போயிருக்காரு உங்கப்பாரு. உன்கிட்ட சொல்ல வேணாம்னு சொன்னாரு. பரவால்ல. மாட்ல எதுனா பாக்கறியா..?"

"அக்கா..! நீயும் வாக்கா..!" என்று அவள் கைப்பிடித்து இழுத்தான்.

"நீ போய்ப் பாருடா..! நான் இங்கயே நிக்கறேன்..!" கைகளைக் கட்டிக் கொண்டு வாசல் படிக்கட்டுகளிலேயே நின்று கொண்டாள். குடையை மடக்கி விட்டு சுற்றிப் பார்த்தாள். கடை முதலாளி ஏதோ கணக்குகளில் ஆழ்ந்து விட, அருள் உள்ளே சென்று ஒவ்வொரு சைக்கிளாக ப்ரேக், 'ட்ரிங்...ட்ரிங்..', டயர்கள், சீட், லோகோக்கள் எல்லாம் செக் செய்து கொண்டிருக்க...

துரை சைக்கிள் ஷாப் என்று ஓரங்களில் துருப்பிடித்திருந்த போர்டின் மேல் ஒற்றை குண்டு பல்பு ஒன்று சரிந்திருந்தது. வயதான சைக்கிள்கள் ஓர் ஓரமாய்ச் சரிந்திருந்தன. எட்டுக்கு பத்து அறையில் சில அடுக்குகள் இருந்தன. ஏதோ ஒரு கெமிக்கல் வாசம் வந்தது. அங்கங்கே கரி பிடித்திருந்தது. வாசலில் ஒரு மண்ணள்ளும் தகரத் தட்டில் நீர் நிரம்பியிருக்க, அதன் அடியில் கருப்பாய் சில பொடிகள் ஆழ்ந்திருந்தன. டயரிழந்த சைக்கிள் ஒன்று செயின் மூலம் தூக்கி நிறுத்தப்பட்டிருக்க, அதன் ட்யூப் ஒன்றை தண்ணீருக்குள் அழுத்திப் பிடித்து புஸ் புஸ் மூச்சு வெளிப்பாட்டுப் புள்ளியைக் கைகளால் தேடிக் கொண்டே சுற்றிய சரவணன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

'ஷ்..! அப்படி எல்லாம் பார்த்துண்டே இருக்கக் கூடாது..'

'அப்படி தான் பார்ப்பேன்..! சரி, அடுத்து எப்ப பேசறது...?'

'அடிக்கடி எல்லாம் பேசக் கூடாது. எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான்..'

'செவ்வாக்கிழம டவுனுக்கு வர்றேன். அங்க படத்துக்குப் போலாமா..?'

'ஆசய பாரு! காலேஜ் முடிஞ்சு ஆத்துக்கு வரணும். இது அப்பாவோட ஆர்டர்..'

'மாமாவ....! அவர பழி வாங்க ஒரு ஐடியா வெச்சிருக்கேன்..'

'என்ன..?'

'உங்க கல்யாணத்துல தலயில அப்பளம் உடைப்பீங்க இல்ல..! அப்ப நான் கண்டிசனா சொல்லிடப் போறேன். 'இதப் பாருங்க மாமா..! எனக்கு நம்ம ஊரு அப்பளம் எல்லாம் பத்தாது. ஊர்ப் பண்டிகைக்கு வடக்குல இருந்து டெண்ட் அடிச்சு வருவாங்க இல்ல..? அவங்க செஞ்சு தர்ற டெல்லி அப்பளம் தான் வேணும். டெல்லிக்குப் போய் வாங்கிட்டு வாங்க'னு சொல்லிடுவேன்.'

"என்னம்மா..? தனியா சிரிச்சுக்கிட்டு இருக்க..?" பலராமன் கேட்க,

"ஒண்ணுமில்லங்க.."

'பாரு..! உன்னால எல்லாரும் வேடிக்க பாக்கற மாதிரி ஆயிட்டுது..! நீ அப்டி சொன்னா, நான் என்ன சொல்லுவேன் தெரியுமா..?'

'என்ன சொல்லுவ..?'

'இந்த மாதிரி, 'அப்பா..! மாப்பிள்ளைய காசி யாத்திரைக்கு அனுப்புவோம் இல்லியா..? காசியில இருந்து டெல்லி பக்கம் தான். அப்படியே போய் வாங்கிட்டு வரச் சொல்லுங்கோ'ம்பேன்..'

'அடிப்பாவி..!'

"அக்கா..! அக்கா..!" அவள் கைகளைப் பிடித்து உதறினான் அருள். சட்டென தெளிந்த அவள்,

"என்னடா போலாமா..?"

"அந்த சைக்கிள் எப்படி இருக்குன்னு வந்து பார்த்துச் சொல்லு..!" பிடித்து இழுத்தான்.

"உனக்குப் பிடிச்சிருந்தா சரிடா..! வா, வீட்டுக்குப் போலாம். நாழியாயிட்டுது..! வர்றோம் சார்..!"

இருவரும் கடையிலிருந்து விலகி நடக்க ஆரம்பித்தனர். கொஞ்ச தூரம் சென்றவுடன், காயத்ரி திரும்பி சரவணனைப் பார்த்தாள். அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். லேசாக டாட்டா காட்டினாள். அவனும்!

யதேச்சையாக திரும்பிப் பார்த்தான் அருள். மஞ்சள் பெட்ரோமாக்ஸ் வெளிச்சங்கள் குறைந்து, எல்லைகளில் கருப்பு பிடித்திருந்த ட்யூப் லைட்டின் கீழ் அமர்ந்திருந்த சரவணன் அணிந்திருந்த சட்டையின் நீலம், மாலையில் கோயில் குளத்தில் அவன் கண்ட வானத்தின் பிம்ப நிறம் போலவே இருந்தது.

-தொடரும்.

Friday, April 25, 2008

எனவே, நான், வேண்டாம். - 1.

Chapter 2.
Chapter 3.
Chapter 4.
Chapter 5.

***

நான் சந்த்ரு.

வெள்ளி இரவு ஸ்ப்ளெண்டரை எடுத்துக் கொண்டு, ஈ.சி.ஆர் ரோட்டில் வேகமாய்ப் பறந்து, பாண்டியில் சரக்கடித்து, பின்னிரவில் வீட்டுக்கு வந்து தூங்கி, சனி அரைநாளில் எழுந்து, இரவு டாஸ்மாக் சரக்குகளை மிக்ஸ் செய்து அடித்து விட்டு, ஞாயிறு எப்படிப் போகின்றது என்றே தெரியாமல் போய், ஸ்பென்ஸரிலோ, அல்சா மாலிலோ, சிட்டி சென்டரிலோ. இஸ்ஃபானியிலேயோ கூட்டத்தில் கலந்து, அடுத்த நாள் காலை எலெக்ட்ரான் எழுத்துக்களைப் பீச்சியடிக்கும் எந்திரத்தின் முன் தொலைந்து போகும் கணிப்பொறி அடிமைகளில் ஓர் இந்தியப் பிரஜை நீங்கள் என்றால், நான் உங்களால் புரிந்து கொள்ளப்படுவேன்.

இது என்னைப் பற்றிய கதை அல்ல.

என்னைப் பற்றியும் சொல்லிக் கொள்ள சில பத்திகள் உள்ளன. மீ இளம் வயதில் மெரீனா அலைகளில் தொலைந்து போக இருந்தது, கிராமத்துக்குச் சென்ற ஒரு மாத லீவில் கிணற்றில் இருந்து வரிசையாக எடுக்கப்பட்ட ஒரு குடும்பப் பிணங்கள், காலேஜின் சிம்லா டூரில், ஓர் இரவின் குளிருக்கு கம்பளிப் போர்வையின் உள் சூடு ஏற்றிக் கொண்ட லாட்ஜ் இரவு...

இது அழகர்சாமி பற்றிய கதை.

அ.சாமி யார்? சொல்கிறேன். எங்கும் போகப் போவதில்லை நான். இன்று லீவ் சொல்லி விட்டேன். எதற்கு? உங்களுக்கு இந்தக் கதை சொல்ல. அவ்வளவு அவசரமா? ஆம். ஏன்? தெரியவில்லை. சொல்லி விடுகிறேன். அழகர்சாமி என் வாழ்வில் வந்தது முதல், அவனுக்கு இருந்த நோயை நான் கண்டறிந்தது, (நோய் என்று சொல்லலாமா, Mental Disorder எனலாம். நன்றி : விக்கிபீடியா.), அவன் இப்போது அடைந்துள்ள நிலைமை...! அனைத்தும் சொல்கிறேன். சென்னைக்குப் போக 6 மணி நேரம் ஆகும். அதுவும் பெங்களூரின் தெருவின் கோலிக் குண்டு ட்ராஃபிக்கில் இருந்து மீண்டு...!

அழகர்சாமி மதுரையில் இருந்து வந்தவன். கேட்டால் அப்படித் தான் சொல்லுவான். 'எனக்கும் மதுரை தெரியும். தெற்கு மாசி வீதியில், கல்யாணி கவரிங் ஒட்டிய சந்தில் தான் என் நண்பன் சந்திரசேகரன் வீடு என்று சொல்லுங்கள். உடனே சினேகமாவான். பின் சொந்த ஊர் மானாமதுரை என்பான். அங்கே எந்த மாசி வீதியையும், எந்த சுந்தரபாண்டியனையும், சொக்கநாதனையும் தெரியாததால், நான் அதற்கு மேல் வற்புறுத்திக் கேட்கவில்லை. உங்களுக்குத் தெரிந்தால், நீங்கள் கேட்டுப் பார்க்கலாம். கூட வருகிறீர்கள் தானே? நல்லது.

சென்னையின் அழுக்கான வடபழனி டிப்போ பின்புறம் உள்ள முத்தம்மாள் காலனியின் அடுக்கு வீடுகளில் பிறந்து வாழும் சந்த்ருவுக்கும், மதுரை தந்த மாணிக்கம் அழகர்சாமிக்கும் எப்படி தொடர்பு?

இந்த இடத்தில் என் வேலையைப் பற்றி சொல்லி விடுவது அவசியமாகிறது. வேளச்சேரியின் இடுக்குகளில் உள்ள ஓர் 'அழைப்பு மையத்தில்' பணியாற்றுகிறேன். Call Center என்று சொன்னால் என் மேல் தார் பூசவும், எனது கொடும்பாவி எரிக்கவும் சிலர் எப்போதும் தயாராக இருப்பதாக தகவல்!

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஒரு Customer Products கம்பெனியின் Customer Support Division, இந்த Call Center -உடன் ஓர் ஒப்பந்தம்! அவர்களது மைக்ரோ அவன், ஃபிரிட்ஜ், குண்டூசி, பின்னூக்கு, காண்டம் வரைக்கும் ஸப்போர்ட் செய்கிறோம்.

உதாரணத்திற்கு சில கஸ்டமர் Queries -ம், அதற்கு எங்கள் Solutions -ம் என்று சொல்லி, உடனடியாக இந்தக் கதைக்கு A முத்திரை குத்திக் கொள்ள நான் விரும்பவில்லை.

ழகர்சாமியை ஒரு சாதாரண நாளில் - எந்த ராக்கெட்டும் ஏவப்படவில்லை, இந்திய அணி ஜெயிக்கவில்லை, மின்சாரம் தடையின்றிப் பாயவில்லை, காற்று ஒலிப்பான்களை நகர எல்லையில் உபயோகிக்காமல் இல்லை - மிகச் சாதாரண நாளில் சந்தித்தேன். எங்கே? என் அலுவலகத்தின் வாசலில்! பூப்போட்ட பிளாஸ்டிக் பேக், நீலம் பரவிய ஒரு ஃபுல் ஹேண்ட் சட்டை, ஒட்டிய உடலோடு, இறுக்கப் பிடித்த பழுப்பு பேண்ட், கண்டக்டர் ஷூ, நகரத்தின் பிரம்மாண்ட வெளிச்சப் புள்ளிகளை, வெறியோடு ஓடும் பெட்ரோல் பூச்சிகளையும் வியந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

"யார் நீங்க? இங்க என்ன பண்றீங்க..?" கேட்டேன்.

மிரண்டான். எனது அலங்காரம் அவனுக்கு கொஞ்சம் பயத்தைத் தந்திருக்க வேண்டும். பளிச்சென்ற ஷேவ் செய்த முகம், இன் செய்த அயர்ன்ட் மெரூன் ப்ளெய்ன் ஷர்ட், ரோஸ் நிற பக்கிள் இறுக்கத்தில் ஹோலோகிராம் மின்னலில் பெல்ட், பேண்ட், கட் ஷூ என்றதோடு இல்லாமல், அலுவலகத்தின் நாய்ப் பட்டையும் அணிந்து, நகரத் திமிர் திகழும் 21-ம் நூற்றாண்டின் நாகரீக வேலைக்காரனைக் காணும் கிராமத்தானின் மிரட்சியை அட்சர சுத்தமாகக் காட்டினான்.

"சார்! நான் இங்க வேலைக்கு இண்டர்வ்யூக்கு வந்தேன்! கிடைக்கல! அதான் என்ன பண்றதுன்னு தெரியாம நிக்கறேன்!"

"ஊருக்கு கிளம்ப வேண்டியது தான்! வேறென்ன செய்றது? எந்த ஊர் நீ?" வேலை இல்லாதவன் என்றதும் திமிர் எகிறியது. 7 பாராக்களுக்கு முன் படித்துப் பாருங்கள் தயவு செய்து! அந்த பதிலைத் தான் சொன்னான். எனக்குப் பாவமாக இருந்தது.

"விவசாயம் இல்லை! நெலம் எல்லாம் காஞ்சு போச்சு! ஊருல என்ன சார் இருக்கு இனிமேல! ஒண்ணும் இல்ல! ஏதோ கொஞ்சம் படிச்சிருக்கேன்! அமெரிக்கன் காலேஜ்! பி.ஏ., ஹிஸ்டரி! எதுவும் வேலை கிடைக்கல! மெட்ராஸ்ல கால் சென்டர்ல தான் கொத்துக் கொத்தா ஆள் எடுக்கறதா கேள்விப்பட்டேன். அதனால தான் இங்க வந்தேன்! வேலை கெடைக்காம ஊருக்குப் போனா... அது மரியாதையா இருக்காது சார்!" என்றான்.

எனக்கு கொஞ்சம் பரிதாபமாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்தது. இது போன்ற வாழ்க்கை தேடி கிராமத்தில் இருந்து வருபவனுக்கு உதவி செய்வதன் மூலம், நானும் சமூக அக்கறை உள்ளவன் என்று சொறிந்து கொள்ள நினைத்தேன்.

"சரி! உனக்கு நான் ஒரு ஹெல்ப் பண்றேன்! உனக்கு வேலை கிடைக்கற வரைக்கும் என் வீட்டுல தங்கிக்கலாம். ஜாப் கிடைச்சதுக்கு அப்புறம் உன் வசதிப்படி மாறிக்கலாம். நான் இப்ப தனியா தான் இருக்கேன். பேரண்ட்ஸ் ரூர்கி போய் இருக்காங்க! அக்கா ஹஸ்பண்ட் யூனிவர்சிட்டு ப்ரொபஸர். அக்கா ப்ரெக்னன்ட். டெலிவரிக்கு ஹெல்ப் பண்ண போயிருக்காங்க! எங்கூட இருக உனக்கு ஓகேவா?"

"சார்! ரொம்ப தேங்க்ஸ் சார்!"

"உனக்கு ஊர்ல யார் இருக்கா?"

"யாரும் இல்ல சார்! ஒரே ஒரு பாட்டி மட்டும் தான்!" என்றான்.

"சந்த்ரு! அங்க என்ன பண்ணிட்டு இருக்க? ஹெட் கூப்பிடறார் பாரு!" மதி இரைந்தான்.

இவனிடம் சொல்லலாமா என்று நினைத்தேன். சட்டென்று மாற்றிக் கொண்டேன். கம்பெனியில் ரிஜக்ட் பண்ணப்பட்ட ஒரு கேண்டிடேட்டை எம்ப்ளாயி கூட தங்க வைத்துக் கொண்டால், அது ஏதாவது பிரச்னையாக ஆக்கப்படலாம்.

எனவே, வேண்டாம்!

"நத்திங் மதி! கொஞ்சம் வீடு வரைக்கும் போய்ட்டு வர்றேன்! ஒரு ஆஃப் அன் ஹவர் மட்டும் என் டெர்மினல்ஸ்க்கு Stand By போடச் சொல்லு! இல்லாட்டி ட்ரெய்னிங் பேட்சில் ராஜாராமன் இருப்பான் பார்! அவனை பார்த்துக்கச் சொல்! நான் வந்திடறேன்!"

படை வீரர்களைப் போல் நின்றிருந்த இரட்டைக் கால் குதிரைகளில் இருந்து, பல்ஸரை உருவினேன்.

என் பல்ஸர்.

(தொடரும்.)

***

வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகை

Tuesday, January 22, 2008

இது ஒரு காதல் கதை...? - 1

Part2
Part3
Part4
Part5

They lived happily thereafter.

But....

'ரு மாலை இளவெயில் நேரம்..'

அருண் கவிழ்ந்து இருந்த செல்போனை எடுத்து பார்த்தான். அம்மா. மினுக் மினுகென்று மின்னிக் கொண்டிருந்த டிஜிட்டல் வாட்சில் நேரம் பார்த்தான். 5:30.

"சொல்லும்மா.."

"என்னடா தூங்கிட்டு இருந்தியா? டிஸ்டர்ப் பண்ணிட்டேனா..?"

"இல்லம்மா. குளிச்சிட்டு, பூஜா ரூம்ல காயத்ரி மந்திரம் சொல்லிட்டிருந்தேன். நம்பறயா..?"

"கோவிச்சுக்காத கண்ணு. வேற எப்ப ஃபோன் பண்றது, சொல்லு. எப்ப பண்ணாலும் ஆஃபீஸ்ல இருக்கேன்னு சொல்லிடற. நைட் எப்ப பண்ணாலும் ஆபீஸ்லயே இருக்கற. அதான் இப்ப பண்ணினேன். இப்படி ஒடம்ப கவனிச்சுக்காம ஆஃபீஸே கதினு இருக்காதப்பா. இதுக்குதான் ஒரு கல்யாணத்தைப் பண்ணிப் பாக்கணும்னு கேட்டுக் கிட்டே இருக்கேன். நீயும், உங்கப்பாவும் கேக்கவே மாட்டேங்கறீங்க..."

"சுத்திச் சுத்தி கல்யாணத்துக்கு வராதம்மா. நான் எத்தன தடவை சொல்லிட்டேன். I have to meet my girl. அதுவரைக்கும் நோ கல்யாணம். நோ வாழை மரம்."

"போடா...! நீ எப்ப பொண்ணு பாக்கறது. நான் எப்ப.."

"சரி.. சரி.. ஆரம்பிச்சுடாத. அப்பா கிட்ட இருக்காரா. இந்நேரம் வாக்கிங் போய்ட்டு வந்திருக்கணுமே?"

"எல்லாம் வந்திட்டாரு. இந்தா பேசு.."

"ஹாய் டாட்.."

"என்னடா.. உங்கம்மா மறுபடியும் கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சுட்டாளா..?"

"பாருங்க டாட். எப்ப பார்த்தாலும் மேரேஜ் பத்தியே பேசுறாங்க. நான் தான் ஆல்ரெடி சொல்லிட்டேனே, நானே ஒரு பொண்ணைப் பார்க்கணும். பார்த்தவுடனே அப்படியே ஜிவ்வுனு பறக்கற மாதிரி அழகா இருக்கணும். மாடர்னா இருக்கணும். ஆனா மங்களகரமா இருக்கணும். சுடிதார் தான் போட்டிருக்கணும். ஆனா சூப்பரா இருக்கணும். அட்லீஸ்ட் சிக்ஸ் மந்த்ஸ் லவ் பண்ணனும். அதுவரைக்கும் Marriage is Drainage. Who falls in are Garbage."

"போதும்டா. நீ ஒண்ணும் கவலைப்படாத. நான் பார்த்துக்கறேன் உங்கம்மாவை. நீ உன்னோட டேஸ்ட்க்கு பாரு. ஆனா கொஞ்சம் சீக்கிரம்... ஓ.கே.வா? உங்கம்மா மூட் அவுட் ஆகி இருக்கா. நான் போய் சமாளிக்கறேன். பை. டேக் கேர்.."

மீண்டும் கண் விழித்துப் பார்க்கையில், 6:10 மணி. பரபரப்பாக எழுந்து பாத்ரூம் போய் விட்டு வந்து, டிராக் சூட் எடுத்து மாட்டிக் கொண்டு, பீச்சுக்கு கிளம்பும் போது சரியாக காலை 6:30 மணி.

னிக் கிழமை மாலையின் அலங்காரத்துடன் ஸ்பென்சர் ப்ளாசா மின்னிக் கொண்டிருந்தது.

அருணும், சஞ்சயும் ஸ்ப்ளெண்டரில் வந்து என்ட்ரென்ஸில் நுழைந்தார்கள்.

"அருண்..! ஹோல்ட் ஆன்! நிறுத்து. நான் போய் எந்த ஃப்ளோர் போகலாம்னு பார்த்திட்டு கால் பண்றேன். நீ இந்த கூட்டத்தில கரெக்டா பார்க்கிங் ஸ்பேஸ் கண்டுபிடிச்சு நிறுத்திட்டு வந்திடு.." என்றான் சஞ்சய்.

அருண் சடாரென ஓரம் கட்ட ஃலெப்ட் பக்கமாய் ஒடிக்க, பின்புறம் 'க்ரீச்' என சத்தம். திரும்பிப் பார்த்தார்கள்.

பிங்க் பெப் சரிவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தது. இரண்டு பேர் வந்திருப்பார்கள் போல் இருக்கின்றது. இடப்பக்கமாய் சாய்ந்து கால்களை ஊன்றி நிற்க முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்.

சஞ்சய் உடனே ஓடிப் போய் பெப்-ஐ தங்கிக் கொண்டான்.

"ஸாரிங்க.." என்றான்.

"டேய்.. நீ எதுக்குடா சாரி கேக்கற. அவங்க லெஃப்ட்ல க்ராஸ் பண்ண ட்ரை பண்ணினது அவங்க தப்பு." அருண்.

ஓட்டி வந்த பெண் அருணை நிமிர்ந்து பார்த்தாள்.

"நாங்க லெஃப்ட்ல க்ராஸ் பண்ண வந்தது எங்க தப்பு தான். அந்தப்பக்கம் பாருங்க. ஆப்போஸிட்ல ஒரே ரஷ். அதுவும் ஜென் ரெண்டு கார் வரிசையாய் வந்ததினால தான் நாங்க லெப்ட்ல திரும்பப் பார்த்தோம். இது ஸ்டாப்பிங் ப்ளேஸ் கிடையாது. நீங்க ஸ்டாப் பண்ணி இருக்கவே கூடாது. ஓ. கே. ஸ்டாப் பண்ண ட்ரை பண்றீங்க். அப்ப என்ன பண்ணி இருக்கணும். பின்னாடி யாராவது வர்றாங்களானு பார்த்திருக்கணும். அதுவும் செய்யல. ஹெல்ப் பண்ண வர்றவரையும் தடுக்கறீங்க..."

பொரிந்தாள் அவள்.

'ஆமா, அவன் எதுக்கு ஹெல்ப் பண்றான்னு தெரியாதா..' முனகினான் அருண். தப்பு தன் பேரில் தான் என்று தெரிந்திருந்ததால், அமைதியாக முனகினான்.

பின், ஸ்ப்ளெண்டரை ஸ்டார்ட் செய்து, செக்யூரிட்டி துணையுடன் பார்க்கிங் ஸ்பாட்டுக்குச் சென்று நிறுக்தினான். நிறுத்தி விட்டு வெளியே வருகையில், 'சரக்'.

மீண்டும் அதே பெப்.

"என்னங்க.. ஆள் வர்றது தெரியாம, வர்றீங்க.." ரிவர்ஸ் அட்டாக் அடித்தான்.

"ஓ.. சாரிங்க. இப்ப தப்பு என் மேல் தான். சாரி."

"அதெப்படி சும்மா sorry கேட்டா விட்ருவோமா? இதே பசங்க தெரியாம வந்து இடிச்சுட்டா கூட, ஊரையே கூட்டிடறீங்களே. இதை சும்மா விடப் போறதில்ல. செக்யூரிட்டி.." விடுவதில்லை இதை என்று முடிவே செய்திருந்தான்.

"சார்.. விடுங்க.. இனிமேல் இந்தப் பக்கம் வர்றதில்லைனு முடிவே பண்ணிடறேன். ஓ.கே.வா..?"

"எனக்கென்ன இதில் ஓ.கே.? செக்யூரிட்டி, இந்த மாதிரி பிஸ்கட் வண்டியெல்லாம் ஸ்ப்ளெண்டர் பக்கமா நிறுத்த எப்படி allow பண்றீங்க.."

பிஸ்கட் வண்டி என்று சொன்னதில் அவள் முகம் சுருங்கி போனதில், அவனுக்கே கொஞ்சம் வருத்தமாகி விட்டது. கொஞ்சம் ஓவராகத் தான் சொல்லி விட்டோமா?

"Leave it" என்றபடி திரும்பி நடந்தான்.

ப்ளாஸாவின் வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தான். என்ட்ரென்ஸைக் கடக்கையில் யாரோ தன்னை உற்றுப் பார்ப்பது போல் உணர்ந்தான். சடாரென இடதுபுறம் திரும்பிப் பார்க்க, இரு கண்கள். இரு கண்கள் மட்டுமே தெரிந்தன.

மஞ்சள் துப்பட்டாவில் முழுவதுமாக மூடிய முகம். கண்கள் மட்டும் வெளியே தெரிந்தன. அவனையே உற்றுப் பார்ப்பது நன்றாகவே உணர்ந்தான். வேறு எதையும் அவனால் பார்க்க முடியவில்லை. எங்கே இருக்கிறோம், யாருடன் இருக்கிறோம், இது என்ன நேரம், இது என்ன ஆண்டு எல்லாம் மறந்து போனது. நினைவுகள் அப்படியே உறைந்து போயின. எங்கோ சுழலில் சுழல்வது போல் இருந்தது.

"எக்ஸ்க்யூஸ் மீ.. கொஞ்சம் மூவ் பண்றீங்களா.." குரல் எங்கோ, எப்போதோ கேட்பது போல் கேட்டது. யாரோ மெல்ல தள்ளி விட்டு செல்ல, தடுமாறி விழப் பார்த்தான். அருகில் இருந்த கதவை பிடித்துக் கொள்ள நிலை நின்றான். அந்த வாசலில் அமர்ந்தே விட்டான்.

நினைவுகள் மெல்ல மெல்ல திரும்பின. வெளியே அடித்துக் கொண்டிருந்த சென்னையின் வெப்பக் காற்றும், பிளாசாவின் உள்ளிருந்து வந்து கொண்டிருந்த ஜில் காற்றும் , மாறி மாறி நினைவுகள் சென்று கொண்டிருந்த அவனது நிலையை ஒத்திருந்தன.

தடாரென அந்தக் கண்கள் இருந்த திசையைப் பார்த்தான். அவள் இல்லை.

சுற்று முற்றும் தேடிப் பார்த்தான். இல்லை.

செல் மினுக்கியது. சஞ்சய்.

"அருண், எங்கடா இருக்க. பார்க் பண்ணிட்டு வர்றதுக்கு இவ்ளோ நேரமா? பார்க் போய் பார்க் பண்ணப் போய்ட்டியா?"

"மொக்க போடாத. உங்கிட்ட ஒண்ணு சொல்லணும். எங்க இருக்கே...?"

"வேறெங்கே இருக்கப் போறேன்? லேண்ட்மார்க் வந்திடு. செம ஜாலியா இருக்கு. ஒரு இடத்துல நின்னு முழு புக்கையுமே படிச்சிடறாங்க. நமக்கு எதுக்கு புக் படிக்கிற வேலை எல்லாம். சிடி ஸ்டால் பக்கமும், புக்ஸ் பக்கமும் சுத்திக்கிட்டே இருக்கேன். சும்மா சொல்லக் கூடாதுடா. பொண்ணுங்களுக்கு படிக்கிற ஆர்வம் அதிகமாகிட்டே போகுது. நமக்கும் நல்லது தான். அதிலயும் ஒரு கையில கரடி பொம்மை வெச்சிக்கிட்டு, ஹாரி பாட்டர் புக் வாங்கியிருக்கிற பொண்ணு போட்டிருக்கிற டீ ஷர்ட் என்ன சொல்லுதுனா..."

"Stop it, Man. நீ அங்கயே இரு. நான் உடனே வர்றேன்." செல்லை கட் செய்து வைத்தான்.

லேண்ட்மார்க் புத்தகங்களாலும் கை படாத சி.டி.களாலும் நிரம்பி இருந்தது. பின்னிசையாக Bryan Adams.

"உண்மையா தான் சொல்றியாடா? எனக்கு அந்த மாதிரி feeling எல்லாம் வர்றதில்லடா. எனக்கு வேற feeling எல்லாம் வேற. அப்படி தான் போன வாரம் டெல்லி போகும் போது, ஜி.டி.ல அப்பர் பெர்த்ல..."

"சஞ்சய். This is limit. இது வேற மாதிரிடா. "

"புரியுது. இப்ப என்ன? அந்தப் பொண்ணை, ஓ சாரி, அந்தக் கண்களை இந்தப் ப்ளாசாவில எங்கனு தேடிக் கண்டுபிடிக்கணும். அவ்ளோ தானே. விடு கவலைய. எங்க போயிருப்பாங்க. இங்க பொண்ணுங்க போகற மாதிரி இருக்கற ஷாப்ஸே கொஞ்சம் தான். மியூசிக் வேர்ல்டு போகலாம். காஃபி ஷாப் போகலாம். வேற ஏதாவது க்ளாத் ஷாப் போகலாம். கிளம்பு."

எலிவேட்டர்களில் மேலும் கீழும் பிரயாணித்தார்கள். ஆங்காங்கே பொறியும் சோளப் பொறி வாங்கிக் கொறித்தார்கள். காஃபி ஷாப்பில் Cold Coffee உறையும் வரை காத்திருந்து குடித்தார்கள். துணிக்கடைகளில் நுழைந்து புடவைகளைத் தடவிப் பார்த்து விற்பனையாளரின் கேள்விப் பார்வைக்கு அசடு வழிந்தார்கள். Music World-ல் எம்.எஸ். கலெக்க்ஷன் பட்டியலைப் படித்துப் பார்த்தார்கள். லேண்ட் மார்க்கில் சி.டி.க்களை சுற்றிச் சுற்றிப் பார்த்தார்கள். புத்தகங்களின் பக்கங்களை விசிறி அடித்தார்கள்.

"என்னடா.. எங்கயாவது பார்த்தியா?"

உதட்டுப் பிதுக்கலையே பதிலாய்க் கொடுத்தான் அருண்.

ரவு 8:30.

"அருண்.. விடுடா. அவளை மறுபடியும் பார்க்கணும்னா எப்படியும் பார்ப்போம். இப்ப கிளம்பலாம். வா. டைம் ஆச்சு." என்றான் சஞ்சய்.

"இன்னொரு முறை Music World போய்ப் பார்த்திட்டு வந்திடுவோமா..?" பரிதாபமாகக் கேட்டான் அருண்.

"உன்னைப் பார்த்தாலும் பாவமா இருக்கு. சரி, வா. போய்ட்டு வரலாம்."

"Leave it டா. ஒரு நல்ல படத்துக்குப் போறோம்.ஜாலியா எஞ்சாய் பண்றோம். வெளியே வந்தவுடனே கொஞ்ச நேரத்தில, மறந்திடறோம் இல்லையா? அதுபோல இதையும் நினைச்சுக்கிட்டு பைக்கை எடு கிளம்பலாம்."

சோகம் கவ்விய முகத்தோடு பார்க்கிங் ஸ்பேஸுக்கு வந்தார்கள்.

அவன் ஸ்ப்ளெண்டருக்கு முன்னால் அந்த பெப் தலை சாய்த்து நின்று கொண்டிருந்தது.

சோகம், அலைச்சல், எரிச்சல், பைக் எசகு பிசகாக நின்று கொண்டிருக்க எடுக்க முடியாத நிலைமை எல்லாம் சேர்ந்து வர, ஒரே உதை விட்டான் அருண்.

"என்ன பண்றீங்க? எவ்ளோ தைரியம் இருந்தா எங்க பெப்-ஐ இப்படி பண்ணுவீங்க.." அவளே தான். வேகமாக வந்து கொண்டிருந்தாள்.

இந்த மூஞ்சியைப் பார்த்திட்டதால தான் இப்படி ஆகி விட்டது. வார்த்தைகளில் காரம் ஏற ஆரம்பித்தது.

"உங்களை யாரு இங்க நிறுத்தச் சொன்னது? இப்ப நான் எப்படி என்னோட பைக் எடுக்கறது..?"

"அதுக்காக இப்படி தான் பண்றதா? Tribal Dog " என்று கடைசியாக முனகினாள்.

"என்ன சொன்னீங்க? Come Again" பரபரத்தான் அருண்.

"Nothing..".

பிறகு செக்யூரிட்டி வந்து சண்டையைப் பிரித்து சமாதானப் படுத்தி வைக்க, அவள் பெப் எடுத்தாள். அதற்குள் அவளது செல் அடிக்க ஆரம்பித்தது.

வேண்டுமென்றே பாதி வழியில் நிறுத்தி விட்டு, செல்லை எடுத்தாள்.

" ஆமாம்டா.. இங்க ஒரு சின்ன பிரச்னை. அதே பார்ட்டி தான். வரும் போது பிராப்ளம் பண்ணினானு சொன்னேன்ல அதே தான். இப்ப ஒண்ணும் இல்லை. நீ அங்கயே வெய்ட் பண்ணு. நான் வந்துகிட்டே இருக்கேன்..."

அவள் மெதுவாக பெப் எடுத்து, ஸ்டார்ட் செய்து வெளியேறினாள்.

பின் அவனும் ஸ்ப்ளெண்டர் எடுத்து வெளியே வர, அதுவரைக்கும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சஞ்சய்,

"என்னடா இப்படி நடந்துக்கற. பொண்ணுங்க கிட்ட இப்படி Harsh-ஆ நடந்துகிட்டேனு வை. ஒண்ணும் நடக்காது.."

தூரத்தில் அந்த பெப் நகர்ந்து கொண்டிருந்தது. பெப்பின் பின் சீட்டில்...

பின் சீட்டில்..

அதே மஞ்சள் சுடிதார்.

"டேய்.. அவ தான்டா.. அந்த பெப் பின்னாடு உட்கார்ந்துகிட்டு போறாடா. My God. நான் அந்தப் பொண்ணு கிட்ட அப்படி நடந்துகிட்டேனே. அவளோட friend போல இருக்குடா.."

"அந்தப் பொண்ணா..? அவளைத் தான் இவ்ளோ நேரமா தேடிட்டு இருந்தியா..? நான் வரும் போதே பார்த்துட்டேனே.."

"எப்படா பார்த்த.. நான் கவனிக்கவே இல்லை.."

"நீ தான் சண்டை போடறதுலயே Busy-யா இருந்தியே.."

அருண் பார்த்துக் கொண்டேயிருக்க, அந்த மஞ்சள் சுடிதார் திரும்பியது. இப்போதும் வெறும் கண்கள் மட்டுமே வெளியே தெரிந்தது. அவனையே பார்த்தது. கண்கள் சிரித்தன. அருண் சிலிர்த்துப் போனான். முன்னேறிப் போக முடியாமல், நெரிசல் அள்ளியது.

"போறாங்கடா.. போறாங்க.. போய்ட்டாங்க.."

பெப் அண்ணா சாலையின் பூச்சிகளில் ஒன்றாகக் கலந்தது.

" Dont worry தம்பி. யாமிருக்க பயமேன்? தேடிக் கண்டுபிடிச்சிடலாம் விடு."

"என்ன உளர்ற? இவ்ளோ பெரிய சென்னையில எத்தனை பெப் இருக்கு. எப்படிக் கண்டுபிடிப்பது?"

"எத்தனையோ இருக்கலாம். ஆனா ஒரு பெப் மட்டும் தான் இந்த number-ரோட இருக்கும், இல்லையா?"

பார்க்கிங்குக்கு கொடுத்த ரசீதுச் சீட்டைக் காட்டினான். அதில் ஒரு டூ-வீலர் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் இருந்தது.

"இதை எப்படா எழுதுன..?" ஆச்சரியத்துடன் கேட்டான் அருண்.

"இதுக்கு தான் experienced ஆளு தேவைங்கறது."

ஒரு நொடி ஆச்சரியத்தில் மூழ்கிப் போனவன், மறு நொடியில் சந்தோஷம் அள்ள, அதிர அதிர சிரித்தான் அருண்.

- தொடரலாமா?

Friday, June 01, 2007

மோகினி.

காலைப் பொழுது பொலபொலவெனப் புலரத் தொடங்கியது.

மேற்கின் மலைத் தொடர்களின் மேனியைத் தழுவி வந்து கொண்டிருந்த காற்று, மக்களைத் தாலாட்டிக் கொண்டிருந்தது. தீ வதந்தி நாலாபுறமும் பரவுவது போல், கருங்குயிலின் இனிய கூவலொசையோடு, வெண்புள்ளினங்கள், மைனாக்கள், சிட்டுக்குருவிகளின் கீச்சுகீச்சென்ற உச்சரிப்புகள் அங்குமிங்கும் தாறுமாறாய்க் கேட்டுக் கொண்டிருந்தன. குளிர்ந்த தென்றல் பட்டு, உறக்கத்திலிருந்த தென்னங்கீற்றுகள், தோட்டங்களின் ஆலமரங்களின் பச்சையிலைகள், பசுமை விளைந்திருந்த வயற்காடுகள் தலையாட்டி மகிழ்ந்தன.

தூண்கள் எங்கும் தீப்பந்தங்கள் ஏந்தியிருந்த திவான் அரண்மனை, சுறுசுறுப்பு அடையத் தொடங்கியது. பணி மாறிய வீரர்கள் தூக்கக் கலக்கத்தோடு கலைந்து செல்ல, புதிய வீரர்கள் புத்துணர்வோடு நிற்கத் தொடங்கினர்.அரண்மனையைச் சுற்றியிருந்த கோட்டை மதிற்சுவரின் மேல், கதிரவன் தன் தங்கக் கிரணங்களை வீசத் தொடங்கினான்.

அந்த அதிகாலை நேரத்திலும், முன்வளாகம் முழுதும் மக்கள் அடைத்தவண்ணம் இருந்தனர்.

"ஏம்பா, காலங்காத்தால நம்மளை எதுக்கு ராசா வரச் சொல்லோணும்..?"

"வேறென்னவா இருக்கப் போவுது? ஏதாவது பிரச்சனைனு சொல்லிட்டு நம்மகிட்ட இன்னும் ஏதாவது பணம் புடுங்க வரச் சொல்லியிருப்பான்.."

"இல்ல.. அவனோட எட்டாவது கல்யாணத்துக்கு நம்மளை எல்லாம் கூப்புட வரச் சொல்லியிருப்பானோ..?"

"இருக்கலாம். யாருக்குத் தெரியும்..? எப்ப வெள்ளைக்காரன் நம்ம நாட்டுல கால் எடுத்து வெச்சானோ, அப்பவே எல்லாம் வெளங்காமப் போச்சு.."

"உஷ்..! மகாராஜா வர்றார். ஏதாவது சொல்லி, அவன் காதுல விழுந்திடப் போகுது..."

வழக்கமான வாழ்த்துக்களோடு, திவான் ரங்கநாத பூபதி முற்றத்துக்குள் வந்தார்.

முடி முதல் அடி வரை இழைத்த தங்க நகைகள், தலையில் கிரீடம், வெண் பட்டு நூலால் நெய்த முன்னங்கி, முத்து மாலைகள், இடையில் தரித்த குறுவாள், உடலுகு முன்னே ஓர் அடி தள்ளி நகர்கின்ற தொப்பையுமாக திவான் உள்ளே வந்தார்.

அருகில் நின்று வணங்கிய கணக்கரைப் பார்த்து, "கணக்கரே..! தாங்கள் படிக்கலாம்.." என்றார்.

கணக்கர் படிக்கலானார்.

"நமது திவான் அவர்களின் நீதியும், நேர்மையும், நிறைந்த நல்லாட்சியின் கீழ் வாழ்கின்ற கொங்கு மண்டலத்தின் முப்பத்து இரண்டு பாளையக்காரர்களுக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், இந்த ஆண்டுக்கான நிலவரி, தானிய வரி, ராஜ்ய வரி ஆகியன மும்மடங்கு உயர்த்தப் படுகின்றது. கோயமுத்தூரில் இருக்கும் ஆங்கில கவர்னர் அவர்களின் சீரான ஆலோசனையின் பேரிலும், நமது திவான் அவர்களின் கூர்மையான அறிவுத் திறமையின் காரணத்தாலும் இந்த விதி உடனே அமலுக்கு வருகின்றது. பாளையக்காரர்கள் இதனை நினைவில் கொண்டு, உடனே நிறைவேற்றித் தர வேண்டியது. மறுத்தால், அவர்களது பாளையம் பறிமுதல் செய்யப்பட்டு, ஆங்கிலேயர்களின் நேரடி நிருவாகத்தின் கீழ் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப் படுகின்றது.

மற்றுமொரு முக்கியச் செய்தி. சேர நாட்டைச் சேர்ந்த கோட்டயம் சம்ஸ்தானத்தின் இளைய அரசி, மாயாமோகினி அவர்கள் நமது தேசத்தின் கோயில்களைக் கண்டு களிக்க வருகிறார். அவர் ஆலய தரிசனம் செய்கையில், பெரும் வரவேற்பு கொடுக்க வேண்டியது அந்தந்த பாளையக்காரர்களின் நேரடிப் பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்படுகின்றது.

இது நமது திவான் அவர்களின் ஆணை..."

மக்கள் கூட்டம் முணுமுணுப்புடன் கலைந்து சென்றது. பாளையக் காரர்கள் அதிர்ச்சி நிரம்பிய கண்களுடன் சென்றனர்.

பாலக்காடு கணவாய் சில்லென்று இருந்தது. கேரளக் காற்றின் பாய்ச்சலால், வயலில் பூத்திருந்த நெற்கதிர்கள், புதுப் பெண்ணின் குரலுக்கெல்லாம் தலையாட்டும் கணவனாய் போதையில் தலையாட்டிக் கொண்டிருந்தன. மேகம் கலையாத வானின் விளிம்புகளை சூடாக்கிக் கொண்டிருந்தது பகல்.

கணவாய் வழியாக ஐம்பது குதிரை வீரர்கள், ஒரு பல்லக்கு, நுழைந்து கொண்டிருந்தனர். சாலையோரங்களில் இருந்த குடியானவ மக்களை ஒதுக்கி விட முன்னே சென்றனர் இரண்டு வீரர்கள்.

"அம்மணி.. யாராயிருக்கும் இது..?"

"அட.. ராசா சொன்னாராம்ல.. யாரோ இளவரசி வர்றாங்கன்னு.. அவங்களா இருக்குமோ, என்னவோ..?"

"யாராய் இருந்தால் என்ன? இவங்க வந்து நம்ம கோயில், குளமெல்லாம் சுத்திப் பாக்கறதுக்கு நாம காசு செலவு பண்ணனுமாமே..?"

"உஷ்..! சத்தமாப் பேசாதீங்க..! அவ காதுல விழுந்திடப் போகுது..!"

அடர்ந்த வனங்கள் நிறைந்த பாதை வழியெங்கும் பயணம் செய்து வந்திருந்த பல்லக்கு, மனித குரல்கள், கேட்டவுடன் தன் திரைகளை விலக்கியது.

திகாலையின் பனித்துகள்களை எல்லாம் உறிந்து, எடுத்துக் கொண்ட சூரியன் அவற்றையெல்லாம் கோர்த்து நெய்த ஆடையாலான வெள்ளைத் திரையை விலக்கியது, ஒரு பொற்கை. சந்தனக் கீற்று என்று சொல்லத்தக்க வகையில் இருந்த அக்கைகளை, வழி தெரியாமல் உள் நுழைந்த வண்டை மூடிக் கொண்டு காக்கின்ற பூவின் இதழ்களைப் போன்று, தங்க வளைகளும், வைரம், முத்து பதித்த மணியாரங்களும், அணைத்துக் கொண்டிருந்தன.

திரையின் இடுக்குகள் வழியே, ஒரு முகம் எட்டிப் பார்த்தது.

மேகத்திலிருந்து எட்டிப் பார்த்த முழுநிலா, மூங்கில் காட்டின் வண்டின் துளைகளில் காற்று புகுந்து வெளிப்படுகையில், பரவும் குழலோசை, கம்மென்று வீசும் மல்லிகை மணம், கருக்கல் நேரங்களில் கீழ்த்திசையில் சீறிப் பாய்கின்ற வெண்மின்னல் என்று எப்படி வேண்டுமானாலும், அப் பூமுகத்தை கூறலாம். கவிராயர்களும், விகடகவிகளும், பெரும்புலவர்களும், இலக்கிய சிங்கங்களும் இருந்திருப்பின் இவ்வாறெல்லாம் பாடியிருப்பார்கள். ஆனால் அங்கு இருந்ததோ, முகத்தில் கடுமையும், நெஞ்சில் வீரமும் கொண்ட வீரர்களும், உழைபே வாழ்வாகக் கொண்ட குடியானவர்களும் தான். அதனால், அக்குடியானவர்கள் அந்த அழகிய திருமுகத்தைக் கண்டு வாயடைத்துப் போயினர் என்று சுருக்கமாகநாம் கூறி விடுவோம். மேலும் விரித்துக் கூற, நாமொன்றும் கவிராயர்களோ, விகடகவிகளோ, பெரும்புலவர்களோ, இலக்கிய சிங்கங்களோ இல்லையே..!

கணவாய் வழியாகத் திவானின் அரணமனை நோக்கிச் செகையில் வழியில் உள்ள பாளையக்காரர்களின் பூரணகும்ப மரியாதையை ஏற்றுக் கொண்டு நகர்ந்து செல்கையில், அரண்மனைக்கு வந்து சேர்வதற்கு மாலை வந்து விட்டது.

திவான்,அவரது மனைவியர், மக்கள் யாவரும் திரண்டு வந்து வாசல் நின்று இளவரசியை வரவேற்றனர். இளவரசியின் பேரெழிலைக் கண்டு, திவான் வாயடைத்துப் போனார்.

ஆகா..! இப்பெண் இருபது ஆண்டுகள் முன் பிறந்திருக்கக் கூடாதா? நான் வயதாகியிருக்கும் போது தான் என் கண்ணில் பட வேண்டுமா? வயதானால் என்ன? என்னால் இவளை மணக்க முடியாதா? முடியும். இவள் இப்போது என் இராஜ்ஜியத்தில் இருக்கிறாள். என்னை மீறி என்ன செய்து விட முடியும் இவள்? பார்த்து விடுவோம்.

எண்ணங்கள் இவ்வாறு இருந்தாலும், முகத்தில் பவ்யம் வரவழைத்துக் கொண்டு, இளவரசியை எதிர் கொண்டார், திவான்.

"வரணும்.. வரணும்..! இளவரசி..! தங்கள் வருகையால், இந்த கொங்கு மண்டலமே இன்று பாக்கியம் எய்தது..!" என்றார்.

இளவரசி புன்னகை புரிந்தவாறே, பல்லக்கிலிருந்து இறங்கி, அவர்களை எதிர் கொண்டாள். மெல்லிய அல்லிக் கொடியொன்று, வீசும் மாலையின் இதமான காற்றுக்கு ஆடுவது போல், இளவரசி மென்னடை நடந்து வந்தாள்.

"ஐயா..! எனது அறை எதுவென்று கூறினால், சிரம பரிகாரம் செய்கிறேன். நாளை முதல் இத்தேசம் முழுதும் உள்ள ஆலயங்களை தரிசனம் செய்து வருவேன்.." என்றாள்.

"அம்மணி..! இவ்வரணமனையின் எப்பகுதியையும் தாங்கள் தங்களுடையதாகக் கருதலாம். எனினும், தங்கள் தனிமைக்காக, வடமேற்கில், உள்ள, விருந்தினர் மண்டபத்தைப் புதுப்பித்துள்ளோம். தாங்கள் அங்கேயே தங்கியிருக்கலாம். எனது பணியாளர்கள் தங்களுக்கு வழிகாட்டுவார்கள்.." என்றார் திவான்.

இள்வரசி, அவளுடைய தோழிகளுடன் திவான் கைகாட்டிய பணியாளர்களுடன் நகர்ந்தாள்.

பாவம், திவானின் உள்ளத்தின் போக்கை அறியாத இளவரசி, அரண்மனையின் பிரம்மாண்ட தூண்களையும், தகதகவென எரிகின்ற தீப்பந்தங்களையும் கண்டவாறு நடந்தாள்.

சிரிப்பாள்.

Saturday, October 07, 2006

தேக விடுதலை. - பாகம் - 1

"டேய் கண்ணையா..! எங்கடா இன்னிக்கு ரொம்ப நேரமா வர்றாப்ல இருக்கு..?" ஜமீந்தார் வீட்டுக் கணக்குப் பிள்ளை கேட்டார்.

"சாமி, மன்னிச்சுக்கணும். ஆத்தாக்கு பெரியம்ம போட்டிருக்குங்க. அதான் காலங்காத்தாலயே குருவம்மாகிட்ட காட்டிட்டு, மூலிகை பறிச்சுட்டு வர, கொஞ்சம் பொளுதாயிடுச்சுங்க. சாமி மன்னிச்சுக்கணும்.." கண்ணையன் கூனிக்குறுகி சொன்னான்.

"சரி.. போ.. பெரியாடு ஒண்ணு செனையா இருக்கு. அதக் கொஞ்சம் என்னனு பாத்துட்டுப் போ."

"அதாங்க.. இன்னிக்கு நான் கருப்பாட்ட பாத்துக்கறேங்க. சின்னசாமிய இன்னிக்கு மேச்சலுக்கு அனுப்பலாம்னு இருக்கனுங்க.."

"ஏண்டா, அவன் ஒளுங்கா மேச்சுக்கிட்டு வருவானா.? ஆடெல்லாம் பத்திரமா வரணும். ஒண்ணு கொறஞ்சாலும், உன் தோலு பிரிஞ்சுரும். தெரியும்ல..?"

"இல்லிங்கய்யா.. ஏதும் பிரச்ன வராம பாத்துக்கறேங்க. அப்ப உத்தரவு வாங்கிக்கறேங்க"

"ம்...ம்.."என்றபடி கணக்குப் பிள்ளை மாளிகைக்கு உள்ளே சென்றார்.

கண்ணையன் மாளிகைக்கு தெற்கே போகத் தொடங்கினான். நேத்தே, இந்தக் கருப்பாடு ரொம்ப வலியாத் துடிச்சிட்டு இருந்துச்சு. அனேகமா இன்னிக்கு பிரசவம் ஆகிடும் போல.தென் மூலையில் இருந்த ஆட்டுக் கொட்டாயை நெருங்கினான்.

"டேய் சின்னச்சாமி.." குரல் கொடுத்தான்.

"தா.. இங்க இருக்கண்ணா.." என்றபடி ஒரு சிறுவன் கொட்டாயில் இருந்து வெளியே வந்தான். தலையில் ஒரு நைந்த துண்டு. இடுப்பில், ஒரு வெள்ளைக் கோவணம் தொங்கிக் கொண்டிருந்தது.

"என்னடா பண்ணிட்டு இருக்க?"

"யண்ணே.. இந்த கருப்பாடு வயிறு இந்த பெருசா இருக்கல்ல.. அத என்னனு பாத்துக்கிட்டு இருக்கேன்..."

"போடா பொளப்பத்தவனே.. அடுத்த வேளை கஞ்சிக்கு அரிசி இல்ல. அரண்மனைக்கு பொண்ணு பாக்க போனானாம்.. போய் பொளப்ப பாருடா.. இந்தா எல்லா ஆடுகளையும் களத்தி வுடு.. கருப்பாடு இங்கனயே இருக்கட்டும்.. நான் பாத்துக்கறேன். இன்னக்கு நீ போயி மேச்சுக்கிட்டு வா.."

"சரிங்கண்ணே.. கருப்பாடை நல்லா பாத்துக்கங்கண்ணே.. பாவம் வவுறு ரொம்ப நோகும் போல. நான் வேணா குருவம்மாவ கூட்டிக்கிட்டு வரட்டுமா.."

பாருடா, இந்தப் பயலுக்குப் பாசத்த.. நானும் இப்புடித் தான் இருந்தன்.. அப்புறம் ஆச, ஆசயா வளக்குற ஆடுங்க எல்லாம், உள்ள, கறி சோறா போகுதுனு தெரிஞ்சப்புறம், மனசே வுட்டுப் போச்சு. இவுனுக்கும் கொஞ்ச நாள்ள உலகம் புரிஞ்சப்புறம், பளகிப் பூடும்.

"எல்லாம் நான் பாத்துக்கறேன். நீ பத்திரமா அல்லாத்தையும் பாத்துக்கடா.."

சரிங்கண்ணே.." என்றபடி, எல்லா ஆடுகளையும், கயிறு பிரித்து விட்டு,
சின்னச்சாமி ஓட்டிக் கொண்டு செல்ல ஆரம்பித்தான்.அவன் கையில், அவன் ஆத்தா கொடுத்து விட்ட போசியில் பழைய சாதமும், காய்ந்த ஊறுகாயும் இருந்தன.

ருமாத்துப்பட்டி, தென்மேற்குத் தொடர்மலைகளின் அடிவாரத்தில் இருந்த குக்கிராமம். இன்றைக்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னால், ஜமீந்தார்கள் ஆண்டு கொண்டிருந்த காலகட்டமது. வெள்ளைக்காரன் கொடுத்த அயல் மதுவுக்கும், வெள்லைத் தோல் மாதுகளுக்கும் மயங்கி, ஜமீந்தார்கள சொக்கிக் கிடந்த காலகட்டம். கறுமாத்துப்பட்டியில், நெல்லை சரகத்துக்கு உட்பட்ட ஒரு குட்டி ஜமீந்தாரின் பழைய பங்களா இருந்தது. ஜமீந்தார், எப்போதாவது ஒருமுறை தான் அங்கே வருவதால், அவரது கணக்குப் பிள்ளை, அதை தனக்கு உரிமைப்படுத்தி, உபயோகப்படுத்தினார்.